அந்த ஆலமரம்தான் அனைத்துக்கும் சாட்சி.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக இம்மரத்துக்கு கீழேதான் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒட்டுமொத்தமாக நிற்கவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் முதியவர்களும், பெண்களும். அடி, உதை, அநியாயம், அட்டூழியம், அட்டகாசம்.
அப்போது துடிப்பான இளைஞர்களாக இருந்த பலரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தப்பியவர்கள் மலைகளுக்கு மேலே சென்று காடுகளில் உணவின்றி, மாற்று உடையின்றி, மனம் பேதலித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆலமரத்தின் அடியில் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் இருந்து, திருமணமாகாத பதினெட்டு இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்தார்கள். அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று.. அங்கிருந்த புதர் மறைவுகளில்... கூட்டம் கூட்டமாக...
அப்படியும் வெறி அடங்காதவர்கள் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. பின்னர் இவர்களை சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.
சம்பவம் நடந்த கருப்பு ஜூன் நாட்களை மீண்டும் நினைக்கும்போதே கதறியழுகிறார் முதியவரான பரந்தாயி.
“நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டோம். எங்கள் இளைஞர்கள், பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. இப்போது கிடைத்திருக்கும் தீர்ப்பினை எங்களுக்கான நியாயமாக நினைக்கவில்லை. கவுரவமாக நினைக்கிறோம். பத்தொன்பது வருடங்கள் கழித்து எங்கள் ஊர் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது. எங்கள் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் தவறென்று நிரூபணம் ஆகியிருக்கிறது. தாமதமான தீர்ப்பாக இருந்தாலும், நாங்கள் வரவேற்கத்தக்க தீர்ப்பு. வெளியூர்களுக்கு செல்லும்போதெல்லாம் ஊர்ப்பெயரை கேட்டால் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்த எங்கள் இளைஞர்கள், இனி தைரியமாக சொல்வார்கள் ‘நான் வாச்சாத்திக்காரன்’ என்று”
பரந்தாயிக்கு ஏற்பட்டிருக்கும் பெருமிதம்தான் ஊர்க்காரர்கள் அனைவருக்குமே. தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, இத்தனை வருடங்களாக தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவினை ஒட்டுமொத்தமாக துடைத்து எறிந்திருப்பதாக கருதுகிறார்கள்.
தீர்ப்பினைக் கேள்விப்பட்டதுமே அதே ஆலமரத்தின் கீழ், ஒட்டுமொத்த கிராமமும் குழுமியது. பட்டாசு வெடித்து தீபாவளியாய் கொண்டாடியது. அருகிலிருக்கும் குலத்தெய்வக் கோயில் நேர்த்திக் கடன்களால் மூச்சு திணறுகிறது. தீர்ப்புக்கு முன்னதாக குலத்தெய்வத்திடம், நல்லத் தீர்ப்பு கிடைத்தால் அவரவர் வசதிக்கு நேர்த்தி செய்வதாக ஒவ்வொரு கிராமத்தவரும் வேண்டிக் கொண்டார்களாம்.
சித்திரவதை அனுபவித்தவர்களை விட, அதை கதைகதையாய் கேட்டு, கேட்டே வளர்ந்த அடுத்த தலைமுறை, அதிகார வர்க்கம் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. இந்த இளைஞர்களின் கோபம் நல்லவேளையாக முறைப்படுத்தப்பட்டு, அறச்சீற்றமாக மட்டுமே வெளிப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால்..? எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
ராமதாஸ் பிறந்த அன்றுதான் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு வாச்சாத்திக்குள் நுழைந்தது. தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பிருக்கும் இளைஞர்களை முதலில் கைது செய்தது. ராமதாஸின் அப்பாவும் அந்த இளைஞர்களில் ஒருவர்.
ஏழு நாள் குழந்தையாக முதன்முதலாக தனது தந்தையை ராமதாஸ் சேலம் சிறைச்சாலைக்குப் போய் பார்த்தார். கையில் கைக்குழந்தை, கணவனோ சிறையில். காட்டில் விறகுவெட்டிதான் வாழ்க்கையே. ஊரில் வனத்துறை மற்றும் காவல்துறையினரின் சித்திரவதை. ராமதாஸின் அம்மா செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
“என் அம்மாவும், நானும் இன்றும் உயிரோடு இருப்பதே அதிசயம்தான்!” என்கிறார் இப்போது பத்தொன்பது வயது ஆகும் மாணவரான ராமதாஸ். போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது இவரது லட்சியம். “எங்க ஊருலே எல்லாருக்கும் போலிஸுன்னா கெட்ட போலிஸுதான். நல்ல போலிஸ்னா எப்படியிருக்கும்னு நானே மாறிக் காட்டணும்னு ஆசை” என்கிறார்.
இவரைப்போலவே வாச்சாத்தியின் இன்றைய இளைய தலைமுறை ஒட்டுமொத்தமாக கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. தங்களது முந்தைய தலைமுறையின் அறியாமைதான் அவர்களுக்கு நேர்ந்த அத்தனை கொடுமைகளுக்கும் காரணமென்று நம்புகிறது. எனவே நல்ல கல்வி கற்று, அரசுத்துறை பணியிடங்களில் அமர்ந்து, அதிகாரம் பெற்றவர்கள் அத்தனை பேருமே கெட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கிறது.
“எதிர்த்துப் பேசத் தெரியாதவர்கள் என்பதால், அதிகாரம் கையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா? இந்திய அரசியல் அமைப்பு சட்டமே பழங்குடியினத்தவருக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக இருக்கும்போது, சட்டத்தைக் காப்பவர்களே அதை மதிக்காமல் போனதுதான் கொடுமை” என்று பாயிண்ட், பாயிண்டாக பேசும் விஜயகுமாருக்கு இருபத்தி ரெண்டு வயது. மூன்று வயது குழந்தையாக இருந்தவரை தூக்கிக் கொண்டு மலைகாடுகளில் இவரது பெற்றோர் இலக்கின்றி அலைந்து திரிந்திருக்கிறார்கள். அந்த கொடூர நாட்கள் இன்னமும் இவருக்கு லேசாக நினைவில் நிற்கிறது. அவ்வப்போது இரவுகளில் கொடுங்கனவாக வந்து துன்புறுத்துகிறது. தற்போது கிடைத்திருக்கும் நீதி, கடந்த கால துன்பங்களுக்கு ஒத்தடம் தருவதாக அமைந்திருப்பதாக சொல்லும் விஜயகுமார், ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கிறார்.
இன்னும் கூட மாவட்ட நிர்வாகம், காவல்துறை போன்ற அரசுத்துறைகள் வாச்சாத்தி மக்கள் மீது வன்மமாக இருப்பதாக இவ்விளைஞர்கள் நினைக்கிறார்கள். ஏதேனும் அரசு வேலை தொடர்பான நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும்போதோ, அல்லது வேறேதும் சான்றிதழ் பெறுவது மாதிரி சம்பிரதாயமான விஷயங்களுக்காக அரசு அலுவலகங்களை அணுகும்போதோ ‘வாச்சாத்திக் காரன்’ என்றாலே வெறுப்பினை உமிழ்கிறார்களாம்.
“எவ்வளவோ தடைகளை கடந்த இருபது ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் வாச்சாத்தி, இதையும் கடந்துச் செல்லும். வாச்சாத்தியின் புதிய தலைமுறை ஒருநாள் அரசுப் பதவிகளில் ஆட்சி செலுத்தும். எங்களுக்கு அதிகார வர்க்கத்தால் நேர்ந்த அடக்குமுறையை கருத்தில் கொண்டு, இனி எந்தப் பிரிவு மக்களுக்கும் இம்மாதிரி கொடுமைகள் ஏற்படாமல் எங்கள் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கிராமவாசி முருகன்.
வாச்சாத்தியில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் கொடிகளும் இன்று பறக்கிறது. தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு வரும் இரு பிரதானக் கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசியக் கட்சிகளும் கூட வாச்சாத்தியை கண்டுகொண்டதில்லை. அன்று ஆதரவாக வந்து நின்ற ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் என்று ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள். அன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக இந்த பத்தொன்பது ஆண்டுகளும் அக்கட்சி தங்களுக்கு நடந்த அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இயக்கம் கட்டமைத்து, போராட்டங்கள் நடத்தி வருகிறது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்.
“அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை வெறியாட்டத்தால் பாதி பேர் சிறைக்குச் சென்றார்கள். மீதி பேர் மலைக்காடுகளுக்கு தப்பிச் சென்று பயந்து வாழ்ந்தார்கள். திரும்பவும் யாரும் இந்த ஊருக்கு குடிவந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. ஓடுகள் பிரிக்கப்பட்டன. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் களவாடப்பட்டன. எங்கள் வாழ்வாதாரமான ஆடுகள் வனம், காவல், வருவாய்த்துறையினருக்கு உணவாகியது. மாடுகளை கொண்டுபோய் சந்தையில் விற்றார்கள். குடிநீர் கிணறுகளில் ஆடுகளின் மிச்ச எச்சங்களை எறிந்து பாழ்படுத்தினார்கள். யாரும் வாழத் தகுதியற்ற ஊராக வாச்சாத்தியை மாற்றி, மொத்தமாக வனப்பகுதியாக மாற்றிவிடுவது அவர்களது திட்டமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் மலை மீது இருந்த சந்தனமரங்கள்” என்று நினைவு கூர்கிறார் கோவிந்தன்.
பெண்களும், அவர்களோடு இருந்த குழந்தைகளும் கூட சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கர்ப்பிணியாக இருந்த பெண்களுக்கு சிறையிலேயே பிரசவம் கூட ஆனது. இந்திராணி என்பவருக்கு ஜெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஜெயில்ராணி’ என்றுகூட பெயர் சூட்டினார்கள்.
ஊர் வெறிச்சோடிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை வாச்சாத்திக்கு வருகை தந்தார். மக்கள் யாருமில்லாததை கண்ட அவர், ஊர் மத்தியில் ஆலமரத்துக்கு அருகில் செங்கொடி ஒன்றினை நட்டார். இந்தக் கொடி இருக்கும் வரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊருக்கு திரும்ப வாருங்கள் என்று மலைகளுக்குப் போய் மக்களை அழைத்தார். ஒவ்வொருவராக தைரியம் பெற்று வரத் தொடங்கினார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேட்டறிந்த அண்ணாமலை, அரூர் போலிஸில் வாச்சாத்தி மக்கள் சார்பாக முதன்முறையாக புகார் அளித்தார்.
போலிஸால் புகார் கண்டுகொள்ளப்படாத நிலையில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தியது. இதன் பிறகே விசாரணை அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களும், அவர்களுக்காக போராடிய இயக்கங்களும் சி.பி.ஐ. விசாரணை கோரினார்கள். சி.பி.ஐ. மிக நேர்மையாகவும், விரிவாகவும் வழக்கை கொண்டு சென்றதாக கிராமத்தவர்கள் நன்றியோடு சொல்கிறார்கள். பின்னர் கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அமர்வுநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, இப்போது தீர்ப்பு கிடைத்திருக்கிறது.
அண்ணாமலை செங்கொடி நட்ட காலத்திலிருந்தே, இம்மக்களுக்காக போராடி வருபவர் டில்லிபாபு. அப்போது இளைஞராக இருந்த இவர் (இப்போதும் இளைஞர்தான்), தற்போது அரூர் சட்டமன்ற உறுப்பினர். ஊருக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் இவருடன் நன்கு பழகியவர்களே. திண்ணை ஒன்றில் வசதியாக அமர்ந்துக் கொண்டு, மக்கள் புடைசூழ நம்மிடம் பேசினார்.
“தீர்ப்பினை எங்களுக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதவில்லை. எங்களுடைய தொடர்போராட்டங்களில், நீண்டகாலமாக சலிப்படையாமல் பங்குகொண்ட வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பான தீர்ப்பை பெற்றிருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்று வாசிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றின் புதிய சாதனை. பழங்குடியினரையும், ஒடுக்கப்பட்டோரையும் கிள்ளுக்கீரையாக பார்க்கும் அதிகார வர்க்கத்துக்கு கிடைத்திருக்கும் மரண அடி இது.
அதே நேரத்தில் நீதிமன்றம் பரிந்துரைக்கும் நிவாரணம் எங்களுக்கு பெரிய திருப்தியில்லை. பழங்குடியினர் பாதிக்கப்பட்டால் தந்தாக வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் நிவாரணம் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். அது மிக மிகக்குறைவான தொகை. மற்ற கலவரங்களிலோ, சம்பவங்களிலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவுரீதியாக பல லட்சங்களையும், கோடிகளையும் அள்ளித்தரும் தமிழக அரசு வாச்சாத்தி மக்களுக்கும் அதே பரிவினை காட்ட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் டில்லிபாபு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்து வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்திட பாடுபட்ட இயக்கம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இவ்வியக்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகமும் நிவாரணம் குறித்து பலமாக வலியுறுத்துகிறார்.
“குற்றம் நடந்தது உண்மை. மக்கள் பாதிக்கப்பட்டதும் உண்மை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவே அரசு அனைத்துக்கும் முழு பொறுப்பேற்று, ஊரின் அத்தனை புனரமைப்பு வேலைகளையும் செய்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பதினெட்டு பெண்களுக்கு நீதிமன்றம் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. எனவே எங்கள் போராட்டம் இதோடு முடிந்துவிடவில்லை. எனவே உரிய நிவாரணம் பெற சட்டப்படி எங்கள் போராட்டங்கள் தொடரும்” என்கிறார் சண்முகம்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் என்ன ஆனார்கள்?
பதினெட்டுப் பெண்களில் ஒருவரான சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்கிறார் :
“எங்கள் மீது விழுந்த கறையை உடனடியாக துடைக்க ஊர்ப்பெரியவர்கள் முயன்றார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை நாங்கள் துவக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். அக்கம் பக்கம் ஊர்களில் எங்களை திருமணம் செய்துக்கொள்ள தயங்கினார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் ஊர் இளைஞர்களே முன்வந்து பரந்த மனப்பான்மையோடு எங்களை கட்டிக் கொண்டார்கள். இப்போது குழந்தை, குட்டி, குடும்பம் என்று பிரச்சினையில்லாமல், பழசையெல்லாம் மறந்து வாழ்கிறோம்.
நீதிமன்றத்தில் கிடைத்திருக்கும் தீர்ப்பு எங்கள் ஊர் மீதான பழியை துடைத்தெறிந்திருக்கிறது என்கிற வகையில் எல்லோரைப் போலவும் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்”
வாச்சாத்தி மக்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், தீர்ப்பில் குற்றவாளிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டவர்கள் மத்தியில் குமுறல் நிலவுகிறது. வாச்சாத்தி சம்பவத்தின் போது வனகாவலராக பணியில் இருந்து, இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒருவரை அரூரில் சந்தித்தோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், தற்போது தர்மபுரியில் வசிக்கிறார்.
“மக்கள் மீது அத்துமீறல் நடந்தது உண்மைதான். பணியில் இருந்த பலரும் கூட இதை சகிக்க இயலாமல், மவுனசாட்சியாக மனம் ஒட்டாமல் இருந்தோம். இப்போது நீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவில் இருந்த எல்லோருமே குற்றவாளிகள் என்பதாக அறிவிக்கப்பட்டு இருப்பது சரியல்ல. அப்படியெனில் எங்களை இந்த குறிப்பிட்ட பணிக்காக அனுப்பிய மேலதிகாரிகள் மீதும் வழக்குத் தொடுத்து குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டியதுதானே?
என்னைப் போன்றே நிறைய நிரபராதிகள் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். இங்கே நீதி நின்று, நிதானித்து செயல்பட்டிருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டதும், அவர்கள் மீது அதிகார அத்துமீறல் நடந்ததும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், தீர்ப்பு கிடைக்க இத்தனை காலமாகியிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க காலதாமதம் ஆவதைக்கூட சகித்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க இருபது ஆண்டுகளா? இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்பது வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பினால் உறுதியாகியிருக்கிறது. ஆனால் அது விரைவான நீதியா என்பது உடனடியாக இந்திய சட்டமன்றங்களிலும், பாராளுமன்ற அவைகளிலும் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
சில புள்ளி விவரங்கள்
• வாச்சாத்தி கிராமவாசிகளில் ஆண்கள் 15 பேர், குழந்தைகள் 28 பேர், பெண்கள் 90 பேர் என மொத்தம் 133 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் புனையப்பட்டது. சந்தன மரம் கடத்தியது, கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலைமுயற்சி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
• வாச்சாத்தியில் மக்கள் மீதான வன்முறை சம்பவத்தின் போது, வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவில் இருந்தவர்கள் மொத்தம் 269 பேர். இவர்களின் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதம் இருக்கும் 215 பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
• குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டவர்களில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 70 பேருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம்.
• குற்றவாளிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத்தொகை சம்பவத்தில் பாலியல் வன்முறையால் பாதிப்படைந்த 18 பெண்களுக்கு பிரித்துத் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஏன் நுழைந்தார்கள்?
வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த கூட்டுப்படை 1992 ஜூன் மாதம் ஏன் வாச்சாத்திக்குள் நுழைந்தது?
பல்வேறு கதைகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது வாச்சாத்தி. அக்காலத்தில் சந்தன மரங்கள் மிகுந்திருந்த மலைத்தொடர் இது. வாச்சாத்திக்குள் நுழைந்தால்தான் சித்தேரி மலை மீது ஏறமுடியும். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரக அலுவலர்கள் இங்கே முறைகேடாக சந்தனம் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இரு தரப்பும் தங்கள் எல்லைகளை மீறி கடந்துப்போய் மரம் வெட்டியதால் ஏற்பட்ட மோதலே ‘வாச்சாத்தி ரெய்டு’க்கான முக்கியமான காரணம் என்கிறார்கள் கிராமவாசிகள் சிலர். ‘கடத்தல்’ என்று தெரியவந்ததுமே, இருதரப்புக்கும் மரம் வெட்ட வாச்சாத்தி மக்கள் மறுத்ததால், அவர்கள் மீது அதிகார அடக்குமுறை ஏவப்பட்டது என்பது இவர்களின் வாதம்.
‘வீரப்பன் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக இது நடந்தது’ என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. “வீரப்பனை உங்களைப் போலவே நாங்களும் செய்தித்தாள்களிலும், டிவிகளிலும்தான் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஊர்க்காரர் கோவிந்தன்.
வாச்சாத்தி கிராம மக்கள் சந்தன மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்தினார்கள் என்பது வனத்துறை அவர்கள் மீது சாட்டிய குற்றச்சாட்டு. கூலிக்காக சிலர் வெட்டியது உண்மைதான். ஆனால் கடத்தல் போன்ற நோக்கங்கள் இம்மக்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை எனப்படுகிறது. சி.பி.ஐ. விசாரணை இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. வாச்சாத்தி கிராமவாசிகளில் சிலர் சந்தனக் கடத்தல் முதலைகளுக்கு கூலிகளாக பணியாற்றினார்கள் என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்தனக் கடத்தலை தடுக்கவே வனத்துறை தனிப்படைப்பிரிவுகளை உருவாக்கி, ‘சிறப்பு ஆபரேஷன்களை’ நடத்தியதாகவும் சி.பி.ஐ. விசாரணை தெரிவிக்கிறது. இந்த ஆபரேஷன்களில் ஒன்றாக மலைவாழ் மக்கள் மீதான தறிக்கெட்ட வன்முறையும் அமைந்துவிட்டதுதான் துரதிருஷ்டம்.
வன்முறைக்குப் பிறகு
பாலியல் வன்முறைக்கு ஆளாகி, பின்னர் சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர் சூரியகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திரும்பவும் ஊருக்கு திரும்பிய கதையை சொல்கிறார்.
“முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை, இப்போது அரூர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் டில்லிபாபு ஆகியோர் சிறைக்கு வந்து எங்களை சந்தித்தார்கள். எங்களை வெளியில் எடுக்க ஏற்பாடுகளை அவர்கள்தான் செய்தார்கள்.
ஊருக்குள் நுழைந்தபோது ‘மயான அமைதி’ என்பார்களே? அதை உணர்ந்தோம். ஊருக்குள் யாருமே இல்லை. என்னுடைய பெற்றோர் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. எந்த காலத்திலோ கைவிடப்பட்ட ஊர் மாதிரி, வெறிச்சோடி இடிபாடுகளுக்கு இடையே இருந்தது எங்கள் ஊர். எனக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.
எங்களுக்கான மாற்றுத்துணியை கூட மார்க்சிஸ்ட் கட்சிதான் ஏற்பாடு செய்தது. திரும்பவும் தாக்கப்படுவோமோ என்கிற அச்சத்தில் ஊர்க்காரர்கள் மொத்தமாக மலைகளுக்குச் சென்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். ஊர் மத்தியில் செங்கொடி நடப்பட்டு, ஒவ்வொரு மலையாகச் சென்று மக்களை அழைத்து வந்தார்கள் அண்ணாமலையும், டில்லிபாபுவும்.
எங்களுக்கு கொடுமை நடந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகே வெளியுலகத்துக்கு தெரியவந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது”.
(நன்றி : புதிய தலைமுறை)
சமூகத்தை பற்றிய தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்குநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//எனவே நல்ல கல்வி கற்று, அரசுத்துறை பணியிடங்களில் அமர்ந்து, அதிகாரம் பெற்றவர்கள் அத்தனை பேருமே கெட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கத் துடிக்கிறது.
பதிலளிநீக்கு//
இந்த மக்களை நினைக்கும்பொழுது நெஞ்சு பெருமிதம் கொள்கிறது.
'காலம் புரண்டு படுக்கும் .. நம்
பதிலளிநீக்குகண்ணீர்த்துளியை துடைக்கும்' - கவிபேரரசு
கடுந்தவமிருந்த வாச்சாத்தி மக்களுக்கு
காலம் கடந்தேனும் கெளரவம் மீட்சி பெற்றது..
தாங்கள் குறிப்பிட்டுள்ள நபர்கள் வெஞ்சினத்தை வென்று ஆக்கபூர்வமாக சிந்திப்பது மிகுந்த மனநிறைவை தருகின்றது.. மனிதம் வாழும்!
கட்டுரையை புதிய தலைமுறையில் படித்துவிட்டேன்.. நல்ல அலசல், வாச்சாத்தி பிரச்சனை பற்றிய நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.. குறிப்பாக ஏன் நுழைந்தார்கள் என்று அறிந்துகொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குமார்ச்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, அண்ணாமலை போன்றோர்கள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்!! நீதி நிலைநாட்டப்பட்டது.. மேல்முறையீடு செய்து இன்னும் எவ்வளவு காலம் கடத்தபோகிறார்களோ?
நீதித்துறையின் மீது நம்பிக்கை அதிகரித்தாலும்.. காலதாமதம் தான் உறுத்துகிறது.. அதிகாரத்தில் உள்ள ஒருவர் 50 வயதில் ஒரு பெருங்குற்றம் செய்வாராயின்.. தண்டனையை அனுபவிகாமலேயே போய் சேர்ந்து விடுவார் போலும்..
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது.
பதிலளிநீக்குதாமதமான/தாமதப்படுத்தப்பட்ட நீதி என்பது அநீதிக்குச் சமம்
--- இந்த இரண்டுமே நம் சட்ட விவாதங்களில் ஒரே தளத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணானது என்பதுதான் விஷயம். இந்த இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் இயங்க முடியாது.
இந்த அடிப்படையை சரிசெய்யும்போது எல்லோருக்குமே சிறந்த நீதி கிடைக்கும்.
காலம் கடந்த வாச்சாத்தி மக்களுக்கு நல்ல தீர்ப்பு. அந்த ஊருக்கு அரசு நல்லது செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குலக்கி,
பதிலளிநீக்குஅருமையான நடையில் வாச்சாத்தி மக்களின் பிரச்சனையை, எல்லாதரப்பு விவாதங்களையும் எழுதியதற்கு பாராட்டு. இளைய தலைமுறை நல்ல கல்விகற்று அதிகார துஷ்பிரயோகத்தை கலையட்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு ஒரு படமாக அமையட்டும் இந்த தீர்ப்பு. அதேபோலே மார்ச்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, அண்ணாமலை போன்றோர்கள் உழைப்பு சுயநல அரசியல்வாதிகளுக்கு நல்வழி படுத்தும் படமாக இருக்கட்டும்.
மற்ற வலைப்பூக்கள் போலல்லாது உங்கள் வலைப்பக்கம்
பதிலளிநீக்குload ஆக மிகுந்த நேரம் எடுத்து கொள்கிறது.உங்களின்
அனைத்து பதிவுகளையும் படிப்பவன் என்ற முறையில்
இது மிகுந்த சிரமமாக இருக்கிறது.
அண்ணன் உண்மைத்தமிழன் பதிவுகளை படிக்க
எடுத்துகொள்ளும் நேரத்தை விட கூடுதல்
நேரம் தேவைப்படுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
இதற்க்கு ஏதேனும் தீர்வு உண்டா தோழரே?
மார்க்ஸிஸ்ட் கட்சி பல ஆண்டுகாலம் தொடர்ந்து பல போராட்ட இயக்கங்களை நடத்தியுள்ளது இது மக்களுக்கான இயக்கம் என்பதை மீண்டும் வரலாற்றில் பொறித்துள்ளது.
பதிலளிநீக்குஇன்று இதே கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலை அதே கிராமத்து பாதிக்கப்பட்ட பெண் வேட்பாளராக நிற்பதாக படித்தேன் அவரை தோற்க்கடிக்கவும் எதிர்கட்சிகள் நிற்குமென்று நினைக்கிறேன்! மிக அவசியமான அடர்த்தியான பதிவு.
மார்க்சிஸ்ட் கட்சி ஊழியராகவும் பத்திரிகையாளராகவும் ஏற்கெனவே அறிந்த, ஈடுபட்ட செய்திகள்தான். ஆயினும் கட்சிக்கு வெளியே முழுமையான ஒரு பதிவாக, வாச்சாத்தி போராட்டத்தின் வரலாற்றுச் சாறாக இக்கட்டுரையை வடித்திருக்கிறீர்கள் யுவா. போராடுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற ஆக்கம்.
பதிலளிநீக்குவாச்சாந்தியில் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களைத் திருமணம் செய்த இளைஞர்களை எண்ணிப் பெருமைப் படுகிறேன்.
பதிலளிநீக்கு