2 ஜூன், 2015

கொஞ்சம் மெய், நிறைய பொய்..

இந்தியா சுதந்திரம் வாங்கிய அதே ஆண்டில் அமெரிக்காவின் CBS ரேடியோவில் ஒலிபரப்பான candid microphoneதான் உலகின் முதல் ரியாலிட்டி கண்டெண்ட். அமெரிக்க குடிமகனான Allen funtதான் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.

Candid microphone என்கிற வானொலி நிகழ்ச்சி 1950களில் Candid camera என்கிற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் ABC மற்றும் NBC தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. கேமிராவை மறைவான இட்த்தில் வைத்துவிட்டு சாதாரண மக்களின் அன்றாட சுவாரசியங்களைப் படம் பிடிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். ஒரு தொகுப்பாளர் களத்தில் புகுந்து விசித்திரமாக நடந்துக் கொள்வதும் அதைப் பார்க்கும் பொதுமக்களின் விசேஷ ரியாக்‌ஷன்களை படம் பிடிப்பதே நோக்கம். முழுக்க முழுக்க நகைச்சுவை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி இது.

அமெரிக்க அதிபராக இருந்த ஹேரி ட்ரூமென் வீதியில் போகிறவர்களிடம், “மணி என்ன?” என்று கேட்கும்போது அதை வேடிக்கை பார்க்கும் பொது மக்களின் வினோத முகபாவங்கள் மிகப் பிரபலம்.

1950களில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. 1960களில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்து நிகழ்ச்சியாக்கும் பைத்தியம் பிடித்தது. The American Family என்ற நிகழ்ச்சியை ஒரு தொடக்கம் எனலாம். 1970களில் காவல்துறையின் நடவடிக்கைகளை நோக்கி ரியாலிட்டி கேமரா திரும்பியது. அதுவரை நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்திய ரியாலிட்டி தயாரிப்பாளர்கள் கொலை – கொள்ளை – விசாரணை என இன்னொரு மைதானத்தில் விளையாடத் தொடங்கினார்கள். பல மணி நேரம் படம் பிடிப்பதை எடிட்டிங் செய்வதுதான் பெரிய தலைவலியாக இருந்தது. 1980களில் கண்டறியப்பட்ட புதிய படத்தொகுப்பு தொழில்நுட்பங்கள் இந்தப் பணியையும் எளிமையாக்கின.

1990களில்தான் ரியாலிட்டி வட்டத்திற்குள் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது. Pop idol என்ற talent reality நிகழ்ச்சி உருவாக்கிய பாட்டுப் போட்டி மேடையும் நாட்டாமை நடுவர்களும் ஆரவார பார்வையாளர்களும் இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் வடிவமாகி விட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்த Freemantle Media என்கிற தயாரிப்பு நிறுவனம், நரசிம்மராவின் புதிய பொருளாதார கொள்கையின் உதவியோடும் தனியார் தொலைக்காட்சிகளின் விஸ்வரூப வளர்ச்சியைப் பயன்படுத்தியும் 2004-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Pop Idol என்கிற தங்கள் நிகழ்ச்சியின் இந்தியப் பிரதியான Indian Idolஐ தயாரித்து அரங்கேற்றியது. தனி நிறுவனமாக இல்லாமல் பல துணை தயாரிப்பு நிறுவனங்களின் உதவியோடு இதைச் செய்தது. தயாரிப்பு அவ்வப்போது கைமாறினாலும் Idol நிகழ்ச்சி வடிவத்தின் உரிமை அவர்களுடையதே. Indian Idol நிகழ்ச்சி வந்த அதே வழியில் India’s got talent நிகழ்ச்சியும் வந்தது. வட இந்திய ஊடகங்கள் உள்வாங்கிய வெளிநாட்டு நிகழ்ச்சி வடிவங்கள் விற்பனை மாறி ஒப்பனை மாறி சப்தஸ்வரங்கள், சூப்பர் சிங்கர், மானாட மயிலாட, தமிழகத்தின் சேம்பியன் என்று தமிழ் தொலைக்காட்சிகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..

நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது விக்கிப்பீடியா தரும் விவரங்கள் அல்ல. ஒரு தமிழ் நாவலின் கதைப்போக்கில் கிடைக்கக்கூடிய தகவல்கள்.
நாவல் என்பது, சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள், சம்பவங்களை உள்ளடக்கிய நீண்ட கதை வடிவம் என்கிற நீண்டகால தமிழ்நாவல் மரபு உடைந்துக் கொண்டிருப்பதன் முக்கியமான அடையாளமாக கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’யை பார்க்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு கதை கேட்பதை/வாசிப்பதை காட்டிலும், தகவல்களை பெறுவதில் ஆர்வம் அதிகம். மெகாசீரியல்களுக்கு மவுசு குறைந்து ரியாலிட்டி ஷோ-க்கள் தொலைக்காட்சிகளில் பெருகிவருவதை இதன் நீட்சியாக பார்க்கலாம். தகவல்களை தெரிந்துக் கொள்வது என்பது வெறுமனே பரிட்சைக்கு படிப்பதாக இல்லாமல், பொழுதுபோக்கே அதுதான் எனக்கூடிய infotainment சூழல் தொடங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இந்த மாற்றம் இயல்பானதுதான்.

‘காட்சி ஊடகம் பற்றிய கதை விவாதம்’ என்று ‘மெய்நிகரி’, அதை வாசிக்கும் வாசகர்களுக்கு முன்வைக்கப்படுகிறது.

காட்சி ஊடகம் என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி துறை குறித்த சித்தரிப்பு தமிழ் நாவல்களில் மிகக்குறைவு. சமீபத்தில் விநாயக முருகன் எழுதி வெளிவந்திருக்கும் ‘சென்னைக்கு மிக அருகில்’ என்கிற நாவலில் ஒரு பகுதி காட்சி ஊடகத்தை பிரதானப்படுத்துகிறது. எனினும் அந்நாவலின் மையம் வேறு எனும்போது இப்பகுதி மிகக்குறைந்த அளவிலான வெளிப்பாட்டையே கொண்டிருக்கிறது.

விநாயக முருகன் நேரடியாக தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றியவர் அல்ல என்பதால் தான் கேள்விப்பட்ட, வாசித்த, யூகித்த விஷயங்களை புனைவாக்கி இருக்கிறார். ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் பின்னணி அரசியலை சாக்காக வைத்துக்கொண்டு அதில் சம்பந்தப்பட்ட பாத்திரங்களை நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். கூடுதலாக சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட நித்யானந்தா வீடியோ விவகாரத்தை தன்னுடைய புனைவின் சட்டகங்களுக்குள் நுழைக்க முயன்றிருக்கிறார். அந்த வீடியோ ஏன் வெளிவந்திருக்கலாம் என்கிற தன்னுடைய யூகத்தை நாவலின் களத்துக்கு ஏற்புடையதாக மாற்ற முயன்றிருக்கிறார்.
‘மெய்நிகரி’ முற்றிலும் வேறான களத்தில் இயங்குகிறது. கபிலன் வைரமுத்துவுக்கே தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால், அவருக்கு இத்துறை குறித்த துல்லியமான சித்தரிப்புகளை உருவாக்க முடிகிறது. ‘இடியட் பாக்ஸ்’ எப்படி கோடிக்கணக்கானவர்களை இடியட்டுகள் ஆக்கிக் கொண்டிருக்கிறது என்கிற தேவரகசியத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். ஒருவகையில் சொந்த செலவில் சூனியம் என்றுகூட சொல்லலாம். சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து சினிமா எடுக்கப்படுவதை எம்.ஜி.ஆர் அந்த காலத்தில் கடுமையாக எதிர்த்த சம்பவங்கள் ஏனோ நினைவுக்கு வருகின்றன.

டெரன்ஸ் பால், மெய்நிகரியின் நாயகன். மாடப்புறா தொலைக்காட்சியில் எடிட்டராக பணியாற்றியவன். டயரி எழுதுவதை போல தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி பத்திரப்படுத்தும் பழக்கம் கொண்டவன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவன் எடுத்த புகைப்படங்கள், செல்போன் வீடியோக்களை எடிட் செய்து அடுக்குகிறான். இந்த படத்தின் பின்னணியாக தன்னுடைய voice over மூலம் வருணனை தருகிறான். டெரன்ஸ் பாலின் குரலாகவே ‘மெய்நிகரி’ வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாடப்புறா தொலைக்காட்சி ஒரு புதிய ரியாலிட்டி ஷோவை உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்கிறது. அதன் பொறுப்புகளின் ஒரு பகுதி டெரன்ஸிடம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பணியாளர்களை பயன்படுத்தாமல், இதற்கென்று ஒரு புதிய குழுவை டெரன்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வு நடத்தி ராகவன், பெனாசிர், மானசா, நிலாசுந்தரம் ஆகியோரை தேர்ந்தெடுத்து தனக்கான குழுவை உருவாக்குகிறான்.

இந்த குழு புதிய ஷோவுக்கான ஐடியாக்களை உருவாக்குவதில் தொடங்கி, அது தொடர்பான நிர்வாகத்தின் சம்பிரதாயங்கள் முடிந்து, நிகழ்ச்சியை வடிவமைப்பது, பின்னணி பணிகள், படப்பிடிப்பு, எடிட்டிங் என்று ஒரு ரியாலிட்டி ஷோ எப்படி உருவாகிறது என்பதன் முழுமையான செய்முறையே மெய்நிகரி நாவல்.

இதற்கிடையே டெரன்ஸுக்கு, அந்த குழுவில் இடம்பெற்றிருக்கும் பெனாசிர் மீது ஏற்படும் காதல். ராகவனுக்கும், டெரன்ஸுக்கும் நடக்கும் சண்டை. குழுவிலேயே உள்கை ஒன்று செய்யும் துரோகம். பொதுமக்கள் அரசல் புரசலாக கேள்விப்பட்டு பேசிக்கொள்ளும் தொலைக்காட்சித் துறை பாலியல் சுரண்டல்கள். நிறுவன உரிமையாளர்களுக்கு இடையேயான ஈகோ மோதல். அல்லக்கைகளின் ஆட்டம் என்று நாவலின் ஒவ்வொரு பக்கமும் கதையின் போக்கில் தகவல்களை அள்ளித் தெளித்துக்கொண்டே போகிறது.

சர்வதேச அளவிலேயே படைப்பாளிகளுக்கும், மார்க்கெட்டிங் ஆட்களுக்குமான மோதல்தான் இன்றைய உலகின் அறிவிக்கப்படாத மூன்றாம் உலகப்போர். எல்லா துறைகளிலும் கிரியேட்டிவ்வாக சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கும், கூவி கூவி சந்தையில் விற்பவர்களுக்கும் நடக்கும் சண்டை மீடியாவில் சற்றே அதிகம்.

நிகழ்ச்சியின் தலையெழுத்தை மட்டுமின்றி, அதை உருவாக்கிய கிரியேட்டர்களின் விதியையும் இன்று மார்க்கெட்டிங் தயவுதாட்சணியமின்றி தீர்மானிக்கும் போக்கினை தகுந்த சம்பவங்களின் துணையோடு மிக எளிமையாக முன்வைக்கிறார் கபிலன். Programs are effective support systems for the sponsor economy என்பதுதான் இன்று தொலைக்காட்சிகளை ஆளக்கூடிய கருத்தாக்கம் என்றால் படைப்பாளியின் இடம் இங்கே எதுவென்று நாமே புரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

‘டி.ஆர்.பி’ என்கிற சொல் அதன் அர்த்தம் புரிந்தோ, புரியாமலேயோ இன்று அனைவராலும் உச்சரிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இதன் தொடர்பிலான TAM குறித்த விளக்கமும் மிக விரிவாக இந்நாவலில் வாசிக்க கிடைக்கிறது.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று கணக்கிடுவதற்கு தூர்தர்ஷன் ஆரம்பத்தில் ஏற்படுத்திய அமைப்பே DART – Doordarshan Audience Research Team. முப்பத்தி மூன்று நகரங்கள் மட்டுமே அதன் இலக்கு. தொழில்நுட்பம் வளராத அந்த காலக்கட்டத்தில் மனிதர்களை மனிதர்களே சந்தித்து நேரடியாக பேசி ஒரு கணக்கீடு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1994ல் Indian National Television Audience Measurement என்கிற INTAM, 1997ஆம் ஆண்டு A.C.Nielsen துணையோடு உருவான TAM – என இரண்டு அமைப்புகள் TAM என்கிற பெயரிலேயே ஒருங்கிணைந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் தனிபெரும் தனியார் நிறுவனங்களாக வளர்ந்தது. இவர்கள் கணக்கீட்டுக்கு people meter என்கிற கருவியை பயன்படுத்தியே ஒரு நிகழ்ச்சியின் வெற்றி, தோல்வியை கணக்கெடுக்கிறார்கள். இவர்கள் அறிவிக்கும் முடிவை நம்பிதான் இந்தியாவில் தொலைக்காட்சி உலகமே இயங்குகிறது. தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தருபவர்களும் இவர்களது கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல்லாயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறார்கள். இது குறித்த முழுமையான வரலாற்றை இரண்டே பக்கங்களில் கதாபாத்திரங்கள் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளும் வசனங்களில் வாசகர்களுக்கு புரியவைக்கிறார் கபிலன்.

நாவலின் கடைசி ஒன்றரை பக்கம் பக்கா மங்காத்தா – இந்த ஒருவரி விமர்சனத்துக்கு அர்த்தம் புரியவேண்டுமானால் நீங்கள் நாவலை முழுக்க வாசித்துதான் ஆகவேண்டும்.
டிவி என்கிற துறை இன்று கனவுத்துறையாக மாறிக் கொண்டிருக்கிறது. வெறுமனே டிவி பார்த்து டிவியில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் நம் இளைஞர்கள். எப்படியோ அடித்து பிடித்து வேலைக்கு சேர்ந்தபிறகுதான் நினைத்த மாதிரியாக இல்லையே என்று நொந்துப் போகிறார்கள். அம்மாதிரி இளைஞர்களுக்கு ஒரு டிவி நிறுவனம் எப்படி செயல்படும் என்று பொறுமையாக தம்மும், டீயும் சாப்பிட்டபடியே கதையாக சொல்கிறார் கபிலன்.

இந்த நாவலுக்கு என்று எந்தவிதமான முஸ்தீபுகளும் செய்துக் கொள்ளாமல், நடையைப் பற்றியெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் freakyயான தமிழையே பயன்படுத்துகிறார்.
தமிழிலும் சேத்தன் பகத்துகள் சாத்தியமே என்கிற நம்பிக்கை ஒளிக்கீற்றை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘மெய்நிகரி’ அளிக்கிறது.



நூல் : மெய்நிகரி
எழுதியவர் : கபிலன் வைரமுத்து
பக்கங்கள் : 152
விலை : ரூ.125
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம், அம்பாள்’ஸ் பில்டிங்,
லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14
போன் : 044-42009603

குறிப்பு : இந்த நாவலுக்கென்றே ஒரு பிரத்யேக இணையத்தளத்தை கபிலன் உருவாக்கியிருக்கிறார். ஆர்வமிருப்பவர்கள் பார்க்கலாம் www.meinigari.com

(நன்றி : தமிழ் மின்னிதழ்)

1 ஜூன், 2015

காதல் + மழை + பட்டாம்பூச்சி = பிரேமம்!

The butterfly is mentally mental, so as love!

‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாதிப்பு நீடித்துக் கொண்டிருந்த 1996. நான் டீனேஜின் கடைசிக் கட்டத்தில் இருந்தபோது அண்ணனுக்கு திருமணம் ஆனது. பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் காதல் காதல் என்று கதறிக்கொண்டு சிறகடித்துக் கொண்டிருந்த பதினெட்டு வயசு.

கல்யாண மண்டபம் முழுக்க ஏதேனும் மாதுரிதீட்சித் தென்படுவாளா என்று – பர்சனாலிட்டிக்காக - கூலிங் க்ளாஸ் மாட்டிக்கொண்டு வெடவெடவென உடைத்தால் ஒடிந்துவிடுவேன் போலிருந்த உடல்வாகுடன் பைத்தியம் மாதிரி அலைந்துத் திரிந்தேன். அதற்குள்ளாகவே சில காதல்தோல்விகள் (!) ஏற்பட்டிருந்தாலும், அந்த சோகத்துக்கெல்லாம் தாடி வளர்க்க முயற்சித்து அது வளர்ந்துத் தொலைக்காத கூடுதல் சோகம் சேர்ந்துக் கொண்டதாலும், அந்த அவலத்தையெல்லாம் பீர்விட்டு மறந்திருந்ததாலும் அன்று கொஞ்சம் ப்ரெஷ்ஷாகவே இருந்ததாக ஞாபகம். லேசான ‘ஆண்ட்டி’மேனியா வேறு இருந்துத் தொலைத்தது.

மிகச்சரியாக அந்த திருமணம் நடந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் ஆனது. இடையில் அவ்வப்போது நமக்கு பழக்கப்பட்டு விட்ட சில லவ் ஃபெய்லியர்கள். ஒன்று ஊத்திக்கொண்டால், புதுசாக இன்னொன்று என்று சகஜமாகி விட்டது.

எப்படியோ காதல் என்கிற நெருப்பை அணைத்துவிட்டு கல்யாண சாகரத்தில் மூழ்கி ஓரிரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். வீட்டில் இல்லத்தரசி ஏதோ திருமண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அண்ணனுடைய கல்யாண டிவிடிதான். டொக்கு விழுந்த கன்னத்தோடு, அங்குமிங்கும் அலைபாய்ந்துக் கொண்டிருந்த கண்களோடு, லூசான ஷர்ட்டோடு லூசுமாதிரி பார்க்கவே சகிக்க முடியாத கோலத்திலிருந்த என்னை காட்டி வீட்டில் இருந்தவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சட்டென்று ஒரு இடத்தை வீட்டுக்காரம்மா pause செய்தார். பாவாடைச் சட்டை அணிந்துக் கொண்டு, இரட்டைச் சடையோடு பதினொன்று, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி freeze ஆனாள். “அது நான்தான். அந்த கல்யாணத்துக்கு நானும் வந்திருக்கேன்போல” என்று அவர் சொல்ல கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன் (யெஸ், என்னுடைய மனைவி, அண்ணிக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி. அண்ணன் எங்கே சிறைபட்டாரோ, அதே சிறைச்சாலையில்தான் நானும் இப்போது ஆயுள்கைதி. முன்பு நாங்கள் பங்காளி, இப்போது சகலையும் ஆகிவிட்டோம்).

என்னுடைய பதினெட்டு வயதில் நான் சைட் அடிக்க கூட consider செய்ய முடியாத வயதிலிருந்த சிறுமி இன்று எனக்கு மனைவி. ஒருவேளை அப்போது, “பாப்பா, அங்கிளை டிஸ்டர்ப் பண்ணாம அப்படி ஓரமா போயி விளையாடும்மா” என்றுகூட நான் அதட்டியிருக்கக்கூடும்.

காலம், கறாரான காமெடியன்.

இதே சூழலை ஒரு சினிமாவில் பார்க்கும்போது, படைப்பாளி என்பவன் எவ்வளவு நுட்பமாக வாழ்க்கையை வாசிக்கிறான் என்று ஆச்சரியம் அள்ளுகிறது.

அழுதுப் பிழிந்து பிரிவு சோகத்தை சக்கையாக்கிப் போட்ட சேரனின் ‘ஆட்டோகிராப்’ படத்தின் 2015 வடிவம்தான் மலையாளப்படமான ‘ப்ரேமம்’. மலையாளப் படம் பார்த்தேன் என்று சொல்லவே ஒரு காலத்தில் மஜாவாக இருக்கும். இப்போது சொன்னால் ஜோல்னாப்பை அறிவுஜீவிக்கான இலக்கிய மதிப்பீடோடு கூடிய மரியாதை கிடைக்கிறது.

+2 படிக்கும்போது ஜோர்ஜுக்கு (ஜார்ஜ் அங்கே ஜோர்ஜ்தானே?) மேரியோடு முதல் காதல் பிறக்கிறது. அவளிடம் காதலை வெளிப்படுத்த செம காம்பெடிஷன். மேரியின் அப்பா ஹிட்லர் மாதிரி. வீட்டை சுத்தி சுத்தி வரும் பசங்களை துரத்தி துரத்தி விளாசுகிறார். அவருடைய கண்காணிப்பையும் மீறி ஒருமுறை மேரி, ஜோர்ஜிடம் தன் காதலை தெரிவிக்கிறாள். கவனிக்கவும். ‘காதலை’ சொல்கிறாள். காதலன் இவன் அல்ல.

அடுத்து காலேஜ் காதல். எழவு, மாணவிகளை விட்டு விட்டு லெக்சரர் மீது காதல் வந்து தொலைக்கிறது. மலர் என்கிற அந்த விரிவுரையாளர் தமிழ்ப்பெண். எனவே கனவில் ஒரு தமிழ் டூயட்டும் உண்டு. மலருக்கு ஜோர்ஜை பிடிக்கும். அது காதலா அல்லது சும்மா பிடிக்குமா என்று தெரிவதற்கு முன்பாகவே, ஒரு விபத்தின் காரணமாகவே மலருக்கு எல்லா நினைவுகளும் அழிந்துவிடுகிறது.

கதை, நிகழ்காலத்துக்கு வருகிறது. ஜோர்ஜ் இப்போது cafe நடத்தும் முதலாளி. கடந்தகால காதல்கள் கானல். செலினை பார்த்ததுமே டீனேஜ் ஜோர்ஜ் ஆகி ஜொள்ளுவிட ஆரம்பிக்கிறான். பழைய அனுபவங்களால் matured ஆகிவிட்டவன், நாகரிகமாக தன் காதலை வெளிப்படுத்த நினைக்கும்போதுதான் செலின் ஓர் அணுகுண்டை போடுகிறாள். ‘வர்ற சண்டே எனக்கு என்கேஜ்மெண்ட்’.

ஜோர்ஜுக்கும் அப்படி இப்படி எப்படியோ கல்யாணம் ஆகிறது. யாரை செய்துக் கொண்டான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

சேரன் மாதிரியே ஃபீலிங்ஸோடு நிவின்பாலி, ரசிகர்களின் இதயத்தை கீறிப் பார்த்திருக்கலாம். ஆனால், இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி மாதிரி நொடிக்கு நொடி வெடித்து சிரிக்க வைக்கிறார். கரைபுரண்டோடும் காமெடிதான் ‘ப்ரேமம்’ ஸ்பெஷல். ஆட்டோகிராப்பை காமெடியாக எடுத்தால் என்ன என்று யோசித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். தமிழ்ப்படங்களின் தரை டிக்கெட்டு ரசிகர் போலிருக்கிறது. ‘குணா’ படம் நெடுக வருகிறது. சக்கைப்போடு போட்ட பழைய மோகன்லால் படங்களுங்கு ஆங்காங்கே tribute (‘மாஸ்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’ வருவது மாதிரி) செய்யப்படுவது புத்திசாலித்தனமான யோசனை.

ஒரு காட்சி.

முந்தைய நாள் மேரியை சைட் அடிக்கப் போய், அவளது அப்பனிடம் அப்பு வாங்கி கன்னம் வீங்கிப் போய் டீக்கடையில் சோகமாக அமர்ந்திருக்கிறான் பையன் ஒருவன்.

டீக்கடை மாஸ்டர் கேட்கிறார். “கன்னத்தில் என்ன காயம்?”

“கொசு கடிச்சிடிச்சி!”

“கொசு கடிச்சா, இவ்ளோ வீங்குமா?”

“கடிச்ச கொசுவை அடிச்சதாலேதான் இப்படி ஆயிடிச்சி”

படம் முழுக்கவே இப்படிதான். ‘கடி’ ‘கடி’யென்று எஸ்.வி.சேகர், கிரேஸி மோகனையெல்லாம் பீட் செய்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஹீரோ கமல்ஹாசனுக்கு என்றெல்லாம் ஐந்து நிமிடத்துக்கு தொடர்ச்சியாக தேங்க்ஸ் கார்ட் போடுவதிலிருந்தே தொடங்கிவிடுகிறது அவரது அதகளம்.

மூன்று ஹீரோயின்களில் மலர் டீச்சர்தான் டாப். சரோஜாதேவி மாதிரி கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். சில காட்சிகளில் முகப்பருவால் கன்னிப்போய் சிவந்திருக்கும் அவரது கன்னங்கள் அத்தனை அழகு. திடீரென்று ஜீன்ஸும், டீஷர்ட்டுமாக குத்தாட்டம் போடும்போது ஜோர்ஜ் மட்டுமல்ல, படம் பார்க்கும் அத்தனை பேருமே அவரை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

நிவின்பாலியை பற்றி சொல்லவே வேண்டாம். சாதாரணமாகவே கலக்கி விடுவார். செமத்தியான கேரக்டர் கிடைத்தால் காட்டு, காட்டுவென்று காட்டுகிறார். அதுவும் வேட்டியை அருவாள் வீசுவது மாதிரி ஷார்ப்பாக தூக்கிக் கொண்டு மிதப்பாக நடப்பது மரண மாஸ்.

ஒவ்வொரு காதலின் போதும் மழையும், மழைக்குப் பின்னான பசுமையில் தேன் சேகரிக்கும் வண்ணத்துப் பூச்சிகளுமாய் காட்சிகள் கிறங்கடிக்கின்றன. மப்பும் மந்தாரமுமான கடவுளின் தேசத்து குளிர் அப்படியே படம் பார்க்கிறவனுக்கு ஊடுருவுவது மாதிரி பளிச் கேமிரா.

இதே படம் தமிழில் வந்திருந்தால், ‘மசாலா குப்பை’ என்று விமர்சிக்கக்கூடிய கொம்பு முளைத்த நம்மூர் விமர்சகர்கள், மலையாளத்தில் வந்திருப்பதால் மட்டுமே இதை கைப்பற்றி குறியீடுகளும், கோட்பாடுகளுமாக கொத்துக்கறி போட்டு தாலியறுத்து நம்மை கருத்து விதவையாக்குவதற்கு முன்பாக தயவுசெய்து பார்த்துவிடுங்கள். இல்லையேல், காதலுக்குள் பட்டாம்பூச்சியாய் பயணிக்கக்கூடிய அற்புதமான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள்.

‘The second film in the history of world cinema with nothing fresh’ என்று இந்தப் படத்தை அதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே விமர்சித்தாலும் (முதல் படம், அவரது முந்தைய படமான நேரமாம்), இரண்டே முக்கால் மணி நேரம் படம் பார்த்த எந்த அலுப்புமே இல்லாமல் தியேட்டரை விட்டு ப்ரெஷ்ஷாக வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஜோர்ஜையும், அவனது காதலிகளையும், கோமாளி வட்டத்து நண்பர்களையும் நீண்டகாலத்துக்கு மறக்கவே முடியாத அளவுக்கு கலக்கலான கமர்ஷியல் கல்ட் கிளாசிக்.

Premam : Must watch Malayalam movie!

23 மே, 2015

தற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா?

தயாரிப்பாளர் ஜூ.வி. தற்கொலை செய்துக் கொண்டார்.

ஏவி.எம். ஏன் அமைதியாக இருக்கிறது?

தொண்ணூறுகளின் பிரம்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் எங்கு போனார்?

அசைக்க முடியாத ஆள் என்று பெயரெடுத்த ஆஸ்கர் மூவிஸ் ரவிச்சந்திரனை வங்கிகள் ஏன் மிரட்டுகின்றன?

சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் ரத்தக்கண்ணீர் வடித்த கதையெல்லாம் தெரியுமா?

லஷ்மீ மூவி மேக்கர்ஸ் என்ன ஆயிற்று?

ரோஜா கம்பைன்ஸ் இப்போது எங்கிருக்கிறது?

சத்யஜோதி ஃபிலிம்ஸ் எங்கே?

பிரமிட் சாய்மீரா என்ன ஆனது?

செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்?

அழகன் தமிழ்மணி?

ராஜ் பிலிம்ஸ் ராமநாதன்? கோவைத்தம்பி?

‘வின்னர்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இப்போது துணை நடிகராக துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பது ஏன்?

யோசித்துக் கொண்டே போனால் இந்த பட்டியல் செஞ்சுரி அடிக்கும். வடபழனியில் மொட்டை போட்டுக்கொண்டு, வெயிலுக்கு தலையில் துண்டு போட்டுக் கொண்டு கோடம்பாக்கம் தெருக்களில் ஹவாய் செருப்பு தேய நடந்துக் கொண்டிருப்பவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? நம்ம தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்தான்.

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்காவது மிஞ்சும். சினிமா தொழிலில் அதுகூட கிடைக்காது. ஊரை சுற்றி வட்டிக்கு வாங்கிய கடன்தான் கழுத்தை நெறிக்கும்.

இன்னும் நாலு ஹிட் கூட கொடுக்காத இளம் ஹீரோ ஒருவர் பத்து கோடி சம்பளம் கேட்பதாக சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர் நடித்த கடைசி இரண்டு படங்கள் அட்டர் ஃப்ளாப். ஹீரோவின் கவுரவத்தை காக்க தியேட்டரில் ஆள் வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் வசூல் வரலாற்றில் மறக்க முடியாத படங்களான ‘முரட்டுக்காளை’யும், ‘சகலகலா வல்லவ’னும் ரிலீஸ் ஆனபிறகும் ரஜினியும், கமலும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று யாராவது ‘இந்த’ புதிய ஸ்டார்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

பொள்ளாச்சிக்கு அருகில் அந்த படத்தின் ஷூட்டிங். தயாரிப்பது பாரம்பரியமான நிறுவனம். நம் படத்தின் வேலைகள் எப்படி போய்க் கொண்டிருப்பது என்று பார்க்க சென்னையிலிருந்து தயாரிப்பாளர் கிளம்பிப் போகிறார்.

தயாரிப்பாளரை ஸ்பாட்டில் கண்டதுமே இயக்குநர் பதறிவிட்டாராம். “நீங்க எதுக்கு சார் இங்கே வந்தீங்க? ஹீரோ கோச்சிக்கப் போறாரு!” என்று விரட்ட ஆரம்பித்தாராம்.

“என்னங்க அநியாயமா இருக்கு. பணத்தை போட்டு படமெடுக்குறது நாங்க. ஒழுங்கா எடுக்கறீங்களான்னு பார்க்க வந்தா ஹீரோ எதுக்குங்க கோச்சிக்கணும்? அவங்க அப்பாவையே வெச்சி படமெடுத்தவங்க நாங்க தெரியுமில்லே” என்று தயாரிப்பாளர் அமைதியாக சொல்லியிருக்கிறார்.

கேரவனிலிருந்து ஹீரோ இறங்கினாராம். தயாரிப்பாளர் அவருக்கு வணக்கம் வைத்திருக்கிறார். தயாரிப்பாளரை பார்த்ததுமே ஹீரோவுக்கு கோபம் (!) வந்து, ‘பேக்கப்’ சொல்லிவிட்டு மீண்டும் கேரவனுக்குள் போய்விட்டாராம். தயாரிப்பாளர் முன்னிலையில் ஹீரோவுக்கு ஹீரோயினுடன் ‘கெமிஸ்ட்ரி’ ஒர்க்கவுட் ஆகாதாம்.

அதிர்ச்சியடைந்துப் போன தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டு, “இந்த தமிழ் சினிமா நாசமாதாண்டா போகப் போவுது” என்று மண்ணைத் தூற்றி அப்படியே சென்னைக்கு பஸ் ஏறினார். தியேட்டர்களுக்கு ஒழுங்காக லாபம் வரக்கூடிய படங்களாக வருடா வருடம் மூன்று, நான்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்த அந்நிறுவனம் அதன் பிறகு படத் தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது.

இப்படிதான் தமிழ் திரையுலகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருப்பதே தோராயமாக 1300 திரையரங்குகள்தான். என்னதான் அப்பாடக்கர் படமாக இருந்தாலும் 700 முதல் 800 தியேட்டர்களில் ரிலீஸாவதே பெரிய விஷயம். எந்திரனோ / தசாவதாரமோ பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்.

FMS ஏரியா என்று சொல்லக்கூடிய அயல்நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஐம்பது, அறுபது தியேட்டர்களில் ஒரு தமிழ் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தாலே அதிசயம். தெலுங்கில் மார்க்கெட் / இந்தியில் ஃபேமஸ் என்பதெல்லாம் டுபாக்கூர். ஷாருக்கான், அமீர்கானை எல்லாம் கூடதான் தமிழ்நாட்டில் எல்லாருக்கும் தெரியும். அவர்கள் படங்கள் இங்கே ரிலீஸ் ஆனால் கோடி கோடியாகவா வசூல் ஆகிறது?

ஒரு பக்கா கமர்ஷியல் ஹிட் என்பது இங்கே ரூ.50 கோடிதான் வசூலிக்கும். இது, முன் பின் மாறலாம். நகரங்களில் அதிகபட்சமாக (மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளில்) ரூ.120 டிக்கெட் கட்டணம், சாதாரண அரங்குகளில் 50, 60 ரூபாய். சிறுநகரங்களில், போஸ்டரிலேயே இரண்டாவது வாரத்திலிருந்து ரூ.20 கட்டணம் என்று கூவிக்கூவி தியேட்டருக்கு அழைக்க வேண்டியிருக்கிறது.

தயாரிப்பு, விளம்பரம், வினியோகம், தியேட்டர் வாடகை, க்யூப்/யூஎஃப்ஓ கட்டணம் என்றெல்லாம் இதர செலவுகள் போக மிஞ்சுவதுதான் ஒரு படம் கொடுக்கக்கூடிய லாபம்.

உண்மை இப்படியிருக்க, ரூ.40 - 50 கோடியில் ஒரு தமிழ் படத்தை எடுத்தால் எப்படி லாபம் கிடைக்கும்? அட, முதலாவது தேறுமா?

பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று நட்சத்திரங்களுக்கு கோடிகளை தூக்கி கொட்டிவிட்டு வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், கடைசியாக தனக்கு தானேவும் கூட நாமம் போட்டுக் கொள்கிறார்கள் நம் தயாரிப்பாளர்கள்.

இதுவரை சோலோவாக ஒரே ஒரு ஹிட்டு கூட கொடுக்காத ஒரு ஹீரோ கேட்கும் சம்பளம் நாலு கோடியாம். மூன்று வருடங்களாக ஒரு ஹீரோவுக்கு படமே இல்லை. ஆனால், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு சம்பளமாக பத்து விரல்களையும் விரித்துக் காட்டுகிறாராம்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு வெற்றிப்படத் தயாரிப்பாளர் அடுத்து நான்கு படங்களாவது தயாரிக்கக்கூடிய தெம்பில் இருப்பார். இன்றோ ஒரு தயாரிப்பாளர் தன் வாழ்நாளில் மூன்று படங்களை தயாரித்து விட்டாலே அது சாதனைதான்.

இயக்குநர்களின் ரப்ஸர் இன்னொரு கதை. டபுக்கு டபான் டான்ஸ் ஆடுவதற்கு எதற்கு நியூஸிலாந்து லொகேஷன்? சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைக்கு போயும் கூட ஹீரோயினின் மத்தியப் பிரதேசத்தை ஹீரோ முகரும் காட்சிகளைதானே படம் பிடித்து வருகிறார்கள். இதை ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ எடுத்துத் தொலைத்தால் என்ன?

ஒரு கதைக்கு எது தேவையோ, அதை தவிர்த்து அத்தனை செலவையும் தயாரிப்பாளர்களுக்கு வைக்கிறார்கள். கேட்ட சம்பளத்தைவிட கெஞ்சிப்பேசி கொஞ்சம் குறைத்து ஒப்புக்கொள்ள வைத்த தயாரிப்பாளரிடம் ‘ஒரு மலை முழுக்க சிகப்பு பெயிண்ட் அடிக்கணும்’ என்று சாங் ஷூட்டிங்குக்கு ஓர் இயக்குநர் டிமாண்ட் செய்தாராம். அவ்வளவு பெயிண்டுக்கு எங்கே போவது என்று மண்டைகாய்ந்து, கடைசியில் ஒரு பெயிண்ட் கம்பெனியிடம் பெரிய அமவுண்டுக்கு காண்ட்ராக்ட் பேசி (அந்த கம்பெனியில் இருந்து டைரக்டருக்கு கமிஷனாம்) தயாரிப்பாளர் மாதக்கணக்கில் அலைந்துத் திரிந்து, நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டிருக்கிறார். கடைசியில் சுற்றுச்சூழலை காரணம் காட்டி அனுமதி கிடைக்காததால் தயாரிப்பாளரின் கல்லாப்பெட்டிக்கு அவ்வளவு சேதாரமில்லை.

இதன் பிறகு நடந்ததுதான் பகீர். “நான் கேட்கிறதை எல்லாம் நீங்க செஞ்சிக் கொடுக்க முடியலை. பிராடக்ட் சுமாராதான் வரும்” என்று கைவிரித்து அழவைத்திருக்கிறார் இயக்குநர்.

இதையெல்லாம் கேட்க நல்லாவா இருக்கு?

பதினைந்து ரூபாய் திருட்டு டிவிடிக்கு மக்கள் அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர்களை இழுத்து மூடி திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுகளாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வருடா வருடம் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டி மோசமான தரத்தில் மொக்கைப் படங்களை எடுத்து வெளியிடுவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் தற்காலிகமாவது மூட்டை கட்டிவிட்டு தயாரிப்பாளர்களும், படைப்பாளிகளும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி சினிமாவை காப்பாற்ற வேண்டிய நேரமிது. இல்லாவிட்டால் கோவணமும் மிஞ்சாது.

பெரும் அழிவிலிருந்து ஊரையோ / உலகையோ சினிமாவில் ஒரு ஹீரோ காப்பாற்றுவான்.

இது கற்பனைதான். ஆனால், இதேதான் நிஜத்திலும் இப்போது நடந்தாக வேண்டும். அப்போதுதான் திரையுலகம் பிழைக்கும்.

யெஸ், ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லது தயாரிப்பில் பங்கேற்று லாபத்தையோ நஷ்டத்தையோ எது வந்தாலும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது ஒன்றும் புதிய யோசனை அல்ல. தெலுங்கு, இந்தியில் தொடங்கி ஹாலிவுட் வரை இப்படித்தான் நடக்கிறது. நம்புங்கள், இந்திக்கு அடுத்தபடி அதிக லாபக் கணக்கு காட்டும் தெலுங்கில், முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நால்வரின் சம்பளம் படம் ஒன்றுக்கு எவ்வளவு தெரியுமா? ரூ.14 கோடிக்குள்தான்.

தமிழிலும் இந்த நடைமுறை வந்தால்தான் இண்டஸ்டிரி பிழைக்கும்.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)

18 மே, 2015

அம்மா ரசிகர் மன்றம்!

தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தபோது அவருக்கு ரசிகர் மன்றம் இருந்ததோ என்னமோ.

அந்த குறை நீங்க இப்போது பத்திரிகையாளர்கள் அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. ‘பொழைப்பு’ காரணமாக ஐடி கார்டு இல்லாமல், விசிட்டிங் கார்டு மட்டும் வைத்திருப்பவர்கள் செய்வதை புரிந்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்கள்?

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துக்கொண்டு கல்லடிப்பது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கிறது. எனினும், எவ்வளவு நாளைக்குதான் ‘நடுநிலை’ நாயகர்களை சகித்துக்கொண்டிருக்க முடியும். தங்களுடைய சார்பை வெளிப்படையாக முன்வைத்துவிட்டு எழுதும் பத்திரிகையாளர்கள் ‘அவன் திமுகவாச்சே?’, ‘அவன் அதிமுகவாச்சே?’, ‘அவன் கம்யூனிஸ்ட் ஆச்சே?’, ‘அவன் ஆர்.எஸ்.எஸ் ஆச்சே?’ என்று ஆட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ‘நடுநிலை’ போர்வை உடுத்தியவர்களை ஒப்பீனியன் மேக்கர்களாக ஒரு சிலராவது நம்புகிறார்கள்.

மிக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மே 11 அன்று காலையில் ‘ஜெ. விடுதலை’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டதில் தொடங்கி, அடுத்தடுத்து குமாரசாமியின் தீர்ப்பை நியாயப்படுத்தும் சில கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தார். நீதியரசரின் உலகப் புகழ்பெற்ற ‘கணக்கு மிஸ்டேக்’ வெளிவரும் வரை இது தொடர்ந்துக் கொண்டிருந்தது. ஒரு பத்திரிகையாளர் மிக முக்கியமான தீர்ப்பு வரும்போது அது தொடர்பான பதிவுகளையும், தன்னுடைய சொந்த கருத்துகளையும் பதிவது இயல்பானதுதான்.

ஆனால்-

ஆர்வம் தாங்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று அவர் என்ன ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் என்று தேடிப்பார்த்தேன். மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை விமர்சனம் செய்த ஒருவரின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்ததோடு கடமையை முடித்துக் கொண்டுவிட்டார். அன்றைய அவருடைய மற்ற இரண்டு ஸ்டேட்டஸ்களில் ஒன்று கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறது. சி.பி.எஸ்.ஈ பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் தமிழை வாசிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பற்றி மற்றொரு ஸ்டேட்டஸ். அவ்வளவுதான்.

இன்னொரு மூத்த பத்திரிகையாளர். பெண் பத்திரிகையாளர் ஒருவர் குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிப்பவர்களை நோக்கி பார் கவுன்சில் மிரட்டியிருந்த செய்தியை அப்படியே எடுத்துப் போட்டிருந்தார். அங்கே கமெண்டில் போய் நம் மூத்தப் பத்திரிகையாளர் கேட்கிறார். “ஸ்டாலினின் ஊழல் கதையை உங்கள் பத்திரிகையில் போட்டதின் விளைவா? அப்படியே முரசொலி எழுத்தாளர் ஆகிவிட்டீர்களா?”. அவ்வளவுதான். பிரச்சினையை பேசுவதைவிட்டு பெண் பத்திரிகையாளர் தன் நடுநிலைமையை அந்த மூத்தப் பத்திரிகையாளருக்கு நிரூபிக்க தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று.

இன்னொரு இளம் பத்திரிகையாளர், நண்பர்தான். தீர்ப்பு வந்த குஷியில் வரிசையாக அம்மா புகழ் மேளா. கமெண்டில் போய் சண்டை போட்டு நீதி கேட்க ஆரம்பித்தேன். மறுநாள் கணக்கு குளறுபடி விவகாரம் வந்தபிறகுதான் அவர் மீண்டும் நடுநிலை பாதைக்கு வரமுடிந்தது.

ஒரு மாதமிருமுறை பத்திரிகையின் போஸ்டர் வாசகம் “தீயசக்திகளை வென்ற தெய்வசக்தி”.

ஒரு வாரப்பத்திரிகையின் தலையங்கம் பார்த்தேன். அதிமுக தலைமைக்கழகத்தின் அறிக்கை மாதிரி இருக்கிறது.

‘ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல. மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஒரு நாளிதழ் கட்டுரை ஜனநாயகம் பேசுகிறது. பர்சனலாக, இது எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்றாலும்கூட அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் எல்லாம் எதற்கு இருக்கிறது. கோழி திருடியவனையும், பிக்பாக்கெட் அடித்தவனையும் விசாரிக்க மட்டும்தானா என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது.

அந்த நாளிதழ் கட்டுரையின் தொடக்கம் விசித்திரமானது. “எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று.” திருச்செந்தூரில் அம்மாவுக்காக ராஜினாமா செய்வேன் என்று அனிதாராதாகிருஷ்ணனே கூட ‘பூடகமாக’தான் சொன்னார். இந்த கட்டுரை அவ்வளவு வெளிப்படையானது.

அதே கட்டுரை ஸ்ரீமான் நரேந்திர மோதி அவர்கள் பதவியேற்ற ஓராண்டிலேயே இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக ‘தகுதி’ பெற்றிருக்கிறது என்று இன்னொரு மாங்காயும் அடிக்கிறது. தமிழக சட்டமன்றம் அத்தகைய மாண்பினை பெறாமல் போனதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது. கட்டுரையின் நடுநிலை தவறிவிடக்கூடாது என்று முதல்வரும், அரசாங்கமும், ஆளுங்கட்சியும் உறைநிலையில் இருக்கிறார்கள் என்று தீர்க்கமாக விமர்சிக்கப்படுகிறது. நன்கு கவனிக்கவும். புரட்சித்தலைவி, எதிர்க்கட்சிகளின் பொய்வழக்கால் இதெல்லாம் முடங்கிப் போயிருக்கிறது. அவர் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்பதை நாம் between the linesல் தான் வாசித்தாக வேண்டும். ஏனெனில் கட்டுரையாளர் ஏற்கனவே ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து இறங்கி விட்டதால்தான் (அவராகவே இறங்கினார் என்பதை போன்ற தொனியில்) எல்லாம் முடங்கிவிட்டது என்று தெளிவாகவே எழுதுகிறார்.

சட்டமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகளுக்கு போதிக்கும் அந்த கட்டுரையாளர், சபை உறுப்பினர்களின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் 110 விதியின் கீழ் 110 அறிவிப்புகளையாவது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சமர்ப்பித்திருப்பார் என்பதை அறிவாரா? மாண்புமிகு சபாநாயகர் தனபால் அவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நடத்துகிறார் என்பதை டிவியிலாவது பார்த்திருப்பாரா?

மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் கொடுத்திருக்கும் தீர்ப்பிலேயே கூட்டல் தப்பாக இருக்கிறது. அதைப்பற்றி எந்த கவலையுமில்லாத கட்டுரையாளர் எதிர்க்கட்சிகளை வர்ணிக்க கீழ்க்கண்ட சில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

  • விஜயகாந்த் - செயல்படா எதிர்க்கட்சித் தலைவர் (முன்பு புரட்சித்தலைவி நரசிம்மராவை செயல்படா பிரதமர் என்று விமர்சித்தது நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)
  • திமுக – பெயருக்கு போராட்டம் நடத்தும் / போராட மறந்துவிட்ட கட்சி
  • காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள், பாஜக – அறிக்கை அரசியல்; பாவனை அரசியல்; உள்ளேன் ஐயா அரசியல்
  • ஜெயலலிதா விடுதலைக்குப் பின் மேல் முறையீடுக்காக கர்நாடகத்துக்கு ‘காவடி தூக்குவது’ அரசியல் அவலம்
  • ஜெயலலிதா இல்லாத இடத்தில் அரசியல் கட்சிகள் கம்பு சுற்ற ஆசைப்படுகின்றன
  • ஜெயலலிதா வழக்கையே அரசியல் கட்சிகள் கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது
- ஜெயலலிதா என்பதற்கு பதில் டாக்டர் புரட்சித்தலைவி என்று குறிப்பிடாதது ஒன்று மட்டும்தான் குறை. இதெல்லாம் நாஞ்சில் சம்பத் ஜெயாடிவியில் பேசியவை அல்ல. ஒரு ‘நடுநிலை’ நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்.

இப்படியாகதான் பெரும்பாலான பத்திரிகைகயாளர்கள் நமது எம்.ஜி.ஆர் நிருபர்களாகவும், ஜெயா டிவி செய்தியாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தோழர்களே, புரட்சித்தலைவி பேரவையில் சேரும் உரிமை நம்மில் ஒவ்வொருவருக்குமே உண்டு. ஆனால் அந்த பணிகளை அங்கு சேராமலேயே பசுத்தோல் போர்த்திக்கொண்டு மக்கள் மத்தியில் செய்வது அநியாயம். பாவம், மக்களை அரசியல்வாதிகளில் தொடங்கி ஆட்டோகாரர் ஏற்கனவே ஏமாற்றி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் நட்டநடு சென்டர் மீடியா பர்சனாலிட்டிகளும் சேரவேண்டுமா?

ஒரு பயணம்

திருவண்ணாமலையை யாராவது குன்று என்றால் எனக்கு கோபம் வந்துவிடும். உயரமாக இருக்கிறது. அது மலைதான் என்று ஆவேசமாக வாதிடுவேன். மலையை குன்று என்று சொல்வதால் என்ன பெரிய இழவு என்று நினைப்பவர்கள், பாலகுமாரனின் ’பழமுதிர் குன்றம்’ நாவலை வாசிக்கலாம். அல்லது அந்நாவலின் ஒரிஜினல் வெர்ஷனான ’The Englishman Who Went Up a Hill But Came Down a Mountain’ திரைப்படத்தைப் பார்க்கலாம். பாலகுமாரனின் நாவலில் வரும் மலை, திருவண்ணாமலைக்கு அருகில் இருப்பதாகதான் சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் திருவண்ணாமலை எனக்கு சொந்த ஊர் அல்ல. அந்த மாவட்டத்தில் இருக்கும் வந்தவாசியிலும் அதைச்சுற்றியிருக்கும் தாழம்பள்ளம், மருதாடு போன்ற கிராமங்களிலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான். திருவண்ணாமலை மீது ஏற்பட்டிருக்கும் இருக்கும் நிபந்தனையில்லா ஈர்ப்புக்கு என்ன காரணமென்று தெரியவில்லை. நிச்சயமாக பக்தி அல்ல.

எஸ்.ராமகிருஷ்ணனுக்காவும், வேடியப்பனுக்காகவும் நேற்று அங்கே செல்ல வேண்டியிருந்தது.

பைக்கில் 100 கி.மீ.க்கு மேல் லாங்ரைட் அடித்து நீண்ட காலமாகி விட்டது. கடைசியாக போனது ’தடா’வுக்கு. அதற்கு முன்னர் புதுச்சேரி. லாங் பைக் ரைட் என்பது காமம் மாதிரி. ஒருமுறை அறிமுகமாகி விட்டால் விடாது கருப்பு.

நான் முதன்முதலாக ஓட்டு போட்ட சட்டமன்றத் தேர்தல் 1996ல் தமிழகத்தில் இருகட்டமாக நடந்தது (பதினெட்டு வயதில் ஓட்டுரிமை வாங்கிய பர்ஸ்ட் செட்டு நான்). விழுப்புரத்துக்கு அந்த பக்கமாக முதல் கட்டத் தேர்தல். சில நாள் இடைவெளியில் சென்னையிலும், வடமாவட்டங்களிலும் தேர்தல். லைவ்வாக தேர்தலை பார்க்க சென்னையிலிருந்து மதுரைக்கு ஜாகிர் என்கிற நண்பர் ஒருவரோடு KB100ல் கிளம்பினேன். ஜி.எஸ்.டி. ரோடு, இப்போதைபோல நவீனமடைவதற்கு முன்பு பள்ளமும், மேடுமான சாலைகளில் கடினப் பயணம். மாலை 6 மணிக்கு மேலூர் போய் சேர்ந்தபோது உடம்பின் அத்தனை எலும்புகளும் தடதடத்துப் போயிருந்தது. அன்று பிடித்த லாங் டிரைவ் பேய் இன்றுவரை ஆட்டிக் கொண்டிருக்கிறது. பைக் பயணம் பிடித்துவிட்டவர்களுக்கு பஸ், ரயில்... ஏன் விமானப் பயணம் கூட போர் அடிக்கும்.

திருவண்ணாமலைக்கு பைக்கில் பலமுறை போயிருக்கிறேன். ஹரி அண்ணனோடுதான் அடிக்கடி. அவர் பவுர்ணமிதோறும் கிரிவலம் வருவார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு Adreno என்கிற அட்டகாசமான பைக்கில் போனதுதான் முதல் தடவை.

கடைசியாக அங்கு போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. வயசாகிவிட்டது. இருந்தாலும் இம்முறை பைக்தான் என்று ஆவேச முடிவுக்கு வந்தேன். அண்ணன் சிவராமனும் கூட வருவதாக சொன்னதால் உற்சாகப் பயணம்.

அக்னிநட்சத்திரம் என்கிறார்கள். தாம்பரம் தாண்டியதுமே மார்கழி மாதிரி பயங்கர பனி. ஐந்தரைக்கு தாம்பரம். எட்டு மணிக்கு திண்டிவனத்தில் டிஃபன். அறுபதுக்கு மேல் விரட்ட அச்சமாக இருந்தது. அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் எண்பதை எட்டினேன். ஒரு காலத்தில் யமஹா ஓட்டும்போது அசால்டாக நூறு. BOXER 150க்கு அவ்வளவு துப்பில்லை. நான் முன்பு வைத்திருந்த CD DAWN கூட மவுண்ட்ரோட்டிலேயே நூறை ஒருமுறை எட்டியிருக்கிறது (ஆனால், தரைக்கு அரை அடி மேலே ஓடியது போல சுத்தமாக பேலன்ஸ் இல்லை).

டிராவல்ஸ் கார்கள் நூறில் பறக்கின்றன என்றால் ஒயிட்போர்டு வண்டிகள் காஞ்சனாக்கள் மாதிரி நூற்றி இருபது. நம் வண்டியை கடக்கும்போது கிறுகிறுக்கிறது. சட்டென்று லெஃப்டிலோ, ரைட்டிலோ இண்டிகேட்டர் போட்டு நொடிகளில் ஓவர்டேக் அடிக்கிறான்கள். லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கடக்கையில், இந்த ஓவர்டேக் வெறியன்களிடம் சிக்கி சாண்ட்விச் ஆகிவிடுமோ என்று அடிவயிற்றிலிருந்து அச்சம் கிளம்புகிறது.

வழியெங்கும் காண்கையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் குறித்து திமுகவினர் உற்சாகமான மனநிலையில் இருப்பது பேனர்களிலும், சுவர் விளம்பரங்களிலும் தெரிகிறது. அம்மா விடுதலை ஆகிவிட்டாலும் அதிமுகவினரிடம் அவ்வளவு ஜரூர் இல்லை. சேர்த்துவைத்த கஜானாவை இழுத்து மூடியிருக்கிறார்கள். கூடுவாஞ்சேரி-நந்திவரம் அதிமுகவினர் மட்டும் சக்திக்கு மீறி செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வடமாவட்டங்களில் வலுவாக காலூன்றியிருந்த தேமுதிக, இப்போது இருப்பதற்கான சுவடுகளே இல்லை. பாமகவை மொத்தமாக காலி செய்திருப்பது மட்டுமே கேப்டனின் சாதனை. காங்கிரஸ், தமாக கட்சிகள் தமிழகத்தில் இருப்பதற்கான சான்றுகளை இந்த பயணத்தில் காணமுடியவில்லை. எல்லா ஊரிலுமே மார்க்சிஸ்டுகள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் கொஞ்சம் சரியாகி இருக்கிறது போல. அல்லது குளோபல் வார்மிங் வார்னிங் எல்லாம் புட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. வறண்டுபோன தரிசுகளில் பசுமை. மலைகளில் நிறைய மரங்கள் வளர்ந்திருக்கின்றன. கிணறு, ஏரியெல்லாம் வற்றிவிட்டாலும் ‘போர்’ போட்டு, எப்படியோ விவசாயம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். போர்வெல்லுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தால் பெரும் கொந்தளிப்பை அரசு எதிர்கொள்வது நிச்சயம்.

இந்த சுற்றுச்சூழல் அவதானிப்பில் சந்தேகம் இருப்பவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தில் நின்றுகொண்டு புனித தோமையர் மலையை பார்க்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கரும்பாறைகளோடு கரேல் என்றிருந்த குன்று, இன்று முழுக்க வனம் மாதிரி மரங்களை வளர்த்து பசேலென்று இருக்கிறது. வட மாவட்டம் முழுக்கவே இந்த பசுமைப்புரட்சி எப்படியோ ஏற்பட்டிருக்கிறது. போனமுறை காஞ்சிபுரம் போனபோது பார்த்தேன். மீண்டும் நிறைய விவசாயிகள் உருவாகியிருக்கிறார்கள். ஒருவேளை விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியிருக்க வேண்டும். நவீன முறைகள் மூலம் முன்பிருந்த தடைகளை வெல்ல விவசாயிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை சாலை பயங்கர பேஜார். ஒரு கி.மீ.க்கு ஒருமுறை பூகம்பம் வந்திருக்கிறது. பள்ளத்தில் விட்டு வண்டியை கீர் மாற்றி எடுக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டியும் ‘அம்மா வாழ்க, குமாரசாமி வாழ்க’ என்று கோஷம் எழுப்புகிறான். தட்டு தடுமாறி போய் சேரும்போது மணி பதினொன்று. பவா செல்லதுரையின் அட்டகாசமான பண்ணையில் அருமையான இளைப்பாறல்.

ரெண்டு மணி வாக்கில் வடக்கின் வானத்தை பார்த்தபோது பயமாக இருந்தது. பிரளயம் கொண்டுவரும் கருமேகங்கள். சென்னைக்கு திரும்புவது கஷ்டமாகி விடும் போல தெரிந்ததும், நிகழ்வை முடிக்காமல், சாப்பிடாமல்கூட அவசரமாக சொல்லிவிட்டு மூன்று மணிக்கு கிளம்பிவிட்டோம்.

அதே செஞ்சி ரோட்டில் பயணிப்பதை யோசித்தால் அய்யோவென்றிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவர் அவலூர் ரூட்டை சொல்லியிருந்தார். பெங்களூர் செல்லும் பைபாஸில் அவலூர் தாண்டி இடையில் இளைப்பாறுதலுக்காக முட்டைதோசை தள்ளினோம். சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது கடைக்காரர் நடுரோட்டில் பூசணிக்காய் உடைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நாம் சாப்பிட்டதால் கடைக்கு என்ன திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்று குழம்பினால், நேற்று அமாவாசையாம்.

சேத்பட்டை எட்டும்போதே அருகில் தெரிந்த கிளிமூக்கு மலை ஒன்றின் பாறை முகட்டை கருப்பான மேகங்கள் உரசிக் கொண்டிருந்தது. நெடுங்குணத்தை கடக்கும்போது பிசாசு மழை. ஓரங்கட்டி ஒரு மணி நேரம் நகத்தை கடித்துக் கொண்டிருந்தோம். சும்மா மொபைலை நோண்டி ஏதோ ஒரு அப்ளிகேஷனைப் புரட்டிக் கொண்டிருந்தால், நான் நெடுங்குணத்தில் வாட்டர் டேங்குக்கு கீழே கோழிக்குஞ்சு மாதிரி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது அமெரிக்காகாரனுக்கு சேட்டிலைட் மூலம் தெரிந்திருப்பதை உணர்ந்தேன். மொபைல் வைத்திருப்பவனுக்கு பிரைவஸியே கிடையாது. அங்கிருந்து மடிப்பாக்கம் 108 கி.மீ. என்று ஆறுதல் சொன்னான் (ஆக்சுவலி morethan 150 km. நம் அதிகாரிகள் யாரோ லஞ்சம் வாங்கிக்கொண்டு தப்பான தகவல்களை கூகிள் மேப்ஸுக்கு கொடுத்திருக்க வேண்டும்).

மழை கொஞ்சம் குறைந்து தூறத் தொடங்கியிருந்தது. மருவத்தூர் பைபாஸை எட்டினால்தான் நிம்மதி என்று பயணத்தைத் தொடர ஆரம்பித்தோம். கொடூரமான இருள். பயமுறுத்தும் மின்னல். நசநசவென தூறிக்கொண்டிருந்த மழை. பயங்கர குளிர். எதிரில் சரியான விஷன் இல்லை. எதிர்ப்படும் வண்டிகளின் விளக்கு வெளிச்சம் மழையில் கொடுத்த க்ளேர் வேறு கண்களை துன்புறுத்தியது. நாற்பது, ஐம்பது என்று மாட்டுவண்டி மாதிரி ஓட்டிக்கொண்டு வந்தவாசி வந்து சேர்ந்ததும்தான் உயிர் வந்தது. அங்கிருந்து மேல்மருவத்தூர் 30 கி.மீ.க்கு ஓரிரு கி.மீ. குறைவுதான். “ரோடு சூப்பர் சார்” என்று வந்தவாசிகாரர் வழி சொல்லி அனுப்பினார். ‘சூப்பர்’ என்றால் அவருடைய அகராதியில் என்ன அர்த்தமென்று தெரியவில்லை. செஞ்சி சாலை அளவுக்கு இல்லாவிட்டாலும் இதுவும் கொஞ்சம் மோசம்தான். இருட்டில் இரண்டு, மூன்று பள்ளங்களில் தொபுக்கடீர் என்று இறக்கி ஏற்றினாலும் பஜாஜ்காரனின் அட்டகாசமான சஸ்பென்ஷன் காப்பாற்றியது.

சோத்துப்பாக்கம் வழியாக மருவத்தூரை எட்டிய பிறகுதான் திராட்டலை கூட்டவே முடிந்தது. வழியெங்கும் ‘கும்பகோணம் டிகிரி காஃபி’ என்று போர்ட் வைத்திருக்கிறார்களே, குடிக்கலாம் என்று தேடினால் எல்லா பயலும் நாங்கள் வருவதையொட்டி கடையை மூடிவிட்டான் போலிருக்கிறது. நாற்பது கி.மீ.க்கு அந்தபுறமாக அப்படி மழை அடித்துக் கொண்டிருக்கிறது, இங்கே மழை என்பதற்கான சுவடுகளே இல்லை. முழுக்க நனைந்தும், முக்காடு போடாமல் வந்துகொண்டிருந்த எங்களை மெண்டல் மாதிரிதான் ஃபுல் மேக்கப்பில் இருந்த செவ்வாடை தொண்டர்கள் நினைத்திருக்கக்கூடும். சிவராமன் வேறு சிகப்புச்சட்டை போட்டிருந்தார்.

எட்டரை வாக்கில் ஜி.எஸ்.டி.யை அடைய முடிந்துவிட்டதால் ‘மேட் மேக்ஸ்’ மாதிரி வண்டியை விரட்ட முடிந்தது. பத்தரைக்கு வீட்டுக்கு வந்துவிட்டேன். மீட்டரை பார்த்தபோது 398 கி.மீ. பயணித்திருப்பது தெரிந்தது. எந்த சோர்வுமின்றி இப்போது அலுவலகத்துக்கு வர முடிந்திருக்கிறது. முதுகுவலி மாதிரி எந்த சைட் எஃபெக்டும் இல்லை. இன்னும் அவ்வளவு வயசாகவில்லை என்று உற்சாகமாகவும் இருக்கிறது. என்ஃபீல்ட் எடுத்ததுமே பர்ஸ்ட் ட்ரிப்பாக ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ கிளம்பிவிட வேண்டும்.