23 டிசம்பர், 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!


கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.

'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.

அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.

விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.

யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.

'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.

150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக