கடந்த அக்டோபர் 27
அன்று மருதுபாண்டியர் நினைவு தினத்தின் போது வேம்பத்தூரில் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டார் திருப்பாச்சேத்தி காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆல்வின் சுதன். அங்கு
இரண்டு தரப்பினருக்கான மோதல் ஏற்பட்டது. அதுகுறித்த விசாரணைக்கு சென்ற ஆல்வின்
சுதனை சிலர் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். சிவகங்கை மாவட்டம் முழுக்க
காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தார்கள்.
நவம்பர் 6 அன்று துணை
ஆய்வாளரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபு, முத்துக்குமார், மகேஷ் மூவரும்
திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில்
அடைக்கப்பட்டனர். மேலும் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில்
பிரபு, பாரதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். பின்னர்
காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் சிவகங்கை கோர்ட்டில் மனுதக்கல்
செய்தனர்.
இதற்கிடையே பிரபு, பாரதி
இருவர் மீதும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தீண்டாமை வழக்கு ஒன்றில்
ஆஜர்படுத்துவதற்காக மதுரை மத்திய சிறையிலிருந்து காவல்துறையினர் அழைத்துச்
சென்றிருக்கிறார்கள். அப்போது இருவருமே போலிஸிடமிருந்து தப்பித்து விட்டார்களாம்.
தப்பித்தவர்கள் சும்மா தப்பிக்காமல் நான்கு போலிஸாரை தாக்கிவிட்டு தப்பித்துச்
சென்றிருக்கிறார்கள்.
உடனடியாக போலிஸ் உஷாராகி எல்லா இடங்களிலும் வலைவிரித்து
குற்றவாளிகளை பிடிக்க தயாரானது. பக்கத்து மாவட்ட காவல்துறையினருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது. இரவு எட்டே முக்கால் வாக்கில் மானாமதுரை அருகே மேலமேல்குடி
என்கிற இடத்தில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த குற்றவாளிகளை வாகனச்சோதனை நடத்திக்
கொண்டிருந்த போலிஸார் மடக்கியிருக்கிறார்கள். அங்கேயும் போலிஸார் மீது பயங்கர
ஆயுதங்களோடு இருவரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இங்கும் மூன்று போலிஸார்
காயமடைந்தனர்.
இந்த தகவல் அப்போது ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த
டி.எஸ்.பி. வெள்ளைத்துரைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வெள்ளைத்துரைதான். என்கவுண்டருக்கு
என்றே எம்பெருமானால் படைக்கப்பட்ட ‘வீரப்பன் புகழ்’ வெள்ளைத்துரையேதான். அவர்
உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். அதுவரை குற்றவாளிகள் அதே இடத்தில் தேவுடு
காத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதிரடிப்படையை கண்டதுமே வெடிகுண்டுகளை
வீசியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் போலிஸ் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
நடத்த வேண்டியிருந்திருக்கிறது. படுகாயமடைந்த இருவரும் மதுரை மத்திய
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டிருக்கிறார்கள்.
காவல்துறை ஆய்வாளர்களை கொன்ற நரகாசுரர்கள் இருவரும்,
அடுத்த ஒரே மாதத்தில் போலிஸாரால் (வேறு வழியில்லாமல்) சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
என்கிற செய்தி பரவியதும், சிவகங்கை அரண்மனை அருகே போலிஸார் வெடி வெடித்து தீபாவளி
கொண்டாடினார்கள்.
சுபம்.
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் துப்பாக்கி
படத்துக்கு சவால் விடும் விறுவிறுப்பான இந்த திரைக்கதையில் ஆக்ஷன் காட்சிகள்
அதிரடித் துல்லியம் கொண்டவையாக இருக்கிறது. க்ளைமேக்ஸில் வெள்ளைத்துரை எண்ட்ரி
ஆனதுமே ரசிகர்கள் விசில் அடித்து கரகோஷம் செய்கிறார்கள். ‘காக்க காக்க’வில்
சூர்யாவுக்கு கூட இவ்வளவு அப்ளாஸ் கிடைத்திருக்காது. ஆனால் என்ன பிரயோசனம். இதே
கதையைதான் ஆயிரத்து சொச்சமுறையாக போலிஸ் ரைட்டர்கள் எழுதித் தொலைக்க
வேண்டியிருக்கிறது. வாசிக்கும் நமக்கே இவ்வளவு ‘போர்’ அடிக்கிறது என்றால்,
திரும்பத் திரும்ப இதே பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு
போர் அடிக்கும்?
வழக்கம்போல நடுத்தர வர்க்கத்து மொக்கைகள் ‘சபாஷ் போலிஸ்’
என்று பூங்கொத்து கொடுக்கப் போகிறார்கள்.
சமூக விரோதிகளான நாமும்ம் வழக்கம்போல நாம் அடிக்கிற அதே
ஹாரனை திரும்பவும் பாம் பாம்மென ஒலியெழுப்பி இன்னொரு முறை அடித்துத் தொலைப்போம்.
நெ. 1 : எட்டு ஆண்டுகளாக ஒரு தீண்டாமை வழக்கு
புயல்வேகத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு குண்டர்
சட்டத்தில் அடைக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்தான், ‘திடீரென்று’ அவ்வழக்கில்
ஆஜர்படுத்த குற்றம் சாட்டப்பட்டவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றோம் என்று
காவல்துறை கூறுவதை அரசு நம்பலாம். கோர்ட்டு நம்பலாம். மனித உரிமை அமைப்புகளும்
நம்பலாம். காது இருப்பவர்கள் எல்லோருமே நம்பிவிட முடியாது இல்லையா?
நெ. 2 : என்கவுண்டர் என்று கேள்விப்பட்டதுமே மதுரை,
சிவகங்கை, ராமநாதபுரம் காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு செய்தியாளர்கள்
கேட்டதற்கு உடனடியாக தங்கள் பகுதியில் அப்படியேதும் நடைபெறவில்லை என்று மறுப்பு
தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிற்பாடு மறுப்பு தெரிவித்த ராமநாதபுரம் ஐ.ஜி.யே
ஸ்பாட்டுக்கு வந்ததோடு, என்ன நடந்தது என்கிற ‘கதை’யையும் சொல்லியிருக்கிறார்.
ஏனிந்த குழப்பம்?
நெ. 3 : காவல்துறையில் சேர்ந்து படிப்படியாக
முன்னுக்கு வந்து டி.எஸ்.பி. ஆகியிருக்கும் வெள்ளைத்துரை அவர்களுடைய மக்கள்
சேவையையும், கடின உழைப்பையும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் என்கவுண்டர்
நடக்கும் இடங்கள் பெரும்பாலும் இவர் போஸ்டிங்கில் இருக்கும் இடங்களாக அமையும்
யதேச்சையின் மர்மம் என்ன?
நெ. 4 : திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்
சரணடையும்போதே குற்றவாளிகள் நீதிபதியிடம் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். “எங்கள்
உயிருக்கு பாதுகாப்பில்லை. போலிஸார் என்கவுண்டரில் எங்களை போட்டுத்
தள்ளிவிடுவார்கள்” என்று அம்மனுவில் அச்சப்பட்டிருக்கிறார்கள். தீண்டாமை வழக்கில் உங்களை
முப்பதாம் தேதி ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப் போகிறார்கள். போலிஸாரை தாக்கிவிட்டு நீங்கள்
தப்பிக்கப் போகிறீர்கள். வெடிகுண்டுகளால் வெள்ளைத்துரை தலைமையிலான
அதிரடிப்படையினரை தாக்கப் போகிறீர்கள். அவர்கள் உங்களை போட்டுத் தள்ளப்
போகிறார்கள் என்கிற எதிர்கால சம்பவத்தை எந்த ஜோசியரோ துல்லியமாக கணித்து
என்கவுண்டரில் போடப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும்.
எவ்வளவு ஓட்டைகளை சுட்டிக் காட்டினாலும், செத்தவன்
என்ன மகாத்மாவா என்று புறந்தள்ளிவிட்டு போலிஸுக்கு சல்யூட் அடிக்கத்தான்
போகிறீர்கள். எப்படிப்பட்ட உத்தம ஆத்மாக்களையும் கொடூரமான குற்றவாளிகளாக காட்டி, போட்டுத்தள்ள
முடியும் என்பதற்கு கடந்தகாலத்திலேயே ஏராளமான சம்பவ சாட்சிகள் உண்டு. என்றாவது
ஒருநாள் நம்ம வீடும் பற்றிக்கொள்ளத்தான் போகிறது. அப்போது யார் வந்து அணைக்கப்
போகிறார்களோ?