21 பிப்ரவரி, 2014

நாற்பதும் நமதே, நாடும் நமதே!

மாண்புமிகு ஈழத்தாய் டாக்டர் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜனித்த அறுபத்து ஆறாவது பெருநாள் இவ்வருஷம் 24-02-14 அன்று வரவிருப்பதை அம்மாவின் விசுவாசிகளும், அன்பர்களும் அறிந்ததே. இந்த எண்களை கூட்டி வாசித்த கணிதவியல் பேராசியர்களும், ஆராய்ச்சியாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால் கூட்டுத்தொகை 40 வருகிறது என்கிறார்கள். வரக்கூடிய சித்திரை மாதம் (ஆங்கிலத்தில் மே) புரட்சித்தலைவி அவர்களின் சோவியத் கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை பாராளுமன்றத்தின் நாற்பது தொகுதிகளையும் வெல்லப்போகிறது என்பதன் குறியீடாகவே தங்கத்தாரகை தாயின் இவ்வருட பிறந்தநாள் அமைந்திருக்கிறது என்று பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் இந்த போக்கினை அவதானிக்கிறார்கள். குடிகாரர்களும், தீயசக்திகளும் இந்த அறிவியல் மற்றும் இலக்கிய பேருண்மையை விரைவில் உணர்வார்கள்.

இந்த நாற்பதை மட்டுமே வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் எப்படி இந்திய தாய் திருநாட்டுக்கு பிரதமர் ஆக முடியுமென்று அண்டோமேனியா அடிமைகளும், தேநீர்கடை மாஸ்டரின் தேவாங்குகளும் கெக்கலிக்கிறார்கள். அங்கேதான் இருக்கிறது புரட்சித்தலைவியின் சாமர்த்தியம். தேசிய ஆன்மீக தமிழ் நாளிதழான ஸ்ரீ தினமலர் நம் தங்கதாயை சோவியத் தாய் என்று தலைப்புச்செய்தியாக குறிப்பிட்டிருப்பதை மானமுள்ள உலகத்தமிழர்கள் அறிவார்கள். எனவே சோவியத் தாயின் தவப்புதல்வர்களாம் பிரகாஷ்காரத், பரதன் போன்ற தோழர்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மேற்குவங்காளம், பீகார், நேபாளம், ரஷ்யா, மக்கள் சீனம், புரட்சி கியூபா போன்ற இந்திய மாநிலங்களிலும் ’புரட்சித்தலைவியே பிரதமர்’ என்கிற கோஷத்தை முன்வைத்து நமக்கு வாக்குகள் சேகரிக்க இருக்கிறார்கள். தோழர்களுக்கு எப்படி தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று அப்பகுதிகளுக்கு சென்று அம்மாவின் ரத்தத்தின் ரத்தங்கள் கற்றுக் கொடுப்பார்கள்.

அம்மா பிரதமர் ஆன அடுத்தநொடியே இந்தியா சோஷலிஸ்ட்டு யூனியன் நாடாக மாற்றம் பெறும். தமிழ் ஈழம் பிறக்கும். இதற்காக பாராளுமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிக்கை வாசித்து தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கனவு நனவாகும். ஆஸ்திரேலியாவில் அம்மா மெஸ் திறக்கப்படும். வெள்ளை மாளிகை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகும். பாகிஸ்தானுக்கு பல்லு உடைக்கப்படும். ஐ.நா.சபையில் சீனாவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்படும். சோவியத் ருஷ்யா அம்மாவின் ஆளுகைக்குள் வரும். அமெரிக்காவின் அணுகுண்டுகள் பறிமுதல் செய்யப்படும். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்தப்படும். உலக மக்கள் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும். செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா புகழ் ஓங்குக.

17 பிப்ரவரி, 2014

தோழரை காதலிக்கும் பூர்ஷ்வா

போன தலைமுறை புனிதமாய் கருதி பொத்தி பொத்தி பாதுகாத்த காதலையும், கம்யூனிஸத்தையும் பகடிக்கு உள்ளாக்குவது மலையாள இளம் இயக்குனர்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். அதிலும் இந்த வினித் சீனிவாசன் க்ரூப் களமிறங்கிய பின்பு ஒரே அதகளம்தான்.

இயக்குனர் ஜூடே ஆண்டனி ஜோசப்பின் அறிமுகப்படமான ‘ஓம் சாந்தி ஓசண்ணா’ அமர்க்களமான ரொமாண்டிக் காமெடி கமர்சியல். சாஃப்ட்வேர் என்ஜினியராக பொட்டி தட்டிக் கொண்டிருந்த ஆண்டனிக்கு திடீரென ஒருநாள் சினிமாவில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. திலீப் நடித்த ‘கிரேஸி கோபாலன்’ படத்தில் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ம்ஹூம். க்ளாப் அடிக்க கற்றுக் கொண்டதை தவிர வேறெதையும் அங்கே கற்க முடியவில்லை. ஹீரோ திலீப்புக்கு இவரைப் பார்த்து பரிதாபமாகி விட்டது. அடுத்து வினீத் சீனிவாசனை இயக்குனராக அறிமுகப்படுத்தி, ‘மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்’ படத்தை திலீப் தயாரித்தார். அதில் பணிபுரிய ஆண்டனியை, வினீத்திடம் திலீப்பே சிபாரிசு செய்தார். இந்த படத்தில்தான் கேரளாவின் இன்றைய ட்ரீம்பாயான நிவின்பாலி அறிமுகமானார்.தொடர்ச்சியாக வினீத் சீனிவாசின் அடுத்த ப்ளாக் பஸ்டர் படமான ‘தட்டத்தின் மறயத்து’விலும் ஆண்டனி தொழில் கற்றார். போதும். தனிக்கடை போட்டுவிட்டார்.

‘ஓம் சாந்தி ஓசண்ணா’வும் அதே வினீத் ஸ்டைல் தீம் படம்தான். முந்தைய தலைமுறை ‘ச்சோ.. ச்சோ’ கொட்டி ரசித்து ஆராதித்த விஷயங்களை, உலகமயமாக்கலுக்கு பிறகான தலைமுறை எப்படி பார்க்கிறது என்பதுதான். பக்காவான ஸ்க்ரிப்ட். மீடியம் பட்ஜெட். பர்ஃபெக்ட்டான போஸ்ட் புரொடக்‌ஷன். ஃப்ரேமுக்கு ஃப்ரேம்.. இன்ச் பை இன்ச் ரிச்சான குவாலிட்டி. மலையாளத் திரையுலகில் வீசிக்கொண்டிருக்கும் புதிய அலை இதுதான்.

எண்பதுகளின் மணிரத்னம் பட நாயகிகளை மறக்க முடியுமா? மவுனராகம் சுட்டி ரேவதி, இதயத்தை திருடாதே துறுதுறு கிரிஜா. இவர்களின் நீட்சியாக இந்த படத்தில் நஸ்ரியா. படம் தொடங்கும்போதே நிவின்பாலி தன் ரசிகர்களிடம் (!) விளக்கம் அளிக்கிறார். இந்த படம் ஹீரோயினின் வ்யூபாயிண்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஸ்கூல் படிக்கும் பூஜா பையன் மாதிரி வளர்கிறாள். ஜீன்ஸ் பேண்ட், டீஷர்ட், ஹீரோ ஹோண்டா பைக்கென்று. இவளது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஆக்டிவிட்டி என்னவென்றால் ‘ஒயின் டேஸ்டர்’. பூஜாவின் சமூகத்தில் நூறு, இருநூறு சவரன் கொடுத்து ஒரு மொக்கையான பையனுக்கு பெண் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. எனவே தன்னுடைய பெட்டர் ஹாஃபை தானே ‘செலக்ட்’ செய்யவேண்டுமென்று மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். ஸ்கூலில் சகமாணவன் ஒரு பக்காவாக செட் ஆகிறான். ஆனால் அவனிடம் பெண்கள் விரும்பத்தக்க ரஃப் ஆன ஆண்மை மிஸ்ஸிங் என்று பூஜாவுக்கு தோன்றுகிறது.

பூஜாவின் இடைவிடா தேடுதலில் மாட்டுபவன்தான் நம் தோழர் கிரி. பக்கா கம்யூனிஸ்டான கிரி, பட்டம் படித்திருந்தாலும் ஊரில் விவசாயம்தான் பார்க்கிறான். பாட்டாளி மக்களின் உரிமைகளுக்காக அதிகாரங்களோடு மோதுகிறான். அநீதிகளை தட்டி கேட்கிறான். இது போதாதா. பூஜாவுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த –அதாவது பூர்ஷ்வா ஆன- பூஜாவை கிரி விரும்புவானா என்பதுதான் கேள்வி.

அந்த வருட ஓசண்ணா திருநாளன்றுதான் கிரிக்கு பிறந்தநாளும் வருகிறது. தன்னுடைய காதலை அவனிடம் தெரிவிக்க முயல்கிறாள். கிரியின் சித்தாந்த மூளை இக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வர்க்க வேறுபாடுகளை தாண்டி, அவள் பள்ளி மாணவி. தான் பொறுப்பான கம்யூனிஸ்ட் என்பதை சுட்டிக்காட்டி, அவளை ஒழுங்காக படித்து உருப்படுமாறு உபதேசம் செய்கிறான்.

இதற்கிடையே ஒரு காதலை சேர்த்து வைப்பதில் ஏற்படும் பிரச்சினையால், ஒரு பூர்ஷ்வாவின் (ஸ்ஸப்பா) வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் சீனத்துக்கு (முடியல) போய் தலைமறைவாகிறான். பூஜாவுக்கு மெடிக்கல் அட்மிஷன் கிடைக்கிறது. அங்கு வரும் புரொபஸர் ஒருவரோடு லேசான ஈர்ப்பு தோன்றுகிறது. ஆனால் அது காதல் அல்ல என்று அவளது மனம் அவளை தெளிவுப்படுத்துகிறது.

அப்படி இப்படியாக ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்போது பூஜா டாக்டர். மக்கள் சீனத்திலிருந்து தோழர் கிரி திரும்பிவிட்டார். அதே ஓசண்ணா நாள். அன்றுதான் கிரிக்கும் பிறந்தநாள். என்னவாகிறது இவர்கள் காதல் என்பதை நொடிக்கு நாலு முறை கிச்சுகிச்சு மூட்டி, வயிறு வலிக்க வைக்கும் திரைக்கதை வசனங்களோடு சுடச்சுட கேரளா ஸ்பெஷல் மீல்ஸ் பரிமாறியிருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் ஆகச்சிறந்த ஆச்சரியம் நஸ்ரியா. குள்ளச்சியும், ஒல்லிப்பிச்சானுமான நஸ்ரியா எப்படிப்பட்ட திறமைவாய்ந்த நடிகை என்பதை யாராவது நையாண்டி இயக்குனர் சற்குணத்திடம் முன்பே எடுத்துச் சொல்லியிருக்கலாம். அவரைப்போய் தொப்புளை காட்டச் சொல்லி வற்புறுத்தியிருக்க மாட்டார். படம் முழுக்க நஸ்ரியாவின் நரேஷனில்தான் ஓடுகிறது. அதிலும் கிளைமேக்ஸில் “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப்பழக்கம். தன்னோட முதல் காதலியோட பேரைதான் பொண்ணு பொறந்தா வைப்பானுங்க” என்று சொல்லும்போது காட்டும் முகபாவம் ஏ க்ளாஸ். நிவின் பாலி படம் முழுக்க அண்டர்ப்ளே செய்து, நஸ்ரியாவுக்கு க்ளாப்ஸ் வாங்கித்தரும் பெருந்தன்மையுடைய இளம் நம்பிக்கை நட்சத்திரம்.

ஒருநாள் முழுக்க நண்பர்களோடு சீயர்ஸ் அடித்து ‘சிப்’பி ‘சிப்’பி ஒயின் சாப்பிட்ட போதையை பின்னணி இசையும், பாடல்களும் அளிக்கிறது. திரையின் ஒவ்வொரு பிக்ஸெல்லிலும் இளமையோடு போட்டி போடும் இன்னொரு சமாச்சாரம், கேமரா அள்ளித்தரும் பசுமை. கொஞ்சமும் திகட்டாத கடவுளின் தேசம் கிளியோபாட்ராவின் மேனியைவிட பேரழகு கொண்டது என்பதை மறுக்க முடியாது. கேரளாவில் பிறக்கும் பெண்கள் ஏன் சூப்பர் ஃபிகர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல்பூர்வமாக யோசித்துப் பார்த்தால் ஈ ஈக்குவல் டூ எம்சி ஸ்கொயர் என்கிற ஐன்ஸ்டீன் ஃபார்முலாவின் தாத்பரியம் புரியவருகிறது.

திருப்புமுனை நாயகன்

வனவாசத்தில் இருந்து திமுக மீண்டு ஆட்சியை கைப்பற்றிய 89 தேர்தல்தான் கே.என்.நேருவை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அத்தேர்தலில் திமுக ‘இளைஞர்களுக்கு வாய்ப்பு’ என்கிற கோஷத்தை முன்வைத்து, வேட்பாளர்களை தேர்வு செய்தது. நாற்பது வயதுகூட ஆகாத நேரு தேர்தலில் வென்று அமைச்சரும் ஆனார். இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களாக இருக்கும் பொன்முடி போன்றவர்கள் அப்போது இளைஞர்களாக இருந்து வாய்ப்பு பெற்றவர்கள்தான். வழக்கமாக ஜீப்பில் வந்து வாக்கு கேட்கும் பண்ணையார்களை கண்டு அலுத்துப்போன லால்குடி மக்கள், என்ஃபீல்ட் புல்லட்டில் புயலென வந்த இளைஞரை தேர்வு செய்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆரம்பத்திலிருந்தே நேரு களத்தில் இறங்கி பணியாற்றக்கூடியவர். தொண்டர்களின் உணர்வுகளை துல்லியமாக எடைபோடுபவர். கட்சி வேலை என்று வந்துவிட்டால் கவுரவம் பார்க்காமல் கரைவேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இறங்கிவிடுவார். 91 – 96 அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுகவின் பழைய தலைவர்கள் அதுவரை எதிர்கொண்டிராத அடாவடியான அரசியலை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். அன்பில் குடும்பம் நடத்திய ‘ஜெண்டில்மேன் பாலிடிக்ஸ்’, ‘ஜெ’ காலத்தில் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து, அதிரடி அரசியலை திருச்சி திமுகவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திமுகவில் நேர்பிளவு ஏற்பட்டு மதிமுக உருவானபோது, மாவட்டமெங்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரில் சென்று, கட்சியின் வலிமையை உறுதி செய்தார்.

96 தேர்தலுக்கு முன்பாக திமுக மாநில மாநாடு நடத்த உத்தேசித்தபோது, உரிமையோடு சண்டை போட்டு திருச்சியில்தான் நடத்த வேண்டும் என்று வெற்றி கண்டார். அப்போது திருநெல்வேலி திமுகவினர் இவர்மீது கொலைவெறி கொண்டார்கள். திருச்சியில் நடந்த அம்மாநாடு திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. லட்சக்கணக்கான தொண்டர்களை பிரச்சினைகள் ஏதுமின்றி கட்டுக்கோப்போடு மாநாட்டில் பங்குபெறச் செய்த நேருவின் உழைப்பு கலைஞரை கவர்ந்தது. பல பேரணிகளையும், மாநாடுகளையும் பிரும்மாண்டமாக நடத்திக்காட்டிய கலைஞரே, அம்மாநாட்டு ஏற்பாடுகளை கண்டு பிரமித்தார். ‘அஸ்தமித்து விட்டது திமுக’ என்று அலறிக்கொண்டிருந்த தேசிய ஊடகங்கள், திமுகவின் உயிர்ப்பினை ஒப்புக்கொண்டன. சோர்ந்திருந்த அக்கட்சி தொண்டர்களையும் எழுச்சி பெறவைத்த நிகழ்வு அது.

2001ல் படுதோல்வி கண்ட திமுக, 2006 தேர்தலை எதிர்கொள்ளும்போது ‘வெற்றி சூத்திரம் திருச்சியில் இருக்கிறது’ என்று கண்டுகொண்டது. எனவே திரும்பவும் அங்கேயே ஒரு மாநில மாநாடு. நேருவின் மேஜிக் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மிகச்சரியாக மாநாடு நடைபெறும்போது அதுவரை கூட்டணியில் இருந்ததாக நம்பப்பட்ட வைகோ, போயஸ் தோட்டத்துக்கு ‘பூங்கொத்து’ கொடுக்கச் சென்றுவிட்டார். வைகோ வருவார் என்று நம்பி மாநாட்டுக்கு வந்த மதிமுகவினரை அப்படியே அலாக்காக அள்ளி திமுகவுக்கு கொண்டுவந்தார் நேரு. மதிமுக மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை முற்றிலுமாக குலைந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். வைகோவின் முடிவால் ‘அப்செட்’ ஆகியிருந்த கலைஞரை, ‘கூல்’ செய்தது நேருவின் இரவு பகல் பாராத உழைப்புதான். ‘மீண்டும் ஆட்சி கானல்நீர்தான் போல’ என்று சந்தேகப்பட்ட சில கட்சித் தலைவர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்தது திமுகவின் ஒன்பதாவது மாநில மாநாடு. பேரணியில் அணி அணியாக திரண்ட தொண்டர்கள் ‘ஆட்சி நமதே’ என்று கட்டியம் கூறினார்கள்.
2011லும் திமுகவை ‘தோல்வி சாபம்’ தொடர்ந்தது. முன்னெப்போதுமில்லாத வகையில் அனைத்துத் தரப்பும் ஆச்சரியப்படும் வகையில் அதிமுகவின் ஆட்சியும், பெரிய புகார்கள் இன்றி சிறப்பாக செயல்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த சோகத்தில் இருந்து தொண்டர்கள் இன்னமும் மீண்டெழ வாய்ப்பே கிடைக்கவில்லை. நேருவுக்கு தனிப்பட்ட சோகம் வேறு. சிறைக்கும், வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். அவ்வளவு செல்வாக்கும், அதிகாரமும் மிக்க நேருவின் தம்பியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட பொதுவாழ்க்கையில் இருந்து விலகி ‘டை’ அடிக்காத வெள்ளைக்கேசம், தாடியென்று சாமியார் கெட்டப்புக்கு நேரு மாறிவிட்டார். திமுகவும் அப்படிதான் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஸ்பெக்ட்ரம், அழகிரி என்று ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் இருந்து மீள, திமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியைதான் தேர்ந்தெடுத்தார் கலைஞர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கட்சி கொஞ்சம் ‘ப்ரெஷ்’ ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தவிர்த்து நேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழச்செய்ய இதைத்தவிர்த்து வேறு உபாயம் கலைஞருக்கு தோன்றவில்லை.

‘திருச்சியில் மாநாடு, நேரு ஏற்பாடு செய்வார்’ என்று கலைஞர் அறிவித்தவுடனேயே, முதல் வேளையாக ‘ஷேவிங்’ செய்தார் நேரு. தன்னுடைய ஸ்பெஷலான கத்தி மீசையை கூராக தயார் செய்தார். தலை முடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டார். எண்பதுகளில் கட்சி வளர்க்க உதவிய ‘என்ஃபீல்ட் புல்லட்டை’ நல்ல மெக்கானிக்கிடம் கொடுத்து தயார் செய்தார். இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முந்தைய களவீரர் நேரு ரெடி. திருச்சி முழுக்க புல்லட்டில் நகர்வலம். இரண்டு மாத காலமாக இரவு பகல் பாரா உழைப்பு.

மாநாடு மாபெரும் வெற்றியென்று திமுகவின் எதிர்க்கட்சிகளும், எதிர்நிலையில் இருக்கும் ஊடகங்களும் கூட இன்று ஒப்புக்கொள்கின்றன. உடனடியாக வரவிருக்கும் தேர்தலில் இதன் தாக்கம் தெரியுமாவென்று சொல்ல முடியாது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலை திமுக ‘தில்லாக’ எதிர்கொள்ள, அக்கட்சியை வலுவாக தயார்படுத்தியிருக்கிறது திமுகவின் பத்தாவது மாநில மாநாடு. எல்லாவற்றுக்கும் மேலாக திருச்சியின் செயல்வீரரான நேரு திமுகவுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறார். கலைஞருக்கு இதுதான் இம்மாநாட்டின் ‘ஸ்பெஷல் போனஸ்’.

11 பிப்ரவரி, 2014

புலிவாலும் பத்மினியும்

வர்க்கமுரண் தான் ஒன்லைன். எதிர் எதிரான எக்ஸ்ட்ரீம் கார்னரில் வசிக்கும் இரு மனங்கள் ஏன் எப்படி முட்டிக்கொள்கிறது என்பதுதான் தீம். முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்து விடுகிறது. பணத்துக்கு பஞ்சமில்லாத பிரசன்னா. பஞ்சமே வாழ்க்கையென வாழும் விமல். முன்னவருக்கு காதல் சைட் டிஷ். காமம் மெயின் டிஷ். பின்னவருக்கு காதல் புனிதம். காமத்தை பற்றி கல்யாணத்துக்கு அப்புறம்தான் பரிசீலனை. அட்டகாசமான கேரக்டர் ஸ்கெட்ச்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மின்னலை பிடித்து மேகத்தில் குழைத்து பெண்ணென்று செய்துவிட்ட நடிகையின் ‘பிட்டு’ என்றொரு சமாச்சாரம் இணையத்தளங்களிலும், பர்மாபஜாரிலும் உலவிவந்தது நினைவிருக்கிறதா. காமவெறி தமிழ்சமூகம் வயது வித்தியாசம் பாராமல் பார்த்து ரசித்ததே? பின்னர் அது நடிகையுடையது அல்ல, ஒரு பெங்களூர் கல்லூரி மாணவியுடையது என்று பின்கதைச் சுருக்கம் வந்தது. அதற்கு பிறகு அந்த ‘பிட்டு’ டேட்டிங் போனபோது பாய்பிரண்ட் பிடித்தது. அவனுடைய செல்போன் சர்வீஸுக்கு போனபோது கடைக்காரன் நெட்டில் ஏற்றிவிட்டான். அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டாள் என்று கதை தொடர்ந்துகொண்டே போனது. புலிவாலில் அந்த கதை அப்படியே பதிவாகியிருக்கிறது. நீலப்படத்தில் வந்தவர் எந்த கோணத்தில், எம்மாதிரியான உடையில் வந்தாரோ (நாமும் காமவெறி தமிழ்சமூகத்தின் அங்கம்தான் என்பதால் அந்த பிட்டை எப்பவோ பார்த்திருக்கிறோம்) அப்படியே இப்படத்தில் ஓவியா வருகிறார். எதையுமே செல்போனில் பதிவு செய்துக்கொள்ளும் பிரசன்னா, இருவரும் ‘பேசிப்புழங்குவதையும்’ தெரியாத்தனமாக பதிவு செய்துவிடுகிறார். ‘டெலிட்’ செய்ய நினைக்கும்போது, ஏதோ போன் வந்து டெலிட்ட மறந்துவிடுகிறார்.

இந்த போன் எதிர்பாராவிதமாக விமலிடம் சிக்குகிறது. அதன்பிறகு படம் ரோலர் கோஸ்டர் ரைடுதான். இயக்குனர் மாரிமுத்து ஆறுவருடங்களுக்கு முன்பு எடுத்த கண்ணும் கண்ணும் படத்துக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மீண்டு வந்திருக்கிறார்.

புலிவால் - அட்டகாசமான கமர்ஷியல் த்ரில்லர்.

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிறந்தவர்கள் கொண்டாடக்கூடிய திரைப்படம். பத்மினி என்கிற காரை இப்போதைய இளசுகள் சாலையில் கூட பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினி வைத்திருந்த கார் (செல்ஃப் டிரைவிங்). டாக்டர்களும், வக்கீல்களும் கார் வைத்திருந்தால் அது பத்மினியாகதான் இருக்கும். ஹ்யூண்டாய் என்றொரு கார் எந்த எமகண்டத்தில் வந்ததோ அம்பாசிடர்களும், பத்மினிகளும் காணாமல் போய்விட்டன. அட்லீஸ்ட் அம்பாஸடராவது டிராவல்ஸுக்கு ஓடுகிறது. பத்மினி சுத்தம்.

நீண்டகாலம் கழித்து, இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கக்கூடாதா என்று என்னை ஏங்கவைத்த திரைப்படம். எந்த கமர்சியல் காம்ப்ரமைஸும் இல்லாமல் யதார்த்தமான போக்கில் மிகதுல்லியமாக ஒரு காலக்கட்டத்தின் அடையாளங்களை திரையில் பதித்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது பத்மினியில் நாமும் ஒரு ரவுண்டு அடிக்கமாட்டோமா என்று ஏக்கம் வருகிறது.

அழியாத கோலங்கள் பாணியில் ஒரு இளைஞனின் பிளாஷ்பேக்காக படம் விரிகிறது. ஒரு ஊர்லே ஒரு பண்ணையார். அவரிடம் ஒரு பத்மினி. அந்த பத்மினியை ஓட்டுறதுக்கு ஒரு டிரைவர். பண்ணையாருக்கு ஒரு பொண்டாட்டி. ஒரு பொண்ணு. டிரைவருக்கு ஒரு அசிஸ்டெண்ட் (க்ளீனர் மாதிரி). டிரைவருக்கு ஒரு காதலி. பத்மினியின் முன்சீட்டில் ஒரு வாட்டியாவது உட்கார்ந்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு அஞ்சு ரூபாய் (க்ளீனருக்கு லஞ்சம்) சேர்க்கும் சிறுவன் என்று பாத்திரங்களை பக்காவாக செட்டப் செய்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர்.

புகுந்தவீடு எவ்வளவு வசதியாக இருந்தாலும் பொறந்தவீட்டில் இருந்து அல்பத்தனமாக சின்ன சின்ன பொருட்களை எடுத்துப்போகும் பெண், சமையலறையில் அலட்சியமாக அறுவாமனையை நிமிர்த்துவைத்துவிட்டு வேலை பார்க்கும் குடும்பத்தலைவி, அதை பார்த்தவுடனேயே எடுத்து படுக்கவைக்கும் கணவன் என்று இயக்குனரின் சின்ன சின்ன நகாசு வேலைகள் படம் முழுக்க ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகாக அலங்கரிக்கிறது. சர்ப்ரைஸ் போனஸாக ஜெயப்பிரகாஷ் – துளசி காதல்.

படத்தின் நாயகி முந்தைய விஜய்சேதுபதி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தவர் போலிருக்கிறது. கண்களில் சாராயத்தை தேக்கி வைத்திருக்கிறார். மற்ற அம்சங்கள் என்ன என்னவென்று விரிவாக அலச போதுமான ஸ்பேஸ் இந்த படத்தில் இல்லை என்பதால், அடுத்த படம் வரும் வரை வெயிட் செய்தாக வேண்டும். அவரை தரிசித்ததில் இருந்து தாவணி போட்ட பெண் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று திடீர் ஆசை ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது.

எனிவே, வதந்திகளை நம்பாதீர்கள். ’பண்ணையாரும் பத்மினியும்’ சூப்பர். மிஸ் பண்ணாமல் டிவிக்கு வரும் வரை வெயிட் செய்யாமல் தியேட்டருக்கு போய் பார்த்துவிடுங்கள்.

குழந்தைகளை இப்படி காட்டலாமா?

சினிமாவில் விலங்குகள் கூட துன்புறுத்தப்படக்கூடாது என்று இந்திய தணிக்கை வாரியம் கடுமை காட்டி வருகிறது. எனவே விலங்குகள் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை கூட நிஜ விலங்குகளை பயன்படுத்தாமல், கிராஃபிக்ஸ் முறையில் காட்சிகளை அமைக்கிறார்கள் படைப்பாளிகள். நிலைமை இப்படியிருக்கையில் சமீபமாக இந்திய சினிமாவில் பாலியல் காட்சிகளில் குழந்தை நடிகர்களை நேரடியாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருக்கிறதா, சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் டிவியில் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?
இந்திய தணிக்கை வாரியத்துக்கு தலைமை செயல் அலுவலராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்கிறார்.
“ஓர் இந்திப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஐந்து வயது மகள் என்னை கேட்டாள். “அப்பா! இந்த படத்துலே ‘அந்த’ மாதிரி சீன் ரொம்ப ஓவரா இல்லே?”. இன்னொரு படம் பார்க்க அவளோடு போயிருந்தேன். குழந்தையும் இதை பார்க்கிறாளே என்று பல காட்சிகளில் நெளிந்தேன். இனிமேல் UA சான்றிதழ் பெற்ற படங்களைகூட குழந்தையோடு போய் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்”
‘வற்றாத நதியெல்லாம் கடலிடம் போகும். அந்த கடலே வற்றிவிட்டால் எங்கே போகும்?’ என்று நாமும் சினிமா வசனம் பேசவேண்டியதுதான். சென்சார் செய்யும் தணிக்கை வாரியத்தின் தலைமை அதிகாரியே சினிமா பார்த்து நெளியும்போது, நம்முடைய நிலைமை? U/A சான்றிதழ் பெற்ற படங்கள் மட்டுமல்ல. U சான்றிதழ் பெற்ற படங்களையேகூட குழந்தைகளோடு பார்க்க முடியவில்லை. ஐந்து வயது குழந்தையோடு சினிமாகூட பார்க்க முடியவில்லை என்று அவர் குமுறும்போது, குழந்தைகளையே பயன்படுத்தி ‘அந்த’ மாதிரி காட்சிகள் வருகிறதே. அதை நாம் எப்படி சகித்துக் கொள்வது?
  • ‘நடுநிசி நாய்கள்’ என்றொரு படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. டீனேஜைகூட எட்டாத மகனோடு, அவனுடைய அப்பாவே ஓரின பால் உறவு கொள்வதாக காட்சி. இதன் காரணமாக அந்த சிறுவன் மனநோயாளியாகி, வளர்ந்து பாலியல் வக்கிரம் நிறைந்தவனாக மாறுவதாக கதை.
  • ‘விடியும் முன்’ என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு படம் வெளியாகியது. பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை, அறுபது வயது கடந்த ஒரு பெரியவருக்கு ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி. அந்த குழந்தைக்கு மேக்கப் செய்து அழகுபடுத்தி தயார் படுத்துகிறாள். அப்போது குழந்தை அவளிடம் கேட்கிறாள். “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. அதற்கு அவள் சொல்லும் பதில், “இன்னைக்கு நீதான் ராணி”. அந்த குழந்தையிடம் பெரியவர் பாலியல் வக்கிரத்தை காட்டுவதாக அடுத்த காட்சி.
  • ‘கோலி சோடா’ என்கிற திரைப்படம் தற்போது வெற்றிகரமாக அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலோரத்தில் ஒரு தனிமையான, இடிந்துபோன தேவாலயம். பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி, அங்கே தினமும் பிரார்த்தனைக்கு வருகிறாள். ஒரு நாள் அவள் வரும்போது சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிறுமியைப் பார்த்ததுமே, அவளை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கிறார்கள்.
வாசிக்கும்போதே காறித்துப்பலாம் என்று கோபம் வருகிறது இல்லையா?
இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும் யோசித்துப் பார்த்தால் குழந்தைகளை வைத்து இந்த சினிமாக்காரர்கள் என்னவெல்லாம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நீங்களே சிந்தித்து, இம்மாதிரி படங்களின் காட்சிகளை கொண்டு பெரிய பட்டியல் ஒன்றை தயாரிக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்க்கப் போனால் தமிழில் இந்த மோசமான போக்கு குறைவு. அப்படியென்றால் மற்ற மொழி படங்களில் எவ்வளவு ஆபாசம் தலைவிரித்து ஆடுமென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படியெல்லாம் ஒரேயடியாக தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் என்கிறார் பெண் இயக்குனரான சந்திரா தங்கராஜ்.
“உலகளவில் எடுக்கப்படும் இதுபோன்ற திரைப்படங்களை நாம் சமீபமாக நிறைய பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அந்த படங்களிலும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அப்படங்களை பார்க்கும்போது நமக்கு வராத தார்மீக உணர்வு நம் ஊரில் எடுக்கப்படும் படங்களை பார்க்கும்போது மட்டும்தான் வருகிறது. நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரப் பின்னணி காரணமாக நம் குழந்தைகளை இதுபோல காணும்போது சீற்றம் அடைய வைக்கிறது. தமிழ் குழந்தையை திரையில் அப்படி சித்தரிப்பதா என்று கோபம் வருகிறது.
ஆணோ, பெண்ணொ ஐந்தில் ஒரு குழந்தை இம்மாதிரி பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் மோசமான சமூகத்தில் இருக்கிறோம். இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை, எல்லா ஊடகங்களைப் போலவே சினிமாவும் மக்களுக்கு செய்தாக வேண்டும். ஆனால் இப்பிரச்சினையை கையாளும் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த அடிப்படை தெளிவு இல்லாவிட்டால், காட்சிகள் பல்லிளித்துவிடும்.
எனவே, இம்மாதிரி காட்சிகளை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவற்றுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அது மிக ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டும் என்பதே என் கருத்து” என்கிறார் சந்திரா.
‘விடியும் முன்’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆப்ரகாம் பிரபுவும் இதேமாதிரிதான், அப்படம் மீது குற்றம்சாட்டி எழுதப்பட்ட ஒரு இணையக் கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்.
“மூன்று வயது குழந்தையை கூட பாலியல் வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டி சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரி இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கும் முயற்சி சினிமாவில் அவ்வப்போது நடைபெறுகிறது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நாம் நினைக்கக்கூடாது. நிஜங்களை சற்று தைரியமாக அவ்வப்போது உரசிப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
இக்காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள், நாளை பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவர்களை நோக்கி செய்யப்படும் கேலி கிண்டல்களை எப்படி சகித்துக்கொள்ளப் போகிறார்கள்? சினிமாவில் குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுவதும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஒப்பானதுதான் என்கிறார் பேராசிரியர் சுமதிஸ்ரீ.
“குழந்தைகளை பணியிடங்களில் பணிக்கு அமர்த்துவது குற்றம் என்றால், ஊதியம் தந்து சினிமாவில் நடிக்க வைப்பதற்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்கமுடியும்? சினிமாக்களில் நம் குழந்தைகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார்கள். உயரமான கட்டிடங்களில் இருந்து தூக்கிப் போட்டுவிடுவேன் என்று வில்லன்களால் பயமுறுத்தப் படுகிறார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே கதறுகிறார்கள். நம் கதாநாயகர்களின் வீரபிரதாபத்தை பறைசாற்ற குழந்தைகள் விதம் விதமாக சித்திரவதைப்படுகிறார்கள்.
போதாதற்கு இப்போது பாலியல் காட்சிகளிலும் அவர்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மோசமான ஆரம்பம். வன்புணர்வு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத குழந்தைகளை அம்மாதிரி காட்சிகளில் நடிக்க வைப்பதைவிட மோசமான கலாச்சாரம் வேறெதுவுமில்லை. சினிமாக்காரர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது வேண்டாமா. ஒரு படத்தில் நடிப்பதோடு அந்த குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறதா என்ன. திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜமாகவே கெட்டவர்தான் என்று உறுதியாக நம்புகிற சமூகம், ஒரு மாதிரி பாத்திரங்களில் நடித்த குழந்தைகளை எப்படி நடத்தும். படிப்பு, வேலை, திருமணம் என்று தொடரப்போகும் வாழ்வில், மோசமான ஒரு பாத்திரத்தில் நடித்த குழந்தை எவ்வளவு பேரை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏளனங்களையும், பரிதாபத்தையுமே தொடர்ந்தால் மனப்பிறழ்வு ஏற்பட்டு விடாதா. தங்களுடைய குழந்தைப் பிராயம் களவாடப்படுவது கூட தெரியாமல், சினிமாவில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமாகவே இந்த அநியாயங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று சூடாகப் பேசுகிறார் சுமதிஸ்ரீ.
சமீபமாக நம் தேசத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சகித்துக்கொள்ள முடியாத குற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராக ‘நிர்பயா சம்பவம்’ போன்ற கொடுஞ்செயல்களுக்கு பிறகாக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். ஆனால் சமூகத்தின் இந்த உணர்வுக்கு நேர்மாறாக இந்தியத் திரைப்படங்களில் மட்டும் பாலியல் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முத்தமிடுதல், ஆபாச அசைவுகள், கள்ள உறவு, ஐட்டம் பாடல், படுக்கையறைக் காட்சிகள், வன்புணர்வு என்று காட்சிகள் இல்லாத படங்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். பெண்ணை போகப்பொருளாக மட்டுமே சினிமா முன்வைக்கிறது என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இக்காட்சிகளில் இப்போது குழந்தைகளையும்கூட விட்டு வைப்பதில்லை என்பதுதான் அநியாயம். தலைமை தணிக்கைத்துறை அதிகாரியே கூட தன் குழந்தையோடு படம் பார்க்க முடியவில்லை என்றால் எப்படிப்பட்ட சீரழிவுக்கு நம் சினிமா ஆளாகியிருக்கிறது?
“நாங்கள் தியேட்டரில் படம் பார்ப்பதை எங்கள் பெற்றோர் விரும்புவதில்லை. படம் பார்த்துவிட்டு வகுப்பறையில் வந்து தோழிகள் சொல்லும் கதைகளையும், காட்சிகளையும் கேட்கும்போது, எங்கள் பெற்றோரின் அச்சம் நியாயம்தான் என்று எண்ண வேண்டியிருக்கிறது” என்கிறார் சென்னையில் +2 படிக்கும் மாணவியான அபிநயா.

படைப்பாளிகளுக்கும் வணிக நெருக்கடி இருக்கிறது என்பதும் உண்மைதான். அதற்காக சமூக அக்கறைக்கு எதிரான திசையில் அவர்கள் பயணிக்கக்கூடாது. அதே நேரத்தில் அரதப்பழசான நம்முடைய தணிக்கை நடைமுறைகளை நவீனப்படுத்த வேண்டிய காலக்கட்டத்திலும் இருக்கிறோம். தணிக்கையில் அரசியல் தலையீடுகள் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ள முடியாது. ஒவ்வொரு தரப்பையும் நோக்கி நாம் தனித்தனியாக விரல் சுட்டி குற்றம் சாட்ட வேண்டியதில்லை. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா, ஒட்டுமொத்தமாக தன்னை கறாரான சுயபரிசீலனை செய்துக்கொண்டு, மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)