13 அக்டோபர், 2011

படித்தவர்களும், அரசியலும்!

அடிக்கடி இல்லாவிட்டாலும், தேர்தல் நேரங்களில் மட்டுமாவது இந்த கோஷம் சற்று ஓங்கி ஒலிப்பதை கவனிக்க முடிகிறது. “படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்”. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கணக்காக இதென்ன அபத்தம் என்று குழம்பிப் போகிறோம். இப்போது என்னவோ அரசியலில் இருப்பவர்கள் அத்தனை பேரும் கைநாட்டுகள் என்பதுபோல ஒரு பொதுப்புத்தி மக்கள் மனதில் வலுக்கட்டாயமாக so called படித்தவர்களாலும் ஊடகங்களாலும் திணிக்கப்படுவது சர்வநிச்சயமாக ஜனநாயகத்தின் பண்புக்கு எதிரானது.

அதிலும் குறிப்பாக இந்த ஐஐடி, ஐஐஎம் பீட்டர் கோஷ்டிகளின் தொல்லை கொஞ்சமும் தாங்கமுடியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது இட்லிக்கடை சரத்பாபுவை வைத்து கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது யாரோ கொட்டிவாக்கம் வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளராம். அதென்னவோ தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு சாலை மறியல், ஒரு கோரிக்கை மனு.. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?

‘இல்லை, நாங்களும் மக்களுக்காக போராடியிருக்கிறோம்’ என்று இந்த படித்தவர்கள் சொல்வார்களேயானால், அதிகபட்சம் ரத்ததானம் செய்திருப்பார்கள். மரம் நட்டிருப்பார்கள். இல்லாவிட்டால் ஏதோ ஒரு என்.ஜி.ஓ.வை நடத்திக் கொண்டு 30% சேவை, 70% லாபம் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது. பள்ளிப் பகுதியிலும், சமய வழிபாடுகள் நடக்கும் பகுதியிலும் இருக்கும் டாஸ்மாக்கை மூடவைக்க போராடி, மக்களைக் கூட்டி மறியல் செய்து, ரவுடிகளால் தாக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வெற்றி கண்ட குறைந்தபட்ச அனுபவம் கூட இவர்களுக்கு இருப்பதில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் ஐ.ஐ.எம். பட்டதாரி சரத்பாபு போட்டியிட்டபோது அதை கடுமையாக எதிர்த்தேன். ஏனெனில் அவர் அத்தொகுதியில் தீர்த்துவைப்பேன் என்று வாக்குறுதி அளித்த பிரச்சினைகள்தான். பிறந்ததிலிருந்தே தென்சென்னையில் வாழும் எனக்கு சரத்பாபுவை விடவே அதிகம் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும். உதாரணத்துக்கு அவர் தீர்த்து வைப்பதாக சொன்ன வேளச்சேரி – மடிப்பாக்கம் – பள்ளிக்கரணை பகுதி வெள்ளநீர் வடிகால். புவியியல் ரீதியாக இப்பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்புகள் இல்லை என்று எப்போதோ நிபுணர்கள் அறிவித்துவிட்டார்கள். ஏனெனில் சென்னையிலேயே கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதி இது. இங்கே பாதாள சாக்கடை கொண்டுவரும் திட்டமேகூட இந்த புவியியல் அமைப்பால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. +2 ஃபெயில் ஆன எனக்கு தெரியும் இந்தப் பிரச்சினை கூட, ஐ.ஐ.எம்.மில் படித்துவிட்டு வந்தவருக்கு தெரியவில்லை என்றால், அவருக்கு ஏன் நான் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி உளற வைக்க வேண்டும்? மேலும் அவர் கொடுத்த பல வாக்குறுதிகள் வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர் கொடுக்க வேண்டிய வாக்குறுதிகள்.

இப்படியிருந்தும் so called படித்தவர்கள் பலரும் புல்லரித்துப் போய் சரத்பாபுவுக்கு வாக்குப் போடுங்கள் என்று வாய்வழிப் பிரச்சாரம் செய்ததையும், ஊடகங்களெல்லாம் ஏதோ சென்னை மக்களை காக்க வந்த மாகானுபவர் என்றும் பரப்புரை செய்ததையும் விட பெரிய கேலிக்கூத்து வேறொன்றும் இருந்துவிட முடியாது. அவருடைய இட்லிக்கடைகள் மூலமாக ஏதோ 30-40 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்கிறார்கள். வருமான வரித்துறை இதை கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ந்து, உண்மையெனில் போதுமான வருமான வரியை அவர் செலுத்தியிருக்கிறாரா என்று தெளிவுப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் பார்த்த Food King Outletகளை விடவும் முனியாண்டி விலாஸ்கள் கொஞ்சம் சுமாரானவையே. சரத்பாபு பற்றி வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிம்பம் தவறானது எனில் தவறான தகவல்களை மக்களுக்கு தருவதாக சொல்லி, அவர் மீது இதுவரை அவரை ஆதரித்து வந்த படித்தவர்களே கேஸ் போட வேண்டும். அப்படி அவருக்கு நிஜமாகவே வருமானம் வரும் பட்சத்தில், அவர் ஏன் கல்லூரிகளில் தன்முனைப்புப் பேச்சுகளை பேசி 25000, 30000 என்று ஃபீஸ் வாங்கப் போகிறார்? (எனக்குத் தெரிந்து இப்போது அவருடைய மேஜர் வருமானம் இதுதான்) ஓசியிலேயே மாணவர்களுக்கு ‘ஊக்கம்’ கொடுப்பாரே? மக்கள்/சமூகம் குறித்த சரத்பாபுவின் புரிதல் எவ்வளவு மொக்கையானது என்பதை, அவர் பங்கேற்ற ‘நீயா நானா’ டிவி நிகழ்ச்சி மூலமாக அப்பட்டமாக பறைசாற்றியிருக்கிறார்.

ஐ.ஐ.எம் / ஐ.ஐ.டி ரேஞ்சுக்கு படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவுசெலவு அவர்களுக்கு அத்துபடி. ஆனால் பொண்டாட்டிக்கு வாங்கித்தர வேண்டிய மல்லிகைப்பூ முழம் பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் ஏகத்துக்கும் படித்த மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும் ஏழை என்பதற்கு உச்சவரம்பு ஒரு நாளைக்கு ரூ.32/- வருமானம் என்று நிர்ணயிப்பார்களா?

படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. கார்ப்பரேட் துறைகளில் நடைபெறும் சுரண்டலுக்கும், எந்த படிக்காதவனுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

படித்தவர்களும் அரசியலுக்கு வரலாம் என்கிற வாதத்தை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லுவது பாசிஸம். அப்படியெனில் அன்னா ஹசாரே க்ரூப்பு மட்டும்தான் அரசியலில் இருக்கமுடியும்.

இப்போதே கூட சட்டமன்றங்களிலும், பாராளுமன்றங்களிலும் இருப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள்தான். ஏராளமான மருத்துவர்களும், பொறியியலாளர்களும், பொருளாதாரம் படித்தவர்களும் நிரம்பிய அவைகள்தான் இவை. எனவேதான் சொல்லுகிறோம். படித்தவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும் எல்லாம் மாறிவிடும் என்பது வெறும் யூகம். படித்தவர்களால்தான் மாற்றம் சாத்தியம் என்பது மாயை. படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?

41 கருத்துகள்:

  1. ///அவர் பங்கேற்ற ‘நீயா நானா’ டிவி நிகழ்ச்சி மூலமாக அப்பட்டமாக பறைசாற்றியிருக்கிறார்.//

    நானும் பார்த்தேன் ..

    நல்லாவே உளறி பல்பு வாங்குனார்!!!

    அவரை பற்றி தங்கள் கருத்து உண்மையே!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு சகோ
    இன்னும் என்ன இருக்குன்னு சொரண்டிக்கிடே இருப்பனுகளோ?
    எங்களையும் ஏமாத்தி என்ன கண்டாங்களோ?

    ஏமாந்தே பழக்கப்பட்ட நமக்கும் யாரும் சொரண்டாம இருந்தா ஒரு மாதிரி தான் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  3. குறிப்பாக இந்த ஐஐடி, ஐஐஎம் பீட்டர் கோஷ்டிகளின் தொல்லை கொஞ்சமும் தாங்கமுடியவில்லை. //

    உண்மையிலேயே முடியலை

    பதிலளிநீக்கு
  4. கிழக்கு-பத்ரிக்கும் உங்களுக்கும் என்ன வாய்க்கா தகராறு தலைவரே
    சில மாதங்களில் எழுதிய 2 அல்லது 3 பதிவுகளில் வாரியுள்ளீர்கள். பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு தல, இந்த பதிவும் அவருக்கு சமர்ப்பணம்
    ராகவேந்திரன், தம்மம்பட்டி

    பதிலளிநீக்கு
  5. வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

    அதுவும் இந்த சரத்பாபு நீயா நானாவில் உளறிய போது வந்த கடுப்பு இருக்கே.

    பதிலளிநீக்கு
  6. " அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே? "
    Super Punch

    பதிலளிநீக்கு
  7. thalaiva..antha neeya naana program ku oru link kodunga..naanum paathu sirikiren...

    பதிலளிநீக்கு
  8. // படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.

    கலைஞர்???????


    //கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?

    கொள்ளைகூட்ட தலைவனா எப்பவும் படிக்காதவந்தான் இருக்கணும்னு ஆசைபடுறீங்க? பேசாம கல்வி , சுகாதாரம் , ராணுவம் இது எல்லாத்தையுமே படிக்காதவன் கையிலேயே கொடுத்திடலாமே.. எதுக்கு பள்ளிக்கூடம், கல்லூரி எல்லாம் போயி படிச்சிக்கிட்டு , .. எவனுக்கு நல்லா ஏமாற்றும் திறமை இருக்கிறதோ அவன் ஒவ்வொரு துறையிலும் மேலே வந்திட்டு போறான்...

    //ஐ.ஐ.எம் / ஐ.ஐ.டி ரேஞ்சுக்கு படித்தவர்களிடம் நாம் காணும் பிரச்சினை இதுதான். அமெரிக்கப் பங்குச்சந்தை நிலவரம் அவர்களுக்கு தெரியும். மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் வரவுசெலவு அவர்களுக்கு அத்துபடி.

    பாஸ் இன்னைக்கு படிக்காதவன் bottom - up approach கொண்டு மல்லிகை பூ விலையை குறைத்து அதன் மூலம் பங்கு சந்தையை வளர்த்து விடலாம் என்று நிலாவை காட்டி சோறு ஊட்டி நம்மை ஏமாற்றி சுரண்டி பிழைக்கிறான் .. ஏன் அவர்களுக்கு மாற்றாய் இவர்களுக்கு top - down approach கொண்டு பங்கு சந்தையை உயர்த்தி விட்டு அதன் மூலம் அடிப்படை பிரசனைகளான மல்லிகை பூ விலைகளை குறைப்பதற்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க கூடாது...

    பதிலளிநீக்கு
  9. //படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை.//

    Dear Yuvakrishna Sir,

    1) Ungalukku kolgai parappu cheyalaalar poruppu kodukkapattu irukiratha?

    2) Sarkaria commission report patriyum koorinaal nallathu.

    பதிலளிநீக்கு
  10. வரிக்கு வரி நச்சுனு இருந்தது...

    சம்பாதித்த 30, 40 கோடிக்கு வரி விளக்கு வாங்க வேண்டாமா... அதுக்கு தேர்தல் தான் சிறந்த வழி !!!

    பதிலளிநீக்கு
  11. படிப்புக்கும் பண்பு, நேர்மை நியாயத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லைங்கிறது சரிதான். அதுக்காக படிக்கலைங்கிற ஒரே காரணத்துக்காக கலைஞரும் காமராஜரும் ஒண்ணா? இந்த மாதிரி சந்துல சிந்து பாடுற வேலையெல்லாம் படிச்சவங்க மட்டும் தான் பண்ணுவாங்க.

    பதிலளிநீக்கு
  12. Yuva-my support 100% for the contents of this article. As a policy we should discourage people like them "nunipil" medhavigal.
    surya

    பதிலளிநீக்கு
  13. சூப்பரா எழுதி இருக்கீங்க யுவா. ஆனா பொதுவா மக்கள் நினைக்கிறது என்னன்னா, படிச்சவங்களும் அரசியலுக்கு வரணும் ஆனால் ஊழல் பண்ணாம இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  14. http://www.bangaloremirror.com/article/1/2011101320111013161301264c25c3bb5/Techiepolitician-proves-he-is-no-different.html

    பதிலளிநீக்கு
  15. // காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை...//

    அப்போ... நரேந்திரமோடி, நிதிஷ்குமார் இவங்க எல்லாம் ஒண்ணுமே பண்ணலனு சொல்றிங்களா??

    ஆமாம்.. கலைஞர் செய்த அளவுக்கு இவங்களால செஞ்சிருக்க முடியாதுதான்..


    ஆனாலும் உங்கள் வாதம் மிகச் சரியானதே..
    //படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.//

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு.... சரத்பாபு சென்னை மேயர் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார்... அவர் விஸ்கிகாந்த் கட்சியில் சேர்ந்ததாகக் கூட செய்தித்தாளில் பார்த்த ஞாபகம் - அருண் சொக்கன்

    பதிலளிநீக்கு
  17. சிந்திப்பவன்8:16 PM, அக்டோபர் 13, 2011

    //// படிக்காத காமராஜரும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், உருவாக்கிய மாற்றங்களை இந்திய அளவில் எந்தப் படித்த ஆட்சியாளரும் உருவாக்கியதாக நமக்கு நினைவில்லை//

    சந்து கிடச்சா சான்ட்ரோ கூட விடுவீங்களே ,யுவா!

    முதல்வராக பணியாற்றுகையில்,
    காமராஜ்..அளித்தார்
    எம்.ஜி.ஆர...முழித்தார்
    தலிவர்..அழித்தார்.

    நமக்கு தேவை ஒரு நேர்மையான புத்திசாலி

    காமராஜிற்குப்பிறகு அது அமையவில்லை.
    எம்.ஜி.ஆரிடம் புத்திசாலித்தனம் இல்லை தலிவரிடம் நேர்மை இல்லை.

    பதிலளிநீக்கு
  18. //இப்போது யாரோ கொட்டிவாக்கம் வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளராம். அதென்னவோ தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் மட்டுமே இவர்களுக்கு அரசியலில் குதிக்க வேண்டும், மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று ஆர்வம் வந்துவிடுகிறது. மற்ற நேரங்களில் மக்களை கொசு கடித்தாலென்ன, சாக்கடை ஓடினால் என்ன? ஒரு சாலை மறியல், ஒரு கோரிக்கை மனு.. ஏதாச்சும் உண்டா? பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டால் மட்டும்தான் மக்களுக்காக இந்த படித்தவர்கள் போராடுவார்களா?//

    கொட்டிவாக்கம் வேட்பாளர் ராஜ் செருபல் ஆதாரத்தோடதான் சொல்லி இருக்கார்.
    மேலும் பார்க்க இந்த ஒளிப்பதிவை.....
    http://thoughtsintamil.blogspot.com/2010/07/blog-post_24.ஹ்த்ம்ல்
    படிச்சவுங்க நல்ல எண்ணத்தோட வந்தாலும் தப்புன்னு சொல்றிங்க. "ஒரு வேளை திகார் சிறை அனுபவம், ஊழல் குற்றச்சாட்டு" போன்ற தகுதி இருந்தால் தான் நல்ல வேட்பாளர்னு ஒத்துக்கொள்வீர்களோ

    பதிலளிநீக்கு
  19. உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதா, இல்லையா என்பதை தாண்டி.. .உங்கள் எழுத்து தொடர்ந்து வாசிக்க வைக்கிறது..

    ரசனையான வார்த்தைகளை வார்த்து படிப்பவனை வசியம் செய்யும் வித்தகன் நீர்...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. யுவா, உங்களுடைய மாஸ்டர் பீஸ் இந்த பதிவு. இதே கருத்தை என்னுடைய இந்த பழைய பதிவும்வலியுறுத்துகிறது. ஆனால் அந்த பதிவு கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது :-)

    பதிலளிநீக்கு
  21. ஓ... நீங்க பாரா பக்கமா? பாவம் பத்ரி

    பதிலளிநீக்கு
  22. // ஒரு அரசியல் கட்சியில் தொண்டனாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, அடிமட்டத்தில் இருந்து மக்களுக்கு அறிமுகமாகி படிப்படியாக மேலே வரும் ஒருவனுக்கும், இவர்களுக்குமான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமானது. பள்ளிப் பகுதியிலும், சமய வழிபாடுகள் நடக்கும் பகுதியிலும் இருக்கும் டாஸ்மாக்கை மூடவைக்க போராடி, மக்களைக் கூட்டி மறியல் செய்து, ரவுடிகளால் தாக்கப்பட்டு, அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்பட்டு வெற்றி கண்ட குறைந்தபட்ச அனுபவம் கூட இவர்களுக்கு இருப்பதில்லை.//

    ஏனோ எனக்கு தயாநிதி மற்றும் கனிமொழி இருவரும் நினைவிற்கு வருகிறார்கள். திருநெல்வேலி சட்ட மன்ற வேட்பாளர் திரு லக்ஷ்மணன் அவர்களும், VKP சங்கரும், ஆ துரை அவர்களும் ( எல்லாம் உங்கள் கட்சி மக்கள் தான் - தற்போதைய மேயர் ALS, தேர்தல் பணிகுழு கருப்பசாமி பாண்டியன், சென்ற முறை சபாநாயகராக இருந்த திரு ஆவுடைஅப்பன் - இவர்களது மகன்கள் ) இந்த நிலையில் தான் உங்கள் கட்சியார் முன்னிறுத்தப் படுகிறார்கள் என்ன ?

    பதிலளிநீக்கு
  23. >படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம்.

    Well said :-)

    பதிலளிநீக்கு
  24. படித்தவர்கள் பலர் அன்றைய திமுகவில் இருந்தார்கள்.திமுகவின் துவக்க கால தலைவர்கள் பலர் நேரடியாக அப்படித்தான் அரசியலுக்கு வந்தார்கள்.
    அண்ணாத்துரை எத்தனை ஆண்டுகள் களப்பணி அரசியலில் ஈடுப்பட்டு பின் திமுகவைத் துவக்கினார்.முரசொலி மாறன்,இரா.செழியன் போன்றோர் களப்பணியாளர்களா என்ன.எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற நடிகர்கள் களப்பணியாளர்களா?.
    அரசியலில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம்.
    அறிவியலாளர் இளங்கோ பஞ்சாயத்து தேர்தலில் நின்று வென்று மாற்றங்களை கொண்டுவரவில்லையா.
    நிதிஷ்குமார் படிப்பில்லாமல் அந்த காலத்து பியுசியா இல்லை இப்போதைய மகாராஷ்டிர முதல்வர்
    பள்ளிபடிப்பயையே முடிக்காதவரா.
    அவரது கல்வித்தகுதி என்னவென்று தெரியுமா.
    படித்தவர்கள் வரக்கூடாது, நிகர்நிலை பல்கலைகழகம் நடத்துபவர்கள் வரலாம் என்று சொல்கிறீர்களா.அவர்கள் கருப்பினை வெள்ளையாக்க பல வழிகளில் ஒன்றாக அரசியல் கட்சி நடத்தலாம்
    என்கிறீர்களா.

    பதிலளிநீக்கு
  25. சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் Lok Parithran என்று ஒரு காமெடி பீசை எல்லோரும் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு ஆத‌ரித்த‌ன‌ரே. அது என்ன‌ ஆன‌து?

    பதிலளிநீக்கு
  26. கிருஷ்.. அருமையான பட்டாசான கட்டூரை...சமீபத்தில் நீங்கள் எழிதியவற்றில் ஆகச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
  27. யுவகிருஷ்ணாவின் பதிவு நியாயமானது. லோக பரித்ரான் போன்றவர்கள் செய்துவிட்ட கூத்தைப் பார்த்து ‘படித்தவர்கள்’, அதுவும் ‘ஐஐடி’, ‘ஐஐஎம்’ பிராண்ட் என்று யாராவது வந்தால் நமக்குக் கோபம் வரவேண்டும். நியாயமே.

    சரத்பாபுவின் டாக்டிக்ஸ்மீதும் கொள்கைகள்மீதும் எனக்குப் பல விமரிசனங்கள் உண்டு. அவருடைய நேர்மையை நான் இப்போதைக்குச் சந்தேகிக்கமாட்டேன்.

    ராஜ் பற்றி யுவகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லை. ஒரு பத்திரிகைக்காரராக அவர் பல இடங்களுக்கும் போய்வந்து, வாச்சாத்தி, பரமக்குடி என்றெல்லாம் கட்டுரைகள் எழுதவேண்டியிருப்பதால், ஒருவேளை கொட்டிவாக்கம் வேட்பாளர் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம்.

    ராஜ் எனக்குத் தெரிந்து கடந்த ஐந்தாண்டுகளாக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அடையாறு, திருவான்மியூர் பகுதி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு மட்டுமல்ல, மாநகராட்சி ஊழியர்களுக்கும் அவரை நன்றாகவே தெரியும். மாநகராட்சி கமிஷனுருக்கும் அவரைத் தெரியும். இது, ஸொய்ங் ஸொய்ங் என்று சிவப்பு விளக்கு எரிய காரில் போய் இறங்கி ‘அவருக்குத் தெரியும்’ ‘இவருக்குத் தெரியும்’ மேட்டர் அல்ல. களத்தில் இறங்கிச் செய்யும் வேலையால் வருவது.

    தேர்தலில் பங்கெடுக்க அனைவருக்கும் உரிமையுண்டு. யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது மக்கள் கையில்.

    பதிலளிநீக்கு
  28. "கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?"

    மிக அருமையாக சொன்னீங்க........
    அரசியல் பற்றிய பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  29. //ராஜ் பற்றி யுவகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லை.//

    பத்ரி சார்! நிஜமாகவே தெரியவில்லை. ஆனால் ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து இவரது பிரச்சாரத்தை ஸ்பெஷலாக போட்டோ எடுத்து ‘படித்தவர் வாக்கு கேட்கிறார்’ என்று எழுதிக் கொண்டிருப்பதால் ஒரு மாதிரி அலர்ஜி ஏற்பட்டு விட்டது :-(

    பதிலளிநீக்கு
  30. //படித்தவர்கள் நல்லவர்கள், ஊழல் செய்யமாட்டார்கள் என்பது அப்பட்டமான அயோக்கியத்தனம். இது தனிமனித குணம் சார்ந்த விஷயம். இதற்கும் படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை.// கண்டிப்பாக.......தயாநிதி, கலாநிதி, கனிமொழி எல்லோரும் படித்தவர்கள்தானே

    பதிலளிநீக்கு
  31. யுவா: உண்மைதான். படித்தவர் என்பதால் அவருக்கு வாக்கு தரவேண்டுமா என்பதில் சிக்கல்கள். ஒன்று, லாலு யாதவ் உட்பட பெரும்பாலான எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எல்லோருமே படித்தவர்கள்தாம். அவர்களிடம் டிகிரி படிப்பு உள்ளது. பல அரசியல்வாதிகள் சட்டம் படித்துள்ளனர். அப்படியானால் ராஜ் என்பவர் என்ன ஸ்பெஷலாகப் படித்துவிட்டார்? வேறு கல்லூரி, வேறு டிகிரி. அதில் ஓரிரண்டு அமெரிக்க டிகிரிகள் இருக்கலாம். (இவர் ஒன்றும் ஐஐடி, ஐஐஎம் அல்ல.)அதனாலேயே ‘படிச்சவன் வரான், வாக்கு கொடு’ என்று கேட்பது அறிவீனம். நாங்கள் இதனைச் செய்வதில்லை. ராஜுமே இதை தன் நேர்காணலில் சொல்லியிருக்கிறார். நீங்கள் சார்ந்திருக்கும் பத்திரிகைத் தொழிலில் ஈடுபடும் சில ரிப்போர்ட்டர்கள் செய்யும் கோளாறு இது. சாடவேண்டியது வேறு ஆசாமிகளை.

    ஆனால், கவனம் படித்தவர் என்பதால் வருவதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மத்தியதர, புரொஃபஷனல் கிளாஸ் ஒன்று உள்ளது. அது கைகளை அழுக்காக்கிக்கொள்ள விரும்பாத ஒன்று. அதாவது என்னைப் போன்றவர்கள். வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு ஊரில் உள்ள எல்லோரையும் குற்றம் சொல்வது. நாடு மோசம் என்றால், அதற்குக் காரணம் அரசியல்வாதிதான் என்பது. ஆனால் நீ என்ன செய்யப்போகிறாய் என்றால் டிவி பார்ப்பதற்கும் இண்டெர்னெட்டில் பதிவு போடுவதற்கும் மேலாக ஒன்றும் செய்யாத கூட்டம்.

    ராஜ் இதுபோன்ற கூட்டத்திலிருந்து வெளியே வந்து தேர்தலில் நிற்பவர். அதேபோலத்தான் சரத் பாபுவும். வேறு சிலரும்கூட. உடனே ஊடகங்கள் இவர்களைப் பற்றி வெளிச்சம் போட்டு ஆகா, ஊகாவென்று எழுதித் தள்ளுகின்றன. தயாநிதி மாறன் அமைச்சரானதும் ‘ஹார்வர்ட் ரிட்டர்ண்ட்’ என்று பீலா விட்டார்கள். தயாநிதி அங்கே ஒரு வார கோர்ஸ் ஒன்று செய்திருந்தார். அவ்வளவுதான்.

    உண்மையில் படிப்பு அது இது எல்லாம் பம்மாத்து. வேலை செய்வாரா இந்த ஆள்? அதற்கான ஆர்வம் இருக்கிறதா? குப்பை என்றால் முகம் சுளிப்பவரா? குடிசைவாசிகள் என்றால் ‘நாஸ்டி பீப்பிள், வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ், ஐ சே’ என்று ஒதுங்குபவரா? இல்லை, இவையெல்லாம் நம் பிரச்னைகள், இவற்றை நம்மாலேயே தீர்க்கமுடியும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான தீர்க்கமான கருத்துகள் கொண்டிருப்பவரா? களப்பணி செய்திருக்கிறாரா? இவருடைய டிராக் ரெகார்ட் என்ன?

    இவற்றைத்தான் நாம் கேட்கவேண்டும். ராஜிடம் கேட்கவேண்டும். சரத் பாபுவிடம் கேட்கவேண்டும். கேளுங்கள். உங்களுக்கு ராஜுடைய போன் நம்பர் தருகிறேன். நேரம் இருந்தால் பேசுங்கள். கடுமையான கேள்விகளை, இங்கே எழுதிய அனைத்தையும் கேளுங்கள். உனக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது, நீ என்ன புடுங்குவாய் என்று கேளுங்கள். பதிலைக் கொண்டு சந்தோஷம் அடைந்தால் அதையும் எழுதுங்கள்.

    எஸ்.எம்.எஸ்ஸில் ராஜின் நம்பரை அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. மெடில்கிளாஸ் ஆட்களே சிலர் கார்ப்பரேட்டுகள் என்ன செய்தாலும் அது பெரிய ஊழலாகைருந்தாலும் அது நன்மைக்கே என்கிறார்கள். அமெரிக்க தேர்தல் முறையைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இந்தியாவில் மாநிலங்களவை உறுப்பினர் பற்றி தெரியவில்லை. படித்தவன் தான் சூதும் வாதும் அதிகம் செய்கிறார்(ன்). உதாரணம் மன்மோகன் சிங்.

    பதிலளிநீக்கு
  33. ////ராஜ் பற்றி யுவகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லை.//

    பத்ரி சார்! நிஜமாகவே தெரியவில்லை.//

    தெரியவில்லை என்றால் தாக்கி முழ நீட்டம் பதிவு எழுதுவதற்கு முன்பு ஒரு நிமிடம் கூகிளில் தேடிப் படித்து விட்டு எழுதுவது! சோம்பேறி!

    பதிலளிநீக்கு
  34. @ பிரியன் - கலைஞர் என்ன செய்தார் என்பது உங்கள் கண்களுக்கு தெரியாமல் போகலாம் ஊழல் மட்டுமே தான் கண்களுக்கு தெரியுமென்றால், உங்களுக்கு MGR மற்றும் அவருடைய ஆட்சி காலத்தைப்பற்றி தெரியவில்லை என்று தான் அர்த்தமாகும்(அந்தகால MGR அமைச்சரவையின் இன்றைய பின்புலங்களை முடிந்தால் நோக்குங்கள்) , பாமரனுக்கும் அரசியல் முக்கியத்துவம் MGR மற்றும் கலைஞர் ஆகியோரால் தான் உருவாகியது. இந்த மூவரால் நடந்திருக்கும் அரசியல் மாற்றங்கள் நிறையவே.

    யுவ! உங்கள் கட்டுரை மிக நல்ல விசயங்களை பற்றி சொல்லி இறக்கிறது, பாராட்டுக்கள், ஆனால் சரத்பாபு என்ற தனி மனிதரை மட்டுமே அதிகம் பேசியது தான் சரியாக படவில்லை. ஆனால் இவரும் சராசரி அரசியால் வியாதிதான் என்பதை, இவர் விசயகந்துடன் அவர் அலுவலகத்துக்கு சென்று கட்சியில் சேர்ந்து பின் seat கிடைக்காவில்லை என்றவுடன், தனியாக நின்றாரே அப்போதே அவர் எல்லா தகுதிகளையும் இழந்துவிட்டார். திட்டச்சேரி ச முருகவேல் - ஆழ்வார்பேட்டை - சென்னை 600018 .

    பதிலளிநீக்கு
  35. பத்ரி சொல்வதைப் போல விசாரித்து தெரிந்து கொண்டு அதை எழுதுவது உங்கள் கடமை யுவா. படித்தவர்க்ள் என்ற பெயரில் சுற்றிய வெட்டி கூட்டத்தை தோலுரித்த நீங்க்ள் கொட்டிவாக்கம் வேட்பாளரின் உன்மை மதிப்பீடு பற்ற்யும் எழுத வேண்டும். அவர் நியாயவானாக தகுதியானவராக இருப்பின் விசாரிக்காமல் சேறு வாரியிறைத்த பழி உங்களை சாரும். உங்களை நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  36. "கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட எல்லா முக்கியத்துறைகளுமே படித்தவர்களால்தான் நம் நாட்டில் கையாளப்படுகிறது. இத்துறைகளில் நடைபெறும் சுரண்டல்களும், கொள்ளைகளும் படித்தவர்களால்தான் நடத்தப்படுகிறது. அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே?"
    ரொம்ப சரியாச் சொன்னீங்க யுவா.

    பதிலளிநீக்கு
  37. padiththa(IAS,IPS)athikaarikal thaan intha naattai aalukiraarkal.MGR,ANNA,Karunaandihi akiyor thittangalai avarkal aalosanai perru athanpadi thaan seyalpaduththappadukinrana.ithil pala athikaarikal muttukattai pottu,avarklai ithe thalaivarkal pothu medaikalil gaattamaaka pesiyathum varalaaru.

    பதிலளிநீக்கு
  38. //அரசியலை மட்டுமாவது பாமரனுக்கு இவர்கள் விட்டுத்தரட்டுமே? //
    Its common for all.
    except this line, everyting is acceptable.

    பதிலளிநீக்கு
  39. சாந்தசுந்தரம்1:15 PM, அக்டோபர் 17, 2011

    லக்கி, சரத்பாபுவ ஒரு பிளாக்கில் கிழிகிழின்னு கிழிச்சிருக்காங்க பாத்தீங்களா ?? பத்ரியோட லின்க்குலதான் அதப்படிச்சேன் .... ஏன் இதப்பத்தி ஊடகங்கள் அவ்வளவா கண்டுக்கலன்னு புரியல ???

    பதிலளிநீக்கு
  40. உண்மையில் கல்வித்தகுதிக்கும் நேர்மையான செயல்பாடுக்கும், வெற்றிகரமான செயல்பாடுக்கும் சம்பந்தம் இல்லை. பள்ளிக்கூடத்துக்கே போகாத காமராசர் எவ்வளவோ நன்மை செய்தார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்த சத்யம் ராமலிங்க ராஜு என்னவெல்லாம் செய்தார் என்று தெரியும். இது ரெண்டும் எக்செப்ஷன்ஸ் என்றாலும், கல்வித்தகுதி மட்டுமே பார்ப்பது முறையல்ல. மேலும், நாம் கல்வி என்று கூறுவது ஆனா ஆவன்னா, ஏபிசிடி, ஒண்ணு ரெண்டு மூணு என்று தெரியவைக்கும் மொழி, அறிவியல், கணிதம் போன்ற திறன்களே ... உண்மையான கல்வி என்பது Character-Building Education என சொல்லப்படும் மக்களை நேர்வழியில் செம்மைப்படுத்தும் அறவழி போதிக்கும் கல்வியே... இது இப்போது இல்லை ... அவ்வகையில் நம்மில் பெரும்பாலோர் தற்குறிகளே ... கல்வினிலையக் கல்வியில் பரிச்சயம் இல்லாமல் அமைச்சு செய்பவர்க்கு உதவ உருவாக்கப்பட்டதுதான் அதிகார வர்க்கம் ... அதில் பலர் நன்னெறி உள்ள நல்லோர் ... பலர் நல்ல அமைச்சர்களுக்கும் தில்லுமுல்லு, சூது, வாது லூப்ஹோல்ஸ் எல்லாம் கற்றுக்குடுத்து கெடுக்கும் தேள்கள் .... எனவே அதிகாரிகளும் நல்லவராகவும் வல்லவராகவும் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு