17 டிசம்பர், 2008

தமிழக அரசியல் நிலவரம்!

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!  - என்ற செந்தழல் ரவியின் பதிவை வாசிக்க நேர்ந்தது. அதிமுக தொண்டர் ஒருவரே திமுக ஆட்சியை பாராட்டும் அளவுக்கு நிர்வாகம் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களால் திமுக கூட்டணி 2004ல் வென்றதைப் போல 40க்கு 40 வெல்ல வாய்ப்பேயில்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். உண்மையில் சொல்லப் போனால் கடந்த மாதம் வரை 40க்கு 40லும் திமுக கூட்டணி தோற்பதற்கான வாய்ப்பு தான் பிரகாசமாக இருந்தது.
 
அதே பதிவில் கார்க்கி என்ற நண்பர் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியிருக்கிறார், மின்சாரம் குறித்து. கார்க்கியின் கடந்த சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் கவனித்த வகையில் அவருக்கு கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியையே அளித்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. மின்சாரத்தை கையாளுவதில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பது உண்மைதான்.
 
இதற்காக நிச்சயமாக ஆற்காடு வீராசாமியின் பதவியையும் மாற்றியிருக்க வேண்டியது அவசியம். டேட்டா குவெஸ்ட் சர்வேயில் மின் ஆளுகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் கூட அந்த நேரத்தில் தினமும் 7 மணிநேர மின்வெட்டு (சென்னையில் ஒரு மணிநேரம் தான்) இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஆனால் இதுவும் இப்போது பழைய கதையாகி விட்டது. மின்வெட்டை கண்டித்து அதிமுக கூட இப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத அளவிற்கு மின் ஆளுகை முன்பிருந்த நிலைக்கு வந்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட எந்த தமிழனும் 'கருணாநிதி ஒழிக!' என்று சொல்லாமல் 'ஆற்காடு வீராசாமி ஒழிக!' என்று சொல்லுமளவுக்கு கலைஞரின் செல்வாக்கு ஸ்டெடியாகவே இங்கிருக்கிறது.
 
அடுத்ததாக அதே பதிவில் அத்திரி என்ற நண்பரின் பின்னூட்டம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. பாவம், மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்தோடு மீண்டும் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் வெளிவராதவர் இவர். அவர் காழ்ப்புணர்வில் கூறிய சில பிரச்சினைகளை தவிர்த்து பார்க்கப் போனால் மீதிப் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியாவுக்கே பொதுவானவை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பு அதிகம். மக்கள் நிராகரித்துவிட்ட குடும்ப அரசியல் கோஷத்தை அத்திரி போன்றவர்கள் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
 
ஓக்கே இவர்களை விட்டுத் தள்ளுவோம். எந்த காலத்திலும் கலைஞரால் இவர்களை திருப்திபடுத்தி விடவே முடியாது. இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆட்சியின் பேரில் அல்ல. கலைஞரின் பேரில். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டதைப் போல 40க்கு 40ம் தோல்வி என்ற நிலையில் தான் நவம்பர் மாதம் வரை நிலை இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் - திமுக கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை கணிக்க இயலாதவகையில் நிலை இருந்தது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து போதித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாயையை தகர்த்தெறிந்திருக்கிறது. இந்த ட்ரெண்ட் பாராளுமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என்று இப்போது அதே ஊடகங்கள் அவசர அவசரமாக ஊளையிட்டு வருகின்றன.
 
இந்த லாஜிக் தென்னிந்தியாவுக்கு தான் பொருந்தும். சட்டமன்ற தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ வென்றவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் வகையில் மாற்றி ஓட்டளிப்பது தென்னிந்தியர்களின் இயல்பு. பொதுவாக வட இந்தியர்கள் கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அடுத்த தேர்தலிலும் அதே அணிக்கு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக மெஜாரிட்டி பெறும் என்றெல்லாம் வாயால் கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வாய் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் காங்கிரஸ் பெற்ற இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுமைக்குமே காங்கிரசுக்கு ஆதரவான ட்ரெண்டை உருவாக்கக் கூடும். ஆயினும் தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ட்ரெண்டை யாராலும் சுலபமாக கணித்துவிட இயலாத நிலை சிரஞ்சீவியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
காங்கிரசுக்கு ஆதரவான இந்த ட்ரெண்ட் தமிழகத்தில் திமுகவை காப்பாற்ற உதவும். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியாக பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்குமேயானால் அது ஆளும் கூட்டணிக்கு சிக்கலை தந்திருக்கும். ஆனால் ஜெயாவோ யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அணு ஒப்பந்தம் சரியா தவறா என்று மக்களுக்கு முழுமையாக புரியவைக்காத நிலையில் மன்மோகன்சிங்கை கவிழ்க்க நினைத்தனர் இடதுசாரிகள். மக்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மன்மோகன் மீது அனுதாப அலையை வீசச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். எந்த லாப-நஷ்ட அடிப்படையை கணக்கிட்டு ஜெ. இவர்களை சேர்த்துக்கொண்டார் என்பது புரியவில்லை. மதிமுக ஒட்டுமொத்தமாக ப்யூஸ் போன நிலையில் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி சுமையாகவே இருக்கும். பாமகவை வளைத்துப் போடுவதின் மூலமாகவே அதிமுக கூட்டணியை ஜெ.வால் வலுவானதாக காட்ட இயலும். ஆனால் பாமகவோ காங்கிரஸ் மீது காதல் கொண்டிருக்கிறது.
 
தேமுதிகவின் விஜயகாந்த் இன்றுவரைக்கும் தனியாக நிற்பேன். எனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி என்று சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் பலமான அதிர்ச்சியை அளித்தவர் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நிராகரித்து இனி தமிழக அரசியல் பேசமுடியாது. 2016ல் கேப்டன் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பாஜக இவரோடு சேரக்கூடும். அப்படி சேரும் பட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்கு இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டுரக ஓட்டுக்களை தான் கடந்த தேர்தல்களில் பார்த்து வருகிறோம். கேப்டன் குறிவைத்து அடிப்பது கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களை. ஏற்கனவே இந்த ரக ஓட்டுக்களை கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சம் இது. இதனாலேயே விஜயகாந்தை கலைஞர் உள்ளூர ரசித்து வருகிறார். திருமாவளவனும் இப்போதைக்கு கலைஞரை விட்டு நகர்வதாக இல்லை.
 
மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைவிட முக்கியமான பிரச்சினையாக தமிழகத்தில் திமுகவுக்கு இருந்த சன்குழுமத்துடனான மோதலும் முடிவுக்கு வந்திருக்கிறது. சன்குழுமத்தின் ஊடகப்பலம் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் வலுசேர்க்கும். இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக