2012. என்னுடைய பழைய ‘ஐடியல்’ பலரையும் ஒழித்துவிட்டது. வயது காரணமா என்று
தெரியவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் கமலுக்காக யாரிடமாவது எப்போதும் சண்டை
போட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். இப்போது கமல் அபிமானிகளிடம் நானே சண்டை
போடுமளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. அதையெல்லாம் விடுங்கள். ரசனை, பார்வைக் கோளாறாக
இருக்கலாம்.
தனிப்பட்ட முறையில் மிக அதிகமாய் பாதிக்கப்பட்டிருப்பது டாக்டர் ராமதாஸ்
அவர்களின் சமீபகால செயல்பாடுகளால்தான். கமலை மாதிரியே நினைவுதெரிந்த காலத்தில்
இருந்து இவர் என்னுடைய ஹீரோ.
பலரும் அவரை சாதிவெறியர் என்றோ, அரசியல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நிறம் மாறும்
பச்சோந்தி என்றோ விமர்சித்தபோதெல்லாம் அதெல்லாம் பெரியதாக இம்பேக்ட்
ஏற்படுத்தியதில்லை. வடமாவட்டங்களில் வஞ்சிக்கப்பட்ட சாதியாக வன்னியர்களை நான்
கருதியதும் ஒரு காரணமாக இருக்கலாம். சாராயம் காய்ச்சுகிற சாதி என்று வன்னியர்களை கீழ்மைப்படுத்திப்
பேசியவர்கள் என்னைச் சுற்றி நிறைய இருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமூகத்தில் பிறந்து தன்முயற்சியால் அந்த காலத்திலேயே டாக்டருக்கு
படித்து வளர்ந்தவர். நாம்தான் மேலே வந்துவிட்டோமே என்கிற சுயநலத்துக்கு இடம்தராமல்
தான் பிறந்த சமூகத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். உயிரைக் கொடுத்து போராடி ‘எம்.பி.சி.
கோட்டா’ கொண்டுவர காரணமாக இருந்தவர். கல்வி குறித்த விழிப்புணர்வை ஊட்டி
பல்லாயிரம் இளைஞர்கள் பட்டதாரிகளாக பரிணமிக்க கலங்கரை விளக்காய் நின்றவர். ராமதாஸை
கொண்டாட இன்னும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அரசியல் கட்சிகளிலேயே வித்தியாசமான
கட்சியாக பா.ம.க.வை உருவாக்கியவர். எளிய மக்களுக்கு இடம் தருவதோடு, அறிவுஜீவிகள்
எளியவர்களோடு கலக்க அருமையான களம் அமைத்துத் தந்தவர். அரசின் பிரச்சினைகளை
விமர்சிப்பதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வை அறிவுபூர்வமான முறையில்
முன்வைப்பவர். வருடா வருடம் நிபுணர்களின் அறிவுறுத்தலில் அவர் போடும் ‘மாதிரி
பட்ஜெட்’ போன்ற முயற்சிகள் இந்திய அளவில் எந்த கட்சியும் செய்யாத சாதனை.
மிகச்சரியான சந்தர்ப்பத்தில் வன்னியர் சங்கத்திலிருந்து பா.ம.க உருவானது.
எம்.ஜி.ஆரின் இல்லாமையை அதிகம் பயன்படுத்திக்கொண்டது ஜெ.வா அல்லது டாக்டரா என்றால்
டாக்டர்தான் என்று தோன்றுகிறது. ராஜீவ் மரண அனுதாபத்திலும் சட்டமன்றத்தில் தன்
கணக்கை சரியாகவே துவக்கியது பா.ம.க., என்ன, ஒரு அரசியல் கட்சியாக மலர்ந்தபின்
கொள்கை, கோட்பாடுகள் குறித்த குழப்பம் எல்லோரையும் போலவும் டாக்டருக்கும் வந்தது.
ஆரம்பத்தில் தன்னை திராவிடக் கட்சிகளின் நீட்சி போல காட்டிக் கொண்டார். பிற்பாடு
அறுபதுகளில் திமுக கைவிட்ட கொள்கைகளை கையில் எடுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட
திராவிட தமிழ் தேசியம் மாதிரி. ஒருகட்டத்தில் தீவிரமான தமிழ்தேசியக் கட்சியைப்
போன்ற தோற்றத்துக்கு பா.ம.க., வந்தது. ஆனால் இக்கட்டத்தில் அடைந்த தேர்தல்
தோல்விகள் பா.ம.க.வின் எதிர்காலம் குறித்த குழப்பத்தை அதன் தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
எனவேதான் பழைய திண்ணை அரசியலுக்கு மாறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டதாக
அக்கட்சியின் தலைமை கருதுகிறது. எவ்வகையிலும் இது பரிணாம வளர்ச்சியாக இருக்காது.
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பாரம்பரியப் பெருமைகளை இழப்பதாக நாம்
கருதினாலும் திராவிடக் கட்சிகளின் இருத்தலியல் என்பது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை
நிலைப்படுத்துவது, அதன் மூலமாக தாம் நம்பும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது என்பது
வழக்கமாக இருக்கிறது. பா.ம.க. சந்தர்ப்பத்தங்களை பயன்படுத்தியதுண்டு. ஆனால் ‘கொள்கைகள்’
என்று தாம் நம்பியதை சந்தர்ப்பங்களுக்காக பலி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களோடு பகை போதும் என்கிற முடிவுக்கு இருபது இருபத்தைந்து
ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்கை முடிவை இன்று டாக்டர் ராமதாஸ் காற்றில்
பறக்க விட்டிருப்பது இதைத்தான் காட்டுகிறது. திருமாவளவனோடு இணைந்து இரவும் பகலுமாக
அவர் பாடுபட்ட முயற்சிகள் எல்லாம் இன்று விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. சமூக
நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை என்று டாக்டரும் நம்பத் தொடங்கிவிட்டதையே
தர்மபுரிக்கு பிறகான அவரது செயல்பாடுகள் உணர்த்துகிறது. மேலும் கட்சியின் பிடி
டாக்டரிடம் இல்லாமல், காடுவெட்டி குரு போன்றவர்கள் கைக்கு போய்விட்டதையும் உணர்ந்து
வருத்தப்பட வேண்டியிருக்கிறது.
கலப்பு மணத்துக்கு எதிர்ப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும்
பெரியாரியக் கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியாகவே டாக்டரின் சமீபக்கால
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ம.க., பண்பட்ட அரசியல்
கட்சியல்ல, இன்னமும் அதே சாதிச்சங்கம்தான் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே
டாக்டரும், பா.ம.க., தலைவர்களும் நடந்துக் கொள்கிறார்கள். கோடிக்கணக்கான
பிற்படுத்தப்பட்ட மக்களின் ஹீரோ, இன்று ‘காதல்’ படத்து வில்லனாய் தெரிவது
காலத்தின் கோலம். சகிக்க முடியாத கொடுமை.