3 அக்டோபர், 2011

புள்ளி

முழுமையாக வெள்ளையாக விரிந்த மனத்திரை பரப்பில் நட்டநடுவில் அணுவளவே வளர்ந்திருந்தது கரும்புள்ளி. முன்பொரு காலம் கண்டதைக் காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது. அல்லது குறைந்தது போல தெரிந்தது. இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி. புள்ளியின் வடிவம் என்பது வட்டம்தானா அல்லது எப்போது வைக்கப்பட்டாலும் வட்டவடிவிலேயே புள்ளி அமைவது யதேச்சையானதா என்று தெரியவில்லை.

கொஞ்சம் உற்று உன்னிப்பாய் கவனித்தால் தெரியும், புள்ளி மெதுவாய் வளர்பிறை போலவே வளர்ந்து வருவதை. வளர வளர கருமையின் அடர்த்தி குறையும். பழுப்பு நிறமாகும். அனிச்சையாய் இமைமூடி மீண்டும் திறக்கும்போது பாதி திரையை பழுப்பு வண்ணம் மறைக்கும். வட்டவடிவில், ஓரங்கள் மட்டும் கூர்மையாய் இல்லாமல் வெண் திரையோடு விளிம்பில் கரைந்து மறைவதாய் பரிணாமம் பெறும்.

இப்போது திரைமுழுக்க நிறைந்திருக்கும் பழுப்பு நிறத்தை நீங்கள் எங்கேயோ கண்டிருக்கலாம். தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமாக இருக்கலாம். தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமாகவும் இருக்கலாம். நினைவுபடுத்தி பார்க்க இயலாமல் மூளையெங்கும் கருந்திரையில் மஞ்சளும், பச்சையும், ரத்தச் சிவப்புமாக பூச்சி போன்ற வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய், மேலும் கீழுமாய் ஏதோ ஒரு வஸ்து நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில்.. இல்லையில்லை கோடிக்கணக்கில் ஓடிக்கொண்டேயிருக்கும்.

வெள்ளைத்திரை எப்போது பழுப்பானது, பழுப்பு எப்போது அடர்கருப்புக்கு மாறி வண்ண வண்ண பூச்சிகளாய் ஓடத்தொடங்கியது என்பது தெரியாது. ஓரிரு பூச்சிகளின் வடிவத்தை உற்றுநோக்கும்போது தெரிகிறது. இவ்வடிவத்தை இதற்கு முன்னால் கண்டிருக்கிறோம். ம்ம்ம்... நினைவுக்கு வருகிறது. தவளையின் அழுக்கான பஞ்சுப்பொதி போன்ற வெள்ளை முட்டையில் புதியதாய் பிறந்த தலைப்பிரட்டைகளின் வடிவமது. அறிவியலார் விந்துக்களில் இருக்கும் உயிரணுவும் இதே வடிவம் என்று படம் வரைந்து பாகம் குறித்திருப்பார்கள். சிறிய வாலுக்கு சற்றும் பொருந்தாத பெரியதலை, உடல் இருக்கிறதா, அல்லது தலைக்கு அடுத்ததுமே வாலா என்று யூகிக்க முடியாத வடிவம்.

தலைப்பிரட்டைகளின் இயங்கும் வேகம் மெதுவாக இயல்பாக அதிகரிக்கிறது. ஒவ்வொரு தலைப்பிரட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து குறுக்கும் நெடுக்கும், மேலும் கீழும் வேகவேகமாக இயங்க தலைப்பிரட்டை வடிவம் மாறி வண்ண ஒளிக்கீற்றுக்கள் மட்டும் திரைநெடுக ஓட, எந்த ஒரு புள்ளியிலும் கவனம் செலுத்த இயலாவண்ணம் எல்லாப் பக்கமும் ஒளிக்கீற்றுகள். பின்னணியில் இருந்த கருந்திரை எங்கே? எண்ணங்களை விட வேகமான ஒளிக்கீற்றுகள். காதடைப்பதைப் போன்று உணர்ந்தாலும் சத்தம் எதுவும், எங்கிருந்தும் வரவில்லை.

ஒளிக்கீற்றுகள் எதுவும் இப்போது குறுக்கும், நெடுக்குமாக ஓடவில்லை. ஒரே நேர்க்கோட்டில் எண் திசைகளிலும் பயணிக்கிறது. நேராக வரையப்பட்ட கோடுகளைப் போல பல வண்ணங்களில் ஒரே சீராக பல வண்ணக்கோடுகள். எந்தெந்த கோடு என்ன நிறம் என்பதை கவனிக்கும் முன்னர் கோடுகள் வளைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக வளையும் கோடுகள் முற்றிலும் வளைந்த பின்னர் வட்டநிறமாகிறது.

இப்போது சிறிதும், பெரிதுமாய் திரையை நிறைத்திருப்பது வண்ண வட்டங்கள். திரை நன்கருமையை மறந்து களங்கமில்லாத வெண்மையாகிறது. வட்டங்களோடு வட்டங்களாய் ஒவ்வொரு வட்டமும் மற்ற வட்டத்தில் இணைந்து ஒரே பெரிய வட்டமாய் மாற, வட்டத்தின் உட்புறம் முழுக்க பழுப்பு வண்ணம். பழுப்பு வண்ணத்தின் அடத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, இந்த வண்ணத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோம்? தூங்கும்போது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் சுண்டெலியின் நிறமா? தேநீர்க்கடை வாசலில் வாலை ஆட்டும் வெள்ளையும் சாம்பலும் கலந்த நாயின் நிறமா?

வட்டத்தின் சுற்றளவு குறைந்துகொண்டே போக வட்டத்தின் பழுப்புநிற வண்ணமோ தன் தன்மையை இழந்து கருப்பாகி கொண்டு வருகிறது. வட்டம் என்பது இப்போது வட்டமாக இல்லாமல் வெறும் கரும்புள்ளி. சென்ற முறை இருந்ததை காட்டிலும் கருமையின் அடர்த்தி குறைந்திருந்தது போல இருந்தாலும் அழுத்தமாகவே பதிந்திருந்தது புள்ளி.

29 செப்டம்பர், 2011

காதலும், கழுதையும்!

முன்னபோனா
முட்டுது
பின்னவந்தா
உதைக்குது

மிஸ்டுகால்
பார்த்து ரிங்குனா
அப்பா இருக்கார்
அப்புறம் பண்ணு

சாயங்காலம்
பாக்கலாமா
சாரி அம்மாவோடு
கோயிலுக்கு போறேன்

நேத்து ஏன்
பார்க்க வரலை
நேரமில்லையா?
நெனைவு இல்லையா?

சிகரெட்டு புடிப்பியா
தண்ணி அடிப்பியா
செருப்பால அடிப்பேன்
தறுதலை

ப்ளூகலர் ட்ரெஸ்
நல்லாருக்கா?
ஏய் அந்த
ப்ளாக் சுரிதாரை
சைட் அடிக்காதே!

புது ரிசப்ஷனிஸ்ட்
என்னைவிட அழகா?
கண்ணை நோண்டிடுவேன்
முண்டக்கண்ணா

சம்பளம் வந்திடுச்சா
மாயாஜால் போலாமா
எம்ஜிஎம் போலாமா
எனக்கு சத்யம் கூட
ஓக்கேதான்

மாப்பிள்ளை
பார்த்திருக்காங்க
செம ஸ்மார்ட்
டேக் ஹோம் 80கே
எனக்கு டபுள் ஓகே

ம்ம்ம்ம்....
ஏற்கனவே கல்யாணம்
ஆனவன் இன்னொருத்தியை
காதலிப்பதை விட ஒரு
கழுதையை காதலிக்கலாம்

எச்சூஸ்மீ..
கீழ்ப்பாக்கம்
எந்த பக்கம்?

28 செப்டம்பர், 2011

மணிவண்ணன்

நானெல்லாம் ‘அ'ன்னா ஆவன்னா படிக்க ஆரம்பித்தபோதே மணிவண்ணன் நன்றாக தமிழில் எழுத ஆரம்பித்து விட்டான். கிளாஸில் யாரோடும் பேசமாட்டான். முண்டகண்ணி கவிதாவுக்கு பக்கத்தில் தான் உட்காருவான். முண்டகண்ணியும் முசுடு, இவனும் முசுடு என்பதால் இரண்டு பேரும் டிஸ்டர்பன்ஸ் இல்லாமல் உட்கார்ந்திருப்பார்கள்.

ஸ்லேட்டில் தினமும் நூற்றியெட்டு வரிகள் எழுதுவான். மிஸ் ப்ளாக்போர்டில் எழுதிப்போடுவதை தான் எழுதுகிறானா என்று எட்டிப் பார்த்தால் ஸ்லேட்டு முழுக்க ஸ்ரீராமஜெயம் எழுதி வைத்திருப்பான். சில நாட்கள் காலையில் எழுத ஆரம்பித்து மதியமே முடித்துவிடுவான். வழியில் வந்தபோது பறித்து வைத்திருந்த கோவைக்காயை டஸ்டராக உபயோகித்து ஸ்லேட்டை க்ளீனாக்கி மதிய உணவுக்கு பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பான் ‘ஸ்ரீராமஜெயம்'

”அ.. ம்.. மா” “ஆ... டு” என்று அப்போதுதான் நாங்கள் எழுத ஆரம்பித்திருந்தோம். இவனுக்கு மட்டும் எப்படி ஸ்ரீராமஜெயம் எல்லாம் எழுதவருகிறது என்று ஆச்சரியம் தான். ஆத்தில் அவன் தோப்பனார் எழுத கற்றுக் கொடுத்தாராம். பாழாப் போன மனுஷன் 'அ. ஆ. இ'யோ, ABCDயோ கற்றுத் தந்திருந்தால் அவனுக்கு உபயோகமாக இருந்திருக்கும்.

நாங்கள் வளர, வளர மணிவண்ணனும் தென்னை மரம் மாதிரி எங்களோடேயே வளர்ந்தான். ஐந்தாவது வகுப்பு வந்தபோது ‘தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினான்' என்று பென்சிலால் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தோம். மணிவண்ணனோ மந்திரங்கள், ஸ்லோகங்களை நோட்டில் கிறுக்க ஆரம்பித்தான். தமிழில் தான் எழுதுவான், ஆனால் படித்துப் பார்த்தால் தமிழ் போல இருக்காது. அது சமஸ்கிருதம், உங்கவாவுக்கெல்லாம் புரியாது என்பான்.

எழுத்து, எழுத்து, எழுத்து - அதுதான் மணிவண்ணன். அவன் வாய்திறந்து பேசியதை விட லட்சம் முறை அதிகமாக எழுதியிருப்பான் போலிருக்கிறது. தொடர்ந்து எழுதி, எழுதி பயிற்சி பெற்றிருந்ததால் மணிவண்ணனின் எழுத்துக்கள் முத்து முத்தாக இருக்கும்.

ஸ்ரீராமஜெயமும், ஸ்லோகங்களுமாக வகுப்பறையில் கிறுக்கிக் கொண்டிருந்தாலும் பயல் படிப்பில் கெட்டி. அவன் ஆத்துலே எல்லாரும் படிச்சவாளா இருந்ததால் வீட்டிலேயே எல்லாப் பாடத்தையும் படித்துவிடுவான். நாங்கள் தான் வீட்டிலும் படிக்காமல், கிளாஸிலும் படிக்காமல் ரோட்டில் நின்றோம். எங்க செட்டு கொஞ்சம் ஏடாகூடமான செட்டு என்பதால் எங்களைப் பார்த்தாலே மணிவண்ணனுக்கு பயம். அவன் கொஞ்சம் கலராக வேறு இருப்பான், எங்கள் செட்டிலோ ரொம்பவும் மாநிறமாக இருந்த நான் தான் அதிகபட்ச கலர்.

எக்ஸாம் எழுதும்போது அடிஷனல் பேப்பர் அதிகமாக வாங்குபவன் எங்கள் பள்ளியிலேயே அவன் மட்டும் தான். வாங்கிய பேப்பரையே எழுதமுடியாமல் நாங்களெல்லாம் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க அடிஷனல் ஷீட்டாக வாங்கி எழுதிக் கொண்டேயிருப்பான். ஒருவேளை பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம் தான் எழுதுகிறானோ என்று கூட சந்தேகப்படுவோம். ஆனாலும் தமிழ்ச்செல்விக்கு அடுத்ததாக நல்ல மார்க்கு வாங்குபவன் மணிவண்ணனாகதான் இருப்பான். அவன் அனாயசமாக தேர்வுகளை எழுதித்தள்ள, நாங்களெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு க்ளாஸாக தாண்டிவந்தோம். பத்தாம் வகுப்பு வருவதற்குள் எங்களுக்கெல்லாம் தாவூ தீர்ந்துவிட்டது.

பரவாயில்லை. பத்தாங்கிளாஸ் வந்தபோது மணிவண்ணனுக்கு ரெண்டு, மூன்று நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். ஆனாலும் படிப்பு பற்றி மட்டும் தான் பேசுவார்கள். மாறாக எங்கள் செட்டோ படிப்புத் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தது. தம் அடிக்க ஆரம்பித்தோம். தண்ணியடிப்பது குறித்துக்கூட திட்டங்களை தீட்டினோம்.

இந்நிலையில் தான் எங்கள் செட்டுக்கு பள்ளியில் பெயர் கெட ஆரம்பித்தது. டாய்லெட்டில் காவேரி டீச்சர் குறித்து ஆபாசமாக கரியில் யாரோ எழுதிவைக்க அது எங்கள் செட்டில் ஒருவன் தான் என்று பி.டி.மாஸ்டருக்கு சந்தேகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களை அடித்து, உதைத்து யாருடா எழுதினது என்று போலிஸ் இன்ஸ்பெக்டர் மாதிரி மிரட்டிக் கொண்டிருந்தார். இவரது மிரட்டலும், அடி உதையும் அதிகமாக, அதிகமாக பிடி மாஸ்டரை, காவேரி டீச்சரோடு இணைத்து இன்னும் பச்சையாக ஸ்கூல் காம்பவுண்டில் கரியில் எழுதப்பட்டது.

”நான் எழுதலை, ஒருவேளை சேகர் எழுதியிருப்பானோ? செந்தில் எழுதியிருப்பானோ” என்று என் நண்பர்கள் மீதே நான் சந்தேகப்பட, அவன்களோ ‘ஒருவேளை குமார் எழுதியிருப்பானோ?” என்று என் மீது சந்தேகப்பட.. எங்களது பரஸ்பர புரிந்துணர்தல் கேள்விக்குறியானது.

”டாய்லெட்டுலே அசிங்கமா எழுதினவன் மாட்டிக்கிட்டாண்டா” சாப்பிட்டுவிட்டு க்ளாஸ் ரூமிலேயே குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்த எங்களை சுருளி சுரேஷின் குரல் தட்டி எழுப்பியது. பதட்டப்பட்டு எழுந்த நான் பக்கத்தில் சேகரும், செந்திலும் இருக்கிறார்களா என்று செக் செய்துக் கொண்டேன். ரெண்டு பேரும் இருந்தார்கள். அப்போ எழுதினது வேற ஒரு காவாலி!

ஹெட்மாஸ்டரின் ரூமில் முட்டி போட்டுக் கொண்டிருந்தவன் வேறு யாருமல்ல! நம்ம மணிவண்ணனேதான். அடப்பாவி ஸ்ரீராமஜெயம் எழுதற கையாலே இப்படியெல்லாம் எழுதியிருக்கானே என்று ஸ்கூலே ஆச்சரியப்பட்டது, அதிர்ச்சியடைந்தது. எந்த புத்துலே எந்த பாம்போ என்று நினைத்துக் கொண்டோம். நாங்களெல்லாம் காவேரி டீச்சர் குறித்து வெளிப்படையாக கமெண்டு அடிக்க, பேசமுடியாமல் எல்லாவற்றையும் மனதுக்குள் போட்டு வைத்திருந்த அவனோ டாய்லெட்டில் எழுதி தன் மன அரிப்பை தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

அதன்பின்னர் அவனை வகுப்பறை தவிர்த்து வெளியே அவ்வளவாக காணமுடியவில்லை. தலைகுனிந்தே பள்ளிக்கு வருவான், போவான். யாரிடமும் பேசமாட்டான். பத்தாவது பொதுத்தேர்வு வந்தது. ஒருவரையொருவர் காப்பி அடித்து எங்கள் செட்டு ஓரளவுக்கு தேறியது. நல்ல மார்க் வாங்கிய அவனோ, எங்கள் பள்ளியிலேயே மேல்நிலையை தொடராமல் வேறு பள்ளிக்கு டி.சி. வாங்கிப் போய்விட்டான். அவன் பட்ட அவமானம் இன்னும் ஒரு ரெண்டு வருடத்தை எங்கள் பள்ளியில் கழிக்க இயலாமல் செய்துவிட்டது.

* * * * * *

பஞ்சாயத்து போர்டில் ஒருவன், விளம்பர நிறுவனத்தில் ஒருவன், சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவன், லெதர் பிசினஸ் செய்பவன், கந்துவட்டி விடுபவன், பத்திரிகைக்காரன் என்று எங்கள் பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையில் இப்போது செட்டில் ஆகிவிட்டோம். எப்போதாவது யாருக்காவது கல்யாணம், காட்சி என்றால் மட்டும் சந்திப்பதுண்டு. மணிவண்ணனை அதன்பின்னர் யாருமே கண்டதில்லை.

‘அவன் நிதி ஸ்கூல்லே படிக்கிறான்' ‘காலேஜ் சேந்துட்டான்' ‘பம்பாயிலே ஒரு பெரிய வேலையிலே இருக்குறான்' ‘மெட்ராஸிலேயே சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சிட்டான்’ என்று அவ்வப்போது அவன் குறித்து செய்திகள் தெரியவருமே தவிர்த்து அவனோடு யாருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் தான் இருக்கிறோம்.

எனக்கு மட்டும் நன்றாக தெரியும். அவனால் எதையாவது எழுதாமல் இருக்க முடியாது. ஏதாவது எழுதிக்கொண்டோ, கிறுக்கிக் கொண்டோ தானிருப்பான். யாருக்கு தெரியும்? ஒருவேளை இப்போது பிளாக்கிலோ, கூகிள் பஸ்ஸிலோ, ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ யாரையாவது அவதூறாக, ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கலாம்.

27 செப்டம்பர், 2011

மொக்கை ஃப்லிம் க்ளப்

2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.

இந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக தோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.

உன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.

சமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.

எங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

மொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.

க்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.

எங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திரைப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்!

26 செப்டம்பர், 2011

Dookudu – Daring & Dashing

போனவாரம் வரை விஜய்க்கும், சல்மான்கானுக்கும் பயங்கர டென்ஷன். நகம் கடித்தபடியே காத்துக் கொண்டிருந்தார்கள். மனதுக்குள் இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய படம் வெளிவரும்போது கூட இவ்வளவு மெனக்கெட்டதில்லை.

மகேஷ்பாபுவின் டோக்குடுவுக்குதான் இவ்வளவு டென்ஷன் (Dookudu என்பதை தமிழில் எப்படி பிரனவுன்ஸ் செய்வது?). ஏற்கனவே மகேஷ்பாபுவின் ‘போக்கிரியை’ தமிழிலும், இந்தியிலும் முறையே விஜய்யும், சல்மானும் உல்டா அடித்து, பிளாக்பஸ்டர் பார்த்தவர்கள். தெலுங்குகாரர்கள் கடந்த ஆறு மாதங்களாக ‘அடுத்த போக்கிரி’ என்று அலறுவதைப் பார்த்துதான் படத்தின் ரிசல்ட்டுக்காக தேவுடு காத்துக் கொண்டிருந்தார்கள்.

ரிசல்ட் பக்கா. இதுவரை தெலுங்கு சினிமா சென்றிராத உயரங்களுக்கு டோக்குடு போயிருக்கிறது. சுமார் முப்பத்தைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம், முதல்நாளே ஆந்திராவில் பத்து கோடி ரூபாய் வசூலை வாரிக்கொட்டிக் கொண்டு கோலிவுட்டையும், பாலிவுட்டையும் அச்சுறுத்தியது. டோலிவுட்டுக்கு வாராது வந்த மாமணியாய் வாய்த்த மகாதீராவை அசால்டாக வசூலில் பின்னுக்கு தள்ளிவிடும் என்று கணிக்கிறார்கள் தெலுங்கு பிசினஸ் ஆட்கள். மகாதீரா அமெரிக்காவில் முதல்நாள் நாலரை கோடி வசூலித்து அசத்தியதாம். டோக்குடுவின் முதல்நாள் அமெரிக்க வசூல் மட்டும் ஆறரைக் கோடி.

ஹீரோ மகேஷ்பாபுவுக்கு இப்படத்தின் வெற்றியில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு இயக்குனர் சீனு வைத்லா மீது அப்படியொரு நம்பிக்கை. சொல்லிக் கொள்ளும்படியான தோற்றமோ, பெரிய நடிப்புத் திறமையோ இல்லாத ரவிதேஜாவையே மாஸ் மகாராஜா ஆக்கியவர் சீனு. அவருடைய துபாய் சீனு இன்றுவரை ஆந்திராவின் ஏதோ ஒரு தியேட்டரில் விசில் சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.

1999ல் தன்னுடைய 24வது வயதில் ஹீரோவானார் மகேஷ். முதல் படம் ராஜகுமாரடு (ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் பிரின்ஸ்). அப்போதிலிருந்து ‘பிரின்ஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி என்று அடுத்தடுத்து ஐந்து வருடங்களில் நான்கு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளை கொடுத்த மகேஷ்பாபு, இம்மாதிரியான ஒரு வெற்றிக்காகதான் இவ்வளவு நாட்களாக பொறுமையாக காத்திருந்தார். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பதினாறாவது படம் டோக்குடு. போக்கிரிக்கு பிறகு சைனிக்குடு, அதிதி, கலேஜா என்று ஹாட்ரிங் படங்கள் வசூலில் டூமாங்கோலி ஆகியதால் இப்படத்தின் வெற்றி, போக்கிரியின் வெற்றியை விட மகேஷ்பாபுவுக்கு முக்கியமானது.

அப்படியென்ன அப்பாடக்கர் படம் இதுவென்றுப் பார்த்தால், நத்திங் ஸ்பெஷல். மிக சாதாரணமான மசாலா படம். கதையோ, திரைக்கதையோ எந்தவகையிலும் மற்ற படங்களில் இருந்து மாறுபடவில்லை. ஆனாலும் டைட்டில் தொடங்கி, க்ளைமேக்ஸ் வரை ஜிவுஜிவுவென்று ஒரு ‘டெம்போ’வை தக்கவைத்திருப்பதுதான் இயக்குனரின் சாமர்த்தியம். கே.வி.குகனின் கேமிரா, ஒரு சாதாரணப் படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ‘ரிச்’சாக காட்ட முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுகிறது. குறிப்பாக இண்டர்வெல் ப்லாக் ஆக்‌ஷன், இந்தியத் திரைப்படங்களின் தொழில்நுட்பத் தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

விறுவிறுவென்று ஆக்‌ஷன் காட்சிகளால் தொடக்கம் பெறும் எந்த ஒரு மசாலா திரைப்படமுமே, செண்டிமெண்ட் காட்சிகளின் போது தொங்கிவிடுவது இயல்பானதுதான். இந்த தொங்கல் ஏரியாவை செப்பனிடுவதில்தான் ஒரு கமர்சியல் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. செண்டிமெண்ட் என்பதால் ரசிகன் அழுது வடியவேண்டும் என்று இப்படத்தின் இயக்குனர் எதிர்ப்பார்க்கவில்லை. ரசிகன் கண்கலங்கிவிடக் கூடாது என்பதில் சீனு வைத்லா உறுதியாக இருந்திருக்கிறார். பாசப்போராட்டக் காட்சிகளில் ஏன் அழுதுவடிய வேண்டும், சிரித்தால் என்ன முத்தா கொட்டிவிடும்? - லேட்டரலாக திங்க் செய்து பார்த்திருக்கிறார். இந்த காட்சிகளில் பிரம்மானந்தத்தையும், நாராயணாவையும் சொருகு. தியேட்டரில் எவன் அழுகிறான் என்று பார்த்துவிடுவோம். செண்டிமெண்ட் முடிந்ததும் ரிவென்ஜ், மீண்டும் ஆக்‌ஷன். அதை மகேஷ்பாபு பார்த்துக் கொள்வார். இடையிடையே சமந்தா, ரொமான்ஸ், கலர்ஸ், டான்ஸ்... இந்தப் படம் ஹிட் அடிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.

சமந்தா. வெள்ளெலி மாதிரி இருக்கிறார். கொஞ்சம் ஒல்லியான காண்வெண்ட் பெண் தோற்றம். ஃப்ளாட்டான, கவர்ச்சி மடிப்புகள் ஏதும் காணப்படாத வெள்ளை வெளேர் ஃப்ளோர் டைல்ஸ் இடை. வழக்கமாக ஹீரோயின்களிடம் நாம் எதிர்ப்பார்க்கும் கவர்ச்சியான ‘பெரிய’ சமாச்சாரங்கள் ஏதும் இவரிடம் இல்லை. ஆனால் கருகருவென மைபூசிய அவரது கண்கள், அளவெடுத்து செய்தமாதிரியான மூக்கு, அசத்தல் வடிவிலான உதடுகளென்று குழந்தைத் தனமான முகம்தான் சமந்தாவின் ப்ளஸ் பாயிண்ட்.

பிரம்மானந்தம், நாராயணா காமெடிக்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது தெலுங்கு ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கப் போகிறார்கள். ஹீரோவிடம் அடி வாங்குவதுதான் பிரம்மானந்தத்தின் வழக்கமான காமெடி. இந்தப் படத்திலும் அடிதான் வாங்குகிறார். கவுண்டமணியிடம் செந்தில் எத்தனைமுறை அடிவாங்கினாலும் நாம் சிரிக்கிறோமில்லையா, அதேமாதிரிதான் மனவாடுகளும் சிரிக்கிறார்கள்.

நாராயணா கேரக்டர், தெலுங்கு சினிமாவின் அத்தனை ஹீரோக்களின் டவுசரையும் ஒட்டுமொத்தமாக கயட்டுகிறது. படம் முழுக்க தெலுங்கு சினிமாக்கள் குறித்த ஒரு சுயபகடி இருந்துக்கொண்டே இருக்கிறது. முன்னதாக ராம்கோபால் வர்மாவின் அப்பள ராஜூ ஒட்டுமொத்தமாக தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியை கேலி செய்தது. அது வன்மமான காமெடி என்று இண்டஸ்ட்ரி மொத்தமும் ராம்கோபால் வர்மா மீது பாய்ந்தது. டோக்குடு இயக்குனரையும் ஆர்.ஜி.வி. அப்பளராஜூவில் கிண்டலடித்திருந்தார். அதற்குப் பதில் சொல்லும் விதமாக, ராம்கோபால் வர்மாவுக்கு பாடமெடுக்கும் விதமாக நோகாமல் தெலுங்கு சினிமாவை நொங்கெடுப்பது எப்படியென்று சீனு படமெடுத்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக ராம்கோபால் வர்மா போட்டோவையே கூட பயன்படுத்தி காமெடி செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுபோலவே பாடல்காட்சிகள் முழுக்க மகேஷ்பாபு தன்னுடைய ரெகுலர் பாடிலேங்குவேஜை மறந்துவிட்டு, மற்ற ஹீரோக்களை இமிடேட் செய்து ‘லொள்ளு சபா’ செய்கிறார். ஒரு பாடலில் ரவிதேஜா பாணியில் அவர் போடும் குத்து, கும்மாங்குத்து. இன்னொரு பாட்டில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜூஜூபி காட்டுகிறார்.

தேவுடு என்.டி.ஆர். படத்தில் ஒரு கேரக்டர். அவர் இந்தியாவுக்கே பிரதமர் ஆகிறார்(?). செங்கோட்டையில் வீர உரை கூட நிகழ்த்துகிறார். ஆந்திர திரையரங்குகள் நெரிசலில் மூச்சுத் திணற இது போதாதா?

ஒரிஜினல் மசாலா வாசனையோடு படம் பார்க்க விரும்பினால், உடனே தியேட்டருக்கு ஓடுங்கள். இரண்டரை மணி நேர எண்டெர்டெயிண்ட்மெண்ட் நிச்சய கேரண்டி. தெலுங்கு தெரிந்திருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. சைதை ராஜ், போரூர் கோபாலகிருஷ்ணா, பல்லாவரம் ஜனதா, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி மாதிரி தியேட்டர்களில் கூட டோக்குடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. இல்லாவிட்டால் ஆற, அமர தமிழில் வந்தபிறகு பார்த்துக் கொள்வது என்றால் உங்கள் இஷ்டம். என்ன ஒரு கொடுமை என்றால், இப்படத்தின் தமிழ் பதிப்பில் அணில் நடித்துத் தொலைப்பார் என்பதுதான்.