5 நவம்பர், 2012

யார் ஜெயிப்பது நல்லது?


அமெரிக்கா தனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடுக்கிறது.யார் அதிபர் ஆனால் இந்தியாவுக்கு நல்லது?

நவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க அதிபர்தான் என்றாலும், அவர் அடுத்த நான்காண்டுகளுக்கு உலகின் பல முக்கியமான விஷயங்களைத் தீர்மானிப்பவராக இயங்குவார் என்பதுதான் வரலாறு? ஒபாமா, ரோம்னி இந் இருவரில் யார் வந்தால் இந்தியாவிற்கு நல்லது?  

அவுட் சோர்சிங் :

பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அலுவல்கங்களில் நடக்க வேண்டிய பணிகளையும், விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. நம் இளைஞர்கள் பலருடைய வேலை வாய்ப்புக்கள் இதைச் சார்ந்திருக்கின்றன. அதே போல் பல மென்பொருள் வேலைகளும். இந்த விஷ்யத்தில் இந்த ஒருவரின் நிலை என்ன?

அவுட்சோர்சிங் பணிகளால் அமெரிகாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய  வேலைளை கணிசமாக இந்தியா அள்ளிக்கொண்டு போகிறது என்கிற ஒபாமாவின் அலட்டலுக்கு அமெரிக்காவிலேயே பெரிய ஆதரவில்லை. அதனால் ஒபாமாவே இந்த விஷயத்தை ஒரு அளவுக்கு மேல் பிரமாதப்படுத்தமாட்டார்.

ரோம்னியைப் பொறுத்தவரை  தொழில் வர்த்தகப் பின்புலத்தில் வந்தவர் என்பதால், இந்தியாவுடனான இப்போதைய அமெரிக்க வணிக உறவை ஆதரிப்பவராகவே அவர் இருக்கிறார். அவரது சொந்த நிறுவனமே கூட பல இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. குறிப்பாக அவரது நிறுவனம் நிறைய ‘அவுட்சோர்ஸ்’ பணிகளை இந்தியாவுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் பணிகள் குறித்த ஒபாமாவின் கருத்துக்கு நேரெதிரான கருத்து கொண்டவராகவே ரோம்னியை சித்தரிக்கிறார்கள்.

வணிகம் :

அவுட்சோர்சிங் குறித்த ஒபாமாவின் கருத்துக்கள் இந்தியர்களுக்கு எதிரானது என்கிற பார்வை  காரணமாக, இந்திய ஊடகங்கள்  ஒபாமாவால் இந்தியாவுக்கு பிரயோசனமில்லை என்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமான வணிக உறவு வழக்கத்தை விடவும் அதிகமாகவே பலப்பட்டிருக்கிறது என்று டெமாக்ரடிக் கட்சியினர் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஒபாமாவின் அதிகாரப்பூர்வமான முதல் இந்திய விஜயத்தின் போது, அவர் நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களை தன்னோடு அழைத்துவந்து இந்தியாவுக்கு ஏராளமான தொழிற்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்ததைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்

ரோம்னி அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச அளவில் வீழ்ந்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கெல்லாம் சீனாவின் வியாபாரக் கொள்கைகள் காரணமாக இருப்பதாக ஆதங்கப்படுகிறார்.
யார் அடுத்த அதிபரானாலும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். சீனாவா, இந்தியாவா என்று வரும்போது பல அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவையே விரும்புகிறார்கள். ஆனால் அவர்களே வெறுத்தாலும் அவர்கள் பொருளாதாரத்தைச் சீனா தன் கைக்குள் வைத்திருக்கிறது எனபது இன்னொரு யதார்த்தம்.

அயலுறவு :

ஒபாமா, ரோம்னி இருவருமே தேர்தல் பிரச்சாரங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம். இந்தியா அமெரிக்காவின் நம்பகமான நாடுகளில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு கொள்கை பற்றிய விவாதத்தில் இருவரும் மிகக்கவனமாக இந்தியாவைப் பற்றி தவறாக ஏதும் பேசிவிடக் கூடாது என்று தவிர்த்திருக்கிறார்கள்.

ஆனால் ஆப்கானிஸ்தான், ஈர்ராக் ஆகிய நாடுகளிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் போது அமெரிக்கா என்ன நிலை மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்து பல விஷயங்கள் தீர்மானமாகும்.  ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் போது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற டம்மி அரசாங்கத்தை அமெரிக்கா அங்கு விட்டுச் செல்லுமானால் அதை பாகிஸ்தான் இந்தியாவிற்க்கு எதிராகப் பயன்படுத்தும் என இந்தியா நினைக்கிறது. அதே போல் இந்தியாவின் கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்திவிட்டுப் போகுமானால் அது பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலைப் பாதிக்கும் என பாகிஸ்தான் நினைக்கிறது. இதை எப்படி அமெரிக்கா பாலன்ஸ் செய்யப் போகிறது என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.

இன்னொரு விஷ்யம் ஈரான். இந்தியா, ஈரானிலிருந்து கச்சா கச்சா எண்ணெய் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்கிறது,. ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒரு திருப்தியான உடன்பாட்டுக்கு ஒபாமாவின் இந்திய வருகையின்போது இருநாடுகளும் வந்தன. ஆனால் சில காலமாக ஒபாமாவின் கறார்த்தனத்தால் நாம் விரும்பிய அளவு எதிர்ப்பார்க்கும் அளவு எண்ணெயை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. இந்த பற்றாக்குறையால் இந்தியாவில் எரிபொருள் விலையேற்றம் தவிர்க்க இயலாத விஷயமாகி விட்டது.  ஈரானிய எண்ணெயை மற்ற நாடுகளுக்கு விற்கும் விவகாரத்தில் ஒபாமாவை விட தான் கறாராக இருக்கப் போவதாக ரோம்னி அறிவித்திருக்கிறார். இது தனிப்பட்ட வகையில் நமக்கு கெட்ட சகுனம். ரோம்னி இஸ்ரேலின் ஆதரவாளர். இஸ்ரேலின் நலன்களுக்காக இரான் தாக்கப்பட வேண்டும் என்ற நிலையை அவர் எடுத்தால் அது நம் நிலையை இன்னும் சிக்கலாக்கும்.

விசா விவகாரங்கள் :

கடந்த நான்காண்டுகளில் ஒபாமா அரசு H1B விசா வழங்கும் விஷ்யததில் முன்பிருந்த அரசுகளைவிடத் தாராளமாக நடந்து கொள்வதற்கில்லை. ஆனால் இந்திய அறிவியலாளர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்க அவரது கட்சி எப்போதும் தயாராக இருக்கிறது. கல்விக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களையும், அங்கேயே விசாவில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காகவும் பயன்தரும் வண்ணமாக குடிபெயர்வு விதிகளை தளர்த்துவேன் என்று ஒபாமா வாக்குறுதி தருகிறார். ரோம்னியைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். ரோம்னி தனது பிரசாரத்தின் போது வெளியிட்ட ஒரு கருத்து இந்தியர்க்ளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சட்ட ரீதியாக குடியேறியவர்களின் துணைவர், குழந்தைகளுக்கு வழங்கப்ப்டும் விசா எண்ணிக்கைகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்த இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். எச்1பி விசா குறித்த புதிய கொள்கைகளை அவர் முன்வைத்தால் மட்டுமே, அதைக் குறித்துத் தெளிவாக முடிவுக்கு வரமுடியும்

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் :

அமெரிக்கா வாழ்இந்தியர்கள் எவை எவற்றை முதன்மையானப் பிரச்னைகளாக கருதுகிறார்கள் என்பதை அடையாளம் காண்பதில் இரு வேட்பாளர்களுமே கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். வணிகம், குடி பெயர்தல், இந்திய தேசிய பாதுகாப்பு, அணுக்கொள்கை என்று ஏராளமான பிரச்னைகளில் அமெரிக்காவின் அணுக்கத்தை இந்தியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவேதான் சமீபமாக அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் தாமாக முன்வந்து இந்தியர்கள் இணையும் போக்கு அதிகரிக்கிறது. அனீஷ் சோப்ரா, கால் பென் போன்றோர் ஒபாமாவின் நிர்வாகத்தில் பணியாற்றுகிறார்கள். பாபி ஜிண்டால், நிக்கி ஹாலி போன்றோர் ரிபப்ளிகன் கட்சியின் ஆளுநர்கள். இவர்களைப் போலவே நிறைய அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆளுகையில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.

கடைசிக்கட்ட நிலவரத்தின் படி ஒபாமா மீண்டும் வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று பெரும்பாலான அமெரிக்காவாழ் இந்தியர்கள் கருதுகிறார்கள். இவர்களில் நாலில் மூவர் ஒபாமாவுக்கு ஓட்டளிக்கப் போவதாகவே கணக்கெடுப்புகள் வாயிலாகத் தெரிந்திருக்கிறது.

இறுதியாக  
யார் வெல்வார்கள் எனப்து முக்கியமில்லை. கற்பனைகள் ஏதுமின்றி எதிர்காலத்தை எதிர்கொள்ளப் பழகுவோம்.

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

  1. \\விற்பனை தொடர்பான ஃபாலோ அப் பணிகளையும் செலவைக் குறைப்பதற்காக இந்தியாவிற்கு வெளியே உள்ள நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இதில் கணிசமான பணிகள் இந்தியாவில் உள்ள பிபிஓ கம்பெனிகளுக்கு கிடைக்கின்றன. \\

    அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள என்று இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  2. கரெக்ட் பண்ணிட்டேன் முரளி. தேங்க்ஸ் :-)

    பதிலளிநீக்கு
  3. யார் வந்தாலும் நாம் அவர்களின் அடக்கம். யார் மிகவும் மோசமானார் என்பது பார்த்து ஒதுக்க உங்கள் கருத்து சரி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:07 PM, நவம்பர் 05, 2012

    Romney is better for Indian Americans and India. He will bring Legal Immigration Reform which will result in fast green card for indians. Currently a indian has to wait 8-10 years for a greencard.

    On the other hand Obama is more interested in Illegal immigration reform (amnesty to the illegal immigrants) for getting the Latino vote.

    Another thing as Romney considers China as a enemy so he will try to help India to counteract the Chinese influence in Asia. This will be of great benefit to India.


    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு நன்றிங்க.......

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:07 AM, நவம்பர் 07, 2012

    3 in 4 supporting Obama is a blunt

    பதிலளிநீக்கு
  7. அட நீங்க வேற, இந்தியாவுக்க்கு யார் அதிகம் அவுட்சோர்ஸிங் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அமெரிக்கர்களெ ஓட்டு போடுவார்கள்.
    நாங்கள் எதுக்கு வேலை செய்யனும்? அதுக்குத்தான் ஆசியர்கள் இருக்கின்றார்களே! எங்களுக்காக உழைத்துக்கொட்டி எங்களை சொகுசாக வைத்திருக்கின்றார்களே. அவர்களை வேலை செய்ய சொல்லிவிட்டு நாங்கள் வாழ்க்கையை அனுபவிக்கனும். நாக்கள் நிர்வாகத்தில் நம்பர் 1. நாங்கள் வேலை செய்ய மாட்டோம்.

    உங்களுக்கு தெரியுமா? சைதாப்பேட்டை லெவல் கிராஸில் பூ விற்றுக்கொன்டிருக்கும் 70 நு கிழவியின் உழைப்பு இங்க இருக்கும் எங்கள் அமெரிக்க மேலாளர் சொகுசாக லாஸ்வேகாஸ் சென்று ஓய்வெடுக்க, சுரன்ட்டப்படுகிறதுன்னு?

    பதிலளிநீக்கு