மனித இனம் அடுத்து செவ்வாய் மீது கண் வைத்திருக்கிறது.
செவ்வாயில் மனிதன் வசிக்க முடியுமா?
ஊர் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அலுத்துப்போய் உலகத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டார்கள். இனி ஆர்வமூட்டக்கூடிய விஷயம் எதையும் புதுசாய் உலகத்தில் கண்டுவிடமுடியாது என்று சோர்ந்துப் போனார்கள். இப்போது உலகத்தை விட்டு வெளியே போய், வேறு கிரகங்களை பார்க்க முடியுமா என்று யோசிக்கிறார்கள். எனவேதான் ‘செவ்வாய்க்குப் போகலாம் வாங்க’ என்று ஒரு திட்டத்தை ‘மார்ஸ் ஒன்’ என்கிற நிறுவனம் அறிமுகப்படுத்தியதுமே லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய விண்ணப்பித்திருக்கிறார்கள். பூமி தவிர்த்த வேறொரு கோளில் மனிதன் குடியேற வேண்டுமானால், அது பெரும்பாலும் செவ்வாயாகதான் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
சந்திரனுக்கு ‘சந்திராயன்’ அனுப்பி வென்ற இந்தியா, அடுத்து செவ்வாய் கிரகத்துக்கும் வரும் நவம்பர் மாதம் ‘மங்கல்யான்’ என்கிற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது (புதிய தலைமுறை ஜனவரி 03, 2013 இதழில் ‘செவ்வாயிலும் பாரதக்கொடி’ என்கிற விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறோம்). மங்கல்யான் செவ்வாய் கிரகத்தில் நேரடியாக இறங்காது. சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். செவ்வாயில் கால் பதிக்க வேண்டுமானால், இதிலிருந்து ஓர் ஊர்தியை அனுப்பிதான் செவ்வாய் நேரடியாக தரையிறங்க முடியும்.
செவ்வாயில் கால் பதிக்க நினைக்கும் மனிதனின் கனவு நிறைவேறுமா?
“வாய்ப்பிருக்கிறது” என்கிறார் அறிவியல் கட்டுரைகளை எழுதிருவரும் எழுத்தாளரான பத்ரி.
“சூரிய மண்டலத்தில் எதிர்காலத்தில் வியாழன் வரை மனிதன் போகமுடியலாம். புதன் கிரகத்தில் வெப்பம் அதிகம் என்பதால் வாய்ப்பில்லை. செவ்வாய், வெள்ளி கிரகங்களில் தரை கெட்டியாக இருக்கும் என்பதால் இந்த இரு கிரகங்களுக்கும் மனிதன் போக வாய்ப்பிருக்கிறது. அதிலும் செவ்வாய் கிட்டத்தட்ட பூமியின் அளவுள்ள கிரகம், புவியீர்ப்பு விசையும் ஓரளவுக்கு ஒத்துப்போகும் என்பதால் நாம் சந்திரனை அடுத்து, செவ்வாயிலும் கால் பதிக்க வாய்ப்பிருக்கிறது. காற்றுதான் அடிப்படையான பிரச்சினையாக இருக்கக்கூடும். செயற்கைக் கருவிகளின் துணையோடு சுவாசிக்க வேண்டும். அங்கே கட்டிடங்கள் முதலான கட்டமைப்புகளை உருவாக்கி, பூமியின் சூழலை செயற்கையாக செய்ய முடியும் பட்சத்தில் சில நாட்கள் செவ்வாயில் மனிதன் ‘பிக்னிக்’ மாதிரி தங்கிவர முடியும்” என்று விளக்குகிறார் பத்ரி. ஆனாலும் உலகில் இயங்குவதைப் போல மனிதன் அங்கே இயங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும் சுட்டிக் காட்டுகிறார்.
செவ்வாய்க்கு போக வேண்டுமானால் தோராயமாக ஐந்தரை கோடி கி.மீ பயணிக்க வேண்டும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான தூரம் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நெருங்கும். அதை கணக்கு செய்து பயணத்திட்டத்தை அமைக்க வேண்டும். செவ்வாயின் தரையில் சோலார் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு பரவலாக இருக்கலாம். டாக்ஸிக் ரசாயனம் தோய்ந்த தூசுப்புயல் சுழன்றுக் கொண்டிருக்கலாம். உறைந்துப் போகவும் வாய்ப்பிருக்கிறது. சர்வநிச்சயமாக ஆக்சிஜன் கிடைக்கப் போவதில்லை. நாம் வாழ்வதற்கு என்று அல்ல, வெறுமனே தரையிறங்கக் கூட கோடிமுறை யோசித்தாக வேண்டும். ஏனெனில் அங்கே நீர் இருந்ததற்கான தடயங்கள்தான் கிடைத்திருக்கிறது. கடைசியாக கிடைத்த தகவலின்படி அங்கே மிக மிகக்குறைவான அளவு தண்ணீர் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் மாதிரியான நுண்ணுயிரிகள் கூட அங்கே வசிக்க வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. புவிச்சூழலில் மண் என்பது வெறும் மண் அல்ல. நுண்ணுயிரிகளும் கலந்தது. செவ்வாய்க் கிரகத்தில் மண் இப்படியான தன்மையில் இருக்காது.
“இதெல்லாம் கூட சமாளித்துவிடலாம். ஆனால் செவ்வாய்ப் பயணம் என்பது ஒன்-வே டிராஃபிக்தான். போகிறவர்கள் திரும்பவே முடியாது” என்றுகூறி அதிரவைக்கிறார் அறிவியல் எழுத்தாளரான என்.ராமதுரை.
“நமக்கிருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு செவ்வாய்க்கு பயணம் செய்தால் போய் சேருவதற்கே எட்டு மாதங்கள் ஆகும். பஸ்ஸிலோ, விமானத்திலோ, ரயிலிலோ செய்யும் பயணம் போல இது இருக்காது. பயணிப்பவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக அசாத்தியமான மனவலிமை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
அங்கு தரையிறங்கும்போது கதிரியக்கப் பாதிப்புகள் ஏற்படலாம். அதையும் கூட சமாளித்து விடலாம். தங்குவதற்கு குடியிருப்புகளை கூட ஏற்படுத்தி விடலாம். ஆனால் தரையிறங்கதான் வசதி இருக்கிறதே தவிர, மீண்டும் திரும்புவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் நம்மிடையே இல்லை. அங்கேயே ராக்கெட் உருவாக்கி, எரிபொருள் நிரப்பிதான் திரும்ப வேண்டும். செவ்வாயில் எரிபொருள் கிடைக்குமா தெரியாது. எரிபொருளை கூட நாம் இங்கிருந்து அனுப்பிவிடலாம். ஆனால் செவ்வாயில் தரையிறங்க நாம் பயன்படுத்திய ராக்கெட்டை அப்படியே மீண்டும் கிளப்பிக் கொண்டு வரமுடியாது. சந்திரனுக்கு போனதையும், செவ்வாய்க்கு போவதையும் ஒன்றாக கருதக்கூடாது. இரண்டும் வேறு, வேறு. இந்த தொழில்நுட்ப சாத்தியத்தை நாம் அடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம், பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை போனால் வரமுடியாது என்பதை தெரிந்துக்கொண்டு யாராவது பயணிப்பார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் ராமதுரை.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு உருவான திட்டங்கள் பலவும் தோல்வியிலேயே முடிந்தது. சில திட்டங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கின்றன. இப்போது இந்தியாவின் ‘மங்கல்யான்’ வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளித் தொழில்நுட்பத்தில் நாமும் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் மனிதனை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் முயற்சி அவ்வளவு சீக்கிரமாக நடந்துவிடாது. தொழில்நுட்பரீதியாக அதற்கு நாம் இன்னும் கடக்கவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கிறது.
எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :
வெறும் கண்ணால் பார்க்கலாம்!
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களை நாம் வெறுங்கண்களாலேயே பார்க்கலாம். பலரும் விடியற்காலை வேளைகளில் ‘விடிவெள்ளி’ எனப்படும் வெள்ளி கிரகத்தை பார்த்திருப்பீர்கள். கிரகங்களும் நட்சத்திரம் மாதிரியேதான் இருக்கும். ஆனால் நட்சத்திரங்கள் மின்னும். கிரகங்களில் அந்த சலனம் தெரியாது. கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில்தான் இருக்கும். இரவுகளில் உற்றுப் பார்த்தால் சிகப்பாக வெள்ளியைவிட கொஞ்சம் சிறியளவில் ஒரு கிரகத்தை நீங்கள் காணலாம். அதுதான் செவ்வாய்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :
இந்தியா ரெடி!
தேதி குறித்தாகி விட்டது. அக்டோபர் 28, மாலை 4.15 மணி. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த நேரத்தில் செவ்வாய்க்கு இந்தியாவின் பயணம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கிவிடும். 1350 கிலோ எடையுள்ள விண்கலத்தை, 110 கோடி ரூபாய் செலவில் உருவான பி.எஸ்.எல்.வி. (சி-25) செவ்வாயின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். சாட்டிலைட்டில் சுமார் 15 கிலோ எடையுள்ள அறிவியல் ஆய்வு சாதனங்கள் இருக்கும். இவை செவ்வாயின் நிலப்பரப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளங்களை ஆராயும்.
பூமியின் சுற்றுப்பாதையை விட்டு விலகியதும் சுமார் பத்து மாதங்கள் பயணித்து செப்டம்பர் 2014ல் செவ்வாயின் சுற்றுப்பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாயில் ‘மீத்தேன்’ எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவது மங்கல்யான் திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. ஆனால் நாம் முன்பே எதிர்ப்பார்த்த அளவுக்கு மீத்தேன் அங்கு இல்லை என்று சமீபத்தில் நாசா ஆராய்ந்து சொல்லியிருக்கிறது.
எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :
செவ்வாய் குறித்த டிட்பிட்ஸ்
· சூரியனிலிருந்து நான்காவதாக இருக்கும் கிரகம் செவ்வாய். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையே 141 மில்லியன் மைல் தூரம்.
· ஓரளவுக்கு செவ்வாயின் சூழல் பூமியை ஒத்திருக்கிறது என்று கணிக்கப்பட்டாலும் வெப்பநிலை அங்கே -225 முதல் +60 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கலாம். சராசரி வெப்பநிலையே -67 டிகிரியாக இருக்கக்கூடும் என்று பயமுறுத்துகிறார்கள்.
· சூரிய மண்டலத்திலேயே பெரிய தூசுப்புயல் அடிக்கும் கிரகம் செவ்வாய். இந்தப் புயலின் அளவு சில நேரங்களில் நம் தெரு அளவுக்கு சிறிதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் கிரகம் மொத்தத்தையுமே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு பெரியதாகவும் அடிக்கலாம்.
· செவ்வாயில் ‘உயிர்’ இருக்கிறதா எனும் கேள்விக்குப் பதில் சொல்வதே, விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு உயிர் போகும் வேலையாக இருக்கிறது. ஐரோப்பாவில் விண்வெளி தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட எழுபத்தைந்து சதவிகித விஞ்ஞானிகள் ஒரு காலத்தி உயிர் இருந்திருக்கலாம் என்றும், மீதி இருபத்தைந்து சதவிகிதம் பேர் இப்போதும் செவ்வாயில் உயிர்கள் வாழலாம் என்றும் நம்புவதாக சொன்னார்கள்.
· டச்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘மார்ஸ் ஒன்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் திட்டம் இது. இதன்படி 40 பேர் செவ்வாயில் குடியேற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வர் (இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்) செப்டம்பர் 2022ல் பயணத்தைத் துவக்கி செப்டம்பர் 2023ல் செவ்வாயில் குடியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய்க்குப் போகிறவர்கள் திரும்பமுடியாது என்று தெரிந்தும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்ய ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
· ‘தி இன்ஸ்பிரேஷன் மார்ஸ் ஃபவுண்டேஷன்’ என்கிற நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்காமல் விண்கலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சுற்றிவிட்டு (501 நாட்கள் டூர்) திரும்புமாறு ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறது.
· ஈமுக்கோழி திட்டம் மாதிரி ‘செவ்வாய்க்கு ஆள் அனுப்புகிறோம்’ என்று பல்வேறு நிறுவனங்களும் ஆளாளுக்கு கிளம்பிவிட்டதால் ‘நாசா’ கடுமையாக எரிச்சலடைந்திருக்கிறது. கதிர்வீச்சு அபாயம் இருக்கும் என்று சந்தேகப்படும் பட்சத்தில் விண்வெளி வீரர்களையே அப்பகுதிக்கு அனுப்புவதில்லை என்கிற கொள்கையை நாசா கடைப்பிடிக்கிறது.
(நன்றி : புதிய தலைமுறை)