இந்தளவுக்கு
நெஞ்சை நாக்கால் தடவ வேண்டுமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் எழாது.
ஏனெனில் கமர்ஷியல் சினிமாவை சுவாசிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி
குறித்து மாதக் கணக்கில் அலுப்பில்லாமல் பேசவே செய்வார்கள்.
உலகிலேயே தொடர்ந்து
3வது ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கப் போகிறவர்,
இவர் மட்டும்தான். அதனால்தான் விலை போகக் கூடிய நட்சத்திரங்கள் இல்லாத போதும் இவர்
இயக்கி வரும் ‘ஈகா’ தெலுங்கு படத்துக்கு ரூ.30 கோடி வரை செலவிட்டிருக்கிறார்கள்.
எப்படியும்
‘ஈகா’வின் தமிழ் வடிவமான ‘நான் ஈ’ குறித்து அப்படம் வெளியாகும் தருணத்தில் இதே ‘தினகரன்
வெள்ளி மலரி’ல் செய்தி வரத்தான் போகிறது. ஸோ, படம் குறித்த விவரங்களை அப்போது பார்த்துக்
கொள்ளலாம். இப்போது ஓவர் டூ ராஜமவுலி.
கர்நாடக மாநிலத்தை
சேர்ந்த ரெய்ச்சூரில் பிறந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் ராஜமுந்திரி அருகிலுள்ள
கோவூரில். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. அப்பா, விஜயேந்திர பிரசாத், தெலுங்கு
படங்களுக்கு கதாசிரியராக இருந்ததால் இயல்பாகவே சினிமா மீது இவருக்கு நாட்டம் பிறந்தது.
குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 1985ல் பூஜை போடப்பட்ட ‘லார்ட்
கிருஷ்ணா’ படத்துக்கு இவரது அப்பாதான் கதாசிரியர். இயக்கம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின்
தந்தையும் இவரது மாமாவுமான ஷிவதத்தா. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து
நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் படம் நின்று விட்டது.
பின்னர் ஒரு
வருடம் வரை படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்விடம் உதவியாளராக பணிபுரிந்து
விட்டு ஏவிஎம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு தன்
அப்பாவிடமே 7 வருடங்கள் வரை உதவியாளராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னையில்தான்
ராஜமவுலி வசித்தார்.
அப்பாவுடன்
சேர்ந்து சினிமாக்களுக்கு கதை எழுத ஆரம்பித்த இவர், தன் அப்பாவின் சார்பாக பல இயக்குநர்களிடம்
கதை சொல்லியிருக்கிறார். அவை தெலுங்கில் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றன. ஆனால்,
இவர் மனதில் உருவான கற்பனையின் எல்லையைக் கூட அப்படங்கள் தொடவில்லை.
இந்த வருத்தமே
வெறியான போது சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இவரது குடும்பம் முடிவு செய்தது. இவரது
அப்பாதான் இயக்கம். ஆனால், ‘அர்த்தாங்கி’ என்னும் அந்தப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது.
கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் சுமை. இதை அடைக்க வேண்டுமென்றால் ராப்பகலாக உழைக்க
வேண்டும். அதற்கு சென்னையை விட, ஹைதராபாத்தான் சரியான இடம்.
எனவே, ஹைதராபாத்துக்கு
இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. கங்காராஜு தனது இரண்டாவது படத்தை இயக்க அப்போது முயற்சித்துக்
கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். ஆனால், அந்தப் படம் தொடக்கத்திலேயே
நின்றுவிட்டது. இதன் பின்னர், பழம்பெரும் தெலுங்கு இயக்குநரான கே.ராகவேந்திரராவ்விடம்
கடைசி உதவியாளராக சேர்ந்தார். அப்போது சின்னத்திரை தொடர்களை அதிகமும் கே.ராகவேந்திரராவ்
இயக்கி வந்த நேரம். ‘சாந்தி நிவாசம்’ உட்பட எண்ணற்ற மெகா தொடர்களில் உதவி இயக்குநராக,
ஷெட்யூல் டைரக்டராக, செகண்ட் யூனிட் இயக்குநராக பணிபுரிந்தார். இவரது அசுர உழைப்பை
பார்த்து ராகவேந்திரராவ் சூட்டிய பெயர்தான், ‘ராட்சஷன்’.
என்றாலும் சீனியர்
உதவியாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் இவருக்கு கே.ராகவேந்திரராவ்விடம்
கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல சினிமா தயாரித்ததால் ஏற்பட்ட கடன் அடைந்தது.
இந்தநேரத்தில்தான்
ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ்,
எழுதி தயாரித்தார். உண்மையில் அவரது ஃபர்ஸ்ட் அசிஸ்ட்டெண்ட் ஆன வர முடாபள்ளிதான், இப்படத்தை
இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் இயக்கி வந்த சின்னத்திரை தொடர் ஒன்று வெற்றிகரமாக
ஓடிக் கொண்டிருந்ததால், சினிமா வாய்ப்பு ராஜமவுலிக்கு கிடைத்தது.
கதை, திரைக்கதை,
வசனம் உட்பட சகலத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. ஆனாலும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’,
கே.ராகவேந்திரராவ் பெயரை தாங்கியே வந்தது. அத்துடன் டைரக்ஷன் மேற்பார்வை என்றும் அவர்
பெயர் பொறிக்கப்பட்டது. இதனால் படம் பம்பர் ஹிட் அடித்தபோதும், ராஜமவுலிக்கு எந்த கிரெடிட்டும்
கிடைக்கவில்லை.
ஆனால், கே.ராகவேந்திரராவுக்கு
இவரது திறமையும், அசுர உழைப்பும் புரிந்தது. தனது மகன் சூர்ய பிரகாஷை வைத்து ஃபேன்டஸி
படம் ஒன்றை இயக்க இவரை ஒப்பந்தம் செய்தார். போறாத வேளை... சூர்ய பிரகாஷ் நடித்த முதல்
படமான ‘நீத்தோ’ அட்டர் ப்ளாப். எனவே உருவாக்கத்திலேயே ராஜமவுலியின் இரண்டாவது வாய்ப்பு
நசுங்கியது.
ஊரெல்லாம்
‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், இயக்கியதாக பேச்சிருந்ததால் இவரை
நம்பி படம் தர யாரும் முன்வரவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடினார்.
அந்த சமயத்தில்தான்
‘விஎம்சி பேனர்’ என்னும் தயாரிப்பு நிறுவனம், ஜூனியர் என்டிஆரை வைத்து ‘கொரடு’ என்னும்
படத்தை தொடங்கியிருந்தது. ஆனால், படம் வளரவில்லை. பின்னர் உதயசங்கர் இயக்கத்தில் அதே
புராஜக்டை ஆரம்பித்தார்கள். அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூனியர்
என்டிஆர் வழியாக தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கதையை சொன்னார், ராஜமவுலி. அனைவருக்கும்
அந்த நெரேஷன் பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான், பல ரிக்கார்டுகளை முறியடித்த
‘சிம்மாத்ரி’. உண்மையில் பி.கோபால் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்த சப்ஜெக்ட்
அது.
இந்தப் பட வெற்றிக்கு
பிறகுதான் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை ராஜமவுலி இயக்கினார் என்பதையே உலகம் ஒப்புக்
கொண்டது! மூன்றாவதாக இந்தியாவில் யாருக்குமே அறிமுகமாகாத ரெக்பி விளையாட்டை மையமாக
வைத்து ‘சை’ படத்தை இயக்கினார். படம் ஹிட் என்பதுடன் உலகளவில் ரெக்பி விளையாட்டை துல்லியமாக
காண்பித்த மூன்றே படங்களில் இதுவே முதன்மையானது என்ற பெருமையையும் பெற்றது.
இந்தப் படத்தின்
போதுதான் தனது ஒளிப்பதிவாளரை ராஜமவுலி கண்டு பிடித்தார். அவர்தான், செந்தில்குமார்.
ஆந்திராவில் செட்டில் ஆன தமிழ் குடும்பத்தை சேர்ந்த அவர், பூனே திரைப்படக் கல்லூரியில்
படித்தவர். ‘அய்தே’ அவரது முதல் படம்.
ராஜமவுலியின்
தொடர் வெற்றிக்கு காரணம், டீம் ஒர்க்தான். ஆரம்பத்தில் யாரிடம் உதவியாளராக இருந்தாரோ
அந்த கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்தான் இன்று வரை இவரது அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பாளர்.
இசை, எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி. கலை ஆர்.ரவீந்தர். ஒளிப்பதிவு, செந்தில்குமார்.
இந்த காம்பினேஷனை இவர் மாற்றியதேயில்லை.
ப்ரீ புரொடக்ஷன்
நிலையிலேயே தனது குழுவுடன் அமர்ந்து காட்சிகள் அனைத்துக்கும் ஷாட் பிரித்து விடுவார்.
எந்தெந்த ஷாட்டுக்கு என்னென்ன கேமரா, லென்ஸ் வேண்டும், ஜிம்மி ஜிப்பா அல்லது சாதாரண
கேமராவா; ஆர்ட் டைரக்டர் என்ன செய்ய வேண்டும்; எந்த இடத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம்
தர வேண்டும்... என சகல விஷயங்களையும் அந்தந்த இலாக்காவுடன் பேசி தீர்மானித்து விடுவார்.
இதனால் இவரது குழுவை சேர்ந்த அனைவருக்கும் அனைத்தும் அத்துப்படி ஆகிவிடும்.
சமயங்களில்
இவரது குழுவுக்குள் சண்டை வருவதும் உண்டு. ‘எமதொங்கா’வில் அப்படி கலை இயக்குநரும்,
ஒளிப்பதிவாளரும் முட்டி மோதிக் கொண்டார்கள். எமலோகம் செட்டை அற்புதமாக ஆர்.ரவீந்தர்
போட்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் டல் லைட்டிங் கொடுத்திருந்தார். இப்படி செய்தால்
ரசிகனுக்கு, தான் அமைத்த செட் போய் சேராது என்பது ரவீந்தரின் வாதம். பிரகாசமான லைட்டிங்
கொடுத்தால் ஷேடோ விழும் என்பது செந்தில்குமாரின் நியாயம். அப்போது பலூன் லைட்டிங் நடைமுறைக்கு
வரவில்லை. இந்த வாக்குவாதத்தை அடுத்துதான் அந்த டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டது. யெஸ்,
வீட்டில் எரியும் பல்புகளை செந்தில்குமார் கூடுதலாக பயன்படுத்தினார். இதனால் நகைகளும்
‘டால்’ அடித்தன. ரவீந்தரின் உழைப்பும் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஷேடோவும் விழவில்லை.
இப்படி ராஜமவுலி
கொடுத்த சுதந்திரத்தால் வளர்ந்ததால்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இந்தியாவின்
டாப் மோஸ்ட் சிஜி பட ஒளிப்பதிவாளராக கொண்டாடப்படுகிறார். ‘எமதொங்கா’, ‘அருந்ததி’,
‘மகதீரா’ என அவர் பேர் சொல்லும் படைப்புகள் ஏராளம்.
அந்தவகையில்
‘ஈகா’வும் சரிபாதி சிஜி ஒர்க் உள்ள படம்தான். சொல்லப் போனால் ராஜமவுலியின் கனவுப் படம்
இது. ஆனால், இந்தக் கனவை உடனடியாக இவர் நடைமுறைப்படுத்தவில்லை.
தனது நான்காவது
படமான ‘சத்ரபதி’யில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் சிஜி ஒர்க்கை பயன்படுத்தினார்.
சுறாவுடன் நாயகன் பிரபாஸ் சண்டை போடும் காட்சி அது. திரையில் அது சரியாக வரவில்லை.
அன்றைய தொழில்நுட்பம் அந்தளவுக்குதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என சமாதானம்
அடைந்திருக்கலாம்.
அப்படி தேற்றிக்
கொள்ள ராஜமவுலி விரும்பவில்லை. ஆர்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர் வரை சகலரும்
நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவன் போல் தானும்
கசடற கற்றார். அதற்கான பலனை தனது அடுத்தப் படமான ‘எமதொங்கா’வில் அறுவடை செய்தார்.
எமனது அரண்மனை
அந்தரத்தில் தொங்கும். முகப்பு எருமை முகத்துடன் கம்பீரமாக இருக்கும். குறிப்பாக பாசக்
கயிறை பறிகொடுத்த எமன் (மோகன் பாபு), மீண்டும் அக்கயிற்றை ஜூனியர் என்டிஆரிடமிருந்து
கைப்பற்றியதும் அந்த எருமை முகம் சிலிர்த்து எழும். அட்டகாசமான சிஜி ஒர்க் அது. குறிப்பாக
மறைந்த என்டிஆர் தனது பேரனுடன் டான்ஸ் ஆடும் காட்சி... செம.
இதனையடுத்து
‘விக்கிரமார்க்குடு’வை இயக்கினார். பம்பர் ஹிட். பின்னர் ‘மகதீரா’வை பிரமாண்டமாக இயக்கினார்.
படம், ஆல் டைம் ரிக்கார்ட். தான்,உட்பட, தனது குழுவை சேர்ந்த அனைவரும் தயாராகி விட்டார்கள்.
இனி கனவுப்படமான ‘ஈகா’வுக்கு போகலாம் என முடிவு செய்தார். ஆனால், இதுவரை மாஸ் நடிகர்களின்
படங்களைதான் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ‘ஈகா’வுக்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை.
சின்ன நட்சத்திரங்கள் போதும். எனில், அதிகம் அறியப்படாத நடிகர்களை வைத்து தன்னால் வெற்றிப்
படத்தை கொடுக்க முடியுமா? பரிசோதிக்க முடிவு செய்தார். காமெடியன் சுனிலை கதையின் நாயகனாக்கி
‘மரியாத ராமண்ணா’வை இயக்கினார். படம், ப்ளாக் பஸ்டர்.
ரைட். இனி,
‘ஈகா’தான் என்று களத்தில் இறங்கி விட்டார். நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள்.
இது வில்லனுக்கு பிடிக்கவில்லை. எனவே நாயகனை கொன்று விடுகிறான். இறந்த நாயகன் ஈயாக
பிறக்கிறான். வில்லனை பழி வாங்குகிறான். இதுதான் ‘ஈகா’வின் கதை. ஆனால், ஈயின் மொத்த
ஆயுட்காலமே 21நாட்கள்தான். அதற்குள் சர்வ வல்லமை படைத்த மனிதனை அதனால் எப்படி பழி வாங்க
முடியும்? இதைத்தான் பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளும்,
படம் முழுக்க நூலாக ஓடும் சென்டிமெண்ட்டும், வலுவான ப்ளாஷ்பேக்கும் ராஜமவுலியின் அடையாளங்கள்.
இந்த ஏரியாவில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் பவர் ஃபுல்லாக
இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் மாஸ் படங்களிலும் ஃபெர்பக்ஷனை கொண்டு வர முடியும்
என்று காட்டியவர், இவர்தான். அதனால்தான் ‘தேவ் டி’ படம் வழியாக உலகெங்கும் புகழ் பெற்ற
அனுராக் காஷ்யப், ‘ஈகா’வின் டிரெய்லரை எவரெஸ்ட் உயரத்துக்கு தனது டுவிட்டர் தளத்தில்
புகழ்ந்திருக்கிறார்.
நடிகர்கள் ஆதிக்கம்
செலுத்தும் திரையுலகில் டெக்னீஷியன்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்
ராஜமவுலியின் ‘ஈகா’வுக்காக இந்தியாவே ரத்தின கம்பளம் விரித்து காத்திருக்கிறது. ஒரு
கலைஞனுக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச மரியாதை இது.
ஒன்று மட்டும்
நிச்சயம். ஜூன் மாதம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் அதிரப் போகிறது. சாதாரண ஈ, ஒட்டு மொத்த திரையுலகையும்
புரட்டிப் போடப் போகிறது. அனைத்து ஸ்டார் நடிகர்களையும் விட, இயக்குநரே உயர்ந்தவர்
என்பது நிரூபணமாகப் போகிறது.
சந்தேகமேயில்லை.
எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது இன்று வெறும் பெயரல்ல. அது, இந்திய மாஸ் சினிமாவின் விலை மதிப்பற்ற
பிராண்ட் நேம்.
- கே.என்.சிவராமன்
(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 27.04.2012)
(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 27.04.2012)