
கடந்த சில குடியரசுத் தினங்களில் தொலைக்காட்சிகளில் நீங்கள் கண்டிருக்கலாம். டெல்லியில் வழக்கமாக நடக்கும் ராணுவ அணிவகுப்பில் ஒய்யாரமாக வீறுநடை போடும் பீஷ்மா பலரின் கண்ணையும், கவர்த்தையும் கவர்ந்துவருகிறார். மகாபாரத பீஷ்மரைப் போலவே கம்பீரமும், ஆளுமையும் கொண்டவர் இந்த பீஷ்மரும். போர்முனையில் இவர் ஒரு வெல்லமுடியாத சிங்கம். வேதியியல், உயிரியல், அணு ஆயுதங்கள் இவரின் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு எதிரிகளை களத்தில் ஓட ஓட விரட்டி, புறமுதுகிட்டு சிதறி ஓடச்செய்யப்போகும் இவர்தான் இந்திய ராணுவத்தின் இன்றைய ஹீரோ.
யார் இந்த பீஷ்மா?
இதுவரை இந்திய ராணுவத்துக்கு டாங்கிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. அல்லது உதிரிபாகங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்திய தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டிருக்கும் முதல் பீரங்கி இந்த பீஷ்மா. ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மட்டும் பெறப்பட்டிருக்கிறது. உலகளவில் போர்முனைகளில் பயன்படுத்தப்படும் டாங்கிகளில் இதுதான் லேட்டஸ்ட்.
இரவுகளிலும் துல்லியமாக போரிடவும், குண்டுகளை சுடும் அதே குழாயிலேயே குறிபார்த்து ஏவுகணைகளை ஏவவும் பீஷ்மாவில் வசதிகள் உண்டு. அணு ஆயுதங்களில் வெளிப்படும் ரேடியோ கதிர்வீச்சினை தாங்கும் சக்தி பீஷ்மாவிடம் இருப்பதால், இந்த டாங்கியை இயக்கும் குழுவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வாய்ப்பு மிக மிகக்குறைவு என்பது தனிச்சிறப்பு. அவசியம் தேவைப்படும் காலங்களில் போர்முனைகளுக்கு மின்னல்வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது இந்த பீஷ்மா.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த டாங்கி, இந்திய ராணுவ வரலாற்றில் தனியிடத்தைப் பிடிக்கிறது. ஒரு பீஷ்மாவை உருவாக்க இந்தியாவுக்கு ஆகப்போகும் செலவு ரூபாய் பதினான்கு கோடி என்றால் இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணரலாம். அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு தலா 100 பீரங்கிகளை உருவாக்க சென்னை ஆவடி டாங்க் தொழிற்சாலை தயார்நிலையில் இருக்கிறது. 2020ஆம் ஆண்டு வாக்கில் 1,600 பீரங்கிகளோடு தனது தரைப்படையை உலகின் தன்னிகரற்ற, யாராலும் வெல்லமுடியாத படையாக உருவாக்க இந்தியா பெரும் முனைப்பு காட்டி வருகிறது.
ரஷ்யாவின் டி-90 டாங்கிகளின் தொழில்நுட்ப அடிப்படையில் பீஷ்மா டாங்குகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய ராணுவம் இதுவரை பயன்படுத்தி வந்த அர்ஜூன்ரக டாங்குகளை தயாரிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே குறைந்தகால அவகாசத்தில் அதிக டாங்குகளை தயாரிக்கும் சுலபமான – அதே நேரம் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை இந்திய ராணுவம் தேடிவந்தது. இடையில் உக்ரைன் நாட்டிலிருந்து 320 டி-80 யூடி ரக டாங்குகளை வாங்க பாகிஸ்தான் முடிவெடுத்ததால் இந்திய ராணுவத்துக்கு சக்திவாய்ந்த டாங்குகளை உடனடியாக உருவாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது.
எனவே கடந்த 1998ஆம் ஆண்டு ரஷ்யாவின் இரண்டு டாங்கி மாடல்களை (டி72 மற்றும் 90) வாங்கி பாலைவனப் பகுதிகளில் பரிசோதனை நடத்தியது. இதில் டி72 குறித்த திருப்தி இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு சுத்தமாக இல்லை. வெப்பத்தை தாங்கக் கூடிய பலம் அந்த டாங்கிக்கு இல்லை. டி90 டாங்குகளிலும் சில அதிருப்திகள் இருந்தது. தேவையான மாற்றங்களுக்கான தொழில்நுட்ப யுக்திகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்று முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டி90 ரக பீரங்கிகளை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. பீஷ்மா என்று பெயரிடப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் அதிநவீன டாங்கியின் கதை இதுதான்.
பாகிஸ்தான் தற்போது உபயோகிக்கும் டி80 யூடி ரக டாங்குகளை விட பீஷ்மாவில் அதிகவசதிகள் உண்டு. ஏவுகணைகளில் இருவகை உண்டு. இந்த இருவகை ஏவுகணைகளையும் பீஷ்மாவில் ஏவமுடியும். மாறாக டி80 யூடியில் ஒருவகை ஏவுகணையை மட்டுமே பயன்படுத்தலாம். பாதுகாப்பு அடிப்படையில் நம் பீஷ்மா தலைசிறந்தது. எதிரிகளால் சுலபமாக வீழ்த்திவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கனகச்சிதம். திட்டமிட்டபடி பீஷ்மா டாங்குகள் சரியான நேரத்தில் தயாரிக்கப்படுமானால் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் தரைப்படையை வெல்வது என்பது வல்லரசுகளுக்கே சாத்தியமில்லாததாக ஆகிவிடும்.