25 நவம்பர், 2009

நீங்க நல்லவரா? கெட்டவரா?

நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்டால் ‘தெரியலியேப்பா!’ என்று நாயகன் கமல் மாதிரி பதில் சொல்லக்கூடும். சென்னை கோடம்பாக்கத்துக்குப் போய் தெருமுக்கில் நின்றுகொண்டு, இதே கேள்வியைக் கேட்டால் ‘நாங்கள்லாம் ரொம்ப நல்லவங்க!’ என்று நெஞ்சை நிமிர்த்தி, பெருமிதமாய் பதில் சொல்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘நல்லோர் வட்டத்தை’ சேர்ந்தவர்கள்.

தெற்கு சிவன் கோயில் பகுதிக்கு சென்றபோது நமக்கே ஆச்சரியம். சென்னையிலா இருக்கிறோம்? ஒவ்வொரு வீட்டு வாசலும் சுத்தமாக, கோலம் போடப்பட்டு, ‘பளிச்’சென்று இருக்கிறது. சுவர்களில் சுவரொட்டிகளும், ‘கோடம்பாக்கத்தார் அழைக்கிறார்’ பாணி அரசியல் சுவர் விளம்பரங்களும் அறவே இல்லை. பொன்மொழிகளும், தத்துவங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. சாலையோரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு கண்களுக்கு பசுமையையும், உடலுக்கு சில்லிப்பையும் ஏற்படுத்துகின்றன. கீழ்நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு பகுதியில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்டால் ‘நல்லோர் வட்டத்தை’ கைகாட்டுகிறார்கள்.

அதென்ன நல்லோர் வட்டம்?

கோடம்பாக்கம் சிவன் கோயில் அருகே டீக்கடை நடத்திவரும் பாலசுப்பிரமணியன் சொல்கிறார். “இந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறேன். என் கடையில் பாரதியார், மகாத்மா என்று தேசத்தலைவர்களின் படங்களை வைத்திருப்பேன். பொன்மொழிகளை எழுதி வைத்திருப்பேன். கடைக்கு வரும் இளைஞர்கள் பலரும் அரசியல், உலக நடப்பு என்று பேசுவார்கள். ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டு வரும் அக்கறை அவர்களின் பேச்சில் தொக்கி நிற்கும். ஆனால் வெறுமனே தங்களது ஆதங்கங்களை கொட்டிவிட்டு செல்வதில் என்ன பலன் இருக்க முடியும்?

அந்த இளைஞர்களோடு பேசி, அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு அமைப்பை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினோம். அதற்கு நல்லோர் வட்டம் என்று பெயரும் இட்டோம். ‘நல்லது நடக்க வேண்டும்’ என்று விரும்புகிறவர்கள் அனைவருமே இந்த அமைப்பின் உறுப்பினர்கள். இந்த அமைப்புக்கு சந்தா கிடையாது. காசு என்று வந்தாலே அதை நிர்வகிக்க ஏராளமான மனித உழைப்பும், நேரமும் தேவைப்படுகிறது. அந்த உழைப்பையும், நேரத்தையும் உபயோகமாக பயன்படுத்த சந்தா என்ற ஒரு விஷயத்தையே நீக்கிவிட்டோம். நிர்வாகச் செலவுகளை இந்தப் பகுதியில் இருப்பவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். நல்லது நடக்குதுன்னா எல்லோருக்குமே பிடிக்குது. அதனால கேட்காமலே செலவு பண்ணுறாங்க.

ஆரம்பத்தில் ஏழெட்டு பேர்களாக இருந்த நாங்கள் எங்களது செயல்பாடுகள் மூலமாக நிறைய பேரை கவர்ந்தோம். இன்று பார்த்தீர்களென்றால் கிட்டத்தட்ட நூறு பேர் தீவிரமாக செயல்படுகிறோம். ஆயிரம் பேர் எங்கள் நல்லோர் வட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு உறுப்பினராக விதிமுறைகள் எதுவும் கிடையாது. அமைப்பை பதிவும் செய்யவில்லை. ஒரு மாதிரியான அன்கான்ஃபரன்ஸ் வடிவில் இருப்பதாலேயே மக்கள் பலரும் அச்சம் ஏதுமின்றி எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாகி வருகிறார்கள்”

அப்படி என்னதான் செய்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்?

அப்துல் கலாமிற்கு ‘இந்தியா 2020’ என்று கனவு இருப்பதைப் போல, இவர்களுக்கு ‘கோடம்பாக்கம் 2020’ என்றொரு கனவு உண்டு. தாங்கள் வசிக்கும் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு ‘மாதிரிப் பகுதி’ ஆக இருக்க வேண்டும் என்பது இவர்களது கனவு. உதாரணத்துக்கு திருவள்ளூர் மாவட்ட குத்தம்பாக்கத்தை காட்டுகிறார்கள். தங்கள் கனவு மெய்ப்பட சிறியளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரத்ததானம், உடல்தானம், கண்தானம், அன்னதானம், மரம் வளர்த்தல் போன்ற வழக்கமான செயல்பாடுகளோடு சில குறிப்பிடத்தக்க செயல்பாடுகள் மூலமாக இவர்கள் மற்ற அமைப்புகளிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

‘அதிரடிச்சேவை’ என்ற பெயரில் நடைபெறும் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. அமைப்பினர் நூறு பேர் இச்சேவைக்கு தயாராகிறார்கள். ஒரு பகுதியில் இருக்கும் குப்பைகள் மொத்தத்தையும் அகற்றி தூய்மைப் படுத்த வேண்டுமா? மூன்றே மணி நேரத்தில் அதிரடி வேகத்தில் அகற்றி விடுகிறார்கள். ‘ஒரு பகுதியை சீர்ப்படுத்த மூன்று மணி நேரத்துலே முடியலேன்னா, நிச்சயமா முன்னூறு மணி நேரம் ஆனாலும் முடியாது! அதனாலே தான் இந்த மூன்று மணி நேரத்தை எங்களுக்கு அடையாளமா எடுத்துக்கிட்டிருக்கோம்!’ என்கிறார் பொறுப்பாளர்களில் ஒருவரான வெங்கடேசன். இந்த அமைப்புக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பதவிகளே இல்லை. பணிகளின் தன்மைக்கேற்ப பொறுப்பாளர்கள் மட்டும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகை செயல்பாடுகளை இவ்வமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

‘ஒரு ரூபாய் திட்டம்’ மற்றொரு குறிப்பிடத்தக்க திட்டம். இப்பகுதியில் இருப்பவர்களிடம் மாதம் ஒரு முறை ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக வசூலிக்கும் பணத்தை பகுதியில் இருக்கும் அன்பு இல்லம் எதற்காவது (அனாதை இல்லம் என்ற சொல்லை நல்லோர் வட்டத்தினர் உபயோகிப்பதில்லை) தருகிறார்கள். ஒரு ரூபாய் என்பது மிகக்குறைந்த தொகை என்பதால் ஏராளமானோர் இத்திட்டத்துக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் பலமான வரவேற்பு இருக்கிறது.

மாநகராட்சி, காவல்துறை என்று அதிகார அமைப்புகளோடு நல்லோர் வட்டத்தினருக்கு நல்ல தொடர்பு இருப்பதால், இவர்களது கோரிக்கைகள் பெரும்பாலும் எந்த சிக்கலுமின்றி நிறைவேறி விடுகிறது. “எங்களுக்கு இதுவரை எதிர்மறையான அனுபவம் எதுவுமே இல்லை!” என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகளை கேட்டறிந்த டாக்டர் கலாம், இவ்வமைப்பினரை நேரில் சந்தித்துப் பாராட்டியிருக்கிறார். நல்லோர் வட்டத்தினரின் செயல்பாடுகள் சிலவற்றைக் கேட்கிறபோது விக்கிரமன் படக்காட்சிகளைப் போல எல்லாமே பாசிட்டிவ்வாக இருக்கிறது. “2020ல் நிச்சயமா கோடம்பாக்கம் வளர்ச்சி அடைந்தப் பகுதியா இருக்கும். இங்கே வசிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், நல்ல சிந்தனைகளோடும் வாழ்வாங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு” என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் நல்லோர் வட்டத்தினர்.

மாற்றம், மாற்றம் என்று வறட்டுத்தவளையாக கத்திக் கொண்டிருப்பதை விட, நல்லோர் வட்டத்தினரைப் போல செயல்படுவதின் மூலமாக நாம் நினைக்கும் மாற்றங்களை நிறைவேற்றிவிட முடியும். ஊருக்கு ஒரு நல்லோர் வட்டம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒவ்வொரு ஊரும் 2020-ஐ இலக்காக கொண்டு செயல்படுமேயானால் ‘இந்தியா 2020 கனவு', 2020க்கு முன்பே நிறைவேறிவிடும் என்பது உறுதி.

23 நவம்பர், 2009

சேவைக்கு ஓர் ஆலயம்!


இளையராஜாவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது தந்தை மறைந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் இரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர். வேர்க்கடலை விற்று கிடைக்கும் காசில் மகனின் ஒருவேளை சாப்பாட்டுத் தேவையைக் கூட அந்த தாயால் பூர்த்தி செய்ய இயலவில்லை. அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றினை நாடினார். மனமகிழ்ச்சியோடு இளையராஜாவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இளையராஜா அந்த இல்லத்தில் தங்கி தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. இன்று இளையராஜா, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இப்போது தனியாக ஒரு வீடு எடுத்து வயதான தன் தாயை தாங்கிக் கொண்டிருக்கிறார். “என் மகனை வளர்க்க அந்த இல்லம் மட்டும் இல்லையென்றால் அவன் என்னவாகியிருப்பான் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை என்னைப் போல அவனும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்திருக்கலாம்” என்கிறார் அவரது தாய்.

வாராவாரம் தான் வசித்த / படித்த இல்லத்துக்கு வந்து இப்போதிருக்கும் குழந்தைகளிடம் பேசிச்செல்வது இளையராஜாவுக்கு வழக்கம். இன்று தான் வளர்ந்த அந்த இல்லத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இளையராஜா இருக்கிறார்.

அந்த இல்லம் சேவாலயா. சென்னையிலிருந்து நாற்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அருகில் கசுவா என்றொரு கிராமத்தில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்தே ஐந்து குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட சேவாலயா இன்று நூற்றி அறுபது ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அறுபது முதியவர்களும் வாழும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

இவர்களால் இந்த வளாகத்தில் நடத்தப்படும் பாரதியார் மேனிலைப்பள்ளியில் ஆயிரத்து ஐம்பது மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். கல்விக்கட்டணம், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாகவே பேருந்து வசதியும் செய்துத் தரப்பட்டிருக்கிறது.

பள்ளியை நமக்கு சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம்.

“மழலையர் வகுப்பில் தொடங்கி, பிளஸ் டூ வரை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்று எங்கள் தரத்தை உலகறியச் செய்திருக்கிறார்கள் எங்கள் மாணவர்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக கல்வி கற்பவர்கள் என்பது முக்கியமான விஷயம்.

இங்கே கல்வி கற்று செல்லும் மாணவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்பதால் அவர்களது மேற்படிப்புக்கும் சேவாலயா உதவுகிறது. எங்கள் மாணவர்களுக்கு சர்வமதப் பிரார்த்தனையை கற்றுத் தருகிறோம். எல்லா மதங்களின் விழாக்களையும் இங்கு கொண்டாடுகிறோம். மதச்சார்பற்ற ஒரு ஸ்தாபனமாகவே சேவாலயா வளர்ந்து நிற்கிறது.

கல்விமுறையிலும் எங்கள் நிறுவனர் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். காந்தி, விவேகானந்தர், பாரதியார் மூவரின் சிந்தனைகளையும் எங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோமேத்ஸ், வேளாண்மைன்னு மூன்று பிரிவுகளில் கல்வி கற்றுத் தருகிறோம்”

“என்னது வேளாண்மையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டால்,

“ஆமாங்க. வேளாண்மை இங்கே மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கு. அதுவும் இயற்கை வேளாண்மை. எங்களோட அறிவியல் ஆய்வுக் கூடங்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.

இங்கே பயிலும் மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் தண்டனைகள் எதுவும் கிடையாது. கல்வியை விட ஒழுக்கத்தை போதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம். சேவாலயாவில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறோம். இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள் பலரும் இங்கேயே விருப்பப்பட்டு பணிபுரிகிறார்கள். காந்திய சிந்தனைகளை மாணவர்களுக்கு விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊழியர்கள் வாரத்துக்கு ஒருமுறை கதராடை மட்டுமே அணிகிறோம்” என்றார் தும்பைப்பூ நிறத்தில் கதர் வேட்டி, கதர் சட்டையோடு இருந்த சண்முகம்.

சேவாலயா மாணவர்கள் ‘கொட்டு முரசே!’ என்ற பெயரில் ஒரு கலைக்குழு நடத்துகிறார்கள். விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் நடத்துகிறார்கள். இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்த பிரச்சாரத்தையும் செய்கிறார்கள்.

பள்ளிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தால் பளிச்சென்றிருக்கிறது சுவாமி விவேகானந்தா இலவச நூலகம். பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. பள்ளி, விடுதி மாணவர்கள் மட்டுமின்றி கிராமத்தவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் நூல்களை அவ்வப்போது வண்டிகளில் ஏற்றி சுற்று வட்டார கிராமங்களுக்கு நடமாடும் நூலகமாக எடுத்துச் செல்கிறார்கள். சுமார் இருபது கிராமங்களுக்கு விவேகானந்தா நூலகம் சேவை செய்கிறது.

கஸ்தூரிபாய் தையலகம் கிராமப்புற மகளிருக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இலவசமாகவே இங்கே தையல் கற்கலாம். இதற்காக சுமார் இருபத்தைந்து தையல் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. வளாகத்தில் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் நேரப்போக்குக்காக இவற்றை உருவாக்குகிறார்கள்.

மகாத்மா காந்தியின் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ மையம் விடுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, கசுவா கிராம மக்களுக்கும் முதலுதவி அடிப்படையில் பயன்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளும், மாத்திரைகளும் இங்கே இலவசம்.

முதியோர் இல்லத்தில் தாத்தா – பாட்டிகளுக்கு பொழுது போக்க தொலைக்காட்சி, ஓய்வெடுக்க படுக்கை, மருத்துவ வசதிகள் உண்டு. அவ்வப்போது மருத்துவர்கள் வந்து உடல்நிலையை பரிசோதித்து செல்கிறார்கள். குழந்தைகள் இல்லாத சரோஜா மாமி ஒன்பது வருடங்களுக்கு முன்பாக தன் கணவரோடு வந்து இந்த இல்லத்தில் சேர்ந்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது கணவர் காலமாகிவிட்டார். இங்கே காலமாகும் முதியவர்களின் இறுதிச்சடங்குகளையும் இவர்களே செய்துவிடுகிறார்கள். “எங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா கவனிச்சிட்டிருப்பாளான்னு தெரியலை” என்று சொல்லி கண்கலங்குகிறார் சரோஜா மாமி.

தாங்கள் யாருமற்றவர்கள் என்ற உணர்வு இங்கிருப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை இங்கே அழைத்துவந்து ஓவ்வொரு தாத்தா பாட்டிக்கும், ஓரிரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து, “இனிமே இவங்க தான் உங்களோட பேரன், பேத்தி” என்று சொல்லிவிடுகிறார்கள். இதன் மூலமாக புதிய உறவுமுறைகளையும், வாழ்க்கைக்கான பிடிப்பையும் இருதரப்புக்கும் ஏற்படுத்த முடிகிறது.

இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ள வாரிசுகள் இல்லாத முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்ததாக வாரிசுகளால் கைவிடப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லம் தொடங்கப்பட்டதிலிருந்தே நாகராஜன் என்பவர் தன் மனைவியோடு தன்னார்வத்தோடு முன்வந்து இங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐ.சி.எஃப். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தோடு இங்கே பணியாற்றுகிறார்.

சேவாலயாவின் நேயம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. கறவை வற்றிய மாடுகளின் கதி நம்மூரில் என்னவாகும் என்று தெரியுமில்லையா? அடிமாடாக்கி கசாப்பு கடைக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோன்ற அடிமாடுகளை கொண்டுவந்து ‘வினோபாஜி கோஷாலா’ என்றொரு பண்ணை வைத்திருக்கிறார்கள்.

இந்த மாடுகளின் சாணத்தை கொண்டு ‘பயோ-கேஸ்’ என்ற இயற்கை எரிவாயு உருவாக்கி, தங்களின் எரிவாயுத் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். சாணம் வைத்து மண்புழு உரம் என்ற இயற்கை உரத்தை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். ஒரு மாட்டினை பராமரிக்கும் செலவையும் தாண்டி, கூடுதல் லாபத்தை இந்த கறவை வற்றிய மாடுகளே தந்துவிடுகிறதாம். தொழுவத்தில் மாடுகளுக்கு மின்விசிறி கூட உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மனிதாபிமானம், சேவை என்பதைத் தாண்டியும் கிராமப் பொருளாதார மேம்பாடு என்ற நிலைக்கு சேவாலயா பயணித்துக் கொண்டிருக்கிறது. நிறுவனர் முரளிதரனும், அவரது மனைவி புவனாவும், சேவாலயா ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வளர்ச்சிகளுக்கு அச்சாணி.

முரளிதரனிடம் பேசும்போது, “பாரதியார், விவேகானந்தர், காந்தி – இந்த மூன்று பேரும்தான் என் ஆதர்சம். எழுத்தறிவித்தலின் முக்கியத்துவத்தை பாரதியிடமும், அன்னதானத்தின் அவசியத்தை விவேகானந்தரிடமும், கிராமங்களின் தேவையை காந்தியிடமும் கற்றேன். இருபத்தேழு வயதில் இந்த அமைப்பை உருவாக்கினேன்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன தடங்கல்கள். இவ்வளவு பெரிய பொறுப்பை நான் திறம்பட செய்யவேண்டுமே என்று என் பெற்றோர் அஞ்சினார்கள். எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. நன்கு வளர்ந்து இப்போது திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை என்று தெரிகிறது. எனினும் எதிர்காலம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடுமே செயல்படுகிறோம்.

திருமணத்துக்குப் பிறகு இப்பணி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரையே வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தேன். புவனாவும், நானும் எக்காலத்திலும் சேவைகளிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டே திருமணமும் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பாக ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த புவனா, வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுமையாக இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

டாட்டா கன்சல்டண்ஸி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக பணியாற்றினேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் சம்பாதித்தது போதும், பொருளாதார ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு நானும் இப்போது முழுநேர ஊழியனாக இங்கே பணிபுரிய ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

அரசுகளின் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்று அடையாத நிலை இருக்கும்போது, சேவாலயா போன்ற அமைப்புகளின் சேவை நம் மனதில் நம்பிக்கை ஒளியை பரவச்செய்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

21 நவம்பர், 2009

பழசிராஜா - கேரளத்துப் பிரபாகரன்!


பழசி, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று கொரில்லா முறையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுகிறார். அவரது படையில் ஆர்வத்தோடு சேர்பவர்கள் பழங்குடிகள். ஒரு கட்டத்தில் வில்லும், வாளும் மட்டும் போதாது, துப்பாக்கிகளும் வேண்டுமென்று சொல்லி, வெள்ளையர்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றுகிறார் பழசி. நவீன ஆயுதங்களோடு பழசியின் பெரும்படை தாக்கும்போது வெள்ளையர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒப்பந்தத்துக்கு அழைக்கிறார்கள்.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் போடப்படும் ஒப்பந்தம் வெள்ளையர்களால் மீறப்பட, மீண்டும் போர்க்கோலம் காண்கிறார். சில அதிரடி வெற்றிகளை ஈட்டுகிறார். வெள்ளையர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி கேரள நாட்டைச் சேர்ந்த சிலரை ஆட்காட்டிகளாக பணிக்கு சேர்க்கிறார்கள். பழசியின் ரகசியங்களை அறிந்து, அவரது ஒவ்வொரு சகாக்களாக பிடித்து தூக்கிலிடுகிறார்கள். இறுதியில் தோல்வி உறுதி என்ற நிலையிலும் வீரத்தோடு மோதி இறவாப்புகழ் அடைகிறார் பழசிராஜா.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால ஈழநடப்பை வைத்துப் பார்த்தால், பழசிராஜாவையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பலவகைகளில் ஒப்பிடலாம். (ஒரு காட்சியில் பழசிராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டவர் என்றுகூட வசனக்குறிப்பு இருக்கிறது. அதை பழசியே மறுக்கும் வசனமும் உண்டு)

படத்தின் கதை இவ்வாறு இருக்க, வலைமனை ஒன்றில் வாசித்த பழசிராஜாவின் ஒரிஜினல் கதை சற்று வேறாக இருக்கிறது. பிரெஞ்சுப்படையே படத்தில் வரவில்லை. இறுதியில் பழசிராஜா தற்கொலை செய்துகொண்டதாக கதையில் இருக்கிறது. படத்திலோ வீரமரணம். எம்.டி.வாசுதேவன் மாற்றினாரா அல்லது படத்துக்காக மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.

‘இந்திய சுதந்திரத்துக்கு போராடிய முதல் வீரன்’ என்றெல்லாம் படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் காலக்கட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கிறது. திப்புசுல்தான் மற்றும் கட்டபொம்மன் வாழ்ந்த காலத்திலேயே பழசியும் வாழ்ந்திருக்கிறார். தென்னிந்தியாவிலிருந்து வெள்ளையர்களை துரத்தியடிக்க திப்பு தலைமையில், குறுநில மன்னர்கள் திரண்டது குறித்த குறிப்புகளையும் படத்தின் வசனங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியவில்லை. மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரில்லாப் போரை ஒளிப்போர் (ஒளிந்துத் தாக்கும் போர்) என்று அழகாக மொழிபெயர்க்கிறார். தமிழ்படம் என்றாலும் சரத்குமாரை தவிர மற்றவர்கள் மூக்காலேயே பேசுவதால் மலையாளத்தில் படம் பார்க்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

தசாவதாரம் தொடங்கியது மாதிரியே கமல்ஹாசனின் கம்பீரக்குரலோடு படம் தொடங்கும்போது எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பு மடங்காகிறது. ஒருவேளை கமல் இப்படத்தை தயாரித்திருந்தால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். இருபது வருடங்களுக்கு முன்பு ராமனந்த்சாகர் எடுத்த ராமாயணம் மாதிரியிருக்கிறது பழசிராஜா. வெயிட்டான சப்ஜெக்ட்டை, வெயிட்டாக பணமிறக்காமல் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்கள் கூட ரொம்ப சீப் ரேட்டில் மாட்டினார்கள் போலிருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே டாஸ்மாக் வாசலில் நிற்கும் நோஞ்சான்கள் மாதிரி பாவமாக இருக்கிறார்கள். அசிஸ்டெண்ட் கலெக்டராக நடித்திருப்பவர் வெள்ளைக்காரரா என்றே சந்தேகமாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. பழசிராஜா, ராணியைப் பார்க்கப் போகும்போது கூட முன்னால் நீட்டிய வாளோடே போகிறார். புகுந்து விளையாடப் போகிறார் என்று நினைத்தால், வெறும் ஐடியா மணியாக படையினருக்கு ஐடியா சொல்லியே காலத்தைத் தள்ளுகிறார். ராஜாவுக்கான ஆக்‌ஷன் பிளாக்குகள் ரொம்ப குறைவு. ஆனால் மம்முட்டியின் மெஜஸ்டிக் லுக்கும், ராயல் நடையும் அட்டகாசம். இரண்டாவது ஹீரோவாக வந்தாலும் சரத்குமார், கொடுக்கப்பட்ட வாய்ப்பை கனகச்சிதமாக கவ்விக் கொண்டார். மம்முட்டியோடு வாள்பயிற்சியில் ஈடுபடும்போது சரத்குமார் நான்கைந்து செண்டிமீட்டர் முந்துகிறார். சுமனுடனான மோதலிலும் அனல் பறக்கிறது.

கனிகா எவ்வளவு அழகாக நிஜமான ராணியைப் போலவே இருக்கிறார். பச்சைத் தமிழச்சியான இவரை ஏன் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பாடலுக்கான லீடிங் காட்சியில் குளத்தில் குளித்துவிட்டு முண்டோடு படிக்கட்டில் ஓடி வருகிறார். டாப் ஆங்கிள் கோணத்தில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி. விரிந்த திரையில் கண்கள் நிறைகிறது. இதற்கு இணையான ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால், பம்பாய் படத்தின் உயிரே பாடலில் மனிஷா ஓடிவரும் காட்சியை சொல்லலாம். அழகான ராணியை ராஜா எப்போதும் அழவைத்துக்கொண்டே இருப்பது எரிச்சல்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ இளையராஜா. பழசிராஜாவுக்கான இசையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆஸ்கர் என்ன, நோபல் பரிசு கூட இளையராஜாவின் இசைக்கு தூசு. இளம் இசையமைப்பாளர்கள் பின்னணி இசை அமைக்க பழசிராஜாவை பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

உளியின் ஓசை தரத்தில் இருப்பதால் இப்படம் கலைஞருக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மருதநாயகம் ரேஞ்சுக்கு வரவேண்டிய பழசிராஜா, பட்ஜெட் குறைவால் கொஞ்சம் சூம்பிப்போயிருக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் என்னவாக இருக்குமென்பது படம் ஆரம்பித்த நான்காவது ரீலிலேயே யூகித்துவிட முடிகிறது. ஆகையால் இரண்டாம் பாதி இழுவையை சகித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டேமுக்கால் மணிநேரம் ஒரு சரித்திரப் படத்தை பார்த்துக்கொண்டு தமிழனால் பொறுமையாக ஒரு இடத்தில் இன்று அமரமுடியுமா என்பது சந்தேகமே.

20 நவம்பர், 2009

நக்சல்பாரிகள் - இன்றைய நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!
ஒன்பதாவது பாகம் :நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!


எமர்ஜென்ஸி யாரை பாதித்ததோ இல்லையோ, நக்சல்பாரிகளையும், அவர்கள் இயக்க வளர்ச்சிகளையும் மிகக்கடுமையாக மட்டுப்படுத்தியது. எமர்ஜென்ஸிக்கு பிறகான ஜனதா கட்சியின் கூட்டு அரசாங்கம் விசாரணையின்றி நாடெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்குப் பின்னணியில் பல்வேறு மனித உரிமை குழுக்களின் குரல் இருந்தது.

கடந்த கால கசப்பான அனுபவங்கள் நக்சல்பாரிகளை புடம் போட்டிருந்தது. பல்வேறு இயக்கங்களும், இயக்கத் தலைவர்களும் ஒன்று கூடி தாங்கள் ஏற்கனவே சென்று கொண்டிருந்த பாதையை மறுபரிசீலனை செய்தனர். ஒரு சில கட்சிகள் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த அழித்தொழிப்பு முதலான நடவடிக்கைகளிலிருந்து தடம்மாறி பாராளுமன்றத்தில் மக்கள் ஆதரவோடு பிரதிநிதித்துவம் செய்ய முடிவெடுத்தார்கள். பீகாரில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) போன்றவர்கள் இவர்கள்.

இன்னொரு தரப்போ தங்களது வழக்கமான கொரில்லா போர்முறையை தொடர முடிவெடுத்தது. ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு, பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய குழுக்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நக்சல்பாரிகள் இருவேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புமே அவ்வப்போது அமையும் அரசுகளை எதிர்த்தே அரசியல் செய்து வந்தாலும், வழிமுறைகள் வேறு வேறு. இரு தரப்பும் கூட பல பிரச்சினைகளில் மூர்க்கமாக மோதிக்கொள்வதுண்டு.

ஆனாலும், கடந்த கால் நூற்றாண்டில் பார்க்கப் போனால் ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி குழுக்களே பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பது தான் யதார்த்தம். இந்த குழுக்கள் தான் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் தலைவலியை தந்து வருகிறார்கள். எழுபதுகளில் மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம் என்று சில மாநிலங்களில் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் இன்று ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக சுலபமாக நக்சல்பாரிகளால் காலூன்ற முடிகிறது. புதிய தொழில் திட்டங்களால் தங்கள் விளைநிலங்களை இழக்கும் விவசாயிகள், காடுகளை இழக்கும் பழங்குடியினரும் அடைக்கலமாகும் குழுக்கள் நக்சல்பாரி குழுக்களாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் நக்சல்பாரி குழுக்களின் தாய்வீடான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதில்லை. ஆனால் மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தயார் படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவின் மக்கள் போர்க்குழு மற்றும் பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய நக்சல்பாரி குழுக்கள் தான் வலுவான ஆயுதவழிப் போராட்ட குழுக்களாக வளர்ந்திருக்கின்றன.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு பீகாரிலும், ஜார்க்கண்டிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே மக்கள் போர்க்குழு ஒரிஸ்ஸாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல பல மாநிலங்களிலும் பல நக்சல் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தடையை உடைத்தெறிய இக்குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநில அரசுகளின் தடையே கொரில்லா போர்க்குழுக்களை ஒன்றிணைய வைத்து விட்டது.

கட்சியாக உருவெடுத்தப் பின் முன்பை விட மூர்க்கமாக நக்சல் குழுக்கள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழு பலத்தோடு இப்போது இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காலூன்றும் பணிகளையும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள்.

நக்சல் குழுக்கள் அடிக்கடி தங்களது கட்சி பெயர்களை மாற்றியோ அல்லது குழுக்களை ஒன்றோடு ஒன்றாகவோ இணைத்துக் கொள்வது காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பி வருகிறது. புதிய பெயர்களில், புதிய குழுக்களில் நக்சல் குழுக்களுக்கு போராளிகளை சேர்த்து மொத்தமாகப் போய் மீண்டும் பழைய குழுவில் இணைந்துகொள்வது அவர்கள் வழக்கம். நக்சல்குழுக்களுக்கு போராளிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மாதச்சம்பளம் வாங்கி பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு போராளிக்கு இப்போது ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை நக்சல் குழுவில் பணியாற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் முதல் ரூபாய் பதினாறாயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இணையான அல்லது உயர்ந்த சம்பளத்தையே நக்சல்பாரிகள் தங்கள் போராளிகளுக்கு வழங்குகிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கூட செய்தி சேகரிக்க இன்•பார்மர்களாக பணிக்கு அமர்த்துகிறார்கள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தீவிரவாதக் குழுக்களை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை நக்சல்பாரிகளின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நிறைய பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்பதை அவ்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடமுடியவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் 31,000 பேர் இருக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை 2006ஆம் ஆண்டு வந்தது. அதன் பின்னர் இருமடங்காகவும் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுதம் தாங்கிய நக்சல் குழுக்கள் ஒருங்கிணைந்து 2004ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்த பிறகு, ஒரு அரசியல் கட்சிக்கேயுரிய கட்டமைப்போடு பிராந்திய கமிட்டிகளை உருவாக்கினார்கள். ஆந்திரா - ஒரிஸ்ஸா எல்லை சிறப்புக் கமிட்டி, ஜார்கண்ட் - பீகார் - ஒரிஸ்ஸா சிறப்புக் கமிட்டி, டாண்டகரன்யா சிறப்புக் கமிட்டி என்று தேசிய கட்சிகளுக்கு மாநில கமிட்டிகள் இருப்பது போல நக்சல்கள் செயல்படும் மாநிலங்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டிகள் செயல்பட நிர்வாகிகளை நியமித்தார்கள். குழுக்களின் நிர்வாகம் சீர்பட்டது.

கட்சியின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் திட்டமிட்ட தாக்குதல்களை இப்போது மிகத்துல்லியமாக நிகழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டிரெயின் ஹைஜாக்கிங்கையும் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நக்சல்பாரி குழுக்கள் காலூன்றியிருக்கின்றன. இவைகளில் 62 மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்காடு இருக்கின்றனர். வெளிப்படையாகவே காவல்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் சவால் விடும் அளவுக்கு நக்சல்பாரிகளின் வளர்ச்சி இருக்கிறது.

(முற்றும்)


பின்குறிப்பு :

1. நக்சல்கள் குறித்து வாசிக்க நினைத்தபோது தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் கூட மிகக்குறைவான தரவுகளே வாசிக்க கிடைத்தது. அச்சுபாணி பிரச்சாரம் நக்சல்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றுகிறது.

2. இத்தொடரில் சிறுசிறு தகவல் பிழைகள் நிறைய இருக்கலாம். எனக்கு வாசிக்க கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். எப்பிழையும் என்னால் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்காது என்று நிச்சயமாக கூறமுடியும்.

3. நக்சல்கள் குறித்த விரிவான வாசிப்புக்கு போதுமான புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடர் எழுதிய தினத்திலிருந்து இன்று வரை குறைந்தது பத்து தொலைபேசி அழைப்புகளாவது தொடர் குறித்து பேசும் நோக்கத்தோடே எனக்கு வந்துகொண்டே இருக்கிறது.

4. இந்த நிமிடம் வரை நான் நக்சல்களின் ஆதரவாளனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. வேண்டுமானால் அனுதாபி என்று சொல்லிக் கொள்ளலாம். இத்தொடர் என் பார்வையில் எழுதப்பட்டது என்பதால் அரைவேக்காடாகவும் சிலருக்கு தோன்றலாம்.

5. இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.

18 நவம்பர், 2009

சூரிய(க்) கதிர்!

சில காலமாக தமிழில் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படுகிறது. அல்லது விற்கப்படுவது மாதிரியான ஒரு மாயையாவது இருக்கிறது. ஆனந்த விகடன் புதிய அளவுக்கு மாறியதற்குப் பிறகாக புதிய பத்திரிகைகளின் படையெடுப்பு அதிகமாகியிருப்பதை உணரமுடிகிறது. பழைய வாசகர்களை விகடன் இழந்துவிட்டது, அவர்களை கைப்பற்றிவிடலாம் என்றொரு நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்.

எனக்கென்னவோ, புதிய வாசகர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெருகாவிட்டாலும், விகடன் தன் பழைய வாசகர்களை இழந்ததாக தெரியவில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் புத்தகத்தின் விலையேற்றம் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டு ஓசியில் படித்துக் கொண்டிருக்கலாம். வடக்கு வாசல் என்றொரு பத்திரிகையை பார்த்தேன். தொண்ணூறுகளில் வந்த விகடன், குமுதம் கலவை. பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன். வாசிக்க நன்றாகவே இருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை போன்றவை இடைநிலை அந்தஸ்தை எட்டிவிட அகநாழிகை மாதிரி சிற்றிதழ்களும் கூட கொஞ்சம் தெம்பாக களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஐந்து ரூபாய்க்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் புதிய தலைமுறையும் ஆரம்பத்திலேயே ஒரு லட்சத்தை தாண்டிய பிரதிகளை விற்றுக் கொண்டிருக்கிறது. விலை, விளம்பர வெளிச்சத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, தமிழகத்தில் சன் குழுமத்தைத் தவிர வேறெவரும் எட்டமுடியாத சாதனையை புதிய தலைமுறை எட்டியிருக்கிறது. “சினிமா இல்லை. நடப்புச் செய்திகள் இல்லை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது விமர்சனம் அல்ல பாராட்டு. ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியான ஜாம்பவான்கள் மற்றுமே பெற்ற பாராட்டு இது. “இளைஞர் மலர் மாதிரியிருக்கிறது” என்பது இன்னொரு விமர்சனம். ‘இளைஞர் இதழ்’ என்று விளம்பரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இதழ் இளைஞர் மலர் மாதிரி தானிருக்கும். எப்படியிருப்பினும், பத்திரிகையுலகத்தின் இவ்வருட வரவுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக ‘புதிய தலைமுறை’ மலர்ந்திருக்கிறது.

குழந்தைகள் தினமன்று ஒரு குஜாலான புதியப் பத்திரிகையை வாங்க முடிந்தது. ‘சூரிய கதிர்’ (க்-கன்னா மிஸ்ஸிங்) என்று பெயருக்காகவே, பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இன்று பல பத்திரிகைகளில் பணிபுரியும் பல்வேறு பத்திரிகையாளர்களும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஒரு பத்திரிகையாளத் தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ‘ஆசிரியர் : ராவ்’ என்பதே சூரிய கதிரின் மிகப்பெரிய பலம்.

ஆசிரியர் குழுவில் வாசுதேவின் பெயரை பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. குமுதத்தில் அவர் கலாட்டா அடித்த பக்கங்கள் என்னுடைய பள்ளிநாட்களை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள். குறும்புக்காக பெண் வேடத்தில் ஆண்களை அணுகி, அவரது கற்பு ஜஸ்ட்டில் தப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்டில் எனக்குப் பிடித்த வாசுதேவ். நமீதா, இலீயானா என்று ஜொள்ளு எழுத்துகளால் விகடன் பக்கங்களை ஈரமாக்கிய தோழர் மை.பாரதிராஜா, கோவக்காரப் பொண்ணு மு.வி.நந்தினி, சென்னைத் தமிழில் கொஞ்சும் பாண்டிச்சேரி நண்பர் மரக்காணம் பாலா என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர் குழுவில் இருப்பது பத்திரிகையை கொஞ்சம் மனசுக்கு நெருக்கமாக்கியது.

2004 தீபாவளிக்குப் பிறகு முதன்முறையாக ஜெயேந்திரரின் பிரத்யேகப் பேட்டி, எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், அரசியல் குறைவான வைகோவின் அதிரடி, சின்னக்குத்தூசியின் கட்டுரை, இச்சுக்கு இலியானா, லொள்ளுக்கு விவேக் என்று உள்ளடக்க அளவில் முதல் இதழிலேயே சிகரம் தொட்டிருக்கிறது சூரிய கதிர். பாலகுமாரனின் தொடர் ஒன்று கூடுதல் அட்ராக்‌ஷன். எல்லா அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை கூட இல்லை என்பது சற்றே நெருடல். பார்த்திபனும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கத் தொடர் ஒன்றை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல என்ன எழுதியிருக்கிறார் என்பது நான்குமுறை வாசித்தும் புரியவில்லை. கடைசிப் பக்கம் கச்சிதமாக இருக்க வேண்டியது தற்கால பத்திரிகைச் சூழலில் அவசியம்.

வெகுஜன இதழாக மலர்ந்துவிட்டப் பிறகு விகடன், குமுதம், குங்குமம் மட்டுமன்றி வாரமலர், ராணி ஆகியவற்றிலும் இருந்தும் கூட மாறுபட்டு தெரியவேண்டிய சவால் சூரிய கதிருக்கு இருக்கிறது. முதல் இதழ் தீபாவளி சிறப்பிதழ் போல ஜூகல்பந்தியாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த இதழ்கள் முதல் இதழைவிட சிறப்பாக அமையவேண்டியது கட்டாயம். அரசியல் – சினிமா – சமூகம் – கலை என்று சூரிய கதிருக்கான வெளி பரந்ததாக இருப்பதால், சிறந்தவர்களை கொண்ட ஆசிரியர் குழு சிறப்பாகவே இயங்கும் என்று நம்புகிறேன்.

லே-அவுட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது பெரியக்குறை. ராவ் சார் ஜூ.வி. ஆரம்பித்தபோது ஏதாவது க்ரிட்டிகலான டாபிக்கல் மேட்டர்களுக்கு கம்பிவேலி கட்டி லே-அவுட் போட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் லே-அவுட் செய்யும் இந்தக் காலத்திலும் அந்த கம்பிகளையே பிடித்து வாசகன் தொங்கிக் கொண்டிருக்க முடியாது இல்லையா? அட்டைப்படமும் ரொம்ப சுமார், இலியானா அழகாகவே இல்லை. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்டில் 80 பக்கங்கள். பதினைந்து ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று வாசகர்கள் அணுக அஞ்சுவார்கள். எனினும் மாதமிருமுறை இதழ் என்பதால் விலை ரெகுலர் வாசகர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பத்திரிகை தொடக்கத்துக்கான விளம்பரங்கள் போதுமானவையாக இல்லை என்பது என் அவதானிப்பு. சென்னை நகரில் சொற்ப இடங்களிலேயே சூரிய கதிர் சுவரொட்டிகளை கண்டேன். டிவி விளம்பரங்களும் போதுமானவையாக இல்லை. சன் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற உப்புமா சேனல்களில் விளம்பரம் செய்தால் மட்டும் பத்தவே பத்தாது. அதுபோலவே வினியோகமும் சரியாக இருப்பதாக தெரியவில்லை. லயன் காமிக்ஸ் கூட கிடைக்கும் தி.நகர் ஏரியாவிலேயே கூட சூரிய கதிர் சரிவர கிடைக்கவில்லை.

சூரிய கதிர் – எனக்குப் பிடித்திருக்கிறது, வாசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன்.