13 ஜூன், 2011

ஆரண்ய காண்டம்

படத்தில் ‘கதைஎன்கிற வஸ்து இல்லாததாலேயோ என்னவோ, தலைப்பிலேயே முழு கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாடு ஒரு காடு, மனிதர்கள் விலங்குகள் இதுதான் ஒரு வரி கதை. இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் இருப்பவன், எதை வேண்டுமானாலும் பெற முடியும் என்கிற எளிய சூத்திரம் இறுதியில் வலியுறுத்தப்படுகிறது.

சினிமா என்பது ஒரு கதைசொல்லி ஊடகம் என்று தமிழ் சினிமாவின் முன்னோடிகள் அவசர அவசரமாக முடிவெடுத்திருக்கிறார்கள். தமிழில் சினிமா வந்து எண்பதாண்டுகள் கழித்து, ‘இல்லை. சினிமா என்பது ரசிகனுக்கு அனுபவத்தை ஏற்படுத்தும் ஊடகம்என்று ஆரண்ய காண்டம் அழுத்தம் திருத்தமாக மறுத்திருக்கிறது.

இப்படம் எந்த கதையையும், கருத்தையும் வலியுறுத்தவில்லை. முதல் காட்சி தொடங்கி, இறுதிக்காட்சி வரை உங்களுக்கு பிரேம்-பை-பிரேமாக வழங்குவது காட்சியனுபவத்தை மட்டுமே. முதல் காட்சி, அடுத்தக் காட்சிக்கு சங்கிலிப் பிணைப்பாக இருக்க வேண்டும் என்பது அழுத்தமான விதி. அனாயசமாக இவ்விதியை உடைத்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. லீனியர் அல்லது நான்லீனியர் என்கிற இரண்டே சாத்தியங்கள் கொண்ட திரைக்கதை கட்டமைப்பை, அசால்ட்டாக odd வரிசையில் அடுக்கியிருக்கிறார் (வானம் படத்தில் மொக்கையான காட்சிகளால் சப்பையாகிவிட்ட மேட்டர் இது).

கமல்ஹாசனும், விக்ரமும் நடித்திருக்க வேண்டிய படம். நம்ம ஷோதான் நல்லா இருக்காதேஎன்பதால் ஜாக்கிஷெராப்பும், சம்பத்தும். தனக்கு தொடர்பே இல்லாத கலாச்சாரத்தை கூட நன்கு உள்வாங்கி, சிறப்பான திறமையை நல்ல நடிகனால் வெளிப்படுத்த இயலும் என்பதற்கு ஜாக்கி நல்ல உதாரணம்.

படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறையாளர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், வசனங்கள் மூலமாக அக்குறையை போக்க இயக்குனர் முற்பட்டிருக்கிறார். நிழல் காரியங்களில் ஈடுபட்டிருக்கும் கும்பலின் தலைவனுக்கு முதுமை ஏற்படுகிறது. துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கிறார். அவரது தளபதியாக இயங்கும் இளைஞன், ஒரு கட்டத்தில் “டொக்கு ஆயிட்டீங்கஎன்கிறான். அவசரத்தில், ஆத்திரத்தில் உதிர்க்கப்பட்ட இந்த டொக்குஎன்கிற சொல்தான் படத்தின் காட்சி விளைவுகளுக்கான மையப்புள்ளி.

அவசரக் காரியமாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் சம்பத்திடம், அவரது மனைவி “என்ன சமையல் செய்யட்டும்?” ரேஞ்சில் கைப்பேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார். எரிச்சலோடு ஏதோ சமாதானப்படுத்தும் பதிலை சொல்லி அழைப்பை நிறுத்துகிறார். கூட இருக்கும் சகா கேட்கிறான். “அண்ணியா?”. சம்பத்தின் பதில் “சுண்ணி”.

‘டொக்குஎன்று நாலு பேர் மத்தியில் விமர்சித்துவிட்ட சம்பத்தை முடித்துவிட, அவனது சகாக்களுக்கே ஆணையிடுகிறார் ஜாக்கி. அவர்களிடமிருந்து சம்பத் தப்ப, முன்காட்சியில் ‘அண்ணியா?என்று கேட்டவனே, “கஸ்தூரியை தூக்கிடுறோம் பசுபதிஎன்கிறான். சொன்னபடியே தூக்கிவிடுகிறான். சம்பத் இப்போது ஜாக்கியை போனில் அழைக்கிறார். ‘ஹலோவுக்குப் பதிலாக அவர் போனில் சொல்லும் முதல் வார்த்தை “தேவடியாப் பையா”. படம் முழுக்க இப்படியான வசனங்கள்தான். படத்தின் எடிட்டரை விட தணிக்கை செய்த அதிகாரிகள்தான் அதிகம் உழைத்திருக்கிறார்கள்.

மெட்ராஸ் பாஷையென்றாலே தமிழ் சினிமா வசனகர்த்தாக்களுக்கு லூஸ்மோகன் பாஷைதான். இந்த வழக்கத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி, ‘ஓரம்போ படத்தில் தாறுமாறாக தகர்த்து எறிந்தார்கள். அந்தப் படத்தைவிட இதில் வசனங்களின் துல்லியம் கூடியிருக்கிறது.

இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சகலமும் சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இசை. நாயகியின் அறிமுக காட்சியிலும், நாயகன் ‘ஐ லவ் யூ சொல்லும் காட்சிகளிலும் இதுவரை நாம் கேட்ட இசையை, ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளுக்கு அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. படத்தின் முக்கியக் காட்சியான சேஸிங் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் ஒற்றை புல்லாங்குழல் க்ளாசிக்.

அளவாக பயன்படுத்தப்பட்ட காமம், தேவையில்லாத செண்டிமெண்ட் – அழுகையை தவிர்த்திருப்பது, கலையாக கைக்கொள்ளப்பட்டிருக்கும் வன்முறை, இயல்பாக நடித்திருக்கும் நடிகர்கள், எளிமையான காட்சிகள், அதே நேரம் ரிச்லுக் படமாக்கம் என்று படம் பார்க்கும் ரசிகனின் மூளைக்கு ஃப்ரெஷ்ஷான சமாச்சாரங்கள்.

குவென்டின் டொரண்டினோ பாணியிலான திரைக்கதை யுக்தி. இதையெல்லாம் பல்ப் ஃபிக்‌ஷனிலேயே பார்த்துவிட்டோம் என்று படம் பார்த்த சில நண்பர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். பல்ப் ஃபிக்‌ஷனை பார்க்காத தமிழர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே தொண்ணூறு லட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்றி மூன்று. எனவே ஆரண்ய காண்டம் அடித்துப் பிடித்து ஓடினால், ஆச்சரியப்பட ஏதுமில்லை.


எச்சரிக்கை : அடுத்த சில நாட்களில் அறிவுஜீவி திரைப்பார்வையாளர்கள் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், இயக்குனரே சிந்தித்திராத குறியீடுகளை எல்லாம் எடுத்தியம்பி, உங்களை கதறக் கதற கற்பழிக்கப் போகிறார்கள், ஜாக்கிரதை.

10 ஜூன், 2011

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.

(நன்றி : புதிய தலைமுறை)

கல்விக்காக ஏந்தப்பட்ட உயிராயுதம்!

கலப்பு மணம் செய்துக்கொண்ட காதல் தம்பதிகள் அவர்கள்.

ஆரம்பத்தில் எல்லாமே மகிழ்ச்சியாகவே கழிந்தது. நல்லறமான இல்லறத்துக்கு சாட்சியாக அழகிய மகன் பிறந்தான்.

தர்மராஜ் பஞ்சாலை ஒன்றில் கடைநிலைத் தொழிலாளி. கெட்டப்பழக்கம் எதுவுமில்லை. வாங்கும் சம்பளத்தை அப்படியே மனைவி சங்கீதாவிடம் தந்துவிடுவார். குழந்தை பிறந்தபிறகு பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகரித்தது. எல்லா ஏழை பெற்றோருக்கும் இருக்கும் அதே கனவுதான். மகனை டாக்டராகவோ, என்ஜினியராகவோ, ஐ.ஏ.எஸ்.ஸாகவோ, ஐ.பி.எஸ்.ஸாகவோ கற்பனை செய்து மகிழ்ந்தார்கள்.

கல்வி ஒன்றே தங்கள் குடும்பத்தை கரை சேர்க்கும் என்று நம்பினார்கள். மகனுக்கு நல்ல கல்வியை வழங்கியாக வேண்டும். தர்மாராஜின் சொற்ப சம்பளம் போதாது. சங்கீதாவும் வேலைக்கு போக ஆரம்பித்தார்.

குழந்தை தர்ஷனை கோவை உப்பிலிப்பாளையத்தில் இருக்கும் பெயர்பெற்ற ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். எல்.கே.ஜி. கட்டணத்தை கட்டி முடிக்கவே பெற்றோருக்கு இடுப்பு ஒடிந்து விட்டது.

இந்த வருடம் யூ.கே.ஜி.யும் தேறிவிட்டான். முதல் வகுப்புக்கு சென்றாக வேண்டும். சீருடை, புத்தகங்களோடு பள்ளிக்கட்டணமும் கட்டியாக வேண்டும். கட்டணம் மட்டுமே பண்ணிரெண்டாயிரம் ரூபாய். தர்மராஜ், சங்கீதா இருவரின் ஒரு மாத சம்பளத்தையும் விட இந்தத் தொகை அதிகம்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கினார்கள். ஐயாயிரம் ரூபாய் வரைதான் சேர்க்க முடிந்தது. இன்னும் ஏழாயிரம் தேவை. முழி பிதுங்கிப் போனார் தர்மராஜ். ஒன்றாம் வகுப்பு சேர்க்க கூட வக்கற்றுப் போனோமே என்று வருத்தத்தில் ஆழ்ந்தார்கள் பெற்றோர். பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

குஞ்சுக்கு ஆபத்து என்றால் தாய்ப்பறவை சீற்றத்தோடு காணப்படுவது இயற்கைதான். இந்த தாய் இயலாமை காரணமாக வேறு முடிவு எடுத்தாள். சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் தலை மீது ஊற்றிக் கொண்டாள். தீக்குச்சியை பற்றவைத்தாள். மகனின் கல்வி மீது பெருங்கனவு வைத்திருந்த அந்த தாய் ஊழித்தீயாய் ஜெகஜ்ஜோதியாய் எரிந்தாள். தடுக்க நினைத்த காதல் கணவருக்கும் பெரும் தீக்காயம். சங்கீதாவின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. எரிந்தது சங்கீதாவின் உடல் மட்டுமல்ல. அவரது மகன் தர்ஷனின் எதிர்காலமும்தான். கடந்த வாரம் கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தில் நடந்த சம்பவம் இது.

எங்கே போகிறோம் நாம்?

குழந்தைகளின் கல்விக்காக உழைப்பை, உடமைகளை இழந்து வந்த பெற்றோர் உயிரையும் இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோரின் வயிற்றில் பற்றியெறிந்துக் கொண்டிருக்கும் தீ இது.

சங்கீதாவின் உயிர் எப்படியும் திரும்ப கிடைக்கப் போவதில்லை. எனினும் இன்னொரு சங்கீதா உயிராயுதத்தை கல்விக்காக ஏந்திவிடக்கூடாது என்கிற அக்கறையால் இரண்டு விஷயங்களை முதன்மையாக சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

1) ஒன்றாவது படிக்கும் மாணவனுக்கே 12,000 ரூபாய் கட்டணம் வாங்கும் அளவுக்கு ஒரு பள்ளி கோவையின் புறநகரில் இருக்கிறது. ஒருவேளை இது ஐந்து நட்சத்திர விடுதியின் வசதிகள் அடங்கிய பள்ளியாக இருக்குமோ? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக தனியார் பள்ளிகள் கட்டணம் வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கல்வித்துறை அதிகாரிகள் என்னத்தைதான் அங்கே கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்?

2) தர்மராஜ் – சங்கீதா போன்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்? அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க என்ன காரணம்? தவறு பெற்றோர் மீதா, அல்லது தரமான அருகாமைப்பள்ளிகளை உருவாக்காத அரசாங்கத்தின் மீதா?

குடிமக்களான நாம் சிந்திக்க மட்டுமே முடியும். முடிவெடுக்க வேண்டியதும், செயலாற்ற வேண்டியதும் அரசாங்கம்தான்.

8 ஜூன், 2011

வீட்டில் மாணவர். வகுப்பில் ஆசிரியர்!

பொருளாதாரப் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் ஆல் பாஸ். வகுப்பெடுக்க ஆசிரியரே இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் ரங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர்.

ரெங்கசமுத்திரம், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் இருக்கும் ஊர். இங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள். ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள். தங்கள் குழந்தைகளின் கல்வித்தேவைக்காக அரசுப்பள்ளிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்.

இத்தகைய பின் தங்கிய சூழலில்தான் ரெங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வருடா வருடம் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியரோடு சேர்த்து 25 ஆசிரியர்கள்தான் பணிபுரிகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கே மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால் அறிவியல் பாடப்பிரிவு மட்டுமே எடுக்க முடியும். ஏனெனில் அப்பாடங்களை நடத்த மட்டும்தான் அரசு நியமித்த ஆசிரியர்கள் இருந்தார்கள். பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகம், கலைப்பாடப்பிரிவும் (arts) தங்கள் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியது. 3rd க்ரூப் எனப்படும் கலைப்பாடப்பிரிவு, அரசு உதவியின்றி இப்படித்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது.

பாடம் எடுக்க ஆசிரியர்கள்?

உதாரணத்துக்கு ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணி. இவர் தானே முன்வந்து வணிகம் மற்றும் அக்கவுண்டன்சி பாடம் எடுக்க விரும்ப்பம் தெரிவித்தார். இவரைப் போலவே மற்ற ஆசிரியர்களும், வழக்கமான தங்கள் வேலையோடு, பணிக்கப்படாத வேலையையும் ஊதியமின்றி மாணவர்களுக்காக கூடுதலாக செய்ய முன்வந்தார்கள். வழக்கமான பள்ளி நேரம் முடிந்தும், மேல்நிலை மாணவர்களுக்காக கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடம் நடத்தினார்கள். சனி, ஞாயிறுகளில் மேல்நிலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்த ஆரம்பித்தார்கள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் விடுமுறையே இல்லை.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சில பாடங்களுக்கு மட்டும் தனியார் ஆசிரியர்களை ஊதியத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பொருளாதாரப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தி வந்த தனியார் ஆசிரியருக்கு, வேறு வேலை கிடைத்துவிட்டதால் பாடமெடுக்க ஆளில்லை.

கையைப் பிசைந்து, கலங்கி நின்றார் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன். சுமார் 70 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ?

ராமகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதியும் ஒரு ஆசிரியர்தான். அவர் அருகிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார். பொருளாதாரப் பாடம் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். கணவர் பணிபுரியும் பள்ளியின் நிலையறிந்து உதவ முன்வந்தார். தனக்கு விடுமுறையாக கிடைக்கும் சனி, ஞாயிறுகளை கணவரின் பள்ளிக்காக தியாகம் செய்தார். மற்ற நாட்களில் காலையில் இவரிடம் பாடம் படித்துவிட்டு சென்று, வகுப்பறையில் அதே பாடத்தை எடுப்பாராம் தலைமை ஆசிரியர்.

“மாணவனாக இருப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை. என்னுடைய மாணவர்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுத்தேயாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டபோது, நானே வீட்டில் மாணவனாகவும், பள்ளியில் ஆசிரியனாகவும் அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது. மனைவியாக இருந்தாலும், ஆசிரிய கண்டிப்போடே பாடம் எடுத்தார் சரஸ்வதி.

எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது நேரத்தை தியாகம் செய்து, மாணவர்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியராக என் பங்கினை நான் செய்ய வேண்டாமா?” என்கிறார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் – சரஸ்வதி ஆசிரியத் தம்பதியினரின் உழைப்புக்கு பலன் தேர்வு முடிவுகளில் கிடைத்தது. எல்லா மாணவர்களுமே வெற்றி. கூடுதல் போனஸாக ஒரு மாணவி 200க்கு 200 மதிப்பெண் எடுத்தும் சாதனை புரிந்தார். பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் 97. Pure science எனப்படும் பாடப்பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவிலும் 100 சதவிகித தேர்ச்சி.

“எங்கள் பள்ளிக்கு கிடைத்த அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் மாதிரி, வேறு எந்தப் பள்ளிக்கு கிடைத்தாலும் இதே போன்ற சாதனை உறுதி. மாணவர்களும் ஆசிரியர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்தார்கள்” என்று சிலிர்த்துக் கொண்டார் தலைமை ஆசிரியர்.

மாவட்ட கல்வி நிர்வாகமும், ரெங்கசமுத்திரம் பள்ளியின் கல்வி எழுச்சிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. அடிக்கடி பள்ளிக்கு அதிரடி விசிட் அடித்து, கல்வித்தரத்தை பரிசோதித்து வருகிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார். “நான் செல்லும் பள்ளிகளில் எல்லாம் ரெங்கசமுத்திரம் பள்ளியை உதாரணமாக காட்டி பேசுவேன். எல்லா அரசுப் பள்ளிகளுமே இதேமாதிரியான தரத்தினை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்கிறார் செல்வகுமார்.

ராமகிருஷ்ணன் மாதிரி தலைமை ஆசிரியர் வாய்த்தால் எதுவுமே சாத்தியம்தான்!

(நன்றி : புதிய தலைமுறை)

வேம்புலி!

வேம்புலியை முதன்முதலாக பார்த்தபோது எனக்கு வயசு ஆறு அல்லது ஏழுதான் இருக்கும். வேம்புலிக்கு அப்போதே வயது நாற்பதுக்கும் மேல் இருக்கலாம். முன்மண்டையில் முடி சுத்தமாக இருக்காது. பின்மண்டை முடி பஞ்சு பஞ்சாக பறந்துகொண்டே இருக்கும். நைஜீரிய நிறம். நாகேஷ் உடல்வாகு. காக்கிச்சட்டை, காக்கிபேண்ட். பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் வேளச்சேரிக்கு அந்தப் பக்கமாக இருந்ததெல்லாம் பள்ளிக்கரணை சதுப்புநிலக் காடுகள் என்றுதான் சென்னைவாசிகளுக்கு தெரியும். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு பின்வந்த ஆளுநர் ஆட்சி சென்னைநகரை விரிவாக்கிக் கொண்டிருந்தது. மடிப்பாக்கத்தையும், வேளச்சேரியையும் இணைத்துக் கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையை வேளச்சேரி மெயின்ரோடாக புனரமைத்துக் கொண்டிருந்தது. லேசுபாசான வேலையல்ல அது.

முதற்கட்டமாக செம்மண் சாலை அமைத்து சைதாப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்துக்கு பஸ் விட்டது. ரூட் எண் 51E. வேம்புலிதான் முதல் அதிகாரப்பூர்வ ஓட்டுநர் என்பதாக எனக்கு நினைவு இருக்கிறது.

கோக்குமாக்காக ஓட்டுவார். ஒரு பஸ் சாலையில் வந்தால் எதிரில் இன்னொரு வாகனத்துக்கு வழியே இருக்காது. சைக்கிளில் வருபவராக இருந்தாலும் கூட சாலையை விட்டு இறங்கியாக வேண்டும். இருபுறமும் வேலிகாத்தான் முட்புதர்கள் நிறைந்திருக்க, ஆளேயில்லாத ஓட்டை உடைசலான பச்சைநிற பேருந்தை செம்மண் புழுதிப் பறக்க ஸ்டைலாக வாயில் பீடியை செருகியபடி வேம்புலி ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக ஒடித்து ஓட்டும் அழகுக்கு பாரதரத்னா விருதையே வழங்கலாம்.

பல்லவன் போக்குவரத்துக் கழகம் நகருக்குள்ளான குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருந்த நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டிருந்த காலம். ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் கிராமத்து நாட்டாமைகளும், தலையாரிகளும், தலைவர்களும், இன்னபிற அல்லக்கைகளும் கொடுத்த தொல்லை கொஞ்சநஞ்சமல்ல.

உதாரணத்துக்கு நம் வேம்புலிக்கு பூந்தமல்லிக்கு பக்கத்தில் எங்கோ குக்கிராமத்தில் கிடைத்த அனுபவத்தையே பார்ப்போமே? 51Eக்கு வருவதற்கு முன்பாக அந்த ரூட்டில்தான் தலைவர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாராம். ஏதோ ஒரு கிராமத்தை கடக்கும்போது, அங்கிருந்த பஞ்சாயத்துத் தலைவர் சொன்னாராம். “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ட்ரைவரு. எம் பொண்டாட்டியை சினிமாவுக்கு கூட்டிட்டுப் போவணும். புடவை கட்டிக்கிட்டு இருக்கா”

கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் புடவை கட்டுவதென்பது திருவிழாதானே? அதுவும் புருஷனோட மவுண்ட்ரோட்டில் படம் பார்க்கப் போகும் பெண் கும்பமேளா ரேஞ்சுக்கு ரசித்து ரசித்து கொசுவம் வைத்துக் கொண்டிருந்திருப்பார் போல. ஐந்து நிமிடம் காத்திருந்தும் பஞ்சாயத்துத் தலைவரின் மனைவி வந்து சேரவில்லை. இளைஞராக இருந்த வேம்புலிக்கு செம டென்ஷன். ஒரு கவர்மெண்டு ஸ்டாஃபையே ஒரு பொம்பளைக்காக வெயிட் பண்ண வைக்கிறானுங்களே என்ற அறச்சீற்றத்தில் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஆக்ஸிலேட்டரை ஆத்திரத்தோடு மிதித்திருக்கிறார். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் உணரவில்லை.

‘நம்ம ஊரு தலைவருக்கு கவர்மெண்டு கொடுக்குற மரியாதை இவ்ளோதானா?’ என்று அந்த ஊரே கொதித்துப் போய் கலவரபூமியாகி இருக்கிறது. மறுநாள் திரும்ப அதே ரூட்டுக்கு வேம்புலி போகும்போது நூற்றுக்கணக்கானோர் பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில் சாலையில் ‘சாமான்களோடு’ குழுமியிருக்கிறார்கள். வேம்புலியையும், கண்டக்டரையும் லேசாக இரத்தம் வருமளவுக்கு தட்டிவிட்டு, பேருந்தை அடித்து நொறுக்கி துவம்சப் படுத்தியிருக்கிறார்கள். ‘தலைவர் பொண்டாட்டி வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாத பஸ்ஸூ நமக்கு இருந்தா என்னா? இல்லாங்காட்டி என்னா?’

அதன்பிறகு பல வருட காலங்களுக்கு அந்த ரூட்டுக்கு பல்லவன் போக்குவரத்துக் கழகம் பேருந்தே விடமுடியவில்லையாம். பொதுமக்களுக்கும், கழகத்துக்கும் இடையே இருந்த நல்லுறவைக் கெடுத்த குற்றத்துக்காகதான் வேம்புலியை தண்ணியுள்ள காட்டில் பணி செய்ய மடிப்பாக்கத்துக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சவால்கொண்ட வரலாற்றுப் பின்னணியோடு கூடிய காலக்கட்டத்தில்தான் வேம்புலி பணிபுரிந்தார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மடிப்பாக்கம் மட்டும் அவரை நிம்மதியாக விட்டு வைத்திருக்குமா என்ன? இங்கேயும் ஏகப்பட்ட கூத்துகள். சைதாப்பேட்டையில் கால்நடை மருத்துவமனை ஒன்று உண்டு. ஆடு, கோழி மாதிரியான விலங்குகளுக்கு சீக்கு வந்துவிட்டால், அதன் உரிமையாளர் சைக்கிளில் கட்டிக் கொண்டு வருவார். மாடுகளுக்கு சீக்கு வந்தால்? அப்படியே பண்ணிரெண்டு கிலோ மீட்டர் ஓட்டிக் கொண்டு வரவேண்டியதுதான். ஊருக்குதான் பஸ் வந்துவிட்டதே? சீக்கு வந்த எருமை மாடுகளையும் பஸ்ஸில் ஏற்றியாக வேண்டும் என்று மடிப்பாக்கம் மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். முந்தைய அனுபவங்களால் நொந்துப் போயிருந்த வேம்புலி எருமைகளை ஏற்றிக்கொண்டு போக ரெடி. ஆனால் எருமைகள் பஸ்ஸில் ஏற தயாராக இல்லையே? அதுமட்டுமல்லாமல் ‘பஸ் வர்றது வசதியாதானிருக்கு. ஆனா படிக்கட்டு ரொம்ப உயரமா இருக்கு!’ என்று அதிருப்தி அடைந்தார்கள் பொதுமக்கள். அப்போது ஊரில் இருந்த பெண்களில் அதிகபட்ச உயரம் கொண்டவரே நாலேமுக்கா அடிதான்.

இதுமாதிரியான பிரச்சினைகளுக்கு நடுவேயும் வேம்புலி பணிவிஷயத்தில் சிறப்பாகவே செயல்பட்டார் என்று நம்புகிறேன். பேருந்து நிலையம் இருந்த இடத்துக்கு அருகேதான் பஞ்சாயத்து அலுவலகமும் இருக்கும். பயணிகளை ஏற்றிக்கொள்ள காத்திருக்கும் நேரத்தில் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வேம்புலி செல்வார். அங்கிருந்த தலைவரோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. தலைவரோட ஃப்ரெண்டு என்கிற அந்தஸ்து வேம்புலிக்கு தெனாவட்டையும் தந்தது.

பயல்கள் யாராவது ஃபுட்போர்டில் தொங்கி அழும்பு செய்தாலோ, பஸ்ஸுக்குள் கலாட்டா செய்தாலோ உடனடியாக வேம்புலி சொல்லும் டயலாக் “டாய் ரொம்ப ஆடினீங்கன்னா தலைவர்கிட்டே சொல்லிடுவேன்”. தலைவர் கொஞ்சம் மென்மையானவர்தான். அவருக்கு அடாவடி இமேஜ் எதுவுமில்லை என்றாலும் அவர்மீதிருந்த மரியாதையால் இந்த டயலாக்கை கேட்டதுமே அடங்கிவிடுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல், தலைவரே இல்லாமல் மடிப்பாக்கம் பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்திலும் வேம்புலி இதே டயலாக்கையே சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை அந்த ஊர் தலைவர் நிரந்தரத் தலைவர்.

அப்போதிருந்த பஸ்கள் எல்லாம் பெரும்பாலும் பாடாவதி பஸ்கள். நீண்டதூர ரூட்டுகளில் ஓடி உழைத்து ரிட்டையர்ட் ஆன பஸ்களை மடிப்பாக்கம் ரூட்டுக்கு அனுப்புவார்கள். வாரத்துக்கு ஒருமுறையாவது எங்காவது உட்கார்ந்து கொள்ளும். பயணிகள் டிரைவரைதான் சபிப்பார்கள்.

மடிப்பாக்கம் ரூட்டுக்கு வந்தபிறகு அருகிலிருந்த வானுவம்பேட்டையில் நிலம் வாங்கி வீடு கட்டினார். காலையில் நாலு மணிக்கு ரெண்டு ரெண்டரை கிலோ மீட்டர் நடந்தே பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு செல்வார். டிரெயின் பிடித்து சைதாப்பேட்டையில் இறங்குவார். அங்கிருந்து ஒன்று ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும் சின்னமலை பஸ் டிப்போவுக்கு நடந்து சென்று ஐந்தரை மணிக்கு வண்டியை எடுப்பார். வேம்புலி தீவிரமான அம்மன் பக்தர். எப்போதுமே பர்ஸ்ட் ஷிப்ட்தான் ஓட்டுவார். காலையில் வண்டியை எடுத்ததுமே நேராக சைதாப்பேட்டை பஸ்ஸ்டாண்டில் இருக்கும் பிடாரி இளங்காளியம்மன் கோயில் வாசலில் நிறுத்துவார். அம்மனுக்கு ஒரு கற்பூரம் ஏத்திவிட்டுதான் அன்றைய வேலையை தொடங்குவார். ரெண்டு ரெண்டரை மணிக்கு வேலை முடியும்.

காலை நாலு மணியிலிருந்து ரெண்டு ரெண்டரை மணி வரை நீங்கள் இதுவரை பார்த்த வேம்புலி வேறு. அதற்குப் பிறகு பார்க்கப் போகும் வேம்புலி வேறு. நல்ல டிரைவரான வேம்புலிக்கு இருந்த ஒரே கெட்டப்பழக்கம் குடி.

ட்யூட்டி முடிந்ததுமே அவர் ஆர்வமாக நாடிச்செல்லும் இடம் சைதாப்பேட்டை சப்வே பக்கமாக இருந்த ஒயின்ஷாப்பாக இருந்தது. கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு அலம்பல் செய்வார். கண்ணுக்கு பட்ட பஸ்ஸில் எல்லாம் ஏறி டிரைவர்களோடும், கண்டக்டர்களோடும் வம்புக்குப் போவார். எல்லாருக்கும் ஆபாச அர்ச்சனைதான். வேம்புலியை தெரிந்தவர்கள் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போனார்கள். ஒருமுறை நல்ல மப்பில் டிப்போவுக்கு போய் அங்கிருந்த அதிகாரியை அடித்துவிட்டு சஸ்பெண்ட் கூட ஆனதாக சொல்வார்கள். வீட்டுக்கு இரவு பத்து, பதினோரு மணிக்குதான் போவாராம். அவர் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரும் சொன்னதில்லை.

நகர விரிவாக்கத்தால் மடிப்பாக்கம் நாகரிகமடையத் தொடங்கியது. முன்புபோல இல்லாமல் நிறைய பஸ்கள். கிராமத்தின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. முன்பெல்லாம் ஊரில் இருக்கும் எல்லாரையுமே வேம்புலிக்கு தெரியும். இப்போது வேம்புலியின் பயணிகள் பெரும்பாலானவர்கள் அவர் அறியாதவர்களாகவே இருந்தார்கள்.

வேம்புலியோடு எனக்கு ஒரு நான்கைந்து வருடங்கள் நெருக்கமான நட்பு இருந்தது. போய்யா வாய்யா என்று கூப்பிடுமளவுக்கு. பஸ் பாஸ் எடுத்துவர அடிக்கடி மறந்துப்போய்விடும் வயது அது. ‘பரவாயில்லை. டிக்கெட் எடுக்காதே. அதுக்குப் பதிலா பான்பராக் வாங்கி கொடுத்துடு. செக்கிங் வந்தானுங்கன்னா நான் பார்த்துக்கறேன்’ என்பார். பயணிகளிடம் அவர் பெற்ற அதிகபட்ச கையூட்டு பான்பராக்தான்.

அவர் சில வேளைகளில் செகண்ட் ஷிப்ட் அடிஷனலாக நண்பர்களுக்காக பார்ப்பதுண்டு. ஒருநாள் இரவு 10.10 பஸ்ஸை எடுத்தார். இன்ஜினிக்கு பக்கத்தில் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சரக்கு விட்டிருந்தாரா தெரியவில்லை. 10.25க்கு மடிப்பாக்கம் வந்துவிட்டார். வழியில் ஓரிரு நிறுத்தங்களில் இத்தனைக்கும் பஸ் நின்றது. அனேகமாக அந்த ரூட்டிலேயே வேகம் அடிப்படையில் இதுதான் உச்சபட்ச சாதனையாக இருக்கும் என்று நினைக்கிறேன். மோசமான சாலை காரணமாக அப்போதெல்லாம் சைதை டூ மடிப்பாக்கம் செல்ல பஸ்ஸில் 45 நிமிடங்கள் ஆகும். இப்போதெல்லாம் சாலை பக்காவாக இருக்கிறதென்றாலும் சில நேரங்களில் போக்குவரத்து காரணமாக ஒன்றரை மணி நேரம் கூட ஆவதுண்டு.

ரன்னிங்கில் இருக்கும் பஸ்ஸை எப்படி ஒரு பயணி சுலபமாக நிறுத்துவது என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். “பொதுவா கைய நேராக்கா நீட்டுனா நிறுத்த மாட்டானுக. பீச்சாங்கையை இடுப்புக்கு கீழே நல்லா எறக்கி மேலும் கீழும் வேகமா ஆட்டணும். அப்படி ஆட்டுன்னா நீ டிபார்ட்மெண்ட்காரன் இல்லேன்னா போலிஸ்காரன்னு நெனைச்சி நிறுத்துவானுங்க. இதுதான் டெக்னிக்”

நிஜமாகவே இப்படி ஒரு கோட் சிக்னல் இவர்களுக்குள் இருந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதனாலேயே ஸ்பெஷலாக சிலமுறை பஸ்ஸ்டேண்டை தாண்டிப்போய் நின்று ஓடும் பஸ்ஸை நிறுத்தி பரீட்சித்து பார்த்து உணர்ந்துகொண்டேன்.

வண்டி வாங்கியபிறகு நான் பஸ்ஸில் செல்வதே அரிதாகிவிட்டது. எப்போதாவது ஓரிருமுறை சென்றபோதும் கூட டிரைவர்களாகவும், கண்டக்டர்களாகவும் நிறைய புதுமுகங்கள் வந்திருந்ததை கண்டேன். வேம்புலி மாதிரியான சூப்பர்ஸ்டார்கள் ஃபீல்டிலேயே இல்லை. ஒன்று ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அல்லது எங்காவது மாற்றல் ஆகியிருக்கவேண்டும். கடைசியாக நான் வேம்புலியோடு சுற்றிக் கொண்டிருந்த காலங்களில் அவருக்கு கண்பார்வை கொஞ்சமாக மங்கத் தொடங்கியிருந்தது. எனவே விருப்ப ஓய்வு கூட பெற்றிருக்கலாம்.

ஒரு வருடம் முன்பாக பழைய பஸ் சகா ஒருவரை நந்தனத்தில் பார்த்தேன். F51, 51E, ஃபுட்போர்டில் தொங்கி என் மண்டை உடைந்தது என்று பசுமைக்கால பஸ் நினைவுகளை பேசிக்கொண்டிருந்தபோது வேம்புலியைப் பற்றியும் பேச்சு வந்தது. “அவர் செத்துட்டாரு தெரியுமா?” என்றதுமே கடுமையான அதிர்ச்சியையும், சோகத்தையும் ஒருசேர அடைந்தேன்.

எப்படி இறந்தார் என்று சகா சொன்னதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஒருநாள் நடுஇரவில் ஃபுல் மப்பில் சைதாப்பேட்டைக்கும், கிண்டிக்கும் இடையில் நடுரோட்டில் நின்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி கைகாட்டியிருக்கிறார். இதுபோல வேம்புலி மப்பில் அலம்பல் செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். சடன்பிரேக் அடித்து வேம்புலியை முட்டிக்கொண்டு கூட பஸ் நிற்கும். டிரைவரை ஆபாசமாக திட்டிக்கொண்டே பஸ்ஸுக்குள் ஏறுவார்.

துரதிருஷ்டவசமாக அன்றிரவு சாலையில் நின்று பஸ்ஸுக்கு கைகாட்டுவதாக நினைத்து, தண்டவாளத்தின் நடுவில் நின்று எலெக்ட்ரிக் டிரெயினுக்கு கைகாட்டியிருக்கிறார்.