14 அக்டோபர், 2011

தள்ளு தள்ளு

ஃபேஸ்புக், பஸ் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி ‘தள்ளு தள்ளு’ தலைவர் என்று நாம் குறிப்பிடும்போது, அவர் யாரென்று புதுசு புதுசாக தினுசு தினுசாக யாராவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தொல்லையில் இருந்து விடுபட தெளிவான விளக்கம் ஒன்றினை அளிக்க வேண்டியது நம் கடமையாகிறது.

ஆத்திகரோ, நாத்திகரோ நீங்கள் திருப்பதி சென்றிருந்தால் இந்த வசனத்தை கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. ’ஜருகண்டி, ஜருகண்டி’.

கிட்டத்தட்ட ‘ஜருகண்டி, ஜருகண்டி’ வாய்ஸ் மாடுலேஷனிலேயே கடந்த இரண்டு வருடங்களாக, சீமான் வரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது தொண்டர்கள் குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள். “தள்ளு தள்ளு” என்று வேகமாக குரல் கொடுப்பதோடு இல்லாமல், கூட்டத்தை கையால் இருபுறமாக தள்ளிவிட்டுக் கொண்டேவும் வருவார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல சீமான் வரும் இடமெல்லாம் இந்த ‘தள்ளு தள்ளு’ சத்தம் கேட்பது என்பது வழக்கமாகி போய்விட்டது. ஆளே இல்லாத டீக்கடைக்கு சீமான் வந்தாலும் ‘தள்ளு தள்ளு’ பந்தாவுக்கு மட்டும் எந்த குறைச்சலுமில்லை.

எனவேதான் தமிழுணர்வு வாய்த்த புலவர் பெருமக்கள் சிலர் அவரை ‘தள்ளு கொண்டான்’ என்று புகழ்ந்துரைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களோ இப்போதெல்லாம் வாழ்க கோஷம் போடுவதற்கு பதிலாக விண்ணதிர ‘தள்ளு தள்ளு’ கோஷம் போடுகிறார்கள். அரசியல் மட்டத்தில் ‘தள்ளு தள்ளு தலைவர்’ என்று அறியப்படுகிறார்.

மற்றப்படி இந்தப் பட்டத்தின் பின்னால் ஆபாசமான காரணம் எதுவுமில்லையென்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றோம்.

13 அக்டோபர், 2011

படித்தவர்களும், அரசியலும்!

அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது. “படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக so called படித்தவர்களாலும் ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.

அதிலும் குறிப்பாக இந்த ஐஐடி, ஐஐஎம் பீட்டர் கோஷ்டிகளின் தொல்லை கொஞ்சமும் தாங்கமுடியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இட்லிக்கடை சரத்பாபுவை வைத்து கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது யாரோ கொட்டிவாக்கம் வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளராம். அதென்னவோ தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு சாலை மறியல், ஒரு கோரிக்கை மனு.. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?

‘இல்லை, நாங்களும் மக்களுக்காக போராடியிருக்கிறோம்’ என்று இந்த படித்தவர்கள் சொல்வார்களேயானால், அதிகபட்சம் ரத்ததானம் செய்திருப்பார்கள். மரம் நட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு என்.ஜி.ஓ.வை நடத்திக் கொண்டு 30% சேவை, 70% லாபம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது. பள்ளிப் பகுதியிலும், சமய வழிபாடுகள் நடக்கும் பகுதியிலும் இருக்கும் டாஸ்மாக்கை மூடவைக்க போராடி, மக்களைக் கூட்டி மறியல் செய்து, ரவுடிகளால் தாக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வெற்றி கண்ட குறைந்தபட்ச அனுபவம் கூட இவர்களுக்கு இருப்பதில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் ஐ.ஐ.எம். பட்டதாரி சரத்பாபு போட்டியிட்டபோது அதை கடுமையாக எதிர்த்தேன். ஏனெனில் அவர் அத்தொகுதியில் தீர்த்துவைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரச்சினைகள்தான். பிறந்ததிலிருந்தே தென்சென்னையில் வாழும் எனக்கு சரத்பாபுவை விடவே அதிகம் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். உதாரணத்துக்கு அவர் தீர்த்து வைப்பதாக சொன்ன வேளச்சேரி – மடிப்பாக்கம் – பள்ளிக்கரணை பகுதி வெள்ளநீர் வடிகால். புவியியல் ரீதியாக இப்பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்புகள் இல்லை என்று எப்போதோ நிபுணர்கள் அறிவித்துவிட்டார்கள். ஏனெனில் சென்னையிலேயே கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதி இது. இங்கே பாதாள சாக்கடை கொண்டுவரும் திட்டமேகூட இந்த புவியியல் அமைப்பால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. +2 ஃபெயில் ஆன எனக்கு தெரியும் இந்தப் பிரச்சினை கூட, ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு வந்தவருக்கு தெரியவில்லை என்றால், அவருக்கு ஏன் நான் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி உளற வைக்க வேண்டும்? மேலும் அவர் கொடுத்த பல வாக்குறுதிகள் வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர் கொடுக்க வேண்டிய வாக்குறுதிகள்.

இப்படியிருந்தும் so called படித்தவர்கள் பலரும் புல்லரித்துப் போய் சரத்பாபுவுக்கு வாக்குப் போடுங்கள் என்று வாய்வழிப் பிரச்சாரம் செய்ததையும், ஊடகங்களெல்லாம் ஏதோ சென்னை மக்களை காக்க வந்த மாகானுபவர் என்றும் பரப்புரை செய்ததையும் விட பெரிய கேலிக்கூத்து வேறொன்றும் இருந்துவிட முடியாது. அவருடைய இட்லிக்கடைகள் மூலமாக ஏதோ 30-40 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்கிறார்கள். வருமான வரித்துறை இதை கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ந்து, உண்மையெனில் போதுமான வருமான வரியை அவர் செலுத்தியிருக்கிறாரா என்று தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் பார்த்த Food King Outletகளை விடவும் முனியாண்டி விலாஸ்கள் கொஞ்சம் சுமாரானவையே. சரத்பாபு பற்றி வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிம்பம் தவறானது எனில் தவறான தகவல்களை மக்களுக்கு தருவதாக சொல்லி, அவர் மீது இதுவரை அவரை ஆதரித்து வந்த படித்தவர்களே கேஸ் போட வேண்டும். அப்படி அவருக்கு நிஜமாகவே வருமானம் வரும் பட்சத்தில், அவர் ஏன் கல்லூரிகளில் தன்முனைப்புப் பேச்சுகளை பேசி 25000, 30000 என்று ஃபீஸ் வாங்கப் போகிறார்? (எனக்குத் தெரிந்து இப்போது அவருடைய மேஜர் வருமானம் இதுதான்) ஓசியிலேயே மாணவர்களுக்கு ‘ஊக்கம்’ கொடுப்பாரே? மக்கள்/சமூகம் குறித்த சரத்பாபுவின் புரிதல் எவ்வளவு மொக்கையானது என்பதை, அவர் பங்கேற்ற ‘நீயா நானா’ டிவி நிகழ்ச்சி மூலமாக அப்பட்டமாக பறைசாற்றியிருக்கிறார்.

ஐ.ஐ.எம் / ஐ.ஐ.டி ரேஞ்சுக்கு படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவுசெலவு அவர்களுக்கு அத்துபடி. ஆனால் பொண்டாட்டிக்கு வாங்கித்தர வேண்டிய மல்லிகைப்பூ முழம் பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் ஏகத்துக்கும் படித்த மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும் ஏழை என்பதற்கு உச்சவரம்பு ஒரு நாளைக்கு ரூ.32/- வருமானம் என்று நிர்ணயிப்பார்களா?

படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கார்ப்பரேட் துறைகளில் நடைபெறும் சுரண்டலுக்கும், எந்த படிக்காதவனுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

படித்தவர்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற வாதத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுவது பாசிஸம். அப்படியெனில் அன்னா ஹசாரே க்ரூப்பு மட்டும்தான் அரசியலில் இருக்கமுடியும்.

இப்போதே கூட சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்தான். ஏராளமான மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பொருளாதாரம் படித்தவர்களும் நிரம்பிய அவைகள்தான் இவை. எனவேதான் சொல்லுகிறோம். படித்தவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் எல்லாம் மாறிவிடும் என்பது வெறும் யூகம். படித்தவர்களால்தான் மாற்றம் சாத்தியம் என்பது மாயை. படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?

12 அக்டோபர், 2011

விளம்பரம்

டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.

வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை தொலைத்துவிட்டு அப்பெண் தேடும்போது அதை தேடிக்கொண்டுவரும். டை கட்ட மறந்து பள்ளி பேருந்தில் ஏறிவிடுவாள். டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் பின்னாலேயே நாய் ஓடிவரும். ஒவ்வொரு விளம்பரமும் ‘சேவை செய்வதில் மகிழ்ச்சி' என்ற வாசகத்தோடு நிறைவடையும்.

இந்த தொடர் விளம்பரங்களை சிந்தித்த கலைஞனின் படைப்புத்திறனை கண்டு வியந்திருக்கிறோம், பொறாமை கொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்வின் இயல்பான சம்பவங்களை முப்பது நொடி விளம்பரமாக மாற்றுவது மிக சவாலானது. பலரையும் கவர்ந்த விளம்பரங்கள் அவை.

ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் இது. ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலை பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.

ஒரு நவீன தொலைக்காட்சிக்கான விளம்பரம் ஒன்று. மிகப்பெரிய அந்த தொலைக்காட்சியின் திரையை நோக்கி அரைகுறை ஆடையுடன் ஒரு அழகி வருகிறாள். தொலைக்காட்சியில் ஒரு ஆணின் உருவம் ஒளிபரப்பப்படுகிறது. தொலைக்காட்சியை நெருங்கும் அந்த அழகி ஒரு காதலனை காண்பது போல விரகதாபத்தை உதடுகளில் தேக்கி அருகில் வருகிறாள். அருகில் வந்தவள் உடலை ஒரு மாதிரியாக முறுக்கி தன் வனப்பை காட்டுகிறாள். அதாவது அந்த தொலைக்காட்சியின் வடிவம் செக்ஸியாக இருக்கிறதாம், ஒரு ஆணின் கட்டுடலுக்கு நிகரானதாக இருக்கிறதாம். அதைக்கண்டு அவள் காமவசப்படுகிறாளாம்.

ஒரு இளம் மனைவி தன் கணவனின் பெயரை உச்சரித்தவாறே வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையாக வருகிறாள். எங்குமே அவள் கணவனை காணவில்லை. தோட்டத்துக்கு முன்பாக இருக்கும் போர்டிகோவுக்கு வருகிறாள். ஒரு நாற்காலி தெரிகிறது. நாற்காலிக்கு பக்கவாட்டில் கணவனின் கையும், காலும் அலங்கோலமாக விரிந்து கிடக்கிறது. காப்பி கோப்பை சிதறிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட அவன் மரணித்துவிட்டதாக நினைத்து மனைவி ஓவென்று கதறியவாறே ஓடிவருகிறாள். கணவனோ வாக்மேனில் இசை கேட்டு மெய்மறந்திருக்கிறான். மனைவியின் கதறலை கேட்டு ஓடிவந்து அணைத்துக் கொள்கிறான். லைப் இன்சூரன்ஸ் செய்து தொலையுங்கள் என்பதற்கான விளம்பரம் இது.

மேற்கண்ட விளம்பரங்களில் வோடபோன் நிறுவனத்தின் விளம்பரம் மட்டுமே சர்ச்சைக்குள்ளானது. ஒரு நாயை துன்புறுத்தி படம் பிடித்திருக்கிறார்கள் என்று யாரோ ஒரு விலங்குகள் நல ஆர்வலர் புகார் செய்ய, வோடபோன் நிறுவனத்துக்கு நோட்டிஸ் சென்றிருக்கிறது. வோடபோன் நிறுவனமும் எதுக்கு வம்பு? என்று தன் விளம்பரங்களை வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறது.

நன்கு பயிற்சி பெற்ற ஒரு நாய் துன்புறுத்தல் ஏதும் செய்யப்படாமல், நாய்க்கு எந்த ஆபத்தும் இல்லாத வகையில் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரத்துக்கே இந்த கதியென்றால் இனிமேல் இயக்குனர் ராமநாராயணன் படமென்று எதையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக இம்சை அரசன் திரைப்படத்தில் குதிரைகள் பயன்படுத்தப் பட்டதால் படமே வெளிவரமுடியாத அவலநிலை ஏற்பட்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

விலங்குகளுக்கு இவ்வளவு பரிவு காட்டும் இந்திய அரசு நம் கதாநாயகர்களால் மிக மோசமாக பந்தாடப்படும், பல மாடிக்கட்டிடங்களின் உயரத்தில் இருந்து தூக்கிவீசப்படும் வில்லனின் அடியாட்கள் என்று சித்தரிக்கப்படும் மனிதர்களின் மீது கொஞ்சமாவது பரிவு காட்டியிருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கவேண்டும். திரைப்படங்களில் மட்டுமல்லாது விளம்பரங்களிலும் மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் மனிதர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். விலங்குகள் நல ஆர்வலர்களும் நாயோ, பூனையோ பாதிக்கப்பட்டால் மட்டும் தான் புகார் அனுப்புவார்கள் போலிருக்கிறது. சமூக விலங்கான மனிதனுக்கு அவர்களது நேசிப்பில் இருந்து விதிவிலக்கு அளித்துவிடுவார்கள் என்று நினைக்கிறோம்.

அடுத்து நாம் குறிப்பிட்டிருக்கும் இரு விளம்பரங்களும் மிக மிக அபத்தமானது. விளம்பரப்படுத்தப்பட்ட பொருளை வாங்கும் வகையில் எந்த வகையில் இவ்விளம்பரங்கள் பார்வையாளனை ஊக்குவிக்கிறது என்று தெரியாமல் தாவூ தீர்ந்துக் கொண்டிருக்கிறேன். ஷகீலா பட போஸ்டர்களை கிழித்து, சாணம் அடிக்கும் பெண்ணுரிமைப் போராளிகள், எஃப் டிவிக்கு தடை விதிக்கக் கோரிய ஃபெமினிஸ்டுகள் கண்ணில் இந்த விளம்பரங்களெல்லாம் இதுவரை கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இன்னமும் யாரும் இவ்விளம்பரங்களில் பெண்களும், அவர்களது உணர்வுகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எந்த கவலையும் படவில்லை.

கடைசி விளம்பரம் மிகக்கொடூரமானது. மனித உணர்வுகளோடு, மன பலகீனத்தோடு மோசமாக விளையாடுவது. இன்சூரன்ஸ் விளம்பரங்களுக்கு உலகளவில் ஒரு சட்டம் உண்டு. விளம்பரத்தை காணும் பார்வையாளரை இன்சூரன்ஸ் எடுக்கச் சொல்லி வற்புறுத்தாத அளவுக்கு விளம்பரம் அமைய வேண்டும். அதனால் தான் இன்சூரன்ஸ் விளம்பரங்களில் Insurance is the subject matter of solicitation என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெறுகிறது. மாறாக இவ்விளம்பரமோ மரணம் குறித்த அச்சத்தை மிக மோசமாக பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

சிகரெட் மற்றும் மது விளம்பரங்களுக்கு நம் நாட்டில் தடையுண்டு. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது ஹோர்டிங் மற்றும் பத்திரிகை விளம்பரங்களோ இவற்றுக்காக செய்யப்படக்கூடாது. ஆனாலும் நீங்கள் இவ்விளம்பரங்களை பரவலாக காணலாம். அதே பிராண்டிங்குக்கு, அதே பெயரில் விளம்பரம் செய்யப்பட்டாலும் அவை மியூசிக் சிடி என்றோ, மினரல் வாட்டர் என்றோ எனர்ஜி டிரிங்க் என்ற தயாரிப்புப் பெயரிலோ தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கு தடை விதிப்பது? எதை அனுமதிப்பது? எதை யார் திடீரென்று எதிர்ப்பார்கள்? போன்றவை குறித்த தெளிவான மனநிலை இந்தியர்களுக்கு இல்லை. இந்த கோக்குமாக்கு மனநிலையை வெளிநாட்டவர்கள் மிக கேலியாக பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிவதில்லை. விளம்பர உலகின் தந்தை என்று அறியப்படுபவர் டேவிட் ஓகில்வி. இவர் எழுதிய ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' என்ற புத்தகம் உலகளவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பைபிள் என்று போற்றப்படுகிறது. அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் யாரும் விளம்பரத்துறையில் முழுமையாக பணிபுரிய இயலாது. அந்தப் புத்தகத்திலேயே இந்தியா குறித்த நையாண்டி மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் அந்த ஹோர்டிங் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாக படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டும் அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளை கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தை காண்கிறார்கள். சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது. மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”. பின்புறத்தையே பார்த்து சூடானவர்கள் முன்புறத்தை காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருக்க நேர்ந்தது.

அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. விளம்பரம் மாற்றப்பட்டு அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு வாசகம் இவ்வாறாக அமைந்தது “நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை என்றுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய புள்ளிராஜா ரக விளம்பரங்களுக்கெல்லாம் முன்னோடி இந்த விளம்பரம். இவ்வகை விளம்பரங்களை teaser ads என்பார்கள். நம் வசதிக்காக தமிழில் 'சீண்டல் விளம்பரங்கள்' என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இவ்விளம்பரத்தை உருவாக்கியவர் ஓகில்வி. இவ்விளம்பரம் சம்பந்தமாக ‘ஓகில்வி ஆன் அட்வர்டைஸிங்' புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பவர் “இதுபோன்ற விளம்பரங்களை என்னால் உலகின் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வெளியிடமுடியும், ஒரே ஒரு நாட்டைத் தவிர, அந்நாடு இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போது தடைகோரப்பட்ட வோடபோன் நாய் விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனம் ஓகில்வி உருவாக்கிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

11 அக்டோபர், 2011

உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்!

ஏறுக்கு மாறாக பேசுவது என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

‘தமிழ் வலைப்பதிவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?’ என்று கலந்தாலோசிக்க முயற்சித்த பாவத்துக்காக indiblogger என்கிற அமைப்பினை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில வலைப்பதிவர்கள். இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், நாம் பார்த்துத் தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்துக்காக இந்தப் பதிவினை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingஐ passion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. ஆங்கிலம் மட்டுமன்றி, இந்திய மொழிகளில் வலைப்பதியும் யாரும் இந்த இணையத்தளத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஓரளவுக்கு நம்முடைய ‘தமிழ்மணம்’ திரட்டி மாதிரி என்றும் சொல்லலாம். ஆனால் தமிழ்மணத்தை விட சில கூடுதல் செயல்பாடுகள் கொண்டவர்கள். இந்திய நகரங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். இந்தச் சந்திப்புகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மொக்கைப்பூர்வமான விஷயங்கள் நிகழும்.

கடந்த ஆண்டு சென்னையில் இண்டி பிளாக்கர் சந்திப்பு நடந்தபோது பாலபாரதி, உண்மைத்தமிழன் உள்ளிட்ட சீனியர் பதிவர்களோடு பல ஜூனியர் பதிவர்களும் கலந்துகொண்டோம். ஏழெட்டு தமிழ் வலைப்பதிவர்களை கண்டதுமே இண்டிபிளாக்கர் டீம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழின் மூத்த வலைப்பதிவரான பாலபாரதிக்கு பேச மேடை அமைத்துத் தந்து கவுரவித்தது. தமிழ் வலைப்பதிவுகளில் நடைபெறும் முயற்சிகள் குறித்து விரிவாக ‘தமிழிலேயே’ பேசினார் பாலபாரதி. ஆங்கில மற்றும் இந்தி வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால், இம்முயற்சிகள் மேலும் பரவலாகும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதியதாக வலைப்பதிய வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இல்லையென்றும், இவையெல்லாம் கிடைக்கும் பட்சத்தில் தமிழில் வலைபதிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அவர் யோசனை சொன்னார்.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் வலைப்பதிவர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “How we can help tamil bloggers?” என்று தனியாக ஒரு அமர்வினை இச்சந்திப்பில் இண்டிபிளாக்கர் அமைப்பினர் முன்னெடுத்ததற்கு காரணம், கடந்தாண்டு பாலபாரதி சந்திப்பில் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளின் விளைவே என்று கருதுகிறேன்.

“help” என்கிற சொல்லினை ‘உதவி’ என்பதாகவே புரிந்துக் கொள்கிறேன். “May I help you?” என்று யாராவது நம்மைப் பார்த்துக் கேட்கும் பட்சத்தில், “Yes, Please” என்று அங்கீகரிப்பதோ அல்லது “No, Thanks” என்று மறுதலிப்பதோதான் நாகரிகம். “எனக்கு உதவ நீ யாருடா?” என்று கேட்பது அநாகரிகம். ஒருவன் உதவ நினைப்பதை தவறு என்று சொல்லுவது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. தன்முனைப்புக்காக ஏதாவது ஸ்டண்ட் அடித்துவிட்டு, அதற்கு ‘தமிழ், தமிழன், தன்மானம்’ சாயம் பூசுவது சர்வநிச்சயமாக போலி தமிழுணர்வு, போலி சுயமரியாதை.

“ஈழத்தமிழர்களுக்கு உதவுவோம்” என்று அரசியல்வாதிகளோ, தமிழுணர்வாளர்களோ சொன்னால் அல்லது வலைப்பதிவர்கள் பதிவு போட்டால், அது ஈழத்தமிழர்களை அவமதிப்பது ஆகுமா? அவமதிப்பு என்று கருதுவதுதான் உணர்வினை கொச்சைப்படுத்தும் செயல்.

உதவுகிறார்களோ இல்லையா என்பது வேறு விஷயம். உதவி தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். வேண்டாமென்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் யாரும் ‘உதவுகிறோம்’ என்று சொல்வதையே ஆட்சேபித்து, ‘ஆ, ஊ’வென்று கும்மியடிப்பது அக்மார்க் பாசிஸம்.

‘உடான்ஸ்’ என்று ஒரு திரட்டி நடத்தப்படுகிறது? தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி என்று ஏற்கனவே ஏராளமான திரட்டிகள் இருக்கும்போது, புதியதாக இந்த ‘திரட்டி’யை யார் கேட்டது? இந்த திரட்டி இப்போது புதியதாக ஏதோ ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு சிறுகதையே எழுதத் தெரியாதா? இவர்கள் போட்டோவோடு Hint கொடுத்துதான் சிறுகதை எழுத வேண்டுமா? அவ்வளவு கற்பனை வறட்சியிலா தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்? இந்த சிறுகதைப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களின் புனைவாற்றலை கொச்சைப்படுத்துகிறது. உடான்ஸ் இந்தியிலோ, வங்காளத்திலோ இப்படி ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துமா? – இப்படியெல்லாம் கேள்விகளை அடுக்கினால் இது எவ்வளவு அபத்தம், எவ்வளவு முட்டாள்த்தனம்?

கடந்த ஆண்டு கூட ஏதோ ‘பதிவர் சங்கம்’ அது இதுவென்று பேச்சு அடிபட்டது. எத்தனை பதிவர்களை கலந்தாலோசித்து அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ‘தேவை’யென்று நினைத்த ஒரு சிலர் பேசி வைத்துக்கொண்டுதானே அம்முயற்சியை மேற்கொண்டோம். அம்மாதிரி இண்டிபிளாக்கர் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஏதோ உதவ முன்வந்தது எப்படி தமிழர்களை, தமிழை கொச்சைப்படுத்துவதாகும்?

ஏதோ உரிமையை கேட்பதாக பாவனை செய்துக்கொண்டு, நடந்து முடிந்த இண்டிபிளாக்கர் சந்திப்பில் நடந்தது வெற்று கலாட்டா. இதன் மூலமாக அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் மத்தியில், தமிழ் வலைப்பதிவாளர்கள் கோமாளிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இவ்வளவு கலாட்டா நடக்கும்போதும், இண்டிபிளாக்கர் அமைப்பாளர்கள் மிக அமைதியாகவே, பெருந்தன்மையாகவே இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். நல்லவேளையாக ‘எல்லோரும் வெளியே போங்க’ என்று ‘நிஜமான அவமானத்தை’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு நிகழ்த்திவிடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான சமாச்சாரம்.

அங்கு கலந்துகொண்ட தமிழ் வலைப்பதிவர்களுக்கு தான் மட்டுமே அத்தாரிட்டி என்ற தோற்றத்தை உருவாக்கி கலாட்டா செய்த பதிவரின் விளம்பர வெறியை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறோம்.

கூகிள் ஆட்சென்ஸில் ஏதோ தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், அந்த டெக்னிக்கை சக பதிவர்களுக்கே சொல்லிக் கொடுக்காத அற்பத்தனத்தோடு இருக்கையில், எவனோ ஒருவன் எப்படியோ உதவ வருகிறேன் எனும்போது, அதையும் தடுத்து நிறுத்துவது அயோக்கியத்தனம் இல்லையா? உதாரணத்துக்கு ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இண்டிபிளாக்கர் உதவுவதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்?

மேலும் தன்மானம் இழப்பு, சோறு போடுதல் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஜெண்டில்மேன்ஸ்... அங்கு சென்ற எல்லோருமே ‘கலாட்டாவுக்குப் பிறகும்’, அவர்கள் கொடுத்த டீ-ஷர்ட்டை க்யூவில் நின்று வாங்கி வந்தோம் என்பதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன். செஞ்சோற்றுக் கடனுக்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அதற்காக அங்கே நாகரிகமாக அமைதி காத்த மற்ற வலைப்பதிவர்களை சிலர் கொச்சைப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.

- இந்த கூட்டறிக்கை அதிஷா மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோரால் தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு கையளிக்கப்படுகிறது -

கோலம்


எனக்கு நினைவு தெரிந்தபோது எங்கள் தெருவில் கோலம் போட ஒரு கொலைவெறி டீமே உருவாகியிருந்தது. அம்மா தலைமையில் பக்கத்து வீட்டு பூசாரி ஆயா, பெரியம்மா, டீவி வீட்டுக்காரம்மா, கடைசி வீட்டு காஞ்சனா அக்கா என்று கோல வீராங்கனைகள் ஃபுல் ஃபிக்கப்பில் இருந்த காலம் அது. எங்கள் தெருவில் அப்போது பண்ணிரெண்டு அல்லது பதினைந்து வீடுகள் இருந்திருக்கலாம். ஒரு வீட்டில் போட்ட கோலம் இன்னொரு வீட்டில் ரிப்பீட்டு ஆகிவிடக்கூடாது என்பதற்காக முதல் நாள் இரவு டிஸ்கஷன் நடத்தி அவரவர் போட வேண்டிய கோலத்தை சீரியஸாக முடிவு செய்துவைத்து விடுவார்கள்.

எங்கள் வீட்டிலும், காஞ்சனா அக்கா வீட்டிலும் தான் கோல நோட்டுபுக்கு இருக்கும். மற்றவர்கள் வீட்டிலெல்லாம் ப்ரிண்ட் செய்யப்பட்ட புக் தான் இருந்தது. அம்மாவும், காஞ்சனா அக்காவும் சிரத்தையாக பத்திரிகைகளில் வரும் கோலங்களையெல்லாம் தங்கள் நோட்டுகளில் வரைந்து வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கோல கலெக்‌ஷன் இருந்தது. மார்கழி மாதம் இந்த நோட்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் வந்துவிடும். அட்வான்ஸ் புக்கிங் செய்து அக்கம்பக்கங்களில் இரவல் வாங்கிச் செல்வார்கள்.

அப்போதெல்லாம் எல்லார் வீட்டு வாசலிலும் சாணம் தெளித்து (சிலர் வீடுகளில் மொழ மொழவென்று மெழுகி) அரிசு மாவுடன் சேர்க்கப்பட்ட கோலம் போடப்படும். கோலத்தில் அரிசி மாவு இருப்பதால் பகல் வேளைகளில் வாசலெல்லாம் சிகப்பு எறும்புகளாக காணப்படும். கோலமாவில் அரிசி மாவு சேர்ப்பதற்கு காரணம் புண்ணியம் என்று அம்மா சொல்வார். அதாவது கோலத்தில் இருக்கும் அரிசி மாவை உண்டு எறும்புகள் பசியாறுமாம். எனக்குத் தெரிந்து வெறும் கோலமாவில் கோலம் போட்டால் கை விரல்கள் எரியும். மாவு கொஞ்சம் சாஃப்டாக இருக்கவே அரிசிமாவு சேர்க்கிறார்கள்.

மார்கழி மாதம் மட்டும் வண்ணக்கோலம், மற்ற மாதங்களில் வெள்ளை மட்டும் தான். மார்கழி மாதம் சாணத்தை நடுவில் வைத்து பூசணிப்பூ வைக்கும் வழக்கம் இருந்தது. பூசணிப்பூவுக்கு மடிப்பாக்கத்தில் பஞ்சமே இல்லை. இப்போது பூசணிக்கொடியை காண்பது அரிதாகிவிட்டது.

அம்மா கோலம் போடும்போது நான் உதவியது உண்டு. அதை உதவி என்று சொல்லமுடியாது, உபத்திரவம் என்பது தான் சரி. அம்மா ஒரு பக்கமாக கோலம் போட்டுக் கொண்டு வரும்போது நான் இன்னொரு பக்கமாக கோலப்பொடியை வைத்து கிறுக்குவேன். நான் உருவாக்கிய கிறுக்கலையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் கோலம் போட அம்மாவுக்கு கால் மணி நேரமோ, அரை மணி நேரமோ எக்ஸ்ட்ரா பிடிக்கும். பொதுவாக அம்மா கோலம் போட்டால் அப்போதெல்லாம் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் ஆகும். அவ்வளவு பெரிய கோலம். அவ்வளவு பெரிய கோலம் போடுமளவுக்கு பெரிய வாசலும் இருந்தது.

எதற்கெடுத்தாலும் என் முதுகில் நாலு சாத்து சாத்தும் அம்மா, கோலத்தில் நான் விளையாடியதற்கு மட்டும் என்றுமே கோபப்பட்டதில்லை என்பது இதுவரை ஆச்சரியம் தான். அந்தக்காலத்திலிருந்தே இன்றுவரை ஐந்து, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போடுவது அம்மாவின் வழக்கம். சூரியன் உதிப்பதற்கு முன்பாக கோலம் போட்டுவிட வேண்டும் என்பது அவரது பர்மணெண்ட் டார்கெட். இப்போதெல்லாம் முறைவாசல் சிஸ்டம் வந்துவிட்டது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை தான் எங்கள் முறை. எங்கள் முறை வரும்போது மட்டும் அம்மா நாலரை மணிக்கே எழுந்து கோலம் போட்டுவிடுகிறார். அந்தக் காலத்தில் போட்டது போல பெரிய கோலம் இல்லை. அதில் நான்கில் ஒரு பங்கு போடுமளவுக்கு தான் இப்போது வாசல் இருக்கிறது. தெளிப்பதற்கு சாணியும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

கோலங்களிலேயே ரொம்பவும் கஷ்டமான கோலம் தேர்க்கோலம் என்று நினைக்கிறேன். தேர்க்கோலத்தில் ஏகப்பட்ட சங்கிலி இருக்கும். புள்ளிகளும் கோக்கு மாக்காக வைக்க வேண்டும். நினைவாற்றல் குறைந்தவர்களால் பெரிய தேர்க்கோலங்கள் போடமுடியாது. தேர்க்கோலம் பட்டையாகவும் போடக்கூடாது. மெலிதாக போட்டால் தான் லுக்கும், ஃபீலும் கிடைக்கும். தேர்க்கோலங்களுக்கு பொதுவாக வண்ணம் தீட்டமாட்டார்கள். இருப்பதிலேயே சுலபமான கோலம் பொங்கலுக்கு போடும் பானை கோலம் போலிருக்கிறது. கோலம் சுமாராக அமைந்துவிட்டாலும், வண்ணத்தில் அசத்தி விடலாம்.

கோலங்களுக்கு மதம் கிடையாது. மார்கழி மாதத்தில் கிறிஸ்துமசும், நியூ இயரும் வரும். எல்லார் வீட்டிலும் மெர்ரி கிறிஸ்துமஸ், ஹேப்பி நியூ இயர் என்று ஆங்கிலத்தில் வாழ்த்துகள் எழுதப்பட்டிருக்கும். காஞ்சனா அக்கா மட்டுமே கிறிஸ்துமஸ் தாத்தாவை தத்ரூபமாக கோலமாக்குவார். மற்ற வீடுகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வீடு படத்தில் வரும் தாத்தா மாதிரி சோணங்கியாக இருப்பார். கேரளா ஸ்டைலில் பூக்கோலம் போடுவதும் காஞ்சனா அக்காவின் ஸ்பெஷாலிட்டி. வீட்டுக்கு அருகில் கிடைக்கும் ஊதாநிற காட்டுப்பூக்களை வைத்தே கோலத்தை ஒப்பேற்றிவிடுவார்.

வீட்டு வாசலில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் கோலம் போடும் பழக்கம் அம்மாவுக்கு இருந்தது. சிமெண்ட் தரையில் வெள்ளை மற்றும் சிகப்பு பெயிண்டில் சிரத்தையாக கோலம் போடுவார். வீட்டின் ஓரங்களில் காவிக்கலர் அடித்து வைத்திருப்பார். வாசற்படியில் நிறைய பேர் பெயிண்டால் மஞ்சள் வண்ணம் அடித்து சிகப்பு பொட்டு வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒரிஜினல் மஞ்சளும், குங்குமமும் வாசற்படியில் வைத்தால் தான் நிம்மதி. இன்றும் இது மட்டும் தொடருகிறது. வீட்டில் மொசைக்கும், டைல்ஸும் வந்துவிட்டதால் வீட்டுக்குள் கோலம் போட முடியவில்லை என்பது அம்மாவுக்கு ஒரு குறைதான். அதனால் இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை மட்டும் ஹாலில் ஒரு தாம்பாளத் தட்டில் நீர்நிரப்பி தாமரை உள்ளிட்ட பூக்களை வைத்து அலங்கரித்து கோலமாவு இல்லாமலேயே நீர்க்கோலம் போடுகிறார்.

அம்மா வெளியே எங்காவது போயிருந்தால் நானும் கூட சிறுவயதில் கோலம் போடுவேன். வாசற்படிக்கு முன்னால் மட்டும் ஒரு நாளைக்கு இரு கோலங்கள். காலையில் ஒன்று, மாலையில் விளக்கு வைப்பதற்கு முன்பாக இன்னொன்று. எனக்கு தெரிந்தது ஸ்டார் கோலம் தான். புள்ளி வைக்காமலேயே சுலபமாக போடலாம். மாலை ஐந்து, ஐந்தரை மணியளவில் தங்கச்சி பாப்பாவுக்கு காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு நான் பலமுறை போட்ட அந்த ஒரே ஒரு மாடல் அவசரக் கோலத்தை அம்மாவும், அப்பாவும் என்றுமே பாராட்டத் தவறியதில்லை.

முன்பெல்லாம் யார் வீட்டிலாவது கோலம் போடப்பட்டிருந்தால் சில நொடிகள் நின்று கோலத்தை ரசித்துவிட்டு செல்பவர்களை பார்க்க முடிந்தது. சைக்கிளிலோ, நடந்தோ செல்பவர்கள் கோலம் அழிந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள். இப்போது கோலத்தை ரசிக்க யாருக்கும் நேரமில்லை. கோலம் அழிவதைப் பற்றி யாரும் கவலைப்படுவதும் இல்லை. கோலம் போட மண் தரை கிடைப்பதும் அரிதாகிவிட்டது. கான்கிரீட் தரையாக இருப்பதால் மிக லேசாக தண்ணீர் தெளித்து சின்னதாக ஸ்டார் கோலம் போடுகிறார்கள். அதன் ஆயுளே அதிகபட்சம் பத்து நிமிடம் தான்.

மயிலாப்பூரில் கோலப்போட்டி நடக்கும்போது பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது. வீடுகளில் கோலம் போட முடியாத மாமிகள் அந்நேரத்தில் ஒட்டுமொத்தமாக படையெடுத்து தங்கள் திறமைகளை காட்டுகிறார்கள். வடக்கு மாடவீதியில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் போடுவார் பாருங்கள் கோலம். என்ன வேகம்? என்ன நேர்த்தி? என்ன அழகு?