20 ஜூன், 2012

மனசாட்சி வியாபாரம்



முந்தையப் பதிவான ‘வாய்ப்பும்,யோக்கியதையும்’ பதிவின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். ஏனெனில் அப்பதிவு பூடகமாக எழுதப்பட்டிருந்தது என்று சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். என்ன எழவு பூடகம் என்று புரியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களாக இருப்பவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். அது வெறும் கூலி. உழைப்புக்கு தரப்படுவது. ஆனால் டாட்டாவுக்கு விளம்பரப்படம் எடுத்ததாலேயே லீனா கைக்கூலி என்பது மாதிரியான அதிசய விளக்கங்களை பின்னூட்டங்களில் பெற நேர்ந்தது.

காலச்சுவடு நிறுவனத்தின் மீது ஷோபாசக்தி நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தார். ‘பிராமின்ஸ் டுடே’ என்கிற சாதியப் பத்திரிகை காலச்சுவடு முகாமில் இருந்து வந்துக் கொண்டிருப்பதாக. காலச்சுவடு சார்பாக இது மறுக்கப்பட்டு வந்தது. அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான டி.டி.பி/வடிவமைப்புப் பணிகளை மட்டுமே தாங்கள் செய்துத் தருவதாகவும், இது தொழில்ரீதியான உறவேயன்றி, உணர்வுரீதியான உடன்பாடான உறவல்ல என்பது மாதிரியான மறுப்பு அது. ஆனாலும் காலச்சுவடு பற்றி எப்போது ஷோபா விமர்சிக்கும்போதும் ‘பிராமின்ஸ் டுடே’-வுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு உண்டு.

இம்மாதிரி ஒரு குற்றச்சாட்டு என் மீதோ, உங்கள் மீதோ சாட்டப்பட்டால் நாம் என்ன செய்வோம்? அதைதான் காலச்சுவடும் செய்தது. ஷோபா தொடர்பான ‘ஓட்டை’கள் ஏதேனும் மாட்டுமா என புலனாய்வு செய்தது. இந்த தூண்டிலில் மாட்டியது லீனா. டாடா ஸ்டீலுக்கான புதிய விளம்பரங்களை ஓகில்வி நிறுவனம் தனது தளத்தில் வெளியிடும்போது கிரெடிட்ஸ் பகுதியில் ‘தேஜஸ்வினி’ திட்டம் குறித்த விளம்பரத்துக்கு இயக்குனர் லீனாமணிமேகலை என்கிற தகவல் வெளிப்பட்டிருந்தது. ஷோபாவை மாட்டவைக்க எதுவும் கிடைக்காவிட்டால் என்ன, அவருடைய நண்பரான லீனாவை மாட்டிவிட்டால் போதுமே. குறைந்தபட்சமாகவாவது ஷோபாவை சங்கடப்படுத்தலாம் என்பதே காலச்சுவடின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அதே டாட்டா ஸ்டீல் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காலச்சுவடின் பின்பக்க அட்டையில் விளம்பரம் தருகிறேன் என்று சில லட்சங்களை தர முன்வந்தால், காலச்சுவடு ஆதிவாசிகளுக்கு நியாயம் தேடும் அறச்சீற்றத்தோடு மறுக்குமென நாம் கருத இடம் ஏதுமில்லை.

ஆனால் காலச்சுவடு என்ன நினைத்ததோ அதை சாதித்துக் கொண்டது என்றே தோன்றுகிறது. அது பற்ற வைத்த தீ செழிப்பாகவே எரிந்தது. லீனாவுடைய எதிரிகள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் கூட கறாராக அறம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜெயமோகனும் தன் பங்குக்கு எழவு வீட்டில் வேர்க்கடலை விற்க கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைபயன்படுத்தி காலச்சுவடு கண்ணன், அ.மார்க்ஸ் ஆகியோரிடம் தனக்கு ஏற்கனவே இருக்கும் பழையகணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்கிறார். அதையெல்லாம் விட ஆச்சரியம். எப்போதோ செத்துப்போய் அடக்கம் செய்துவிட்டவர்களை எல்லாம் தோண்டியெடுத்து இழிவுசெய்யும் ஜெயமோகன் அப்பதிவில் இவ்வாறாக எழுதுகிறார். “தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “அன்புள்ள அல்லிக்கு...” பாணியில் தினமும் யாராவது ஒரு வாசகர் ஜெயமோகனிடம் உலகின் சர்வபிரச்சினைகளுக்கும் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியன் எம்.கெ. என்பவர் கடிதம் எழுதி, அதற்கு ஜெயமோகன் பதிலும் அளிக்கிறார். வழக்கமான ஊன்னா தான்னா பாணியிலான படுநீளமான, கொட்டாவி விடவைக்கும் பதில்தான். தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவுகளை வாசித்து வருகையில் அவர் கடந்த ஜென்மத்தில் ராஜாஹரிச்சந்திராவாக பிறந்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்கு எழாமல் இருக்காது. இந்தப் பதிவும் அவ்வகையிலான செல்ஃப் ப்ரமோஷன் பதிவுதான். முழுக்க சிங்குலர் பர்சனில் ‘அரசாதி அரச அரச குலோத்துங்க’ பாணியில் அவரை அவரே வாழ்த்தி, பாராட்டி, மெய்சிலிர்த்து, கண்கலங்கி சிலாகித்துக் கொள்கிறார். இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை. தினம் தினம் இவரை வாசித்து நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மசோகிஸ்ட்டுகளாக ஜெயமோகனால் ஏற்கனவே நாம் உருவெடுத்துவிட்டோம்.

நைசாக தலைவர் ’பிட்டை’செருகுகிறார். ‘சிந்துசமவெளி’ என்கிற ‘பிட்டு’ படத்தில் தனக்கு பங்களிப்பே இல்லை. ஆனாலும்அதை என்னோடு தொடர்புபடுத்தி அவதூறு பேசுகிறார்கள் என்கிறார். நன்றாக நினைவிருக்கிறது. அப்படம் வெளிவருமுன்பாக ஜெயமோகன் தனது தளத்தில் ‘சிந்து சமவெளி’ குறித்து விரிவாக எழுதிய விளம்பரக் கட்டுரை ஒன்று. இயக்குனர் சாமி எப்படிப்பட்ட அப்பாடக்கர். சினிமாத்தொழில் எப்படி இவருக்கு நிறைவை அளிக்கிறது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். இப்போது மிகக்கவனமாக தனக்கும், சிந்துசமவெளிக்குமான உறவை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்க நினைக்கிறார் ஜெயமோகன். விக்கிப்பீடியாவில் ஏதாவது ஆதாரம் தட்டுப்படுமா என்றெல்லாம் தேடிப்பார்க்காதீர்கள். விக்கிப்பீடியா என்பது விஷ்ணுபுரம் ஏரியா.

//அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை // என்று எப்படித்தான் வாய்கூசாமல் இவரால் சொல்லமுடிகிறதோ தெரியவில்லை. மேற்கண்ட விளம்பரம் சிந்துசமவெளி திரைப்படத்துக்கான இசைவெளியீட்டின் போது வெளியிடப்பட்டது. இன்றும் சிந்துசமவெளி எங்காவது ‘கில்மா’ படம் ஓடும் தியேட்டர்களில் ஓடினால், அதற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் நாம் ‘ஜெயமோகன்’ பெயரை காணலாம். ஜெயமோகன் தனது தளத்தில் பதிந்திருக்கும் தினமலர் நேர்காணலில் கூட ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்என்றே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே தான் திரைப்பங்களிப்பு அளித்த திரைப்படங்களாக இரண்டே இரண்டு படங்களை (நான் கடவுள், அங்காடித்தெரு) மட்டும் குறிப்பிடுகிறார். அவை அதுவரை திரையில் பேசப்படாத ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை இத்யாதி, இத்யாதியெல்லாம் பேசுவதால் அவற்றை மட்டும் தன்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்கிறார். முன்பாக படுதோல்வியடைந்த ‘கஸ்தூரி மான்’ என்கிற திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று அறிகிறோம். என்ன காரணமோ தெரியவில்லை. அது ஜெமோவின் அக்கவுண்டுக்கே வரவில்லை. ஒருவேளை ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றி அது பேசவில்லையோ என்னவோ? ஜெயமோகனைப் போல செய்துவிட்ட ஒரு வேலையை செய்யவேயில்லை என்று லீனா மறுக்கவில்லை.

இப்படிப்பட்ட ஜெயமோகன்தான் போலிவேடதாரிகள், தங்கள் மூளைகளை விற்பனைக்காக சந்தையில் விரித்து வைத்திருப்பவர்கள், அற்ப பிழைப்பு வாதிகள், சில்லறை நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் என்று தனக்கு உவப்பில்லாதவர்கள் அத்தனை பேர் மீதும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்வது? ஊர் ரெண்டு பட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு கொண்டாட்டம்தான்!

16 ஜூன், 2012

வாய்ப்பும், யோக்கியதையும்


ஓகில்வி & மாதர் (ஓ & எம்) என்பது ஓர் உலகளாவிய விளம்பர நிறுவனம். உலகம் முழுக்க 450 அலுவலகங்கள். 120 நாடுகளில் இயங்குகிறது. சுமார் இருபதாயிரம் ஊழியர்கள். விளம்பரம் என்றாலே உங்களுக்கு நினைவு வரும் விளம்பரங்கள் பத்து என்றால், அதில் குறைந்தபட்சம் ஐந்தாவது ஓ & எம் நிறுவனம் எடுத்தவையாகதான் இருக்கும். நம்மூரிலேயே ஃபெவிகால், ஹட்ச் என்று பேசப்பட்ட அவர்களது விளம்பரங்கள் ஏராளம். சினிமாவில் ‘வார்னர் பிரதர்ஸ்’ எப்படியோ, விளம்பரத்துறையில் இவர்கள் அப்படி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த நிறுவனம் ஒரு விளம்பரப்படம் இயக்கச் சொல்லி ஒரு இயக்குனரை கேட்டுக்கொண்டால் அவரால் மறுக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

அவ்வாறு மறுக்கக்கூடிய ‘தில்’ இருப்பவர்கள், ‘அக்கிரகாரத்தில் கழுதை’ மாதிரி ஆர்ட் படங்கள் எடுத்துதான் காலத்தை ஓட்ட முடியும். ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் எந்த இயக்குனராவது, “ரஜினி தமிழனுக்கு எதுவும் செய்யவில்லை. மைசூரில்தான் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்கிறார்” என்கிற கருத்தையையோ, தமிழ்தேசிய-திராவிட-இடதுசாரி-லொட்டு-லொசுக்கு கொள்கைகளையோ முன்வைத்தோ இங்கு மறுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று யாரேனும் நினைக்கிறீர்களா?

நல்லதோ, கெட்டதோ. உலகமயமாக்கல் சூழலில் யாரும் வாய்ப்புகளை தவறவிட விரும்புவதில்லை. ஆனானப்பட்ட அறிவுப்பேராசான் மார்க்ஸே கூட ‘பொதுவுடைமை’ எழுதவும், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான கருத்துகளை சிந்திக்கவும் பொருளாதாரரீதியாக ஏங்கெல்ஸ் என்கிற முதலாளிதான் உதவியிருக்கிறார். தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பொருளுதவி செய்தவர்களுள் சில பார்ப்பனர்களும் அடக்கம். நாமெல்லாம் எம்மாத்திரம்?

ஓரிரு விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கலாம். எல்லா இயக்கங்களிலுமே கொள்கை சமரசத்துக்கு துளியும் ஆட்படாதவர்கள் நான்கைந்து பேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். கிட்டத்தட்ட இது துறவி மனநிலை. துறவியாக வாழ நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது பேரால் முடியாது. இதற்காக இந்த தொண்ணூற்றி ஒன்பது பேரும் அயோக்கியர்கள் என்று பொருளல்ல. வாய்ப்புகளுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கும் அல்பஜீவிகள்தான் எல்லாருமே. இதில் யார் சின்ன அல்பம், யார் பெரிய அல்பம் என்று பட்டிமன்றம் வைப்பதைவிட அபத்தமான செயல்பாடு வேறொன்று இருக்க முடியாது.

யாரோ ஒருவர் மாட்டிக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சூழ்ந்து அவரை சாத்துவது என்பதை நம்முடைய பண்பாட்டுச் செயல்பாடாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் நம்மை நாமே சுயவிமர்சனம் செய்துக் கொண்டு, நாம் எந்தவகையிலும் எங்குமே சமரசமே செய்துக் கொண்டதில்லை என்று சீதை மாதிரி தீக்குளித்து நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்? சிறு சமரசங்கள் பரவாயில்லை. பெரிய சமரசம்தான் தப்பு என்று சப்பைக்கட்டு கட்டித்தானே நம்முடைய யோக்கியதையை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்?

அடிக்கடி அறிவுஜீவிகள் ‘நடுத்தர வர்க்கத்து மனோபாவத்தை’, சாதாரண லவுகீக செயல்களில் எல்லாம் கண்டுபிடித்து கிண்டலடிப்பதும், கண்டிப்பதும் வழக்கம். அறிவுசார் செயல்பாடுகளில் அறிவுஜீவிகளின் நடவடிக்கையும் அச்சு அசலாக நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையோடே இருப்பதை பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாகவே கண்டுகொள்ள முடிகிறது. நம் சூழலில் செயல்படும் பெரும்பாலான அறிவுஜீவிகள் அல்லது அறிவுஜீவி ஜீப்பில் தாமாக வந்து ஏறிக்கொண்ட கோமாளிகளும் எவ்வகையிலும் நடுத்தர மனப்பான்மையை தாண்ட முடியாதவர்கள் என்பதே உண்மை. நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பொறாமை, பொச்சரிப்பு, புறம் பேசுதல் என்று எல்லா நடவடிக்கைகளையும் கைக்கொள்ளும் இவர்கள் எப்படி அறிவுஜீவிகளாக இருக்கமுடியும்?

பைபிளை எனக்கு ஏன் பிடிக்குமென்றால் “உங்களில் யார் யோக்கியரோ, அவர் முதல் கல்லை எறியலாம்” என்கிற வசனத்துக்காக. நம்மூரில் எப்போதும், யார்மீதாவது லோடு, லோடாக கல் எறியப்படுவது வாடிக்கை. முதல் கல்லை எறிந்தவரிடம் மட்டுமல்ல, கடைசிக்கல்லை எறிந்தவர் வரை யாரிடமும் யோக்கியதையை எதிர்பார்க்க முடியவில்லை.

14 ஜூன், 2012

ஓர் அணில் உதவி


நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்  திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வருகிறார்.  ஆறு செமஸ்டர்களை நிறைவு செய்துவிட்டு ஏழாவது செமஸ்டரில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவர், நல்லிப்பாளையம் UCO வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து வருகிறார். ஏழை மாணவர் என்பதால் வட்டிக்கு அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு.இந்த மானியத்தை கடனளிக்கும் வங்கிகள் அவர்களே அரசு நியமித்துள்ள வங்கிளிடமிருந்து  பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை ஜூன்7 2012  புதிய தலைமுறையில் வெளியிட்டிருந்தோம்

விதிகள் இவ்வாறிருக்க  வட்டித் தொகையான 24000 ரூபாயைக் கட்டினால்தான் இந்த செமஸ்டருக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கடந்த ஆண்டும் இதே போல வற்புறுத்தி 16500 ரூபாயைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.

கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. என்ற தகவல்களை வெளியிட்டிருந்த புதிய தலைமுறைக் கட்டுரையில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பின் இணைய முகவரியையும் வெளியிட்டிருந்தோம். இந்த அமைப்பு அப்துல் கலாமின் கனவான விஷன் 2020 என்பதால் உந்தப்பட்டு அவரது ஆசியுடன் நடந்து வரும் அமைப்பு. ஸ்ரீநிவாசன்  என்ற விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி/ இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார். .

புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ்,  ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் UCO வங்கியின் நல்லிப்பாளையம் கிளை மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும். எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றன” என்று சொல்லிவிட்டார்.

உடனே ஸ்ரீநிவாசன் அன்றே மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8) வங்கியின் துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். அவர் கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய வரைவோலையை வங்கியில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். ஜூன் 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

இது போல் இந்தக் கிளையில் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தான் ஜூன் 11ம் தேதியன்று  வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தார் .


அவர் விசாரணைக்கு வந்த போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம்  வங்கிக் கிளை மேலாளர் மூலம் சந்தித்து வரும் பிரச்சினைகளத் தெரிவித்ததாக அறிகிறோம். தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களிடம் வட்டியாக வாங்கிய பணத்தைத் திருப்பியளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு. பாஷா புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையைப் படித்து முறையிட்ட மாணவருக்கு மின்னல் வேகத்தில் உதவிகளைப் பெற்றுத் தந்த ELTF அமைப்பிற்கும், ஸ்ரீநிவாசனுக்கும், அவர்  மின்னஞ்சலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த UCO வங்கியின் மேலதிகாரிகளுக்கும் பணிவன்போடு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிது.
இது ஒரு வங்கியில் ஒரு கிளையில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. இது போன்று அநேகமாக எல்லா வங்கிகளிலும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கிளைகளில் மாணவர்களும் பெற்றோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

வங்கிகளின் மேல் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் விதிமுறைகளின்படி தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மேற்பார்வையிட மண்டல வாரியாக சமூக அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் கல்விக் கடன் தொடர்பான புகார்களை மின்னல் வேகத்தில் விசாரித்து அவற்றைத் தீர்ப்பதற்கென்று பிரத்யேக குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனப் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.


(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)

13 ஜூன், 2012

ஷாங்காய்


நான் பிறந்து வளர்ந்த ஊரான மடிப்பாக்கம் குக்கிராமமாக இருந்த காலத்தில் நான் குழந்தையாக இருந்தேன். பள்ளிப் புத்தகத்தில் ஒரு பாடம் இருந்தது. எனது ஊருக்கே மேற்கே மலையிருக்கிறது. தெற்கே ஆறு இருக்கிறது என்று வரிகள் இருந்ததாக ஞாபகம். மடிப்பாக்கத்துக்கு மேற்கே மலை இருந்தது. பல்லாவரம் மலை. தெற்கே ‘மடு’ என்று சொல்லப்படக்கூடிய சிற்றாறு இருந்தது. கிழக்கே கழிவுவெளி என்று சொல்லக்கூடிய ஒரு பகுதி. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீட்சி. பள்ளிக்குச் செல்லும்போது சாலைகளின் இருபுறமும் சாமந்திப்பூக்கள் பூத்துக் குலுங்கும். என் வீட்டுக்கு எதிரே சுமார் இருநூறு மரங்கள் கொண்ட மாந்தோப்பு கூட இருந்தது. கோடை எங்களை சுட்டெரித்ததில்லை. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் குறைந்தது ஒரு வேப்பமரம். வீட்டுக்குப் பின்னால் நிச்சயமாக புளியமரம். கிணறுகளில் பத்தடியில் இளநீர் சுவையோடு குடிநீர். வெயில்காலங்களில் கூட அதிகபட்சம் இருபத்தைந்து அடிகள் வரைதான் தண்ணீர் வற்றும். ஓரிருவரிடம் மட்டுமே ‘பைக்’. வெயில்கால இரவுகளில் காற்றுக்காக சாலைகளுக்கு வந்துகூட பாய்விரித்து படுத்துக் கொள்ளலாம். ஊருக்கே தெற்கே கண்ணில் படக்கூடிய எல்லை வரை பசுமை. எண்ணிக்கையிலடங்கா பாசனக் கிணறுகள். தென்மேற்கில் சவுக்குத்தோப்பு. மிகப்பெரிய பரப்பளவில் ஓர் ஏரி. நிறைய குளங்கள். குட்டைகள். இரவுகளில் சிலவேளைகளில் நரி ஊளையிடும். நினைவுப்படுத்திக் கொண்டே போனால் பட்டியல் ‘பழைய ஏற்பாடு பைபிள்’ அளவுக்கு நீளும்.

இன்று மடிப்பாக்கம் சென்னை மாநகராட்சிக்குள் இணைந்துவிட்டது. அன்றிருந்த விஷயங்களில் இன்று ஓரிரண்டு கூட இல்லை. இந்த ஓரிரண்டில் மனிதர்களும் அடக்கம். இன்று காஃபி டே இருக்கிறது. நவீன ரெஸ்டாரண்டுகள். குடியிருப்புகள். வீட்டுக்கு ஒரு கார். இரண்டு பைக். ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். ஒரு நகரத்துக்குள் என்னென்ன இருக்க வேண்டும் என்கிறார்களோ, எல்லாமே இருக்கிறது. பாதாள சாக்கடை மாதிரி இல்லாத அடிப்படை விஷயங்களைப் பற்றி யாரும் மெனக்கெடுவதில்லை. அப்போது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்குமான வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்குமென நினைக்கிறேன். ஒரு பூர்விகவாசி என்கிற முறையில் என் இதயத்தில் இம்மாற்றங்கள் எம்மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை எனக்கு வெளிப்படுத்தத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த மாற்றத்தை முன்னேற்றம் என்றோ, வளர்ச்சி என்றோ பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடிய சூழலில் நான் இல்லை. இத்தனைக்கும் இங்கே அரசின் சிறப்புத் திட்டம் எதுவோ, புதிய தொழிற்சாலைகளோ எதுவும் அமைக்கப்படாமலேயே அசுர வளர்ச்சி. மடிப்பாக்கத்தில் இடம் மலிவு. குடிநீர் நன்றாக இருக்கும் என்கிற மக்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாக இத்தகைய மாற்றம் சாத்தியமாகியிருக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலத்து மடிப்பாக்கத்து வாசி, இன்று என்னவாக இருக்கிறான் என்பது இங்கே யாரும் கேட்க விரும்பாத, அறிந்துக் கொள்ள விரும்பாத ஒரு கேள்வி.

‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ என்று அறியப்படும் ‘ஷாங்காய்’ திரைப்படம் இப்படியெல்லாம் என்னை வகைதொகையில்லாமல் சிந்திக்க வைக்கிறது. அரசியல் தொடர்பு கொண்டது என்பதற்காக இதை ‘பொலிட்டிக்கல் த்ரில்லர்’ எனலாமா என்று தெரியவில்லை. ‘நம்முடைய வளமும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூட்டிக் கொடுக்கப் படுகிறது’ என்கிற ஒன்லைனரை நெற்றியலடித்தாற்போல பளாரென சுட்டிக் காட்டியிருப்பதுதான் இப்படத்தின் மையம். அவன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டுவான். ஊரில் இருப்பவர்களுக்கு மெக்கானிக் வேலையோ, டிரைவர் வேலையோ தருவான். டீக்கடை டீ ஷாப் ஆகும். சினிமா கொட்டகைகள் ‘சினிப்ளக்ஸ்’ ஆகும்.  இட்லிக்கடை பீட்ஸா கார்னராகும். எல்லாம் முடிந்ததும் வேறு ஊருக்குப் போய் ‘டெண்ட்’ அடிப்பான். அதற்குள் நம்முடைய ஊர் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு பாலைவனமாகி இருக்கும். நேரடியாக சொல்லாமல் ‘ஷாங்காய்’ இந்த மறைமுகக்கதையைதான் பார்வையாளனுக்கு புரியவைக்க முயற்சிக்கிறது.

மஹாராஷ்டிர மாநில அரசு, பாரத் நகர் என்கிற இரண்டாம் கட்ட நகரமொன்றில் ‘இண்டர்நேஷனல் பிசினஸ் பார்க்’ என்றொரு சொர்க்கத்தை நிறுவ முயற்சிக்கிறது. இம்முயற்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் பரவலான வரவேற்பு. மாநகரமயமாக்கலின் பொருளாதார, அதிகாரப் பலன்களை ஆளும் கட்சி, முதலாளிகளோடு பகிர்ந்துக் கொள்ளும் நோக்கத்தில் இதை கனவுத்திட்டமாக விளம்பரப் படுத்துகிறார்கள். இது வந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும் என்று உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். இம்மாதிரியான வளர்ச்சியின் பாதகங்களை உணர்ந்த சமூகசேவர்கள் சிலர் இதை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள்.

தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்றினை எழுதியவரான டாக்டர் அகமதி இதற்காக பாரத் நகருக்கு வருகிறார். ஆளுங்கட்சி தனது தொண்டர்களின் மூலமாக விபத்து ஒன்றினை உருவாக்கி அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறார். விசாரணை கமிஷன் அமைத்து இச்சம்பவத்தை முடக்க நினைக்கிறது அரசு. விசாரணை செய்யும் அதிகாரி கொஞ்சம் நேர்மையானவர் (நம்மூர் சகாயம் மாதிரி). ஏனென்றே தெரியவில்லை. அவர் தமிழ் பார்ப்பனராகவும் சித்தரிக்கப்படுகிறார். டாக்டரின் ஆதரவாளரான ஒரு பெண்ணும், உள்ளூர் அஜால் குஜால் போட்டோகிராபர் ஒருவரும் சூழல் கட்டாயங்களின் பேரில் இணைந்து, இது கொலைமுயற்சி என்பதற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். ஆதாரங்களைப் பெறும் அரசு இயந்திரம் என்ன செய்யும், விளைவுகள் என்னவென்பது ‘க்ளைமேக்ஸ்’.

‘த்ரில்லர்’ என்று சொல்லிக்கொண்டால் படம் பார்ப்பவர்களுக்கு ‘த்ரில்’ இருக்க வேண்டுமில்லையா? அது சுத்தமாக இல்லாத படம். மிக மெதுவாக, விஸ்தாரமாக விரியும் காட்சிகள். ஆவணப்படங்களுக்கான பாணியில் கேமிரா கோணங்கள். பாடல் காட்சிகள் தவிர்த்து, மற்றபடி சினிமாத்தனமற்ற இசை. யதார்த்தத்தை எவ்வகையிலும் மீறிவிடக்கூடாது என்கிற அச்ச உணர்வுடனேயே, ஒவ்வொரு காட்சியையும் மிகக்கவனமாகப் படமாக்கியிருக்கிறார்கள். நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் எப்படியிருக்குமென்ற கேள்விக்கு இப்படத்தை விடையாக சொல்லலாம்.

அரசியல் கட்சி மெக்கானிஸம் – அதுவும் ஆளுங்கட்சியாக இருந்தால் – எப்படி இயங்குமென்பதை துல்லியப்படுத்தி இருக்கிறார்கள். அதிகாரத்துக்கு சோரம் போகும் புரோக்கர்களையும் தெளிவாக அம்பலப்படுத்தப் படுகிறார்கள். இப்படிப்பட்ட படத்தை தயாரிக்க எப்படி மத்திய அரசு நிறுவனமான என்.எஃப்.டி.சி. பணம் கொடுத்தது என்பது ஆச்சரியம்தான். தணிக்கைக் குழு அனுமதித்திருப்பது மற்றொரு ஆச்சரியம். இப்படத்தை வெளியிட சிலர் உயர்நீதிமன்றத்தில் தடைகோரியதாக தெரிகிறது. கோர்ட் தடைவிதிக்க மறுத்து இருப்பது ஆச்சரியங்களிலும் பெரிய ஆச்சரியம்.

பத்தரை கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், மேல்தட்டுப் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று ஐந்து நாட்களிலேயே இருபத்தோரு கோடி வசூலித்திருக்கிறது. விமர்சகர்கள் ஒரேகுரலில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு ‘ஐரனி’ என்னவென்றால், இப்படம் சுட்டிக்காட்டும் சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள்தான் இப்படத்தை இப்போது பெரிதும் கொண்டாடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எளிய, கீழ்த்தட்டு மக்களுக்கு புரியும்படியான கலைமொழி இப்படத்துக்கில்லை என்றே சொல்லலாம். மற்ற பெரிய இந்திப்படங்களைப் போல மண்டலமொழிகளில் ‘டப்’ செய்யப்படாமல், நேரடியாக திரைக்கு வந்திருப்பதும் பெரிய குறை. இந்தி தெரியாத மாநிலங்களில் வெளியிடும்போது, குறைந்தபட்சம் ‘சப்-டைட்டில்’ ஆவது சேர்க்க முயற்சிக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், ஷாங்காய் இந்திய சினிமாவில் மேற்கொள்ளப்பட்ட நேர்மையான முயற்சிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

12 ஜூன், 2012

உலகம் சுற்றும் வாலிபன்


'உலகம் சுற்றும் வாலிபன்'. 1972ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
 இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
 * இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
 * தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
 * லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
 * மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
 * சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
 * இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
 * வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
 * படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
 * "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
 * பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
 * தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
 * படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
 * படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.
 * கடைசியாக ராஜூ கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு ஃப்ளைட்டில் ஏறும்போது லதா, சந்திரகலா இரண்டு ஃபிகர்களையும் ஓட்டிக்கொண்டு போவார். ராஜூவுக்கு திருமணம் ஆனது தெரியாமல் லதாவிடம் அவரது அண்ணி மஞ்சுளா செய்த சத்தியத்துக்காக துணைவியாராக ஏற்றுக்கொண்டாரா? என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை.