1 ஜனவரி, 2009
வயசாயிடிச்சில்லையோ?
நினைவு தெரிந்த முதல் ஆங்கிலப் புத்தாண்டு அம்மாவுக்கு கோலம் போடும்போது உதவுவதில் ஆரம்பித்ததாக நினைவு. பத்து மணி வாக்கில் வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு அம்மா கோலம் போட ஆரம்பிப்பார். அவர் சொல்லும் இடங்களில் வண்ணம் சேர்ப்பது என் பணி. பண்ணிரெண்டு மணி அளவில் தூக்கம் கண்ணை சுழற்றும்போது கமல்ஹாசன் ‘இளமை இதோ இதோ’வென நடனம் ஆடுவார் டிவியில். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இப்படித்தான் எனக்கு புத்தாண்டு விடிந்திருக்கும். இன்னமும் அதே கமல் அதே இளமையோடு டிவிக்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இதுமட்டும் தமிழனுக்கு மாறாத ஒரு அம்சம்.
அப்புறம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வந்தபிறகு புத்தாண்டு அங்கே பிறந்தது. குடும்பத்தோடு கூட்டத்தில் கசகசவென உள்ளே புகுந்து ஆஞ்சநேயரை அண்ணாந்துப் பார்த்து, புத்தாண்டு பரிசாக அவர் தரும் ஐந்து ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொண்டு வருவதில் சில புத்தாண்டுகள் கழிந்தது. கொஞ்சம் தாமதமாகப் போனாலும் ஐந்து ரூபாய் நாணயம் இரண்டு அல்லது ஒரு ரூபாயாக மாறிவிடக் கூடிய ஆபத்துண்டு. அப்பாவின் தலைமையில் தான் ஆஞ்சநேயர் தரிசனம் நடக்கும். அப்பா தலைமையில் எது நடந்தாலும் எரிச்சல் தந்த காலக்கட்டம் அது. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதைப் போல பரபரவென்று எரிந்து விழுந்துக் கொண்டேயிருப்பார். ஆஞ்சநேயரை தரிசித்து மூன்று, மூன்றரை மணிக்கு அப்பாடாவென்று கண்ணயர்ந்தால் நாலு, நாலரைக்கெல்லாம் எழுப்பி உயிரை வாங்குவார். மாங்காடு கோயிலுக்கு காலையிலேயே போகவேண்டும். இதுபோன்ற தருணங்களில் தான் அவருக்கு முக்கியத்துவம் என்பதால் ரொம்ப ஓவராய் ஆடுவார்.
பியர் குடிக்க கற்றுக்கொண்ட காலத்து புத்தாண்டுகள் தான் சுவாரஸ்யமானது. ஒன்பதரை, பத்து மணியளவில் வேளச்சேரி பைபாஸ் அல்லது தரமணி ரோட்டில் ஏதாவது ஒரு கடையில் மேட்டரை முடித்துவிட்டு பெசண்ட் நகருக்கு மின்னல் வேக பைக் பயணம். மார்கழி குளிர் முகத்தில் அறைந்தாலும் எதையுமே சாதிக்காமல் எதையோ சாதிக்கப்போவது மாதிரி, சாதித்தது மாதிரி பரவசம் நிறைந்திருக்கும். எதிர்காலம் குறித்த அச்சமோ, நிகழ்காலம் குறித்த வெட்கமோ இல்லாத பட்டாம்பூச்சி வயசு. பெசண்ட் நகர் டூ மெரினா. எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் வாய்குழற “ஹேப்பீ ந்யூ ஹியர்!”. ஒன்றிரண்டு ஃபிகர்கள் பதிலுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிவிட்டால் போதும் வந்தது வம்பு.
“அவ என்னைப் பாத்துதாண்டா சொன்னா”
“உம்மூஞ்சிக்கு உன்னை பாத்து சொன்னாளா? இதுக்கெல்லாம் என்னை மாதிரி பர்சனாலிட்டி இருக்கணும் மாமே!”
“டேய் ரெண்டு பேரும் அஜித் விஜய் மாதிரி பேசிக்கிறீங்க. மாமாவைப் பாத்து தாண்டா அவ சொன்னா” மூன்றாமவனும் தன் பங்குக்கு ஜல்லியடிப்பான்.
பொதுவாக இதுபோல விவாதங்கள் ஜாலியாக முடிந்தாலும், சில நேரங்களில் சீரியஸாகி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மணலில் புரண்டதுமுண்டு.
பாலாஜி அண்ணாவும், ஓம்பிரகாஷ் மாமாவும் ஒரு புத்தாண்டுக்கு ‘மணக்குளம் விநாயகரை தரிசனம் பண்றோம்” என்று சொல்லி, அப்பாவிடம் பர்மிஷன் வாங்கி என்னை பாண்டிச்சேரிக்கு நண்பர்களோடு பைக்கில் அழைத்துச் சென்றார்கள்.
“சின்னப்பையன், இதெல்லாம் சாப்பிடுவானா?” அடிக்கடி ஓம்பிரகாஷ் மாமா பாலாஜி அண்ணாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“இந்த காலத்து பசங்க நம்மளை விட கேடிங்க மச்சான். எல்லாம் சாப்பிடுவான்! ஹாட் அடிப்பியாடா?”
“ம்ம்..” வெட்கப்பட்டுக்கொண்டே பொய் சொன்னேன். அதுவரை எந்த கருமத்தையும் அடித்ததில்லை.
பிரெஞ்ச் ரம். ஊற்ற ஊற்ற உறிஞ்சுக் கொண்டேயிருந்தேன். ஐந்து ரவுண்ட். ‘ஒண்ணுமே ஏறலையே? பீர் தான் பெஸ்ட்டு!’ மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். ரம் லேட்டாக பிக்கப்பாகும் என்பதை யாரும் சொல்லித் தொலைக்கவில்லை. அதிலும் பிரெஞ்ச் ரம் ரொம்ப ரொம்ப லேட் பிக்கப்பாம். கடையோர கையேந்திபவன் ஒன்றில் கல்தோசை சாப்பிடும்போது கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. கை கால் உதற, இருதயமே வெளியே வந்து விழுந்து விடுமோ என்று அஞ்சும் வகையில் உவ்வ்வாக்...
கண்விழித்தபோது காலை பதினொரு மணி. ‘மணக்குளம் விநாயகர் தரிசனம்’ அபாரம்.
சுனாமி வந்து சூறையாடிச் சென்ற நிலையில் 2005 புத்தாண்டு. சுனாமி நேரத்தில் அப்பா சர்க்கரைநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அம்மா ஒத்தாசைக்கு அப்பாவோடு இருக்க வீட்டில் தனியாகவே பத்து நாட்களை சமாளித்தேன். அந்த புத்தாண்டை கொண்டாட நண்பர்கள் யாருக்கும் மனமில்லை. பாலாஜி அண்ணா மட்டும் என்னை அழைத்துச் சென்று லோக்கல் டாஸ்மாக்கில் விடிய விடிய கவனித்தார்.
சில ஆண்டுகளாக ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று பணம் கட்டி கிளப்களில் மெம்பர்களாகியிருக்கும் நண்பர்கள் தயவில் புத்தாண்டு விடிகிறது. எட்டு, ஒன்பது மணிக்கு லைட் மியூசிக்கோடும் சரக்கு மற்றும் உணவுவகைகளோடும் மெல்ல சூடு பிடிக்கிறது. மேடையில் குட்டைப்பாவாடையோடு ஃபுல் மேக்கப்பில் போதைக்குரலோடு ஒரு பாடகி பாடிக்கொண்டிருப்பாள். நிறைய பேர் போலியாக நடனம் ஆடுவது போல கையையும், காலையும் ஆட்டிக்கொண்டே சரக்கடிக்கிறார்கள்.
முப்பதுகளின் ஆரம்பத்திலேயே பலருக்கும் தொப்பை. பெரிய தொந்தியோடு கையை காலை ஆட்டியபடியே மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள். முகம் உண்மையின் உரைகல். குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டியோடு வந்து தண்ணி போடுகிறார்கள். மனமொன்றி இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபடமுடியவில்லை என்றாலும் வேறு வழியில்லை. கொண்டாடுவதைப் போல நடிக்கவாவது செய்யவேண்டும். ‘பூமாலை பாவையானது’ என்று பாடும்போது வெறுமனேவாவது கைத்தட்ட வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண ஊரில் கோவணம் அணிந்தவனின் கதியாகிவிடும்.
‘தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா’ - வடநாட்டு சிவப்பு மேனி அஞ்சலைகள் சிலர் கையில் பீர்பாட்டில்களோடு பெருத்த ஸ்தனங்களை குலுக்கி, குலுக்கி ஆடுகிறார்கள். அப்பனும், அண்ணன், தம்பிகளும் சுற்றி நின்று கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். சரியாக பண்ணிரண்டு அடிக்கும்போது ‘இளமை இதோ இதோ’. க்ளப்பின் ஏற்பாட்டில் வாணவேடிக்கை. எல்லோரும் எழுந்து நின்று ‘ஓ’வென்று கத்துகிறார்கள். ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்.
‘போலிஸ்காரன் பிடிப்பானோ?’ என்ற பயத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டியதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை பேய்வேகத்தில் வண்டி ஓட்டுவதை பார்த்து பயமாக இருக்கிறது. அந்த காலத்தில் நம்மைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருப்பார்களோ? ஒவ்வொரு சிக்னலை தாண்டும்போதும் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம். பேருக்கு சில டிரிங்க் & ட்ரை கேஸ் போடுகிறார்கள். அன்று வண்டி ஓட்டுபவன் எல்லோருமே டிரிங்க் & டிரைவ் தான் எனும்போது பாவம் அவர்களால் என்னதான் செய்யமுடியும்? சர்ச்சுகளில் உற்சாக வெள்ளம். கோயில்களிலும் புத்தாண்டு ஸ்பெஷல் ஆராதனை. இஸ்லாமியர்கள் மட்டும் ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலத்தோடு வரவேற்பதில்லை என்று தோன்றுகிறது. மானம் கெட்ட இந்துக்கள் இன்னும் சில காலத்தில் கிறிஸ்துமஸை கூட கிருஷ்ணர் சிலை வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.
நீண்ட இருசக்கரப் பயணத்தின் இடையே சிரமப் பரிகாரத்துக்கு ஒரு டீக்கடைப் பக்கம் ஒதுங்கினால் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று எஃப்.எம்.மில் தேன் வழிகிறது. எத்தனையோ முறை ரேடியோவில் கேட்ட பாட்டு தான் என்றாலும் இதுவரை ஒரு தடவை கூட முழுமையாக கேட்டதில்லை. ஏனோ நேற்று முழுமையாக கேட்கவேண்டும் என்று தோன்றியது. வயசாயிடிச்சில்லையோ?
30 டிசம்பர், 2008
திருவண்ணாமலை
ஆக்ஷன் ஜோதியில் ஹாஃப் பாயில் போட்டிருக்கிறார் பேரரசு. ஆக்ஷன் தான் வேலைக்காகும். ஆன்மீகத்தால் ஆட்டையைப் போடமுடியாது என்று அழுத்தம் திருத்தமாக மெசேஜ் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆக்ஷன் கிங் என்றாலே அதிரடி. ஒன்றுக்கு இரண்டு ஆக்ஷன் கிங்குகள், நிறைய பெப்பர் போட்டு டபுள் ஆம்லெட். இரட்டை கிங்குகள் இம்சை அரசர்களாக மாறி மாறி வில்லன்களை வதைக்க, பேரரசுவும் தன் பங்குக்கு டாக்டர் சுவாமிமலை என்ற டுபுக்கு வேடத்தில் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி பஞ்ச் ஃபுட்பால் ஆடுகிறார். இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைபாயும் ஃபுட்பால் தான் ரசிகர்கள். தாங்கலை சாமியோவ்.
ரொம்பவும் லோபட்ஜெட்டில் படத்தை முடிக்க கவிதாலயா திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு டொக்கு ஃபிகர் தான் ஹீரோயின். ஹீரோயினை விட ஹீரோவுக்கு தங்கச்சியாக வரும் ஃபிகரே டக்கராக இருக்கிறார். கடந்த கால்நூற்றாண்டு காலமாகவே அர்ஜூனின் கட்டுடலை கண்டு கதாநாயகிகள் காமம் கொள்ளும் அல்லது காதல் கொள்ளும் கருமம் இன்னமும் தொடர்கிறது. பேரரசு படங்களின் காட்சிகளையும், பாடல்களையும் ஒரு டெம்ப்ளேட்டில் அடக்கிவிடலாம். ஹீரோ, ஹீரோயின் மற்ற கதாபாத்திரங்களை மட்டும் மாற்றி மாற்றி ஃபிலிம் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
பாவம், நல்ல நடிகரான சாய்குமார் பேரரசுவு படத்தின் வில்லனாகி ஐசியூ பேஷண்ட் மாதிரி பரிதாபமாக ஆகிவிட்டார். கவுண்ட் டவுன் சொல்லி அர்ஜூன் அறிமுகமாகும் ஓபனிங் ப்ளாக்கெல்லாம் அரதப்பழசு. இன்னுமா பேரரசுவை ஊர் நம்பிக்கிட்டிருக்கு? என்று தியேட்டரில் ஒருவரையொருவர் கேட்டுக் கொள்கிறார்கள். பட்டாசுக் கிடங்கில் பஸ்பமான அர்ஜூன் டிரைனேஜ் வழியாக க்ளைமேக்ஸில் எழுந்துவருவது நமுத்துப்போன ஊசிப்பட்டாசு.
இந்தப் படத்தில் கருணாஸ் காமெடியன். அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதியே சக்கைப்போடு போடுகிறது. திருவண்ணாமலை? வையாபுரி என்றொரு காமெடியன் முன்பு இருந்தார் நினைவிருக்கிறதா? அவரும் வந்துப் போகிறார். மருந்துக்கு கூட காமெடி இல்லை. அர்ஜுன் படங்களில் இதுவரை காமெடி மட்டுமாவது உருப்படியாக இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.
திக்குத்தெரியாத காட்டில் திசைபுரியாமல் குழம்பிப்போய் தியேட்டரில் உட்கார்ந்திருப்பவர்கள் இண்டர்வெல்லில் படம் திடுக்கென்று யூ டர்ன் அடித்து ஆன்மீகம் பக்கமாக திரும்பும்போது நிமிர்ந்து உட்காருகிறார்கள். அதுக்கப்புறமும் வழவழா கொழகொழா தான். வில்லன்கள் திரும்ப திரும்ப மோதுகிறார்கள். ஆக்ஷன் கிங் அடித்து உதைத்து ஓட ஓட விரட்டுகிறார். இந்த காட்சிகளையே இரண்டரை மணி நேரமும் பார்த்துத் தொலைத்தால் மூளைக்குள் மூட்டைப்பூச்சி கடிக்காதா?
தமிழினத்தின் பெருமைக்காக தமிழர்கள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர் துறந்திருக்கிறார்கள். தமிழர்களை மாய்க்கானாக நினைத்து தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் பேரரசுவுக்கு எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தையோ, உண்ணாவிரதத்தையோ எந்த தமிழ் அமைப்பாவது முன்நின்று நடத்த முன்வருமா?
23 டிசம்பர், 2008
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!
கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.
முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.
'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.
அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.
விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.
யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.
'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.
150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.
இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.
21 டிசம்பர், 2008
ஒரு கடிதம்!
பர்சனல் கேள்விகள் -
லக்கிலுக்,
இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!
அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?
அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.
என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************
* - * - * - * - * - * - * - * - * - * - * - * -
அன்பின் **************** சார்!
இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.
1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(
2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.
3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)
4) நன்றி! :-)
லக்கிலுக்,
இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!
அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?
அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.
என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.
- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************
* - * - * - * - * - * - * - * - * - * - * - * -
அன்பின் **************** சார்!
இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.
1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(
2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.
3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)
4) நன்றி! :-)
19 டிசம்பர், 2008
திண்டுக்கல் சாரதி!
திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.
தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.
பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.
தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.
சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.
ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.
சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!
நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.
“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”
“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”
“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”
“போங்க டாக்டர்”
“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”
படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.
திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)