30 அக்டோபர், 2009

இடியுடன் கூடிய மழை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!

1967ல் மார்ச்சில் தொடங்கிய நக்சல்பாரி எழுச்சியை ஒடுக்க மாநில காவல்துறை பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதாயிற்று. புரட்சியை தூண்டிவிட்ட தலைவர்களை கைதுசெய்ய அதே ஆண்டு மே 23ஆம் தேதி சென்ற காவல்துறையினர் நக்சல்பாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்கள். காவல்துறையினரே தாக்கப்பட்டதால் உச்சபட்ச வலுவோடு நக்சல்பாரிகளை ஒடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டது. நக்சல்பாரிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை பச்சைவயல்களை செந்நிறமாக்கியது. மே 25ல் நக்சல்பாரி கிராமத்தில் ரத்த ஆறு ஓடியது. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினொன்று பேர் மாண்டார்கள். இரண்டு மாதங்கள் கடுமையாக போராடிய பின்னரே நக்சல்பாரி கிராமத்தை காவல்துறையினரால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

ஆனால் காவல்துறையால் நக்சல்பாரி கிராமத்தை மட்டுமே தற்காலிகமாக அடக்கமுடிந்தது. நக்சல்பாரி புரட்சி நாடு முழுவதும் பரவியது. தெற்கில் ஆந்திரா, கேரளா மாநிலங்களில் நக்சல்பாரிகள் காலூன்றினர். பீகார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நக்சல்களின் செங்கொடி பறக்க ஆரம்பித்தது.

நக்சல்பாரி புரட்சியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. சாரு மஜும்தாரும், கானு சன்யாலும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட்டு புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினை தொடங்கினார்கள். நாடெங்கும் இருக்கும் கம்யூனிஸ்ட்டு ஆதரவாளர்கள் சாருவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அணி திரளத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளின் போராட்டம் வெறுமனே விளைநிலங்களுக்கான போராட்டமல்ல, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்று அறிவித்து “உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம்!” என்ற கோஷத்தை நாடெங்கும் ஒலிக்கச் செய்தார்கள் நக்சல்பாரிகள். இவர்களது வர்க்கப் போராட்டம் காட்டுத்தீயாய் நாடெங்கும் பரவியது.

ரஷ்யப் புரட்சியாளரான லெனினின் நூறாவது பிறந்ததினமான ஏப்ரல் 22ஆம் நாளில் 1969ஆம் வருடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தார்கள். சாரு மஜூம்தார் கட்சியின் மத்திய அமைப்பினுடைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல கம்யூனிஸ்டுகளுக்கு மே 1. அதே ஆண்டு மே ஒன்றாம் தேதி கொல்கத்தாவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கூடியது. கட்சியின் முன்னணித் தலைவரான கானு சன்யால் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மோதல் வெடித்தது. கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) தொண்டர்களுக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட உரசல், ஆயுதங்களோடு மோதிக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடனான தொடர்மோதலுக்கு அச்சாரம் இட்ட சம்பவம் இது.

நிலங்களை தாண்டி நக்சல்பாரிகளின் போராட்டம் தொழிற்சாலைகளுக்கு பரவியது. பாட்டாளிகள் பலரும் அணிதிரண்டார்கள். வேலை நிறுத்தம் செய்தால் கதவடைப்போம் என்று மிரட்டிய ஆலை அதிபர்கள் வயிற்றில் புளியை கரைத்தார்கள். நக்சல்பாரி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்பதையும் தாண்டி முதலாளிகளை நோக்கிய முற்றுகைப் போராட்ட வழிமுறைகளை கையாண்டார்கள். முதலாளியை ஒரு அறையில் அடைத்து சுற்றி முற்றுகை இடுவதே இந்தப் போராட்டம். கிட்டத்தட்ட சிறைப்படுத்துதல். விவசாயிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் அரசியல் கற்றுத் தந்தார்கள் நக்சல்பாரிகள்.

இக்கட்சி நாடெங்கும் கொரில்லாக் குழுக்களை உருவாக்கியது. இந்த கொரில்லாக் குழுக்களின் முக்கியப் பணி ‘அழித்தொழிப்பு'. அழித்தொழிப்பு என்றால் என்னவென்று சாருவின் வார்த்தைகளிலேயே வாசித்தால் தான் புரியும். 1969ல் தமிழ்நாட்டுக்கு வந்த சாரு மஜூம்தார் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது, “வர்க்க எதிரிகளை கொன்று குவித்து அவர்களது இரத்தத்தை மண்ணில் சிந்தச் செய்பவர்களே புரட்சியாளர்களாக வரலாற்றில் இடம்பெறுவார்கள். கிராமங்களில் கட்சியின் ரகசிய கொரில்லாக் குழுக்க அமைக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பவர்கள், கொடுங்கோல் மனப்பான்மை கொண்ட நிலமுதலாளிகள் மற்றும் பள்ளி, கோயில் நிலங்களை அபகரித்து வயிறு வளர்ப்பவர்களை நம் குழு அழித்தொழிக்க வேண்டும். அழித்தொழிப்பு பணிகளை மிக விரைவாகவும் செய்யவேண்டும்”.

அழித்தொழிப்பு என்ற சொல்லுக்கு இப்போது அர்த்தம் புரிகிறதா? சட்டப்பூர்வமான மொழியில் சொல்வதாக இருந்தால் ‘கொலை' என்றும் சொல்லலாம். ஆயுத வழியிலான போராட்டங்களில் ஈடுபட்ட இக்கட்சி பாராளுமன்ற - சட்டமன்ற ஓட்டுவங்கி அரசியலை முற்றிலுமாக புறக்கணித்தது.

நக்சல்பாரிகளின் அழித்தொழிப்புப் பணிகளை முடக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. ஆங்காங்கே நக்சல்பாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பீகார் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலப்பிரபுக்களை, இடைத்தரகர்களை கொன்று அடகுவைக்கப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களை மீட்டார்கள். பஞ்சாபில் போலிஸ் அதிகாரிகளும், பணக்கார நில உடமையாளர்களும் நக்சல்பாரிகளால் கொல்லப்படுவதற்காக குறிவைக்கப்பட்டனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியை தன்னாட்சி பெற்ற பகுதியாக நக்சல்பாரிகள் அறிவித்து ஆட்சி செய்தனர். மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினத்தவரின் ஆதரவு நக்சல்பாரிகளுக்கு பெருமளவில் இருந்தது.

போராட்டங்களை வடிவமைத்து வழிநடத்திய நக்சல்பாரிகள் நாடெங்கும் காவல்துறையினரால் வேட்டையாடப் பட்டார்கள். உயிர் பிழைத்தவர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீதிமன்றங்களின் முன் நிறுத்தப்பட்டார்கள். “வர்க்க எதிரிகளை மக்கள் நலனுக்காக அழித்தொழித்தோம். எங்களுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” என்று நீதிமன்றங்களில் கலகக்குரல் எழுப்பினார்கள். மக்களுக்கு காவல்துறை மீதிருந்த அச்சம் அகன்றது. சட்ட, பாராளுமன்ற, நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்த புனிதமாயை அகன்றது.

(புரட்சி தொடர்ந்து வெடிக்கும்)

29 அக்டோபர், 2009

வானிலை ஆராய்ச்சி நிலையம்!


வானிலை ஆராய்ச்சி நிலையம்! - என்றப் பெயரைக் கேட்டாலே வர வர கடுப்பாக இருக்கிறது. என்னத்தை ஆராய்கிறார்களோ தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பாக மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. நம் வானிலை ஆராய்ச்சி நிலையம் மூடிக்கொண்டு சும்மா இருந்தது. நேற்று மேகமூட்டம் லைட்டாக வந்ததுமே ஆராய ஆரம்பித்து விட்டார்கள். மாலை இடியும் காற்றுமாக மழை ஜமாய்த்ததுமே, அடுத்த இரண்டு நாட்களுக்கு கனத்த மழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று அடித்து விட்டார்கள்.

இவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பை நம்பி ரெயின் கோட் போட்டுக் கொண்டு வந்தால், வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. சாலையில் நடந்துச் சென்றால் அயல்கிரகவாசியைப் பார்ப்பது போல, சக சாலைப்போக்கர்கள் வினோதமாக பார்க்கிறார்கள். நாய்கள் குலைக்கின்றன, துரத்துகின்றன. இனிமேல் மழை வருமா, வராதா என்று தெரிந்துகொள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நம்பித் தொலைப்பதைவிட தெருவோர கிளிஜோசியக்காரனிடம் சீட்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இப்போது என்றில்லை. எப்போதுமே இந்த கிராக்கிகள் இப்படி குன்ஸாகதான் அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது லேசாக தூறல் போட்டுத் தொலைத்தாலே புயல், மழை, சுனாமி என்று பீதியைக் கிளப்பி பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இலவச விடுமுறை வாங்கித் தந்து விடுகிறார்கள். நான் படிக்கும்போது மழைக்காக விடுமுறை விடப்பட்ட ஒரு நாளில் கூட மழை வந்ததே இல்லை. இன்றும் இந்த நிலை மாறியதாக தெரியவில்லை. இனிமேலும் மாறாது என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது.

இவர்கள் ’இடியுடன் கூடிய மழை வரும்’ என்று குறிப்பிட்டு சொல்லும் நாட்களில் கடுமையான வெயிலும், சம்மந்தமில்லாத மற்ற நாட்களில் பேய்மழையும் சுளுக்கெடுக்கிறது. பத்திரிகைகள் எவ்வளவு கேலி ஜோக் எழுதினாலும் இத்துறை திருந்துவது போல தெரியவில்லை. இந்த ஆபத்பாண்டவர்களை நம்பி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் அவர்களது பிழைப்பும் கெடுகிறது.

புயல் வந்துவிட்டால் போதும். இப்போ கரையைக் கடக்கும், அப்போ கரையைக் கடக்கும், சென்னைக்கு அருகில், கடலூருக்கு எதிரில் என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் மாதிரி மாறி, மாறி கும்மியடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் இதுவரை புயல் கரையை கடந்ததாக சரித்திரமேயில்லை. நம்மூரில் குழந்தையைக் கேட்டால் கூட சரியாகச் சொல்லும். புயல் என்பது கடப்பதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஊர் மசூலிப்பட்டினம் என்று.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்ட காலக்கட்டத்திலும் கூட ‘லொள்ளு சபா’ டீம் போல காமெடி செய்துக் கொண்டிருக்கிறார்கள் நம் வானிலை ஆராய்ச்சியாளர்கள். சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு. மழை வருமா வராதா என்று இவர்கள் டாஸ் போட்டு நியூஸ் சொல்லுகிறார்களோ என்று. நம் அரசாங்கம் இந்த துறையை உருப்படியான வல்லுனர்களை கொண்டு சீரமைக்க வேண்டும். இல்லையேல் கிளி ஜோசியக்காரர்களை, இவர்களுக்குப் பதிலாக பணியில் அமர்த்த வேண்டும்.

தகவல் கேளுங்கள்!


வெளிப்படையான, விரைவான அரசு நிர்வாகம் நடக்க என்ன தேவை? மாற்றம் தேவை என்று ஒரே வரியில் சொல்வீர்கள். மாற்றம் நிகழ அடிப்படையான விஷயம் தகவல் பரிமாற்றம். இதனால் தான் அரசுக்கும், மக்களுக்குமிடையே தகவல் பாலமாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் செயல்படுகிறது.

பிறப்பு - இறப்பு சான்றிதழ், ரேஷன்கார்டு, கல்விக்கடன், தொழிற்கடன், பத்திரப்பதிவு என்று மக்களை இழுத்தடிக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் அரசிடமிருந்து நாம் இச்சட்டத்தின் மூலம் தகவல் பெறலாம். ஊராட்சி மன்றத்தில் தொடங்கி ரேஷன்கடை, மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். தகவல்கள் அறிந்துகொள்வதே தீர்வுக்கான சரியான பாதை.

தெருவிளக்கு, சாக்கடை, பாலங்கள், சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், செயல்பாடுகள் எதை குறித்தும் இச்சட்டம் மூலமாக நாம் கேள்வியை எழுப்ப முடியும்.

மக்களின் தேவைக்காக அரசை செயல்பட வைக்க, மக்களின் உரிமைகளையும், பங்கேற்பையும் உறுதிசெய்யவும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் வாயிலாக அரசு தொடர்பான நிறுவன அலுவலகங்களின் ஆவணங்களில் இருக்கும் தகவல்களின் நகலினை கேட்டுப் பெற முடியும். எந்த ஒரு பொது அதிகாரத்திடமிருந்தும் தகவலை ஒரு குடிமகன் கேட்டுப்பெற இச்சட்டம் வகை செய்கிறது.

நமது அரசும், அரசு நிறுவன்ங்கள் குறித்த தகவல்களும் ஒன்றும் தனியார் சொத்தல்ல. மக்கள் சொத்து. எனவே யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கமுடியும் என்பதுதான் இச்சட்ட்த்தின் சிறப்பே. ‘உனக்கு தொடர்பில்லாத துறை, நீ ஏன் கேட்கிறாய்?’ என்று யாரும் பதிலுக்கு கேட்டுவிட முடியாது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’ என்ற பதத்துக்கு உண்மையான பொருள்தரும் சட்டம் இது.

இச்சட்ட்த்தின் அடிப்படையில் ஒருவர் எப்படி கேள்விகள் கேட்கமுடியும்?

இதற்கென தனியாக வரையறுக்கப்பட்ட படிவம் எதுவுமில்லை. ஒரு முழு வெள்ளைத்தாளில் உங்களது பெயர், முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு “தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழாக கீழ்க்காணும் தகவலைப் பெற விரும்புகிறேன்” என்று எழுதிவிட்டு, எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். இதற்கான கட்டணம் ரூபாய் பத்து மட்டுமே. நீதிமன்ற வில்லையாகவோ (Court Fee Stamp) அல்லது வரைவோலையாகவோ (Demand Draft) கட்டணம் செலுத்தப்பட வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களுக்கு அஞ்சல் ஆணை (Postal Order) மற்றும் வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியத் தேவையில்லை.

சரி, மனுவும், கட்டணமும் ரெடி. அடுத்து யாருக்கு அனுப்பவேண்டும்?

அரசு தொடர்பான ஒவ்வொரு அலுவலகத்திலும் பொதுத்தகவல் அதிகாரி ஒருவர் கட்டாயம் இருப்பார். அவரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். இல்லையேல் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நீங்கள் சரியான துறைக்கு அனுப்பாமல் தவறான துறைக்கு அனுப்பிவிட்டாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. மனுவைப் பெற்ற சம்பந்தப்பட்ட அதிகாரி, அதை சரியான துறைக்கு அவரே அனுப்பி வைப்பார். மனுதாரருக்கும் சரியான துறைக்கு திருப்பி அனுப்பி வைத்தது பற்றிய தகவலை தெரிவித்து விடுவார். எனினும் இதனால் காலவிரயம் ஏற்படக்கூடும்.

மனுவைப் பெற்றுக் கொண்ட துறை, மனு கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் பதில் கொடுத்தாக வேண்டும் என்பது சட்டம். இக்காலக்கெடுவுக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தின் மேல்முறையீட்டு பொதுத்தகவல் அதிகாரிக்கு அதே மனுவை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். இவராலும் முப்பது நாட்களுக்குள்ளாக பதில் அளிக்க இயலவில்லை எனில் மாநிலத் தலைமை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகவல் அளிக்காத அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூற்றி ஐம்பது வீதம், ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் வரை ஆணையம் அபராதம் விதிக்கும். உங்கள் மனுவுக்கான பதில் விரைவில் கிடைக்கும் ஏற்பாட்டையும் ஆணையம் செய்யும்.

இந்தியாவின் இறையாண்மை குறித்த தகவல்கள், வெளியே தெரிந்தால் அயல்நாட்டு உறவைப் பாதிக்கும் என அரசாங்கம் இரகசியமாக காக்கும் விவரங்கள், மற்றவர்களின் தொழில் ரகசியங்கள், பொதுநலனுக்கு தொடர்பில்லாத அடுத்தவரின் அந்தரங்கம், முக்கியமான சில புலன்விசாரணை அமைப்புகள் குறித்த விஷயங்கள் போன்றவை குறித்த தகவல்களுக்கு மட்டுமே பதில்கள் மறுக்கப்படலாம். ஆயினும் ஆணையமே இத்தகவல்களுக்கு பதில் அளிக்கலாமா கூடாதா என்று முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

உங்கள் வீட்டில் அடிக்கடி மின்தடையா? துவரம்பருப்பு விலை ஏன் விண்ணை எட்டிவிட்டது? உங்கள் தெரு சாலைகள் ஒழுங்காக பராமரிக்கப் படுவதில்லையா? அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கு இன்னமும் ஏன் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை? ஏனென்று உடனே இச்சட்டத்தின் கீழ் மனு போட்டு பதில் கேளுங்கள். கேள்வி எழுப்புவது உங்கள் உரிமை. பதில் அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

28 அக்டோபர், 2009

வசந்தத்தின் இடிமுழக்கம்

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!

“எங்கு பார்த்தாலும் ஊழல். ஊழலற்ற எதுவுமே இந்த நாட்டில் இல்லை. நாட்டையே சுரண்டி கொள்ளையடிக்க தான் எல்லோருமே விரும்புகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு தீர்வாக சுரண்டல்வாதிகள் சிலரையாவது பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் தொங்க விடவேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கு அது பாடமாக இருக்கும்” உணர்ச்சிக் கொந்தளிப்போடு இந்த வார்த்தைகளை உச்சரித்தவர் ஒரு நக்சல்பாரி அல்ல. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய காட்ஜு. ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்ட பீகாரைச் சேர்ந்த பிராஜ் பூஷன் பிரசாத் என்பவர் பெயில் கேட்ட வழக்கின்போது காட்ஜு சொன்ன வார்த்தைகள் இவை. தன்னையே ஒரு கணம் மறந்துவிட்டு நீதிபதி சொன்ன கருத்தாக கூட இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து நியாயமானதா, இல்லையா என்பதை நம் ஒவ்வொருவர் மனச்சாட்சியையும் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டு சொன்ன இந்த கருத்தை தான் நக்சல்பாரிகள் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். மாவோயிஸ்டுகளின் ஜன் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்) வலியுறுத்துவதும் இதுபோன்ற தீர்ப்பை தான்.

மேற்கு வங்கத்தின் வடகிழக்கு முனையில் இருக்கும் மிகச்சிறிய கிராமம் நக்சல்பாரி. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கிறது. டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டம். ஆயிரக்கணக்கான இந்திய கிராமங்களைப் போலவே இங்கும் விவசாயிகளிடம் நிலப் பிரபுக்கள் சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தார்கள். அடக்குமுறை கொடுமைகளை எதிர்த்து வாய் பேச இயலா ஊமைகளாக உழைப்பாளிகள் வாழ்ந்தார்கள்.

இரத்தத்தையும், தியாகத்தையும் தோய்த்தெடுத்து எழுதப்படும் செங்கொடியின் வீரவரலாறு தொடங்கியது இங்கேதான். ‘துப்பாக்கி முனையில் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்ற மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து நக்சல்பாரி உழவர்களின் ஆயுதமேந்திய புரட்சி வெடித்தது. உழவர்கள் மட்டுமன்றி சிலிகுரி மாவட்டத்தின் தேயிலைத் தொழிலாளர்களும் இந்தப் புரட்சியின் போது வீறுகொண்டு எழுந்தார்கள்.

1967ஆம் ஆண்டு ‘கிராமப்புற புரட்சியின் மூலமாக அதிகாரத்தை கையகப்படுத்துதல்' எனும் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து சாரு மஜூம்தார் என்ற நாற்பத்தொன்பது வயது கம்யூனிஸ்ட்டு தலைவர் தன்னுடைய நண்பரான கானு சன்யால் என்பவரோடு இணைந்து நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைக்கிறார். நக்சல்பாரி கிராமத்தில் இந்த எழுச்சிக்கான விதை விதைக்கப்பட்டதால் இவர்கள் பிற்பாடு நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

அப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெடித்த நக்சல்பாரிகளின் புரட்சி பல நிலைகளை தாண்டி நீறுபூத்த நெருப்பாக இன்று இந்திய மாநிலங்களில் கனன்று கொண்டிருக்கிறது. நக்சல்பாரிகளின் புரட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவினைக்கும் அடிகோலியது. மேற்கு வங்கத்தில் ஆண்டுகொண்டிருந்த கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு கம்யூனிஸ்டுகளை பிரதிநிதித்துவப் படுத்தாமல் மத்தியில் ஆண்டுகொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட புரட்சியாளர்கள் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்கள். தங்கள் தரப்புக்கு ஆதரவு திரட்டினார்கள்.

“பெரும் நில முதலாளிகளிடமிருந்து நிலங்களை பிடுங்கி ஏழைகள் பங்கிட்டு கொள்ள வேண்டும். ஏழைகளே நேரடி நடவடிக்கைகளில் இறங்கி தங்களுக்கான நிலத்தை எடுத்துக் கொள்வார்கள்” என்று திடீரென சாரு மஜூம்தார் அறிவிக்க நாடே கலங்கிப் போனது. மேற்கு வங்காளத்தில் கூட்டணி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தன் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ஒருவர் இதுபோன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு சிக்கலை அளித்தாலும் தீவிர கம்யூனிஸ்டுகள் சாருவின் அறிவிப்பை வரவேற்றார்கள். நக்சல்பாரிகளின் எழுச்சி இந்திய மக்கள் புரட்சியை வெடிக்கச் செய்யும் என்று நம்பினார்கள். மேற்கு வங்காளத்தில் இளையதலைமுறையினர் பலர் சாருவை பின்பற்றிச் செல்ல தங்கள் குடும்பங்களை துறந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது பலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த திடீர் புரட்சியாளர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இவர்கள் ஒன்றிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கலகக்காரர்களாக செயல்பட்டார்கள். கட்சியின் கொள்கைகளை விளக்க தேசப்ரதி, லிபரேஷன், லோக்யுத் ஆகிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதமேந்திய கிராமக்குழுக்களை உருவாக்கினார்கள். நிலப்பிரபுக்களின் பட்டாக்களையும், அவர்களிடம் தாங்கள் அடகுவைத்திருந்த கடன்பத்திரங்களையும் கைப்பற்றி கொளுத்தினார்கள். ஜன் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து வர்க்க எதிரிகளை கூண்டிலேற்றி விசாரித்து கடுமையான தண்டனைகளை வழங்கினார்கள். கொடுங்கோல் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்களுக்கு உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை மக்கள் நீதிமன்றங்களில் வழங்கப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சாரு மஜூம்தாரின் அறிவிப்பினை கொண்டாடியது. ‘வசந்தத்தின் இடிமுழுக்கம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தது. சீன கம்யூனிஸ்டுகள் கொண்டாடினாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) வரவேற்கவில்லை. நக்சல்பாரிகளை அடக்கும் முயற்சியில் அங்கே ஆளும் கம்யூனிஸ்ட்டு கட்சி அரசு இயந்திரத்தை பயன்படுத்தியது. நக்சல்பாரிகளை கண்டு ஆளும் கட்சிகள் “பயங்கரவாதம்” என்று குரலெழுப்பத் தொடங்கினார்கள். நக்சல்பாரிகளோ தாங்கள் நடத்துவது தங்களது உரிமைப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் விவசாயிகளுக்கு சமமாக பங்கிடப்பட்டது. வயல்கள் தோறும் செங்கொடி பறந்தது.

(புரட்சி தொடர்ந்து மலரும்)

25 அக்டோபர், 2009

துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!


ரஷ்யாவில் 1917 அக்டோபரில் வெடித்த புரட்சி உலகளாவிய பொதுவுடைமை சிந்தனையாளர்களுக்கு ஊக்க மருந்தாக அமைந்தது. உடனடியான பாதிப்பு மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இருந்தது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் துயர்நீக்க மார்க்சியப் பாதை தான் சிறந்தது என்று எண்ண தலைப்பட்ட சிந்தனையாளர்கள் கம்யூனிஸக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்டு அமைப்புகளை 1920கள் வாக்கில் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வெள்ளையர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

லெனினின் சிந்தனைகள் அடிப்படையிலான கம்யூனிஸ்டு கட்சி அமைப்பு முறை போல்ஷ்விஸம் என்று அழைக்கப்படும். போல்ஷ்விஸம் ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களை அன்றைய ஆட்சியாளர்களும் உணர்ந்திருந்தனர். கம்யூனிஸ்டு என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் வேட்டையாடப் பட்டனர். பொய் வழக்குகள் போடப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டனர். பல நெருக்கடிகளை தாண்டியே பல்வேறு பொதுவுடைமை சிந்தனைக் குழுக்கள் இணைந்து கம்யூனிஸ்டு கட்சி ஏற்படுத்தப்பட்டது.

நாட்டில் அப்போதிருந்த முக்கியப் பிரச்சினை ஏகாதிபத்தியம். காங்கிரஸ் கட்சியோ ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிறுத்தி மும்முரமாக போராடிக் கொண்டிருக்க, கம்யூனிஸ்டு இயக்கங்கள் வர்க்க விடுதலைக்கு தீவிரமாக போராடின. ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு முன்னால் வர்க்க விடுதலை மக்களுக்கு பெரியதாக தோன்றவில்லை. விவசாய தொழிலாளர்களின் உரிமையை ஒருபுறம் வலியுறுத்தி, இன்னொரு புறம் தேசவிடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்குமேயானால் காங்கிரஸ் இயக்கத்துக்கு கிடைத்த செல்வாக்கு ஒருவேளை அப்போதே கம்யூனிஸ்டுகளுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் முதலாளி வர்க்க எதிரிகள் என்ற அடிப்படையில் தான் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களே தவிர அவர்கள் அந்நியர்கள் என்ற அடிப்படையில் தீவிரமாக எதிர்க்கவில்லை. எனவே தேச விடுதலையில் காங்கிரஸ் அளவுக்கான பங்கினை, செல்வாக்கினை கம்யூனிஸ்டுகள் பெற இயலாமல் போனது.

இரண்டாம் உலகப்போர் நடந்த நேரத்திலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் உள்ளியக்க கருத்து வேறுபாடுகள் தோன்றின. போர் எதிர்ப்பு நிலையை கம்யூனிஸ்டு இயக்கங்கள் மேற்கொண்டதால் பல தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியதாகியது. ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்தபோது சிறைபடாமல் தலைமறைவாகியிருந்த கட்சியினர் சோவியத் யூனியனுக்கு உதவி செய்ய ஒரே வழி, தேசிய விடுதலைக்கு தீவிரமாக போராடுவதே என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் போரால் ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் பலவீனமடையும், அது சோசலிஷ ரஷ்யாவுக்கு பிற்பாடு வலிமை சேர்க்கும் என்பது அவர்களது கணிப்பு.

ஆனால் சிறையிலிருந்த கம்யூனிஸ்டு தலைவர்களின் சிந்தனையோட்டம் வேறுமாதிரியாக இருந்தது. ஆங்கிலேயர்களின் போர் தயாரிப்புகளுக்கு முழுமூச்சான ஆதரவு தரவேண்டும் என்றும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நிறுத்திவிட வேண்டும் என்றும் சொன்னார்கள். இதற்கு பிரதியுபகாரமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உலகப்போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலக வரைப்படத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் போர் முடிவில் பலவீனமாக காட்சியளித்தனர். இந்நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மக்கள் ஆயுதம் மூலமாக ஆங்காங்கே கலகம் செய்தனர். இச்சந்தர்ப்பத்தையும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கலகக்காரர்களை ஆங்கிலேயர்கள் காங்கிரசோடு கூட்டு அமைத்து காலி செய்தார்கள். திடீரென்று விழித்துக் கொண்ட கம்யூனிஸ்டுகள் தங்கள் தரப்பு தொழிலாளர்களை திரட்டி வேலை நிறுத்தம் செய்தது. மாணவர்களும், தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தந்திரத்தில் கரைகண்ட வெள்ளையர்கள் காங்கிரஸிடம், முஸ்லீம் லீக்கிடமும் சரணடைந்தனர். விவகாரமான சுதந்திரமும், ஆங்கிலேயர்களை கொண்ட அரசியல் நிர்ணயசபையும் இந்தியர்கள் மீது திணிக்கப்பட்டது. ஏகாதிபத்திய நாடுக்களுக்கான பின்வாசல் எப்போதும் திறந்தே வைத்திருக்கும்படியான சுதந்திரம் இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போதும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்கள் காங்கிரஸை நம்பின. நேரு, காந்தி போன்ற காங்கிரஸின் முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று கோஷமிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னும் தொடர்ந்த தொழிலாளர் துயரத்தை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

பி.டி.ரணவேதி என்ற கம்யூனிஸ்டு தலைவர் கலகக்காரரானார். தன்னைப் போன்ற தீவிர ஒத்த சிந்தனை கொண்டவர்களின் துணையோடு கட்சியின் தலைமையை கைப்பற்றினார். நேருவின் அரசு ஆங்கிலேயர்களின் கைப்பாவை அரசு என்று இந்த கலகக்கார கம்யூனிஸ்டுகள் அறிவித்தனர். வர்க்க சமரசத்திற்கு எதிரான புரட்சியை நடத்த வன்முறைப்பாதையையும் மேற்கொள்ள தயாராயினர். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமும், மக்களின் கிளர்ச்சியும் தான் தங்கள் பாதை என்றனர்.

இதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானாவில் வன்முறைப் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. நிலமுதலாளிகளுக்கும் அவர்களது வன்கொடுமைகளுக்கும் எதிரான போராட்டம் தெலுங்கானா என்று சொல்லக்கூடிய பகுதிகளில் அங்கிருந்த பிரதேச கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. இங்கே போராடிக்கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் சீனாவின் புரட்சியாளர் மாவோவின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தவர்கள். எனவே இவர்கள் பி.டி.ரணவேதியின் போராட்டத்தை மாவோ கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்த்தார்கள்.

நிலமுதலாளித்துவத்துக்கும், நகர்ப்புற முதலாளி வர்க்கத்துக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே சமயத்தில் நடந்தால், போராட்டங்களின் வீரியம் நீர்த்துப் போகும் என்பது தெலுங்கானா புரட்சியாளர்களின் கணிப்பு. அவர்களது மொழியில் சொல்வதானால் ஜனநாயகப் புரட்சியையும், சோஷலிசப் புரட்சியையும் ஒரே நேரத்தில் நடத்த இயலாது. கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் முறையான விவசாயத் திட்டத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே புரட்சியை வெடிக்கச் செய்யமுடியும் என்பது அவர்களது நிலைபாடாக இருந்தது. கிராமப்புறங்களில் ஏற்படும் புரட்சி நகரத்தை சுற்றி வளைத்து இறுதியில் கைப்பற்றும். ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியைக் காட்டிலும் சீனப்புரட்சியைப் போன்ற செயல்பாடு தான் இந்தியச்சூழலுக்கு தகுந்ததாக இருக்கும் என்றும் தெலுங்கானா போராளிகள் நினைத்தனர். இன்றைய நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு முன்னோடிகளாக தெலுங்கானா போராளிகளை குறிப்பிடலாம்.

பி.டி.ரணதிவே இந்த சிந்தனைகளை முற்றிலுமாக நிராகரித்தார். மாவோவை ஒரு போலி மருத்துவர் என்று காரமாக குற்றம் சாட்டினார். ஆயினும் 1950களின் ஆரம்பத்தில் தெலுங்கானா கிளர்ச்சியாளர்கள் ஆந்திராவில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்டனர். ஐதராபாத் இந்தியாவுக்குள் இணைந்தபோது அங்கே முற்றுகையிட்டிருந்த இந்திய ராணுவத்தின் மூலமாக தெலுங்கானா போராளிகளின் புரட்சி நசுக்கப்பட்டது.

கம்யூனிஸ்டு இயக்கங்களில் இன்று பிரபலமாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் சரி.. தெலுங்கானா போராட்டத்தை அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமாக ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நிலமுதலாளிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி தக்கவைத்துக் கொள்ள நடந்த போராட்டம் தான் அது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்கிறது. தெலுங்கானாவில் நடந்தது முழுக்க முழுக்க அராஜகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. ஆனால் தெலுங்கானா போராட்டத்தை ஆதரித்துப் பேசுபவர்களோ அப்போராட்டம் ‘ஆந்திராவில் மக்கள் ஆட்சி’ என்பதை முன்னிறுத்தி நடந்தப் போராட்டம் என்கிறார்கள்.

ரஷ்யாவிலும் ஸ்டாலினுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவர்களால் கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள் அவரவர் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டிருந்த நேரமது. “ஏற்கனவே இருக்கும் அரசமைப்பை புரட்சி மூலமாக தூக்கியெறிய வேண்டியதில்லை. முதலாளிகளோடு தொழிலாளி வர்க்கம் சமரசமாகி அதிகாரத்தை பங்கிடுவதின் மூலமாகவே தேசிய ஜனநாயக அரசை ஏற்படுத்த முடியும்” என்று ரஷ்யாவில் ஆட்சிபுரிந்த குருசேவ் தலைமையிலான கம்யூனிஸ்டுகள் கூறிவந்தனர். இது லெனின் – மாவோ உள்ளிட்டோரின் கோட்பாடுகளுக்கு நேரிடையானதாக இருந்தது.

இந்தியாவிலிருந்த கம்யூனிஸ்டு இயக்கமோ ‘ரஷ்யா சொன்னா சரி’ என்று தலையாட்டியது. இந்திய - சீன எல்லைப்போர் தொடங்கிய நேரமது. கட்சித்தலைமையோ சீனாவை ஆதரித்தால் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுவோமோ என்ற அச்சத்தில் சீன எதிர்ப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. கட்சியில் இருந்த தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள் உட்கட்சி கிளர்ச்சி செய்து கட்சியை உடைத்தார்கள். இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

கிளர்ச்சி செய்து புதுக்கட்சியை உருவாக்கியிருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமரச வழியிலான சோஷலிஸத்தை நோக்கிதான் பயணம் செய்தது. சரியாக சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பதை நோக்கிய பயணமாக இருந்தது. மேற்கு வங்காளம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலமானது. விவசாயிகள் - தொழிலாளர் போராட்டங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கையோடு சேர்த்தே திட்டமிடப்பட்டது.

மார்க்சிஸ்டுகளின் திட்டங்களுக்கு நல்ல பலன் இருந்தது. 1967ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுசாரி முன்னணி மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதே கட்சியிலிருந்து தேர்தல் பாதைக்கு எதிரான மனோபாவம் கொண்ட புரட்சியாளர்களின் தலைமையில் நக்சல்பாரி புரட்சி ஆயுதமேந்தி நடந்தது. தங்கள் இயக்கத்தில் இதுநாள் இருந்தவர்களையே போலிஸை விட்டு கண்மூடித்தனமாக தாக்கி புரட்சியை நசுக்கியது மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு. இதன் மூலமாக பாட்டாளிகள் தலைமையிலான மக்கள் ஆட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்பதாக நக்சல்பாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நக்சல்பாரிகளுக்கு இன்னொரு வேடிக்கையான பெயரும் தமிழகத்தில் உண்டு. தீ.கம்யூனிஸ்டுகள் என்று அவர்களை செய்தித்தாள்களில் எழுதுவார்கள். அதாவது தீவிர(வாதி) கம்யூனிஸ்டுகளாம். இந்த தீ.கம்யூனிஸ்டுகள் ‘நாடாளுமன்ற அரசியல் மூலமாகவோ, சமரச அரசியல் மூலமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற முடியாது’ என்று பிரகடனப்படுத்தி இயங்கி வருகிறார்கள்.

நக்சல்பாரி புரட்சியாளர்கள் இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக நான்கு விஷயங்களை குறிப்பிடுகிறார்கள். நிலமுதலாளித்துவம், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், குருசேவ் காலத்துக்கு பின்னரான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் - இவை நான்குக்கும் எதிரான போராட்டங்களே உழைக்கும் மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை ஏற்படுத்தும் என்பது நக்சல்பாரிகளின் நிலைப்பாடு.

சீனா மற்றும் வியட்நாமில் தோன்றிய மக்கள் போர் மூலமாகவே இந்திய உழைக்கும் மக்களுக்கான விடுதலையை ஏற்படுத்த இயலும். துப்பாக்கிக் குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்று முழக்கமிட்டார்கள். கிராமப்புறங்களில் நிலமுதலாளிகளை பலவீனமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நிலப்பிரபுக்களை கொன்று குவிப்பதை ‘அழித்தொழிப்பு’ என்ற பெயரிலான கிளர்ச்சியாக குறிப்பிட்டார்கள். நகர்ப்புற இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளை ‘அழித்தொழிப்பு’ பணிகளுக்கு தயார்படுத்தினார்கள்.

(புரட்சி மலரும்)