19 டிசம்பர், 2008

திண்டுக்கல் சாரதி!


திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.

தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.

பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.

தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.

சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.

ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.

சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!

நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.

“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”

“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”

“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”

“போங்க டாக்டர்”

“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”

படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.

திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.

1 கருத்து: