27 நவம்பர், 2012

லைஃப் ஆஃப் பை

ஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்?

ஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.

இதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.

உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன? எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா?

தைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

மனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன? ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.

இப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.

தொடர்பில்லாத பதிவு :  துரத்துதலும், ஓட்டமும்!

8 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனத்தோடு , நிறைய கருத்துக்களையும் கொடுத்துள்ளீர்கள்.

    ரொம்ப நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த வாரம் இங்க ஐமாக்ஸ் ல ரிலீஸ் ஆகுறதா சொல்லி இருக்குறாங்க... பத்திட வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் மிகச்சிறந்த விமர்சனமாக இதை சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:35 PM, நவம்பர் 28, 2012

    படம் பாக்கனும் லக்கி. நீங்க சொன்னது போல இதுவொரு கிளாசிக் நாவல். நாவல்களைப் படமாக்குறப்போ பொதுவாகவே எதிர்பார்ப்பில் தோல்வியடைய வாய்ப்புண்டு. அதையும் தாண்டி படம் வந்திருக்குன்னு உங்க விமர்சனத்துல புரியுது. படத்தப் பாத்திறனும். :)

    பதிலளிநீக்கு
  5. பகிர்வுக்கு நன்றிங்க....

    பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. ""உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்)."" சூப்பர் ...கலக்கிட்டீங்க யுவா சார்

    பதிலளிநீக்கு
  7. உங்க தலைவர் சாரு life of piல் ஒட்டகச்சிவிங்கி இருக்குன்னு விமர்சணம் பண்ணியிருக்காரு பாத்தீங்களா?? பார்க்க 9.15ல் இருந்து https://www.youtube.com/watch?v=PRisL3m1Gao&feature=player_embedded

    பதிலளிநீக்கு