ஒரு மாத கால மவுனத்தை கட்டுடைக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று. இன்று இதை பேசாவிட்டால், நாளையாவது பேசித் தொலைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டால் நாளன்னைக்காவது பேசியாக வேண்டும். திராவிட இயக்கத்துக்கு வாக்கப்பட்டு விட்ட ஒரே பாவத்துக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக தோற்றுவிட்டதைப் பற்றி நீ என்ன எழுதி கிழித்தாய் என்று இந்த சமூகம் தினம் தினம் குனியவைத்து கும்மிக் கொண்டிருக்கும்.
திமுக ஏன் தோற்றது?
கலைஞர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை திரும்ப திரும்ப இக்கேள்வியை தனக்குதானே கேட்டுக் கொண்டிருக்கிறான். இலவச டிவி கொடுத்தோம். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம். மளிகைப் பொருள் கொடுத்தோம். அவ்வளவு ஏன் தேர்தலில் ஓட்டுப்போட ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கூட கொடுத்தோம். அப்புறமும் ஏன் தோல்வி?
ஊடகங்கள் சில பட்டியல்களை தருகிறது. அறிவுஜீவிகள் வேறு பட்டியல்களை தருகிறார்கள். பொதுமக்கள் ஏதேதோ காரணங்களை அடுக்குகிறார்கள். கலைஞரோ 1950களின் ஸ்டைலில், பார்ப்பனர்களால்தான் தோற்றோம் என்கிறார். எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் இவரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், இந்த தேர்தலில் மட்டும் குறிவைத்து தோற்கடிக்க?
ரஜினிகாந்த் ஒருவரை தவிர தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும், சூரியனுக்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள். அப்படியென்றால் சூரியனுக்கு பட்டனை அமுக்க, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்ததா என்று மாண்புமிகு புரட்சித்தலைவிக்கே கூட சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இருநூறு இடம் தம் கூட்டணிக்கு கிடைத்ததை இன்னமும் நம்பாமல், “சசி.. என் கையை ஒருவாட்டி கிள்ளு...” என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாராம். எதிர்க்கட்சித் தலைவர் கேப்டனோ, இதெல்லாம் சோமபான மாயையோ என்று குழம்பி, அடிக்கடி முகத்தில் தண்ணீர் தெளித்து தான் நிதானமாக இருப்பதை உறுதி செய்துக் கொள்கிறாராம்.
மின்வெட்டு, ஈழப்பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், பல்வேறு தொழில்களில் குடும்ப ஆதிக்கம், மணல் கொள்ளை, சரமாரி ஊழல், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் குறுநில மன்னர் மனோபாவம், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அராஜகம் என்று ஆயிரம் காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிகச்சுலபமாக உடைக்க முடியும், அவையெல்லாம் தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்திருக்க முடியாதென்று.
உதாரணத்துக்கு மின்வெட்டை எடுத்துக் கொள்வோம். திமுகவுக்கு வாக்கு விழாததற்கு காரணமாக மின்வெட்டினை பொதுமக்கள் பலரும் பரவலாக சொல்லுவதை கேட்கமுடிகிறது. குறிப்பாக திமுக ஆண்ட காலத்தில் திருமணம் முடித்த பலரும், மாமனார் வீட்டில் முதலிரவில் கூட மின்சாரம் இல்லாததால் இருட்டில் தடவி, தட்டுத் தடுமாறி கடுப்பாகியிருக்கிறார்கள். மனைவியின் கையை பிடிப்பதாக நினைத்து, மாமியாரின் கையை (வேண்டுமென்றே?) பிடித்துவிட்ட அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளைகளும் கூட உண்டு. ‘துப்பு கெட்ட மனுஷா’வென்று முதல்நாளே பொண்டாட்டியிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாவமே திமுக ஆட்சியை தலைமுழுகியது என்பது ஒரு சாரார் வாக்கு.
தயவு தாட்சணியமின்றி இக்காரணத்தை எல்லாம் நீக்கிவிடலாம். ஆட்டைக்கே சேர்க்க வேண்டியதில்லை. மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் ஏதோ கடைசி இரண்டு வருடங்களில்தான் கிடாவெட்டு மாதிரி மின்வெட்டை போட்டுத் தள்ளியதாகவும், அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் தமிழ்நாட்டையே ஜெகஜ்ஜோதியாக வைத்திருந்தது மாதிரியான தொனி இந்த கணிப்பில் தெரிகிறது. ஆற்காட்டார் அமைச்சராக கையெழுத்திட்ட அடுத்த நொடியே கோட்டையிலேயே மின்வெட்டு நிகழ்ந்தது என்பதுதான் வரலாறு.
மின்வெட்டும், ஈழத்தமிழர் பிரச்சினையும் தேர்தலில் பாதிப்பு உண்டாக்கியிருந்தால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே திமுக, ‘கப்பு’ வாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லையே? அதென்ன கடைசி இரண்டு வருடங்களில்தான் இப்பிரச்சினை மக்களை புளியமரத்தை புளிக்காக உலுக்குவது மாதிரி உலுக்கியதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
தமிழகம் தழுவிய அளவில் தோழர்களை வைத்து, திமுக ஏன் தோற்றது என்கிற கேள்வியை முன்வைத்து ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தாலும், பெரிய மனது வைத்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகாவது கருத்துக் கணிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் என்று கமிஷனரை நாம் கேட்டுக் கொண்டோம். அவரிடமிருந்து உரிய பதில் வராததால் ‘மவுனம் சம்மதம்’ என்று எடுத்துக்கொண்டு நம்முடைய கருத்துக் கணிப்புப் படையினர் தமிழகமெங்கும் கரும்புத் தோட்டங்கள், வாய்க்கா வரப்பு, கண்மாய் கரையென்று இண்டு இடுக்கு விடாமல் புகுந்து கணிப்பெடுத்து, கள்ள ஜோடிகள் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய சில இடங்களிலும் கணிப்புக்காக நோட்டை நீட்டி, தர்ம அடி வாங்கியும் கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
இந்த கணிப்பில் எல்லாக் காரணங்களையும் ஓரம் கட்டி, ஒரு முக்கியமான காரணம் தெரிய வந்திருக்கிறது. இக்காரணத்தைப் பற்றி எந்த ஊடகமும், அறிவுஜீவிகளும் இன்னமும் வாய் திறக்காதது நமக்கு அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், அலுப்பையும் ஒருசேர அளிக்கிறது.
இம்முறை வாக்களித்தவர்களில் சுமார் 30 லட்சம் பேர் இளைஞர்கள். ஓட்டு போடும் மெஷின் என்பது எடை பார்க்கும் மெஷின் மாதிரி இருக்கும் என்று நினைத்து வாக்குச்சாவடிக்குப் போனவர்கள். கொளத்தூர் தொகுதியில் இளைஞர் ஒருவர் மெஷின் மீது ஏறிநின்று எடை பார்த்த காரணத்தாலேயே, அந்த மிஷினில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையில் தெரியாமல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடியான சம்பவம் நீங்கள் அறிந்ததே. இவர்களில் சுமார் 29 லட்சத்து தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது பேர் இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
இந்த இளைஞர்கள் அனைவருமே கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதிவிடுவாரோ என்று அஞ்சியே, அம்மா ஆட்சிக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார்கள். அம்மா ஆட்சிக்கு வந்தால் சசிகலா சத்தியமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையென்று சத்தியப் பிரமாணம் செய்து, ஒவ்வொரு இளைஞருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் நம்முடைய கருத்துக் கணிப்பின்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது (ஜாஃபர் சேட் என்னத்தைதான் உளவுத்துறையை வைத்து கணிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை)
இளைஞர்களின் அச்சம் நியாயமானதுதான்.
கலைஞரும் கொஞ்சம் நஞ்சமாகவா ஆடியிருக்கிறார்? கடந்த ஐந்து ஆண்டுகளில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் என்று புகுந்து விளையாடியிருக்கிறார் அல்லவா? வசனம் எழுதுவது மட்டுமன்றி சினிமா பிரத்யேகக் காட்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சினிமாக்காரர்களை ஹிட்லர் மாதிரி சித்திரவதையும் செய்திருக்கிறார். அந்த சித்திரவதைகளை நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பி, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனும் இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று சபதம் மேற்கொள்ளுமாறும் செய்திருக்கிறார்.
எந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமோ, இன்றுவரை ‘உளியின் ஓசை’ கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. ஆனால் பெண் சிங்கத்துக்கு இரையாகிவிட்டோம். ஒரு ஞாயிறு மதியம் அலுப்பாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, “தலைவரின் ஆணை. ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் ‘பெண் சிங்கம்’ பார்த்தே ஆகவேண்டும்” என்று கூறி, இளம்பெண்ணை கதற கதற கற்பழிக்க இழுத்துப் போவது மாதிரி இழுத்துக் கொண்டுப் போனார்கள் கட்சி நிர்வாகிகள். ஒரு நாடறிந்த பத்திரிகையாளனையே இப்படி கைதியாக்கி இழுத்துப் போனார்களே, சாதாரணத் தமிழ் இளைஞர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? இவர்கள் படுத்திய பாட்டை விட, கலைஞர் படத்தில் வசனம் எழுதி படுத்திய பாடு அமோகமானது. (படம் பற்றிய நம்முடைய திரைப்பார்வையை ஏற்கனவே விலாவரியாக எழுதியிருக்கிறோம். இங்கே அமுக்கி அவஸ்தைப்படவும்).
‘இளைஞன்’ திரைப்படத்தை காணும் விபத்தும் கூட இதேபோல நமக்கு தவிர்க்கவியலா சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டது. இளைஞனைப் பொறுத்தவரை கலைஞரின் வசனம் என்பதைவிட கொடுமையான விஷயம் கவிஞர் பா.விஜய் நாயகன் என்பதுதான். பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.
ஏதோ கலைஞர் ஆசைப்பட்டு வசனம் எழுதினார், படம் வெளியானது என்றில்லாமல் ஒரு நாளைக்கு 248 முறை கலைஞர் டிவியில் ட்ரைலர் காட்டியதும், படங்கள் அமோகமாக ‘அவதார்’ வசூலை முறியடித்துவிட்டதாக கலைஞருக்கு சில அல்லக்கைகள் கணக்கு காட்டியதும், நம் முப்பது லட்சம் இளைஞர்களையும் எரிமலையாய் குமுறச் செய்துவிட்டது. ரஜினியின் ரோபோவுக்கே 100வது நாள் போஸ்டர் ஒட்டப்படாத நிலையில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் ஆகிய படங்களுக்கு 100, 175, 250 நாட்களுக்கு போஸ்டர் அடித்து கும்மியடித்தார்கள் உடன்பிறப்புகள். கலைஞரும் நிஜமாகவே தனது படங்கள் ஓடுவதாக நினைத்து பொன்னர் சங்கர் என்கிற அடுத்த படத்துக்கும் உற்சாகமாக வசனம் எழுதிவிட்டார். நல்லவேளையாக தேர்தலுக்குப் பிறகே இப்படம் வெளிவந்ததால், திமுக 20 ப்ளஸ் சீட்டுகளையாவது வெல்ல முடிந்தது.
கலைஞர் மீண்டும் ‘தீரன் சின்னமலை’ என்கிற திரைக்காவியத்துக்கு எழுத்தோவியம் தீட்டவிருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே, அம்மா ஆட்சி வந்தும் கூட தங்களுக்கு விடிவுக்காலம் இல்லையா என்று இளைஞர்கள் மனம் வெதும்பி போயிருக்கிறார்களாம்.
கலைஞரே; தமிழினத் தலைவரே! கழகத்தையும் நாட்டையும் காக்கும் மாபெரும் பொறுப்பை அறிஞர் அண்ணா தங்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறார். சினிமா வசனம் எழுதுவதிலிருந்து உங்கள் பேனாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பிறகு, தமிழினமே தங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடப் போவதைப் பாருங்கள்.