23 நவம்பர், 2012

வீரபாண்டியார்


கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”

கலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.

இந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள். 

வீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.

8 கருத்துகள்:

  1. அதிர்ச்சி தரும் தகவல். வீரபாண்டியார் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்..

    பதிலளிநீக்கு
  2. கலைஞர், வீரபாண்டியர் மேல் கொண்ட அன்பு எத்தகையது என்பதன் அளவுகோல், இன்று வீரபாண்டியரின் உடலை கண்டு, கலைஞர் அழுத நிகழ்வே சாட்சி...

    பதிலளிநீக்கு
  3. //அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி.//

    லக்கி, :)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:27 PM, நவம்பர் 23, 2012

    விருப்புரிமை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்; மின்சார அமைச்சராக இருந்து தமிழ்நாட்டில் மின்வெட்டுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ஆகிய பெருமைகளும் இவருக்கு உண்டு.

    சரவணன்

    பதிலளிநீக்கு
  5. One can not become Buddha just because he or she is dead
    It's a great loss for his family and to some extent to his party.....RIp

    பதிலளிநீக்கு
  6. வீரபாண்டியாருக்கு வீரவணக்கம்

    பதிலளிநீக்கு
  7. வீரபாண்டியார் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் thanks yuva sir for sharing old memories.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா7:41 AM, நவம்பர் 27, 2012

    பூலாவரி சுகுமாரன் கொலை நடந்தது எழுபதுகளின் இறுதியில் அல்ல.எம்ஜிஆர் தனிக்கட்ட்சி துவங்கிய பின் நடந்த கொலை வத்தலக்குண்டு ஆறுமுகம் இன்னொரு உதாரணம்.சென்னையில் சிந்தன் தாக்கப்பட்டது, சிம்சன் தொழிற்சங்க தகராறுகளில் நடத்தப்பட்ட வன்முறை என ஒரு ரத்த சரித்திரமே இருக்கிறது.

    பதிலளிநீக்கு