1 டிசம்பர், 2008

“சமீபத்தில்...” ஸ்கீஸோஃப்ரீனியா!

சில பெருசுகள் 1970களில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூட 'சமீபத்தில்' என்று சொல்லுவது வழக்கம். இது ஒரு வியாதி. மனப்பிறழ்வு. இந்த மனப்பிறழ்வுக்கு பெயர் ஸ்கீஸோஃப்ரீனியா. முரட்டு வைத்தியங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது. இந்த கருமாந்திர நோய்க்கு மருந்து மாத்திரை எதுவும் கிடையாது. எந்த காரணத்தால் இந்த மனோவியாதி வந்து தொலைத்ததோ அந்தக் காரணத்தை தவிர்த்தால் இதில் இருந்து வெளிப்படலாம். அல்லது மனதுக்கு ப்ரீத்தியான காரியங்களில் ஈடுபட்டாலும் ஸ்கீஸோஃப்ரீனியாவிலிருந்து வெளிவரலாம். இல்லையேல் நாக்கு நமைக்கும் அளவுக்கு ஒரு நாளைக்கு 1008 முறை 'ஸ்கீஸோஃப்ரீனியா' என்று உச்சரித்துப் பழகலாம்.

* - * - * - * - * - * - * - * - * - * - *

தீவிரவாதிகள் குறித்து ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் மிக அதிகமாக இப்போது விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 26க்கு பிறகாக. மிக மிக எளியமுறையில் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் அடக்கும் வழியிருக்க ஏன் தான் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் தன் பதவியை ராஜினாமா செய்தாரோ தெரியவில்லை.

எங்காவது தீவிரவாதிகள் வாலை ஆட்டினால் அவர்களை ஒட்டநறுக்க ஆயிரம் யானை பலம் கொண்டவர் தமிழகத்தில் இருக்கிறார். எங்கள் தங்கம் கேப்டன். இடி விழுந்தவன் கூட பிழைத்துக் கொண்டதுண்டு. கேப்டனின் அடிவாங்கியவன் பிழைத்ததில்லை. தாயகம் படத்தில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க கடலூர் மாவட்டத்தில் மீனவராக வாழ்ந்துகொண்டிருந்த கேப்டனை தான் கூப்பிட்டார்கள். நாட்டைக் காக்க மஞ்சப்பையோடு கிளம்பிய கேப்டன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களோடு போரிட்டபோதும் தன்னுடைய இரு கால்களாலேயே எட்டி உதைத்து அவர்களை துரத்தியடித்தார்.

நரசிம்மா படத்திலும் கூட நாடெங்கும் நாசவேலை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளை தன்னுடைய அக்னிப் பார்வையாலேயே அழித்தார். பல படங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அடக்கிய அனுபவம் கேப்டனுக்கு உண்டு. வீரப்பனை தமிழக போலிசார் சுட்டுக் கொல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தனிமனிதராக பிடித்த சாதனைக்கும் கேப்டன் சொந்ந்தக்காரர். இப்படிப்பட்ட ஆல்-இன்-ஒன் கமாண்டோ இருக்கிறார். அவரை புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேப்டன் பிஸியாக இருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் ஆக்சன் கிங் அர்ஜூனையாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒற்றன் படத்தில் கூட ஒண்டியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தவர் அவர். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக