12 ஜூலை, 2013

969 : பவுத்த பயங்கரவாதத்தின் முகம்!

அமைதிக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர் போனது புத்தமதம்.
ஆனால் புத்தனின் பெயரால் பவுத்த தேசியவாதிகள் மியான்மரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்...


இஸ்லாமியர்களின் புனித எண் 786. அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (three jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராக கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக்குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வை பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969.

பவுத்த தத்துவங்களை பரப்பும் அமைதி அமைப்பு என்று 969 தன்னை சொல்லிக் கொண்டாலும், அஸின் விராத்து என்னும் பவுத்தத் துறவி இவ்வியக்கத்தில் ஈடுபட்டதில் இருந்தே இதன் பாதை வன்முறைக்கு திரும்பியிருக்கிறது. 1968ல் பிறந்த விராத்து பதினாறு வயதில் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு துறவியானார். 2001லிருந்து 969 இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். வன்முறைக்கு வித்திடும் அவரது பிரச்சாரங்களின் பேரில் 2003ல் கைது செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் 2010ஆம் ஆண்டே அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்படும் போது இவரும் சேர்த்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினார். வெளியே வந்தவர் சும்மா இல்லை. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் விளைவுகளை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களில் 969 இயக்கம் மூலமாக இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை உலகம் முழுக்க பரவலாக பரப்பினார்.

விராத்துவின் விபரீத கருத்துகள்

· நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக்கொண்டு தூங்க முடியாது.

· நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை பவுத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்

· கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக பவுத்த-இஸ்லாமிய கலப்பு.

· அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களை கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.

· மதமும், இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.

· இஸ்லாமியரின் கடைகளில் எந்த பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.
மியான்மர் அதிபர் தைன் சைன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு வினோதமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அங்கே வசிக்கும் வங்காளர்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது மியான்மருக்கு இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்) நாடு கடத்துவதுதான் அவரது திட்டம். இதை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக 969 இயக்கம் மூலமாக புத்த துறவிகளை திரட்டி மாபெரும் பேரணி ஒன்றினை நடத்தினார் விராத்து. இதன் விளைவாக அடுத்த சில நாட்களில் ராக்கின் மாகாணத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினரிடையே பகை நீறுபூத்த நெருப்பாக கனன்றுக் கொண்டே இருந்தது. விளைவாக கடந்த மார்ச் மாதம் ஒரு பவுத்த துறவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். வெடித்தது வன்முறை வெடிகுண்டு. மேலும் பதினான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்லாமியர்களின் கடை, வீடு மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டன. தீக்கிரையாயின. 969 தூண்டிவிடும் வன்முறையால் ராக்கின் மாகாணத்தில் மட்டுமே கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு இஸ்லாமியர் கொல்லப்பட்டு விட்டனர். உறவுகளை, உடைமைகளை இழந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அகதிமுகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் சந்திக்க விடாமல் மியான்மர் அரசாங்கம் அராஜகம் செய்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மெஜாரிட்டியான பவுத்தர்களின் ஆதரவோடு, சிங்கள அரசு 2009ல் விடுதலைப்புலிகளை மொத்தமாக துடைத்தெடுத்து வீழ்த்தியதற்குப் பிறகே ‘பவுத்த தேசியம்’ என்கிற கருத்துருவாக்கம் மியான்மரில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. காவல்துறையாலோ, அரசாலோ தங்களுக்கு எந்த பாதுகாப்புமில்லை என்று இஸ்லாமியர்கள் அச்சப்படுகிறார்கள். மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் பல இஸ்லாமிய தொழிலதிபர்கள் ஏற்கனவே பறந்துவிட்டார்கள்.
இச்சூழல்களை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ‘டைம்’ பத்திரிகை 969 தலைவரான விராத்துவின் படத்தை அட்டையில் இட்டு ‘பவுத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்று தீவிரமான விமர்சனத்தை வைத்தது. பர்மாவின் பின்லேடன் என்றும் இவரை சுட்டிக் காட்டியிருக்கிறது. இக்கட்டுரையை தொடர்ந்து ‘டைம்’ பத்திரிகைக்கு மியான்மரில் இப்போது தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் அதிபர் தைன் சைன் 969 இயக்கத்துக்கு ஆதரவாகவே இருக்கிறார். குறிப்பாக விராத்துவை பாதுகாக்கிறார். அரசால் அனுமதிக்கப்பட்ட வன்முறையாகவே இன்றுவரை இது நீடிக்கிறது. சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலைகளை மிஞ்சும் வகையிலான வெறியாட்டம் மியான்மரில் நிகழக்கூடும். அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த இனவன்முறையை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறார் என்று வருத்தப்படுகிறார்கள் அங்கிருக்கும் நடுநிலையாளர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

8 ஜூலை, 2013

சிங்கம்-2

ஜேம்ஸ்பாண்டு மாதிரி, சங்கர்லால் மாதிரி ஒரு யூனிக்கான கேரக்டர் என்பது தமிழ் சினிமாவுக்கு கனவு. தமிழ் சினிமாவுக்கு என்றில்லை. பொதுவாக இந்திய சினிமாவிலேயே தொடர்திரைப்படங்களை எடுக்கக்கூடிய ஒரு பாத்திரத்தை வெற்றிகரமாக நம் படைப்பாளிகளால் உருவாக்க முடியவில்லை. சினிமாவில் சீக்குவல் என்பதும்கூட தமிழில் அரிதிலும் அரிதான நிகழ்வுதான். ஜெய்சங்கர் காலத்தில் சாத்தியமாகியிருக்கக்கூடிய இதையும் அந்த காலத்திலேயே கோட்டை விட்டுவிட்டோம். உலகம் சுற்றும் வாலிபன் ‘ராஜூ’ கேரக்டரை வைத்தே, சீக்குவலாக ‘ஆப்பிரிக்காவில் ராஜூ’ எடுக்க எம்.ஜி.ஆருக்கு எண்ணம் இருந்தது. உ.சு.வா. படத்தின் எண்ட் கார்டாக ‘எமது அடுத்தத் தயாரிப்பு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்றும் அறிவித்திருந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் சர்வசக்தி படைத்த சக்கரவர்த்தியான எம்.ஜி.ஆரால் கூட அதை செய்ய முடியவில்லை. தரை டிக்கெட் டைரக்டரான ஹரி இதை சாதித்திருக்கிறார்.

‘சிங்கம்’ தயாரிப்பில் இருந்தபோது ஹரிக்கு இந்த சீக்குவல் சிந்தனை வந்திருக்க வாய்ப்பேயில்லை. ‘துரைசிங்கம்’ பாத்திரம் நண்டு சிண்டுவில் தொடங்கி தாத்தா, பாட்டி வரை அனைவரையும் கவர்ந்துவிட்டதாலும், படத்தின் அதிரிபுதிரி வசூலும்தான் இந்த எண்ணத்தை அவருக்கும், துரைசிங்கமான சூர்யாவுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். அடுத்து இன்னும்கூட நான்கைந்து பாகங்களையும் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு சிங்கம்-2 மிரட்டுகிறது.

சிங்கத்தை நமக்கு ஏன் பிடிக்கிறது?

ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்டு என்பது மட்டுமில்லை. சிறுவயதிலேயே கூட நம் அனைவருக்குமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘பேசாம போலிஸ் ஆயிட்டா என்ன?’ என்றொரு லட்சியம் இருந்திருக்கும். காக்கி உடுப்பும், மிடுக்கும் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நேர்மையான போலிஸாக மட்டுமில்லாமல் துரைசிங்கம் லவ்வர் பாயாகவும் இருக்கிறார். அவராக விரும்பாவிட்டாலும் பேரழகியான அனுஷ்காவே துரத்தித் துரத்தி அவரை காதலிக்கிறார். மட்டுமின்றி பரம்பரையாக தொடரும் நம் தமிழ் குடும்ப மதிப்பீடுகளுக்கு உருவம் கொடுத்தால் அது துரைசிங்கமாகவே இருக்கும். அப்பா மீது அளவு கடந்த மரியாதை. அம்மா, அக்கா, அப்பத்தா மீது பாசம். உற்றம், உறவு, ஊர் மீது செண்டிமெண்டலான பிணைப்பு. நவரச உணர்வுகளும் கொண்டவர். டயலாக் பேசினால் ரைமிங்காக ஏற்ற இறக்கத்தோடு பேசுகிறார். இன்னும் காரணங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சிங்கம்-2 ஒரு குத்துப்பாட்டோடு ஆரம்பிக்கிறது. குடும்பப் பிரச்சினைகளால் தமிழுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி அதிரடியாக ஆ(ட்)டுகிறார். அவ்வப்போது அஞ்சலியோடு ஆடிக்கொண்டு, பாடிக்கொண்டும் மியூசிக் வரும் கேப்பில் பைனாகுலரை வைத்துக்கொண்டு கடற்கரையை வேடிக்கை பார்க்கிறார் துரைசிங்கம். எடுத்தவுடனேயே துரைசிங்கம் என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். அண்டர்காப் ஆபரேஷனில் இருக்கும் ஆபிஸர் இப்படியெல்லாம் பைனாகுலர் வைத்துக்கொண்டு புதர்மறைவை தேடி திரிந்துக் கொண்டிருப்பாரா என்று மல்ட்டிப்ளக்ஸில் படம் பார்க்கும் நாம் சுலபமாக லாஜிக் தேடலாம். ஏ, பி, சி என்று மூன்று சென்டர்களிலும் பட்டையைக் கிளப்பவேண்டிய நிர்ப்பந்தம் இயக்குனருக்கு இருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ப்ளாக் டிக்கெட் வாங்கி பார்ப்பவனுக்கு சிங்கத்தின் வேலை இதுதானென்று தெளிவாக புரியவைக்க வேண்டியது இயக்குனரின் கடமை. அவனிடம் போய் அண்டர்காப், ஹோம் மினிஸ்டர் ஸ்ட்ராட்டஜி என்றெல்லாம் அவனுக்குப் புரியாத மொழியில் ஏகப்பட்ட இங்கிலீஷ் வார்த்தைகளை அடுக்கி, பாடமெடுக்க முடியாது (இதையெல்லாம் கமல்ஹாசன் பார்த்துக் கொள்வார்). ‘சி’ சென்டர் ரசிகனை ஒரு படைப்பாளி திருப்திபடுத்த வேண்டுமா என்கிற கேள்வி, இந்த விமர்சனத்தை இண்டர்நெட்டில் வாசிக்கும் உங்களுக்கு வருகிறதா?  அப்படியாயின் அக்கேள்விக்கான விடை ஜூலை மாத ‘காட்சிப்பிழை’ இதழில் குட்டிப்புலி ஏன் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்று ராஜன்குறை எழுதியிருக்கும் விமர்சனக்கட்டுரையில் கிடைக்கும். எனவே இப்படத்தில் லாஜிக் பார்க்காமல் மேஜிக்கை பார்த்து மட்டும் வாய்பிளந்து நிற்பது சாலச்சிறந்தது.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சிங்கம்-1ல் துரைசிங்கத்துக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்து நம் கல்மனம் கூட இளகிவிடுகிறது. எனவே அவருக்கு ஒரு புதுகாதலியாக ஹன்சிகா. எம்.ஜி.ஆர் ஃபார்முலா நாயகனான சிங்கம் அந்த காதலை நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறான். அனுஷ்காவும் அவரது குடும்பமும் சிங்கம்-1ல் உருவான தெய்வீகக்காதலை காக்க அவர்களது உயர்ந்த அந்தஸ்தை விட்டு இறங்கி, மாபெரும் தியாகவேள்வி நடத்துகிறார்கள். இந்தச் சிக்கலுக்கு காரணம் சென்னையில் ஏ.சி.பி.யாக முதல் பார்ட்டில் அதகளம் செய்த சிங்கம் வேலையை ரிசைன் செய்ததுதான். அவர் வேலையை ரிசைன் செய்ததும் அவரது வேலையில் ஒரு அங்கமே. அவ்வாறு செய்தது எதற்காக என்று அடுத்தடுத்து சுவாரஸ்யமான சம்பவங்கள் மூலமாக வரிசையாக செங்கல் வைத்து முதல் பாதியில் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார் ஹரி. குட்டி குட்டியான கேள்விகளை எழுப்பி, உடனே அதற்கு ஒன்லைனில் ஆன்ஸர் வைக்கும் க்யூ & ஏ ஃபார்மேட்தான் ஹரியின் திரைக்கதை பாணி.

இடைவேளைக்குப் பிறகு வழக்கமான ஆக்‌ஷன் எண்டெர்டெயின்மெண்ட். கை சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு கண்டவனை எல்லாம் போட்டுத் துவைக்கிறார் துரைசிங்கம். அவர்தான் பாய்ந்து அடித்தால் பத்து டன் வெயிட் ஆயிற்றே. இண்டர்நேஷனல் டானே கூட சுனாமி தாக்கியதைப் போல நிலைகுலைந்துப் போகிறான். சிங்கத்தை பார்த்து பயந்து பயந்து பதுங்குவதைத் தவிர்த்து தூத்துக்குடி வில்லன்களுக்கு வேலையே இல்லை. இடையில் மத்திய ஹோம் அமைச்சர் இண்டர்நேஷனல் டானை பாதுகாக்க நினைப்பது, அதை ஓவர்டேக் செய்து உள்ளூர் ஹோம் மினிஸ்டரின் உதவியோடு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என்று கமர்சியல் அதலெடிக்காக அமர்க்களம் செய்கிறார் சிங்கம். இண்டர்நேஷனல் லெவலில் இந்தியன் போலிஸின் மதிப்பை பறைசாற்றுகிறார். படம் முடிகிறது. அனேகமாக சிங்கம்-3 டெல்லியில் நடக்கும். அங்கிருக்கும் ஹோம் மினிஸ்டரோடும், இந்தி டான்களோடும் துரைசிங்கம் கபடி ஆடக்கூடும்.

தமிழில் டாக்கி ஆரம்பித்த ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளிலேயே எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டு போலிஸ் திருடன் கதைதான் என்றாலும் அதை எடுக்கும் ஹரியின் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்தான் மேட்டர். தேவையான இடங்களில் பாடல்கள், கவர்ச்சி, ஃபைட்டு, காமெடி என்று அவர் கலக்கும் மசாலா விகிதம்தான் அவருடைய ஹிட் ஃபார்முலா. இது ஒன்றும் சீக்ரட் ஃபார்முலா இல்லை, எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் ஹரி கலக்கும்போது மட்டும் டேஸ்ட் அதிரிப்போகிறது. ‘வாழைக்காய் நறுக்குபவனிடம் பார்த்து சேர்த்து வெட்டிடப் போறே’ என்று போகிறபோக்கில் பச்சையாக சந்தானம் டயலாக் அடித்தாலும், ஹரியின் குடும்பப் பிராண்டு படங்களில் அது வக்கிரமாகவோ, ஆபாசமாகவோ தெரிவதில்லை. குடும்பம் குடும்பமாக கைத்தட்டி கும்மாளம் போடுகிறார்கள்.

நமக்கு ஒரே ஒரு கவலைதான். அனுஷ்காவுக்கு வயசாயிடிச்சி. ஹன்ஸிகாவுக்கு என்ன ஆச்சி? முதல் பாகத்தில் இருந்த கவர்ச்சி எலிமெண்ட் இதில் மிஸ்ஸிங்தானென்றாலும், சிங்கத்தின் கர்ஜனை முன்பைவிட கம்பீரம்.

சிங்கம் டூ : ஃபேமிலி எண்டெர்டெயின்மெண்டுக்கான வாரண்டு

2 ஜூலை, 2013

தீ குளிக்கும் பச்சை மரம்

சமீபமாக தமிழ்த் திரையுலகம் காமெடியை நம்பி இயங்கிக் கொண்டிருக்கிறது. சமகால சமூக நிகழ்வுகள் சீரியஸாகவும், அவநம்பிக்கை படரச் செய்வதாகவும் இருப்பதால், பார்க்கும் படமாவாவது காமெடியாக இருக்கட்டுமே, என்று தமிழர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

சில காலம் முன்பாக கேரளாவில் அலைகளை கிளப்பிய குறும்படம் ஒன்றை இயக்கியவர்கள், சகோதரர்களான வினீஷ்-பிரபீஷ். பிணவறையில் வேலை பார்த்த ஒரு இளைஞனின் நிஜக்கதை அது. பரவலான கவனத்தையும், ஏராளமான விருதுகளையும் இந்த குறும்படத்துக்காக அவர்கள் பெற்றார்கள். நம்மூரில் இருந்து அடிக்கடி கேரளாவுக்கு ஷார்ட்-ட்ரிப் அடிக்கும் இயக்குனர் சமுத்திரக்கனியும், இப்படத்தை பார்த்தார். இயக்குனர்களை அழைத்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல், இதை ஏன் சினிமாவாக எடுக்கக்கூடாது என்று ஐடியாவும் கொடுத்தார். இப்படித்தான் ‘தீ குளித்தது பச்சை மரம்’.

படத்தை தமிழில் எடுத்தால், நிறைய பேரை போய்ச்சேரும் என்று இயக்குனர்கள் நினைத்தார்கள். பழம்பெரும் கேமிராமேனான மதுஅம்பாட்டை தங்களுக்கு பணிபுரிய கேட்டார்கள். ஏகப்பட்ட தேசிய விருதுகளை குவித்தவர். நாற்பது ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருப்பவர் (அஞ்சலியை மறக்கமுடியுமா?) இப்போது மிகக்குறைவான படங்களையே செலக்டிவ்வாக ஒப்புக்கொள்கிறார். உடல்நலமும் முன்பு போல ஒத்துக்கொள்வதில்லை. வினீஷும், பிரபீஷும் தாங்கள் எடுத்த குறும்படத்தை அவருக்கு போட்டுக் காட்டினார்கள். “இதைத்தான் முழுநீளப்படமாக எடுக்கவிருக்கிறோம், நீங்கள் செய்துக் கொடுக்கிறீர்களா?” மறுபேச்சு பேசாமல், சம்பளம் பற்றியெல்லாம் விசாரிக்காமல் கதைக்காக மட்டுமே மது ஒப்புக்கொண்டார்.

லோ பட்ஜெட் படங்களே எள்ளி நகையாடக்கூடிய அளவுக்கு, லோ லோ பட்ஜெட். இது படமாக வந்தால் எப்படியும் காசு தேறாது என்று தெரிந்தும் கலைத்தொண்டாக நினைத்து தைரியமாக படமாக்கியிருக்கிறார்கள். இதே கதையை மிகச்சுலபமாக மசாலா எண்டெர்டெயிண்ட்மெண்ட் த்ரில்லராகவும் எடுத்திருக்கலாம். ஆனால் எவ்வித வணிகசமரசத்துக்கும் இயக்குனர்கள் இடம் கொடுக்கவில்லை. கறாரான கலைத்தன்மையோடே வெளிவந்திருக்கிறது தீக்குளிக்கும் பச்சை மரம்.

ms
புதுமுக நடிகரான பிரஜன் தான் அறிமுகமாக இப்படத்தை தேர்ந்தெடுத்தது துணிச்சலான முயற்சி. டிவி காம்பியரராக புகழ்பெற்ற பிரஜனுக்கு முயற்சித்தால் லவ்வர் பாயாகவோ, கல்லூரி மாணவனாகவோ பாத்திரங்கள் தாராளமாக கிடைத்திருக்கும். இயல்பிலேயே அழகான பிரஜன் இப்படத்துக்காக கறுத்து, இளைத்து (சேது விக்ரம் மாதிரி) பாண்டியாகவே கிட்டத்தட்ட மாறியிருக்கிறார். பாண்டி என்கிற ஒரு மனிதன் ஏன் பிணவறைக்கு வேலை பார்க்கவேண்டும், அதற்குக் காரணமான அவனுடைய சமூகப் பொருளாதார பின்னணி என்னவென்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. இதை முழுமையாக உணர்ந்து ஏற்று நடித்து, தன்னுடைய திரைப்பட வருகையையே மாற்று முயற்சியாக தொடங்கியிருக்கிறார் பிரஜன்.


பாண்டி, சார்லி, துரை மூவரும் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து ஆறாண்டு தண்டனையை முடித்து வெளிவருகிறார்கள். சார்லியும், துரையும் குற்றப்பாதைக்கு திரும்ப முடிவெடுக்கிறார்கள். தன்னுடைய அப்பாவைப் போலவே அறம் சார்ந்த மதிப்பீடுகளோடு வாழ விரும்பும் பாண்டி தன்னுடைய சொந்தக் கிராமத்துக்கே போய் சேருகிறான். இவர்கள் சீர்த்திருத்தப் பள்ளிக்கு ஏன் வந்தார்கள் என்பது ப்ளாஷ்பேக்.

ஊருக்கு வந்த பாண்டிக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. சாராயம் குடித்துவிட்டு, கிடைத்த கூலிவேலைகளை செய்துக்கொண்டு கடனுக்கே என்று வாழுகிறான். எதிர்பாராவிதமாக அவனையும் ஒருத்தி காதலிக்கிறாள். இவனுக்கும் அவளை திருமணம் செய்துக்கொள்ளத் தோன்றுகிறது. செய்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை நெருக்குதல்களை சமாளிக்க வேறு வழியின்றி, அரசு மருத்துவமனையின் பிணவறையில் பணத்துக்காக வேலைக்கு சேருகிறான். வேலையே பிணங்களோடுதான் என்பதை சுலபமாக ஒருவரியில் சொல்லிவிடலாம். ஆனால் நினைத்துப் பார்ப்பதே கொஞ்சம் கொடூரமான திகிலை கொடுக்கிறது. உடலை அறுப்பது, மண்டையைப் பிளப்பது என்று ரத்தமயமான பணி. ஆரம்பத்தில் தடுமாறும் பாண்டி போகப்போக இந்தப் பணியில் சகஜமாகிவிடுகிறான்.
                           3
சில நாட்களிலேயே பிணவறையின் அதிர்ச்சியான மறுபக்கம் அவனுக்கு தெரியவருகிறது. உடல் உறுப்புகள் வியாபாரம், பிணங்களோடு உடலுறவு என்று கற்பனைக்கும் எட்டாத ‘பகீர்’களை நேரடியாக பார்க்கிறான். இறந்தவர்களை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் கொடுமைப்படுத்தும், இந்த அநியாயங்களை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தட்டிக்கேட்டு சில எதிரிகளை சம்பாதிக்கிறான். இப்படியாகப் போகும் கதையில் கொடூரமான, எதிர்பாராத பயங்கர க்ளைமேக்ஸ்.

prajan
கதையை கேட்கும்போது வக்கிரமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க காட்சிகள் நிறைய இருக்கலாம் என்று நீங்கள் யூகிக்கலாம். இயக்குனர்களும், கேமிராமேனும் மிக கவனமாக இக்கதையை கையாண்டிருக்கிறார்கள். முடிந்தவரை ரத்தத்தை காட்டாமல் இருப்பது, லேசாக காட்சியைத் தொடக்கி மீதி என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகனின் கற்பனைக்கே விட்டுவிடுவது என்று லாகவமாக படமெடுத்திருக்கிறார்கள். டி.பி.கஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் என்று காமெடி நடிகர்கள் இருந்தும்கூட எவ்வித எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூவையும் சேர்க்காமல், சொல்ல வந்த படத்தின் கதை பாதையில் இருந்து சற்றும் விலகவே இல்லை.


வெளியாகி ஒருவாரம் கழிந்த நிலையில் வெளியான தியேட்டர்கள் எதிலும் இன்று தீக்குளிக்கும் பச்சை மரம் ஓடுவதாக தெரியவில்லை. மாற்று சினிமாவின் இடம் இதுதான். மாற்று சினிமாக்கள் வெகுஜனங்களின் ஆதரவைப் பெற்று ஓடுவதெல்லாம் ஆடிக்கு ஒருமுறை, அமாவசைக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்தான். அதில் பிரச்சினையில்லை. ஆனால் தமிழில் மாற்று சினிமாவுக்காக வாய் கிழியப் பேசும் மாற்று சினிமா ஆர்வலர்கள் ஏன் இன்னமும் இப்படத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை இது தமிழில் வெளிவந்திருப்பது குற்றமாக இருக்கலாம். கேரளாவிலோ, வங்கத்திலோ, ஈரானிலோ, லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ மட்டுமே மாற்று சினிமா சாத்தியம் என்று நினைக்கிறார்களோ என்னமோ?
              prajan2
போஸ்ட்மார்ட்டம், பிணங்களோடு உறவு மாதிரி காட்சிகளை சினிமாவில் காட்டவேண்டுமா என்று இப்படம் பார்த்த சில தோழர்கள் இணையத்தளங்களில் கடுமையான அதிர்ச்சியோடும், எதிர்ப்போடும் எழுதி வருகிறார்கள். பொழுதுபோக்கு சினிமாவுக்கு இதெல்லாம் அவசியமில்லைதான். ஆனால் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குக்கு அல்ல, ஆவணப்படுத்தவும்தான் என்கிற கோணத்தில் பார்க்கும்போது இதுவும் தேவைதான். ஆவணப்படுத்துதல் கலைக்கு முக்கியமான ஒரு அம்சம் இல்லையா. பிணவறைக்குள் என்னதான் நடக்கிறது என்பதை மக்களும் தெரிந்துகொண்டால், குடியா முழுகிவிடப் போகிறது. தமிழில் மதுபானக்கடைக்குப் பிறகு வந்திருக்கும் மிக முக்கியமான முயற்சி தீ குளிக்கும் பச்சை மரம். அசாத்திய துணிச்சலோடு களமிறங்கியிருக்கும் இப்படக் குழுவினர் சர்வதேச விருதுகளுக்கு தகுதியானவர்கள். ஆனால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம்.
end
 
(நன்றி : cinemobita.com)

28 ஜூன், 2013

CATCH ME IF YOU CAN

ம்மாத்தூண்டு நாடுதான். உலக வரைபடத்தில் கூட தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மக்கள் தொகையே மொத்தமாக ஒன்றரை கோடிதான். ஆனாலும் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. முந்தாநாள் கியூபா, நேற்று வெனிசூலா. இன்று ஈக்குவேடார். அமெரிக்காவின் காலுக்கு கீழே அமர்ந்திருக்கும் இந்த தென்னமெரிக்க குட்டி நாடுகள் அமெரிக்காவுக்கு குழிபறித்துக் கொண்டிருப்பதே வாடிக்கை ஆகிவிட்டது.
யானையைப் பார்த்து எலி சவால் விடும் கதையை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முன்பாக எட்வர்ட் ஸ்நோடன் என்கிற முப்பது வயது இளைஞரைப் பற்றி நாம் மேலோட்டமாக தெரிந்துக் கொள்வது அவசியம். முப்பதே வயதுதான். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப ஒப்பந்தக்காரர். சி.ஐ.ஏ.,வின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர். அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை ஊடகங்களுக்கு தந்துவிட்டார் என்று இவர்மீது குற்றச்சாட்டு. அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பொதுவாகவே இவர் அமெரிக்க அரசு எதிர்ப்பாளராகதான் அறியப்படுகிறார்.

இண்டர்நெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முன்னணி நிறுவனங்களோடு அமெரிக்க அரசு ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதாவது நீங்கள் உங்கள் மனைவியிடம் சாட்டிங்கில் ‘சாயங்காலம் போண்டாவும், சட்னியும் டிஃபனுக்கு ரெடி பண்ணி வை’ என்று சொல்வதைக்கூட அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எளிமையாகப் புரிந்துக் கொள்வோம். வேடிக்கையாக சொன்னாலும் இதுவும்கூட சாத்தியம்தான். அப்படியெனில் மற்ற நாடுகளின் அதிமுக்கியமான ரகசியங்களின் கதி என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

இதன் அடிப்படையில் ‘ஒட்டுமொத்தமாக மக்களின் இண்டர்நெட் செயல்பாடுகளை அமெரிக்கா கண்காணிக்கிறது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அதனிடம் இருக்கிறது’ என்பதுதான் இவர் கசியவிட்ட ரகசியம். ஏனெனில் இந்த ரகசியத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஸ்நோடனும் ஒருவர். ‘நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதை செய்யவேண்டியிருக்கிறது. வேறொன்றும் குறிப்பிடத்தக்க உள்நோக்கம் இல்லை’ என்று அமெரிக்க அரசு அந்த குற்றச்சாட்டை மறுத்தது.
இதுவரை பிரச்சினை இல்லை. அடுத்து பதிலுக்கு ஸ்நோடன் சொன்னதுதான் அமெரிக்காவை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. “வளரும் நாடுகளின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா கண்காணிப்பதற்காகவே இந்த ரகசியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது” என்று ஒரு போடு போட்டார். உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிய வேண்டியதாயிற்று. இந்த ரகசியம் வெளியாகி விட்டதால் மற்ற நாடுகளுடனான நல்லுறவு பாதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. நாளையே மன்மோகன்சிங்கோடு ஒபாமா சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது “என்னோட மெயில் எல்லாத்தையும்தான் நீங்களே பார்க்குறீங்களே, உங்களுக்குத் தெரியாத ரகசியமா..” என்று நம்ம சிங் கேட்டுவிட்டால், ஒபாமாவின் பாடு என்ன ஆகும்?

எனவேதான் ஸ்நோடனின் மீது அமெரிக்கா கொலைவெறி கொண்டிருக்கிறது. ‘சிக்கினால் பிரியாணிதான்’ என்று உணர்ந்த ஸ்நோடன் ஹாங்காங்கிற்கு அடைக்கலம் நாடி பறந்துவிட்டார். “பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்ட குற்றவாளி உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறார். அவரைப் பிடித்து வையுங்கள்” என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு தகவல் அனுப்பினார்கள். “இதோ உடனே தேடிப்பிடித்து கொடுக்கிறோம்” என்று அமெரிக்காவோடு பேசிக்கொண்டே, அவரை மாஸ்கோவுக்கு பாதுகாப்பாக விமானம் ஏற்றி அனுப்பி விட்டார்கள் சீனர்கள். ஸ்நோடனை ஒப்படைக்கும்படி இப்போது ரஷ்யாவிடம் கெஞ்சியும் மிரட்டியும் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோ இந்த விவகாரத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். “ஸ்நோடன் எங்கள் நாட்டுக்கு வந்தது நிஜமாகவே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்ய மண்ணில் அவர் எந்த குற்றமும் புரியாத நிலையில் அவர் மீது நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?” என்று அப்பாவியாக கேட்கிறார்.

“மக்களுடைய கருத்து சுதந்திரத்துக்காகவே உயிரைப் பணயம் வைத்து இத்தியாகத்தை செய்திருக்கிறேன்” என்று கூறும் ஸ்நோடன், கருத்துச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் நாடு ஒன்றில் அடைக்கலம் பெற விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். ஐஸ்லாந்துதான் அவருடைய சாய்ஸ். ஆனால் ஐஸ்லாந்து நாட்டு சட்டவிதிகளை காரணம் காட்டி அவருக்கு அடைக்கலம் தர இயலாது என்று அந்நாடு தயங்குகிறது.

இங்கேதான் வருகிறது ஈக்குவேடார். மாஸ்கோவில் ஸ்நோடன் தரையிறங்கியபோது விமான நிலையத்தின் வாயிலில் ஈக்குவேடார் நாட்டு தூதரகத்தின் கார் நின்றிருந்தது என்பதை அமெரிக்க ஊடகங்கள் போட்டோவோடு ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அந்நாட்டின் அயலகத்துறை அமைச்சர் ரிகார்டோ பாட்டினோ, ஸ்நோடன் தங்கள் நாட்டில் அடைக்கலம் பெற விண்ணப்பித்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் லண்டனில் இருக்கும் தங்கள் தூதரகத்தில்தான் ஈக்குவேடார் கடந்த ஓராண்டாக அடைக்கலம் தந்து வருகிறது. ஸ்வீடன் அரசாங்கம் அவரது மீது பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ய அலைந்துக் கொண்டிருக்கிறது. இது டம்மி காரணம். ஒருவேளை ஸ்வீடன் அவரை கைதுசெய்தால் அமெரிக்காவிடம்தான் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பல்லாண்டு தூதரக பரிமாற்ற ரகசியங்களை தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது.
அமெரிக்காவின் எதிரியான அசாஞ்சேவை ஏற்கனவே பாதுகாத்துவரும் ஈக்குவேடார், இப்போது ஸ்நோடனை பாதுகாக்க நினைப்பதுதான் அமெரிக்காவுக்கு கடுப்பு. தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்களை தேடித்தேடி பாதுகாப்பதால் ஈக்குவேடாரை அமெரிக்கா கடுமையாக எச்சரித்திருக்கிறது. “ஒழுங்கீனமாக நடக்கும் நாடுகளை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது” என்று ஈக்குவேடாரை குறிவைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை குழுவின் தலைவரும், செனட்டருமான ராபர்ட் மெணண்டெஸ் குமுறியிருக்கிறார். இந்த எச்சரிக்கையை இடக்கையால் புறந்தள்ளியிருக்கிறது ஈக்குவேடார். அந்நாட்டின் அதிபர் ரேஃபல் கோர்ரியா “மற்ற நாடுகளின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் கண்டு அஞ்சமாட்டோம்” என்று பதிலுக்கு சவால் விட்டிருக்கிறார். இச்சந்தந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர் அடுத்த சாவேஸாக உருவெடுத்துவிடுவாரோ என்று அமெரிக்காவுக்கு அச்சம்.

இந்நிகழ்வுகளால் உலக அரசியல் மீண்டும் சூடேறிப்போய் இருக்கிறது. உலகநாடுகளை வேவு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டில் மாட்டிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா இவ்விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. அமெரிக்காவின் இந்த பலகீனத்தை பயன்படுத்தி ஈக்குவேடார் தொடைதட்டி சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் நிகழ்வுகளை புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கின்றன.

20 ஜூன், 2013

சாணக்கிய சரித்திரத் தலைவி

புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான். ராஜ்யசபா தேர்தலில் அவரது ராஜதந்திரத்தை தமிழக ஊடகங்கள் எப்படியெல்லாம் மெச்சுகின்றன என்பதைப் பார்த்தாலே அவரது புரட்சி என்னவென்று உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதனால் காலியாகும் எங்கள் ராஜ்யசபா சீட்டை எங்களுக்கே தரவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரினார்கள். ஆனால் டெல்லி சென்ற புரட்சித்தலைவியோ ஐந்து இடங்களிலும் புரட்சித்தலைவரின் கழகமே போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமின்றி நாற்பதும் எனக்கே என்றுகூறி ஆறு பாலில் பண்ணிரெண்டு சிக்ஸர் அடித்தார். இதன் மூலமாக அகில இந்திய கம்யூனிஸ்ட்டுத் தலைவர்கள் அவரை தேடிவந்து வாய்க்கரிசி.. மன்னிக்கவும் வாக்கு கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

சென்னைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. ராஜ்யசபாவில் போட்டியிடும் ஒரு வேட்பாளருக்கு முப்பத்தி நான்கு ஓட்டுகள் வேண்டுமாம். அப்படிப் பார்த்தால் ஐந்து x முப்பத்தி நான்கு = நூற்றி எழுபது. கழகத்துக்கு இருப்பதோ (சரத்குமார் மாதிரி உதிரிகளையும் சேர்த்து) நூற்றி ஐம்பத்து ஒன்று உறுப்பினர்கள்தான். சீமான், வைகோ, தாபா போன்றோர் ஓட்டுபோட அனுமதியில்லை என்று தேர்தல் கமிஷன் வேறு கழகத்திற்கு எதிராக காய் நகர்த்தியது. எப்படிப் பார்த்தாலும் ஐந்தாவது வேட்பாளர் தோற்பது உறுதி. இதையெல்லாம் கணக்கு போட்டுதான் ராஜதந்திரத்தோடு ஓர் உறுப்பினரை வாபஸ் பெறவைத்து, அவரை வாரியத்தலைவராக்கி தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனம் என்னவென்பதை உலகுக்கே பறைசாற்றினார். எனவேதான் ராஜ்யசபா தேர்தலில் குதிரைப் பேரத்தை ஒழித்த ஜான்ஸிராணி என்று வார இதழ் ஒன்று அவருக்கு ‘ராஜ்யபரணி’ பாடியிருக்கிறது. தேமுதிக என்கிற கட்சியில் ‘தொகுதிப் பிரச்சினைகளைப் பேச முதல்வரை சந்தித்த கோஷ்டி’ என்று புதுப்பிரிவை உருவாக்கியதன் மூலமாகவே குதிரைப்பேரத்தை அவர் ஒழித்திருக்கிறார் என்பதை அந்த இதழ் குறிப்பிட மறந்துவிட்டது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலமாக ராஜ்யசபாவுக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் புரட்சித்தலைவியால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற நிலையை அகில இந்திய அளவிலும் புரட்சித்தலைவி ஏற்படுத்தியிருக்கிறார். கனிமொழி, ராஜா என்று யார் வென்றாலும் அவர்கள் புரட்சித்தலைவியின் தயவோடுதான் பாராளுமன்றத்துக்கு சென்றாக வேண்டும். அடுத்த முறை மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு நிற்கவேண்டுமானால் கூட புரட்சித்தலைவியின் ஆதரவு இல்லாமல் அது முடியாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. கிங் மேக்கர், குயின் மேக்கர், மீல் மேக்கர் என்று எல்லா மேக்கராகவும் புரட்சித்தலைவியே நிலைபெற்றிருக்கிறார்.

இதையெல்லாம் விட புரட்சித்தலைவியின் மிகச்சிறந்த அரசியல் காய்நகர்த்தல் தற்போது நடந்திருக்கிறது. அரசியல் நோக்கர்களும், அரசியல் இதழாளர்களும் அதை இன்னும் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் உலக அரசியல் வரலாற்றின் புரநானூற்றை படைக்கும் புரட்சித்தலைவியை நிச்சயம் மெச்சியிருப்பார்கள். நாட்டுக்கு அவசியமான, சமகாலத்தில் தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையைப் பற்றி அசாம் மாநில முதல்வருக்கு அம்மா கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் எங்கள் வண்டலூர் பூங்காவில் போதுமான காட்டெருமைகள் உள்ளன. உங்களுக்கு ஒரு ஜோடி காட்டெருமையை பரிசாக வழங்கவிருக்கிறோம். பதிலுக்கு நீங்கள் ஒரு ஜோடி காண்டாமிருகத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அசாம் முதல்வர் தருண்கோகாய் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை இங்கே மனதில் நிறுத்திக்கொண்டு இந்த அரசியல் நடவடிக்கையை நாம் பார்க்கவேண்டும். இதையடுத்து தருண்கோகாயும் அசாம் மாநில பிரச்சினைகளை தீர்க்கக்கோரி புரட்சித்தலைவியை கோட்டைக்கு வந்து சந்தித்து விடுவாரோ என்று டெல்லியும், இத்தாலியும் கலங்கிப் போயிருக்கிறது. காட்டெருமைக்குப் பதிலாக காண்டாமிருகம் என்கிற இந்த புதிய அரசியல் கணக்கு இதுவரை உலக அரசியல் சரித்திரம் சந்தித்திராதது.

முன்பாக இதே வண்டலூரில் பிறந்த புலிகளுக்கு புரட்சித்தலைவி பெயர் வைத்து தனக்கு தமிழின உணர்வாளர்களால் வழங்கப்பட்ட ஈழத்தாய் பட்டத்துக்கு நியாயம் செய்ததும் நமக்கு நினைவிருக்கலாம். மேலும் முதுமலையில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தி, யானை டாக்டர் என்று கதை எழுதிய ஜெயமோகன் மாதிரி தீவிர இலக்கியவாதிகளையும் தனக்கு ஆதரவான போக்குக்கு மடைமாற்றிய அவரது அரசியல் தொலைநோக்குப் பார்வையையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

நாட்டுக்கு மட்டுமல்ல. காட்டுக்கும்தான் தான் ராணி என்பதை இம்மாதிரி விலங்கின அரசியல் மூவ்கள் மூலமாக புரட்சித்தலைவி தொடர்ச்சியாக உறுதிசெய்து வருகிறார் என்று இந்தியாவே மூக்கின் மேல் விரல்வைத்து சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை அண்ணாந்து பார்த்த வண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தியாவில் எது நடந்தாலும் அது புரட்சித்தலைவியால் நடந்ததாகவே இருக்கும்.