‘டெசோ’வால் இப்போது என்ன செய்ய முடியுமென்று திட்டவட்டமாக தெரியவில்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த ‘டெசோ’வுக்கும், இன்றிருக்கும்
‘டெசோ’வுக்குமான வேறுபாடுகள் புரிந்தே இருக்கிறது.
அதே நேரம் ஈழப்பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான்
தீர்வு என்று சொல்லக்கூடிய ஒரே பெரிய கட்சியாக இங்கே திமுக மட்டுமே இருக்கிறது.
தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவோ, ஆளுங்கட்சியான அதிமுகவோ, ஓரளவுக்கு
தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் இடதுசாரிகளோ ஏற்றுக்கொள்ளாத நிலைபாடு இது.
உதிரிக்கட்சிகளை விட்டு விடுவோம். அவர்களது நிலைப்பாடு கூட்டணி சமரசங்களுக்கு
உட்பட்டது. திமுகவே கூட மத்தியக் கூட்டணிக்காக பல சமரசங்களை ஏற்றுக்கொள்ளும்போது,
சிறுகட்சிகளை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. எனவேதான் திமுக முன்வைக்கும்
‘டெசோ’வுக்கு இங்கே முக்கியத்துவம் ஏற்படுகிறது.
முந்தைய ‘டெசோ’வின் போது திமுகவால் ’ஈழம்’
குறித்த தனது கருத்தாக்கத்தை தேசிய அளவில் பலரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய
முடிந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இன்றைய திமுகவால் அதை
செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. எமர்ஜென்ஸிக்குப் பிறகு திமுகவோடு நட்பு
அடிப்படையில் அன்று கைகோர்த்த மாநில, தேசியக் கட்சிகள், தலைவர்கள் ஆகியோருக்கு
இருந்த தன்மை சமகால கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை.
திமுகவுக்கே கூட அன்றிருந்த கொள்கை அடிப்படையிலான சமூகப்பிடிப்பு இன்று இருக்கிறதா
என்பதும் சந்தேகம்தான். முன்பொருமுறை பெரியார் சொல்லி, அதையே 2009ல் கலைஞர் சொன்ன
வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. “நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு
அடிமைக்கு என்ன செய்துவிட முடியும்?”
பழைய டெசோ காலத்துக்கு வருவோம். இந்த அமைப்பு
தமிழக நகரங்களில் ஈழத்தமிழருக்காக மாபெரும் பேரணிகளையும், கூட்டங்களையும்,
போராட்டங்களையும் நடத்தி சாதித்தது. தேசியத் தலைவர்களான வாஜ்பாய், பகுகுணா,
என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி (இவரேதான் அவரும்) என்று பலரையும் தமிழகத்துக்கு
அழைத்துவந்து ஈழம் தொடர்பான நியாயங்களை மக்கள் முன் வைத்தது. ஈழத்துக்கு ஆதரவான
போக்கினை கைக்கொள்ள இந்திய அரசினை கடுமையாக நெருக்கியது. ஈழப்பிரச்சினை என்பது
தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஆசியப் பிராந்தியப் பிரச்சினை என்பதான தோற்றத்தை
உருவாக்கியது. ஈழப்போராளிகள் ஒன்றுபட்டு ஈழம் பெறவேண்டும் என்கிற கருத்தை
வலியுறுத்தியது. இப்போது ஈழப்பிரச்சினையில் கலைஞர் துரோகி என்று வசைபாடிவரும் நெடுமாறன்,
வைகோ ஆகியோரும் அப்போது டெசோவில் தீவிரமாகப் பணியாற்றியவர்கள்தான். அன்றைய டெசோ
பிறந்த இரண்டே ஆண்டுகளில் உருக்குலைந்துப் போனதற்கு காரணம் போராளிக் குழுக்களிடையே
ஒற்றுமையின்றி போனதுதான். இந்திய, தமிழக அரசுகள் வெற்றிகரமாக இதை செய்துமுடித்தன.
‘காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைஞர் கலைத்தார்’ என்று இன்று புதுகாரணம்
சொல்கிறார் நெடுமாறன். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக 87ல் கலைஞர்
டெசோவை கலைத்தார் என்கிற தர்க்கம்தான் எத்துணை சிறப்பானது?
2009ல் திடீரென்று ஞானஸ்தானம் பெற்று, இன்று
ஈழத்துக்காக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் அமைப்பின் நண்பர் ஒருவர், சமீபத்தில்
புதிய டெசோ பற்றிய விவாதத்தில் முகநூலில் சொல்லியிருந்தார். “தமிழீழத்திற்காக
போராட திமுகவை யாரும் அழைக்கவில்லை”. நண்பர் வரலாற்றில் கொஞ்சம் வீக். அவருக்காக
சில தகவல்கள்.
- 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம்
நடந்தது. அக்கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு திமுக ஆதரவளிக்கிறது என்கிற
தீர்மானத்தை கலைஞர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறியது.
- 1977ல் சென்னையில் ஐந்து லட்சம் பேர்
பங்குகொண்ட பேரணி திமுகவால் நடத்தப்பட்டது.
- 1981ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர்
இந்திராகாந்திக்கு ஈழப்பிரச்சினை திமுகவால் கொண்டு செல்லப்படுகிறது.
ஈழப்பிரச்சினையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற
கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில்
கலைஞர் எம்.ஜி.ஆர் அரசால் கைது செய்யப்படுகிறார்.
- வெலிக்கடை சிறையில் முப்பதுக்கும் மேற்பட்ட
தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டவுடன் மறுநாளே சென்னையில் ஏழரை லட்சம் பேர்
கலந்துக்கொண்ட கண்டனப் பேரணியை திமுக நடத்தியது.
- 1983 இனப்படுகொலை நடந்து இரண்டு
மாதங்களாகியும் இந்திய அரசோ, தமிழக அரசோ அப்பிரச்சினை குறித்து வாய்திறக்கவில்லை
என்று சட்டமன்றத்தில் திமுக பிரச்சினையைக் கிளப்பியது. பேராசிரியரும், கலைஞரும்
தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.
- 1986 மே மாதத்தில் மதுரையில் டெசோ சார்பாக
திமுக முன்நின்று நடத்திய ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’தான் ஈழத்தமிழருக்காக
தமிழகத் தமிழர்கள் குரல் கொடுத்ததின் உச்சபட்ச எழுச்சி.
- 1989ல் திமுக பதிமூன்று ஆண்டுகால
இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி
மலர்கிறது. தமிழக திமுக அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, ராஜீவ் காலத்தில்
அனுப்பப்பட்ட அமைதிப்படையை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. சென்னை துறைமுகம்
வந்து சேர்ந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மாநில முதல்வர் கலைஞர் மறுத்தார். இதன்
மூலம் இந்திய இறையாண்மையை அவமதித்து விட்டதாக திமுக மீது பிரச்சாரம்
செய்யப்பட்டது.
- இதே ஆட்சிக்காலத்தில் போராளிக்குழுக்களின்
உட்சண்டை காரணமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் கொலைகள் திமுக ஆட்சியை
கலைப்பதற்கு காரணமாக காட்டப்பட்டன.
- உச்சக்கட்டமாக 91 மே 21. திமுக மீது
கொலைப்பழி. அடுத்த தேர்தலில் அக்கட்சி அடைந்த படுதோல்வி.
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஈழத்துக்காக முதன்முதலாக தீக்குளித்தவரும் கூட ஒரு இசுலாமிய திமுக தோழர்தான்.
‘திமுகவை யாரும் அழைக்கவில்லை’ என்று சொன்ன
நண்பர், இதெல்லாம் திமுக யாரும் அழைக்காமலேயே தன்னெழுச்சியாக ஈடுபட்ட செயல்பாடுகள்
என்பதையும் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு
முன்பே ஈழப்பிரச்சினையை இங்கே பேசிய இயக்கம் திமுக. பேசிய தலைவர் கலைஞர்.
சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதாலேயே
“புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான்” என்று பாராட்டுக் கூட்டம் நடத்திக்
கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் பேசுவது வீண்தாண். அப்படிப் பார்த்தால் கடந்த
திமுக அரசு ஈழத்தமிழர்களுக்காக ஐந்து சட்டமன்றத் தீர்மானங்களை
நிறைவேற்றியிருக்கிறது. என்ன செய்வது. கலைஞர் தமிழினத் துரோகி. அம்மா ஈழத்தாய். இராணுத்தை
அனுப்பி ஈழம் பெற்றுத்தரப்போகும் ஈழநாயகி போட்ட தீர்மானம் ஆயிற்றே. பாராட்டித்தான்
ஆகவேண்டும்.
ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியாக திமுகவின்
செயல்பாடுகள் ஈழவிவகாரத்தில் போதுமானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஈழம்
குறித்த தாக்கத்தை வலுவாக தமிழகத் தமிழர்களிடையே ஏற்படுத்திய சமூக இயக்கம் என்று
திமுகவால் பெருமிதமாக மார் தட்டிக்கொள்ள முடியும்.
இன்றைய ‘டெசோ’வால் உடனடியாக என்ன செய்துவிட
முடியும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இச்செயல்பாடு திமுகவினுடைய
வழக்கமான இயல்புதான் என்பதை திமுகவின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்கள்
உணர்ந்துக்கொள்ள முடியும். இன்று இலங்கையில் ‘தமிழ் ஈழம்’ கோரி யாரும் போராட முடியாது.
அந்த கருத்தாக்கம் மக்கள் மனதிலாவது நீறுபூத்த நெருப்பாக இருக்க வேண்டுமானாலும்
‘டெசோ’ போன்ற முயற்சிகள் நடந்துக்கொண்டெ இருக்கவேண்டும்.
புகழுக்காக, பணத்துக்காக போராளி ஆனவர்கள்
காற்றடைத்த பலூன்கள். உண்மை எனும் ஊசி குத்தப்பட்டபின், சூம்பிப்போய் வரலாற்றால்
தயவுதாட்சணியமின்றி பரிதாபகரமாக தூக்கியெறியப் படுவார்கள். அதை உணர்ந்து நமக்கு
முன்னால் உழைத்தவர்களின் உழைப்பை மதித்து, வார்த்தைகளை விடும்போது கொஞ்சம் கவனமாக
இருக்கவேண்டும். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் ஆதரவில் உருவாகும் ‘டெசோ’
பயனற்றது என்றால், வருடாவருடம் மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் மட்டும் ஈழம் வென்றுவிட
முடியுமா என்பதை தர்க்கரீதியாக, யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.