விசு, டி.பி.கஜேந்திரன், வி.சேகர் மாதிரி இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி, கமல் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தால் எப்படியிருக்கும்? சிலருக்கு குமட்டலாம். ஹீரோவின் மாஸ், சப்ஜெக்டின் க்ளாஸ் என்று டோலிவுட் இந்த ட்ரெண்டில் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் அடித்துக் கொண்டிருக்கிறது.
கப்பார் சிங்கில் தொடங்கியது பவன் கல்யாணுக்கு வசூல் மழை. அடுத்து ‘கேமிராமேன் கங்காதோ ராம்பாபு’. ஏழெட்டு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பவர்ஸ்டாருக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பொறுப்பை ஒட்டுமொத்தமாக இயக்குனர் த்ரிவிக்ரத்திடம் ஒப்படைத்துவிட்டார்.

அடுத்து பவன் கல்யாணுக்கு ‘ஜல்சா’. ஹிட்டே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த பவனுக்கு பம்பர்ஹிட்டாக அமைந்த படம். போக்கிரிக்கு பிறகு அதை மிஞ்சும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டுமென்று மகேஷ்பாபுவுக்கு ஆசை வந்ததும், த்ரிவிக்ரத்தைதான் அணுகினார். ‘கலேஜா’, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கப்பட்ட படம் ஓபனிங்கில் பின்னி பெடல் எடுத்தாலும், மட்டமான படமென்று விமர்சிக்கப்பட்டு சீக்கிரமே பெட்டிக்குள் முடங்கியது. “கொஞ்சம் அசட்டையா இருந்தாலும் ஊத்திக்கும் போலிருக்கே?” என்று சட்டென்று ஃபார்முக்கு வந்து ‘ஜுலாயி’ என்கிற சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தார். ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ இயக்குனராக த்ரிவிக்ரமுக்கு ஆறாவது படம்.
கப்பார் சிங்கின் ஃபீலிங்கை அப்படியே ரசிகர்களுக்கு தக்க வைக்க வேண்டும். அதே நேரத்தில் ‘சீத்தம்மா’ மாதிரியான குடும்பக்கதையிலும் பவர் ஸ்டாரை நிலைநிறுத்த வேண்டும். இம்முறை ஒவ்வொரு காட்சியை எழுதும்போதும் த்ரிவிக்ரத்தின் பேனா ஒன்றுக்கு பத்துமுறை யோசித்தது. கப்பார்சிங்கில் ரசிகர்களை சிலிர்க்கவைத்த, சிந்திக்கவைத்த, சிரிக்கவைத்த காட்சிகளுக்கு மாற்றுக்காட்சிகளை அதே உணர்வுகளோடு எழுதினார். மனசுக்குள் நெடுநாட்களாக புதைத்து வைத்திருந்த உருகவைக்கும், கண்களை குளமாக்கும் குடும்பக் கதைக்குள் கச்சிதமான இடங்களில் அதை செருகினார். அவ்வளவுதான். இப்போது தெலுங்கானாவும், சீமாந்திராவும் தங்கள் அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒன்றுசேர்ந்து த்ரிவிக்ரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நடக்கும் போராட்டங்களால் திருப்பதி பிரம்மோற்சவத்துக்கே கூட்டமில்லை என்று ஊடகங்கள் அலறினாலும் தியேட்டர்களில் மட்டும் திருவிழாக்கோலம்.
‘அத்தாரிண்டிக்கி’ கதை ரொம்ப சிம்பிள்.
எண்பதைத் தொட்ட தாத்தா. காதல் கல்யாணம் செய்துகொண்டதால் மகளை துரத்தியடித்தவர். பின்னர் மனம் வருந்தி கடைசிக் காலத்திலாவது மகளோடு சேரவேண்டும் என்பதற்காகவே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். பேரனின் உதவியை இதற்காக நாடுகிறார். தன்னுடைய அத்தையை எப்படி தாத்தாவோடு மீண்டும் பேரன் இணையவைக்கிறார் என்பதுதான் கதை. யூகித்திருப்பீர்களே.. அதேதான். செம சூப்பர் ஃபிகராக இருக்கும் அத்தை மகள் சமந்தாவை பவன் சைட் டிஷ்ஷாக வளைத்துப் போடுகிறார். சமந்தா பார்வைக்கு சின்னதாக இருந்தாலும் சிலுக்கென்றிருக்கிறார். சுபம்.
கதையை கேட்டால் நான்கு, ஐந்து கோடிகளில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே முடித்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால் வாங்கியிருப்பது பவன் கல்யாணின் கால்ஷீட் ஆயிற்றே. எனவே கிளாஸோடு மாஸ்ஸையும் மிக்ஸ் பண்ணி காக்டெயிலாக கலந்துக் கொடுத்து போதையாக்குகிறார்கள். “புல்லட் அரை அங்குலம்தான். அதுவே ஆறடி உசர மனுஷனை சாய்ச்சிடும். அந்த புல்லட்டே ஆறடி உசரத்துலே இருந்தா...” என்று தாத்தா (பொம்மன் இரானி) ‘இண்ட்ரோ’ கொடுக்க, பேரன் பவன் கல்யாண் ஸ்விட்சர்லாந்தில் அறிமுகமாகும் ஆக்ஷன் காட்சிக்கு மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாம்.

இரண்டாம் பாதியில் கதையை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு பிரும்மானந்தத்தை வைத்து நான்கைந்து வெர்ஷனில் ‘அகலிகை’ நாடகம் நடத்துகிறார்கள். வயிற்றைப் பிடித்துக்கொண்டு முன்சீட்டில் தலையை இடித்துக்கொண்டு இடியென விழுந்து, விழுந்து சிரிக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஒரே ஒரு ஃப்ரேம் கூட போர் அடிக்காதவகையில் பர்ஃபெக்டான செய்நேர்த்தி.
மாஸ் மகாராஜா ரவிதேஜாவின் ‘பலுபு’ புதுசாக ஒரு ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறது. இனிமேல் இது தமிழ், இந்தி என்று தேசியமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கொடூரமான இரத்த வெறியாட்டம் நடத்திக்கொண்டிருந்த இந்திய ஆக்ஷன் சினிமா இனி க்ளைமேக்ஸில் காமெடிப் பந்துகளை உருட்டியே ஆகவேண்டும் என்பதுதான் அந்த ட்ரெண்ட். ‘அத்தாரிக்கி’ அதை அப்படியே கேட்ச் செய்துக்கொண்டது. பவர்ஸ்டாரை அடிக்க இறுதிக்காட்சியில் ஒரு ஊரே கிளம்பி வருகிறது. அவர் ஒரே ஒருவனைதான் போட்டு நையப்புடைக்கிறார். அவன் வாங்கும் அடியைக் கண்டு, அடிக்க வந்தவர்கள் ‘டர்’ராகி அப்படி, அப்படியே செட்டில் ஆகிறார்கள். பீட்டர்ஹெய்ன் அமைத்திருக்கும் இந்த சண்டைக்காட்சி ஆக்ஷன் காட்சிகளின் எண்டெர்டெயின்மெண்ட் லெவலை பலபடிகள் முன்னேற்றியிருக்கிறது.
கடைசியில் ஒரே ஒரு ட்விஸ்ட் ஒட்டுமொத்தப் படத்தையும் அஸ்திவாரமாக தாங்கி நிற்கிறது. ‘அத்தாரிண்டிக்கி’ நூறுகோடி எல்லையை அனாயசமாக தாண்ட, இந்த ‘ட்விஸ்ட்’தான் அடிப்படையான காரணம். த்ரிவிக்ரம் எவ்வளவு சிறப்பான சினிமா எழுத்தாளர் என்பதற்கும் இதுதான் சிறந்த உதாரணம்.
அத்தாரிண்டிக்கி தாரேதி - அன்லிமிட்டெட் மீல்ஸ்