23 நவம்பர், 2010

நகரம் மறுபக்கம்

பரபரவென்று நகரும் காட்சிகள். பிரேம்-பை-பிரேம் உழைத்து செதுக்கிய சீன்கள். ஃபாரின் கனவுப் பாடல்கள் இல்லை. பஞ்ச் டயலாக்குகள் இல்லை. பத்து பேரை தூக்கிப் போட்டு பந்தாடும் பம்மாத்து ஆக்‌ஷன் இல்லை. சுந்தர்.சி-யை வைத்து மற்ற இயக்குனர்கள் எப்படியெல்லாம் படமெடுப்பார்களோ, அப்படியெல்லாம் இந்தப் படம் இல்லவே இல்லை. ரியாக்‌ஷனே தரமுடியாத தன்னுடைய முகவெட்டுக்கு ஏற்றமாதிரியாக 'கேட் செல்வம்' பாத்திரத்தை வடிவமைத்து கச்சிதமாக 'கோல்' போட்டிருக்கிறார்.

சொந்தப்படம் என்பதாலோ என்னவோ, 'பக்கா'வாக திட்டமிட்டு பலாப்பழம் மாதிரி பந்தாவான படத்தை எடுத்திருக்கிறார். பதினைந்து கால ஆண்டு அனுபவம் தந்திருக்கும் செய்நேர்த்தி படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது. வெல்டன் சுந்தர்.சி.

சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகம் மாதிரி கிட்டத்தட்ட இருக்கிறது. அதே டெம்ப்ளேட் கதை. படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ். 'நாடோடி' ஸ்டைலில் இண்டர்வெல் பிளாக்குக்கு ஒன்றும், படத்தின் முடிவுக்கு மற்றொன்றும். சிறையில் இருந்து வெளியே வந்து திருந்தி வாழ நினைக்கும் கேங் லீடருக்கான பிரச்சினைகள். காவல்துறையில் பணியாற்றும் சில ஓநாய்களின் கருப்புப் பக்கம். துறைமுக 'சரக்கு' கடத்தல் கசமுசா. துப்பாக்கி. போட்டுத் தள்ளுதல் என்று சரசரவென்று ஹாலிவுட் பாணி திரைக்கதை.

படத்தின் முதல் பாகம் 'வீக்' என்று சுந்தர்.சி-க்கே தெரிந்திருக்கிறது. வடிவேலுவை வைத்து ஒப்பேற்றுகிறார். திரைக்கதையின் திடீர் ட்விஸ்ட்டுகள், காமெடி டிராக்குக்கும் அமைக்கப்பட்டிருப்பது தமிழுக்கு ரொம்பவே புதுசு. பொதபொதவென ஊதிவிட்ட வடிவேலு உடலை மூலதனமாக்கி காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் சிரித்து சிரித்து வயிறு வெடித்துவிடுமோவென்று அஞ்சி 'தம்' அடிக்க வெளியே செல்லக்கூடிய அளவுக்கு தடாலடி காமெடி. பர்ஸ்ட் ஹாஃப்பின் பெரும்பகுதியையும் வடிவேலுவின் தொப்பையே தனியாக நின்று சுமக்கிறது.

பாடல்கள் ரொம்ப சுமார் என்பதை இயக்குனர் உணர்ந்திருக்கிறார். புத்திசாலித்தனமாக எல்லா பாடல்களுக்கும் இடையே காட்சிகளை சொருகி, ரசிகனுக்கு ஏற்படவிருந்த அலுப்பையும், ஆயாசத்தையும் தவிர்க்கிறார்.

ஒரு சாதாரணக் காட்சி. சுந்தர்.சி. ஆட்டோவில் போகிறார். ஆட்டோ நிற்கும்போது 'டயருக்கு' அடியில் கேமிராவை வைத்து 'பிரேக்' அடிக்கிறார்கள். காட்சி கலக்கலாக 'ஜெர்க்' ஆகிறது. இம்மாதிரியான டெக்னிக்கல் இண்டெலிஜென்ஸ் படம் முழுக்க எல்லாக் காட்சிகளிலும் விரவிக் கிடக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்துக்கு 'காஸ்டிங்' ஒரு முக்கியக் காரணம். ஹீரோவின் போலிஸ் நண்பராக வரும் போஸ் வெங்கட்டின் மீசை கூட வில்லத்தனத்தோடு நடிக்கிறது. இவரும் பாண்டிச்சேரி பாயாக வரும் சீனிவாசனும்தான் படத்தின் ரியல் ஹீரோக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் சீனிவாசன், சில நிமிடங்களே தோன்றினாலும் பல வருடங்களுக்கு நினைவுகூறத்தக்க நடிப்பை தந்திருக்கிறார்.

க்ளைமேக்ஸ் சோகம் தேவையற்றது. இனி 'சுபம்' போட்டு ஒரு நல்ல கமர்சியல் தமிழ்ப்படம் முடியும் நாள் எந்நாளோ? பருத்திவீரனின் ஆண்டி-க்ளைமேக்ஸ் ஜூரம் தொடர்ந்துகொண்டே போகிறது.

அனுயாவைப் பற்றி ஒரு பத்தி எழுதாவிட்டால் இந்த விமர்சனம் எழுதியவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது. சின்ன முகம். ஒடுங்கிப் போன உல்லான் கண்கள். மெகா சைஸில் (34? or 36?) கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பிரதேசம். இடுப்பு சைஸ் 28 தானிருக்கும். ஆல்ஃப்ஸ் மலை வண்ண தேகம். விரிவாக பி.எச்.டி. செய்யுமளவுக்கு ஆராயப்பட வேண்டிய சமாச்சாரமான குண்டுமல்லி மொக்கு வடிவ தொப்புள். அந்த மழைப்பாடல் காட்சியில் தாராள முதுகு காட்டி, திரும்பிப் பார்த்து ஒரு விழிவீச்சு கொடுக்கிறார் பாருங்கள். 87 வயது இளைஞர்களுக்கு கூட சித்தப்பிரமை பிடித்துவிடும். ச்சே.. க்ளைமேக்ஸுக்கு முன்பாக சுந்தருக்கு ஒரு லிப்-டூ-லிப். பொறாமையாகவும், ஆற்றாமையாகவும் இருக்கிறது. அனுயா ஐ லவ் யூ. 'ம்'மென்று சொல்லுங்கள். நீங்கள் போட்டிருக்கும் ப்ளூகலர் ஜாக்கெட்டின் பித்தளை ஊக்காக மாறி, எஞ்சிய வாழ்நாளை கழித்து விடுகிறேன். (அன்பார்ச்சுனேட்லி பேக் ஓபன், இட்ஸ் ஓக்கே)

நகரம் மறுபக்கம் – தவிர்க்க இயலாத படம். தமிழ் சினிமாவுக்கு ரியல் ஆக்சிஜன்.

19 நவம்பர், 2010

இடியுடன் கூடிய பலத்த மழை!


வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் என்னதான் செய்கிறார்கள்?
கொட்டும் மழையில் சொட்டச் சொட்ட ஒரு ரிப்போர்ட்...


"கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யலாம். காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கடலுக்குச் செல்லும் மீனவர்கள்..." – இப்படியாக வானிலைச் செய்திகளை கேட்பதில் ஆர்வம் இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஒருவர் கூட இல்லை இல்லையா?

ஜோசியம் கூட குத்துமதிப்பாக சொல்லிவிடலாம். கண்ணுக்கு தெரியாத ஈரக்காற்று மழைமேகமாக உருவெடுக்கும், புயலாக வீசும் என்பதை எப்படி கணிக்கிறார்கள்? வாருங்கள். வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு நேராகவேப் போய்ப் பார்க்கலாம்.

இந்திய வானிலைத் துறை

இந்திய வானிலைத் துறை மொத்தம் 6 மண்டலங்களாக பிரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு தலைவர் டெல்லியில் இருக்கிறார். பெயர் டாக்டர் ஏ.வி.எம்.அஜித்தியாகி. நாம் இருப்பது தெண்மண்டல எல்லையில். வானிலைத் துறையின் தென்மண்டல உபத்தலைவர் டாக்டர் ஒய்.ஈ.ஏ.ராஜ். ஊடகங்களில் நாம் அடிக்கடி வாசிக்கும், கேட்கும் பெயர் ரமணன். இவர் நம் வட்டாரப் புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனர்.

கிட்டத்தட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு வானிலை மையம் இருக்கிறது. இதற்கு கீழே புயல் கண்டறியும் ராடார் நிலையம் மற்றும் வானிலை அலுவலகங்கள் இயங்குகின்றன.

இந்தியாவில் தரைநிலை கண்காணிப்பு கூடங்களின் எண்ணிக்கை 559. தமிழகத்தில் மட்டும் 39. இந்திய அளவில் வளிமண்டல வானிலை கண்காணிப்பு 99 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, திருச்சி, காரைக்கால் ஆகிய 3 இடங்களிலும் செயல்படுகிறது.

வானிலைத் துறையின் எல்லா அமைப்புகளும், உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் (WMO) தர அளவுகோலின்படியே தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கிறது. எனவே அயல்நாடுகளில் துல்லியமாகவும், நம் நாட்டில் குத்துமதிப்பாகவும் வானிலை கணிக்கப்படுகிறது என்ற ஒரு பரவலான எண்ணம் முழுக்க முழுக்க தவறானது. உண்மையைச் சொல்லப் போனால் நம்முடைய தொழில்நுட்பம் அதிசமீபத்திய சர்வதேசத் தரம் கொண்டது. நம் அறிவியலாளர்கள் தலைசிறந்த அறிவும், அனுபவமும் கொண்டவர்கள். உலக வானிலை ஆய்வுக் கழகத்தின் தொடக்கக்காலத்திலிருந்தே நாம் அதில் உறுப்பினராக இருக்கிறோம்.

வானவியல் ஆராய்ச்சிக்கான பிரத்யேக அமைப்பு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில்தான் 1789ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 1792ல் இருந்து வானிலைத் தகவல்களை ஆராய்ந்து வருகிறது. இந்திய வானிலைத் துறை எனும் அமைப்பே 1875ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். இந்திய வானிலை ஆராய்ச்சிக்கே நாம்தான் முன்னோடிகள்.

வானிலையை ஆராய்வது எப்படி?

மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் உதவி வானிலை விஞ்ஞானி கே.வி.பாலசுப்பிரமணியன் விளக்குகிறார் :

"வளிமண்டல வானிலையை கண்காணிக்க நாம் பலூனை பயன்படுத்துகிறோம். குழந்தைகள் விளையாடும் சிறிய பலூன்கள் அல்ல. ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட விசேஷ பலூன்கள். கண்காணிப்பு நிலையங்களில் இருந்து ஒரு நாளைக்கு 4 முறை இந்த பலூன்களை பறக்க விடுவோம். அவை பறக்கும் வேகம், திசை, உயரம் என்று பல அளவுகோல்களையும் தியோடலைட் டெலஸ்கோப் என்ற கருவி மூலமாக கண்காணிக்கிறோம்.

இதன் மூலமாக கிடைக்கும் தகவல்களை கணித அடிப்படையில் கணக்கிட்டு வளிமண்டல மாற்றங்களை வல்லுனர்கள் அறிகிறார்கள். இந்த பலூன்கள், தரையிலிருந்து 7 கி.மீ. வரையிலான வான்நிலவரங்களை அறிய உதவும்.

மற்றொரு 'பலூன்' முறையும் உண்டு. இந்த பலூனில் நிறைய மின்னணுப் பொருட்கள் இருக்கும். வெப்பநிலை, திசைவேகம், அழுத்தம் தொடர்பான தகவல்களை இந்த முறையில் துல்லியமாக பெறமுடிகிறது. தினமும் 2 முறை இந்த பலூன்கள் பறக்க விடப்படும். கொஞ்சம் செலவு அதிகம் பிடிக்கும் முறை இதுவென்பதால் இந்தியாவில் 35 இடங்களில் மட்டுமே சென்சார் பொருத்திய பலூன்கள் பறக்க விடப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, காரைக்கால் நகரங்களில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தினமும் இந்த இரண்டு முறைகளையுமே தவறாமல் கட்டாயம் கடைப்பிடிக்கிறோம். உலகம் முழுவதுமே குறிப்பிட்ட நேரங்களில்தான் இந்த வளிமண்டல மாற்ற கணக்கெடுப்பு நடத்தப்படும்"

இந்த பலூன் முறை மட்டுமல்ல. அதிநவீன ராடார், செயற்கைக்கோள், தானியங்கி வானிலை கண்காணிப்பு கூடங்கள் போன்ற பலவற்றின் தகவல்களையும் வானிலை வல்லுனர்கள் பயன்படுத்துகிறார்கள்.

புயல், மழை, எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்தம் இருக்குமேயானால் அது மழை, காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயலாக மாற்றம் பெறுகிறது. அதிக காற்றழுத்தம் தெளிவான வானம், வெப்பமான நிலைக்கு காரணியாக இருக்கிறது. 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனுமானிக்கப் பட்டால், அது புயல் எச்சரிக்கையாக வானிலை ஆராய்ச்சி நிலையத்தால் அறிவிக்கப்படுகிறது. புயல் வீச மழை பெய்ய வேண்டியது அவசியமேயில்லை. ஆனால் பெரும்பாலும் புயல் வீசும்போது மழையும் சேர்ந்தே வருகிறது.

வளிமண்டல சலனங்களை பலூன், செயற்கைக்கோள், ராடார் உள்ளிட்ட முறைகளில் அறிந்துகொள்வதால் மட்டுமே வானிலையை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. மனித அறிவுக்குதான் இங்கே முதலிடம்.

அனுபவம், புவியியல் அறிவு, வானிலை அறிவு, காலநிலையியல் அறிவு ஆகிவற்றை ஒருங்கேப் பெற்ற வல்லுனர்களால் மட்டுமே, அடுத்த 48 மணிநேரத்துக்கு என்ன நடக்கும் என்பதை கணித்துச் சொல்ல முடியும். இவர்களுக்கு கடந்த கால இயற்கை மாற்றங்கள் குறித்த வரலாறும் தெளிவாக தெரிந்திருப்பது அவசியம்.

பொதுவாக வானிலைக்கு எல்லையே இல்லை. சர்வதேச நாடுகள் எந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறதோ இல்லையோ வானிலை தகவல் பரிமாற்றத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. அக்கம் பக்கம் நாடுகளில் இருந்து கிடைக்கும் வானிலைத் தகவல்கள் புயல் மாதிரியான இயற்கைச் சீற்ற காலங்களில் நமக்கு பெரிதும் பயன்படுகிறது.

புயல் வரப்போகிறது என்று தெரிந்ததுமே நாட்டை எச்சரிக்கும் அதிமுக்கியமான பணி வானிலைப் பணியாளர்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கலாம் என்ற எச்சரிக்கையை புயல் தாக்கப் போகும் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சில நேரங்களில் தாசில்தார்களுக்கும் கூட.. அந்தந்த வட்டார மொழிகளில் அனுப்புகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் மின் தடை ஏற்படலாம். கேபிள்கள் அறுந்து தொங்கலாம். எனவே தொலைபேசி, மின்னஞ்சல், ஃபேக்ஸ் போன்ற தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது அவ்வளவு உசிதமானது அல்ல. எனவே செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலமாக வானிலைப் பணியாளர்கள் மேற்கண்டவர்களை தொடர்பு கொள்கிறார்கள்.

இவை மட்டும்தானா?

புயல், மழை, வெயில் இவற்றை கணிக்க மட்டும்தான் வானிலை ஆராய்ச்சி நிலையங்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நமக்குத் தெரியாமலேயே பலவகைகளில் நாம் வானிலைத் தகவல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, விமானப் போக்குவரத்தைச் சொல்லலாம். வானிலைத் தகவல்கள் இல்லாமல் ஒரு விமானம் பறப்பதோ, இறங்குவதோ கிடையாது. விமான நிலையங்களில் ஒரு வானிலை அலுவலகம் இருப்பது கட்டாயம். இல்லை. இவர்கள் தரும் தகவல்களை கொண்டுதான், எவ்வளவு எரிபொருள் விமானத்தில் எடுத்துச் செல்வது போன்ற விஷயங்கள் கூட தீர்மானிக்கப்படுகிறது. வானிலைத் தகவல்கள் இல்லாமல் வான்வழிப் போக்குவரத்து சாத்தியமே இல்லை.

வேளாண் விஞ்ஞானிகளுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும் பருவநிலை குறித்த கணிப்புகளை தருவதன் மூலமாக எந்தப் பருவத்தில், என்ன பயிரிடலாம் என்பதை தீர்மானிக்க முடிகிறது.

கடல்வழி போக்குவரத்துக்கும், மீனவர்களுக்கும் வானிலை ஆய்வுகள்தான் கலங்கரை விளக்கம். விண்ணில் ராக்கெட் பறக்க விடுவதற்கு கூட வானிலை ஆலோசனை கட்டாயம். குறிப்பிட்ட பகுதியில் தொழிற்சாலை அமைக்கலாமா என்பதற்கும் அரசுக்கு நீண்டகால பருவமாற்ற கணிப்பினை தருகிறார்கள். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, வானிலைத்துறையின் அறிவு பயன்படுகிறது. நில அதிர்வு தொடர்பான விஷயங்களையும் கண்காணிக்கிறார்கள். வறட்சி மாவட்டங்களை அரசுக்கு அடையாளம் காட்டுகிறார்கள்.

இவ்வளவெல்லாம் ஏன்? பஞ்சாங்கம் தயாரிப்பது கூட வானிலைத்துறையின் கொல்கத்தாவில் இருக்கும் ஒரு கிளை அமைப்புதான். அரசு காலண்டர்களில் இந்தப் பஞ்சாங்கம்தான் பயன்படுத்தப் படுகிறது.

இப்படியே நாம் உண்ணும் உணவில் தொடங்கி, இன்னும் எண்ணற்ற ஏராளமான தளங்களில் இந்திய வானிலைத் துறையின் சேவையினை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக இயற்கைச் சீற்றங்களின் போது நாட்டை எச்சரித்து காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பினை சுமந்தவர்கள் இவர்கள்.

வானிலை வேலைக்கு வர்றீங்களா?

இந்திய வானிலைத் துறையில் சுமார் 1800 பேர் நேரடியாகப் பணிபுரிகிறார்கள். கிட்டத்தட்ட 7000 பேருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இயற்பியல் இளங்கலை மற்றும் முதுகலை, பொறியியல் படித்தவர்களுக்கு இங்கே வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தவர்களுக்கு நேர்முகத்துக்கு அழைப்பு விடுத்து ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். கொஞ்சம் பெரிய பதவிகளுக்கு பணியாளர் தேர்வு எழுத வேண்டும்.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, வெவ்வேறு விதமான புவியியல் அமைப்பு கொண்ட இந்த தேசத்தில் வானிலைத்துறையில் பணிபுரிவதற்கு திடமான மனதும், சுறுசுறுப்பான உடலும், கூர்மையான அறிவும், முன்னெச்சரிக்கை மனோபாவமும் அவசியம். பேரிடர் காலங்களில் ஒரு வாரத்துக்கு கூட தொடர்ச்சியாக பொட்டுத் தூக்கம் இல்லாமல், பசிமறந்து பணியாற்றிட தெம்பு வேண்டும்.

துரதிருஷ்டவசமாக மிகக்குறைந்த அளவு பணியாளர்களை வைத்தே வானிலைத்துறை சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது. 1997ஆம் ஆண்டிலிருந்தே புதியதாக பணிநியமனம் இல்லாததால், ஒவ்வொருவரும் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மனதுவைத்து புதியதாக ஆட்களை நியமித்தால் வானிலைக் கணிப்புகளின் துல்லியமும், சேவையும் இன்னமும் பன்மடங்கு கைகூடும்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

கணிப்பு ஏன் பொய்க்கிறது?
- எஸ்.ஆர். ரமணன், இயக்குனர், வட்டாரப் புயல் எச்சரிக்கை மையம் –

பொய்க்கிறது என்ற சொல்லை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எங்களது கணிப்பு பொய்ப்பதில்லை. கடல், நிலம் சார்ந்த நிகழ்வுகளையும், மாற்றங்களையும் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு கவனிக்கிறோம். அவை அடுத்த சில நாட்களில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களை கணித்து நாட்டுக்கு சொல்கிறோம். 'மாற்றம்' என்றாலே மாறிவருவது தானே இயல்பு? நேற்றைய காற்றின் மாற்றத்தை கணித்து நாளைக்கு ஏற்படக்கூடிய மாற்றத்தை பல்வேறு காரணிகளை முன்வைத்து, அனுபவம் கொண்டு யூகிக்கிறோம். நாளை அது கொஞ்சம் வேறுமாதிரியாக மாறினால் அது இயற்கையின் மாற்றமே தவிர, எங்களது கணிப்பு தவறு என்பதாகாது.

மேலும் நாங்கள் ஒரு பொறுப்பான அரசு நிறுவனம். தேவையில்லாமல் மக்களையும், நாட்டையும் பயமுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஆபத்து இருக்குமாயின், அதைச் சொல்லி எச்சரிக்காமல் இருக்கவும் முடியாது. புயலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருந்தால், அதை சொல்லியே ஆகவேண்டும். உடமைகளையும், உயிர்களையும் காப்பது அவசியமில்லையா?

வானம் இருட்டிக் கொண்டிருந்தாலே நாங்கள் புயல் எச்சரிக்கை தந்துவிட முடியாது. சலனம் என்பதுதான் புயல். மேகம் புயல் அல்ல. நாங்கள் எடுக்கும் கணக்கீடுகள் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலிருந்தும் தினமும் கணிப்புகளைப் பெற்று, அலசி ஆராய்ந்து நம் பிரதேசத்துக்கான கணிப்புகளை வெளியிடுகிறோம். இது சாதாரண காரியமல்ல.

நாம் வெப்ப மண்டலத்தில் வசிக்கிறோம். இங்கே மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். எனவேதான் நம்முடைய கணிப்பு சிலமுறை மாறுகிறது. மிதவெப்ப மண்டலங்களில் மாற்றங்கள் குறைவு என்பதால் அங்கே கணிப்புகள் துல்லியமானதாக தெரியும். ஆயினும் உலகம் முழுக்க ஒரே தொழில்நுட்பத்தைதான் வானிலை நிலையங்கள் பயன்படுத்துகின்றன.

நம்முடைய கணிப்பு முழுமையாக அறிவியல் சார்ந்தது. அறிவியலால் இயற்கையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. கணிப்பு பொய்க்கிறது என்று மட்டும் இன்னொருமுறை சொல்லாதீர்கள். வேண்டுமானால், சில நேரங்களில் இயற்கை அறிவியலை வெல்கிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

 

எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

மழை தருமா இந்த மேகம்?
நீங்களும் கணிக்கலாம்!


இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை புதுப்பிக்கிறது. வானிலை கணிப்புகள், எச்சரிக்கைகள் போன்றவற்றை நீங்கள் உடனுக்குடன் இதில் தெரிந்துகொள்ளலாம். செயற்கைக்கோள் படங்களை தொடர்ச்சியாக கவனித்து வந்தாலே, நீங்களே கூட அம்பாசமுத்திரத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபொழியும் என்று உள்ளூர் அமெச்சூர் வானிலைத் தகவலாளராக மாறிவிட முடியும்.

இந்திய வானிலைத் துறையின் இணையத்தளம் : www.imd.gov.in

மண்டல வானிலை நிலையம், சென்னை இணையத்தளம் : imdchennai.gov.in

(நன்றி : புதிய தலைமுறை)

18 நவம்பர், 2010

ஒன்று, இருவன், இளமை, 3ஜி!

ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன்.

வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"

+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா சொல்ல முடியும்? உண்மையில் சொல்லப் போனால் இதற்கு என்ன விடை சொல்லுவதென்றே தெரியவில்லை. ஆக்சுவலி எனக்கு லட்சியம், கிட்சியம் என்பதெல்லாம் இன்றுவரை இல்லை.

தான்தோன்றித்தனமாக என் உள்மனது சட்டென்று ஒரு பதிலை வாய்வழியாகச் சொன்னது. "ப்ரியா கல்யாணராமன் ஆகணும்"

கேள்வி கேட்டவருக்கு வியப்பு. அதைவிட வியப்பு பதில் சொன்ன எனக்கு. உள்மனதில் இப்படியொரு ஆசை இருப்பது அன்றுதான் எனக்கே தெரியும்.

ப்ரியா கல்யாணராமன் ஆகணும் என்கிற லட்சியம் என்னைத்தவிர வேறு யாருக்காவது இருக்குமா என்பதே கொஞ்சம் சந்தேகம்தான். பத்திரிகை / எழுத்துத்துறையின் லட்சியமாக கல்கி, ராவ், எஸ்.ஏ.பி., என்று யார் யாரோ இருக்கலாம். ஏன் பர்ட்டிகுலராக ப்ரியா கல்யாணராமன்?

ஒரு பெரிய ஃப்ளாஷ்பேக்.

+2 பெயில் ஆகிவிட்டு தண்டச்சோறாக கிடந்த கொடூரகாலக்கட்டம் அது. காலை 5 மணிக்கு இங்க்லீஷ் ஹைஸ்பீட் டைப்பிங், 6 மணிக்கு மேத்ஸ் டியூஷன், 7 மணிக்கு ஷார்ட் ஹேண்ட், 8 மணிக்கு தமிழ் டைப்பிங், 11 மணிக்கு விவேகானந்தாவில் இங்கிலீஷ் என்று அப்பா என்னை நொங்கெடுத்துக் கொண்டிருந்த நேரம். இப்படியே விட்டால், இந்தாளு சாகடித்துவிடுவாரு என்ற பீதியில், நானே அப்ளிகேஷன் போட்டு ஒரு நாளிதழில் பணிக்கு சேர்ந்திருந்தேன். அக்டோபர் எக்ஸாமை எதிர்நோக்கியிருந்த சூழலில் பத்திரிகைகளோ, கதைப்புத்தகங்களோ படிக்க அப்பா 'தடா' விதித்திருந்தார்.

குமுதம் மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் என்னைப் போலவே அப்பாவும் குமுதத்தை காதலித்தார். புத்தகத்தை எடுத்ததுமே அவரும் என்னைப்போலவே 'நடுப்பக்கத்தை'தான் புரட்டுவார் என்பது தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையையே அர்த்தமற்று போகச்செய்த விஷயம். எஸ்.ஏ.பி., காலமாகியிருந்த சூழலில் கதைகளுக்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருந்தது. எளிதில் யூகித்துவிடக்கூடிய முடிச்சுகளோடு கதைகள் வழக்கமான டெம்ப்ளேட்களில் வந்துகொண்டிருந்தது வாசகர்களை கொஞ்சம் சலிப்புறச் செய்திருந்தது.

96ஆ, 97ஆ என்று சரியாக நினைவில்லை. அந்தத் தொடரின் மூலமாக திடீர் புதுப்பாய்ச்சல் குமுதத்தில். தலைப்பே இளமையாக மிரட்டியது. 'ஜாக்கிரதை வயது 16'. கதையின் தொடக்கம் இப்படி இருந்ததாக நினைவு. "ஊர்மிளாவுக்கு தொப்பையோடு கூடிய ஆண்களைப் பிடிக்காது, பிள்ளையாரைத் தவிர". ரங்கீலா வெளியாகி சக்கைப்போடு போட்ட காலக்கட்டம் என்பதால் 'ஊர்மிளா' என்ற பெயரை இந்திய இளைய சமூகம் கிறக்கமாக உச்சரித்துக் கொண்டிருந்தது. தமிழக இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா?

கதை இப்படியாக இருந்தது. ஊர்மிளா 16 வயது பெண். +2 படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பிள்ளையார் பிடிக்கும். தாத்தாவைப் பிடிக்கும். அர்ஜூன் என்ற ஸ்மார்ட்டான பையனின் காதலை ஊதித்தள்ளினாள். அவனுக்கு ஒருமுறை ராக்கி கூட கட்டிவிட்டாள். அபு என்ற பையனிடம் வாலண்டியராக அவள் சோரம் போனாள். பின்னர் இளமை மயக்கங்களில் தெளிந்து டாக்டரானாள். இந்த நான்கைந்து வரிகளில் கதையைப் படித்தால் கொஞ்சம் மொக்கையாகவே தோன்றும்.

ஆனால் வாராவாரம் ப்ரியா கல்யாணராமனின் ட்ரீட்மெண்ட்களில் இளமை கொப்பளித்தது. ஒரே ஒரு சிறுகதையயாவது அந்த எனர்ஜி லெவலில் எழுதிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான முறை முயற்சித்து தோற்றிருக்கிறேன். இன்றுவரை எனக்கு திருப்தியாக (ஐ மீன் 16 வயது லெவலுக்கு) எதையும் எழுதி கிழித்துவிட முடியவில்லை. அங்கேதான் நிற்கிறார் ப்ரியா கல்யாணராமன். அவருடைய பெயரே மாடர்ன் + விண்டேஜாக, வித்தியாசமாக இருக்கிறது இல்லையா? கமல்ஹாசன் படங்களில் எனக்குப் பிடித்தது கல்யாணராமன். ப்ரியா என்ற பெயரை பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

வயது 16க்குப் பிறகு அவர் என்ன எழுதினாலும் (எந்தப் பெயரில் எழுதினாலும்) விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். பதலக்கூர் சீனிவாசுலுவாக காமம் கொப்பளிக்க எழுதினாலும் சரி, ஆன்மீக வாசனையோடு கோயில் சொல்லும் கதைகள் எழுதினாலும் சரி. ஒவ்வொரு வெரைட்டிக்கும், ஒரு யூனிக் ஸ்டைல். ப்ரியா கல்யாணராமன் என்னை ஆக்கிரமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அப்போது நான் 2ஜி. ஐ மீன் செகண்ட் ஜெனரேஷன். 90களின் மத்தியில் வெகுஜன இதழ்களில் ஏற்படுத்தப்பட்ட அப்படியொரு நடை/மொழித்தாக்க அலை, பின்னாளில் தொடராக வெளிப்பட்டதாக ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை (என்னுடைய வாசிப்பளவில்). ஜூ.வி.யின் ஆதிமங்கலத்து விசேஷங்களையும் தவிர்க்க முடியாததாக சொல்லலாம். ஆனால் இது வேற Genre. அவ்வப்போது இதே மாதிரியான ஃபீலிங்ஸ் ஒன்றிரண்டு இடங்களில் கிடைக்கும். உதாரணத்துக்கு சென்ற ஆண்டு தீபாவளி ஆ.வி. இதழில் ராஜூமுருகன் எழுதிய 'தீபாவலி' சிறுகதை.

இப்போது நடைபெறுவது 3ஜி. இடைப்பட்ட காலத்தில் சாஃப்ட்வேர் பீட்டர்கள் பெருகிவிட்ட காலக்கட்டம். இந்த தலைமுறைக்கான மொழி எதுவென்பதில் பெருத்த குழப்பத்தில் இருந்தேன். விடையாக ஆனந்தவிகடனில் ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. 'இருவன்' எழுதும் 'ஒன்று'.

'ஒன்று' முதல் அத்தியாயத்திலேயே ஆச்சரியப்படுத்தியது. தலைப்புக்கு ஒரு நீண்ட உபத்தலைப்பு. "ஒருமுறைதான் காதல் வரும். தமிழர் பண்பாடு. அந்த 'ஒன்று' எது என்பதுதான் கேள்வி இப்போது. கதை இப்படி தொடங்குகிறது. ஜெஸ்ஸி என்ற இளம்பெண்ணின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மெசேஜ் "முதல் காதலை மறக்கவே முடியாது. கடைசிக் காதலை மறுக்கவே முடியாது". வரிசையாக காய்ந்துப்போன தமிழ் இளைய சமூகத்தின் 'மொக்கை டெம்ப்ளேட்' பின்னூட்டங்கள். இதை வார்த்தைகளில் நீங்கள் வாசிக்க அசுவாரஸ்யமாய் இருக்கலாம். ஆ.வி.யின் லே-அவுட் டீம் கலக்கியிருப்பதை இதழில்தான் பார்க்க முடியும்.

சரி. தொடர் எதைப்பற்றி? குறிப்பாக இதைப்பற்றி என்று சொல்ல முடியவில்லை. எதைப்பற்றி வேண்டுமானாலும், அது பாட்டுக்கு அசால்ட்டாக ஓடுகிறது. ஆண்கள், பெண்கள், காதல், காமம்... குட்டிக் கதைகளாய், நீண்ட கதைகளாய், சம்பவங்களாய், பிரசங்கமாய்... 'ஒன்று' ஒரு காட்டாறு. ஆனால் அடித்துச்செல்லவில்லை. அணைத்துச் செல்கிறது.

முதல் அத்தியாயத்தில் ஒரு காட்சி.

மொட்டை மாடி இரவு...

"நச்சுன்னு ஒரு கேள்வி.. ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் எப்போ... யாரோட? தோடா... சும்மா சொல்லுங்கப்பா!" நள்ளிரவில் நண்பனின் கண்களில் நட்சத்திரங்கள்.

- இப்படியாகத்தான் பயணிக்கிறது 'ஒன்று'.

தமிழ் மசாலா சினிமாவின் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் மாதிரி தொடர்முழுக்க ஆங்காங்கே கலக்கல் ஒன்லைனர்கள் தூவப்படுகிறது. உதாரணத்துக்கு "பிரபஞ்சம் பிரியத்தால் நிரம்பட்டும்!". இப்படியான கவித்துவம் ஒரு தொடரில் மழையாகப் பொழிந்து எத்தனை வருஷங்கள்?

கணேஷ் என்றொரு கேரக்டரை 'இருவன்' அறிமுகப்படுத்துகிறார். ஒரே ஒரு வாசகத்தில் அவனது தன்மையை உணரலாம். 'எட்டாங் கிளாஸ் படிக்கும்போதே, "ஆமாடா... எங்க அம்மாவும் எங்க அப்பாவும் அப்பிடிப் பண்ணதாலதேன் நான் பொறந்தேன். சும்மா, சாமி குடுத்துச்சு, சந்தையில வாங்கினேன்னு ஆளாளுக்கு டூப் விடுறாய்ங்கடா!" - ஆதி ரகசியத்தை அரை டிராயர் காலத்தில் போட்டு உடைத்தவன். கணேஷ் அப்படித்தான் எப்போதும்.'

இன்னொரு பத்தியில் இப்படி ஒரு வர்ணனை. 'நிச்சயம் கேரளக் குட்டி. அந்தக் கணத்தில் அவளை ஈன்றெடுத்த மலையாளிகளின் கால்களில் விழுந்து கரகரவென அழ சித்தமாக இருந்தேன்.' இளமைப் பிரவாகம் போதுமா?

1000 பக்கங்களில் நாவல் கூட எழுதிவிடலாம். 'ஒன்று' ஒரே ஒரு அத்தியாயம் எழுதுவதென்பது பத்தாயிரம் பக்கங்கள் எழுதுவதற்கு இணையானது. வாசிக்க எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு இதுபோன்ற தொடரை எழுதுவது கடினமோ கடினம். நீங்கள் வேண்டுமானால் இந்த மொழியில் எழுதிப் பாருங்கள், புரியும்.

தொடர் என்றாலும் வாரம் ஒரு கதை. சிறுகதைத் தொடர் என்று சொல்லலாம். வெறும் எழுத்து என்றில்லாமல் வடிவமைப்பு, ஓவியங்களிலும் 3ஜி ஆடியன்ஸை கச்சிதமாக குறிவைத்துத் தாக்குகிறது ஆ.வி., தொடரை எழுதும் 'இருவன்' யாரென்பதுதான் கேள்வி இப்போது. நடையை வைத்து யூகிக்க முடிகிறது என்றாலும், ஆதாரமின்றி 'இருவர்' பெயரை வெளிப்படையாக சொல்லலாமா என்று தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை மாதிரி குன்ஸாக லூசுப்பையன் மற்றும் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலா ஆகியவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ எழுதுகிறார்கள் என்று கிசுகிசுக்க வேண்டுமானால் முடியும்.

இனி, வேறு ஏதாவது இண்டர்வியூவில் "என்ன லட்சியம்?" என்று கேட்கப்பட்டால், ப்ரியா கல்யாராமனை சொல்வதா இருவனை சொல்வதா என்று எனக்கு குழப்பம் ஏற்படலாம்.

காதலும், காமமும் இளமையின் அடையாளம். முதுமைக்கு ஸ்வீட் மெமரீஸ். வடிவத்திலும், வரிகளிலும் 'ஒன்று' அள்ள அள்ள குறையாமல் எடுத்துத் தருவது இதைத்தான். இதுவரை 'மிஸ்' பண்ணியிருந்தாலும், இனிமேல் 'மிஸ்' பண்ணிடாதீங்க. ஏன்னா இத்தொடரில் ஏகப்பட்ட 'மிஸ்'ஸுங்க வர்றாங்க. 3ஜி ஜோதியில் நீங்களும் 'மிக்ஸ்' ஆகுங்க பாஸூ.

16 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம்

CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்' என்று சொல்லுவது தவறு. அரசுக்கான வருமான இழப்பு என்ற வார்த்தையை வேண்டுமானால் இப்பிரச்சினையில் பயன்படுத்தலாம். அவ்வறிக்கையின் படியும் கூட, இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ட்ராயின் நடைமுறைகளை – அதாவது 2ஜிக்கு ஏலம் இல்லை - தொலைத்தொடர்பு அமைச்சகம் சரியாகவே பின்பற்றி இருக்கிறது. 1998/99 காலக்கட்ட்த்தில் இருந்தே இந்த நடைமுறைதான் பா.ஜ.க. ஆட்சியிலும் கூட பின்பற்றப் பட்டது.

2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.

ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.

2ஜி என்ற விஷயம் 2007ஆம் ஆண்டிலேயே காலாவதியாகக் கூடிய தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தப் பரிணாமமான 3ஜியை பற்றி அப்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை CAG அறிக்கை குறிப்பிடும் பணத்தை முதலீடாக செலுத்தி வாங்க பைத்தியக்காரன் கூட தயாராக இருந்திருக்க மாட்டான்.

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோமே?

எந்திரன் திரைப்படம் வெளிவந்து 50 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' திரைப்படம் வெளியாக இருக்கிறது. 200, 300 ரூபாய் டிக்கெட் கட்டணமாக 'மன்மதம் அம்பு' பார்ப்பீர்களா? அல்லது ஓடித் தேய்ந்துப்போன எந்திரனுக்கு இந்த தொகையை செலவழிக்க நினைப்பீர்களா? எந்திரனுக்கு இன்று சாதாரணத் திரையரங்குகளில் 50 ரூபாய் வைத்தால்தான் ரசிகன் தியேட்டருக்கு வருவான். 'புதுப்படம்' என்ற ஹோதாவில் 'மன்மதன் அம்பு'வுக்கு 100, 200 என்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர்காரர்கள் நிர்ணயிக்க முடியும். – இதுதான் சார் ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் லாஜிக். எந்தத் தொகை நியாயமான தொகையோ, அந்தத் தொகைக்குதான் 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.

இந்தப் பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழைமக்கள் மொபைல் போன் வசதியை பெறக்கூடாது என்று மறைமுகமாக வலியுறுத்துகிறவர்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை CAG அறிக்கையின் படியான விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்குமானால் ஒரு நிமிடத்துக்கு ரூ.10/- என்ற அளவில் கூட மொபைல்போனுக்கான கட்டணத்தை நிறுவனங்களால் உயர்த்தியிருக்க முடியும். அப்போதுதான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும்.

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சந்தை விலையில் கிலோ பதினோரு ரூபாய் என்பதால், இந்த பத்து ரூபாய் பணம் ஊழல் செய்யப்பட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இந்த அடிப்படையில் பார்த்தால் 'பல்லாயிரம் கோடி ரூபாய் அரிசி ஊழல்' என்று ஜெயலலிதா உளறுவாரேயானால், தமிழக ஏழை மக்கள் அவரை காறி உமிழ மாட்டார்களா?

அரிசி எப்படி சந்தை விலையை விட பத்து மடங்குக்கும் கீழாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது? இது அரசு ஏழை மக்களுக்கு தரும் சலுகை, உரிமை. இதே அடிப்படையில் தான் 2ஜி சேவையையும் நாம் பார்க்க வேண்டும். நவீன உலகம் தொலைதொடர்பால் நிர்மாணிக்கப் படுகிறது. தேசத்தின் கீழ்த்தட்டு குடிமகன் வரைக்கும் இந்த வசதி கிடைத்தாக வேண்டும்.

இல்லை. நான் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவன். நேர்மை, கருமை, எருமைதான் என்னுடைய கொள்கை என்று சொல்லுபவர்கள் சலுகை விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இவற்றின் சந்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்க வேண்டும்.

நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான். ஆயினும் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை, யூக அடிப்படையில் கூறி, அவற்றை மக்கள் நிஜமென்று நம்புமளவுக்கு ஊடகங்கள் பூசி, மெழுகுவது என்பது ராஜா என்ற தனிநபருக்கு எதிரான மனோபாவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே? தென்மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழர் - அதிலும் ஒரு தலித்.. நாட்டின் முக்கியமான துறையை ஆண்டால் கோபம் வராதா என்ன? நியாயம்தானே?

நண்பர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் 'ஸ்பெக்ட்ரம்' குறித்த அவரது அவதானிப்புகளை ஒரு நீண்ட மடலாக ஆங்கிலத்தில் எனக்கு தந்திருக்கிறார். அவரிடம் வலைப்பூ இல்லை. மொழியாக்கம் செய்து வெளியிட முடியுமா என்று கோரியிருந்தார். அவரது வேண்டுகோளையேற்று சில 'சரக்குகளை' சைட் டிஷ்ஷாக இணைத்து இந்தப் பதிவு...

12 நவம்பர், 2010

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்

நவம்பர் 12, 2010. பிற்பகல் 3.00.

நாடு படுக்கையில் உச்சா போய்க் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட அந்த பழையப் புத்தகத்தை கையில் எடுக்கிறேன். 1986 நவம்பரில் வெளியிடப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகள் கழித்து ஒருவன் அவசர அவசரமாக இந்தப் புத்தகத்தை எடுத்து 2வது கதையை மட்டும் உடனே படிக்கப் போகிறான் என்று அப்போது வெளியீட்டாளர் நினைத்துப் பார்த்திருப்பாரா?

இப்போது என்னிடம் இருக்கும் இந்தப் பிரதிதான் அந்தப் புத்தகத்தின் கடைசிப்பிரதி. வேறு யாரிடமாவது சேகரிப்பில் இருக்கலாம். ஆனால் என் கையில் இருக்கும் பிரதி சிறப்புப் பிரதி. ஏனெனில் இது அந்த எழுத்தாளரின் சேகரிப்பில் இருக்கும் ஒரே ஒரு பிரதி. படித்துவிட்டு பத்திரமாக அவரிடம் திருப்பிச் சேர்க்க வேண்டும்.

18வது பக்கத்தில் ஆரம்பிக்கிறது நான் தேடிய கதை. கதையின் தலைப்பு : முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்.

'மாம்பலத்தில் பழைய பேப்பர் மற்றும் முட்டை வியாபாரம் செய்கிற நாடார் எனக்குப் பழக்கம்' – கதை முதல் வரியிலேயே தொடங்கிவிட்டது.

இரண்டாவது பத்தியில் கொட்டாவி விடாதீர்கள் என்று வாசகனை வேண்டி கேட்டுக் கொள்கிறார் எழுத்தாளர். கதை சுவாரஸ்யமாகப் போகும் என்பதற்கு உத்தரவாதமும் அளிக்கிறார். ஆனால் ஏற்கனவே படித்த இரண்டு பத்தியும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

இன்னும் இரண்டு பத்தி தாண்டினால் கதை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்கிறார். கதை என்றுதான் நம்பிப் படிக்கிறோம். இரண்டாவது பக்கத்தின் இரண்டாம் பத்தியில் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஓ! இது கதைக்குள் கதையோ.. ஏதோ மேஜிக், ரியலிஸம் என்கிறார்களே? அதுமாதிரியாக ஏதாவது வகையா? கொஞ்சம் பொறுங்கள். மீதியைப் படிப்போம்.

கிழிஞ்சது கோவணம். வாசிக்கப் போகும் கதையை எழுதியது, கதையை எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் இல்லையாம். அடச்சே! நம்ம எழுத்தாளர் ஒரு குமாஸ்தாங்க. அதுவும் பயந்தாங்கொள்ளி குமாஸ்தா. ஏதாவது அரசுக்கு எதிரா ஓரிரு வாக்கியம் வந்து, அதாலே பிரமோஷன் கிரமோஷன் கட் ஆயிடுமோன்னு பயப்படுறாரு.

அடுத்த பாரா கொஞ்சம் நீளமானது. கொஞ்சமென்றால் கிரவுன்சைஸ் புக்கில் மொத்தம் 56 வரிகள். போதுமா? 'கழிப்பறைக்கும் கம்யூனிஸத்திற்கும் அப்படி என்ன வினோதத் தொடர்போ?' என்று கேள்வி எழுப்புகிறார். எங்கே புரட்சி? வெடித்ததுமே இந்த எழுத்தாளரைப் பிடித்து தூக்கிலிடுங்கள்.

அடடே. ஆரம்பிச்சிட்டாரு, இலக்கிய நையாண்டியை. சிறு பத்திரிகை ஆட்களோட தகராறே இதுதான். இடையிடையே நான் குடிமகனா, குமாஸ்தாவா, எழுத்தாளான்னு அவருக்குள்ளேயே தத்துவ விசாரணை.

இப்படியே போவுது கதை(?). மன்னிக்கவும். இன்னமும் கதையைத் தொடங்கவில்லை என்கிறார் எழுத்தாளர். அடுத்த அத்தியாயத்தில் தொடங்கும் என்கிறார். நம்புவோம். ஆனால் இந்தக் கதையை எழுத்தாளர் எழுதவில்லை என்று என்னை நம்பச் சொல்கிறார். நீங்களும் நம்புங்கள்.

சும்மா சொல்லக்கூடாது எழுத்தாளர் நல்லா ரயில் ஓட்டுறாரு. அதுவும் எக்ஸ்பிரஸ் ரெயில். இந்த 7 பக்கங்களை வாசிக்க 10 நிமிடங்கள் ஆகியிருக்கிறது. நான் கொஞ்சம் வேகமான வாசகன்தான். இருந்தாலும் மூச்சிரைக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு ஒரு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு இடைவெளியில்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பியாக வேண்டும்.

இதை எழுதி என்ன செய்ய? எழுத்தாளர் ஆன்லைனில்தான் இருக்கிறார். அவருக்கே அப்படியே அனுப்பிப் பார்க்கலாமா?

 
பிற்பகல் 3.39

நாடார் கடையின் பழைய குப்பையில் அகஸ்மாத்தாக கிடைத்த கதையை நம்மோடு பகிர்ந்துக் கொள்ளப் போகிறாராம் எழுத்தாளர். அகஸ்மாத்தாக கிடைத்த அந்த நோட்டுப் புக்கில் தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் ரொம்ப அழகா எழுதியிருக்காம்.

கதைக்கு தலைப்பு வைக்க அந்த கதையை எழுதிய எழுத்தாளர் (இந்த கதையை எழுதும் எழுத்தாளர் வேற என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளவும்) தலைப்புக்கு குழம்பியிருக்க வேண்டும் என்று இவர் யூகிக்கிறார். எழுதப்பட்ட அந்த கதையை அப்படியே இவர் கையெழுத்தில் பிரதியெடுத்து நமக்கு தரப் போகிறாராம்.

அய்யோ. இந்த அத்தியாயத்திலும் கதை ஆரம்பிக்கப் போவதில்லையா? ஆமாம். படிப்பதை நிறுத்திவிட்டு ஒரு காபி குடியுங்கள் அல்லது ஒரு சிகரெட் பிடியுங்கள் என்று எழுத்தாளர் சொல்கிறார். நோட் திஸ் பாயிண்ட். இந்தக் கதை எழுதும்போது எழுத்தாளர் ஒரு செயின் ஸ்மோக்கர். மிகச்சரியாக 15 ஆண்டுகள் கழித்து ஒட்டுமொத்தமாக புகைபிடிப்பதை நிறுத்தியிருக்கிறார்.

எழுத்தாளரை மாதிரியே நானும் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறேன். விடுங்கள். அவர் சொன்ன ஆலோசனையை ஏற்று ஒரு 'தம்' அடித்து விட்டு வந்து கதையை மீண்டும் தொடர்கிறேன்.

இரண்டாவது பகுதி கதை 2 பக்கம் + 3 லைன் கொண்ட சிறிய அத்தியாயம். 3.41 தொடங்குவதற்கு முன்பாகவே முடித்து விட்டேன்.
 

பிற்பகல் 4.02

ஒருமுறைதான் காதல் வருமென்பது தமிழர் பண்பாடு. அந்த ஒன்று எதுவென்பதுதான் கேள்வி இப்போது. தத்துவம் சொல்லும் நேரமல்ல இது. விமர்சனம் எழுதும் நேரமென்றாலும் நம் எழுத்தாளர் மாதிரி கொஞ்சம் சுற்றி வளைத்து எழுதலாம் என்று எண்ணம்.

மேற்கண்ட தத்துவத்தை இந்தவார விகடனில் படித்தேன். தம் அடிக்கும் பெட்டிக்கடையில் மாட்டியிருந்த விகடனைப் புரட்டியபோது கிடைத்தது. விகடனில் என்னுடைய ஹாட்கேக் இருவன் எழுதும் பரபரப்புத் தொடர்தான். அது தொடர்கதையா தொடர்கட்டுரையா என்று விளங்காவண்ணம் புதுமையாக எழுதப்படும் எழுத்துத் தொடர்ச்சி மலைகள் எனலாம்.

சரி. நம் கதைக்கு வருவோம். 3.41க்கு முந்தைய அத்தியாயத்தை வாசித்து முடித்து, 4.02க்கு அடுத்த அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்குகிறேன். ஒரு தம் அடிக்க கிட்டத்தட்ட 19 நிமிடங்களா என்றொரு சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஒரு தம் + ஒரு காஃபி. மேலும் லிஃப்டில், ஏறி இறங்க எடுத்துக் கொள்ளும் நேரம். 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் பெட்டிக் கடைக்கும், டீக்கடைக்கும் சென்றுவர எடுத்துக் கொண்ட நேரம் ஆகியவற்றையும் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு தயைகூர்ந்து மன்னிக்க வேண்டும்.

நேராக கதைக்கு வந்துவிடலாம்.

"ஆகாயம் வெளிர்நீலத்தில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது" என்று மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அணிசேரா நாடுகளின் தலைவராக இருக்கும் ஒரு நாட்டின் அதிபர், ஒரு விழாவில் பேசப் போகிறாராம். அந்த விழாவில் சில வெள்ளைப் புறாக்களை பறக்கவிடுவதும் அவர் திட்டம்.

புறாவுக்கு எங்கே போனார்கள்?

தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டிய விஷயமிது. தலைமைச் செயலாளர் தனக்கு தெரிந்த ஒரு ஆசிரியரிடம் புறாக்களை பிடித்து வரும் பொறுப்பை ஒப்படைக்கிறார். ஆசிரியரை செயலாளருக்கு எப்படி தெரியும்? செயலாளரின் மனைவிக்கு ஏற்கனவே ஆசிரியரை தெரியும். செயலாளரின் மனைவிக்கு எப்படி தெரியும்? ஏனெனில் அவர்கள் வசிக்கும் குடியிருப்பருகே ஆசிரியரும் வசிக்கிறார். வசித்தால் மட்டும் போதுமா? எப்படி பழகினார்கள்... இப்படியே சில பக்கங்கள். ஆசிரியரின் வினோதப் பழக்கம் ஒன்றும் விஸ்தாரமாக எழுத்தாளரால் (அதாவது குமாஸ்தா எழுதாளரால் அல்ல. பழைய நோட்டுப் புத்தகத்தில் எழுதிய எழுத்தாளரால்) விவரிக்கப் படுகிறது. 'பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது அப்படி ஒன்றும் பெரிய காரியமில்லைதானே?' என்று போகிறபோக்கில் சொல்லப்பட்டாலும், பெரிய மனிதர்களை தெரிந்துகொள்வது தலைகீழாக தண்ணி குடிக்கும் செயல்தான் என்பதை ஆசிரியரின் அனுபவங்கள் உணர்த்துகிறது.

ஒரு முடவன் வீட்டில் சில வெள்ளைப் புறாக்கள் இருக்கிறது. ஆசிரியர் கேட்கிறார். முடவன் மறுக்கிறான். தனது வாழ்வு ஜீவனம் புறாக்களால்தான் என்கிறான். எப்படி? அவன் புறாக்களை விற்பதில்லை. ஆனால் புறாக்கள் முடவனுக்கு சோறு போடுகின்றன. இங்கேதான் கற்பனைக்கும் எட்டாத கற்பனை எழுத்தாளருக்கு கை கொடுக்கிறது.

ஒருவழியாக அதிகாரப் பயமுறுத்தலை பயன்படுத்தி புறாக்களை ஆசிரியர் கைப்பற்றுகிறார். அதிபர் பறக்க விடுகிறார். பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப தன் வீட்டுக்கு வருமாவென்று முடவன் ஆகாயத்தை அண்ணாந்துப் பார்க்கிறான். ஆகாயம் வெளிர்நீலமாக இருந்ததாம்.

ஒரு நிமிடம். எனக்கும் ஆகாயத்தை இப்போது அண்ணாந்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது. சன்னலை திறந்து எட்டிப் பார்த்துக் கொள்கிறேனே? அடடே. நிஜமாகவே இந்த நொடியில் சென்னையின் ஆகாயம் வெளிர்நீலமாக தான் இருக்கிறது.

வெளிர்நீலத்தில் தொடங்கி அதே வெளிர்நீலத்தில் முடிகிறது மூன்றாவது அத்தியாயம். ஒருவேளையாக கதை மூன்றாவது அத்தியாயத்திலாவது தொடங்கியது. 9 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை வாசிக்க 9 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்.

பரபரப்பாக நாம் எதிர்ப்பார்க்கும் க்ளைமேக்ஸுக்கு போவோமா?


பிற்பகல் 4.30.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் அல்லது எனக்கு அப்போது தெரியவில்லை. கதைக்குள் கதை போன அத்தியாயத்திலேயே முடிந்துவிட்டது.

நான்காவது அத்தியாயம் முழுக்க எழுத்தாளரின் உள்ளொளி தரிசனம். இந்த அத்தியாயத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். யாரோ எழுதிய கதை அல்ல இது. இவரே சில ஆண்டுகளுக்கு முன்பாக எழுதியிருக்கிறார். ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை கிண்டலடிக்கும் சுதந்திரம் இருந்ததை-இருப்பதை மெச்சிக் கொள்கிறார். 24 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலை, இன்னமும் நீடிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு நமக்கு நாமே முதுகில் தட்டிக் கொள்ளலாம்.

வாழ்க்கையை நாம் எப்படி எதிர்ப்பார்க்கிறோம். எதிர்ப்பார்ப்பில் நமக்கு எத்துணை மடங்கு தீவிரம் இருக்கிறதோ, அத்துணை மடங்கு பலமாக அடி விழும் என்று எச்சரிக்கிறார் எழுத்தாளர். அதே நேரத்தில் மனிதனுக்கு அத்தியாவசையமான தேவைகளில் ஒன்று நம்பிக்கை என்றும் குறிப்பிடுகிறார். கடவுள் அல்லது லட்சியத்தை நம்பலாம் என்பது அவர் சிபாரிசு. கடவுளை நம்பாதவன் லட்சியத்தை தீவிரமாக நம்புவான் என்று எழுத்தாளர் நம்புகிறார். ஏதேனும் ஒன்றை நம்புவதால்தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக தோன்றுகிறதாம்.

மூன்றாவது அத்தியாயத்தில் குறியீடுகளாக எழுதிய ரோஜா, ரத்தச் சிவப்பு ஆகிய புரட்சி (அ) அதிகாரத்துக்கு எதிரான எழுத்துகளை சிலாகிக்க இந்த அத்தியாயத்தில் எழுத்தாளருக்கு மனமில்லை. நிஜமாகவே ஜனநாயகத்தை கிழித்து தோரணம் கட்டுவது அவருக்கு சலிப்பைத் தருகிறது. இன்று யார் வேண்டுமானாலும் சுலபமாக முற்போக்காகி விடலாமே என்று அலுத்துக் கொள்கிறார்.

எழுத்தாளரின் சமூகக்கோபம் குமுறலாக வெடிக்கிறது. அது பலதளங்களிலும் பரவுகிறது. கதையின் கடைசி சில வரிகளில் எழுத்தோடையாய் குறுகி சலசலவென்று நீட்டமாய், ஒழுங்காய் பாய்கிறது.

7 நிமிடங்களில் கடைசி அத்தியாயத்தை (8 பக்கங்கள்) வாசித்து முடித்தேன். இந்த அத்தியாயத்தையும் எழுத்தாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும்.

-  விமலாதித்த மாமல்லன் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை (அ) குறுநாவலுக்கான விமர்சனம். அத்தியாயம், அத்தியாயமாக வாசித்து தனித்தனியாக தோன்றியதை விமர்சனம் போல எழுதுவது பைத்தியக்காரத்தனம். இந்தக் கட்டுரையை முழுக்க இப்போது படித்துப் பார்க்கும்போது, எதையாவது வாசிக்கும்போது நான் சிதைந்து பைத்தியக்காரனாக மாறிவிடுவதை அறியமுடிகிறது...