27 நவம்பர், 2012

லைஃப் ஆஃப் பை

ஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்?

ஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.

இதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க முடியாவிட்டாலும் தலைதாழ்த்தி, சிரமேற்கொண்டு வாங்கிக் கொள்கிறோம். விமர்சனம் என்றதுமே காததூரம் ஓடுகிறோம். திரும்ப ஓடிவந்து விமர்சகர்களின் முகத்தில் நாலு குத்தும், குத்தினால்தான் தூக்கம் வருகிறது.

உள்ளம் என்பதே ஓர் உருவகம். கடவுள் மாதிரி. அறிவியல் பூர்வமாக இப்படி ஒன்று நம் உடலில் இருப்பதை நிரூபிக்க முடியாது. ஆனால் பகுத்தறிவாளர்களும் கூட உள்ளம் என்பதை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வது நகைமுரண் (இருவர் உள்ளம் – வசனம் : கலைஞர்). இல்லாத ஒன்றை அடக்கி, நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக வாழ்க்கை முழுக்க கொடூரமான போர் நடத்திக்கொண்டே இருந்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. உள்ளம் என்கிற உருவகத்துக்கு ஓர் உருவம் கொடுத்துப் பார்த்தால் என்ன? எலி, பூனை உருவங்கள் ஒத்து வருமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது. பார்க்க சப்பையாக இருப்பவர்கள் கூட அவர்களை, அவர்களே சூப்பர்மேனாகதான் கருதிக் கொள்கிறார்கள். எனவே புலியாக பொதுமைப்படுத்தி உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் தத்துவக் கருமாந்திரங்களை எல்லாம் சிந்திக்க அவகாசமின்றி, கடாசிப் போட்டுவிட்டாலும் லைஃப் ஆஃப் பை மிகச்சிறந்த திரைப்படம்தான். ஒரு புலியும், மனிதனும் மட்டும் இருநூற்றி இருபத்தியேழு நாட்கள் நடுக்கடலில் சிறிய படகில் உயிரை கையில் பிடித்து வாழ்கிறார்கள். survival of the fittest தோற்கிறது. இந்த சுவாரஸ்யமான ஒன்லைன் போதாதா?

தைவானில் பிறந்து ஹாலிவுட்டில் படமெடுப்பவராக இருந்தாலும் இந்தியக் களத்தில் இந்தியர்களைவிட சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதில் ஆங் லீ தனித்துத் தெரிகிறார். நாற்பதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி இப்படித்தான் இருந்திருக்கும் என்று ரெஃபரென்ஸ் பார்த்து சித்தரித்து விடலாம். ஆனால் மனிதர்களை அசலாக தோற்றத்திலும், செயலிலும் காட்டுவது ராட்சஸ வேலை. யாரும் எளிதில் நினைத்துப் பார்த்துவிட முடியாத சாதனைகளை அனாயசமாக செய்திருக்கிறார்கள் இப்படக்குழுவினர்.

மனிதர்களை விடுங்கள். விலங்குகளுக்கு வருவோம். இயக்குனர் நினைத்தமாதிரியாக நடிக்கும் விலங்குகள் சாத்தியமா என்ன? ஒரு காட்சியில் கூட அனிமேஷன் உருவம் என்கிற எண்ணம் வந்துவிடாதபடி படம் முழுக்க புலி உறுமுவதிலும், பாய்வதிலும், கம்பீரநடை நடப்பதிலுமாக தொழில்நுட்பத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

‘எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிக்கிட்டிருக்கு’ எனும் அரதப்பழசான பஞ்ச் டயலாக்கை அடிக்காத ஆளே இல்லை. படமும் அதைதான் சொல்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு புலி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது முழிக்கும்போது, ரிங்மாஸ்டராக மாறி அதை அடக்கிப்பழக வேண்டும். இல்லையேல் அப்புலி உங்களை கொன்றுவிடும். கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரி கொஞ்சம் பிசகினாலும் ‘பாபா’ மாதிரி பக்திப்படம் ஆகிவிடும் ஆபத்து இந்த கதைக்கு உண்டு. இந்த கதையும் கூட ஒரு ‘புலி’தான். ரிங்மாஸ்டரான இயக்குனர் அதை எப்படி தனக்கு வாகாக பழக்கியிருக்கிறார் என்பதை திரையில் பாருங்கள். நீங்களே அறியாத உங்கள் உள்ளத்தில் மறைந்துக் கிடக்கும் ரகசிய அறைகளின் ஆச்சரியக் கதவுகளை நிச்சயம் திறந்துவிடும். இப்படம் உங்களை விமர்சிக்கிறது. உங்களுக்கு கோபம் வந்துவிடக் கூடாதே என்கிற நல்லெண்ணத்தில் புலியை வைத்து கதை சொல்கிறது. யாருமே தவறவிடக்கூடாத படம் என்று மட்டும் பரிந்துரைக்கிறோம்.

இப்படம் மூலமாக ஆஸ்கர் ஜூரிகளிடம் அனாயசமாக தன்னுடைய விசிட்டிங் கார்டுகளை அள்ளித் தெளித்திருக்கிறார் ஆங் லீ.

தொடர்பில்லாத பதிவு :  துரத்துதலும், ஓட்டமும்!

23 நவம்பர், 2012

வீரபாண்டியார்


கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்”

கலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.

இந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். ஆனால் அதே நேரத்தில் தலைவரை எதற்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை. கலைஞரின் முரட்டு பக்தன். எழுபதுகளின் இறுதியில் அதிமுக திமுகவை அதிகமாக குற்றம் சாட்டியது பூலாவரி சுகுமாரன் கொலை சம்பவத்தில்தான். அதில் நேரடியாக தொடர்புடையவர் என்று வீரபாண்டியாரால் தலைமைக்கு தர்மசங்கடம். சொத்துப் பிரச்னை. பங்காளிகளுக்குள் பகை. அது கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திவிட்டதே என்று வீரபாண்டியாருக்கு மனவருத்தம். பூலாவரியில் இன்றுவரை வீரபாண்டியாரின் பங்காளிகள்தான் அவரது கண்களில் விரல்விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த ஊரான பூலாவரி கிராமம் தொடங்கி, வீரபாண்டி ஒன்றியம், சேலம் மாவட்டம் வரை இவரும், இவருடைய உறவுக்காரர்களும்தான் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆள்வது வழக்கம். இம்மாதிரியான தனிப்பட்ட நிரந்தர நெருக்கடியையும் தாண்டிதான் கட்சியை சேலம் மாவட்டத்தில் அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் ‘சேலம்’ என்கிற பெயரையே அம்மாவட்ட திமுகவினர் மறந்துவிட்டார்கள். கலைஞரின் வருகையின் போது “வீரபாண்டியாரின் மாவட்டத்துக்கு வரும் தலைவரே வருக” என்று பேனர் வைத்து அமர்க்களம் செய்வார்கள். 

வீரபாண்டியாரின் அரசியல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் சகஜம். ஐந்து ஆண்டுகள் உச்சியில் இருப்பார். ஐந்து ஆண்டுகள் மிகமோசமான பள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பார். சாகும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அவருக்கு விதிக்கப்பட்ட விதி. எப்படிப்பட்ட நெருக்கடியிலும் கட்சியையும், தலைவரையும் விட்டுக் கொடுத்ததில்லை என்பது அவரது வாழ்நாள் சாதனை. எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் வீரபாண்டியாருக்கு ஒரு சோதனை என்றால் கலைஞர் நொறுங்கி விடுவார். வீரபாண்டியாரின் மகனுடைய அகால மரணத்தின் போதும் சரி. அநியாய வழக்குகளால் சிறைக்கொடுமையை வீரபாண்டியார் சந்திக்க நேரும் போதும் சரி. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அவதிப்படும்போதும் சரி. கலைஞரின் கண்கள் உடனடியாக கலங்கி விடும். முரட்டுத் தொண்டன் மீதான தலைவரின் விவரிக்க முடியாத ஒரு வகை காதல் அது. அதனால்தான் என்னவோ கலைஞரின் மனச்சாட்சியான முரசொலி மாறன் மறைந்த அதே நவ.23லேயே அவருடைய பிரியத்துக்குரிய தம்பியான வீரபாண்டியாரும் மறைந்திருக்கிறார்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறையும் நேரம் இது.

21 நவம்பர், 2012

மரணத்தைக் கொண்டாடும் தேசம்!

ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. “மரணத்தண்டனை விதிக்கப்படுவது உலகம் முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும்”

நிறவெறி தேசங்கள் என்று கருதப்படும் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்திருக்கின்றன. தீர்மானத்தை முழுமூச்சாக எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடும், மரணத் தண்டனையை எதிர்த்த காந்தியை தேசப்பிதாவாக கொண்டாடும் நாடுமான இந்தியாவின் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் இன்னொரு ஜனநாயக நாடு அமெரிக்கா. அகிம்சையைப் போதித்த புத்தபகவானை வணங்கும் சீனா, ஜப்பான், வடகொரியா போன்ற நாடுகளும் எதிர்த்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் எதிர்த்து வாக்களித்திருப்பதாக தெரிகிறது.

ஏன் எதிர்த்தோம் என்பதற்கு இந்தியா விளக்கமும் கொடுத்திருக்கிறது. “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் சட்ட நடைமுறைகளை வகுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. இதில் குறுக்கிடுவது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும்” என்று இந்தியா தனது எதிர்ப்புக்கான நியாயத்தை பேசியிருக்கிறது. அவ்வப்போது அண்டை நாடுகளிடம் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆசியாவின் தாதா ‘இறையாண்மை’ குறித்துப் போதிப்பது கருப்பு நகைச்சுவைதான்.

“மரணத்தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்கிற ஒருவரி தீர்மானம் தவிர்த்து பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இத்தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் போன்ற வலியுறுத்தல்கள் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரை ‘மரணத் தண்டனை’ என்பது ஊடகங்களுக்கு தரும் ஃப்ளாஷ் நியூஸ். அரசோ, எதிர்க்கட்சிகளோ சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் மக்களை மடைதிருப்ப ‘மரணத்தண்டனை’ உதவிக் கொண்டிருக்கிறது. மாநில அளவில் கலைஞர் ஆட்சியாகட்டும், ஜெயலலிதா ஆட்சியாகட்டும். இவர்களுக்கு ‘என்கவுண்டர்’ எப்படி உதவுகிறதோ அதுபோல மத்திய ஆட்சியாளர்களுக்கு மரணத்தண்டனை. மனித உரிமை, கருத்தியல், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலான எதிர்ப்பை அரசோ, மரணத்தண்டனைக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடும் குடிமக்களோ முன்வைப்பதில்லை. ‘தீவிரவாதிகளை எப்படி கட்டுப்படுத்துவதாம்?’ என்று ‘வெயிட்’டான காரணத்தை முன்வைத்து, மூளையை கழட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு தூக்குத்தண்டனைக்கு ‘ஜே’ போடுகிறார்கள். வருடா வருடம் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் இராணுவத்துக்கும், மற்ற பாதுகாப்பு அமைப்பினருக்கும் ஒதுக்கப்படுகிறதே.. அவற்றுக்கு முறையான கணக்கிருக்கிறதா.. அவர்கள் ஒழுங்காக வேலைபார்த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மாட்டார்களா.. தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முன்பாக நம் உளவு அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தனவா.. என்றெல்லாம் கேள்விகளை எழுப்ப நமக்கு துப்பில்லை.

எனவேதான் கிட்டத்தட்ட திருட்டுத்தனமாக திடீரென்று கசாப்பை தூக்கிலிட்டிருக்கிறார்கள். மரணத்தண்டனை என்பது நியாயமான நீதியென்று பெருமிதமாக மார்தட்டிக் கொள்பவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் அவசியமில்லை. கசாப்பை தூக்கிலிடும் தேதியை வெளிப்படையாக அறிவித்தால் தீவிரவாதிகள் ஜெயிலைத் தகர்த்து கசாப்பை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் என்றெல்லாம் அரசு அஞ்சியதா என்ன.. அவ்வளவு பலவீனமாகவா இந்தியா இருக்கிறது? கசாப்பின் தூக்குத்தண்டனையை ரகசியமாக நிறைவேற்றியதற்கு ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை இந்தியா சொல்ல வேண்டும்.

விரைவில் பாராளுமன்றத் தேர்தலை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னதாக குஜராத் தேர்தலில் பாஜகவோடு பலப்பரிட்சை நடத்தியாக வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலின் ‘ட்ரைலர்’ என்று பாஜக பிரச்சாரம் செய்யும். அரசின் மீது தொடர்ச்சியாக ஊழல் கணைகளை ஏவிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியான பாஜக இனி ஊழலைப் பற்றிப் பேச அருகதையில்லை என்பதை அக்கட்சியின் தலைவர் கட்கரி நிரூபித்துவிட்டார். எனவே அடுத்து அவர்கள் எய்யப்போகும் அம்பு ‘கசாப்’தான் என்பதை பா.ஜ.க.வின் அரசியலை எடைபோடுபவர்கள் எளிமையாக யூகிக்க முடியும். அந்த வாய்ப்பை தர காங்கிரஸ் தயாராக இல்லை. ஒத்த வீட்டுக்கு துண்டு போட்டு போகும் பெரிய மனுஷன் கணக்காக அசிங்கமான முறையில் கசாப்பை தூக்கிலிட்டு விட்டது. மும்பையில் தெருவெங்கும் கொண்டாட்டமாம். கொஞ்ச நாட்களுக்கு தேசியவெறி தலைக்கேறி மக்கள் அரசு சார்பாக சிந்திக்கத் தொடங்குவார்கள். முன்பு இதேபோன்ற தேசியவெறியை கார்கில் போர் வாயிலாக கிளப்பி பாஜக ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கலாம். இவையெல்லாம் வெளிப்படையாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். காங்கிரஸுக்கு கசாப்பை தூக்கிலிட்டதன் மூலமாக கிடைக்கக்கூடிய மறைமுக பலன்கள் என்னவென்று தெரியவில்லை.

எனவேதான் பதறிப்போய் குஜராத் படுகொலை புகழ் நரேந்திரமோடி அவசர அவசரமாக ‘அப்சல் குருவுக்கு எப்போ?’ என்று கேட்கிறார். காங்கிரஸ் அதையும் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் பேச்சின் வாயிலாக அவர்களது ‘மூட்’ புரிகிறது. “கசாப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது. கசாப்போடு நாம் நின்றுவிட முடியாது. அப்சல் குருவுக்கான தண்டனையையும் விரைவுப்படுத்த வேண்டும்” என்கிறார். பேசுவது காங்கிரஸ் பொதுச்செயலரா அல்லது பாஜகவின் தலைவர்களில் ஒருவரா என்பதே தெரியாத அளவுக்கு திக்விஜய்சிங்கின் பேச்சு அமைந்திருக்கிறது. சிறுபான்மையினர் விஷயத்தில் பாஜகவோடு ஒப்பிட்டு காங்கிரஸை தூக்கிப்பிடிக்க இனி நமக்கு காரணங்கள் எதுவுமில்லை. இது இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை என்று பிரச்சாரப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் பாஜகவும், காங்கிரஸும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. பாஜகவின் செய்தித் தொடர்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வி, “நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான்” என்று கருத்து சொல்லியிருப்பதின் மூலம் இதை புரிந்துக் கொள்ளலாம். ஒருவகையில் கசாப்பின் தூக்கு, இஸ்லாமிய சகோதரர்களுக்கு நிம்மதியையும் தந்திருக்கலாம். தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாய் கசாப் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருந்தான்.

நாட்டின் பாதுகாப்பை விட, அரசியல் பிரதிபலன்கள்தான் இங்கே மரணத்தண்டனையை தீர்மானிக்கின்றன. மரணத்தண்டனையை விட ஆபத்தான அம்சம் இது. மனிதநேயத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்துக் கொண்டே இருப்பது நமது கடமை.

தொடர்புடைய முந்தையப் பதிவுகள் :



19 நவம்பர், 2012

முகம் மாறும் தமிழ் சினிமா

சிந்தனைகள், தொழில்நுட்பம், திறமை, அணுகுமுறை, வியாபாரம் ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் சினிமாவில் புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறது

திரையரங்குகளில் திருவிழாக்கோலம். படம் பார்த்தே ஆக வேண்டும் என்று நீண்டவரிசையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் . குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் மக்கள் வெள்ளம். படம் பார்த்த குழந்தைகள் மீண்டும் அதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். படத்தில் ஹீரோ திரையில் தோன்றியதில் தொடங்கி, படத்தின் இறுதிக்காட்சிவரை கைதட்டல், விசில், ஆரவாரம்.எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன இம்மாதிரி காட்சிகளைப் பார்த்து?

வெகுநாட்களுக்குப் பிறகு சில மாதங்களுக்குமுன் இவற்றைப் பார்க்க முடிந்தது.

காணாமல் போன சூப்பர் ஸ்டார்ஸ்

இத்தனை உற்சாகமும் குதூகலமும் ஏற்படுத்திய இந்தப் படம் ரஜினியோ, கமலோ அல்லது வேறு சூப்பர் ஸ்டார்களோ நடித்த படமல்ல. படத்தின் நாயகன் சிக்ஸ்பேக் உடற்கட்டு கொண்ட ஆணழகனுமல்ல. பின் யார்?

நாம் அன்றாடம் தொல்லையாக நினைக்கும் ‘ஈ’தான் ஹீரோ. தமிழ்/தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட ‘நான் ஈ’ திரையில் பாய்ந்திருக்கும் புது வெள்ளத்தின் ஓர் அடையாளம். தியாகராஜ பாகவதர் காலத்தில் துவங்கிய ஹீரோக்களின் சகாப்தம், காலம் காலமாக எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-சூர்யா என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. கதாநாயக பிம்பத்தின் வழிபாடு அதிகமுள்ள தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறிய பூச்சியான ‘ஈ’தான் ஹீரோ என்பதை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இயக்குனர் ராஜமவுலியின் துணிச்சலான முயற்சிக்கு மக்கள் கொடுத்த பேராதரவு புதிய சிந்தனைகளை அவர்கள் வரவேற்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சான்று. புதிய, துணிச்சலான முயற்சிகளை புதுமுக இயக்குனர்கள் மேற்கொள்ளத் தூண்டுகோலாக இப்படத்தின் வெற்றி அமைந்திருக்கிறது.

ஹீரோ என்பதற்கான இலக்கணங்கள் மாறிவிட்டன. ஹீரோ என்றால் அழகிய முகவெட்டு, ஸ்டைலான நடை உடை பாவனைகள் இருக்க வேண்டும் என்ற நிலைமாறி வருகிறது. ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்கள் வந்தபோதே மீண்டும் இயக்குனர்களின் படங்களுக்கான பருவம் துவங்கி விட்டது. முப்பதாண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் போன்றவர்கள் முன்னெடுத்த இந்தப் போக்கினை, பின் சேரன், தங்கர்பச்சான், கரு. பழனியப்பன் போன்ற இயக்குனர்கள், ஏன் பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள்கூட வளர்த்தெடுத்தார்கள். இப்போது ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்காமல், இயக்குனர்களே மேக்கப் போட்டு நாயகர்களாகி விடுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர்களாகவும் சசிக்குமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் தடம் பதித்தார்கள். சசிக்குமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ ஏ, பி, சி என்று மூன்று வட்டாரத் திரையரங்குகளிலும் வெற்றி பெற்றது.

பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட், நட்சத்திரப் பட்டாளம் இதெல்லாம் அவசியப்படாமல் சிறிய பட்ஜெட்டில் சின்சியராக எடுக்கப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதுமுக ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் நடித்த, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பிளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருப்பதைக் கவனிக்கலாம். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் வசூல் ராஜாக்களாக அறியப்பட்ட பெரிய ஹீரோக்களின் படங்கள் வணிகரீதியாக தொடர்ச்சியாக மண்ணைக் கவ்வி வருகின்றன.
சிறு பட்ஜெட் திரைப்படங்கள் ஜெயிப்பது மட்டுமல்ல, சினிமாவின் வழக்கமான கதை சொல்லும் முறையை உடைத்தெறிந்திருக்கின்றன. ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’ போன்ற படங்கள் ஓர் உதாரணம். கதை சொல்லாமல் சம்பவங்களைத் தொகுத்து, காட்சியனுபவங்களை ரசிகர்களுக்கு கடத்தும் இந்தப் புதிய அணுகுமுறைக்கு விமர்சகர்களும், ரசிகர்களும் ‘சபாஷ்’ சொல்கிறார்கள்.

"வழக்கமான ஃபார்முலா படங்களின் மீது எனக்கே பெரும் சலிப்பு இருக்கிறது. என் படம் புதுசாகத் தெரியவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு செய்யவில்லை. உள்ளடக்கத்துக்காக அது பேசப்பட வேண்டுமென்று மட்டுமே நினைத்தேன். ஒரு ஹீரோவுக்காக படத்தை யோசிப்பது எனும்போது தரம் கேள்விக்குறி ஆகிவிடுகிறது. படத்தின் உள்ளடக்கம்தான் ஹீரோ, பட்ஜெட் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டும். ஒரு படைப்பாளி முதலில் தீர்மானிக்க வேண்டியது எதை எடுக்கப் போகிறோம் என்பதைத்தான்" என்கிறார், ‘மதுபானக்கடை’ படத்தின் இயக்குனரான கமலக்கண்ணன். சினிமா பின்னணியில் இல்லாமல், விளம்பரப்பட உலகில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர்.

எண்ணெய் காணாத தலையும் மழிக்கப்படாத முகமும் மடித்துக் கட்டிய கைலியுமாக ஹீரோக்கள் தரையிறங்கி வந்து விட்டார்கள். ஆனால் இன்னமும் நாயகிகளை கவர்ச்சிப் பதுமைகளாக, கதாநாயகர்களோடு வெளிநாட்டு லொக்கேஷன்களில் இடுப்பை வெட்டி வெட்டி டூயட் பாடுபவர்களாகவே வைத்திருக்கிறது தமிழ் சினிமா. டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவிதிரி, விஜயக்குமாரி, சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, ராதிகா ஏன் ஸ்ரீ தேவி காலம் வரைகூட கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளே சினிமாவாகியிருக்கின்றன. இப்போதும் தொலைக்காட்சிகளில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெகாத் தொடர்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் சமகாலத் தமிழ் சினிமா கதாநாயகிகள் மீது இன்னும் கடைக்கண் வைக்கவில்லை. அரிதிலும் அரிதாக சில முயற்சிகள் துவங்கியிருக்கின்றன என்பது உண்மைதான். பெண் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஆரோகணம்’ திரைப்படத்தில் நாயகன் இல்லை. கதையின் மையம் நாயகியை சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு பட்ஜெட் படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு முழுதாகக் கிடைக்கவில்லை.

அசத்தும் தொழில்நுட்பம்

படத்தின் உள்ளடக்கம் மாறியிருப்பது மட்டுமின்றி, தொழில்நுட்பரீதியாகவும் தமிழ் சினிமா பல படிகள் முன்னேறியிருக்கிறது. முன்பெல்லாம் சிறப்பாகப் படமெடுக்கும் படங்களை, ‘ஹாலிவுட் தரம்’ என்று பத்திரிகைகள் பாராட்டும் . இப்போது ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் கலைஞர்களையே தமிழ்ப் படங்களுக்கும் பணியாற்ற அழைக்கிறார்கள்.
இவ்வாண்டு தொடக்கத்தில் வெளிவந்த, ‘அம்புலி’ திரைப்படம் தொழில்நுட்பரீதியாக தமிழுக்கு மைல்கல். தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படம் இது. அதாவது பைனாக்குலரில் ஒரு காட்சியைக் காண்பதைப்போன்ற அனுபவத்தை திரையில் நீங்கள் உணரலாம். இரட்டை இயக்குனர்களான ஹரிஷங்கர், ஹரிஷ்நாராயணன் இணைந்து இயக்கினார்கள். இவர்கள் முன்னதாக இயக்கிய, ‘ஓர் இரவு’ இந்தியாவின் முதல் ‘வ்யூ பாய்ண்ட்’ திரைப்படம். அதாவது கதாபாத்திரத்தின் பார்வையில் கேமரா கோணம் இருக்கும்.

ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான தொழில்நுட்ப இடைவெளி வெகுவாக சுருங்கிவிட்டது" என்கிறார் ஹரிஷ்நாராயணன்.

அம்புலி’க்காக ‘ஹாரிபாட்டர்’ திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அழைத்து உடன் பணியாற்றினோம். ‘நீங்களே எங்களுக்கு இணையாகத்தானே பணியாற்றுகிறீர்கள்’ என்று நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களை அவரே பாராட்டினார். தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக தொழில்நுட்பம் விரைவாக உலகமெங்கும் பரவுகிறது. ஆனால் படத்தின் உள்ளடக்கரீதியாக அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசமுண்டு. இந்த வித்தியாசம் கலாச்சாரம் தொடர்பானது. இது தொழில்நுட்பத்தை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடியதாக இல்லை" என்று விளக்கினார் ஹரிஷ்நாராயணன்.

டிஜிட்டல் கேமராவின் வருகை, படமாக்கத்தில் ஒரு புலிப்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. ‘வழக்கு எண் 18/9’ போன்ற திரைப்படங்கள், டிஜிட்டல் கேமராவின் பலன்களை நன்கு பயன்படுத்தியிருக்கின்றன. ஃபிலிமில் எடுக்கும் காலதாமதத்தை டிஜிட்டல் கேமராக்கள் தவிர்க்கின்றன. அனிமேஷன் நுட்பங்களுக்கு அணுக்கமாக இருக்கிறது, படமாக்கல் தொடர்பான செலவுகளை மிச்சப்படுத்துகிறது, சிரமங்களை தவிர்க்க முடிகிறது.

டிஜிட்டல் சினிமா தொடர்ந்து முன்னோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. பல புதிய கேமராக்களின் மூலம் அது தன்னை செழுமைப்படுத்திக்கொண்டே வருகிறது. கண்ணை மூடி திறப்பதற்குள்ளாக எல்லாம் மாறிப்போச்சுன்னு சோல்லுவாங்களே... அந்த மாதிரி, ஒரு தூக்கம் போட்டுவிட்டு வந்து பார்த்தால் எல்லாம் மாறிவிடுகிறது இங்கே. தொழில்நுட்பம் அதன் எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே போகிறது. அதன் சாத்தியங்கள் படைப்பாளிகளுக்கிருந்த பல தடைகளை உடைத்துப் போடுகிறது. பொருளாதாரம் சார்ந்த சுமைகள் குறையத் துவங்கிருக்கின்றன. குறைந்த முதலீடுகளில் தரமான திரைப்படங்களை உருவாக்கிட முடியும் இப்போது" என்று டிஜிட்டல்மயமானதின் பயன்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

எலெக்ட்ரானிக் இசை

டிஜிட்டல் தொழில்நுட்பம் இசையிலும் செயல்பட ஆரம்பித்ததன் பலன், இளைஞர்களுக்கு சாதகமாக அமைந்தது. யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், விஜய் ஆண்டனி, கே எனப் பல இளைஞர்கள் அடுத்தடுத்து தமிழ் திரையிசை உலகில் நுழைந்திருக்கிறார்கள். இன்று தமிழ் இசையமைப்பாளர்களின் சராசரி வயது 25தான் இருக்கும் என்றால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இசை அமைப்பாளர்களைப்போல இளம் பாடகர்களும் கவிஞர்களும் வரத்தான் செய்கிறார்கள். என்றாலும் நிலைத்து நிற்க அவர்கள் பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.

வாலியும், வைரமுத்துவும் அமைத்த களத்தில்தான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமா இசையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக குத்துப்பாட்டு கலாசாரம் கோலோச்சியது. பாடல் வரிகளில் ஆங்கிலக் கலப்பும் அவசியமென்றார்கள். தவிர்க்க முடியாமல் நாங்களும் இதையெல்லாம் எழுத வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது. அதே வாலி-வைரமுத்து கால நிலைமை மீண்டும் திரும்பியிருக்கிறது" என்று தற்போதையச் சூழலை விவரிக்கிறார் கவிஞர் பா.விஜய்.

தமிழ் சினிமாவில் மீண்டும் துவங்கியிருக்கும் கவிதைப்பாதை, அடுத்த தலைமுறை நவீனமொழிநடைக் கவிஞர்களை ஊக்கப்படுத்துகிறது. மதன் கார்க்கி குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக வளர்ந்து வருகிறார். இசையின் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்கும் மொழியை சமகாலக் கவிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

நட்சத்திர அரங்குகள்

திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்காக ஆவலோடு காத்திருப்பதைப் போல திரையரங்குகளில், ‘பொட்டி’க்காகக் காத்திருந்த காலங்கள் ஒன்றுண்டு. குறித்த நேரத்தில் ‘பொட்டி’ வராமல் போனதில் கொதிப்படைந்த ரசிகர்கள், தியேட்டரையே அடித்து நொறுக்கி கலவரமெல்லாம் நடந்த காலம் உண்டு. பொட்டி என்பது படத்தின் ஃபிலிம் சுருள் கொண்ட தகரப்பெட்டி.

இப்போது நவீனத் தொழில்நுட்பம் இந்தத் தகரப்பெட்டிகளைப் பரணுக்கு அனுப்பி விட்டது. ரீல் என்ற ஃபிலிம் சுருளே கிடையாது. திரைப்படம் டிஜிட்டல் ஆகிவிட்டதால் சேட்டிலைட் மூலமாகவும், ஹார்டு டிஸ்க் மூலமாகவும் திரையிடும் நவீன புரஜெக்டர்கள், சிறுநகரங்களில் இருக்கும் அரங்குகளுக்குக்கூட வந்துவிட்டன.
டிஜிட்டல் நுட்பம் காரணமாக ஒளி மட்டுமல்ல, ஒலியின் தரமும் கூடியிருக்கிறது. டால்பி, டிடிஎஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தபிறகு திரையில் தெரியும் காட்சிகளின் இடத்துக்கு நாமே நேரில் செல்வதற்கு இணையான அனுபவத்தை தருகிறது. அரங்கு முழுக்க ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு, காட்சிகளுக்கேற்ப ஒலி தனித்தனியாக வருகிறது. சமீபத்தில் வெளியாகிய த்ரில்லர் திரைப்படமான, ‘பீட்ஸா’ 7.1 சர் ரவுண்ட் ஒலியமைப்பில் படம் பார்ப்பவர்களை திகில் படுத்துகிறது. முதல் வரிசையில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகனின் இதயத்துடிப்பை வேகப்படுத்தும் சத்தம் இனி திரையில் இருந்துதான் வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. புரஜெக்டர் ரூமில் இருந்தும் ‘டமால்’ என்று சத்தம் வரும்.

பாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் மல்ட்டிப்ளக்ஸ் கலாச்சாரம் உருவெடுத்து இருப்பது சமீபகாலப் போக்கு. நல்ல சூழலில் படம் பார்க்கும் அனுபவம்தான் திருட்டு டிவிடி மாதிரியான இத்தொழிலுக்கு எதிரான விஷயங்களைத் கட்டுப்படுத்த உதவும். மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணமும் அதிகம் என்பதால், தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் லாபமும் விரைவில் கிடைக்கிறது. தமிழகத்தில் அடுத்த சில வருடங்களில் மல்ட்டிப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய நவீன திரையரங்குகள் நிறைய தோன்றும்" என்கிறார், டிஸ்னி-யூடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்மண்டல தலைமைப் பொறுப்பிலிருக்கும் தனஞ்செயன்.

சென்னையில் அபிராமி மல்ட்டிப்ளக்ஸ் போன்ற திரையரங்குகள் செவன் ஸ்டார் வசதி என்று குறிப்பிடும் சில வசதிகளை உருவாக்கியிருக்கின்றன. அதாவது போனிலோ, இண்டர்நெட்டிலோ குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறோம் என்று தகவல் கொடுத்துவிட்டால் போதும், அவர்களே காரில் வந்து அழைத்துச் சென்று, திருப்தியாகப் படம் பார்த்து, வீட்டுக்குத் திரும்புவது வரை பார்த்துக் கொள்வார்கள். என்ன, காசுதான் கொஞ்சம் ஜாஸ்தி.

‘Q is dead’

சமீப ஆண்டுகளில் திரையரங்குகளில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான புரட்சியாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை குறிப்பிடலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் சத்யம் சினிமாஸ் இந்த முறையை அறிமுகப் படுத்தியபோது, ‘Q is dead’ என்று அறிவித்து, விளம்பரப்படுத்தியது. அதாவது இனிமேல் யாரும் சினிமா டிக்கெட்டுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்பது பொருள். முதல் நாள், முதல் காட்சிக்கு இரும்புக் கிராதிகளால் பிணைக்கப்பட்ட சிறைச்சாலை மாதிரியான டிக்கெட் கவுண்டர்கள் இன்று பெருமளவில் ஒழிந்துவிட்டன. தீபாவளிக்கு சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குப் போகும் ரசிகன், சென்னையிலிருந்தே ஆன்லைன் மூலமாக அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியாக,‘துப்பாக்கி’ படத்துக்கு முன்பதிவு செய்யலாம். ஆன்லைன் முன்பதிவு வந்துவிட்டதால், ‘பிளாக்’ டிக்கெட் விற்பவர்கள் என்கிற இனமே கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.
திரையரங்குகள் மல்ட்டிப்ளக்ஸ்களாக மாறிக்கொண்டிருக்கும் அதே நேரம் டிக்கெட் கட்டணம் 120 ரூபாயாக மாறிவிட்டது. பத்து ரூபாய்க்கும், இருபது ரூபாய்க்கும் இனி சினிமாவில் மதிப்பில்லை. சிறுநகரங்களில் இருக்கும் தியேட்டர்களில்கூட டிக்கெட் கட்டணம் ஐம்பது ரூபாய்க்கும் மேலாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் பெரிய படங்கள் வரும் சூழலில் 200 ரூபாய் என்றுகூட வெளிப்படையாகவே நிர்ணயிக்கிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஒரு சராசரிக் குடும்பம் படம் பார்க்க, ஒரு முழு ஆயிரம் ரூபாய் நோட்டை செலவழிக்க வேண்டியிருக்கிறது.

நாளை நமதே

இவை எல்லாவற்றையும் விட தமிழ் சினிமாவில் பாயும் புது வெள்ளம் ஒன்றுண்டு. சின்னத்திரையில் குறும்படங்களை இயக்கியவர்களுக்கு வெள்ளித்திரை தனது அகலமான கதவை திறந்து வைத்ததோடு இல்லாமல், சிகப்புக் கம்பளமும் விரித்து வரவேற்றிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் அல்ல. சினிமா படமெடுக்க வேண்டுமென்று ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள் அல்ல. சாஃப்ட்வேர் புரோகிராம்மர்கள், கல்லூரி மாணவர்கள், மார்க்கெட்டிங் பணியாளர்கள் என்று கலந்துகட்டி இருக்கிறார்கள். திரைமொழியை தொடர்ச்சியாகப் படங்கள் பார்ப்பதின் மூலமாக கற்றுக் கொண்டவர்கள்.

பாலாஜி, ‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்கிற குறும்படம் மூலம் பேசப்பட்டவர். அதையே நீட்டி, முழுநீளத் திரைப்படமாகவும் எடுத்து இயக்குனர் ஆகியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ், த்ரில்லர் திரைப்படமான சக்கைப்போடு போடும் ‘பீட்ஸா’ படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். நளன் எனும் குறும்பட இயக்குனரும் அடுத்து வெள்ளித்திரையில் நுழைந்திருக்கிறார்.

சாதாரண ரசிகர்களாக இதுவரை இருந்த இந்தப் புதியவர்களின் வருகை, சினிமாவின் வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்து, வேறு தளத்துக்குக் கொண்டுசெல்லும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

15 நவம்பர், 2012

ட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!

நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணி
இடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னை

சைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?
- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்


அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா? பிரபலங்களுக்கா?
- சையது, சேவ் தமிழ்சு இயக்கம்


இணைய உலகிலும் கருத்துரிமைக்கு சாவுமணி அடிக்கும் அரசு!
- ராதிகா கிரி, ஊடகவியலாளர்


விவாதங்கள் நடத்துவது: கருத்தை மாற்றவா? காயப்படுத்தவா?
- கஜேந்திரன், ஊடகவியலாளர்


சமூக வலைத்தளங்கள் தொடர்பான இப்பிரச்சினையில் தங்களது பார்வைகள்
- யுவகிருஷ்ணா, கார்ட்டூனிஸ்ட் பாலா, நிர்மலா கொற்றவை, உண்மைத்தமிழன்


எதிர்கொள்வது எப்படி - கலந்துரையாடல்
----------------------------
அனைவரும் வருக
----------------------------