சினிமா படங்களின் டைட்டிலை உற்றுக் கவனிப்பவர் என்றால் உங்களுக்கு ஜி.பாலாஜி என்கிற பெயர் பரிச்சயமானதுதான். ‘டிஜிட்டல் சினிமா டிசைனர்’ என்கிற டைட்டிலுக்கு கீழே இவரது பெயர் இருக்கும்.
‘லிங்கா’, ‘ரஜினி முருகன்’, ‘கதகளி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நண்பேண்டா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழ்ப்படம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘வல்லினம்’, ‘ஹரிதாஸ்’, ‘தங்க மீன்கள்’, ‘பத்து எண்றதுக்குள்ளே’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என்று ஏராளமான படங்களுக்கு இவர்தான் டிஜிட்டல் சினிமா டிசைனர். இப்போது ‘இது நம்ம ஆளு’, ‘வெற்றிவேல்’, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ’பிரம்மோத்சவம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலகத்திற்கு நேர் பின்னால் இருக்கும் அவரது ஸ்டுடியோவில் சந்தித்தோம். தமிழ் சினிமாவின் டிஜிட்டல் வரலாற்றை விவரித்தார்.
“நான் ரொம்ப செண்டிமெண்டாதான் இந்த ரூமை வாடகைக்கு எடுத்து இங்கே உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த அறைக்கு இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. எண்பதுகளோட இறுதியிலே ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் நவோதயா ஸ்டுடியோஸ் இதே அறையில்தான் ஆசியாவின் முதல் டிஜிட்டல் ஏவிட் எடிட்டிங் ஸ்டுடியோவை அமைச்சாங்க.
டிவியில் ‘பைபிள் கதைகள்’னு தொடர் எடுக்குறதுக்காக இந்த டெக்னாலஜியை பல லட்ச ரூபாய் செலவில் கொண்டுவந்தாங்க. அப்போ அது சக்சஸ் ஆகலை. அந்த தொடரும் ஏதோ சில காரணங்களால் சில வாரங்களிலேயே நின்னுடிச்சி.
அப்போ கமல் சார் நவோதயாவில் ‘சாணக்யன்’ மலையாளப் பட்த்தில் நடிச்சிருந்தார். எப்பவுமே டெக்னாலஜியில் அப்டேட்டா இருக்கணும்னு நெனைக்கிற அவர், ஏவிட் எடிட்டிங் பற்றி ரொம்ப ஆர்வமா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டாரு. இந்திய சினிமாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ரியல் மீடியா நிறுவனத்தினரும் கமல் சாருக்கு நண்பர்கள்தான். அவங்களும் அடிக்கடி டிஜிட்டலில் என்னென்ன அப்டேட்ஸ்னு சார் கிட்டே சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்படிதான் முதன்முதலா ‘மகாநதி’ படத்தை கம்ப்ளீட்டா டிஜிட்டல் எடிட்டிங்கில் செஞ்சாங்க. ஃபிலிமில் ஷூட் பண்ணி அதை அப்படியே ஸ்கேன் பண்ணி கம்ப்யூட்டருக்கு கொண்டுவந்து - டெலிசினின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் - எடிட் பண்ணி மறுபடியும் பிலிமுக்கு டிரான்ஸ்பர் பண்ணனும்னு காதை சுத்தி மூக்கைத் தொடுற கடினமான வேலைதான். ஃபிலிம் புரொஜெக்ஷனில் டப்பிங் பேசியிருப்பாங்க. அது டிஜிட்டலில் sync ஆகாது. லிப் மூவ்மெண்ட் ஏடாகூடமா போகும். அதனாலேயே திரும்பத் திரும்ப நாலைஞ்சி முறையெல்லாம் அந்தப் படத்துக்கு டப்பிங் பேசிக்கிட்டே இருக்க வேண்டியிருந்தது.
‘என்னப்பா இது’ன்னு நிறைய பேர் சலிச்சிக்கிட்டாங்க. ‘நாம ஒரு புது டெக்னாலஜியை அறிமுகப்படுத்தறோம். அதோட நிறைகுறைகளை முதன்முதலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுறது நாமதான். அதனாலே சில சிரமங்கள் இருக்கதான் செய்யணும். அதுக்காக நம்ம கடமையிலிருந்து பின்வாங்கிட கூடாது’ன்னு கமல்சார்தான் சமாதானப்படுத்தினாராம். இந்தியாவில் கம்ப்யூட்டர் என்பதையே ரொம்ப பேர் கண்ணால கூட பார்த்திருந்திருக்க முடியாத சூழலில், இருபத்து மூணு வருஷம் முன்னாடி ஒரு தமிழ்ப் படம் முழுக்க டிஜிட்டல் எடிட்டிங்கில் உருவான கதை இதுதான்.
முதல்லே டிஜிட்டல் எடிட்டிங் - அதைத் தொடர்ந்து டிஜிட்டல் சவுண்டு (டால்பி, டிடிஎஸ் முதலியன) - விஷூவல் எஃபெக்ட்ஸ் & ஆப்டிகல்ஸ் - டிஜிட்டல் கலர் கரெக்ஷன் - இப்போ டிஜிட்டல் புரொடக்ஷன். சினிமா டிஜிட்டலில் கடந்து வந்திருக்கும் பாதையின் வரிசை இதுதான்...’’ என்கிறார் பாலாஜி.
இதுலே டிஜிட்டல் சினிமா டிசைனரோட வேலை என்ன?பிலிம் இருக்குறப்போ லேப் என்ன வேலை செஞ்சதோ அதுமாதிரி வேலைன்னு குத்துமதிப்பா புரிஞ்சுக்கங்க. முன்னாடியெல்லாம் ஷூட் பண்ணி, அதை லேபுக்கு கொண்டு போய் கழுவி, டப்பிங் சேர்த்து, ரீரெக்கார்டிங் பண்ணி, எடிட்டிங்குக்கு அனுப்பி, பிரிண்டு போட்டு... இதெல்லாம் ஃபிலிமில் நிறைய பேரு பண்ணிக்கிட்டு இருந்தாங்க இல்லையா?
இந்த வேலையை எல்லாம் கம்ப்யூட்டர் துணையோட நான் ஒருத்தன் மட்டுமே செய்யுறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்றன்றைக்கு ஷூட் பண்ணுற விஷூவல்களை டிஜிட்டலா எல்டிஓங்கிற டேப்பில் ரெக்கார்ட் பண்ணி பேக்கப் எடுத்து வெச்சுப்பேன்.
எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங், வீ.எஃப்.எக்ஸ்-னு எதுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படுற நேரத்துலே இந்த டேட்டாவை கொடுக்குறது. அப்பப்போ அதுலே அப்டேட் ஆகுற வேல்யூஸையும் சேர்த்து வெச்சுக்குறது. கடைசியா ஒரு படம் தியேட்டருக்கு போகிற நிலை வரைக்கும் என்னோட வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.
ஒட்டுமொத்தமா சொல்லணும்னா ஒரு பெரிய நிறுவனத்துக்கு பேக் (BACK) ஆபிஸில் இருந்து என்னவெல்லாம் செஞ்சுக் கொடுப்பாங்களோ, அதுமாதிரி சினிமாவுக்கு நான் பேக் ஆபிஸுன்னு சொல்லலாம். நான் ஒர்க் பண்ணுற படங்களுக்கு கலர் கரெக்ஷனும் நானே செஞ்சிக் கொடுத்துடறேன். சிம்பிளா சொல்லணும்னா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நாங்க ரொம்ப முக்கியம்.
இந்த மாதிரி டிஜிட்டல் பேக்கப் (Back Up) ஒரு சினிமாவுக்கு ரொம்ப முக்கியமா?ஆமாம். ஒரு தயாரிப்பாளர், தான் எடுத்த மொத்தப் படத்தையும் அவரோட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் எல்லா வேலையையும் முடிச்சி காப்பி பண்ணி வெச்சிருந்தாரு. போன டிசம்பருலே வெள்ளம் வந்தது இல்லையா? அந்த வெள்ளத்துலே அவருடைய வீடு மூழ்கி, கம்ப்யூட்டர் முழுக்க நனைஞ்சிடிச்சி. அந்த ஹார்ட் டிஸ்கை இப்போ எங்கிட்டே கொண்டுவந்து ஏதாவது பண்ணி படத்தை எடுக்க முடியுமான்னு கேட்குறார். இதுக்குதான் நாங்க வேணுங்கிறது. ஒவ்வொரு படத்தையும் நாலைஞ்சு காப்பி பேக்கப் எடுத்து வேற வேற லொக்கேஷனில் பாதுகாப்போம். எந்த சூழலிலும் படக்குழுவினரோட உழைப்பு வீணா விழலுக்கு இறைச்சா நீரா ஆகவே ஆகாது.
சர்வதேச அளவிலேயே ஒரு படம் எடுக்கப்படறப்போ அப்பப்போ முறையான பேக்கப் செஞ்சு வச்சுக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அப்போதான் இன்சூரன்ஸே பண்ண முடியும்.
இந்த ஃபீல்டுக்கு எப்படி வந்தீங்க?அம்மா, சிவாஜி ரசிகை. எப்பவும் சிவாஜி படங்களை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து பார்த்து, பார்த்து எனக்கு சினிமா மேலே ஆர்வம் வந்தது. ஆனா, சினிமாவில் என்னவா ஆகணும்னு ஐடியாவே இல்லை. தொண்ணூறுகளில் ‘ஜூராசிக் பார்க்’, ‘டைட்டானிக்’ மாதிரி படங்களை பார்த்துட்டு, அனிமேஷன் துறையில் வேலை பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். அனிமேஷன் கத்துக்கிட்டு வேலை தேடினேன்.
நண்பர் ஒருவர் மூலமா ‘சேது’ படத்தோட எடிட்டர் ரகுபாபு சாரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் கிட்டே அசிஸ்டெண்ட் எடிட்டரா சேர்ந்தேன். நான் வேலை பார்த்த முதல் படம் ‘கும்மாளம்’. நாலஞ்சி வருஷம் அவர்கிட்டே வேலை பார்த்துட்டு, ஏவிட் எடிட்டிங்குக்காக ஏவிஎம்மில் ஒரு ஸ்டுடியோ போட்டோம்.
ஏவிட் சாஃப்ட்வேர் விலையே 30 லட்சரூபாய் இருந்தது. அவங்க ஒரு லட்ச ரூபாய் விலையிலே ஒரு சாஃப்ட்வேர் கொண்டுவந்தாங்க. அதை இன்ஸ்டால் பண்ணிட்டு லேப்டாப் மூலமா ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே எடிட்டிங் பண்ணலாம்னு சான்ஸ் கேட்டு அலைஞ்சோம். அப்போலாம் ஃபிலிம் எடிட்டிங்குக்குதான் மவுசு இருந்தது. ஏவிட்டுன்னாலே இங்கே நிறைய பேருக்கு அலர்ஜி.
ஆனா, மலையாளப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏவிட் அல்வா மாதிரி. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சி படம் அவங்களுக்கு பண்ணிக் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவோட தேவைகள் கம்ப்யூட்டரை சார்ந்து அமைய ஆரம்பிச்சது. இத்துறையிலே கம்ப்யூட்டர் கத்துக்காதவங்க பல நூறு பேர் வேலை இழக்க ஆரம்பிச்சாங்க.
2004-05 காலக்கட்டத்தில் டிஜிட்டல் கேமிராவால் ஷூட் பண்ணுற கல்ச்சர் வந்தது. ரெட் கேமிராவோட வரவு, திடீர்னு நம்ம சினிமாவோட குவாலிட்டியை பல படிகள் முன்னாடி கொண்டுப் போச்சி. எடிட்டிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் ஜெட் வேகத்தில், கூடுதல் தரத்தில் உருவாக ஆரம்பிச்சிது.
2006ல் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ‘பேரழகன்’ படத்தை க்யூப் மூலமா டிஜிட்டல் புரொஜெக்டரில் காமிச்சாங்க. அதை பார்த்ததுமே இனிமே சினிமாவோட எதிர்காலம் டிஜிட்டலில்தான் இருக்குன்னு புரிஞ்சது.
சினிமாவுக்கு டிஜிட்டலா என்னென்ன வேலைகளை பார்க்க முடியுமோ, அதையெல்லாம் நாமதான் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். இப்போ நான் தனியா செய்யுற வேலைகளை பெரிய நிறுவனங்கள் (பெரும்பாலும் முன்னாள் லேப்கள்) செஞ்சுக் கொடுக்குது. ஆனா, தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பும் எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறதுன்னா இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதில் நானும் ஒருவன்.
இந்த டிஜிட்டல் புரொஜெக்ஷன் பத்தி கொஞ்சம் சொல்லுங்க..?ஒரு டிஜிட்டல் புரொஜெக்டரோடு, ஒரு கம்ப்யூட்டர் சர்வர் இணைந்திருக்கும். முன்னாடி மாதிரி ஃபிலிம் ஓட்டுற பிசினஸே கிடையாது. ஹார்ட் டிஸ்கில் காப்பி பண்ண படத்தை சர்வரில் அப்லோட் பண்ணிட்டா, அப்படியே ஓட்டலாம்.
க்யூப், யூஎஃப்ஓ, பிஎக்ஸ்டி, ஸ்கிராபிள், சோனின்னு நிறைய நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தொழிலில் இருக்காங்க. ஹாலிவுட்டின் தரம் என்பது 2கே டிஜிட்டல். ஆனா, நாம ரொம்ப நாளாவே 1கே சினிமாவில்தான் இருந்திருக்கோம். இதை டிஜிட்டல் சினிமான்னு சொல்லாம, ஈ-சினிமான்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்போ நாமளும் 2கே-வுக்கு வேகமா மாறிக்கிட்டிருக்கோம்.
க்யூப்பில் ஒரு படம் 200 ஜிபி அளவுக்கு இருக்கும். ஆனா, யூஎஃப்ஓ டெக்னாலஜியில் 20ஜிபி லெவலுக்குதான் இருக்கும். நிறைய பேர் சேட்டிலைட்டில் இருந்து நேரடி ஒளிபரப்புன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க.
அப்படியில்லை. சர்வரில்தான் இருந்துதான் புரொஜெக்டர் மூலமா ஸ்க்ரீனுக்கு சினிமா வருது. ரியல்மீடியா ஆளுங்களாம் நேரடியாவே தியேட்டருக்கு போய்தான் படத்தை சர்வரில் சேர்த்துட்டு வர்றாங்க. யூஎஃஓ பைல் கொஞ்சம் சிறுசுங்கிறதாலே, நெட்டிலேயே அனுப்ப முடியும்.
அப்போவெல்லாம் ‘பொட்டி வந்துடிச்சி’ன்னு ஃபிலிம் ரோல் தியேட்டருக்கு வர்றதையே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகறப்ப ஊர்வலமா கொண்டு வந்து கொண்டாடுவாங்க. இப்போ KDMனு சொல்லுவாங்க.. Key delivering message.. அதுதான் பொட்டியை ரீப்ளேஸ் பண்ணியிருக்கு.
சில KB அளவு மட்டுமே இருக்குற இந்த XML ஃபைல்தான் இன்று சினிமாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்குது. அந்த ஃபைலை ஓபன் பண்ணாதான் சர்வரில் encrypt செய்யப்பட்டு save ஆகியிருக்கிற படம், decrypt ஆகி புரொஜெக்டருக்கு வரும்.
ஆக்சுவலா, இது ரொம்ப ரொம்ப டெக்னிக்கலா எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டிய விஷயம். எல்லாருக்கும் புரியணுமேன்னு கொஞ்சம் மேலோட்டமா சொல்லுறேன்.
டிஜிட்டலுக்கு அடுத்து சினிமாவின் வடிவம் என்னவாக மாறும்?டெக்னாலஜியை ஜோஸியம் மாதிரியெல்லாம் கணிக்க முடியாது. உண்மையை சொல்லணும்னா சினிமா இப்போ தியேட்டரை விட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருக்கு. செல்போனில் கூட சினிமாவை டவுன்லோடு பண்ணி பார்த்துக்கிட்டிருக்காங்க. இதுக்கும் டிஜிட்டல்தான் காரணம்.
இன்னமும் சினிமா ஒரு கலை, கதை சொல்லும் ஊடகம்னுலாம் கதை விட்டுக்கிட்டு இருந்தோம்னா வேலைக்கு ஆகாது. நம்ம டிவி சீரியல்களிலேயே பக்கம் பக்கமா கதை சொல்லிக்கிட்டிருக்காங்க.
அதனால தியேட்டரில் பார்த்தாதான் வேலைக்கு ஆகும் என்கிற மாதிரி படம் எடுக்கணும். சொல்லுற கதைக்கு நல்ல டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கணும். படம் பார்க்குறவன் ‘அட’ போடணும். சினிமாங்கிறது தியேட்டருக்கான ஊடகம் என்கிற மதிப்பை நாம ஏற்படுத்தாமல் போனால், இந்த தொழிலுக்கான மவுசு குறைய ஆரம்பிச்சிடும். அப்புறம் வீக்கெண்டில் மட்டும்தான் தியேட்டரில் படம் ஓடும்.
நம்ம படைப்பாளிகளுக்கு நெருக்கடி கொடுக்குற சவாலான சூழல்தான். ஆனா, ஹாலிவுட்டில் இந்த சவாலை வெற்றிகரமா கடந்திருக்கிற மாதிரி நாமளும் கடப்போம் என்கிற நம்பிக்கை இருக்கு.
(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)