கர்ணனுக்குப் பிறகு அரங்கு நிறைந்து இரண்டாம் வாரமாக ஓடிக்கொண்டிருக்கும்
திருவிளையாடலை ஆரவாரமான ரசிகர் கூட்டத்தின் மத்தியில் ரசித்தோம். ஏ.பி.என் ஒரு
மாஸ்டர். வெவ்வேறு கதைக்களன்களை கொண்ட மூன்று கதைகளை எப்படி சுவாரஸ்யமாக ஒரே
கட்டாக கட்டி கமர்சியல் விளையாட்டு விளையாடுவது என்பதை படமாக எடுக்காமல் பாடமாக
எடுத்திருக்கிறார். சினிமா இயக்குபவர்களும், இயக்க விரும்புபவர்களும் தாம்
எடுக்கும் ஒவ்வொரு படத்துக்கும் முன்பாக ஒருமுறை திருவிளையாடலை தரிசித்து விடுவது
உசிதம்.
பாண்டிய மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஏற்பட்ட உலகத்துக்கு அத்தியாவசியமான,
மக்களுக்கு உபயோகப்படக்கூடிய ஒரு உருப்படியான சந்தேகம். இறைவனே களமிறங்கி, அந்த
சந்தேகத்தை போக்கும் முதல் கதை.
சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்கிற சர்ச்சை. இதனால் கோபமடைந்து தனது
துணைவியாரை சபித்து, அவர் மீனவப் பெண்ணாகப் பிறந்து, அவரை இறைவனே துரத்தி, துரத்தி
ஈவ்டீசிங் செய்து காதலித்து கைப்பிடிக்கும் பிழியப் பிழியக் காதல் ஜூஸ் வழியும்
இரண்டாவது கதை.
வரகுணப் பாண்டியனுக்கு உலகின் ஒப்பற்ற ஒரே பாடகரான ஹேமநாத பாகவதரின் சங்கீத
சவால். பாண்டிய தேசத்தின் மானத்தைக் காப்பாற்ற இறைவன் களமிறங்கி வெல்வது மூன்றாவது
கதை.
இந்த மூன்று கதையையும் உலகம் ஆளும் பரமேஸ்வரி தன் மைந்தன் பழம் நீ அப்பாவுக்கு
எடுத்துரைக்க வாகாக மாம்பழக்கதை ஒன்று துவக்கத்தில் கொஞ்சம், இறுதியில் மீதி.
திருவிளையாடல் மொத்தமே இவ்வளவுதான். ஈசாப் குட்டிக்கதைகளுக்கு இணையான எளிமையான
கதைகளை திரைப்படமாக்கி, ரசிகர்களுக்கு புது அனுபவமாக தருவதில் ஏ.பி.என்.
விளையாடியிருக்கும் சித்துவிளையாடல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பிரிட்ஜில்
வைத்த ஞானப்பழமாய் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறது. இயக்குனருக்கு இணையாக வியர்வை சிந்தி உழைப்பைக்
கொட்டிய கே.வி.மகாதேவன், காலத்தால் அழியா காவியப் பாடல்களை சிவனருளால் உருவாக்க
முடிந்தது.
‘பொதிகைமலை உச்சியிலே’ என்று தேவிகா அறிமுகமாகும் காட்சியிலேயே விசில்
பறக்கிறது. தேவிகா ஒரு சூப்பர் ஃபிகர் என்பதால், ஆர்ட் டைரக்டர் வண்ணங்களை
வாரியிறைத்து திரையை ரொப்புகிறார். தேவிகாவின் கணவரான முத்துராமன் என்கிற செண்பகப்
பாண்டியனுக்கு வந்த சந்தேகம் அனாவசியமானது. பொதுவாக படங்களில் முத்துராமன்
மனைவியைதான் சந்தேகப்படுவார். திருவிளையாடல் வித்தியாசமான படமென்பதால் மனைவியின்
கூந்தலை மட்டுமே சந்தேகப்படுகிறார். தேவிகாவை கண்டதுமே நமக்கே தெரிந்துவிடுகிறது,
அவரது கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டு என்று. இதற்காக ஆயிரம் பொற்காசுகள்
என்றெல்லாம் புலவர்களுக்கு போட்டி அறிவித்தது வீண் ஆடம்பரம். அந்த காலத்தில் மக்கள்
பணத்தை பாண்டிய மன்னர்கள் எப்படி உல்லாசங்களுக்கு வீணடித்திருக்கிறார்கள் என்கிற
அரசியலை நேரிடையாகவே துகிலுரித்துக் காட்டியிருக்கிறார் ஏ.பி.என். அவ்வாறு
அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையை ‘ஊழல்’ செய்து கையாடல் செய்ய இறைவனே களமிறங்கினார்
என்பது திருவிளையாடல் வெளிவரும் வரை நாமறியாத அதிர்ச்சித் தகவல். இந்த காலத்தில்
இம்மாதிரி முறைகேடு நடந்திருக்குமேயானால் ஆள்மாறாட்ட வழக்கில் மதுரை சொக்கனை உள்ளே
போட்டிருப்பார்கள். அப்பாவி தருமியும் செய்யாத குற்றத்துக்கு சிறை செல்ல
வேண்டியிருக்கும். விசாரணைக் கமிஷன் அமைத்து கைலாயத்தையே நொங்கெடுத்திருப்பார்கள்
நம்முடைய சட்டக் காவலர்கள்.
மாமனார் தட்சண் நடத்தும் யாகத்துக்கு மருமகன் ஈசனுக்கு அழைப்பில்லை.
கணவருக்காக நீதிகேட்டுச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார் தாட்சாயணி. என்
பேச்சை கேட்காமல் உன்னை யார் போகச்சொன்னது என்று கோபப்படுகிறார் ஈசன். இந்த காட்சி
முழுக்க ஆணாதிக்கத் தாண்டவம். கோபத்தில் சக்தியை நெற்றிக்கண் கொண்டு
எரித்துவிட்டு, ரொம்ப சுமாரான ஸ்டெப்களில் ருத்ரத்தாண்டவம் ஆடுகிறார் ஈசன்.
சாபவிமோசனத்துக்காக மீனவர் குலத்தில் கயற்கன்னியாக பிறக்கிறார் சக்தி. அங்கே வந்து
சக்தியை பலவந்தப்படுத்தி காதலிக்கத் தூண்டுகிறார் ஈசன். இடையில் மீனவர் பிரச்சினை.
அந்தக் காலத்திலிருந்தே கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரை திரும்புவதில்லை.
இப்போது சிங்களக் கடற்படை. அப்போது சுறா மீன். எக்காலத்துக்கும் பொருந்துகிற
காட்சி இது. என்ன இப்போது இந்திய கடற்படை மீனவர்களை காப்பாற்றும் கடமையில் இருந்து
தவறுகிறது. அப்போது ஈசனே கடலுக்குச் சென்று சுறாவைக் கொன்று, மீனவக்குலத்தைக்
காப்பாற்றி, மீனவர் தலைவரின் மகளான சக்தியை கைப்பிடிக்கிறார்.
இசையால் உலகத்தை வென்ற ஹேமநாத பாகவதர் மதுரைக்கு வருகிறார். அவருடைய இசை
வரகுணப் பாண்டியனின் அரசவையையே வெள்ளமாக மூழ்கடிக்கிறது. பாண்டியன் அளிக்கும்
பரிசை மறுதலிக்கும் பாகவதர், பதிலுக்கு மதுரையிலிருந்து ஒரு இசைவாணரை தன்னோடு
போட்டி போடச் சொல்லி ஆணவத்தால் கொக்கரிக்கிறார். அவ்வாறு யாரேனும் தன்னை வென்றால்
தன்னுடைய இசையை பாண்டியநாட்டுக்கு அடிமை என்று பட்டா போட்டுக் கொடுப்பதாகவும்
சொல்கிறார். தான் வென்றால் தன் இசைக்கு பாண்டிய நாடு அடிமை என்று கண்டிஷனும்
போடுகிறார். இந்த சவாலுக்கு நடுங்கி, அரசவை இசைவாணர்களுக்கு வயிறு கலக்குகிறது.
தாங்கள் யாரும் போட்டியிடமுடியாது என்று மன்னரிடம் மறுக்க, கடைசியாக கோயிலில் இறைவனைப்
பாடும் சுமார் இசைக்கலைஞரான பாணபத்திரர் என்கிற டி.ஆர்.மகாலிங்கத்துக்கு சான்ஸ்
கிடைக்கிறது. பாணபத்திரரோ மரணப் பயத்துடன் ஊரைவிட்டு ராவோடு ராவாக எஸ்கேப் ஆகலாமா
என்று யோசிக்கிறார். வழக்கம்போல பாணபத்திரருக்கு உதவ இறைவனே விறகுவெட்டியாய்
தோன்றி ஒரு குத்துப்பாட்டுக்கு டேன்ஸ் ஆடி, இறுதியாக கிராஃபிக்ஸ் கலக்கலில் ஒரு
சூப்பர் பாட்டு பாடி ஹேமநாத பாகவதரை ஊரைவிட்டு துரத்துகிறார். இந்த விவகாரத்திலும்
வாய்கூசாமல் ’பாணபத்திரரின் சிஷ்யன்’ என்று ஹேமநாத பாகவதரிடம் பொய்பேசி
தில்லுமுல்லு செய்திருக்கிறார் ஈசன்.
இந்தக் கதையை எல்லாம் இந்தப் பதிவை வாசித்துதான் நீங்கள் தெரிந்துகொள்ள
வேண்டும் என்பதில்லை. தமிழனாக பிறக்கும் ஒவ்வொருவருமே திருவிளையாடலை கடந்துதான்
வந்திருக்க வேண்டும். தமிழ் இருக்கும் வரை அழியா செவ்வியல்தன்மை கொண்ட
திரைக்காவியம் திருவிளையாடல். இப்படம் நன்றாக இருக்கிறது என்றோ அல்லது படத்தில்
நடிகர் திலகம் அசத்தியிருக்கிறார் என்றோ எழுதுவோமேயானால் அது திருப்பதி
பெருமாளுக்கே லட்டு கொடுக்க நினைக்கும் மூடத்தனத்துக்கு ஒப்பானது.
‘தெவிட்டாத தேன்’ என்று நல்ல பாடல்களை சொல்வதுண்டு. நிஜமாகவே இந்தப் பாராட்டு
திருவிளையாடல் பாடல்களுக்குப் பொருந்தும். திருவிளையாடலின் இசைத்தமிழ்
கே.வி.எம்.மின் அருஞ்சாதனை. ஒண்ணாம் நம்பர் பக்திப்படமான இந்தப் படத்திலும் கூட
‘நீலச்சேலை கட்டிக்கிட்ட சமுத்திரப் பொண்ணு’ மாதிரி விரகதாப பாடலையும், ‘பார்த்தா
பசுமரம்’ மாதிரி குத்துப்பாட்டையும் திணித்த இயக்குனர் ஏ.பி.என்.னின் வணிக சாமர்த்தியத்தை
எப்படி மெச்சுவதே என்றே தெரியவில்லை.
சில உறுத்தல்கள் இல்லாமல் இல்லை. மீனவர் போர்ஷனில் பேரன் பேத்தி எடுத்துவிட்ட
தோற்றத்தில் இருக்கும் நடிகர் திலகமும், நாட்டுப்புறப்பாட்டு குஷ்பு மாதிரியான
உடல்வாகில் இருக்கும் நடிகையர் திலகமும், ‘3’ படத்தின் தனுஷ்-ஸ்ருதி ரேஞ்சுக்கு
ரொமான்ஸ் செய்வதை சகித்துக்கொண்டு, ஜீரணித்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.
அதிலும் மீனவரான இறைவனின் ‘டபுக்கு டபான்’ நடையும், அதற்கு கே.வி.எம்.மின் காமெடி
மியூசிக்கும் பயங்கர பேஜாரு. படம் மொத்தமே இறைவனின் திருவிளையாடல் என்பதால்
ஆங்காங்கே டிராஃபிக் ஜாம் ஆகி மோதிக்கொள்ளும் லாஜிக்குகளை எல்லாம் நாம் கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை.
வசனங்கள் கூர் ஈட்டி. சாதாரணனாக உலகுக்கு வரும் இறைவன் மற்றவர்களிடம் ‘டபுள்
மீனிங்கில்’ (அதாவது ஆபாசநோக்கின்றி, பக்திநோக்கில்) பேசும் வார்த்தை விளையாட்டு
அபாரம். படத்தின் தொடக்கத்தில் அவ்வைக்கும், தமிழ்க்கடவுள் முருகனுக்கும் நடக்கும்
சொற்போர் பிரமாதம். படம் நெடுகவே விரவியிருக்கும் ‘பஞ்ச்’ டயலாக்குகளை என்னச்
சொல்லி பாராட்டுவது? “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”வுக்கு இணையான
பஞ்ச் டயலாக்கை இனியும் யாராவது எழுதமுடியுமா என்பது சந்தேகம்தான்.
ருத்ரத் தாண்டவத்தை சுமாராக ஆடும் நடிகர் திலகம், குத்துப்பாட்டில் பட்டையைக்
கிளப்பியிருக்கிறார். படம் நெடுக அவருக்கு ஏராளமான குளோசப். இன்று எந்த
நடிகருக்கும் இத்தனை குளோசப் வைக்கமுடியாது என்பதுதான் யதார்த்தம். செண்பகப்
பாண்டியன், தருமி, நக்கீரர், ஹேமநாதப் பாகவதர், பாணப்பத்திரர் என்று தமிழகம்
மறக்கவே முடியாத ஏராளமான கேரக்டர்கள். இந்தப் படம் ஒருவகையில் தமிழ்த் தொண்டு
என்றால் மிகையே இல்லை.
க்ளைமேக்ஸில் ஒன்றுக்கு ஐந்து நடிகர் திலகங்கள் ஒரே ஷாட்டில் (பாட்டும் நானே பாவமும்
நானே பாடலில்) ஆச்சரியப் படுத்துகிறார்கள். ஒரு நடிகர் திலகம் ஃபெர்பாமன்ஸ்
காட்டினாலே ஸ்க்ரீன் டார்டாராக கிழிந்துவிடும் என்கிற நிலையில், ஐந்து நடிகர்
திலங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அரங்கம் அடையும் ஆர்ப்பாட்ட உணர்வுகளை என்ன
வார்த்தைகளில் சொல்லி விளக்குவது? தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருக்கும்
திரையரங்குகள் அனைத்திலும் ‘திருவிளையாடல்’ வெளியாகியிருப்பதாக தெரிகிறது. நேராக
திரையரங்குக்கேச் சென்று கண்டு, ரசித்து, களித்து இறைவனின் திருவருள் பெற,
இப்பதிவை வாசித்த தமிழ்நெஞ்சங்களை வாழ்த்துகிறோம்.
------------------------------
பின்குறிப்பு : இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கலைவேந்தன் சிவாஜி
பக்தஜனசபாவைச் சேர்ந்த பக்தகோடிகளான அண்ணன் மாணா பாஸ்கர் போன்ற நடிகர்திலக
வெறியர்கள் ஆணவத்தில் காவடியெடுத்து ஆடுகிறார்கள். அவர்களது ஆணவத்துக்கு ஏற்ப
அவர்களது தலைவர் நடித்த ‘க்ளாசிக்’குகள் அடுத்தடுத்து வெளிவந்து தூள்
கிளப்புகின்றன.
மாறாக வாத்யார் ரசிகர்களோ சன்லைஃப், ஜெயா டிவி, முரசு டிவி மாதிரியான டிவிக்களில் தேமேவென்று தலைவர் பாட்டு பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். புரட்சித்தலைவரின் ஒரே வாரிசான புரட்சித்தலைவி நாட்டை ஆளும் நிலையிலும், எதிரிகள் அசுரபலம் பெற்று, நாமோ இவ்வாறான பரிதாப நிலையில் இருப்பது கேவலமாக இருக்கிறது. இந்த நிலை மாற புரட்சித்தலைவி தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும். தலைவருக்கும் நடிக்கத் தெரியும் என்று ஒன்றிரண்டு படங்களில் (படகோட்டி மாதிரி) நிரூபித்திருக்கிறார். அவற்றையெல்லாம் தூசுதட்டி திரையிட்டு, மீண்டும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பட்டையைக் கிளப்ப வகைசெய்ய வேணுமாய் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிடக்கோரி புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மாறாக வாத்யார் ரசிகர்களோ சன்லைஃப், ஜெயா டிவி, முரசு டிவி மாதிரியான டிவிக்களில் தேமேவென்று தலைவர் பாட்டு பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். புரட்சித்தலைவரின் ஒரே வாரிசான புரட்சித்தலைவி நாட்டை ஆளும் நிலையிலும், எதிரிகள் அசுரபலம் பெற்று, நாமோ இவ்வாறான பரிதாப நிலையில் இருப்பது கேவலமாக இருக்கிறது. இந்த நிலை மாற புரட்சித்தலைவி தலையிட்டு ஏதேனும் செய்யவேண்டும். தலைவருக்கும் நடிக்கத் தெரியும் என்று ஒன்றிரண்டு படங்களில் (படகோட்டி மாதிரி) நிரூபித்திருக்கிறார். அவற்றையெல்லாம் தூசுதட்டி திரையிட்டு, மீண்டும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பட்டையைக் கிளப்ப வகைசெய்ய வேணுமாய் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆணையிடக்கோரி புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.