22 அக்டோபர், 2011

எம்.ஜி.ஆர். ரசிகன்

பொன்னுசாமியும், அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அப்பா திமுகவில் இருந்தபோதுகூட பொன்னுசாமியோடு நெருங்கிய நட்போடே இருந்துவந்தார். இருவரையும் இணைத்த விஷயம் எம்.ஜி.ஆர். வெறித்தனமான ‘வாத்யார்’ ரசிகர்கள் அவர்கள்.

திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தபோதே கூட, அப்பாவின் எம்.ஜி.ஆர். வெறி எந்த அளவுக்கு இருந்தது என்றால், தீபாவளிக்கு தீபாவளி எனக்கு தலைவர் கெட்டப் செய்து அழகு பார்க்குமளவுக்கு இருந்தது. ஒரு தீபாவளிக்கு கவுபாய் டிரஸ் + தொப்பி (வேட்டைக்காரன்), மறு தீபாவளிக்கு பெரிய காலர் வைத்த சஃபாரி (நல்ல நேரம்), இன்னுமொரு தீபாவளிக்கு இன்ஸ்பெக்டர் டிரஸ் (காவல்காரன்) என்று குட்டி எம்.ஜி.ஆராகவே – கிட்டத்தட்ட குட்டிக் கோமாளி மாதிரி - ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். பெரிய சைஸ் கூலிங் கிளாஸ் போனஸ். கருமம். ஷூ கூட கருப்பு சிவப்பு என்று இருவண்ணத்தில்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவருக்கு பிடித்த பாட்டே ‘எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்’தான். மகனுக்கு மட்டும் என்றில்லாமல், அவரும் கூடவே கூலிங் கிளாஸ், அரும்பு மீசை(?), ஃபுல் மேக்கப் என்று எம்.ஜி.ஆர் கெட்டப்பில்தான் திரிவார்.

அப்பா லெவலுக்கு கெட்டப் வெறியெல்லாம் பொன்னுசாமிக்கு இல்லையென்றாலும், அவருக்கு இணையான எம்.ஜி.ஆர் பக்தர்தான் இவரும். மடிப்பாக்கத்தில் இன்றிருக்கும் ஒரே ஒரு எம்.ஜி.ஆர் சிலையை நிறுவியவர் பொன்னுசாமிதான்.

86 உள்ளாட்சி மன்றத் தேர்தல் அது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரே உள்ளாட்சித் தேர்தலும் அதுதான். எனக்கு நன்கு நினைவு தெரிந்து நடந்த தேர்தல். அப்பா ஒரு வில்லங்கப் பிரச்சினையால் அதிமுகவுக்கு வந்த புதிது.

எங்கள் ஊராட்சி மன்றத்துக்கு நின்ற முக்கிய வேட்பாளர்கள் ஈ.பொன்னுசாமி, தெய்வானை தெய்வசிகாமணி. மற்ற வேட்பாளர்கள் எல்லாம் உப்புமா.

மடிப்பாக்கத்தில் நீண்டகாலம் திமுக கிளைச்செயலாளராக இருந்த தெய்வசிகாமணியும் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்தான். இருந்தாலும் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர் இல்லை என்கிற காரணமே பொன்னுசாமிக்கு ஓட்டு கேட்க அப்பாவுக்கு போதுமானதாக இருந்தது. தெய்வசிகாமணி ஏதோ அரசுப் பணியில் இருந்தார். எனவே அவரது மனைவியை வேட்புமனு தாக்கல் செய்யவிட்டு ‘ப்ராக்ஸி’யாகப் போட்டியிட்டார்.

இப்போது மாதிரி ‘சப்பை’யாகவெல்லாம் அப்போது தேர்தல் நடக்காது. ஒரிஜினல் தேர்தல் ஃபீலிங்க்ஸ் எல்லாம் 91 தேர்தலிலேயே போயாச்சி. கிட்டத்தட்ட ஒரு மாத அனல் பறக்கும் பிரச்சாரம். மடிப்பாக்கத்தில் அப்போது 800, 900 ஓட்டு வாங்கினாலே ஜெயித்துவிடலாம். வாக்காளர்கள் சொற்பமான ஆயிரங்களில்தான் இருந்தார்கள்.

பிள்ளையார் கோயில் அருகில் பொன்னுசாமிக்கு எலெக்‌ஷன் ஆபிஸ். ஆபிஸ் என்றால் மேலே ஒரு கூரை. மூன்றுபுறமும் தென்னை ஓலை வேய்ந்த சுவர். சுவரொட்டிகளும், பிட்நோட்டீஸ்களுமாய் இறைந்துக் கிடக்கும். குட்டியாக ஒரு மேடை. அதில் ஒரு மைக். நான்கைந்து சேர்கள். அவ்வளவுதான்.

பிரச்சாரத்துக்கு நேரவரையறை எதுவும் கிடையாது. இரவு 12 மணி வரையில் கூட சத்தமாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கலாம். பொன்னுச்சாமிக்கு சரியாக பேசவராது. திமுகவின் முன்னாள் அதிரடிப் பேச்சாளர் என்பதால் அப்பா அவருக்கு ஒத்தாசையாக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் தினமும் சாயங்காலம் ஆபிஸுக்கு பர்மிஷன் போட்டுவிட்டு அப்பா சீக்கிரமாக வந்துவிடுவார். நேராக எலெக்‌ஷன் ஆபிஸுக்கு போய் உட்கார்ந்துக் கொண்டு, நாக்குவறழ மைக்கில் பேசிக்கொண்டிருப்பார். “ஆகவே. ஊருக்கு உழைக்கும் உத்தமர் நண்பர் ஈ.பொன்னுசாமி அவர்களுக்கு அணில் சின்னத்தில் வாக்களிப்பீர்” என்று இரவு பத்து மணிக்கு கூட அப்பாவின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

பொன்னுச்சாமி எதிர்ப்பார்த்த அளவுக்கு தேர்தல் அவ்வளவு சுலபமாக இல்லை. தெய்வசிகாமணியின் பிரச்சாரம் தூள் பறந்தது. அவருக்கு தரப்பட்ட சின்னம் கத்தரிக்கோல். எல்லா குடும்பங்களுக்கும் தலா ஒவ்வொரு கத்தரிக்கோலை பரிசளித்து ஓட்டுக் கேட்டு அசத்திக் கொண்டிருந்தார். பொன்னுச்சாமி தன்னிடமிருந்த நகை, நட்டை எல்லாம் அடகுவைத்தே தேர்தல் செலவுகளை சமாளித்துக் கொண்டிருந்தார்.

ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, பிரச்சாரத்துக்கு அப்பாவை அழைத்துச்செல்ல பொன்னுச்சாமி வீட்டுக்கு வந்திருந்தார். “அவங்க கத்தரிக்கோல் கொடுத்தாங்க. நீங்க எப்போ அணில் கொடுக்கப் போறீங்க மாமா?” என்று அவரிடம் கேட்டேன். சிரித்தவாறே, “ஜெயிச்சதும் உனக்கு ஒரு பெரிய அணில் பொம்மை வாங்கித் தர்றேண்டா செல்லம்” என்றார்.

மடிப்பாக்கத்துக்கு அப்போது படித்த பார்ப்பனக் குடும்பங்கள் குடியேறிக் கொண்டிருந்த காலம் அது. பெரும்பாலும் வங்கிகளில் பணிபுரிபவர்கள். அரசுப் பணிகளில் இருப்பவர்கள். பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளை வகித்தவர்கள். இவர்களை குறிவைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் புற்றீசலாக உருவாகிக் கொண்டிருந்தன. இந்த கலாச்சார மாற்றத்தை உற்றுக் கவனித்த தெய்வசிகாமணி அதிரடியாக ஒரு பிரச்சாரமுறையை கையெடுத்தார். கான்வெண்ட் படிக்கும் குழந்தைகள் சிலரைப் பிடித்து, ஆங்கிலத்தில் அவர்களை ஓட்டு கேட்க வைத்தார். “வோட் ஃபார் தெய்வானை தெய்வசிகாமணி. தே வில் டூ....” என்று மடிப்பாக்கம் தெருக்களில் ஆங்கிலம் ஆறாய் ஓடத்தொடங்கியது.

இந்தப் பக்கம் இருந்தவர்களோ பாமரர்கள். இந்த அதிரடிப் பிரச்சார டெக்னிக்கை தாக்குப்பிடிக்க முடியவில்லை. பதிலுக்கு குழந்தைப் பிரச்சாரப் பீரங்கிகளை இவர்களும் உருவாக்கத் தொடங்கினார்கள். முதல் பீரங்கி நான்தான். அப்பா எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசினேன். “அன்பார்ந்த மடிப்பாக்கம் வாழ் வாக்காளர்களே! வாரிக் கொடுக்கும் வள்ளல் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் அன்புத்தம்பியாம் ஈ.பொன்னுச்சாமி...” என்று தொடங்கி கிட்டத்தட்ட மூன்று நிமிடத்துக்கு உரை போகும்.

நெக்-டூ-நெக் தேர்தல் அது. ரிசல்ட் வரும் வரை எல்லோருக்குமே டென்ஷன்தான். இப்போது போல காலையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்து அரை மணி நேரத்தில் முன்னணி நிலவரமெல்லாம் தெரியாது. மறுநாள் அதிகாலை ரெண்டு மணிக்குதான் ரிசல்ட் தெரிந்தது. பொன்னுசாமி அறுநூத்தி சொச்சம் ஓட்டு வாங்கி அமோகமாக ஜெயித்திருந்தார். அடுத்து வந்த வேட்பாளருடன் வாக்கு வித்தியாசம் இருநூற்று சொச்சம் என்பதாக நினைவு. காலையில் எழுந்தபோது ‘பொன்னுசாமி ஜெயிச்சிட்டாரு’ என்று அப்பா சொன்னபோது கிடைத்த மகிழ்ச்சியை எதனுடன் ஒப்பிடுவது?

அவர் தலைவர் ஆனதற்குப் பிறகு சுலபமாக அவரை அணுகுவது குறைந்தது. காலையில் டீக்கடையிலேயே அவரோடு அப்பா உள்ளிட்டவர்கள் உட்கார்ந்து அரசியல் பேசிவிடுவார்கள். அதற்குப் பிறகு அவரைப் பார்க்க முடியாது. நாளாக நாளாக தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இதற்கு தலைவரை குறை சொல்லிப் பிரயோசனமில்லை. நகரமயமாகி வரும் எந்த கிராமத்திலும் இயல்பாக ஏற்படும் மாற்றம்தான் இது.

இடையில் எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, ஜானகி அணிக்குப் போனார் (அப்பாவும்). மீண்டும் அதிமுக இணைந்தபோது வேறு வழியின்றி, புரட்சித்தலைவியை ஏற்றுக்கொண்டார். இன்றும் கூட போஸ்டர்களில், சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆருக்கு முக்கியத்துவம் தரும் டிபிக்கல் கட்சிக்காரர் பொன்னுசாமி. அதுவும் தொப்பி போட்ட எம்.ஜி.ஆர் அல்ல. டைட்டான அரைக்கைச் சட்டை போட்ட ‘தெய்வத்தாய்’ காலத்து எம்.ஜி.ஆர். பொன்னுசாமி சார்பாக வரையப்படும் சுவர் ஓவியங்களில் எம்.ஜி.ஆர் ஸ்டைலாக கீசெயின் கடிப்பார். பேனாவைப் பிடித்து சிந்திப்பார். இப்படியாக விதவிதமான கிரியேட்டிவ். எம்.ஜி.ஆரை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு ரசிக மனோபாவம் எத்தனை வயதானாலும் பொன்னுசாமிக்கு சற்றும் குறையவேயில்லை.

86ல் அதிமுக தமிழக அளவில் பல்பு வாங்கியதால், 91ல் அம்மா ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. 96ல் கலைஞர் மீண்டும் நடத்தினார். பத்து ஆண்டுகள் கழிந்து மீண்டும் பொன்னுசாமி போட்டியிட்டார். இம்முறை நேரடியாக அரசுப்பணியை துறந்து களமிறங்கினார். இம்முறை நகை நட்டெல்லாம் வைத்து போட்டியிடுமளவுக்கு நிலைமை மோசமில்லை. நல்ல வசதியாகவே இருந்தார் பொன்னுசாமி. கடந்த முறை போல இல்லாமல் எளிதாகவே வென்றார் பொன்னுசா. ஆனால் 2001, 2006 தேர்தல்களில் பொன்னுசாமி படுதோல்வி அடைய வேண்டியிருந்தது. இத்தனைக்கும் இப்போது தெய்வசிகாமணி இல்லை, வேறு போட்டியாளர்கள். 2001லாவது இரண்டாவது இடம். 2006ல் மூன்றாவதுதான் வரமுடிந்தது.

அவர் அதிகாரத்திலிருந்து அன்னியப்பட்டு பத்து ஆண்டுகள். இப்போது மடிப்பாக்கம் ஊராட்சி, மாநகராட்சியோடு இணைந்து விட்டது. 187 மற்றும் 188 என இரண்டு வார்டுகளாக பிரிக்கப்பட்டுவிட்டது. 188ல் அதே பொன்னுசாமி முதன்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பொன்னுசாமி வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று பரவலாக பேசிக்கொண்டார்கள். ஏனெனில் அவர் போட்டியிட்டது சிட்டிங் டி.எம்.கே. பிரெசிடெண்ட் உடன்.

நேற்று 187வது வார்டு ரிசல்ட் காலையிலேயே வந்துவிட்டது. இதுதான் எங்கள் வார்டு. எதிர்ப்பார்த்த ரிசல்ட்தான். 188 மட்டும் இழுத்துக்கொண்டே போனது. திரும்ப திரும்ப நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவழியாக மதியத்துக்கு மேல் தெரிந்தது. பொன்னுசாமி அமோகமாக இரண்டாயிரத்து ஐநூறு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். முதுமை, உடல்நலிவு, மகனின் தற்கொலை என்று ஏகப்பட்ட அலுப்புகளோடு வாழும் அவருக்கு இந்நேரத்தில் இந்த வெற்றி அவசியமானதுதான். 86 ரிசல்ட்டு கேட்டபோது கிடைத்த அதே மகிழ்ச்சியும், நிம்மதியும் இப்போதும் கிடைத்தது. இத்தனைக்கும் இப்போது பொன்னுசாமியோடு எங்களுக்கு அவ்வளவு தொடர்பில்லை. அவர் இன்னமும் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதே அவரது வெற்றியை விரும்ப எனக்கு போதுமான காரணமாக இருக்கிறது.

அவர் முதன்முதலாக ஜெயித்து இந்த வருடத்தோடு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிறது. ஜெயித்தவுடன் வாங்கித்தருகிறேன் என்று அன்று வாக்களித்த அணில் பொம்மையை இன்றுவரை வாங்கித்தரவேயில்லை. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சி என்பது மாதிரி, அரசியல்வாதியின் வாக்கும் அன்றோடு போச்சு போலிருக்கிறது.

29 கருத்துகள்:

  1. இளையசிங்கம் நவீன்5:19 PM, அக்டோபர் 22, 2011

    எனக்கு ஏன் அணிலை பிடிக்கும்னு ட்வீட் லிங்க் போட்டப்ப சரி லக்கி தளபதி ரசிகரா மாறிட்டார் போல அப்படின்னு சந்தோசமா இங்க வந்தா சம்பந்தம் இல்லாம ஒரு பதிவு ...இருந்தாலும் பதிவு நன்றாக இருந்தது ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ..........

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான அலசல் யுவா... செமையான ரைட்டப்..

    பதிலளிநீக்கு
  3. 169ல் ஜே.கே. வென்றுவிட்டார் முரளி. 168ல் ஜே.கே.வின் மகன் மணிகண்டன் வென்றுவிட்டார். ஒவ்வொரு பேராக பின்னூட்டத்தில் கேட்பதைவிட yuvakrishna@gmail.com-க்கு மெயில் அனுப்பி கேட்டுவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாவ் ..வாத்தியார் ஸ்டில்கள்லாம் கண்ணுல ஒத்திக்கிலாம் போல இருக்கு ..அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. எழுதப் பட்ட நேர்த்தியைப் பார்த்தால் புதிய தலைமுறைக்காக எழுதியதாக இருக்கும் என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  6. வழ வழா கொழ கொழா இல்லாம, இந்த மாதிரி ரைட்டப் டைப் ஜெட் ஸ்பீட் கட்டுரைகள் தான் யுவா உங்க கிட்ட எதிர் பார்க்கிறேன்.
    செம யுவா..

    Bala

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்!நன்கு சுவை பட எழுதியுள்ளீர்கள்!என்ன இருந்தாலும் அந்த கால தேர்தல் அனுபவமே தனிதான்

    பதிலளிநீக்கு
  8. அடடா..கடைசி வரைக்கும் அணில் பொம்மை கிடைக்கவேயில்லையா?!

    பதிலளிநீக்கு
  9. எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை தி.மு.க. வென்றதே இல்லை. இருந்திருந்தால் இன்றுவரை வென்றிருக்க முடியாது என்றொரு பரப்புரை இருக்கிறதல்லவா?

    /1986 உள்ளாட்சித் தேர்தலில் எம்.ஜி.ஆர். கட்சி மண்ணைக் கவ்வியது; நல்லவேளை, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் எம்.ஜி.ஆர். போய்ச் சேர்ந்துவிட்டார்.../

    எனது 'நாடோடித் தடம்' நூலில் இக் குறிப்பு வருகிறது.

    'எம்.ஜி.ஆர். தோற்றதே இல்லை' என்கையில் தி.மு.க. காரர்கள் ஏன் இந்த 86 உள்ளாட்சித் தேர்தலை எடுத்துக்காட்டுவது இல்லை?

    (இவ்வளவுக்கும் நான் தி.மு.க். காரன் அல்ல; முன்னாள் எம்.ஜி.ஆர். ரசிகன்)

    பதிலளிநீக்கு
  10. ALL RESULTS

    http://www.tnsec.tn.nic.in/results/index_result.htm

    பதிலளிநீக்கு
  11. குடும்பத்தில் நடந்தது அரசியலில் நடந்தது. அழகாக வரலாற்றும் பின்னணியில் எழுதியுள்ளீர்கள். இது மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. lucky

    kalakkal. this is what we are expecting. nice finish at the end. typical engrossing narration with a plot ( anil - suvarasiyamaga pokira pokkil sollivittu ) with a fine rejoinder ( anil bommai - kudikaran pechu ) at the end. good screenplay kind of writing. keep it up. namma 187 ward - uma thiagarajan endru kalaiyileye theriyum endralum munbupol NECK-TO-NECK race poll results ippothu varathathu antha thrillai miss pannukiroam endru kaatukirathu.
    good one lucky
    anbudan
    sundar g ( rasanai )

    பதிலளிநீக்கு
  13. அரசியல் குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்த அனுபவத்தின் அடர்த்தியான பதிவு. அபாரம் ‘வாத்யாரே’!

    பதிலளிநீக்கு
  14. Outstanding indeed

    Sam (USA)

    பதிலளிநீக்கு
  15. யுவா, நீங்கள் எழுதியவற்றில் சிறந்தவற்றுள் சிறந்தது.. களம், சொல்நடை, வர்ணனை (தேவையான தேவையாய் மட்டும்), அருமை.. மிக்க அருமை. Wonderful.

    பதிலளிநீக்கு
  16. //தீபாவளிக்கு தீபாவளி எனக்கு தலைவர் கெட்டப் செய்து அழகு பார்க்குமளவுக்கு இருந்தது. ஒரு தீபாவளிக்கு கவுபாய் டிரஸ் + தொப்பி (வேட்டைக்காரன்), மறு தீபாவளிக்கு பெரிய காலர் வைத்த சஃபாரி (நல்ல நேரம்), இன்னுமொரு தீபாவளிக்கு இன்ஸ்பெக்டர் டிரஸ் (காவல்காரன்) என்று குட்டி எம்.ஜி.ஆராகவே – கிட்டத்தட்ட குட்டிக் கோமாளி மாதிரி - ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன்.பெரிய சைஸ் கூலிங் கிளாஸ் போனஸ். கருமம். ஷூ கூட கருப்பு சிவப்பு என்று இருவண்ணத்தில்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். //

    எம்.ஜி.ஆர். கெட்டப் போட்டா அப்பிடியே எம்.ஜி.ஆர். மாதிரியே இருப்பீங்க போலிருக்குதே. அனைத்து புகைப்படங்களிலும் அசத்துறீங்களே! முதல் புகைப்படத்தில் இளவயது கலைஞர் மட்டும் இல்லாவிடில் அதிலிருப்பதும் நீங்கதான்னு முடிவுகட்டியிருப்பேன். அபாரம்!

    பதிலளிநீக்கு
  17. ///அதற்குப் பிறகு அவரைப் பார்க்க முடியாது. நாளாக நாளாக தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதற்கு தலைவரை குறை சொல்லிப் பிரயோசனமில்லை///
    idaiveli kurainthaal nallathuthaane??

    பதிலளிநீக்கு
  18. கூர்மையாக அவதானித்து சுட்டிக் காட்டியதற்கு நன்றி காளி. திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவராசியம் குன்றாமல் உள்ள எழுத்து..

    வாழ்த்துக்கள் யுவா..

    பதிலளிநீக்கு
  20. //முதுமை, உடல்நலிவு, மகனின் தற்கொலை என்று ஏகப்பட்ட அலுப்புகளோடு வாழும் அவருக்கு இந்நேரத்தில் இந்த வெற்றி அவசியமானதுதான். .... அவர் இன்னமும் எம்.ஜி.ஆர் ரசிகர் என்பதே அவரது வெற்றியை விரும்ப எனக்கு போதுமான காரணமாக இருக்கிறது.//

    பலர் குறிப்பிட்டது போல இது நன்றாக எழுதப்பட்ட கட்டுரைதான். ஆனால் ஒருவர் நமக்கான நல்ல ஒரு பிரதிநிதியாக இருப்பாரா, இல்லையா என்பதை விட்டு விட்டு, அவர் மேலுள்ள அனுதாபத்தையும், அவர் எம்ஜிஆர் ரசிகர் என்பதையும் கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது சரியில்லை.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா2:27 AM, மார்ச் 31, 2012

    திரு rajasundararajan அவர்களே .... உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த ஊரில் உள்ள பிரச்சனைகள் உள்ளூர் மனிதர்கள் இவைகளை சார்ந்த ஒரு விஷயமாகும். ஆக. இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு அரசாங்கத்தின் நாடி துடிப்பை பார்த்து எடை போடும் தேர்தல் அல்ல ! இப்போது நீங்களே சொல்வீர்கள்..... "புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை தி.மு.க. வென்றதே இல்லை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இன்றுவரை திமுக வென்றிருக்கவே முடியாது" நன்றி திரு ராஜசுந்தரராஜன் அவர்களே - அன்புடன் சந்துரு பாரிஸ் பிரான்ஸ்

    பதிலளிநீக்கு