9 நவம்பர், 2012

புயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்


நவம்பர் 1966.

1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று நினைவில்லை.

புயல் சென்னையை தாக்கப் போகிறது என்று பரபரப்பு. நாளிதழ்கள் மட்டுமே அப்போது செய்திகளை அறிய ஒரே வழி. விடுதி அறையில் ரேடியோ இல்லை. நண்பர்களோடு அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். ஓங்கி வளர்ந்த மரங்கள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. விளம்பர ஹோர்டிங் பலகைகள் காற்றுக்கு
த் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தன.

மாடிக்குப் போய் மழையைப் பார்க்கலாம் என்று திடீர் ஆசை. பேய்மழை கொட்டிக் கொண்டிருந்தது. அசுர காற்றும் தன் பங்குக்கு தாண்டவமாடியது. அறை சன்னல்கள் படபடவென்று அடித்துக் கொண்டன. காற்றின் வேகம் தாங்காமல் சில சன்னல்கள் பிய்த்துக்கொண்டும் பறந்தன. வெளிச்சமுமில்லை. எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரியாக ‘க்ரே’வாகவே தெரிந்தது. இருந்தாலும் புயலை ‘லைவ்’வாக பார்க்கும் எங்கள் ஆசையை எதுவுமே தடுக்கவில்லை.

உயரமான அலைகளோடு ஒரு கப்பல் தத்தளித்துக் கொண்டிருந்ததை கடலில் பார்த்தோம். க
ப்பலையும் விட உயரமாக அலைகள் சீறின. காற்று அக்கப்பலை கரைக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. கப்பலோ மீண்டும் கடலுக்குள் செல்ல அடம் பிடித்தது. இந்தத் தள்ளு முல்லு நீண்டநேரம் நடந்தது. வென்றது இயற்கையே. துறைமுகத்துக்குத் தெற்கே செத்துப்போன திமிங்கிலத்தை மாதிரி கரை தட்டி நின்றது அந்தக் கப்பல்.

அதே நேரம் SS Damatis என்கிற பெரிய கப்பல் ஒன்று புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே மெரீனாவில் கரை தட்டியது. மூன்றாவதாக ஒரு கப்பலும் தென்சென்னை கடற்பகுதியில் கரை ஒதுங்கியது.

பிற்பகல் புயல் வலுவிழந்தது. ஆனாலும் காற்று பலமாகவே வீசியது. மெரீனாவில் கரை ஒதுங்கிய கப்பலைப் பார்க்கப் போனோம். சூறைக்காற்றால் மணல் பறந்து ஊசியாக எங்கள் உடம்பில் குத்தியது. எங்களது விடுதித் தோழர் ஒருவரிடம் கேமிரா இருந்தது. அவர் கப்பலை படம் எடுத்தார். Damatis கப்பல் ஒரு பக்கமாக மணலுக்குள் புதைந்து மாட்டிக் கொண்டிருந்தது.

பிற்பாடு அந்த கப்பலை அங்கிருந்து முழுமையாக அகற்ற முடியாமல், அதனுடைய இரும்பு பாகங்கள் கடலுக்குள்ளேயே நீட்டிக் கொண்டிருந்தன. கடலில் குளிப்பவர்கள் அடிக்கடி அப்பகுதியில் இரும்பு கிராதிகளுக்கு இடையே சிக்கி மரணமடைவார்கள். இந்நிலை நீண்டகாலத்துக்கு நீடித்தது.

அப்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக கட்டிடத்தில் நாங்கள் தேர்வு எழுதும்போது, புயலில் சிக்கிய அந்த கப்பலின் அமானுஷ்யமான தோற்றம் அடிக்கடி நினைவுக்கு வந்து திகில்படுத்தும்.

(
நன்றி : டாக்டர் ஆர். சங்கரன், http://sankaran4412.blogspot.in)


2012. அக்டோபர்

2012. அக்டோபர் இறுதி நாள்.  அடைமழை. ‘நிலம்’ புயல் வெறித்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. புயலால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, கடமையே கண்ணென்று அலுவலகத்தில் இருந்தேன். ட்விட்டர் மூலமாகதான் மழை பெய்கிறதா, காற்று அடிக்கிறதா என்பதை தெரிந்து கொண்டிருந்தேன்.

மூன்று மணி வாக்கில் நண்பர் நரேன் கைபேசியில் அழைத்தார். “என்னய்யா ரிப்போர்ட்டர் நீ. கப்பல் ஒண்ணு பெசண்ட் நகரில் கரை ஒதுங்கிக் கிடக்குது. நீ பாட்டுக்கு ஆபிஸ்லே கம்முன்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்றீயே” என்று உசுப்பிவிட்டார்.

ரோஷத்துடன் இரு சக்கர வாகனத்தை உதைத்து, பெச
ன்ட்நகர் நோக்கிக் கிளப்பினேன். புயல் காற்று, பெருமழை இதுவெல்லாம் மக்களை எவ்வகையிலும் அச்சப்படுத்தவில்லை என்பதைப் போக்குவரத்து நெரிசல் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இயற்கைச் சீற்றங்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள், கூடுகளில் தஞ்சம் புகும் பறவைகள்  போல வீடுகளில் முடங்கிக் கிடப்பார்கள். மழையோ, வெயிலோ தன் கடமை பணி டிராபிக் ஜாமில் முடங்கிக் கிடப்பதே என்று இப்போதெல்லாம் எந்நேரமானாலும் சாலைகளில் தவம் கிடக்கிறார்கள். சென்னை நகரம் சாதாரண நாட்களிலேயே ரொம்ப அழகு. அதிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சென்னை ரொம்ப ரொம்ப அழகு. போதாக்குறைக்கு இப்போது புயல்மழை வேறு.

இப்படிப்பட்ட
ச் சூழலில் பைக்கில் செல்வது கிட்டத்தட்டத் தற்கொலை முயற்சிதான். பெசன்ட் நகர் கடற்கரையை நெருங்கியபோதுதான் தெரிந்தது, என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று. அரசு எவ்வளவுதான் புயல் பற்றி எச்சரித்தாலும், புயலை நேரில் பார்க்கவேண்டும் என்கிற ஆவலில் குடும்பம், குடும்பமாக ஆட்டோவில் கடற்கரைக்கு வரும் கூத்தை என்னவென்று சொல்லி ஜீரணித்துக் கொள்வது?

போதாக்குறைக்கு கப்பல் ஒன்று கரை ஒதுங்கி விட்டது. சொல்லவும் வேண்டுமா? ஆளாளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் போனை போட்டு, “மச்சான், இங்கே ஒரு கப்பல் கரை ஒதுங்கிக் கிடக்குது. வர்றீயா?” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடலை பார்த்தால் கிட்டத்தட்ட சுனாமி மாதிரி சீறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கோ வேடிக்கை பார்க்கும் வெறி.


கரை ஒதுங்கி நின்ற கப்பல் கருப்புச் சாத்தான் மாதிரி தோற்றத்தில் பயமுறுத்தியது. பெயர் மட்டும் சாந்தமாக வைத்திருக்கிறார்கள். ’பிரதிபா காவேரி’யாம். ஆயில்/கெமிக்கல் டேங்கர் வகை கப்பல் இது. நல்லவேளையாக கப்பலில் ‘சரக்கு’ எதுவுமின்றி காலியாக இருந்ததால் பெரிய பிரச்சினை இல்லை. புயலில் தடுமாறி, அலைமோதி வந்து கடலோரமாக செருகிக் கொண்டிருக்கிறது. கரையிலிருந்து கடலுக்குள் நூறு, நூற்றி ஐம்பது மீட்டர் தூரத்தில் கப்பல். சில சிப்பந்திகளுக்கு உள்ளே காயம் பட்டிருக்கிறது. அலைமோதிக்கொண்டிருந்த கடலில் தீரமாக சில மீனவ இளைஞர்கள் படகு ஓட்டி, காயம்பட்டவர்களை
க் காப்பாற்றி அழைத்து வந்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

தொலைக்காட்சி சேனல்கள் கேமிராவும், கையுமாக குவிந்துவிட்டாலும் படமெடுப்பது மிகச்சிரமாக இருந்தது. ஆளையே தள்ளும் காற்றுக்கு கேமிரா தாக்குப்பிடிக்குமா? அப்படியும் சில துணிச்சலான டி.வி.க்கள் ‘லைவ்’ செய்ய ஆரம்பித்தன.

“சொல்லுங்க சார். நீங்க என்ன பார்த்தீங்க”

“நான் கரையோரமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு கப்பல் கரையை நோக்கி அப்படியே தடுமாறி வந்துக்கிட்டிருந்திச்சி...”


பாவம் மக்கள். எந்த சேனலை வைத்தாலும் இதே “நீங்க என்ன பார்த்தீங்க?”தான்.


கேமிரா செல்போனை யார்தான் கண்டுபிடித்ததோ என்று நொந்துகொண்டேன். தாஜ்மகாலுக்கு முன்
நிற்கும் தோரணையில் மக்கள் ஆளாளுக்கு கப்பல் முன்பாக நின்று தங்கள் செல்போனில் தங்களையே படம் பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

“கப்பலுக்குள்ளாற உசுருக்கு நிறைய பேர் போராடிக்கிட்டிருக்காங்க, ஏதோ எக்ஜிபிஸன் பார்க்குற மாதிரி எல்லோரும் வேடிக்கை பார்க்க வந்துட்டானுங்க...” என்று ஒட்டுமொத்தமாக மக்கள், மீடியா என்று எல்லோரையும் சேர்த்து திட்டிக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண். கரையோரமாக கடலுக்கு நெருக்கமாக இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறவர். இன்னும் சில நேரங்களில் புயல் கரையை கடக்கும்போது, இவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். அதனால்தான் அவருக்கு உயிரின் அருமை தெரிந்திருக்கிறதோ என்னமோ.

(நன்றி : புதிய தலைமுறை)

2 கருத்துகள்:

  1. நானும் உங்க கூட சேர்ந்து வந்த மாதிரி இருக்கு பகிர்வுக்கு நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  2. யுவா சார்,

    மெரினாவில் அந்த கிரேக்கக் கப்பலை நானும் பார்த்திருக்கிறேன். அதன் பெயர் SS Stamatis.

    நன்றி!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    பதிலளிநீக்கு