“அப்”
சீரான லயத்தோடு நாற்பத்தியெட்டு ஜோடி கரங்களும் உயர்ந்தன.
“டவுன்”
இம்முறை ராணுவ ஒழுங்கு வேகத்தில், அதே கரங்கள் இறங்கின.
மீண்டும் ‘அப்’, மீண்டும் ‘டவுன்’. மீண்டும் சீரான லயம், மீண்டும் ராணுவ ஒழுங்கு. இப்படியே ஏழெட்டு முறை.
ரேகா டீச்சருக்கு ‘அப், டவுன்’ சொல்லுவது பிடித்தமான விஷயம். மாணவ, மாணவியர் ஒரு சேர கையை தூக்குவதும், ஒரு சேர கையை இறக்குவதும் பார்ப்பதற்கு அழகான காட்சி. அதே நேரம் இவர்கள் தனது கட்டளைக்கு கீழ்ப்படிகிறார்கள் என்பதும் ஒருமாதிரியான குரூர மகிழ்ச்சியை டீச்சருக்கு தருகிறது.
இந்த வயதில் மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். ஆசிரியருக்கு கீழ்படிவது என்பது அவசியமான குணம் என்பதும் டீச்சரின் எண்ணம்.
‘அப், டவுன்’ சம்பிரதாயத்தால் ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை வளர்ப்பது ஒரு பலன். வகுப்பு ஆரம்பிக்கும்போது கலகலவென்று பேசிக்கொண்டிருக்கும் மாணவர்களின் சலசலப்பை அடக்க முடிவது இன்னொரு பலன். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.
“என்ன டீச்சர், நர்சரி ஸ்கூல் டீச்சர் மாதிரி இன்னமும் ‘அப், டவுன்’ சொல்லிக்கிட்டிருக்கீங்க?” குழுவாக சாப்பிடும்போது ஒருமுறை கேட்டார் ட்ரில் மாஸ்டர் நடராசன்.
அப்போது ரேகா டீச்சர் சொன்ன விளக்கம்தான் போன பாராகிராப்பில் நீங்கள் படித்த ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் பலன்கள்.
“அதுக்குன்னு பத்தாங்கிளாஸ் பசங்களுக்கு கூட ‘அப், டவுன்’ சொல்லணுமா டீச்சர், அவங்கள்லாம் வளர்ந்துட்ட பசங்க இல்லையா.. பசங்களுக்கு மீசை வளர்ந்துடிச்சி. பொண்ணுங்க தாவணி போட்டுக்கிட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்குன்னு சுயமரியாதை இருக்குமில்லே?”
“இல்லே சார். பசங்களை பசங்களா வெச்சிருக்கணும். இல்லேன்னா நம்ம தலைக்கு மேல ஏறி விளையாடுவாங்க”
இந்த நடராசன் மாஸ்டருக்கு இதே வேலையாகப் போகிறது. சுயமரியாதை, அது, இதுவென்று பள்ளியில் இவர் ஒரு கலகக்கார ஆசிரியர். பசங்களுக்கு ஓவராக செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கிறார். படிக்கிற பசங்களுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி, அது, இதுவென்று நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். ஒழுக்கம், படிப்பு – இது ரெண்டுமே இவருக்கு ஆகாது. எனவே ட்ரில் மாஸ்டரை மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காதது மாதிரி, ரேகா டீச்சருக்கும் பிடிக்காது.
அன்று ரேகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக ஏற்பாடு. காலை பள்ளிக்குச் சென்ற டீச்சர், தலைமை ஆசிரியர் அனுமதியோடு ரெண்டு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டாள். அம்மாவும், அக்காக்களும் சமையலில் மும்முரமாக இருக்க.. அப்பா, அண்ணன், தம்பி மூவரும் வீட்டுக்கும், ரோட்டுக்குமாக பரபரப்பாக இருந்தார்கள். வீடு முழுக்க உறவுகள் மயம். ரேகாவை வழக்கத்துக்கும் மாறாக கூடுதல் மேக்கப் போட்டு சிங்காரித்துக் கொண்டிருந்தார்கள். இது நாலாவது வரன். இந்த இடமாவது அமையணும் என்று அப்பாவுக்கு டென்ஷன்.
ஐந்தரை மணிவாக்கில் மாப்பிள்ளை வீட்டார் பந்தாவாக காரில் வந்திறங்கினார்கள். சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ரேகா. மாப்பிள்ளை களையாகவே இருந்தார். கழுத்தில் தடியான செயின். கையில் பிரேஸ்லேட். விரல்களில் மோதிரங்கள். கொஞ்சம் வசதியான இடம்தான் போலிருக்கிறது.
இரு குடும்பத்தாரின் குசல விசாரிப்புகள் முடிந்தது.
“ரேகா, காப்பி எடுத்துக்கிட்டு வாம்மா” – அப்பாவின் அழைப்புக்காகவே காத்திருந்தவள், கையில் காப்பி டம்ப்ளர்கள் நிரம்பிய தட்டை எடுத்துக் கொண்டு, அன்னநடை நடந்து வந்தாள்.
“எல்லாருக்கும் கொடும்மா” – தலை குனிந்தவாறே ஒவ்வொரு டம்ப்ளராக எடுத்து எல்லோருக்கும் கொடுத்தாள்.
“உட்காரும்மா” – கீழே விரிக்கப்பட்ட பாயில் உட்கார்ந்தாள்.
“என்னம்மா படிச்சிருக்கே?” – மாப்பிள்ளை வீட்டு பெருசு ஏதோ ஆரம்பிக்க வேண்டுமே என்று ஆரம்பித்தது.
“பி.எஸ்.சி”
“என்ன வேலை பார்க்குறே?” – இது கொஞ்சம் வயதான பெண்குரல்.
“கவருமெண்டு ஸ்கூல்லே டீச்சர்”
“கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க அண்ணி. அண்ணன் பார்க்கணுமில்லே?” மாப்பிள்ளையின் தங்கை.
மெதுவாக நிமிர்ந்தாள்.
“இவன்தான் மாப்பிள்ளை. நல்லா பார்த்துக்கோம்மா” மாப்பிள்ளையின் அம்மாவாக இருக்க வேண்டும்.
ஓரக்கண்ணால் பார்த்தாள்.
“போதும். உள்ளே போம்மா”
மெதுவாக உள்ளறைக்கு நகர்ந்தாள்.
வெளியே பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது.
“மாப்பிள்ளைக்கு சாண்ட்ரோ கார் வாங்கித் தரணும்”
“சரிங்க”
“பொண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுடுங்க. மாப்பிள்ளைக்கு 10”
“சரிங்க”
“கல்யாணம் நல்லா கிராண்டா இருக்கணும்”
”சரிங்க”
டிமாண்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, அப்பா ‘சரிங்க, சரிங்க’ என்று பூம்பூம் மாடாய் தலையாட்டிக் கொண்டே இருந்தார்.
ரேகா டீச்சருக்கு இப்போது ‘அப், டவுன்’ நினைவுக்கு வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான், இப்போது அப்பா. எப்போதும் யாரோ ‘அப், டவுன்’ சொல்ல, எப்போதும் யாரோ கீழ்ப்படிந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
(நன்றி : தினகரன் வசந்தம்)
வசந்தம்,
பதிலளிநீக்குகதை நல்லா இருக்கு....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு