தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகமாக ‘மொழி’ பிறந்து ஒரு லட்சம்
ஆண்டுகளாகிறது. முதன்முதலாக பேசப்பட்ட மொழி எதுவென்பதற்கு வரலாற்றில் எந்த
அடையாளமும் இல்லை. ஆரம்பத்தில் மொழிக்கு ஒலி வடிவம் மட்டும்தான் இருந்ததே தவிர,
வரிவடிவமும் இல்லை. நாகரிகங்கள் வளரத் தொடங்கியபோதே மொழியும் வளர்ந்தது.
பண்டைய மொழிகளில் பல்வேறு மொழிகள் சிதைந்து, முற்றிலுமாக அழிந்துவிட்டதின்
காரணமாக, அம்மொழியைப் பேசிவந்த கலாச்சாரம் இன்று தன்னுடைய அடையாளத்தை முற்றிலுமாக
இழந்து நிற்கிறது. நமக்கு தெரிந்த வரலாற்றின்படி, இன்றும் ஏதோ ஒரு வடிவில் வாழும்
ஏழு மொழிகளுக்கு செவ்வியல் தன்மை உண்டு. இவை நமது பொக்கிஷங்கள். இவற்றை
பாதுகாத்தால்தான் நம்முடைய மரபின் தொடர்ச்சியை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு
கொண்டுச்செல்ல இயலும். கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, பாரசீகம், சீனம், சமஸ்கிருதம்,
தமிழ் ஆகியவையே இன்று எஞ்சியிருக்கும் ஏழு செம்மொழிகள்.
மெசபடோமியா நாகரித்தைச் சேர்ந்த சுமேரியன், அக்காடியன், இயேசு கிறிஸ்துவின்
தாய்மொழியான அர்மைக், பண்டைய எகிப்து கலாச்சாரமொழியான எகிப்தியன் ஆகியவை முற்றிலுமாக
வழக்கத்திலிருந்து அழிந்துவிட்டன.
தமிழுக்கு வயது ஐயாயிரம் இருக்கலாம். திராவிட மொழிகளின் ஆதிமொழி தமிழ். இதிலிருந்து பிறந்த ஏராளமான மொழிகள்
இன்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகின்றன. தமிழின்
துணைமொழிகளுள் ஒன்றான ‘ப்ராஹூ’, இப்போதும் பாகிஸ்தானின் பலுசிஸ்தானத்தில்
பேசப்படும் மொழி. வட இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோலமி, கோண்டி ஆகியவையும்
இதே போன்றுதான். தென்னிந்தியாவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழில்
இருந்து தோன்றிய புதிய மொழிகள். ‘திராவிட’ என்கிற சொல்லே கூட ‘தமிழ்’, ‘தமிழ’,
’த்ரமில’, ‘த்ராவிட’, ‘திராவிட’ என்று உருமாறியதாக மொழியியல் ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். சமஸ்கிருத ஆதிக்கத்தின் காரணமாகவே தமிழில் இருந்து மற்ற
தென்னிந்திய மொழிகள் உடைந்து உருவாகியதாக கருதுகோள் இருக்கிறது. கி.பி. 500 வரை
கேரளாவிலும் தமிழ் மட்டுமே மொழியாக இருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே தமிழர்கள் கடல்வழி வணிகத்தில் சிறப்பான
இடத்தைப் பிடித்திருந்தார்கள். ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும், சீனர்களோடும்
வணிகத் தொடர்பு இருந்திருக்கிறது. எனவே இன்றும் வாழும் பழைய மொழிகளில் சில தமிழ்
வார்த்தைகள் இருப்பதை காணலாம். போலவே அம்மொழிகளின் லேசான பாதிப்பும் தமிழில்
உண்டு. சீனாவில் இருந்து அப்போது சர்க்கரை இறக்குமதி நடந்துக் கொண்டிருந்ததால்தான்
‘சீனி’ என்கிற சொல்லே உருவானது என்கிறார்கள்.
கி.மு. ஐநூறிலேயே தமிழுக்கு சிறந்த வரிவடிவம் இருந்திருக்கக்கூடும். தமிழ்
இலக்கண நூலான தொல்காப்பியம் கி.மு.200 வாக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
தொல்காப்பியம் தமிழை இருவகைகளாக பிரித்தது. ஒன்று செந்தமிழ் (இலக்கியத்தமிழ்).
இரண்டு கொடுந்தமிழ் (பேச்சுத்தமிழ்).
சமஸ்கிருதம் கற்ற கல்வியாளர்கள் இடையில் தமிழை அழகுப்படுத்துகிறோம் என்கிற
பெயரில் மணிபிரவாள நடை என்கிற புதிய தமிழை அறிமுகப்படுத்தினார்கள். பிற்பாடு
தனித்தமிழ் இயக்கம் கண்டவர்களின் முயற்சியால் தமிழ் தன்னுடைய தனித்துவத்தை இன்றும்
தக்கவைத்திருக்கிறது.
மதுரையில் சங்கம் கண்ட காலமே (கி.மு 500 முதல் கி.பி. 200 வரை) தமிழின்
பொற்காலம். சங்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்
செய்யுள்கள் மூலமாக நாம் அக்காலத்திய வரலாற்றோடு, மக்களின் பண்பாடு, மன்னர்களின்
செயல்பாடுகளை அறியமுடிகிறது. பல பாடல்களும், செய்யுள்களும் பாதுகாப்பின்மையால்
அழிந்துவிட்டன. முப்பதுக்கும் மேற்பட்ட அரசவைக் கவிஞர்கள் இக்காலக் கட்டத்தில்
வாழ்ந்து தமிழை வாழவைத்திருக்கிறார்கள்.
கடற்கோள், சுனாமி, பூகம்பம் என்று இயற்கைச் சீரழிவுகளால் பல லட்சம் தமிழர்கள்
அழிந்திருக்கலாம். ஆனால் தமிழ் இன்றும் சீரும், சிறப்புமாக வாழ்கிறது. உலகெங்கும்
குறைந்தபட்சம் சுமார் பத்து கோடி பேர் தமிழ் பேசுகிறார்கள். தமிழின் தாயகமான
தமிழகத்திலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தென்னாப்பிரிக்காவில்
கூட திருவள்ளுவரின் சிலை இருக்கிறது. கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், காகிதம் என்று
படிப்படியாக பரிணாமம் பெற்று இன்று இண்டர்நெட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
பல்வேறு தமிழார்வலர்கள், ஆராய்ச்சியாளர்களின் முயற்சியால் தமிழுக்கு தற்போது
கிடைத்திருக்கும் டிஜிட்டல் அந்தஸ்து இன்னும் பல தலைமுறைகளுக்கு நம் மொழியை எவ்வித
தடங்கலுமின்றி கடத்திச் செல்லும். மெல்ல தமிழ் இனியும் வாழும்.
உலகத் தாய்மொழி தினம் : பிப்ரவரி 21
உலகத் தாய்மொழி தினம் : பிப்ரவரி 21