30 டிசம்பர், 2008

திருவண்ணாமலை

ஆக்‌ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்‌ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்‌ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்‌ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
 
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
 
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
 
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
 
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்‌ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
 
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக