3 நவம்பர், 2010

ஒரு தோட்டா.. ஒரு உயிர்!

பூட்ஸ் கால் அந்த மண்ணை மிதித்தபோது அவரது உடல் சிலிர்த்து அடங்குகிறது.
உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாத பதவியில் இருப்பவர் அவர். ராணுவ
மிடுக்குக்குள் ஒளிந்திருக்கும் மனித உணர்ச்சி ஒரு நொடி தலைகாட்டி
மறுநொடியிலேயே அடங்குகிறது. புன்னகையோடு அந்த கிராமத்துக்குள் நுழைகிறார்
லெப்டிணெண்ட் கர்னல் டி.பி.கே.பிள்ளை.

அந்த கிராமம் லோங்டி பாப்ரம். மணிப்பூர் மாநிலத்தின் பின் தங்கிய
குக்கிராமங்களில் ஒன்று. பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தின்
துடிப்பு மிக்க இளம் கேப்டனாக இருந்தபோது இதே கிராமத்துக்கு
வந்திருக்கிறார். பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறார்.

அப்போது மணிப்பூரில் என்.எஸ்.சி.என். (Nationalist Socialist Council of
Nagaland) என்கிற ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பு இந்தியாவை எதிர்த்து
போராடி வந்தது. நாகலாந்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி வடகிழக்கில்
இயங்கிவரும் அமைப்பு அது. தங்கள் வழி மாவோ வழி என்பது அவ்வமைப்பின்
கொள்கை.

வன்முறையாளர்களை ஒடுக்க இந்திய ராணுவம் மணிப்பூருக்குள் நுழைந்தது. ஜனவரி
25, 1994 அன்று, ஒரு படைப்பிரிவுக்கு கேப்டனாக இருந்த பிள்ளை தெருக்களில்
தனது படையோடு ரோந்து போய்க் கொண்டிருந்தார். கிராமத்தின் மத்தியில்
இருந்த ஒரு வீட்டில் நான்கு தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல்.

பிள்ளையின் படை அவ்வீடு நோக்கி விரைந்தது. தொடங்கியது ராணுவத்துக்கும்,
தீவிரவாதிகளுக்குமான உக்கிரமான துப்பாக்கிச் சண்டை. தீவிரவாதிகளுக்கு
தலைமை ஏற்றிருந்தவர் கைனேபோன். குறிவைப்பதில் கில்லாடி.

இருபுறமும் குண்டுகள் பாய, எதிர்பாராவிதமாய் தெருவில்
சென்றுக்கொண்டிருந்த ஒரு இளம் அப்பாவிப் பெண் தோட்டா ஒன்றினில்
சிக்கினாள். தோட்டா தீர்ந்து கிட்டத்தட்ட தீவிரவாதிகள் சண்டையில்
தோல்வியடையும் நிலை. கைனேபோனின் வெறி இராணுவப் படைத்தலைவர் பிள்ளையின்
மீது பாய்ந்தது. மிகச்சரியாக அவனது கடைசித் தோட்டா பிள்ளையை பதம்
பார்த்தது. மிக மோசமான காயம் அது. சண்டையின் முடிவில் ஒரு தீவிரவாதி
சுட்டுக் கொல்லப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி லோங்டி கிராமத்தினர் மீது
கடுப்பில் இருந்தார்கள் இராணுவத்தினர். தங்கள் கேப்டனின் உயிருக்கும்
ஆபத்து என்பதில் வெகுவாக கொதித்துப் போயிருந்தனர். தகவல் மற்ற
படைப்பிரிவினருக்கும் பரவியது. கிராமத்தை அடித்து நொறுக்கி விட்டுதான்
மறுவேலை என்று மொத்தமாக இராணுவத்தினர் குவிந்தனர்.

கேப்டனைப் காப்பாற்ற இராணுவ ஹெலிகாஃப்டர் ஒன்று வந்தது. தீவிரவாதிகளுக்கு
அடைக்கலம் கொடுத்த கிராமத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவளை காப்பாற்ற
மற்ற வீரர்களுக்கு விருப்பமில்லை. "முதலில் அந்தப் பெண்ணின் உயிரைக்
காப்பாற்றுங்கள்" என்று காயமடைந்த நிலையிலும் பிள்ளை வற்புத்தினார்.
கிராமத்தை நொறுக்க தயாராக இருந்த இராணுவத்தினரிடம் "எந்தத் தாக்குதலும்
இக்கிராமம் மீது நடக்கக்கூடாது. கைதான மூன்று தீவிரவாதிகளையும் அடித்து
துன்புறுத்தக் கூடாது" என்பதை தனது கடைசி ஆசையாக தெரிவித்து சத்தியம்
வாங்கிக் கொண்டார்.

மரணத்தின் வாயிலில் நின்ற டி.பி.கே. பிள்ளையின் உயிர்மீது மரணதேவனுக்கு
ஆர்வமில்லை. பிழைக்கவே வாய்ப்பில்லை என்று மற்றவர்கள் நினைக்க, அதிசயமாக
பிழைத்தார். உடம்பு தேறிவர ஓராண்டுகள் பிடித்தது. பின்பும் இராணுவத்தில்
தீவிரமாகப் பணியாற்றி லெப்டிணெண்ட் கர்னல் பதவிக்கு உயர்ந்தார்.

பதினாறு ஆண்டுகள் கழிந்த நிலையில் முன்னுரிமை கொடுத்து தான் காப்பாற்றிய
பெண்ணை சந்தித்தார் பிள்ளை. மசேலிதாய்மே என்ற அப்பெண் இப்போது ஒரு
குழந்தைக்கு தாய். தாய்மேயின் சகோதரனும் அச்சந்திப்பில் உடனிருந்தார்.
இவரும் அன்றைய சண்டையில் மயிரிழையில் உயிர் தப்பியவர். தன்னைக்
காப்பாற்றியவரை கண்டதுமே பேச மசேலிக்கு நா எழவில்லை. அழுது கதறியவாறே
பிள்ளையின் கையைப் பிடித்து கண்ணீரால் நன்றி சொன்னாள்.

கிராமத்தவர்கள் இவர்களை சூழ்ந்து கொண்டார்கள். அன்று மட்டும் பிள்ளை ஒரு
வார்த்தை சொல்லியிருந்தால், கிராமம் இராணுவ வீரர்களால் சூறையாடப்
பட்டிருக்கும். "எங்கள் உயிரை அன்று காப்பாற்றியவர் பிள்ளைதான்"
என்கிறார் கிராமத் தலைவர்களில் ஒருவரான அடான்போ.

"காப்பாற்றுவதுதான் இராணுவத்தின் வேலை. கொல்வது அல்ல. என் வேலையைதான்
நான் அன்று செய்தேன்!" என்கிறார் லெப்டிணெண்ட் கர்னல்.

இந்த செண்டிமெண்டுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல இன்னொரு சம்பவமும்
அங்கு நடந்தது. பிள்ளையை சுட்ட கைனேபோனும் இன்னும் அதே கிராமத்தில்
வசிக்கிறார். இராணுவத்திடம் பிடிபட்ட பிறகு மனம் திருந்தி வாழ்ந்து
வருகிறார். இப்போது கைனோபோன் ஒரு திறமையான விவசாயி.

ஓடிவந்து பிள்ளையை ஆரத்தழுவுகிறார் கைனோ.

சுட்டவரும், சுடப்பட்டவரும் பதினாறு ஆண்டுகள் கழிந்து நட்போடு
ஆரத்தழுவிக் கொள்வது என்பது ஒரு அபூர்வமான காட்சிதான் இல்லையா? ஹாலிவுட்
படங்களில்தான் இப்படிப்பட்ட காட்சிகளை பார்த்திருக்கிறேன். இப்போது
இந்தியாவிலும் நடக்கிறது. நிஜமாகவே 2020ல் இந்தியா வல்லரசு ஆகிவிடுமோ?

2 நவம்பர், 2010

MIB - Men in Blogs

ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், வால்பையன், ஆல்-இன்-ஆல் ராஜன், பன்னிக்குட்டி ராமசாமி, பலாபட்டறை ஷங்கர், ராம்ஜி யாஹூ, வெறும்பய, ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா), மங்குனி அமைச்சர், குசும்பன், கஞ்சா கருப்பு, குடுகுடுப்பை, எல் போர்ட் – பீ சிரியஸ், ராயல்ராஜ் (பெயரில் மட்டும்) – இவர்களெல்லாம் யார்?

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

முன்பெல்லாம் ஊரில் சிலர் எப்போது பார்த்தாலும் கதையோ, கவிதையோ எழுதிக் கொண்டிருப்பார்கள். வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் தங்களுடைய படைப்பை அனுப்பி, அவை திரும்பி, திரும்ப வேறொரு படைப்பை அனுப்பி, அதுவும் திரும்பி.. இப்படியே விக்கிரமாதித்தன் – வேதாளம் கதைதான் நடக்கும். நொந்துப்போன அந்த படைப்பாளி 'கையெழுத்துப் பத்திரிகை' தொடங்கி விடுவார். இதற்குப் பிறகாக தன் பத்திரிகையை படிக்கச் சொல்லி தன்னுடைய சுற்றுவட்ட நண்பர்களையும், உறவினர்களையும் அணுக அவர்கள் தலை தெறிக்க இட்த்தைக் காலி பண்ணிக் கொண்டு ஓடுவார்கள் 

கொஞ்சம் 'பசை'யுள்ள படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், லோக்கல் பிரிண்டிங் பிரஸ்ஸில் மாதாமாதம் கைக்காசைப் போட்டு அச்சடித்து, சொந்தமாக 'பத்திரிகை ஆசிரியர்' ஆகிவிடுவார். கடைகளில் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால், செல்போன் எஸ்.எம்.எஸ். வியாபாரி போல கிடைக்கும் முகவரிக்கெல்லாம் அனுப்பிவைத்து 'கொசுக்கடி தாங்கமுடியலையடா நாராயணா' என்று நொந்து கொள்ளச் செய்வார். அந்தப் படைப்பாளியிடம் நம் முகவரி மாட்டிக் கொண்ட காரணத்தாலேயே மாதாமாதம், அவருடைய இலக்கிய அவஸ்தையை பொறுத்துக் கொண்டு போயாகவேண்டும். எங்கேயாவது நேரில் பார்த்துவிட்டால் "ஏப்ரல் மாசம் உங்களைப் பத்தி ஒரு பின்நவீனத்துவக் கவிதை எழுதியிருந்தேனே.. படிச்சீங்களா?" என்று கேட்டுத் வைப்பார். நாம் ஙே!

இதெல்லாம் அந்தக் காலம். டெக்னாலஜி ஈஸ் ஸ்..சோஓஓஓஓ... மச் இம்ப்ரூவ்ட். கையெழுத்துப் பத்திரிகையாகவும், லோக்கல் இலக்கியப் பத்திரிகையாகவும் படைப்பாளிகள் இலக்கியச் சேவை ஆற்றிய காலம் முடிந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஏதோ ஒரு பக்கவிளைவாக கையெழுத்துப் பத்திரிகைக் கவிஞர்கள் இப்போது உலகளவில் புகழ் பெற்ற கவிஞர்களாகவும், கவிதாயினிகளாகவும்  ஆகிவிட்டார்கள். இலக்கியத்தில் புரட்சி பூத்துவிட்டது!

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

சினிமா, அரசியலுக்கு அடுத்து பதிவுலகில் மவுசு இலக்கியத்துக்குதான். ஏனெனில் எப்படி எழுதினாலும் கவிதை, கதை என்கிற வடிவம் இலக்கியமென்று இங்கே நம்பப்படுகிறது. வலைப்பதிவர்களில் 95 சதவிகிதம் பேர் கவிஞர்களாகவும் இருக்கிறார்கள். சுனாமியா? பூகம்பமா? அயோத்தி தீர்ப்பா? ஈழமா? – இருக்கவே இருக்கிறது கீபோர்டு. தட்டு ஒரு கவிதையை அல்லது கட்டுரையை. அள்ளிக்கொள்ளு பின்னூட்டங்களை.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

'பிரபல' போட்டியில் இப்போது பிரதானப் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஜாக்கிசேகரும் (jackiesekar.com), கேபிள் சங்கரும் (cablesankar.blogspot.com). உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும். இந்திய அளவில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள்ளாக இருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

பேன நட்பு அருகிப்போன இக்காலத்தில், வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக முக்கியமானவை. இணையங்களில் "முஸ்தபா முஸ்தபா" பாடிச்செல்லும் தோழர்கள் வலைப்பதிவுகளால் பெருகியிருக்கிறார்கள். இந்த நட்பு வட்டம் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளுக்கும் பயன்பட்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் இணைந்து பொதுப்பணிகளுக்கு நிதித்திரட்டுவது, உயிர்காக்கும் சேவைகளை செய்வது என்று ஈடுபடுகிறார்கள். சுனாமி நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதை இதில் முக்கியமாக குறிப்பிடலாம்.

நட்பு மட்டுமல்ல. வலைப்பதிவுகளால் 'காதல் கோட்டை' கட்டப்பட்டு, கல்யாணத்தில் முடிந்த சுவையான சம்பவங்களும் சில உண்டு.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

நாளை காலை தமிழகத்தின் எல்லா பேப்பர் கடைகளில் தொங்கப் போகும் புதிய தலைமுறை தீபாவளி இதழில் வெளியாகவிருக்கும் 'வலைவீசம்மா வலைவீசு' கட்டுரையிலிருந்து சில பகுதிகள். ஏ4 அளவில் ஐந்து பக்கங்களுக்கு வலைப்பதிவுகளைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரையை வாசிக்க.. புதிய தலைமுறை படிங்க... அது உங்க வெற்றிப் படிங்க...

1 நவம்பர், 2010

Hisss


பிட்டே இல்லாத பிட்டு படத்தைப் பார்த்து நொந்ததுண்டா?

சென்னைவாசிகளுக்கு இந்த அனுபவம் அடிக்கடி 'கெயிட்டி' தியேட்டரில் கிடைத்திருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்தில் 'சிந்து சமவெளி' வாயிலாக இந்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அந்த கொடூரத்தின் சுவடு மறைவதற்கு முன்பாகவே இப்போது மல்லிகா ஷெராவத் மூலமாக 'ஹிஸ்'ஸில் சேம் பிளட். "ஏகப்பட்ட பிட்டு, அள்ளிக்கோங்க" என்று போஸ்டரில் கடைவிரித்து, திரையில் குழந்தைகளுக்கான படம் கொடுக்கும் பாசிஸ குணம் கொண்ட இயக்குனர்கள் மீது யாராவது நல்லுள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் நன்று.

இந்த கந்தாயத்தை ஹாலிவுட்டில் இருந்து பெண் இயக்குனர் ஒருவர் வந்து இயக்கித் தொலைக்க வேண்டுமா என்று புரியவில்லை. தமிழிலேயே இராம.நாராயணன் இதைவிட மிகச்சிறந்த 'பாம்பு' படங்களை உலகத்தரத்தில் இயக்கியிருக்கிறார். படத்தில் கதை இல்லை. திரைக்கதை இல்லை. பாடல்கள் இல்லை. நல்ல இசை இல்லை. நல்ல நடிப்பும் இல்லை. இதெல்லாம் இல்லை என்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். போஸ்டரில் போட்ட 'சீன்கள்' கூட இல்லையென்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நம்மூர் இயக்குனர்களெல்லாம் கோயிஞ்சாமிகள் போலவும், ஹாலிவுட் இயக்குனர்கள் அறிவு ரோபோக்கள் என்றும் திரைப்பட விழாக்களில் பேசும் ஆட்கள் இனியாவது திருந்தவேண்டும்.

இச்சாதாரி பாம்பு ஒன்றின் பழிவாங்கல்தான் கதையாம். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. இவ்வளவு அருவருப்பாக பாம்பை பிரெசண்ட் செய்ய முடியுமா என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார் இயக்குனர். நேரடி நிர்வாணக் காட்சிகள் ஏராளமாக இருந்தாலும், அவையெல்லாம் கலைத்தன்மையோடு (?)  இயக்கப்பட்டுத் தொலைத்திருப்பதால், எதுவுமே எழுந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஐ மீன், ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அல்லது வேறு ஏதேனும் அதிரடி உணர்ச்சியோ எழவில்லை. இந்த அழகில் 10,000 BC ரேஞ்சுக்கு படத்தின் ஓபனிங் சீங்கை சிறப்பான மொக்கைத்தன்மையில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் இசையமைப்பாளர் அனேகமாக இதற்கு முன்பாக அரசுத் தொலைக்காட்சியின் இழவுச் செய்திகளுக்கு வயலின் வாசித்தவராக இருந்திருக்கக் கூடும். இயக்குனர் பரபரப்பாக படம் பிடித்ததாக நினைத்த காட்சிகளில் கூட பின்னணியில் ஒப்பாரி வைக்கிறார். படத்தின் மொன்னைத் தன்மையை மீறி இர்பான் கான் மட்டும் கொஞ்சம் உருப்படியாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் திவ்யா தத் நல்ல சந்தனக் கட்டை. கட்டையை கான் உருட்டும் காட்சிகள் ஏதேனும் இருக்கக்கூடும் என்கிற எதிர்ப்பார்ப்பை முதல் பாதியில் இயக்குனர் ஏற்படுத்துவதாலேயே, இரண்டாம் பாதிக்கு தியேட்டரில் நான்கைந்து பேர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பார்ப்பை அணுகுண்டு போட்டு தகர்க்கும் வண்ணம் மிக மிக லேசான அரைகுறை இருட்டு 'பிட்டு' ஒன்றை படம் முடிவதற்கு பத்து நிமிஷம் முன்பு போடுகிறார்கள். கோயிந்தா கோயிந்தா.

மல்லிகா ஷெராவத். பாவமாக இருக்கிறது அம்மணியைப் பார்த்து. இந்தப் படத்தை ரொம்பவும் நம்பி, ட்விட்டரில் ஆஹா, ஓஹோவென எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் பிரமோஷனுக்காக சில திரைவிழாக்களில் பாம்பை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம் வசனமே இல்லை. தொடை தெரிய ஓடி ஓடி களைத்திருப்பார். படத்தின் ரிசல்ட் அவருக்கு மேலும் களைப்பும், சலிப்பும் தரக்கூடும். இதெல்லாம் கூட பரவாயில்லை. அம்மணி பாம்பு ஒன்றோடு உடலுறவு கொள்ளுவது போன்ற 'நேச்சுரலான' காட்சி வேறு வருகிறது. இனி இந்தியின் எந்த இளம் ஹீரோவும், இவரோடு ஜோடி சேர்ந்து நடிக்க கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள்.

ஹிஸ் - இந்தப் பாம்பு படமெடுக்காது. மகுடியை மூடிக்கிட்டு போங்க சார். போயி பொழைப்பைப் பாருங்க.

30 அக்டோபர், 2010

கோபுரங்கள் சாய்வதுண்டு!

சில நாட்களுக்கு முன்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த சம்பவம் இது. இரவு 9 மணியளவில் திடீரென்று சுனாமி திரண்டு வந்தது போல பெருத்தச் சத்தம். என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் ஓடுகிறார்கள். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிக்காக விரைந்தோடி வருகிறார்கள். இந்த கலவரமான காட்சிக்கு காரணம், ஒரு செல்போன் டவர்.

சுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அது. 15 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்டது. போதிய பரமாரிப்பு இல்லாததால், துருப்பிடித்து வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக இச்சம்பவத்தியில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. இதுபோல செல்போன் டவர்கள் விழுவது நமக்கு புதிதுமல்ல. ஏற்கனவே சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்பிரச்சினையின் அனைத்து அம்சங்கள் தொடர்பாக செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு காவல்துறை ஆணையாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னதாக மாநில அளவிலான சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றினிலும் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றால் எவ்வளவு முக்கியமான பிரச்சினை இதுவென்று புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30,000 செல்போன் டவர்கள் இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டுமே 8,000. இந்திய அளவில் 3,30,000 டவர்கள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் மட்டுமே 1,30,000 கூடுதல் டவர்கள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெரிய எண்ணிக்கையில் இந்த கோபுரங்கள் உயர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நம் நாட்டில் செல்போனின் பயன்பாடு என்பது அசுரத்தன வளர்ச்சி கொண்டதும், அரசால் தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி இணைப்புகள் இப்போது இருக்கிறது. மாதத்துக்கு ஒன்றரை கோடி எண்ணிக்கையிலான புதிய சிம்கார்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவிகித மக்களிடமும் செல்போனை கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்ற இலக்கோடு செல்போன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

செல்போன் டவரை தொழில்நுட்ப மொழியில் Base Transceiver Station (BTS) என்கிறார்கள். இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், ஆண்டெனா, டீசல் ஜெனரேட்டர், சில எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் – இவை பழுதுபடாமல் இயங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறை. இவைதான் ஒரு பி.டி.எஸ். ஸ்டேஷன். செல்போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் மின்காந்த அலைகளை வாங்கியும், அனுப்பும் பணிகளை இந்த ஸ்டேஷன் செவ்வனே செய்து வரும். உயரமான இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் 'சிக்னல்'களை பக்காவாக புரிந்துகொண்டு செயல்படும்.

மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஒயர்லெஸ் திட்டக்குழுவிடம் (Wireless Planning Committee) அனுமதி பெற்றே இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க முடியும். இவற்றை அமைக்க சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதியில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்க கூடாது. அருகில் ஏதேனும் கட்டடம் இருந்தால் அவற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளியே கோபுரம் அமைக்கப்பட வேண்டும். கோபுரம் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராதவண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அடிப்படையில் இதுமாதிரியாக இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. செல்போன் டவர் கட்டுமானம் தொடர்பாகவும் கூட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான பராமரிப்பு குறித்த ஆலோசனை விதிகளும் கூட உண்டு.

சர்வதேச ஆணையத்தின் விதிமுறைப்படி குடியிருப்பு மனைகளில் இருந்து 60 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

ஆனாலும், இவையெல்லாம் முறையாக கடைப்பிடிக்கப்படாத இடங்களில்தான் பிரச்சினை. முறையாக கடைப்பிடிக்கப்படுவது அபூர்வம் என்பதுதான் வேதனை. பொதுத்துறை செல்போன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தான் விதிமுறைகளில் கொஞ்சம் கறாராக இருக்கிறது.

பொதுவாக ஒரு செல்போன் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஸ்டேஷன் அமைக்க முடிவெடுத்தால், அங்கிருக்கும் ஏதாவது கட்டிட உரிமையாளரை தொடர்பு கொள்கிறது. குத்தகை அடிப்படையில் கிடைக்கும் இடத்தை வளைத்துப் போடுகிறது. வாடகைக்கு இடத்தைக் கொடுத்தால் கிடைக்கும் வருமானத்தை விடவும், பன்மடங்கு தொகை கூடுதலாக கிடைப்பதால் நகரங்களில் செல்போன் டவர் நம் இடத்தில் அமைக்கமாட்டார்களா என்று ஏங்குவோர் பெருகி வருகிறார்கள். செல்போன் டவருக்கு இடம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு, பத்திரிகைகளில் விளம்பரம் தருமளவுக்கு நிலைமை இருக்கிறது.

கட்டிடங்களில் செல்போன் டவருக்கு இடம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு தனி வரி வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றம் தீர்மானம் கூட நிறைவேற்றியது. ஆயினும் இதுபோன்ற டவர்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகள் எதையும் விதிக்கவில்லை. மாநில அளவிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட திட்டங்கள் இல்லை.

ஏதோ ஒரு இடம் கிடைத்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் டவர் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடம் டவர் அமைக்கும் பணியை செல்போன் நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. பல செல்போன் நிறுவனங்கள் டவர் பராமரிப்பையும் கூட வெளியாட்களிடம் ஒப்படைப்பதுண்டு. இதுபோன்ற கட்டுமானத்தின் போது, போதிய பாதுகாப்பு சாதனங்களின்றி ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதை சகஜமாக காண முடிகிறது. கடந்த ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே டவர் அமைத்துக் கொண்டிருந்தபோதே, அது சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கூட நடந்தது.

அலட்சியம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. விதிமுறை மீறல்கள் என்பது செல்போன் டவர் விஷயத்தில் மிகத்தாராளமாக நடக்கிறது. தமிழக நகரங்களில் இருக்கும் செல்போன் டவர்களை குத்துமதிப்பாக பார்த்தாலே எந்த விதிக்கும் பொருந்தாவகையில் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆயிரம் விளக்குப் பகுதி புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை அருகிலேயே கூட ஒரு செல்போன் டவர் உயர்ந்து நிற்கிறது. விதிமுறைகள் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. கட்டிடங்களின் உயரத்தில் போதுமான வலுவின்றி ஏனோதானோவென்று முளைத்துவிட்ட கோபுரங்களை கண்டாலே வயிற்றில் அமிலம் சுரக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்று யார் சொன்னது?

பராமரிப்பின்றி சாய்வது, அதனால் ஏற்படும் விபத்துகள் என்று கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள் ஒருபுறமிருக்க மருத்துவரீதியான கதிர்வீச்சு அபாயம்தான் இன்னும் மோசமானது. சமீபகாலமாக அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்கள் பலவும் உடல்ரீதியாக இந்த டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கவலையோடு பார்க்கிறார்கள்.

குடியிருப்புப் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கூட ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதுமிருக்கும் செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்தப் பணியும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.

"இடைவிடாமல் செல்போன் உபயோகிப்பதும், செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இக்கதிர்வீச்சால் நரம்புக் கோளாறுகள் மனிதர்களுக்கு உருவாகும் என்பது வெளிநாடுகளில் ஆய்வுகளோடு நிரூபிக்கப் பட்டிருக்கிறது" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா.

டெல்லியில் விஜயாபட் என்ற பெண்மணிக்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது. இந்நோய் அவருக்கு ஏற்பட காரணம், அவர் வசித்த பகுதி செல்போன் டவர் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்ததுதான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய், இதயக்கோளாறு, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த கதிர்வீச்சால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

செல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி. அளவு இருக்கலாம் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது. இந்த அளவையும் விட குறையும் பட்சத்தில் அது ஆபத்தானது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் இந்தியாவின் பல நகரங்களில் செல்போன் டவர்களில் மைனஸ் 12, மைனஸ் 10 டி.பி. அளவுகளுக்கு கதிர்வீச்சு இருக்கும் அபாயம் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்தே செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருக்கிறது என்பதற்கான சான்றிதழை, கதிர்வீச்சு அளவீடு நிலையத்தில் இருந்து பெறவேண்டும். இச்சான்றிதழை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு அமலாக்கம், மனிதவள மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத செல்போன் டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னையிலேயே கூட தமிழக முதல்வர் கலைஞர் வசிக்கும் பகுதி, கதிர்வீச்சு காரணமாக பாதுகாப்பற்ற பகுதியாக இருப்பதாக டெஹல்கா பத்திரிகை கோஜெண்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயல்லிதா வசிக்கும் பகுதி கதிர்வீச்சு அபாயமற்ற பகுதியாக அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது ஒரு சுவையான ஆச்சரியம்.

சரி. ராஜா அண்ணாமலைபுரம் டவர் சாய்ந்த விஷயத்துக்கு வருவோம். இதுபோல அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்காக செல்போன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பார்வை மங்கிக் கொண்டிருக்கும் போதாவது சூரிய நமஸ்காரம் செய்ய முன்வந்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

இது மட்டுமன்றி, செல்போன் டவர் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசு உருவாக்கி, அவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை உள்ளாட்சிகள் கண்காணிக்கும் வகையில் சட்டம் ஏதேனும் கொண்டுவரலாம். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை, தயவுதாட்சணியமின்றி நீக்கிவிடவும் அரசு முன்வரவேண்டும்.

ஆங்காங்கே ஒன்றிரண்டாக சரியும் கோபுரங்களின் ஆபத்தைதான் நாம் நேரடியாக பார்க்கிறோம். நமக்கு அருகிலேயே, கண்களுக்கு தட்டுப்படாமல் நம் உடலை சரித்துக் கொண்டிருக்கும் டவர்கள் கம்பீரமாக நிமிர்ந்துதான் நிற்கின்றன.

(நன்றி : புதிய தலைமுறை)

29 அக்டோபர், 2010

வலையுலக ப்ரைவஸி!

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.

"கல்யாணம் ஆயிடிச்சா?"

அப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் "ஆயிடிச்சி சார்!"

"லவ் மேராஜா? அரேஞ்ச்ட் மேரேஜா?"

"அரேஞ்ச்ட் மேரேஜ்தான் சார்!"

"பொண்ணு சொந்தமா? அசலா?"

"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி!"

அவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே "சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.

"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி" என்று சூடாகப் பதில் அளித்தேன்.

இப்போது நண்பர் ராஜனின் முறை.

பதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.

இப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா?

சமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.