இது நடந்து ஒரு பத்து ஆண்டுகள் இருக்குமென்று நினைக்கிறேன். நண்பர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைகிறேன். நான் நுழைந்ததுமே ஓடிக்கொண்ட மின்விசிறி பவர்கட்டால் நின்றது (திமுககாரன் ராசியே இதுதான்). நண்பர் கோபமாக சொன்னார். "விவசாயிகளுக்கு இலவச கரெண்டுன்னு கலைஞர் அறிவித்ததால்தான், நமக்கு அடிக்கடி கரெண்டு கட் ஆவுது"
என்னதான் கல்வி கற்றிருந்தாலும், நகர்ப்புற மக்கள் அரசியலறியாத மொன்னைகள் என்பதற்கு அந்த நண்பன் நல்ல உதாரணம். எனக்குத் தெரிந்து என்னுடைய வட்டாரத்தில் 'ஜெயா செய்திகளை' சீரியஸாகப் பார்ப்பவன் அவன் மட்டுமே என்பதால், அவனோடு விவாதிப்பதும், சுவற்றில் தலையைக் கொண்டு முட்டிக் கொள்வதும் ஒன்று என்று எனக்குத் தெரியும்.
"எனக்கு ஃபேன் சுற்றுவதை விட, பசியெடுத்தால் சோறு தின்பது முக்கியம். எனவே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தால் மின்வெட்டு ஏற்படுகிறதென்றால், அந்த மின்வெட்டை நான் வரவேற்கிறேன்" என்று சொல்லிவிட்டு அப்போதைக்கு விவாதத்தை முடித்தேன். சோற்றுக்கும், மின் வெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்ததால், நான் சுலபமாக தப்பிக்க முடிந்தது.
நகர்ப்புற மக்கள் இப்படித்தான் தெனாலி போல யோசிக்கிறார்கள். 'தெனாலி' பாட்டில் கமலஹாசன் பாட்டுக்கு நடந்துக்கொண்டே இருப்பார். அவரால் ஊரே பற்றியெரியும். அதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் கவலை இல்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய வீடு என்பது ஒரு சிறிய சமையலறையும், கொஞ்சம் பெரிய வரவேற்பரையும் மட்டும்தான். ஒரு போர்ட்டபிள் டிவி, ஒரு மின்விசிறி, ஒரு வெண்குழல் விளக்கு, சமையலறையில் ஒரு 40 வாட்ஸ் குண்டு பல்பு, ஆறு மணி ஆனால் வாசலில் ஒரு குண்டு பல்பு. பாத்ரூமில் 40 வாட்ஸுக்கும் குறைவான மங்கிய ஒளி கொடுக்கக்கூடிய ஒரு பல்பு. போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுக்க மோட்டார் இல்லை. கைப்பம்பில் அடித்துதான் உபயோகப்படுத்தினோம். பகலில் என்ன வெக்கையாக இருந்தாலும் மின்விசிறியை பயன்படுத்துவதில்லை. இரவு தூங்கும்போதுதான் ஸ்விட்ச் போடுவோம். யாராவது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், சும்மா விருந்தோம்பலுக்காக ஃபேன் ஸ்விட்ச்சை ஒரு பத்து நிமிடம் தட்டி விடுவதுண்டு. மின் பயன்பாட்டை பொறுத்தவரை நாங்கள் மட்டுமல்ல. எல்லோருமே கொஞ்சம் கறாராக இருந்த காலம் அது.
இன்று என்னுடைய வீடு டூப்ளக்ஸ் ஆக உருமாறியிருக்கிறது. ஒரு வரவேற்பரை, ஒரு சமையலறை, இரண்டு படுக்கை அறைகள். மாடியிலும் இதே அமைப்பு. ஒவ்வொரு அறையிலும் பகலிலும் கூட விளக்குகள் எரிந்துகொண்டே இருக்கிறது. மின்விசிறிக்கு ஓய்வே இல்லை. சமையல் அறையில் கூட ஒரு மின்விசிறி. இரவு முழுக்க ஏ/சி. ஃப்ரிட்ஜ். மிக்ஸி. கிரைண்டர். அயர்ன்பாக்ஸ். மோட்டார். கம்ப்யூட்டர். இரண்டு 29 இன்ச் டிவிகள் – இரவு ஒரு மணியில் இருந்து காலை 7 மணி தவிர்த்து என்னேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வீடியோ கேம் விளையாட போர்ட்டபிள் டிவி. இன்னும் நிறைய. வீட்டுக்குள் போய் எதைப்பார்த்தாலும் மின்சாரத்தை சார்ந்த வீட்டு உபயோகப்பொருளாகவே இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் நான் நிரம்பவும் சொகுசு ஆகிவிட்டதை உணர்கிறேன். ஏப்ரல்-மே வெயில் காலங்களில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டில் போட்டுப் படுப்பது அப்போதெல்லாம் வழக்கம். மல்லாந்துப் பார்த்தால் வானில் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். சப்தரிஷி மண்டலம், கார்த்திகை நட்சத்திர கூட்டம் இதையெல்லாம் வெறும் கண்களால் தெளிவாகப் பார்த்து 'விண்வெளி அறிவியல்' பேசிக் கொண்டிருப்போம். யதேச்சையாக நேற்று வானத்தைப் பார்த்தேன். மேகமூட்டம் இன்றி தெளிவாக இருந்தாலும், பல லட்சம் நட்சத்திரங்கள் இந்த இருபது வருடங்களில் காணாமல் போய்விட்டதைப் போல உணர்வு. நாடெங்கும் பெருகிவிட்ட மின்னொளி விளக்குகளால் வானம் 'பளிச்'சென்று தெரிவதில்லை. என்றாவது உங்கள் மின்வெட்டு ஏற்பட்ட இரவில் மொட்டை மாடிக்குச் சென்று வானத்தைப் பாருங்கள். நான் சொல்லவரும் இந்த வித்தியாசம் புரியும்.
இன்றைய மின் பற்றாக்குறை ஒரு குற்றமென்றால், நானும் ஒரு குற்றவாளி. தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உருவிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டில் ஆளில்லாத அறைகளிலும் கூட மின்விசிறிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நிரம்பி வழிந்தாலும், பதறிப்போய் நான் மோட்டாரை நிறுத்துவதில்லை. அலட்சியம்.
நான் சிறு குற்றவாளி. எறும்பு மாதிரி. அரசாங்கத்திடம் இருந்து ஒரே ஒரு சர்க்கரைத் துண்டை எடுத்து உருட்டி சென்று கொண்டிருக்கிறேன். கரும்புக்கட்டையே தூக்கிச் செல்லும் யானைகள் மாதிரி மெகா குற்றவாளிகள் நிறைய பேர் உண்டு. தமிழகத்தின் தொழில் வளத்தை பெருக்குகிறோம் என்கிற பெயரில் இங்கே வந்து பட்டறை போடும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள். அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போதே 'தடையற்ற தரமான மின்சாரம்' என்கிற ஒரு பிரிவினை ஒப்பந்தத்தில் கறாராக சேர்த்துவிட்டே இங்கே தொழில் ஆரம்பிக்கிறார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மின்சாரத்தை தடையின்றி தந்துக் கொண்டிருக்க வேண்டுமானால், தமிழக மின்சார வாரியம் இனி சூரியனுக்குப் போய் ஒரு ஃபவர் பிளாண்ட் அமைத்துதான் நேரிடையாக மின்சக்தி பெற்றுத்தர வேண்டும். இந்நிறுவனங்களால் வேலைவாய்ப்பும், தொழில்வளமும் பெருகுகிறது என்று சப்பைக்கட்டு கட்டும் அதே வாய்கள்தான், மேட்ச் பார்க்கும்போது ஃபவர்கட் ஆனதுமே அரசாங்கத்தை சபிக்கின்றன.
சரி. நாம்தான் அறிவுகெட்டத் தனமாக மின்சாரத்தை அதிகமாக உபயோகிக்கிறோம். தொழில்நிறுவனங்கள் அசுரத்தனமாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் என்ன செய்யவேண்டும், புதிய மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி கூடுதல் மின்சாரத்தை தயாரிக்க முடியாதா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாயமான கேள்வி.
தமிழகத்தின் மொத்த மின் தேவை 12,000 மெகாவாட். 2001ல் தொடங்கி எந்த புதிய மின் திட்டமும், அதற்கான கட்டமைப்பும் ஏற்படுத்தப்படாத நிலையில், இன்று நமக்கு 4,000 மெகாவாட் பற்றாக்குறை நீடிக்கிறது. 2004 பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா அரசு, எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல் 2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்கிற வெறியில் 2004-06 காலக்கட்டத்தில் ஊதாரித்தனமாக மின்சாரத்தை செலவு செய்திருக்கிறது என்பதையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது நாம் சந்தித்துவரும் மின்வெட்டுக்கு காரணம் நிச்சயமாக திமுக அரசு அல்ல. முந்தைய அதிமுக அரசுதான் இவ்விஷயத்தில் குற்றவாளி. கடந்த ஜெயலலிதா அரசின் துக்ளக் தர்பாரால் வீணடிக்கப்பட்ட மின்சக்தியால், இன்று தமிழகம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்சாரம் என்றில்லை. எந்தவித கட்டமைப்பு வசதி பற்றியும் அதிமுக கவலையே படுவதில்லை என்பதுதான் தமிழக வரலாறு. அவர்களுக்கு நீண்டகாலத் திட்டங்கள் போடத்தெரியாது. தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பது, நியாயமாக படித்தவர்களுக்குதான் தெரியவேண்டும். துரதிருஷ்டவசமாக தமிழ்நாட்டில், கல்வி கற்றவர்கள்தான் பாமரனையும் விட மோசமாக சிந்திக்கக்கூடிய அறிவினைப் பெற்றிருக்கிறார்கள்.
முந்தைய அதிமுக அரசின் பாவமூட்டையை தன் தலையில் சுமந்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது பல்வேறு புதிய மின்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக 2012 வாக்கில் 6800 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும். இது நம் தேவைக்கும் அதிகமான சக்தி. எதிர்காலத்தில் திமுக வழங்கப்போகும் மிக்ஸி அல்லது கிரைண்டர் பயன்படுத்த தேவைப்படும் கூடுதல் மின்சாரத்துக்கு இது உதவும்.
தற்போது நடந்துவரும் சில மின் திட்டங்கள் :
- வடசென்னையில் 1200 மெகாவாட் விரிவாக்கம்
- மேட்டூரில் 600 மெகாவாட் விரிவாக்கம்
- என்.டி.பி.சியோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் வள்ளூர் 1500 மெகாவாட் மின் திட்டம்
- பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் உடன்குடி 1600 மெகாவாட் திட்டம்
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனோடு இணைந்து தூத்துக்குடியில் தமிழக மின்சார வாரியம் உருவாக்கி வரும் 1000 மெகாவாட் திட்டம்
இவையெல்லாம் கடந்த ஐந்தாண்டுகால திமுக அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் திட்டங்கள். இந்த திட்டங்களின் பயனை தமிழக மக்கள் 2012ல் அறுவடை செய்யலாம்.
இதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலையும் இவ்வாண்டின் இறுதியில் இருந்து மின்சாரம் தயாரிக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. தற்போதைய பற்றாக்குறையை உடனடியாக இதைக்கொண்டு சமாளித்துவிட இயலும்.
மின்வெட்டு குறித்து திமுகவை குற்றம் சாட்டுபவர்கள் கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கு ஒப்பானவர்கள். பூலோகம் இவர்களால் இருண்டுவிடப் போவதில்லை.
நமக்கான திட்டங்களை தீட்டியவர்களுக்கா நம் வாக்கு, அல்லது திட்டங்கள் தீட்ட வக்கில்லாத ஊதாரிகளுக்கா என்பதை மக்கள் ஏப்.13 அன்று முடிவெடுக்க வேண்டும்.
2 ஏப்ரல், 2011
மின்வெட்டு – யார் காரணம்?
26 மார்ச், 2011
குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம்.
தேசிய முற்போக்கு திம்மி கழக தலைவரான விஜயகாந்த் தற்போது தங்கத்தாரகையோடு கூட்டணியில் இருக்கிறார் என்பதால் அவரை குறித்து தேசத்தில் எண்பது கோடி ஹிந்துக்களும் பெருமை அடைந்திருக்கிறார்கள். அதே நேரம் அவர் குறித்து தமிழகத்தில் தற்போது நிலவிவரும் கொடூர வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
மூத்த திம்மியின் லேட்டஸ்ட் அல்லக்கை திம்மியாக நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறியிருக்கிறார். திருவாரூரில் நடந்த திம்மிகள் முன்னேற்ற கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஈ காக்கை கூட இல்லையாம். அந்த மேடையில்தான் வடிவேலு குடித்துவிட்டு 'குடிகார' வாந்தி எடுத்திருக்கிறார். தங்கத்தாரகையோடு கூட்டணி அமைத்திருக்கும் விஜயகாந்த் குடிகாரர் என்று பேசியிருக்கிறார். அன்புச் சகோதரர் விஜயகாந்த் குடிக்கும்போது, இவரென்ன ஊறுகாய் வாங்கிக் கொடுத்தாரா?
அதெல்லாம் இருக்கட்டும். அன்புச் சகோதரர் குடிப்பார் என்கிற விஷயத்தையே இவர்தான் கண்டுபிடித்தது போல பீத்திக் கொள்கிறாரே? அதை கேட்டு மூத்த திம்மியும், அவரது மகன்களான மதுரை திம்மி, கொளத்தூர் திம்மி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கிறார்களே? இந்த அநியாயத்தை தட்டிக் கேட்பார் இல்லையா? தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் அயல்நாட்டு அண்டோமேனியாவின் அடியாளான தாடிவைத்த சர்தார்ஜியோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாராம்.
அன்புச் சகோதரருக்கு சோமபானம் அருந்தும் பழக்கம் இருப்பதை கண்டறிந்து முதன்முதலாக உலகுக்கு தெரிவித்த பெருமை நம் தங்கத்தாரகையே சாரும். இண்டெலிஜென்ஸ் பிராப்பர்ட்டி ரைட்ஸ் என்கிற சட்டம் மூலம் பார்க்கப் போனாலும் கூட, புரட்சித்தலைவியே இந்த கண்டுபிடிப்புக்கான உரிமை பெற்ற சொந்தக்காரர் ஆவார். நேற்று வந்த வடிவேலுவோ அல்லது யாரேனும் குடிவேலுவோ இதை தங்கள் கண்டுபிடிப்பு என்று மக்கள் முன் சொன்னால், அதை நம்பிவிட தமிழக மக்கள் என்ன மாங்காய்களா? வாழை மட்டைகளா?
அம்மா அன்புச் சகோதரரை குடிகாரர் என்று செல்லம் கொஞ்சியதும், பதிலுக்கு குடிகாரச் சகோதரர், நீதான் ஊத்திக் கொடுத்தாயா என்று அன்பாக பதிலளித்ததையும் திம்மிக்கள் மறைக்க நினைத்தாலும், தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். ஆயிரம் பாட்டில்கள் மறைத்து நின்றாலும், இரட்டை இலை மறைவதில்லை.
இந்த வதந்தியைப் போலவே இன்னொரு வதந்தியும் உலவுகிறது. ஏதோ 'டாஸ்மாக்' என்கிற சேவை அமைப்பினை முதன்முதலாக மூத்த திம்மிதான் அமைத்ததைப் போல குடிகார வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களது வாக்கினை கவரும் அடாத செயலிலும் திம்மிக்கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் பெயரில் சரக்கு விற்கமுடியும் என்கிற பேருண்மையை அண்ட சராசரங்களுக்கும் முதன்முதலாக உணர்த்தியவர் அம்மா. தங்கத்தாரகையின் ஆட்சியில்தான் தமிழகம் வளமாக, பசுமையாக இருந்தது என்பதை குறிக்கும் பொருட்டு, டாஸ்மாக் போர்டுகளை பச்சை வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே அம்மாதான் என்பதை தமிழக குடிகார வாக்காளர்கள் அவ்வளவு விரைவில் மறந்து விட மாட்டார்கள். அந்த டாஸ்மாக்குக்கு சரக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, 'மிடாஸ்' தொழிற்சாலையை உருவாக்கியவரும் அம்மாதான்.
'குடி'யரசு என்கிற உயர்ந்த சித்தாந்தம் அடிப்படையில் பார்க்கப்போனாலும் எந்த திம்மியை விடவும், புரட்சித்தலைவி அம்மா தலைசிறந்தவர் என்பதை நாடு மறக்காது. நாட்டு மக்கள் நன்றி மறக்கவும் கூடாது. காலை முதல் மாலை வரை உழைத்து களைத்த தமிழன், நிம்மதியாக குவார்ட்டர் வாங்கி சரக்கு அடிக்கக்கூடிய நிலைமை இன்று தமிழகத்தில் நிலவுகிறதென்றால், நாமெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டவர் உலகம் போற்றும் உத்தம அம்மா புரட்சித்தலைவி டாக்டர் தங்கத்தாரகை அவர்கள்தான். எனவே 'குடி'யாட்சி நீடிக்க, குடிமகன்களே அம்மாவை ஆதரிப்போம். அம்மாவின் சின்னம் இரட்டை இலை.
குடியுயர அம்மா வரவேண்டும், அம்மா உயர நாடுயரும். அம்மா வாழ்க. திம்மி வீழ்க.
25 மார்ச், 2011
கதாநாயகி
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்த தேர்தல் 1967ல் நடந்த சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல். அவுன்ஸ் அரிசி வாங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு அண்ணாவின் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி வாக்குறுதி, பாலையில் பூத்த சோலையாய் நம்பிக்கை தந்தது. வாக்குறுதி கொடுத்து வாக்குகளை கவர முடியும் என்கிற ஃபார்முலாவை ஏற்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவையே சாரும்.
அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் கொஞ்சமாவது சீரியஸாக பரிசீலிப்பது திமு கழகத்தின் வாக்குறுதிகளைதான். அதற்கேற்ப திமுகவும் ஒவ்வொரு தேர்தலின்போது வாக்குறுதிகளை ரொம்பவும் மெனக்கெட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.
நமக்கு ஓரளவு நினைவுதெரிந்த தேர்தல் 1989 சட்டமன்றத் தேர்தல். சென்னை நகரின் ஒவ்வொரு இல்ல முகப்பிலும் 'நாடு நலம்பெற, நல்லாட்சி மலர' என்கிற வாசகங்களோடு திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தேர்தல் அது. 'பெண்களுக்கு சம சொத்துரிமை' போன்ற வாக்குறுதிகளை திமுக தந்திருந்ததாக நினைவு.
அதிமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயம். எம்.ஜி.ஆர் காலத்திலும் கூட. தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகள் கூட அதிமுக தலைவர்களுக்கு நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் 'சொல்லாததையும் செய்வோம்' என்கிற திமுகவின் பிரபலமான வசனம் அப்பட்டமாக பொருந்துவது அதிமுகவுக்குதான். சத்துணவுத் திட்டம் போன்ற சமூகநலத் திட்டங்களை அதிமுக வாக்குறுதியாக தரவில்லை. ஆட்சிக்கு வந்து சொல்லாமலே கொடுத்தது. 91 தேர்தலின் போதுகூட 69 சதவிகித இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக அம்மா தந்ததாக நினைவில்லை. ஆயினும் பல்வேறு தடைகளை உடைத்து இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
2006 வரை திமுகவின் தேர்தல் அறிக்கை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி முன்மொழியப்பட்டுக் கொண்டிருந்தது. கலைஞரின் மனசாட்சியான மாறனின் சிந்தனைகள் பலவும் வாக்குறுதிகளாக இடம்பெறும். 'மாநில சுயாட்சி' என்கிற வாசகம் ஒரு ஒப்புக்காவது இன்றும், திமுக அறிக்கைகளில் இடம்பெறுவது மாறன் காலத்திய பாரம்பரியமே. மாறன் மறைந்தபிறகு கலைஞருக்கு கிடைத்த பொருளாதார ஆலோசகர் நாகநாதன். 2006 தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமான வகையில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பறியது. உலகமயமாக்கல் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கணக்கில் கொண்டு உருவாக்கிய அறிக்கை அது. 'நான் உனக்கு ஓட்டு போட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கென்ன கிடைக்கும்?' என்று ஒவ்வொரு வாக்காளரும் அரசியல் கட்சிகளிடம் பலனை எதிர்ப்பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
அத்தேர்தலில் இலவச கலர் டிவி, அண்ணா பாணியில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு மாதிரியான அதிரடி வாக்குறுதிகள். ஆரம்பத்தில் இவையெல்லாம் சாத்தியமேயில்லை என்று சாதித்த ஜெயலலிதாவே பிற்பாடு பத்து கிலோ அரிசி இலவசமென்று அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதி பத்து கிலோ அரிசியை கிலோ ரூ.3.50/- விலையில் வாங்கிக் கொள்ளலாம். இதன்படி பார்க்கப்போனால் ஒரு கிலோ அரிசி ரூ.1.75/-க்கு வழங்கப்படுமென்பது ஜெ.வின் வாக்குறுதி. இது திமுகவின் வாக்குறுதியை காட்டிலும் 25 பைசா குறைவு.
2006 தேர்தல் பிரச்சார காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி பசுமையாக நினைவில் நிற்கிறது. அதிமுக கூட்டணியின் பிரச்சாரப் பீரங்கி வைகோ ஒரு மேடையிலே முழங்கிக் கொண்டிருக்கிறார். "தோல்வி நிச்சயம் என்பதால், சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர். ஏற்கனவே மானியத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரிசியை இன்னும் எப்படி ஒண்ணரை ரூபாய் குறைத்து கொடுக்க முடியும்?" என்று கர்ஜித்தார். அவருக்கு ஒரு துண்டுச்சீட்டு வருகிறது. 'அம்மா இன்று மாலை ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் பத்து கிலோ அரிசி இலவசமென்று வாக்குறுதி தந்திருக்கிறார்'. அதுவரை பேசிய பேச்சை அப்படியே மாற்றிப்பேச வேண்டிய நெருக்கடி வைகோவுக்கு. தனது பேச்சாற்றலால் மாற்றியும் பேசினார். ஆனால், மதிமுகவினரே நொந்துப்போனார்கள். மக்கள் சிரிப்பாய் சிரித்தார்கள்.
வாக்குறுதிகளால் திமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் ப.சிதம்பரம்தான் முதன்முறையாக திமுக தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என்கிற வார்த்தைகொண்டு Branding செய்தார் என்பதாக நினைவு.
2006ல் ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதிகளை பெருமளவில் நிறைவேற்றியும் இருக்கிறது.
ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு என்று சொன்னது. ஆனால் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கே நியாய விலைக் கடைகளில் கொடுத்து வருகிறது.
ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றது. ஏழை, பாழை மட்டுமில்லாமல் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்குமே வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த பெண்களுக்கான திருமண உதவித்தொகை மீண்டும் அமல்படுத்தப்பட்டு, ரூபாய் பதினைந்து ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.6000/- வழங்கப்படுகிறது.
இலவச கலர் டிவி, இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி.
வேலையிழந்த சாலைப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை.
அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்பட்டது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம்.
இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு.
- இம்மாதிரி இன்னும் ஏராளமாக தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிஜமாகவே திமுக ஆட்சி முனைப்பு காட்டியிருக்கிறது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு மாதிரி சொல்லாததையும் செய்துக் காட்டியிருக்கிறது. ஒரு அரசியல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது என்கிற அதிசயம் தமிழகத்தில்தான் கடந்த ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இதோ அடுத்த தேர்தல். மீண்டும் ஒரு கவர்ச்சி அறிக்கை திமுகவிடமிருந்து. இம்முறை கலைஞர் 'கதாநாயகி' என்று தம் கழக அறிக்கையை branding செய்திருக்கிறார். ஊடகங்களோடு சேர்ந்து மக்களும் பரபரப்படைந்திருக்கிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு பின்பாக ஒரு சர்வே எடுக்கப்படுமாயின், திமுகவின் செல்வாக்கு ராக்கெட் வேகத்தில், கடந்துமுறையைப் போலவே உயர்ந்துக் கொண்டிருப்பதை இம்முறையும் அறிய முடியும்.
அம்மா ரொம்ப சிரமப்படவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஆங்காங்கே எண்களை உயர்த்தி, மானே தேனே போட்டு சம்பிரதாயமாக வாசித்துக் காட்டி விட்டார். மிக மிக நகைச்சுவையான தேர்தல் அறிக்கை இது. ஒருவேளை நகைச்சுவை நடிகர் வடிவேலு திமுகவுக்கு நகைச்சுவைப் பிரச்சாரம் செய்வதை ஈடுகட்ட, அம்மாவே நகைச்சுவை வேடம் பூண்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. அம்மாவின் அறிக்கையை அவரது கட்சிக்காரர்கள் கூட சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.
கதாநாயகன் அறிவித்த அறிக்கை கதாநாயகியாகவும், கதாநாயகி அறிவித்த அறிக்கை காமெடியாகவும் அமைந்திருப்பது என்னமாதிரியான ஒரு சுவாரஸ்யமான முரண்!
22 மார்ச், 2011
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்
தோழர் சுகுணா திவாகர் எழுதிய
பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!
நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி
இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)
(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)
பங்கேற்போர் :
கவிஞர் யாழன் ஆதி
கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா
பத்திரிகையாளர் கஜேந்திரன்
பேராசிரியர் அ.மார்க்ஸ்
ஏற்புரை :
கவிஞர் சுகுணா திவாகர்
நன்றியுரை :
தோழர் கவின்மலர்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கருப்புப் பிரதிகள்
அனைவரும் வருக!
21 மார்ச், 2011
அதே இருபத்தியொன்று...
ஊழ்வினையில் நமக்கு நம்பிக்கையில்லை. அது பகுத்தறிவுக்கு எதிரானது. அதே நேரம் 'எல்லா வினைக்கும், இணையான எதிர்வினை உண்டு' என்கிற அறிவியல் கூற்றை நாம் நம்புகிறோம். இன்றைய மதிமுக பொதுச்செயலாளரும், கலைஞரின் முன்னாள் போர்ப்படைத் தளபதியுமான வைகோவும் இந்த கூற்றினை நம்பியே ஆகவேண்டும்.
2001ல் ஜெ. ஆட்சிக்கு வந்தார். கலைஞரை கைது செய்தார். வைகோவை கைது செய்தார். சுபவீயை கைது செய்தார். நெடுமாறனை கைது செய்தார். இன்னும் ஏராளமானோரை தகுந்த காரணம் ஏதுமின்றி, வெறும் காழ்ப்புணர்வு காரணமாகவே கைது செய்தார். வைகோ கைது செய்யப்பட்ட காட்சி இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்புகையில், விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி மாதிரி கைது செய்யப்படுகிறார். போலிஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்ல "ஆணவக்காரியின் ஆட்சி ஒழிக" என்று கோஷமிட்டவாறே கம்பி போட்ட வாகனத்துக்குள் சென்றார்.
அகில இந்தியாவும் அமைதியாக கைகட்டி வேடிக்கைப் பார்க்க கலைஞர் மட்டுமே பதறினார். உடன்பிறப்பு ஆயிற்றே? ஆட்சியிலிருந்த பாஜகவோடு பொடாவில் முரண்பட்டார். திமுகவின் மத்திய அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கர்ஜித்தார்கள். வேலூர் சிறைக்கு நேராக சென்று வைகோவுக்கு ஆறுதலும் சொன்னார் கலைஞர். ஒருவழியாக 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வைகோ உள்ளிட்டவர்கள் வெளியில் வந்தார்கள். உள்ளே இருந்தபோது ஆதரவளித்த கலைஞருக்கு (நெடுமாறன் தவிர்த்து) நன்றியோடும் இருந்தார்கள். வைகோ, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார்.
இது பழைய கதை.
2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்று அவர்களது கட்-அவுட்டுகள் மாநாட்டு முகப்பில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. திமுகவினருக்கு இயல்பாகவே வைகோ மீது பாசம் அதிகம் என்பதால் 'கலைஞரின் போர்வாளுக்கு'தான் வரவேற்பு தொண்டர்கள் மத்தியில் அதிகம். மாலை நடைபெறும் நிகழ்வில் வைகோ பங்கேற்பார் என்று அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து மதிமுகவினரும் திரளாக வந்திருந்தனர்.
மாலை வைகோ வரவில்லை. மதிமுகவினர் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர். மாநாட்டு முகப்பில் திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவரது படம் ஒட்டிய சுவரொட்டிகளை நகரெங்கும் கிழித்து எறிந்தனர். ஏனெனில் அன்று மதியம் வைகோ, போயஸ் தோட்டம் சென்று அன்பு சகோதரியோடு 35 சீட்டுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தை செய்திருந்தார் வைகோ.
திமுக கூட்டணியை விட்டு அவர் வெளியேற அப்போது சொன்ன காரணம் இருபத்தியொன்று.
ஆம். திமுக இருபத்தியொன்று சீட்டுகள் மட்டுமே தர முன்வந்ததால் அன்புச்சகோதரியோடு தேர்தலை சந்திக்க முடிவெடுத்ததாக சொன்னார் (திமுகவே அப்போது மொத்தமாக 132 சீட்டுகளில்தான் போட்டியிட்டது). இந்த அடாத முடிவினை மதிமுக தொண்டர்களை சுலபமாக ஒப்புக்கொள்ள வைக்க அவரால் முடிந்தது. ஒரே ஒருவரை மட்டும் அவரால் சமாதானப்படுத்த இயலவில்லை. கலிங்கப்பட்டிக்கே நேராக சென்று அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் வைகோவை ஈன்றெடுத்த அன்னையார். மகனை வெஞ்சிறையில் போட்ட சீமாட்டியுடனேயே, அதே மகன் தேர்தல் களம் காண்பதை அந்த தாயுள்ளத்தால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
இதோ ஐந்தாண்டுகள் கழிந்துவிட்டது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது.
இப்போதும் காரணம் அதே இருபத்தியொன்று.
அன்று கலைஞர் தருவதாக சொன்ன இருபத்தியொன்றை வைகோ உதாசீனம் செய்தார். இன்று புரட்சித்தலைவியிடம் அதே இருபத்தியொன்றை மட்டுமாவது தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியும், அம்மாவின் மனம் இரங்கவில்லை. கடைசிவரை காக்க வைத்து கழுத்தறுத்திருக்கிறார்.
இப்போதும் வைகோ கலிங்கப்பட்டிக்கு விரைகிறார், அன்னையின் திருமுகத்தை காண. ஒருவேளை ஐந்தாண்டுகளுக்கு முன்பு அன்னையின் உள்ளத்தை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்பதற்காகவும் இருக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)