1 ஜனவரி, 2009

வயசாயிடிச்சில்லையோ?


நினைவு தெரிந்த முதல் ஆங்கிலப் புத்தாண்டு அம்மாவுக்கு கோலம் போடும்போது உதவுவதில் ஆரம்பித்ததாக நினைவு. பத்து மணி வாக்கில் வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு அம்மா கோலம் போட ஆரம்பிப்பார். அவர் சொல்லும் இடங்களில் வண்ணம் சேர்ப்பது என் பணி. பண்ணிரெண்டு மணி அளவில் தூக்கம் கண்ணை சுழற்றும்போது கமல்ஹாசன் ‘இளமை இதோ இதோ’வென நடனம் ஆடுவார் டிவியில். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் எனக்கு புத்தாண்டு விடிந்திருக்கும். இன்னமும் அதே கமல் அதே இளமையோடு டிவிக்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இதுமட்டும் தமிழனுக்கு மாறாத ஒரு அம்சம்.

அப்புறம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வந்தபிறகு புத்தாண்டு அங்கே பிறந்தது. குடும்பத்தோடு கூட்டத்தில் கசகசவென உள்ளே புகுந்து ஆஞ்சநேயரை அண்ணாந்துப் பார்த்து, புத்தாண்டு பரிசாக அவர் தரும் ஐந்து ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொண்டு வருவதில் சில புத்தாண்டுகள் கழிந்தது. கொஞ்சம் தாமதமாகப் போனாலும் ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு அல்லது ஒரு ரூபாயாக மாறிவிடக் கூடிய ஆபத்துண்டு. அப்பாவின் தலைமையில் தான் ஆஞ்சநேயர் தரிசனம் நடக்கும். அப்பா தலைமையில் எது நடந்தாலும் எரிச்சல் தந்த காலக்கட்டம் அது. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பரபரவென்று எரிந்து விழுந்துக் கொண்டேயிருப்பார். ஆஞ்சநேயரை தரிசித்து மூன்று, மூன்றரை மணிக்கு அப்பாடாவென்று கண்ணயர்ந்தால் நாலு, நாலரைக்கெல்லாம் எழுப்பி உயிரை வாங்குவார். மாங்காடு கோயிலுக்கு காலையிலேயே போகவேண்டும். இதுபோன்ற தருணங்களில் தான் அவருக்கு முக்கியத்துவம் என்பதால் ரொம்ப ஓவராய் ஆடுவார்.

பியர் குடிக்க கற்றுக்கொண்ட காலத்து புத்தாண்டுகள் தான் சுவாரஸ்யமானது. ஒன்பதரை, பத்து மணியளவில் வேளச்சேரி பைபாஸ் அல்லது தரமணி ரோட்டில் ஏதாவது ஒரு கடையில் மேட்டரை முடித்துவிட்டு பெசண்ட் நகருக்கு மின்னல் வேக பைக் பயணம். மார்கழி குளிர் முகத்தில் அறைந்தாலும் எதையுமே சாதிக்காமல் எதையோ சாதிக்கப்போவது மாதிரி, சாதித்தது மாதிரி பரவசம் நிறைந்திருக்கும். எதிர்காலம் குறித்த அச்சமோ, நிகழ்காலம் குறித்த வெட்கமோ இல்லாத பட்டாம்பூச்சி வயசு. பெசண்ட் நகர் டூ மெரினா. எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் வாய்குழற “ஹேப்பீ ந்யூ ஹியர்!”. ஒன்றிரண்டு ஃபிகர்கள் பதிலுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டால் போதும் வந்தது வம்பு.

“அவ என்னைப் பாத்துதாண்டா சொன்னா”

“உம்மூஞ்சிக்கு உன்னை பாத்து சொன்னாளா? இதுக்கெல்லாம் என்னை மாதிரி பர்சனாலிட்டி இருக்கணும் மாமே!”

“டேய் ரெண்டு பேரும் அஜித் விஜய் மாதிரி பேசிக்கிறீங்க. மாமாவைப் பாத்து தாண்டா அவ சொன்னா” மூன்றாமவனும் தன் பங்குக்கு ஜல்லியடிப்பான்.

பொதுவாக இதுபோல விவாதங்கள் ஜாலியாக முடிந்தாலும், சில நேரங்களில் சீரியஸாகி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மணலில் புரண்டதுமுண்டு.

பாலாஜி அண்ணாவும், ஓம்பிரகாஷ் மாமாவும் ஒரு புத்தாண்டுக்கு ‘மணக்குளம் விநாயகரை தரிசனம் பண்றோம்” என்று சொல்லி, அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி என்னை பாண்டிச்சேரிக்கு நண்பர்களோடு பைக்கில் அழைத்துச் சென்றார்கள்.

“சின்னப்பையன், இதெல்லாம் சாப்பிடுவானா?” அடிக்கடி ஓம்பிரகாஷ் மாமா பாலாஜி அண்ணாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இந்த காலத்து பசங்க நம்மளை விட கேடிங்க மச்சான். எல்லாம் சாப்பிடுவான்! ஹாட் அடிப்பியாடா?”

“ம்ம்..” வெட்கப்பட்டுக்கொண்டே பொய் சொன்னேன். அதுவரை எந்த கருமத்தையும் அடித்ததில்லை.

பிரெஞ்ச் ரம். ஊற்ற ஊற்ற உறிஞ்சுக் கொண்டேயிருந்தேன். ஐந்து ரவுண்ட். ‘ஒண்ணுமே ஏறலையே? பீர் தான் பெஸ்ட்டு!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். ரம் லேட்டாக பிக்கப்பாகும் என்பதை யாரும் சொல்லித் தொலைக்கவில்லை. அதிலும் பிரெஞ்ச் ரம் ரொம்ப ரொம்ப லேட் பிக்கப்பாம். கடையோர கையேந்திபவன் ஒன்றில் கல்தோசை சாப்பிடும்போது கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கை கால் உதற, இருதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்று அஞ்சும் வகையில் உவ்வ்வாக்...

கண்விழித்தபோது காலை பதினொரு மணி. ‘மணக்குளம் விநாயகர் தரிசனம்’ அபாரம்.

சுனாமி வந்து சூறையாடிச் சென்ற நிலையில் 2005 புத்தாண்டு. சுனாமி நேரத்தில் அப்பா சர்க்கரைநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மா ஒத்தாசைக்கு அப்பாவோடு இருக்க வீட்டில் தனியாகவே பத்து நாட்களை சமாளித்தேன். அந்த புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் யாருக்கும் மனமில்லை. பாலாஜி அண்ணா மட்டும் என்னை அழைத்துச் சென்று லோக்கல் டாஸ்மாக்கில் விடிய விடிய கவனித்தார்.

சில ஆண்டுகளாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று பணம் கட்டி கிளப்களில் மெம்பர்களாகியிருக்கும் நண்பர்கள் தயவில் புத்தாண்டு விடிகிறது. எட்டு, ஒன்பது மணிக்கு லைட் மியூசிக்கோடும் சரக்கு மற்றும் உணவுவகைகளோடும் மெல்ல சூடு பிடிக்கிறது. மேடையில் குட்டைப்பாவாடையோடு ஃபுல் மேக்கப்பில் போதைக்குரலோடு ஒரு பாடகி பாடிக்கொண்டிருப்பாள். நிறைய பேர் போலியாக நடனம் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக்கொண்டே சரக்கடிக்கிறார்கள்.

முப்பதுகளின் ஆரம்பத்திலேயே பலருக்கும் தொப்பை. பெரிய தொந்தியோடு கையை காலை ஆட்டியபடியே மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். முகம் உண்மையின் உரைகல். குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டியோடு வந்து தண்ணி போடுகிறார்கள். மனமொன்றி இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடமுடியவில்லை என்றாலும் வேறு வழியில்லை. கொண்டாடுவதைப் போல நடிக்கவாவது செய்யவேண்டும். ‘பூமாலை பாவையானது’ என்று பாடும்போது வெறுமனேவாவது கைத்தட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண ஊரில் கோவணம் அணிந்தவனின் கதியாகிவிடும்.

‘தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா’ - வடநாட்டு சிவப்பு மேனி அஞ்சலைகள் சிலர் கையில் பீர்பாட்டில்களோடு பெருத்த ஸ்தனங்களை குலுக்கி, குலுக்கி ஆடுகிறார்கள். அப்பனும், அண்ணன், தம்பிகளும் சுற்றி நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். சரியாக பண்ணிரண்டு அடிக்கும்போது ‘இளமை இதோ இதோ’. க்ளப்பின் ஏற்பாட்டில் வாணவேடிக்கை. எல்லோரும் எழுந்து நின்று ‘ஓ’வென்று கத்துகிறார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

‘போலிஸ்காரன் பிடிப்பானோ?’ என்ற பயத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை பேய்வேகத்தில் வண்டி ஓட்டுவதை பார்த்து பயமாக இருக்கிறது. அந்த காலத்தில் நம்மைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பார்களோ? ஒவ்வொரு சிக்னலை தாண்டும்போதும் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம். பேருக்கு சில டிரிங்க் & ட்ரை கேஸ் போடுகிறார்கள். அன்று வண்டி ஓட்டுபவன் எல்லோருமே டிரிங்க் & டிரைவ் தான் எனும்போது பாவம் அவர்களால் என்னதான் செய்யமுடியும்? சர்ச்சுகளில் உற்சாக வெள்ளம். கோயில்களிலும் புத்தாண்டு ஸ்பெஷல் ஆராதனை. இஸ்லாமியர்கள் மட்டும் ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலத்தோடு வரவேற்பதில்லை என்று தோன்றுகிறது. மானம் கெட்ட இந்துக்கள் இன்னும் சில காலத்தில் கிறிஸ்துமஸை கூட கிருஷ்ணர் சிலை வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

நீண்ட இருசக்கரப் பயணத்தின் இடையே சிரமப் பரிகாரத்துக்கு ஒரு டீக்கடைப் பக்கம் ஒதுங்கினால் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று எஃப்.எம்.மில் தேன் வழிகிறது. எத்தனையோ முறை ரேடியோவில் கேட்ட பாட்டு தான் என்றாலும் இதுவரை ஒரு தடவை கூட முழுமையாக கேட்டதில்லை. ஏனோ நேற்று முழுமையாக கேட்கவேண்டும் என்று தோன்றியது. வயசாயிடிச்சில்லையோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக