9 ஜனவரி, 2009

சென்னை புத்தகக் காட்சி - முதல் நாள்..


சென்ற வருடம் போல இந்த வருடமும் தினசரி புத்தகக்காட்சி தரிசனம் சாத்தியமா என்று தெரியவில்லை. இன்று கூட போய்வரும் சாத்தியமில்லை. ரிசர்வில் எத்தனை நாள்தான் வண்டி ஓட்டுவது? முரளிதியோரா விரைவாக மனசு வைத்தால் கடைசி ஐந்து நாட்களாவது தினமும் போய்வர முடியும். சென்னை சங்கமத்தை வேறு போட்டியாக நாளை தொடங்குகிறார் ‘தலைவரின் கனி, தமிழின் மொழி’.

புத்தகக்காட்சியை தொடக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு உடம்பு சரியில்லையாம். வாழ்த்துச்செய்தியோடு தன் கடமையை முடித்துக் கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸில் வந்திறங்கி கொச்சையான மேடைத்தமிழில் இலக்கியச்சேவை ஆற்றினார் நல்லி குப்புச்சாமி செட்டியார். எனக்கொரு சந்தேகம். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வாங்குபவர்கள் எல்லாமே பார்ப்பதற்கு பாவமாகவே இருக்கிறார்களே? ஏன்?

சென்ற வருடத்தை விட புத்தகக்காட்சி விசாலமாக காற்றோட்டத்தோடு இருப்பது போல ஒரு பிரமை. முதல் நாள் அனுமதி இலவசமென்றாலும் கூட்டம் நஹி. பல ஸ்டால்களில் இன்னமும் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி ‘ஓ ஞாநி’ ஆகிவிட்டாராம். அலங்காரம் செய்துக் கொண்டிருக்கும் போது கருவறையை திரைபோட்டு மூடியிருப்பது போல அவரது ஸ்டாலும் திரைபோட்டிருந்தது. மஞ்சள் திரை.

பாரதி புத்தகாலயம் சுறுசுறுப்பாக இருந்தது. புத்தகங்களை அடுக்கி வைத்திருந்த முறை அபாரம். திருக்குடந்தை பதிப்பகம் (கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) மட்டுமே முதல்நாளில் முழுமையாக தயாராகியிருந்தது. காலச்சுவடு கருப்புமயம். உயிர்மையில் இன்னமும் புதிய பத்தகங்களை பார்வைக்கு வைக்கவில்லை. சுஜாதா, ஜெயமோகன், சாரு மூவருமே உயிர்மையின் 90 சதவிகித இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லாப் பெட்டியில் முதலாளியம்மா. குழந்தை பீடிங் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது.

பத்து ரூபாய்க்கு பீர்வாசனையில் ஆப்பிள் ஜூஸ் கிடைக்கிறது. இனிப்பு மசாலா தடவிய வேர்க்கடலையின் விலை அதிகம் என்று ப்ளூ கலர் குல்லாய் போட்டு மாறுவேடத்தில் இருந்த ஒரு பிரபல எழுத்தாளர் புலம்பிக் கொண்டிருந்தார். தூர்தர்ஷன் ஒரு ஸ்டால் போட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை(?) ஒரு விசிடி இருநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் என்றளவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பர்மாபஸாரில் ‘திண்டுக்கல் சாரதி’ டிவிடியே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை.

மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல சுறுசுறுப்பு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பழைய கண்காட்சி ஒன்றில் இங்குதான் ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?’ புத்தகத்தை வாங்கி தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். அந்தப் புத்தகத்துக்கு அருகிலேயே ‘குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாவது எப்படி?’ என்றொரு புத்தகமும் இருந்தது நினைவில் நீங்கா கொடூரம். கண்ணதாசன் பதிப்பக கல்லாவில் இங்கும் வழக்கம்போல முதலாளியம்மாவே உட்கார்ந்திருக்கிறார். அதே சுறுசுறுப்பு. ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. முடிச்ச பையன் இன்னமும் நிர்வாகப் பொறுப்புக்கு வரவில்லை போலிருக்கிறது.

பாக்கெட் நாவல் ஜீ.ஏ. அண்ணாச்சியும் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார். சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது. அச்சு அவ்வளவு மோசமில்லை. கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதி ரூபாய் நூற்றி நாற்பது விலையில் தரமாக அச்சிடப்பட்டு விற்கிறது. அண்ணாச்சியிடம் விசாரித்தபோது ஸீரோ டிகிரி மலிவுப் பதிப்பு இருபதாயிரம் காப்பிகளுக்கு மேலாக இதுவரை விற்றதாக சொன்னார். அஜால் குஜால் டாக்டர் பிரகாஷின் நூல்களும் இங்கே மலிவுவிலையில் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ மக்கள் பதிப்பும் இங்கே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும். இந்த ஸ்டாலின் முதல் கஸ்டமர் என்பதால் அண்ணாச்சி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு எங்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடும் நக்கீரன் பதிப்பகம் இவ்வருடம் அடக்கி வாசிக்கிறது. கோபால் அண்ணாச்சி சேலஞ்ச் செய்யும் ஒரே ஒரு கட்-அவுட்டோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் கிழக்கு எடிட்டர் மருதனோடு பேசிக்கொண்டிருந்தவர் “பெரியவங்க எங்களையும் ஞாபகம் வச்சிக்கோங்க” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.

கிழக்கு ஸ்டாலில் ’பிரபாகரன்’ புத்தகமே இவ்வருட பிரதான அலங்காரம். அதற்கும் தடை போட்டுவிட்டதாக பாராவும், பத்ரியும் எழுதியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோலவே ‘நான் வித்யா’ புத்தகம் விற்பனையில் சூடாக இருந்தது. ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று கிழக்கின் விற்பனை மேலாளர் ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.

விகடன் பிரசுரம் முழுமையாக தயாராகாததால் உள்ளே நுழையவில்லை. குமுதத்தின் பு(து)த்தகம் ஸ்டாலில் ரேஞ்ச் குறைவு என்றாலும் ஆடம்பரத்துக்கு குறைவில்லை. ப்ளக்ஸ் பேனர்களும், கண்காட்சி முகப்பில் வரவேற்பு வளைவுகளுமாக ரொம்ப ஆடுகிறார்கள். சாருவின் ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பை வெளியிட்ட ப்ளாப்ட் பப்ளிகேஷன்ஸ் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பல்ப் பிக்‌ஷன் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஸ்டாலில் தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ வேடத்தில் ஒருவர் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நல்லவேளை கையில் துப்பாக்கி இல்லை.

நீண்டகாலமாக தமிழ் வாசகர்களின் டவுசர் கயட்டும், தாவூதீரும் நடையில் புத்தகங்கள் வெளியிட்டு வரும் க்ரியா பதிப்பகம் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தின் விலையிலும் ஒரு கல்யாணம் காட்சி செய்துக் கொள்ளலாம். பார்வைக்கு மட்டும் இவர்கள் வைத்திருக்கும் விண்டேஜ் கலெக்‌ஷன் புத்தகங்கள் கண்ணை கொள்ளை கொள்ளுகிறது. இவற்றை வேடிக்கை பார்ப்பதே மெகா சுவாரஸ்யம். மைக்கா கவரில் சுற்றி பாதுகாக்கப்பட்ட சுராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் பதிப்பை கையில் எடுத்துப் பார்க்கும்போது எதையோ சாதித்தது போல சொல்லவொண்ணா மகிழ்ச்சி.

இந்த வருடத்தின் டாக்காக சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ இருக்கக்கூடும். அறுநூறு ரூபாய் விலையில் வந்திருக்கும் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான மெகாநாவல். முதல்நாளிலேயே பலரும் ஆவலோடு புரட்டிப் பார்த்தார்கள். எத்தனை பேர் வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நூலாசிரியரின் பத்தாண்டு உழைப்பு வீண்போகாமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.

முதல்நாள் விசிட் வெறும் பறவைப் பார்வை பார்க்கவே உபயோகப்பட்டது. அடுத்தடுத்து செல்லும் நாட்களில் எதையாவது உருப்படியாக வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் என்றெல்லாம் அறிவிப்பினை கண்டு பேஜார் ஆகியும் போயிருக்கிறேன். எழுத்துப்போராளி சாருவின் ‘காமரூபக் கதைகள்’ கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று எண்ணம். பாராவின் ‘மாயவலை’யும் நிச்சயமாக வீட்டு நூலகத்தில் இடம்பெற்றாக வேண்டிய நூல்.

பாரதி புத்தகாலயத்தில் சில பிரதிகள் வாங்க வேண்டும். மணிமேகலையில் ‘கல்யாணம் செய்துகொள்வது எப்படி?’ என்ற நூல் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். எங்கேயோ ‘காதலிப்பது எப்படி?’ என்றொரு நூலைப் பார்த்தேன். சென்ற வருடம் வாங்கிய இதேபோன்ற ஒரு நூலால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக