9 ஜூலை, 2012

ராட்சஷன்


இந்தளவுக்கு நெஞ்சை நாக்கால் தடவ வேண்டுமா என்ற கேள்வி இந்தக் கட்டுரையை படித்து முடித்ததும் எழாது. ஏனெனில் கமர்ஷியல் சினிமாவை சுவாசிப்பவர்கள் அனைவரும் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து மாதக் கணக்கில் அலுப்பில்லாமல் பேசவே செய்வார்கள்.

உலகிலேயே தொடர்ந்து 3வது  ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கப் போகிறவர், இவர் மட்டும்தான். அதனால்தான் விலை போகக் கூடிய நட்சத்திரங்கள் இல்லாத போதும் இவர் இயக்கி வரும் ‘ஈகா’ தெலுங்கு படத்துக்கு ரூ.30 கோடி வரை செலவிட்டிருக்கிறார்கள்.

எப்படியும் ‘ஈகா’வின் தமிழ் வடிவமான ‘நான் ஈ’ குறித்து அப்படம் வெளியாகும் தருணத்தில் இதே ‘தினகரன் வெள்ளி மலரி’ல் செய்தி வரத்தான் போகிறது. ஸோ, படம் குறித்த விவரங்களை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது ஓவர் டூ ராஜமவுலி.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரெய்ச்சூரில் பிறந்த இவர், வளர்ந்தது, படித்தது எல்லாம் ராஜமுந்திரி அருகிலுள்ள கோவூரில். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. அப்பா, விஜயேந்திர பிரசாத், தெலுங்கு படங்களுக்கு கதாசிரியராக இருந்ததால் இயல்பாகவே சினிமா மீது இவருக்கு நாட்டம் பிறந்தது. குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 1985ல் பூஜை போடப்பட்ட ‘லார்ட் கிருஷ்ணா’ படத்துக்கு இவரது அப்பாதான் கதாசிரியர். இயக்கம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தந்தையும் இவரது மாமாவுமான ஷிவதத்தா. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் படம் நின்று விட்டது. 
பின்னர் ஒரு வருடம் வரை படத்தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்விடம் உதவியாளராக பணிபுரிந்து விட்டு ஏவிஎம் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் சில காலம் வேலை பார்த்தார். அதன் பிறகு தன் அப்பாவிடமே 7 வருடங்கள் வரை உதவியாளராக இருந்தார். இந்த காலகட்டங்களில் சென்னையில்தான் ராஜமவுலி வசித்தார்.

அப்பாவுடன் சேர்ந்து சினிமாக்களுக்கு கதை எழுத ஆரம்பித்த இவர், தன் அப்பாவின் சார்பாக பல இயக்குநர்களிடம் கதை சொல்லியிருக்கிறார். அவை தெலுங்கில் திரைப்படமாகவும் வெளி வந்திருக்கின்றன. ஆனால், இவர் மனதில் உருவான கற்பனையின் எல்லையைக் கூட அப்படங்கள் தொடவில்லை.

இந்த வருத்தமே வெறியான போது சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இவரது குடும்பம் முடிவு செய்தது. இவரது அப்பாதான் இயக்கம். ஆனால், ‘அர்த்தாங்கி’ என்னும் அந்தப் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. கழுத்தை நெறிக்கும் அளவுக்கு கடன் சுமை. இதை அடைக்க வேண்டுமென்றால் ராப்பகலாக உழைக்க வேண்டும். அதற்கு சென்னையை விட, ஹைதராபாத்தான் சரியான இடம்.

எனவே, ஹைதராபாத்துக்கு இவரது குடும்பம் இடம் பெயர்ந்தது. கங்காராஜு தனது இரண்டாவது படத்தை இயக்க அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தார். அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். ஆனால், அந்தப் படம் தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. இதன் பின்னர், பழம்பெரும் தெலுங்கு இயக்குநரான கே.ராகவேந்திரராவ்விடம் கடைசி உதவியாளராக சேர்ந்தார். அப்போது சின்னத்திரை தொடர்களை அதிகமும் கே.ராகவேந்திரராவ் இயக்கி வந்த நேரம். ‘சாந்தி நிவாசம்’ உட்பட எண்ணற்ற மெகா தொடர்களில் உதவி இயக்குநராக, ஷெட்யூல் டைரக்டராக, செகண்ட் யூனிட் இயக்குநராக பணிபுரிந்தார். இவரது அசுர உழைப்பை பார்த்து ராகவேந்திரராவ் சூட்டிய பெயர்தான், ‘ராட்சஷன்’.
என்றாலும் சீனியர் உதவியாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் இவருக்கு கே.ராகவேந்திரராவ்விடம் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல சினிமா தயாரித்ததால் ஏற்பட்ட கடன் அடைந்தது.

இந்தநேரத்தில்தான் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், எழுதி தயாரித்தார். உண்மையில் அவரது ஃபர்ஸ்ட் அசிஸ்ட்டெண்ட் ஆன வர முடாபள்ளிதான், இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் இயக்கி வந்த சின்னத்திரை தொடர் ஒன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால், சினிமா வாய்ப்பு ராஜமவுலிக்கு கிடைத்தது.

கதை, திரைக்கதை, வசனம் உட்பட சகலத்திலும் இவரது பங்களிப்பு இருந்தது. ஆனாலும் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’, கே.ராகவேந்திரராவ் பெயரை தாங்கியே வந்தது. அத்துடன் டைரக்ஷன் மேற்பார்வை என்றும் அவர் பெயர் பொறிக்கப்பட்டது. இதனால் படம் பம்பர் ஹிட் அடித்தபோதும், ராஜமவுலிக்கு எந்த கிரெடிட்டும் கிடைக்கவில்லை.

ஆனால், கே.ராகவேந்திரராவுக்கு இவரது திறமையும், அசுர உழைப்பும் புரிந்தது. தனது மகன் சூர்ய பிரகாஷை வைத்து ஃபேன்டஸி படம் ஒன்றை இயக்க இவரை ஒப்பந்தம் செய்தார். போறாத வேளை... சூர்ய பிரகாஷ் நடித்த முதல் படமான ‘நீத்தோ’ அட்டர் ப்ளாப். எனவே உருவாக்கத்திலேயே ராஜமவுலியின் இரண்டாவது வாய்ப்பு நசுங்கியது.
ஊரெல்லாம் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை கே.ராகவேந்திரராவ், இயக்கியதாக பேச்சிருந்ததால் இவரை நம்பி படம் தர யாரும் முன்வரவில்லை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வாய்ப்புக்காக போராடினார்.

அந்த சமயத்தில்தான் ‘விஎம்சி பேனர்’ என்னும் தயாரிப்பு நிறுவனம், ஜூனியர் என்டிஆரை வைத்து ‘கொரடு’ என்னும் படத்தை தொடங்கியிருந்தது. ஆனால், படம் வளரவில்லை. பின்னர் உதயசங்கர் இயக்கத்தில் அதே புராஜக்டை ஆரம்பித்தார்கள். அதுவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் வழியாக தயாரிப்பாளரை சந்தித்து ஒரு கதையை சொன்னார், ராஜமவுலி. அனைவருக்கும் அந்த நெரேஷன் பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான், பல ரிக்கார்டுகளை முறியடித்த ‘சிம்மாத்ரி’. உண்மையில் பி.கோபால் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பதாக இருந்த சப்ஜெக்ட் அது.

இந்தப் பட வெற்றிக்கு பிறகுதான் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தை ராஜமவுலி இயக்கினார் என்பதையே உலகம் ஒப்புக் கொண்டது! மூன்றாவதாக இந்தியாவில் யாருக்குமே அறிமுகமாகாத ரெக்பி விளையாட்டை மையமாக வைத்து ‘சை’ படத்தை இயக்கினார். படம் ஹிட் என்பதுடன் உலகளவில் ரெக்பி விளையாட்டை துல்லியமாக காண்பித்த மூன்றே படங்களில் இதுவே முதன்மையானது என்ற பெருமையையும் பெற்றது.

இந்தப் படத்தின் போதுதான் தனது ஒளிப்பதிவாளரை ராஜமவுலி கண்டு பிடித்தார். அவர்தான், செந்தில்குமார். ஆந்திராவில் செட்டில் ஆன தமிழ் குடும்பத்தை சேர்ந்த அவர், பூனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். ‘அய்தே’ அவரது முதல் படம்.

ராஜமவுலியின் தொடர் வெற்றிக்கு காரணம், டீம் ஒர்க்தான். ஆரம்பத்தில் யாரிடம் உதவியாளராக இருந்தாரோ அந்த கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்தான் இன்று வரை இவரது அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பாளர். இசை, எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணி. கலை ஆர்.ரவீந்தர். ஒளிப்பதிவு, செந்தில்குமார். இந்த காம்பினேஷனை இவர் மாற்றியதேயில்லை.

ப்ரீ புரொடக்ஷன் நிலையிலேயே தனது குழுவுடன் அமர்ந்து காட்சிகள் அனைத்துக்கும் ஷாட் பிரித்து விடுவார். எந்தெந்த ஷாட்டுக்கு என்னென்ன கேமரா, லென்ஸ் வேண்டும், ஜிம்மி ஜிப்பா அல்லது சாதாரண கேமராவா; ஆர்ட் டைரக்டர் என்ன செய்ய வேண்டும்; எந்த இடத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும்... என சகல விஷயங்களையும் அந்தந்த இலாக்காவுடன் பேசி தீர்மானித்து விடுவார். இதனால் இவரது குழுவை சேர்ந்த அனைவருக்கும் அனைத்தும் அத்துப்படி ஆகிவிடும்.

சமயங்களில் இவரது குழுவுக்குள் சண்டை வருவதும் உண்டு. ‘எமதொங்கா’வில் அப்படி கலை இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் முட்டி மோதிக் கொண்டார்கள். எமலோகம் செட்டை அற்புதமாக ஆர்.ரவீந்தர் போட்டிருந்தார். ஆனால், செந்தில்குமார் டல் லைட்டிங் கொடுத்திருந்தார். இப்படி செய்தால் ரசிகனுக்கு, தான் அமைத்த செட் போய் சேராது என்பது ரவீந்தரின் வாதம். பிரகாசமான லைட்டிங் கொடுத்தால் ஷேடோ விழும் என்பது செந்தில்குமாரின் நியாயம். அப்போது பலூன் லைட்டிங் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வாக்குவாதத்தை அடுத்துதான் அந்த டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டது. யெஸ், வீட்டில் எரியும் பல்புகளை செந்தில்குமார் கூடுதலாக பயன்படுத்தினார். இதனால் நகைகளும் ‘டால்’ அடித்தன. ரவீந்தரின் உழைப்பும் ரசிகர்களுக்கு தெரிந்தது. ஷேடோவும் விழவில்லை.

இப்படி ராஜமவுலி கொடுத்த சுதந்திரத்தால் வளர்ந்ததால்தான் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இந்தியாவின் டாப் மோஸ்ட் சிஜி பட ஒளிப்பதிவாளராக கொண்டாடப்படுகிறார். ‘எமதொங்கா’, ‘அருந்ததி’, ‘மகதீரா’ என அவர் பேர் சொல்லும் படைப்புகள் ஏராளம்.

அந்தவகையில் ‘ஈகா’வும் சரிபாதி சிஜி ஒர்க் உள்ள படம்தான். சொல்லப் போனால் ராஜமவுலியின் கனவுப் படம் இது. ஆனால், இந்தக் கனவை உடனடியாக இவர் நடைமுறைப்படுத்தவில்லை.

தனது நான்காவது படமான ‘சத்ரபதி’யில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் சிஜி ஒர்க்கை பயன்படுத்தினார். சுறாவுடன் நாயகன் பிரபாஸ் சண்டை போடும் காட்சி அது. திரையில் அது சரியாக வரவில்லை. அன்றைய தொழில்நுட்பம் அந்தளவுக்குதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என சமாதானம் அடைந்திருக்கலாம்.

அப்படி தேற்றிக் கொள்ள ராஜமவுலி விரும்பவில்லை. ஆர்ட் டைரக்டரில் ஆரம்பித்து, ஒளிப்பதிவாளர் வரை சகலரும் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். கல்லூரி மாணவன் போல் தானும் கசடற கற்றார். அதற்கான பலனை தனது அடுத்தப் படமான ‘எமதொங்கா’வில் அறுவடை செய்தார்.

எமனது அரண்மனை அந்தரத்தில் தொங்கும். முகப்பு எருமை முகத்துடன் கம்பீரமாக இருக்கும். குறிப்பாக பாசக் கயிறை பறிகொடுத்த எமன் (மோகன் பாபு), மீண்டும் அக்கயிற்றை ஜூனியர் என்டிஆரிடமிருந்து கைப்பற்றியதும் அந்த எருமை முகம் சிலிர்த்து எழும். அட்டகாசமான சிஜி ஒர்க் அது. குறிப்பாக மறைந்த என்டிஆர் தனது பேரனுடன் டான்ஸ் ஆடும் காட்சி... செம.

இதனையடுத்து ‘விக்கிரமார்க்குடு’வை இயக்கினார். பம்பர் ஹிட். பின்னர் ‘மகதீரா’வை பிரமாண்டமாக இயக்கினார். படம், ஆல் டைம் ரிக்கார்ட். தான்,உட்பட, தனது குழுவை சேர்ந்த அனைவரும் தயாராகி விட்டார்கள். இனி கனவுப்படமான ‘ஈகா’வுக்கு போகலாம் என முடிவு செய்தார். ஆனால், இதுவரை மாஸ் நடிகர்களின் படங்களைதான் இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ‘ஈகா’வுக்கு பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லை. சின்ன நட்சத்திரங்கள் போதும். எனில், அதிகம் அறியப்படாத நடிகர்களை வைத்து தன்னால் வெற்றிப் படத்தை கொடுக்க முடியுமா? பரிசோதிக்க முடிவு செய்தார். காமெடியன் சுனிலை கதையின் நாயகனாக்கி ‘மரியாத ராமண்ணா’வை இயக்கினார். படம், ப்ளாக் பஸ்டர்.

ரைட். இனி, ‘ஈகா’தான் என்று களத்தில் இறங்கி விட்டார். நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இது வில்லனுக்கு பிடிக்கவில்லை. எனவே நாயகனை கொன்று விடுகிறான். இறந்த நாயகன் ஈயாக பிறக்கிறான். வில்லனை பழி வாங்குகிறான். இதுதான் ‘ஈகா’வின் கதை. ஆனால், ஈயின் மொத்த ஆயுட்காலமே 21நாட்கள்தான். அதற்குள் சர்வ வல்லமை படைத்த மனிதனை அதனால் எப்படி பழி வாங்க முடியும்? இதைத்தான் பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆக்ஷன் காட்சிகளும், படம் முழுக்க நூலாக ஓடும் சென்டிமெண்ட்டும், வலுவான ப்ளாஷ்பேக்கும் ராஜமவுலியின் அடையாளங்கள். இந்த ஏரியாவில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. குறிப்பாக இன்டர்வெல் ப்ளாக் பவர் ஃபுல்லாக இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் மாஸ் படங்களிலும் ஃபெர்பக்ஷனை கொண்டு வர முடியும் என்று காட்டியவர், இவர்தான். அதனால்தான் ‘தேவ் டி’ படம் வழியாக உலகெங்கும் புகழ் பெற்ற அனுராக் காஷ்யப், ‘ஈகா’வின் டிரெய்லரை எவரெஸ்ட் உயரத்துக்கு தனது டுவிட்டர் தளத்தில் புகழ்ந்திருக்கிறார்.

நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தும் திரையுலகில் டெக்னீஷியன்களுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ராஜமவுலியின் ‘ஈகா’வுக்காக இந்தியாவே ரத்தின கம்பளம் விரித்து காத்திருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கிடைத்திருக்கும் உச்சபட்ச மரியாதை இது.
 
ஒன்று மட்டும் நிச்சயம். ஜூன் மாதம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் அதிரப் போகிறது. சாதாரண ஈ, ஒட்டு மொத்த திரையுலகையும் புரட்டிப் போடப் போகிறது. அனைத்து ஸ்டார் நடிகர்களையும் விட, இயக்குநரே உயர்ந்தவர் என்பது நிரூபணமாகப் போகிறது.

சந்தேகமேயில்லை. எஸ்.எஸ்.ராஜமவுலி என்பது இன்று வெறும் பெயரல்ல. அது, இந்திய மாஸ் சினிமாவின் விலை மதிப்பற்ற பிராண்ட் நேம்.

- கே.என்.சிவராமன்

(நன்றி : தினகரன் வெள்ளிமலர் 
27.04.2012)

5 ஜூலை, 2012

பிழியப் பிழிய காதல்!


ஒரு கோடைக்காலத்தில், அவன் அவளை சந்திக்கிறான். மஞ்சள் வண்ண மழை ஆடையில் தேவதையைப் போல வசீகரிக்கிறாள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்கிறாள். இருவரும் பள்ளி மாணவர்கள். அவனுக்கு அடுத்த இருக்கையில் அவள். அடுக்கடுக்காக அழகான பொய்களை சொல்வது அவளது வழக்கம்.

“நான் வேற்றுக் கிரகத்தைச் சார்ந்தவள். என்னைத் தொடுபவர்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள் என்பது நான் பிறந்தபோதே பிறப்பிக்கப்பட்ட சாபம். என்னை முதலில் தொட்ட என் தாய் இறந்துவிட்டாள். சில காலத்துக்குப் பிறகு என் தந்தையும் மறைந்தார்!”

மற்ற குழந்தைகள் அவளைத் தொட அஞ்சுகிறார்கள். அவனுக்கு மட்டும் அவளைத் தொட்டுப் பேச ஆசை. மழை பொழிந்த ஒரு மாலையில், மழைக்கு ஒதுங்கிய இடத்தில் முதன்முறையாக அவளை அணைத்தமாதிரியாக உட்காருகிறான். மறுநாள் அவனுக்கு பயங்கரக் காய்ச்சல். அதன்பிறகு அவளை எங்குமே காணவில்லை. மாயமாக மறைந்து விடுகிறாள்.

கால ஓட்டத்தில் ஆண்டுகள் காணாமல் போக, அவள் மீண்டும் அவனை தொடர்பு கொள்கிறாள். இம்முறை அவன் கட்டிளங்காளை. அவளோ காண்பவர் காதலிக்கும் கன்னியாக்குமரி. அவனும் மாறவில்லை, அவளும் மாறவில்லை. அவளது பொய்களும் மாறவேயில்லை. வேற்றுக்கிரவாசிகள் குறித்து இம்முறை அதிகம் பேசுகிறாள். தான் பூமியைச் சார்ந்தவள் அல்ல என்று அடித்துப் பேசுகிறாள். அவனுக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. காதலில் விழுந்தவன் பகுத்தறிவையெல்லாம் சேடு கடையில் அடமானம் வைக்கவேண்டியதுதான்.

அவள் தவிர்க்க தவிர்க்க, இவன் தவிக்கிறான். அவள் மீதான தன் காதலை ஒவ்வொரு நொடியிலும் வெளிப்படுத்துகிறான். காதல் தேவன் ஆசிர்வதித்த ஒரு காலைப்பொழுதில் அவள் உணர்ச்சிமேலிட அவன் உதட்டோடு, தன் உதட்டைப் பதிக்கிறாள். மறுநாளே அவன் மீண்டும் காய்ச்சலில் விழ, மீண்டும் அவள், அவன் வாழ்க்கையில் இருந்து காற்றைப் போல காணாமல் போகிறாள்.

எட்டு ஆண்டுகள் கழிந்தநிலையில் அவனே எதிர்பாராத நொடியில் அவள் மீண்டும் அவனை காண்கிறாள். இம்முறை, அவளுடனான அவனது தூரத்தை இராணுவக் கட்டுப்பாட்டோடு வலியுறுத்துகிறாள். முந்தைய முறைகள் போலல்லாது, அவனிடம் சொல்லிவிட்டே விலகுகிறாள்.

இவன் நெருங்க, நெருங்க அவள் ஏன் விலகிக்கொண்டே செல்கிறாள் என்பதற்கு ஒரு தமிழ்சினிமாத்தன ட்விஸ்ட் வைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் இணைகிறார்களா என்பது காதல் கோட்டை பாணியிலான பரபரப்புக் காட்சிகளின் ஊடாக சொல்லப்படுகிறது. காதல் விஷயத்தில் தமிழன், கொரியன் வேறுபாடின்றி உலகில் அனைவருமே முட்டாப்பயல்கள் என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் காட்சிகள் அவை. ஷங்கர் படப்பாணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஐந்து நிமிட பிளாஷ்பேக் ஒன்றும் கச்சிதம். கமர்சியல் கலவை கலக்கலாக காக்டெயிலப்பட்ட காவியம்.

’பிட்டு’களுக்கு ஏராளமான வாய்ப்புகள். கொரியப்படமாக இருந்தும் ஒரு ‘க்ளிவேஜ்’ கூட காட்டாமல் படத்தை இயக்கியிருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியம் பளிச்சிடுகிறது. நம்மூர் நாளைய ஷங்கர்கள் உருவ வாகாக ஏகப்பட்ட சீன்கள், குறிப்பாக வசனங்கள்.

படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் உண்மையிலேயே ஜோடி என்பதால், நம்மூர் சூர்யா-ஜோதிகா, ’காக்க காக்க’ படத்தில் வெளிப்படுத்திய நெருக்கமான காதல் கெமிஸ்ட்ரியை இப்படத்திலும் காணமுடிகிறது. இறுதிக்காட்சியில் காதலை வெறுப்பவர்களையும் கண்ணீர்விடச் செய்யும் வசனங்கள். காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது.

பனிபொழியும் நடு இரவில், அவளை அவன் அணைத்தவாறே பேசுகிறான்.

“குளிராக இருக்கிறதா?”

“நீ அணைத்துக் கொண்டிருப்பதால் இதமான சூட்டை உணர்கிறேன். உனக்கு?”

“உன்னை அணைத்துக் கொண்டிருப்பதால் கனன்று கொண்டிருக்கும் அடுப்பின் அருகில் அமர்ந்திருப்பதாய் உணர்கிறேன்”

காதல், சூடான வெப்பமாய் இருவருக்குள்ளும் பரவுகிறது. இச்சூழலிலேயே பரபரப்பான இறுதிக்காட்சியும் தொடங்குகிறது. அவளைத் தொட்ட போதெல்லாம் அவனுக்குப் பிரச்சினை. இம்முறை?


படம் : லவ் ஃபோபியா
மொழி : கொரியன்
இயக்குனர் : Kang Ji-Eun
படம் வெளியான ஆண்டு : 2006

2 ஜூலை, 2012

அமேஸிங் ஸ்பைடர்மேன்


நாமெல்லாம் அசடாக இருந்ததால்தான் சூப்பர் ஹீரோக்கள் தோன்றினார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு அசடு என்கிற நிலையில் இருந்து ஓரளவுக்கு பரிணமித்திருக்கிறோம். எதையும் தர்க்கத்தில் அடக்கி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். எனவே முன்புபோல ஹீரோ சிறகில்லாமல் வானத்தில் பறப்பார், விமானத்தையே அசால்ட்டாக தூக்குவார், அவரது கை துப்பாக்கி, கால் பீரங்கி என்றெல்லாம் டூமாங்கோலி வெளாட்டு விளையாட முடியாது என்பதை ஹாலிவுட்காரர்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் கூட சூப்பர் ஹீரோவுக்கு தேவை இருக்கிறது.

ஏனெனில் நாம் இன்னும் பயந்தாங்கொள்ளிகளாகதான் இருக்கிறோம். ரோட்டில் எவராவது மயங்கி விழுந்துக் கிடந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே, “யாராவது சோடா எடுத்தாங்களேன்” என்று பதறிக்கொண்டுதான் இருக்கிறோம். அருகிலிருக்கும் கடைக்குப் போய் சோடா கொண்டுவந்து ஊற்றினால் போலிஸ், எஃப்.ஐ.ஆர், கோர்ட்டு என்று பிரச்சினை வருமோவென அச்சம். கொக்கரக்கோவென  நம்மை மாதிரி வெறுமனே கூவிக் கொண்டிருக்காமல் சோடா கொண்டு வருபவன் தான் சூப்பர்ஹீரோ. சுருக்கமாக சொன்னால் சாதா மனிதர்களின் இயலாமைக்கு சூப்பர் ஹீரோக்கள்தான் வடிகால்.

சூப்பர் ஹீரோவும் வேண்டும். லாஜிக் பிறழாமல் மக்கள் அவரை ஒப்புக்கொள்ளவும் வேண்டும். புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தி, அவரை மக்களுக்குப் பிடித்து தங்கள் கல்லாவை எப்போது ரொப்புவது என்று
கொலம்பியா பிக்சர்ஸ் யோசித்திருக்கிறது. ஏற்கனவே பிரபலமாகிவிட்ட ஒரு ஹீரோவுக்கு லாஜிக்கெல்லாம் ‘செட்’ செய்துப் பார்த்தால் என்ன? எனவேதான் ஸ்பைடர்மேனை ‘ரீபூட்’ செய்திருக்கிறார்கள்.

‘ரீபூட்’ என்றால் ’ரீபோக்’ மாதிரி ஏதோ பிராண்ட் என்கிற அளவுக்கு குழம்பிப் போயிருந்தேன். ஏனெனில் இச்சொல்லுக்கு நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தத்தையும், வெவ்வேறு விளக்கத்தையும் தந்து குழப்பித் தள்ளினார்கள். அண்ணன் பைத்தியக்காரன் தந்த விளக்கம்தான் துல்லியமான ஒரு தெளிவினை தந்தது. அதாவது வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா காமெடிதான் ரீபூட். “அதெல்லாம் ஒத்துக்க முடியாது. மறுபடியும் மொதல்லேருந்து ஸ்டார்ட் பண்ணுவோம்”. இவ்வளவு ஈஸியான விஷயத்தை ஏன் அப்படி இப்படியாக இடியாப்பச் சிக்கலாக நம் மக்கள் புரிந்துகொள்கிறார்களோ தெரியவில்லை.

படத்தின் கதை என்ன?

இப்படி ஒரு கேள்வி கேட்டு, அடுத்த நாலு பாராவுக்கு கதை சொல்லி, நாலு படம் போட்டு இப்பதிவை தேத்தும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை என்பதால், படம் பார்த்து கதையை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சும்மா ஒரு சிலந்தி கடித்துவிடுவதாலேயே ஒருவன் ஸ்பைடர்மேன் ஆகிவிட முடியாது என்கிற பேருண்மையை இத்தனைகாலம் மறைத்துவைத்திருந்த ஹாலிவுட்காரர்களை என்னதான் செய்யலாம். சாதாமேன் ஸ்பைடர்மேன் ஆவதிலிருந்து, அவனது கையில் இருந்து வலை எப்படி தோன்றுகிறது, அவனது உடையின் ஸ்பெஷல் என்ன என்பது வரை எல்லாப் பழியையும் அறிவியலின் தலையில் கட்டிவிட்டு, மரத்துப் போகும் ஊசி போட்டு வலிக்காத மாதிரி நைசாக காது குத்துகிறார்கள்.

சூப்பர்ஹீரோ ஒரு மக்கள் காவலன். மக்கள் அவனைக் கொண்டாடினாலும் அவனது தனிப்பட்ட வாழ்க்கை சோகமயமானது என்றெல்லாம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விதிகளை எல்லாம் தூக்கி குப்பைக் கூடையில் தைரியமாக கடாசியிருக்கிறார் இயக்குனர். புது ஸ்பைடர் மேன் சலிக்க, சலிக்க காதலிக்கிறார். காலில் குண்டு பாய்ந்தால், முள் குத்தினால் தூக்கி எறிந்துவிட்டு ஓடுவதைப் போல குண்டை பிய்த்துப் போட்டுவிட்டு ஓடுவது சூப்பர் ஹீரோத்தனம். புது ஸ்பைடர் மேன் அப்படியல்ல. நொண்டிக்கொண்டே ஓடுபவரால் வில்லனின் அராஜகத்தை தடுக்க முடியாது என்கிற நிலையில், மற்றவர்களின் உதவியோடு வில்லனை முறியடிக்கிறார். எல்லாப் புகழும் ஹீரோவுக்கே என்கிற நிலை இனி இல்லை. செத்துப்போனவருக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை, அட்சரம் பிசகாமல் கடைப்பிடிக்கும் தூய்மைவாதத்துக்கெல்லாம் முடிவு கட்டிவிடுகிறார் ஸ்பைடர்மேன். அவர் ஸ்பைடர்மேனாக இருந்தாலும் சாதாரண ஆசாபாசங்களுக்கு உட்பட்டவராக இருக்கிறார். க்ளைமேக்ஸில் அநியாயத்துக்கு ஃபீல் குட் எஃபெக்ட். வில்லன் கூட எம்.ஜி.ஆர் படத்தின் நம்பியார், அசோகன், மனோகர் கணக்காக திருந்தி நல்லவர் ஆகிவிடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஹீரோயின் கொள்ளை அழகு. கோல்ட் ஹேர், லைட் க்ளிவேஜ் என்று அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் அபாரம். மற்றபடி எடிட்டர் நன்றாக எடிட் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். கேமிராமேன் சூப்பராக படம் பிடித்திருக்கிறார். அனிமேஷன் வெகுசிறப்பாக அமைத்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம். வழக்கமான ஒரு சூப்பர் ஹிட் சினிமா விமர்சனத்தில் இன்னும் வேறு என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென நினைக்கிறீர்களோ, அத்தனையையும் நீங்களே ஃபில்-அப் செய்து வாசித்துக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டர். பழைய பாடாவதி சூப்பர் ஹீரோக்களை எல்லாம் தூசு தட்டி, மீண்டும் தர்க்கரீதியாக ரீபூட்டி நிறுவ வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் வெப். சிலந்தி மனிதன் குறித்த படத்தை இயக்கும் இயக்குனரின் பெயரிலும் ‘வெப்’ அமைந்து இருப்பது யதேச்சையான சுவாரஸ்யமாகவே இருக்கக்கூடும். இதையெல்லாம் யாராவது மெனக்கெட்டு ‘மேட்ச்’ செய்திருப்பார்களா என்ன?

30 ஜூன், 2012

ஹோல்டன்

ஊருக்கு முதன்முதலாக பஸ் வந்த அந்த விநாயகர் சதுர்த்தி அன்றுதான் அந்த வார்த்தையை முதன்முதலாக கேட்டேன். “ஹோல்டன்”

ரெட்டைமாடி வீடு கட்டிய என்ஜினியர் ஸ்டைலாக வாயில் ப்ளூபேர்ட்ஸ் சிகரெட் வைத்தபடியே கையை நீட்டி உரக்கச் சொன்னார். அவர் சொல்லியிருக்கா விட்டாலும் எம்-11 என்கிற நாமகரணத்தைத் தாங்கிய அந்த சிறுபேருந்து ஹோல்டன்னாகியிருக்கும். ஏனெனில் அவர் கைகாட்டி நிறுத்திய இடம் தான் பேருந்து நிலையம். பொன்னியம்மன் கோயில் வாசலில் இருந்த அரச மரம். ஊர் முழுக்க திறந்தவெளிதான் என்றாலும் ‘லேண்ட்மார்க்’காக ஓர் இடத்தில் பேருந்து நின்றால்தான் அனைவருக்கும் வசதியென்று அந்த இடத்தை பேருந்து நிலையமாக ஊர்ப்பெருசுகள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

என்ஜினியர் எந்த நேரத்தில் ‘ஹோல்டான்’ சொன்னாரோ, எல்லாருக்கும் ‘ஹோல்டன்’ பைத்தியம் பிடித்துக் கொண்டது. “ஹோல்டன்” என்று கத்தினால் பேருந்தின் இயந்திரம் ஆட்டோமேடிக்காக நின்றுவிடும் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதை காதில் வாங்கி, டிரைவர் ப்ரேக்கை மிதித்தால்தான் வண்டி நிற்கும் எனுமளவுக்கு அப்போதெல்லாம் பொறியியல் அறிவு மக்களிடையே வளரவில்லை. சைதாப்பேட்டை அருகில் அப்போது ‘ஹால்டா’ என்றொரு தொழிற்சாலை இருந்தது. டைப்ரைட்டிங் மெஷின்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர். மக்களுக்கோ அதுகுறித்த ‘ஓர்மை’ எதுவுமில்லை. ‘ஹோல்டன்’ என்கிற சொல் மருவியே, அப்பேருந்து நிலையத்துக்கு ‘ஹால்டா’ என்று பெயர்வைத்திருப்பதாக சாகும்வரை நம்பிக் கொண்டிருந்தார்கள்.

உண்மையை சொல்லப்போனால் பேருந்து என்கிற வாகனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகம் கூட எங்கள் மக்களிடம் அப்போது இல்லை. மடிப்பாக்கத்திலிருந்து சைதாப்பேட்டை சந்தைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் ஆடுகளை முன்பெல்லாம் நடத்தியே கொண்டு செல்வார்கள். பேருந்து வந்தபிறகு ஆட்டையும் வண்டியில் ஏற்றிச் சென்றாகவேண்டும் என்று அடம் பிடித்தார்கள். “கவருமெண்டு பஸ்ஸுதானே.. அதுபாட்டுக்கும் போவப்போவுது. ஆடு வந்தா உனக்கேன் எரியுது.. அதுவும் உயிர்தானே.. நீயா சுமக்கப் போற.. அது பாட்டுக்கும் ஓரமா நின்னுக்கிட்டு வந்துட்டுப் போவுது” என்று தர்க்கம் பேசினார்கள். கண்டக்டர்களுக்கு தாவூ தீர்ந்தது. ஆட்டுக்கும் டிக்கெட் போடவேண்டுமா என்பதுகுறித்த அறிவுறுத்தல் எதையும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் தராததால், ‘லக்கேஜ் டிக்கெட்’டாவது போடலாமென முயற்சித்த கண்டக்டர்களுக்கு எதிராக ஊரில் பெரும் போராட்டம் நடந்தது. “ஆட்டைப்போய் லக்கேஜ்னு எப்படி சொல்லமுடியும்? சூட்கேஸைதான் லக்கேஜ்னு சொல்லணும். இந்த கண்டக்டர்களுக்கு இங்கிலீஸ் கத்துக் கொடுக்குறதுக்குள்ளே நம்ம தாலியறுந்துடும் போல” என ஆடு கொண்டுச் செல்பவர்கள் புலம்பத் தொடங்கினார்கள். மனிதர்களை விட ஆடுகள் அதிகமாக பேருந்தில் பயணித்த காலக்கட்டம் அது. மடிப்பாக்கத்து ஆடுகள் சீட்டுகளில் வசதியாக – குறிப்பாக சன்னலோர சீட்டுகளில் – அமர்ந்து செல்வது வழக்கம். ஆடுகள் சிறுநீர் கழிப்பது, புழுக்கை போடுவது என்று ஏகத்துக்கும் அட்டகாசம்.

சம்பத் வீட்டு ஆடுகளுக்குதான் பேருந்து வசதி கிடைத்தபிறகு ஏகத்துக்கும் குஷி. சம்பத் ஆடுகளோடு அதன் மொழியிலேயே பேசக்கூடிய வல்லமை பெற்றிருந்தார். ‘ம்ம்மேஏஏஏஏ’ என்று அவர் குரல் கொடுத்தால், ஆடுகளுக்கும் பதிலுக்கும் ‘ம்ம்மேஏஏஏய்’ என்று பதில் கொடுக்கும். “வயிறு நெறைஞ்சிடிச்சின்னு சொல்லுது. வீட்டுக்கு ஓட்டிட்டு போவணும்” என்று ட்ரான்ஸ்லேட் செய்து சொல்வார். சம்பத்தை ‘சம்பத்’ என்று யாராவது அழைத்தால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். ‘சம்பேஏஏய்ய்’ என்று அழைத்தால்தான் அவருக்கு தன்னை யாரோ அழைக்கிறார்கள் என்று சுயவுணர்வே ஏற்படும். அடிக்கடி “ஹோல்டன்” என்கிற சொல்லை அவர் உச்சரித்ததைக் கேட்ட அவரது ஆடுகளும், அதன் மொழியில் “மேஏஏஏய்யங்ன்” என்று ஒருவழியாக ஹோல்டானுக்கு இணையான உச்சரிப்பை உச்சரிக்கப் பழகின.

ஆடுகள் மட்டுமின்றி சம்பத்தின் வீட்டில் நான்கு எருமை மாடுகளும், மூன்று பசுமாடுகளும் இருந்தது. அவற்றில் ஓர் எருமைக்கு அன்று வயிற்றுப்போக்கு. மாட்டாஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல பேருந்துச் சேவையை நாடினார். நடத்துனர் மாட்டை வண்டியில் ஏற்றிச் செல்வதற்கு மறுப்புச் சொல்ல, “ஆடுகளை ஏத்திட்டுப் போற, மாடு அதைவிட கொஞ்சம் பெருசு. அதை ஏத்துனா உன் பஸ்ஸு குடை சாஞ்சுமா என்ன?” என்று அறிவியல்பூர்வமான கேள்வியை எழுப்பி, நடத்துனரின் வாயை அடைத்தார். துரதிருஷ்டவசமாக ஆடு மாதிரி துள்ளி பேருந்தின் படிக்கட்டில் ஏறுமளவுக்கு மாடுகளுக்கு சாமர்த்தியம் போதவில்லை. எனவே கடைசிவரை பேருந்தில் மடிப்பாக்கத்து மாடுகள் பயணிக்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. அப்படி ஆகியிருந்தால் மாடுகளும் தம் மொழியில் “ம்மா..ய்யங்ன்” என்று ஹோல்டனுக்கு இணையாக உச்சரிக்கப் பழகியிருக்கும்.

இப்படியாக ஆரம்பக் காலக்கட்டங்களில் மனிதர்களைவிட அதிகமாக ஆடுகளை பயணிகளாக பெறும் பாக்கியம் எம்-11 டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் கிடைத்தது. செல்லப் பிராணிகளாக நாய் வளர்ப்பவர்கள் சிலர் இருந்தார்கள். நாய் என்றால் ராஜபாளையமோ, அல்சேஷனோ அல்ல. தெருநாய்தான். எஜமானர்களை எந்நிமிடமும் பிரியாத அந்நாய்கள் பேருந்துப் பயணத்தின் போதும் கூடவே சென்றாக வேண்டுமென அடம் பிடித்தன. டிவிக்காரரின் நாய் அம்மாதிரியான ஒரு பயணத்தின் போது, பேருந்தில் ஆக்ஸிலேட்டரை அமுக்கும்போது ஏற்படும் ‘விர்ர்ர்….’ சத்தத்தில் அதிர்ச்சியாகி, நடத்துனரை கடித்துவைத்த சம்பவமும் நடந்தது.

ஒருமுறை ராஜூ டிரைவர்தான் வண்டியை ஓட்டிவந்தார். இளவயசு என்பதால் கொஞ்சம் ‘டீக்’காக ட்ரெஸ் செய்து, பெண்கள் எதிர்ப்படும் போதெல்லாம் வசீகரமாக புன்னகைக்க முயற்சித்துக் கொண்டிருப்பார். கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ், கர்ச்சீப்பில் பவுடர் என்று காக்கிச்சட்டை போட்ட மைனர் அவர். பரங்கிமலை ரெயில்வே லெவல் கிராஸிங்கில் அன்று தாமதம் ஆகிவிட்டதால், ஒரு ‘சிங்கிள்’ பறிபோய், மேலதிகாரியிடம் ‘மெமோ’ வாங்கிவிடுவோமோ என்கிற அவசரத்தில் மிதி மிதியென மிதித்துக் கொண்டிருந்தார். கோழிப்பண்ணை திருப்பம் என்பது ஹேர்பின் வளைவுக்கு ஒப்பானது. கடினப்பட்டு திருப்பும்போது, “ஹோல்டான்” சத்தம் கேட்டது. எரிச்சலாக பிரேக்கை மிதித்தார்.

உள்ளூர் அரசியலில் வளர்ந்துவந்த நாகரத்தினம் நாயக்கர்தான் குரல் கொடுத்தவர். “சைதாப்பேட்டை நூர்ஜகான் தியேட்டருக்கு குடும்பத்தோட படம் பார்க்கப் போறேன். எம் பொண்டாட்டி சேலை கட்டிக்கிட்டிருக்கா. திரும்ப வர்றப்போ. இதே இடத்துலே ‘ஹோல்டான்’ பண்ணிட்டு, ஆரன் அடி” என்று கட்டளையிட்டார். அவசத்தில் சரி, சரியென தலையாட்டிய ராஜூ, திரும்ப வரும்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் ‘ஹோல்டான்’ செய்ய மறந்துவிட்டார். நாயக்கரின் மனைவியோ வெளியே செல்லும்போது கொஞ்சம் கவனமெடுத்து குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்தையாவது சேலை கட்டுவதில் செலவிடுவார். சைதாப்பேட்டை போய்விட்டு, திரும்பவரும்போதுதான் இந்த விஷயமே ராஜூவுக்கு நினைவுக்கு வந்தது. கோழிப்பண்ணை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரில் மாபெரும் கூட்டமொன்று சாலைமறியலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். நாகரத்தினம் நாயக்கர் தலைமையில் ஏராளமானோர், தலைவரது ஹோல்டான் கோரிக்கைக்கு மதிப்பு தராத பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் எதேச்சாதிகார ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு எதிராக திரண்டிருந்தனர். இந்தியெதிர்ப்புப் போருக்குப் பிறகாக எம் மக்கள் தமிழுணர்வோடு கலந்துகொண்ட மாபெரும் போராட்டம் அது. வந்து நின்ற பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கொஞ்சம் காரசாரமாகி கைகலப்பு வரை சென்று, படுகாயமான நிலையில் ஓட்டுனரையும், நடத்துனரையும் காவல்துறையினர் மீட்டனர். பிற்பாடு ஸ்தலத்துக்கு வந்த பல்லவன் போக்குவரத்துத் துறையின் பிரதான அதிகாரிகள், மக்கள் ‘ஹோல்டான்’ கோரிக்கை வைக்கும்போதெல்லாம், அதை தவறாமல் தங்கள் ஊழியர்கள் நிறைவேற்றுவார்கள் என்று வாக்குறுதி தந்தனர்.

காலம் கொசுவர்த்தி சுற்றி, அதுபாட்டுக்கும் விரைந்தோடியது. எங்கள் ஊரில் நிறைய மாணவர்கள் நங்கநல்லூருக்கும், ஆலந்தூருக்கும் போய் +1, +2 என்று மேற்படிப்பு படிக்க ஆரம்பித்தார்கள். ‘ஹோல்டன்’ என்று சொல்லப்படுவது ஆங்கில உச்சரிப்புப் பிழை என்பதை கண்டறிந்தார்கள். ‘ஹோல்ட் ஆன்’ என்று பிரித்து, மொழியைச் சிதைக்காமல் தெளிவாக உச்சரிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால் தமிழார்வலரான கனகசபா செட்டியார் மட்டும், வடமொழிகலந்த ‘ஹோ’வை புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் ஒத்தையடிப் பாதையாக இருந்த மடிப்பாக்கம்-வேளச்சேரி சாலை சீர்படுத்தப்பட்டு, 51-ஈ என்கிற புதியத்தடம் உருவாகி போக்குவரத்துப் புரட்சி மடிப்பாக்கத்தில் ஏற்பட்டிருந்தது. வேளச்சேரி விஜயநகருக்கும், கைவேலிக்கும் இடைப்பட்ட பகுதியில் இரவுவேளைகளில் கனகசபா வண்டியை நிறுத்துவார். “ஓல் டன்” என்ற ஓங்காரமான அவரது அலறலைக் கேட்டு, ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே ‘கீர்’ குறைத்துவிடுவார் வேம்புலி டிரைவர். பஸ் மெதுவாக அவருக்கு அருகில் வரும்போது, தாவி ஏறியவாரே மீண்டும் ஒருமுறை “ஓல் டன்” என்று கொஞ்சம் குறைந்த டெசிபலில் சொல்லுவார். கண்டக்டர் செல்வமும் அவரைப் பார்த்து மர்மமாக புன்னகைத்தவாறே, “டன் டன்.. டனா டன்” என்பார். கனகசபா அவரைப் பார்த்து வெட்கமாகச் சிரித்தபடியே, ஐம்பது காசு எடுத்து நீட்டி டிக்கெட் வாங்குவார். சைதாப்பேட்டையிலிருந்து கடைசி சிங்கிள் இரவு 8.40 வண்டியில் வழக்கமாக நடைபெறும் சம்பவமிது.

கனகசபா செட்டியார் காலமாகி நான்கு ஆண்டுகள் கழித்துதான் செல்வம் ஒருமுறை அந்த ரகசியத்தை எங்களிடம் சொன்னார். “விசயநகர் ஓரத்துலே குளத்தங்கரையை மடக்கிப்போட்டு செட்டியார் ஒரு குடிசை போட்டிருந்தாரு. ஒரு மாதிரி பொண்ணை, ஆந்திராவிலேருந்து தள்ளிக்கிட்டு வந்து வப்பாட்டியா அங்கிட்டு வெச்சிருந்தாரு”. செல்வத்தின் ‘டன் டன்.. டனா டன்-னு’க்கும், பதிலுக்கு செட்டியாரின் வெட்கச் சிரிப்புக்கும் அர்த்தம் அப்போதுதான் காலம் கடந்துப் புரிந்தது.

இப்போது ஊர் என்றே எங்கள் ஊரை சொல்லமுடியாது. மக்கள் நாகரிகம் ஆகிவிட்டார்கள். ஆடு, மாடெல்லாம் அபூர்வப் பிராணிகள் ஆகிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் பேருந்து என்பது மனிதர்கள் மட்டுமே பயணிக்க, அரசாங்கத்தால் கருணையோடு செய்யப்படும் ஏற்பாடு என்பதை உணர்ந்துவிட்டார்கள். ‘ஹோல்டன்’ ‘ஹோல்ட் ஆன்’ போன்ற குரல்களை இப்போது கேட்க முடிவதில்லை. அந்த கலாச்சாரத்தை கடைப்பிடித்தவர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இறந்துவிட்டார்கள். அல்லது மீதி பேர் நாகரிகமாகி விட்டார்கள். பேருந்தை கைகாட்டி நிறுத்தும் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று தோன்றுகிறது. பேருந்து என்பது பேருந்து நிலையங்களில் நிற்கும். எனவே அங்கு சென்றுதான் ஏறவேண்டும் என்கிற ஒழுங்கியல்தன்மை எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

போனவாரம் எம்-45ல் தி.நகருக்குப் போய்க் கொண்டிருந்தேன். விஜயநகரை நெருங்கும்போது கரகாட்டக்காரன் செந்திலுக்கு ஏற்பட்ட அதே டவுட்டு எனக்கும் ஏற்பட்டது. “கனகசபை செட்டியார் வெச்சிருந்த ‘வைப்’பை இப்போ யாரு வெச்சிக்கிட்டிருப்பாங்க?”

27 ஜூன், 2012

டெசோ


‘டெசோ’வால் இப்போது என்ன செய்ய முடியுமென்று திட்டவட்டமாக தெரியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த ‘டெசோ’வுக்கும், இன்றிருக்கும் ‘டெசோ’வுக்குமான வேறுபாடுகள் புரிந்தே இருக்கிறது.

அதே நேரம் ஈழப்பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு என்று சொல்லக்கூடிய ஒரே பெரிய கட்சியாக இங்கே திமுக மட்டுமே இருக்கிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவோ, ஆளுங்கட்சியான அதிமுகவோ, ஓரளவுக்கு தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் இடதுசாரிகளோ ஏற்றுக்கொள்ளாத நிலைபாடு இது. உதிரிக்கட்சிகளை விட்டு விடுவோம். அவர்களது நிலைப்பாடு கூட்டணி சமரசங்களுக்கு உட்பட்டது. திமுகவே கூட மத்தியக் கூட்டணிக்காக பல சமரசங்களை ஏற்றுக்கொள்ளும்போது, சிறுகட்சிகளை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. எனவேதான் திமுக முன்வைக்கும் ‘டெசோ’வுக்கு இங்கே முக்கியத்துவம் ஏற்படுகிறது.

முந்தைய ‘டெசோ’வின் போது திமுகவால் ’ஈழம்’ குறித்த தனது கருத்தாக்கத்தை தேசிய அளவில் பலரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இன்றைய திமுகவால் அதை செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. எமர்ஜென்ஸிக்குப் பிறகு திமுகவோடு நட்பு அடிப்படையில் அன்று கைகோர்த்த மாநில, தேசியக் கட்சிகள், தலைவர்கள் ஆகியோருக்கு இருந்த தன்மை சமகால கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவுக்கே கூட அன்றிருந்த கொள்கை அடிப்படையிலான சமூகப்பிடிப்பு இன்று இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். முன்பொருமுறை பெரியார் சொல்லி, அதையே 2009ல் கலைஞர் சொன்ன வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. “நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்துவிட முடியும்?”

பழைய டெசோ காலத்துக்கு வருவோம். இந்த அமைப்பு தமிழக நகரங்களில் ஈழத்தமிழருக்காக மாபெரும் பேரணிகளையும், கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி சாதித்தது. தேசியத் தலைவர்களான வாஜ்பாய், பகுகுணா, என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி (இவரேதான் அவரும்) என்று பலரையும் தமிழகத்துக்கு அழைத்துவந்து ஈழம் தொடர்பான நியாயங்களை மக்கள் முன் வைத்தது. ஈழத்துக்கு ஆதரவான போக்கினை கைக்கொள்ள இந்திய அரசினை கடுமையாக நெருக்கியது. ஈழப்பிரச்சினை என்பது தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஆசியப் பிராந்தியப் பிரச்சினை என்பதான தோற்றத்தை உருவாக்கியது. ஈழப்போராளிகள் ஒன்றுபட்டு ஈழம் பெறவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியது. இப்போது ஈழப்பிரச்சினையில் கலைஞர் துரோகி என்று வசைபாடிவரும் நெடுமாறன், வைகோ ஆகியோரும் அப்போது டெசோவில் தீவிரமாகப் பணியாற்றியவர்கள்தான். அன்றைய டெசோ பிறந்த இரண்டே ஆண்டுகளில் உருக்குலைந்துப் போனதற்கு காரணம் போராளிக் குழுக்களிடையே ஒற்றுமையின்றி போனதுதான். இந்திய, தமிழக அரசுகள் வெற்றிகரமாக இதை செய்துமுடித்தன. ‘காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைஞர் கலைத்தார்’ என்று இன்று புதுகாரணம் சொல்கிறார் நெடுமாறன். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக 87ல் கலைஞர் டெசோவை கலைத்தார் என்கிற தர்க்கம்தான் எத்துணை சிறப்பானது?

2009ல் திடீரென்று ஞானஸ்தானம் பெற்று, இன்று ஈழத்துக்காக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் அமைப்பின் நண்பர் ஒருவர், சமீபத்தில் புதிய டெசோ பற்றிய விவாதத்தில் முகநூலில் சொல்லியிருந்தார். “தமிழீழத்திற்காக போராட திமுகவை யாரும் அழைக்கவில்லை”. நண்பர் வரலாற்றில் கொஞ்சம் வீக். அவருக்காக சில தகவல்கள்.

-    1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு திமுக ஆதரவளிக்கிறது என்கிற தீர்மானத்தை கலைஞர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறியது.

-    1977ல் சென்னையில் ஐந்து லட்சம் பேர் பங்குகொண்ட பேரணி திமுகவால் நடத்தப்பட்டது.

-    1981ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு ஈழப்பிரச்சினை திமுகவால் கொண்டு செல்லப்படுகிறது. ஈழப்பிரச்சினையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கலைஞர் எம்.ஜி.ஆர் அரசால் கைது செய்யப்படுகிறார்.

-    வெலிக்கடை சிறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டவுடன் மறுநாளே சென்னையில் ஏழரை லட்சம் பேர் கலந்துக்கொண்ட கண்டனப் பேரணியை திமுக நடத்தியது.

-    1983 இனப்படுகொலை நடந்து இரண்டு மாதங்களாகியும் இந்திய அரசோ, தமிழக அரசோ அப்பிரச்சினை குறித்து வாய்திறக்கவில்லை என்று சட்டமன்றத்தில் திமுக பிரச்சினையைக் கிளப்பியது. பேராசிரியரும், கலைஞரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.

-    1986 மே மாதத்தில் மதுரையில் டெசோ சார்பாக திமுக முன்நின்று நடத்திய ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’தான் ஈழத்தமிழருக்காக தமிழகத் தமிழர்கள் குரல் கொடுத்ததின் உச்சபட்ச எழுச்சி.

-    1989ல் திமுக பதிமூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி மலர்கிறது. தமிழக திமுக அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படையை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. சென்னை துறைமுகம் வந்து சேர்ந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மாநில முதல்வர் கலைஞர் மறுத்தார். இதன் மூலம் இந்திய இறையாண்மையை அவமதித்து விட்டதாக திமுக மீது பிரச்சாரம் செய்யப்பட்டது.

-    இதே ஆட்சிக்காலத்தில் போராளிக்குழுக்களின் உட்சண்டை காரணமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் கொலைகள் திமுக ஆட்சியை கலைப்பதற்கு காரணமாக காட்டப்பட்டன.

-    உச்சக்கட்டமாக 91 மே 21. திமுக மீது கொலைப்பழி. அடுத்த தேர்தலில் அக்கட்சி அடைந்த படுதோல்வி.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத்துக்காக முதன்முதலாக தீக்குளித்தவரும் கூட ஒரு இசுலாமிய திமுக தோழர்தான்.

‘திமுகவை யாரும் அழைக்கவில்லை’ என்று சொன்ன நண்பர், இதெல்லாம் திமுக யாரும் அழைக்காமலேயே தன்னெழுச்சியாக ஈடுபட்ட செயல்பாடுகள் என்பதையும் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஈழப்பிரச்சினையை இங்கே பேசிய இயக்கம் திமுக. பேசிய தலைவர் கலைஞர்.

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதாலேயே “புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான்” என்று பாராட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் பேசுவது வீண்தாண். அப்படிப் பார்த்தால் கடந்த திமுக அரசு ஈழத்தமிழர்களுக்காக ஐந்து சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. என்ன செய்வது. கலைஞர் தமிழினத் துரோகி. அம்மா ஈழத்தாய். இராணுத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தரப்போகும் ஈழநாயகி போட்ட தீர்மானம் ஆயிற்றே. பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் ஈழவிவகாரத்தில் போதுமானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஈழம் குறித்த தாக்கத்தை வலுவாக தமிழகத் தமிழர்களிடையே ஏற்படுத்திய சமூக இயக்கம் என்று திமுகவால் பெருமிதமாக மார் தட்டிக்கொள்ள முடியும்.

இன்றைய ‘டெசோ’வால் உடனடியாக என்ன செய்துவிட முடியும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இச்செயல்பாடு திமுகவினுடைய வழக்கமான இயல்புதான் என்பதை திமுகவின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்கள் உணர்ந்துக்கொள்ள முடியும். இன்று இலங்கையில் ‘தமிழ் ஈழம்’ கோரி யாரும் போராட முடியாது. அந்த கருத்தாக்கம் மக்கள் மனதிலாவது நீறுபூத்த நெருப்பாக இருக்க வேண்டுமானாலும் ‘டெசோ’ போன்ற முயற்சிகள் நடந்துக்கொண்டெ இருக்கவேண்டும்.

புகழுக்காக, பணத்துக்காக போராளி ஆனவர்கள் காற்றடைத்த பலூன்கள். உண்மை எனும் ஊசி குத்தப்பட்டபின், சூம்பிப்போய் வரலாற்றால் தயவுதாட்சணியமின்றி பரிதாபகரமாக தூக்கியெறியப் படுவார்கள். அதை உணர்ந்து நமக்கு முன்னால் உழைத்தவர்களின் உழைப்பை மதித்து, வார்த்தைகளை விடும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் ஆதரவில் உருவாகும் ‘டெசோ’ பயனற்றது என்றால், வருடாவருடம் மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் மட்டும் ஈழம் வென்றுவிட முடியுமா என்பதை தர்க்கரீதியாக, யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.