13 மார்ச், 2013

வசந்த மாளிகை

அழகாபுரி ஜமீனின் இரண்டாவது வாரிசு ஆனந்த் ஒரு பெரும் குடி மற்றும் காம வெறியர். ஆனால் நல்லவர். வேலை வெட்டியே இல்லாத அவர் தனக்கு ஒரு பி.ஏ.வை வேலைக்கு வைத்துக் கொள்கிறார். பி.ஏ.வாக வரும் பெண் ஆனந்தை திருத்துகிறார். திருந்திய ஆனந்த் பி.ஏ.வை காதலிக்கத் தொடங்குகிறார். அந்தஸ்து, சுயமரியாதை மாதிரி சில பிரச்சினைகளால் பிரியும் காதலின் கதி என்ன? – ஹீரோயின் ஹீரோவை திருத்துவது என்று கிட்டத்தட்ட ‘புதிய பாதை’ கதை மாதிரிதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கவுசல்யா தேவி என்பவர் எழுதிய தெலுங்கு நாவலான ‘பிரேமநகர்’ தெலுங்கில் அதே பெயரில் படமாக்கப்பட்டது. டி.ராமாநாயுடு பெரும் பொருட்செலவில் தயாரித்து 1971ல் வெளியானது. நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். இதையடுத்து தமிழிலும் அதே படத்தை ‘வசந்த மாளிகையாக’ உருவாக்கினார் ராமாநாயுடு. தெலுங்கினை இயக்கிய பிரகாஷ்ராவே தமிழிலும் இயக்கினார். நடிகர், தயாரிப்பாளர், கேமிராமேன், இயக்குனர் என்று பிரகாஷ்ராவுக்கு நிறைய முகங்கள் உண்டு. வசந்தமாளிகைக்கு பிறகு சிவாஜிக்கு ‘அவன் ஒரு சரித்திரம்’ இயக்கியவரும் இவரே. இவருடைய மகன் ராகவேந்திரராவ் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சாதனை இயக்குனர். தெலுங்கின் சூப்பர் ஸ்டார்கள் அத்தனை பேரையும் இயக்கியவர் (ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடித்த ‘ஹிம்மத்வாலா’ இவருடைய இயக்கம்தான்).

தமிழுக்கு ஏற்ப வசந்தமாளிகையில் சில மாற்றங்கள் செய்துக்கொண்டார் பிரகாஷ்ராவ். குறிப்பாக காமராஜரின் பிரச்சார பீரங்கியான சிவாஜிக்காக சில அரசியல் ‘பஞ்ச்’கள் வசனங்களில் இடம்பெற்றது. சிவாஜி குடிகாரராக நடித்தாலும் அப்போது திமுக அரசு கொண்டுவந்த மதுவிலக்கு வாபஸை கிண்டலடித்து நாகேஷ் பேசுவார். காமராஜரின் பள்ளிச்சீருடை அறிமுகத்துக்கு ஒரு சின்ன பிரச்சாரத்தையும் சிவாஜி செய்வார் (ஸ்ரீதேவி பள்ளிச்சீருடை அணிந்து கிளம்பும்போது). பாட்டாளிகளுக்கு ஆதரவான வசனங்கள் மூலம் ஆளும் திமுகவுக்கு ஆணி அடிக்கவும் முயற்சித்திருக்கிறார்.

பீம்சிங் படங்களில் நடித்து, நடித்து சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்யக்கூடியவர் என்று பெயர் பெற்றுவிட்டார். கலர் படம் என்பதாலோ என்னவோ முடிந்தவரை யதார்த்தமான நடிப்பை வசந்தமாளிகைக்கு வழங்கினார். குடிக்கும் காட்சிகளில் அவரது கண்கள் சிவந்து, கால்கள் லேசாக தள்ளாட்டம் போட, நாக்கு குழறி, நடுங்கும் விரல்களில் சிகரெட் புகைத்து.. சர்வதேச தரத்துக்கு சிவாஜியின் நடிப்பு அமைந்தது. படத்தின் கதையோடு இணைந்தவை என்பதால் பாடல் காட்சிகளுக்கு பிரத்யேகமாக மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் பாடலில் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்தே நடித்திருக்கிறார். ஒரே படத்தில் இத்தனை டைட் க்ளோசப் வேறு எந்த நடிகனுக்குமே வைக்க முடியாது. அப்படி வைத்தால் விகாரமாகி விடும். சிவாஜி மட்டுமே குளோசப்பிலும் அழகாக தெரிபவர். லாங் ஷாட்களிலும், ஸ்க்ரீனில் தன்னுடைய இருப்பை எப்படியேனும் தெரியப்படுத்துபவர்.

இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த நடிகரான விளங்கிய சிவாஜிக்கு உரிய கவுரவத்தை நாம் அளிக்கத் தவறிய அவலம் உறைக்கிறது. வசந்தமாளிகை வெளிவந்ததற்கு முந்தைய ஆண்டுதான் ரிக்‌ஷாக்காரனில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டிருந்தது. வாத்யார் ரசிகனாக இருந்தாலும் நடிப்புக்காக அவருக்கு விருது என்பதை நம்மாலேயே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அப்போதைய இந்திரா காங்கிரஸுடனான திமுக கூட்டணிக்கு கிடைத்த லஞ்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசிவரை சிவாஜிக்கு தேசியவிருது கொடுக்காமலேயே அவரை அவமானப்படுத்தி விட்டது இந்திய அரசு. காலமெல்லாம் காங்கிரஸுக்கு தன்னலம் பாராமல் உழைத்த கலைஞனுக்கு கிடைத்த பரிசு இது.

வசந்தமாளிகை வெளியான 1972, சிவாஜியின் ஆண்டு. அவ்வாண்டு குடியரசுத் தினத்துக்கு வெளியான ராஜாவில் தொடங்கி ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே, தவப்புதல்வன், வசந்தமாளிகை, நீதி என்று ஏழு படங்கள். ‘தர்மம் எங்கே’ தவிர்த்து மீதி ஆறு படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. வசந்தமாளிகை இருநூற்றி எழுபத்தைந்து நாள் ஓடி, வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. தமிழில் மாபெரும் வெற்றி கொடுத்த தைரியத்திலேயே பிற்பாடு இந்தியிலும் ராஜேஷ்கண்ணா, ஹேமமாலினியை வைத்து வசந்தமாளிகையை எடுத்தார் ராமாநாயுடு. அங்கே எழுநூற்றி ஐம்பது நாள் ஓடியது.

வசந்தமாளிகையின் ஒரிஜினலான பிரேமநகரில் நாகேஸ்வரராவ் இறுதிக்காட்சியில் இறந்துவிடுவார். தமிழிலும் அதேமாதிரி இடம்பெற்று, ரசிகர்களின் கடுமையான எதிர்ப்பை வெளியான நேரத்தில் வசந்தமாளிகை பெற்றதாம். இதனால் தியேட்டர்களில் ஏற்பட்ட வன்முறைச்சூழலை தவிர்க்க, இறுதிக்காட்சியை மீண்டும் மாற்றி சிவாஜி உயிர்பிழைப்பதாக மாற்றப்பட்டதாக ‘பழம்பெருசுகள்’ சிலர் சொல்ல கேள்வி. உண்மையா என்று தெரியவில்லை. இந்தி வெர்ஷனிலும் இதே க்ளைமேக்ஸ்தான்.

72ல் தொடங்கி பலமுறை தியேட்டர்களில் வசந்தமாளிகை ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஒவ்வொருமுறையும் வசூலை அள்ள தவறுவதேயில்லை. கடந்த ஆண்டு டிஜிட்டலாக்கப்பட்டு வெளியாகி ‘கர்ணன்’ மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசந்தமாளிகையும் மீண்டும் டிஜிட்டல் வடிவில் வெளியாகியிருக்கிறது. ‘டிஜிட்டல் ஆக்கியிருக்கிறோம்’ என்று சொல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்திருக்கிறார்கள். ஒளி, ஒலியில் பெரிய துல்லியம் ஏதுமில்லை. டிவிடி ரிப்பில் இருந்து உருவி புரொஜெக்‌ஷன் செய்வதைப் போல மங்கலாக திரையில் தெரிகிறது. எது எப்படியிருந்தாலென்ன வசந்தமாளிகையின் வசீகரம் இதனால் எல்லாம் குறைந்துவிடவில்லை. இம்முறையும் அரங்குகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக ரசிகர்கள். விசில் சத்தம், கைத்தட்டல்களால் தியேட்டர் கூரைகள் அதிர்கிறது.

ஆல்பட் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் கலைக்கோயில் சிவாஜி ரசிகர்மன்றத்துடையதும் ஒன்று. கலைக்கோயில் என்கிற பட்டம்தான் அவருக்கு எத்துணை பொருத்தமானது?

9 மார்ச், 2013

9ன்பதுல குரு

“எம்படத்துலே கதையே இல்லை.. கதையே இல்லைன்னு ஒரு க்ரூப் புரளி கெளப்பிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்றேன்.. கதையே இல்லாம படம் எடுக்க முடியாது”

- ‘ரட்சகன்’ படம் வெளியானபோது இயக்குனர் பிரவீன்காந்த்

பிரவீன்காந்த் ‘ஒன்பதுல குரு’ பார்த்தாரேயானால் தன்னுடைய கூற்று எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்வார்.

பேச்சுலர்ஸ் பாரடைஸான ஹாலிவுட்டின் ‘ஹேங்க் ஓவர்’ படத்தை சுட்டு எடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை. 1895ல் லூமியர் சகோதரர்கள் முதன்முதலாக ’சினிமா’ போட்டுக் காட்டிய துண்டுப்படத்தில் இருந்து, இதுவரை வெளிவந்திருக்கும் கோடிக்கணக்கான எல்லா சினிமாப் படங்களையுமே சுட்டு எடுத்திருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் தமிழில் வெளிவந்திருக்கும் ஐயாயிரத்து சொச்சம் படங்களிலிருந்தும் ஓரிரு நொடி காட்சிகள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்பு முரளி, மோகன், எஸ்.வி.சேகர் மாதிரி இடைநிலை நாயகர்களை வைத்து இராம.நாராயணன் துணுக்குத் தோரணம் கட்டி சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி ரேஞ்சுக்கு படங்களாக பிரசவித்துத் தள்ளுவார் இல்லையா? இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் இந்த genre கொஞ்சம் கொஞ்சம் அழிந்து குற்றுயிரும் குலையுயிருமாக போய்விட்டது. சில ஆண்டுகளாக மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது. பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரி படங்கள் இவற்றின் கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வடிவம். கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு போன்றவை அவற்றின் அச்சு அசலான வடிவம். இந்தப் படங்களால் தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்தை நெருங்க முடியாது. சிறந்த அயல்நாட்டுப் படங்களுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படாது. ஆனால் அதையெல்லாம் விட முக்கியமான விஷயம். கல்லா கட்டும். தியேட்டர்களுக்கு பஞ்சமில்லாமல் content கிடைக்கும். இரண்டு பெரிய படங்களுக்கு இடையேயான இடைவெளியை நிரப்பும் filler ஆக செயல்படும். தியேட்டர் கேண்டீன்களில் சமோசா விற்பனை பெருகும். அச்சகங்களுக்கு போஸ்டர் ஆர்டர் இருந்துகொண்டே இருக்கும். தினத்தந்திக்கும், தினகரனுக்கும் ரெகுலர் விளம்பரம் கிடைக்கும். பிளாக்கர்களுக்கும் ஹிட்ஸ் தேத்த வசதியாக இருக்கும்.

பொதுவாக தயாரிப்பாளரின் கையை கடிக்காது. சில சமயங்களில் ஜாக்பாட்டும் அடிக்கும். அப்படியே தோற்றாலும் தயாரிப்பாளர் வடபழனி கோயில் வாசலில் தேங்காய் பொறுக்க வேண்டிய நிலைமை வராது. எனவே ஒன்பதுல குருக்களை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

படத்தில் ஹீரோ என்று யாரையும் சொல்ல முடியவில்லை. எனவே அவர்களை லூஸில் விட்டுவிடலாம். ஹீரோயின் லட்சுமிராய். இவரை அரபுக்குதிரை என்று குமுதங்களும், சினிக்கூத்துகளும் வர்ணிக்கின்றன. எனக்கென்னவோ கட்டுக்கடங்காத காட்டுக்குதிரையாக தெரிகிறார். ஒரு காட்சியில் ஸ்விம்மிங் பூலில் இருந்து எழுகிறார். அவரது நெஞ்சுரத்தை கண்டு வியந்து நமது நெஞ்சு உரமேறுகிறது. அசுரத்தனமான உடல் வளர்ச்சி என்றாலும் அவரது முகம் மட்டும் எட்டாம் க்ளாஸ் படிக்கும் பாப்பா மாதிரி இருப்பது அதிசயம்தான்.

சமகால ஹீரோக்கள், இயக்குனர்கள் அத்தனை பேரின் டவுசரையும் எந்தவித கூச்சநாச்சமுமின்றி கயட்டுகிறார்கள். குறிப்பாக மணிரத்னமும், பாரதிராஜாவும் படத்தைப் பார்த்தால் சினிமாவுக்கு துறவறம் பூண்டுவிடுவார்கள். சினிமாக்காரர்களைதான் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பார்த்தால் கலைஞரையும் விட்டுவைக்கவில்லை. அவ்வளவு ஏன் விவேகானந்தரை கூட விட்டு அடிக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். laugh riot.

பச்சை பச்சையாக டயலாக்குகள். கரும்பச்சை நிற காட்சிகள். இந்தப் படத்துக்கு தடை கோரவேண்டுமானால் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தத்தில் தொடங்கி உலகின் எல்லா மதக்காரர்களும், எல்லா சாதிக்காரர்களும், சினிமா, அரசியல், பத்திரிகை என்று எல்லா துறையினரும் தடைகோர வேண்டும். தமிழக அரசு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தொடங்கி சீனா, அமெரிக்க அரசுகள் வரை தடை விதிக்க வேண்டும். நியாயமாகப் பார்க்கப் போனால் சென்ஸார் இப்படத்துக்கு ‘த்ரிபிள் ஏ’ சர்ட்டிஃபிகேட் தந்திருக்க வேண்டும்.

நாடி, நரம்பு, மூளை, புத்தி, நெஞ்சு, பஞ்சு என்று உடலின் சகல பாகங்களிலும் கட்டுக்கடங்காத காமவெறி கரைபுரண்டு ஓடும் ஒரு மனிதரால் மட்டுமே இத்தகைய படைப்பை வழங்கியிருக்க முடியும்.

கலாச்சாரப் போலிஸாருக்கும், சென்ஸாருக்கும் நடுவிரலை தூக்கிக் காட்டிய தைரியத்துக்கு இயக்குனர் பி.டி.செல்வகுமாருக்கு அட்டென்ஷனில் அடிக்கலாம் ஒரு சல்யூட்!

8 மார்ச், 2013

கனவை ஏற்று விதியை மாற்று

“நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. சராசரி குடும்பப் பெண்ணுக்கு இந்த கனவு சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எப்பாடு பட்டாவது இந்த சராசரி வாழ்விலிருந்து தப்பிக்க நினைத்தேன்” 

பதினேழு வயது சந்தாவுக்கு வீட்டில் கட்டாயத் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார்கள். இதில் விருப்பமில்லாத அவர் நாட்டை விட்டே வெளியேறினார். முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது சந்தா சவேரி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?

கல்கத்தாவுக்கு அருகில் கான்குர்கச்சி என்கிற இடத்தில் வசித்த மார்வாரி கூட்டுக் குடும்பம் சந்தா சவேரியுடையது. பதினான்கு வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்போதெல்லாம் மார்வாரி குடும்பங்களில் பெண்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். முடிந்தவரை வெகுசீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைத்து தங்கள் கடமையை முடித்துக் கொள்வார்கள்.

வங்காளத்தில் அப்போது கல்வி குறித்த விழிப்புணர்வு மிக அதிகமாக இருந்தது. கல்வி கற்பதை கலாச்சாரமாகவே மாற்றியவர்கள் வங்காளிகள். இந்த போக்கினால் கவரப்பட்டார் சந்தா. எனவே குடும்பத்தில் சண்டை போட்டு கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தார். உயிரியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார்.

பார்க் தெருவிலிருந்த அமெரிக்கன் லைப்ரரி அவரை கவர்ந்தது. அடிக்கடி நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தார். அதுபோல ஒருமுறை சென்றுக் கொண்டிருந்தபோது வெயில் தாங்காமல் (சன் ஸ்ட்ரோக்) ஒரு அமெரிக்கப் பெண் நடுத்தெருவில் மயங்கி விழுவதைக் கண்டார். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று முதலுதவி செய்ய சந்தா உதவினார். அன்றிலிருந்து அந்த அமெரிக்கப் பெண் கேரனும், அவருடைய கணவர் டேவிட்டும் கல்கத்தாவிலிருந்தவரை சந்தாவுக்கு நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.

1984ல் சந்தாவுக்கு வயது பதினேழு. இனியும் பொறுக்க முடியாது என்று அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். நிறைய படிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை நிராகரிக்கிறார்கள். படிப்புக்காக ஊரை விட்டு ஓடுவது என்று முடிவெடுக்கிறார் சந்தா. உடனடியாக டேவிட்-கேரன் தம்பதியரின் நினைவுதான் அவருக்கு வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் வெகுவாக வளராத காலம் அது. ஈமெயில் இல்லை. ஃபேக்ஸ் பரவலாகவில்லை. பாஸ்டனில் இருந்த டேவிட்டின் அலுவலகத்துக்கு போன் செய்தார். இவர் பேசுவது டேவிட்டுக்கு சரியாக கேட்கவில்லை. அவர் பேசுவது இவருக்கு சரியாக கேட்கவில்லை. பத்து நிமிட போராட்டத்துக்குப் பிறகு தன்னுடைய நிலைமையை தெரியப்படுத்தினார். இறுதியாக சந்தாவுக்கு அமெரிக்காவிலிருந்த ஸ்பான்ஸர் கடிதம் அனுப்பிவைக்க டேவிட் ஒப்புக்கொண்டார்.

அந்த கடிதத்தோடு அமெரிக்க தூதரகத்துக்குச் சென்று ‘விசா’ விண்ணப்பித்தார். விசா அதிகாரி சந்தாவைப் பார்த்து சொல்கிறார். “நீ சின்னப் பெண். உன்னால் அமெரிக்காவுக்கு போக முடியாது”.

கடுப்பான சந்தா பதிலளிக்கிறார். “அமெரிக்காவை சொர்க்கம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அங்கே செல்பவர்கள் திரும்பியே வரமாட்டார்கள் என்று நினைப்பா?”

அதிகாரிக்கு இந்த பெண் அங்கே செல்ல ஏதோ முக்கியமான காரணம் இருக்கிறது என்று தோன்றுகிறது. “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஐந்து வருடம் நீ அங்கே தங்கியிருக்க அனுமதிக்கிறேன்” என்று சொல்லி விசாவை தருகிறார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸில் டிக்கெட் எடுக்க வேண்டும்? சந்தாவுக்கு உதவிக் கொண்டிருந்தவர்கள் அவரது கல்லூரித் தோழர்கள். உடல் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் அவர்களால் தர இயலும். பணம்? தன்னுடைய வைரத்தோடுகளை விற்றார். டிக்கெட் வாங்கினார். கையில் வேறு பணம் எதுவுமில்லை. கட்டியிருந்த உடையோடு விமானமேறினார்.

“பாஸ்டன் வரையிலான பயணம் முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தேன். ஏனெனில் எனக்கு கல்கத்தாவை அவ்வளவு பிடிக்கும்” என்று சமீபத்தில் கொல்கத்தாவுக்கு வந்தபோது சொன்னார் சந்தா.

விமான நிலையத்தில் சந்தாவை வரவேற்க தவறவில்லை டேவிட்டும், கரேனும். ஏனெனில் அங்கிருந்து தொலைபேச கூட சந்தாவிடம் காசில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.

அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த சந்தாவுக்கு அடுத்து என்னவென்று தெரியவில்லை. செய்தித்தாள்களை மேய்ந்தார். அமெரிக்க முதியோர் பலருக்கும் தாதிக்கள் தேவைப்பட்டார்கள். ஒரு அமெரிக்க மூதாட்டிக்கு உதவ இவர் போய் சேர்ந்தார். தொண்ணூற்றி எட்டு வயது லெஸ்லிக்கு இவரது சேவை மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் கழித்து இவரது கையில் முப்பதாயிரம் டாலர் பணத்தைக் கொடுத்து, “நீ ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார். சந்தாவின் ஆசையும் அதுதானே?

ஹார்வர்டில் படிப்பு முடியும் காலத்தில் டேவிட் இவருக்கு வேறு ஏற்பாடும் செய்தார். தன்னுடைய மாமனாரையும், மாமியாரையும் சந்தாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் சட்டப்படி தங்களுடைய மகளாய் சந்தாவை தத்தெடுத்துக் கொண்டனர். தத்தெடுத்த பெற்றோர், சந்தாவின் உண்மையான பெற்றோரை சந்திக்க கல்கத்தா வந்தனர். ஆறு வாரங்கள் அவர்களோடு தங்கியிருந்து, சந்தா ஏன் அமெரிக்காவுக்கு வந்தார் என்று விளக்கினர். தங்கள் மகளது உள்ளத்தை அவர்கள் புரிந்துகொள்ள இச்சம்பவம் உதவியது.

கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சந்தாவின் மேற்படிப்பு தொடர்ந்தது. பயோகெமிஸ்ட்ரி துறையில் அங்கே ஆய்வுகள் புரிய ஆரம்பித்தார். பேராசிரியராக அங்கே அடிக்கடி வருகை புரிந்தவர் லைனஸ் பாலிங். இவர் வேதியியலுக்காக 1954லும், அமைதிக்காக 1962லும் நோபல் பரிசு வென்றவர். படிப்பு முடிந்தவுடன் பாலிங்கிடம் பணியாற்ற சந்தா விரும்பினார். பாலிங்குக்கு அப்போது வயது தொண்ணூறுக்கும் மேலே.

தன்னுடைய பிரத்யேக ஆய்வகத்தில் தொப்பி அணிந்து அமர்ந்திருந்த பாலிங்கை சந்தித்தார் சந்தா. தன்னுடைய பல்கலைக்கழக ஆய்வுத்தகுதிகளையும், பல்கலைக்கழகம் அவருக்குத் தந்திருந்த தர அளவீடுகளையும் சொன்னார். “உங்களிடம் மாணவியாக சேர்ந்து உங்கள் ஆய்வகத்தில் நான் பணிபுரிய இத்தகுதிகள் போதுமா?”

“எனக்கு இப்போது மாணவிகள் தேவையில்லை. மனைவிதான் தேவை” சந்தாவை தவிர்ப்பதற்காக லேசாக புன்முறுவலிட்டுக்கொண்டே சொன்னார் பாலிங்.

“நாம் எப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம்?” எதையும் யோசிக்காமல் சந்தா பதிலுக்கு கடிக்க, வாய்விட்டு சிரித்துவிட்டார் பாலிங்.

“என்னுடைய ஆய்வகத்தில் இப்போது பெரியதாக வேலைகள் எதுவுமில்லை. ஆய்வுக்குடுவைகளை கழுவி வைக்கும் வேலைக்கு மட்டும்தான் ஆள் தேவை”

“பரவாயில்லை. உங்களோடு இருப்பதே எனக்கு மகிழ்ச்சி” பாலிங்கிடம் சந்தா சேர்ந்த கதை இதுதான். அவர் 94 வயதில் மரணிக்கும் வரை அவரோடு வேலை பார்த்தார் சந்தா. அங்கிருந்தபோதுதான் சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வேதியியல் தீர்வுகளை காணும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க க்ரீன்கார்ட் வாங்கியபிறகு ‘ஆக்டிவர்’ என்கிற பெயரில் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ‘இமாமி ஃபேர் & ஹேண்ட்ஸம்’ முகப்பொலிவு க்ரீமின் ஒரிஜினல் ஃபார்முலாவில் கூட சந்தாவின் பங்குண்டு. முகப்பொலிவு, தோல் சுருக்கம் நீக்கம் போன்றவற்றுக்கு பயன்படும் பல்வேறு க்ரீம்களை உருவாக்கினார். எஸ்டீ லாடர், ரெவலான் போன்ற பிரபலமான அழகுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தாவின் ஃபார்முலாவை கொண்டவையே. பி2-ஆக்டிஜென் எனும் ஃபார்முலா இவர் உருவாக்கியதுதான்.

இன்று சந்தாவின் நிறுவனத்தின் பெயர் ஆக்டியோஜென். பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனம். வருடாவருடம் கொல்கத்தாவுக்கு வருகிறார். சால்ட் லேக் பகுதியில் சொந்தமாக ஒரு வீடும் கட்டியிருக்கிறார். கொல்கத்தாவின் மார்வாரி பெண்கள் இப்போது நிறைய பேர் உயர்கல்வி பயில்வதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார். 


“நான் என்னவாக விரும்பினேனோ, அதுவாக மாறியிருக்கிறேன். நீங்கள் எதையாவது அடைய விரும்பினால், அது குறித்த தயக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்தால்.. நிச்சயமாக விரும்பியதை அடைவீர்கள்” என்கிறார் சந்தா சவேரி. நோபல் கனவு அவரது கண்களில் இன்னமும் பளிச்சிடுகிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

6 மார்ச், 2013

மதுவிலக்கு : திடீர் காந்தி குல்லாக்கள்

தமிழ்நாட்டில் ஒரு மோஸ்தர் உண்டு. பேசுவதற்கோ, போராடுவதற்கோ எதுவுமில்லை என்றால் மதுவிலக்கை கையில் எடுத்துக் கொள்வார்கள். மது சமூகத்தின் பிரச்சினையா என்று கேட்டால் ஆமென்று ஒப்புக் கொள்வதில் நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அது மட்டுமே பிரதானப் பிரச்சினையுமல்ல.

காந்தியவாதிகளின் மதுவிலக்கு கோரிக்கையை நாம் சந்தேகிக்க முடியாது. அது அவர்களது கொள்கையின்பால் உருவாகும் எண்ணம். கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று முன்பு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது பனைத்தொழிலாலர் நலவாரியத்தின் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் அந்த சிந்தனையை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். இத்தனைக்கும் பனைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் குமரியாரின் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய சமூகத்தையே எதிர்த்துக்கொண்டு மதுவிலக்கு கோரிக்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குமரியார் போன்றவர்களை நாம் மதிக்கலாம்.

பாமக தலைவர் ராமதாஸ் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மதுவுக்கு எதிரான எண்ணம் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தை தனது இயக்கத்தின் கொள்கையாகவும் முன்னிறுத்துகிறார். ஆனால் அவரது எண்ணத்துக்கு அவரது கட்சியிலேயே எவ்வளவு ஆதரவிருக்கிறது என்பது கேள்விக்குறிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளிலேயே மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என்கிற அம்சம் இருக்கிறது. இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சமீபமாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ திடீரென்று மதுவிலக்கு போராட்டங்களில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் சார்ந்திருந்த இயக்கத்திடம் இதற்கு முன்பாக இவ்விஷயத்தில் எப்போதாவது முரண்பட்டிருக்கிறாரா? வைகோ மட்டுமல்ல. எந்த திராவிட இயக்கத் தலைவராவது திடீரென்று ‘காந்தி வேஷம்’ போட்டால் நாம் சந்தேகித்தே ஆகவேண்டும்.

“கொஞ்சமாவது உலக அறிவு கொண்டவர்கள் யாரும் மதுவிலக்கை ஆதரிக்க முடியாது. மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு காந்தியாலும், ராஜாஜியாலும் பாராட்டப்பட்ட, எனது தோப்பில் இருந்த 500 தென்னைமரங்களை அதற்காக வெட்டிச்சாய்த்த நான் சொல்கிறேன்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். 1937ல் முதன்முதலாக ராஜாஜி மதுவிலக்கை சோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் கொண்டுவரும்போது அதை கிண்டலடிக்கவும் பெரியார் தவறவில்லை. “ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இந்த திடீர் யோசனைக்கு காரணம்”

பெரியார், ராஜாஜியின் மதுவிலக்கை வெறுமனே எதிர் அரசியல் என்கிற நிலையில் இருந்து மட்டுமே எதிர்க்கவில்லை. அக்காலத்தில் மதுவால் வந்த வருமானத்தில் பெரும்பகுதி கல்விக்காக அரசால் செலவழிக்கப்பட்டு வந்தது. பார்ப்பனரல்லாத மக்கள் கற்பதை ராஜாஜி விரும்பவில்லை என்பதாலேயே கல்விக்கு வருமானம் தரும் வழியான மதுவை தடை செய்கிறார் என்றும் பெரியார் குற்றச்சாட்டினை வெளிப்படையாக முன்வைத்தார். பெரியாரின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப ராஜாஜியின் காலத்தில் நிர்வாகச் செலவுகளை காரணம் காட்டி இரண்டாயிரத்து ஐநூறு பள்ளிகள் மூடப்பட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மது அருந்துவதை பெரியார் ஒருவனுடைய தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறார். மதுவை எடுத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் அவனுடைய உரிமை, அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அவரது வாதம். தன் மனைவியோடு ஒருவன் கலவி வைத்துக் கொள்வதை எப்படி அரசு தடை செய்யமுடியாதோ, அதுபோல மதுவையும் தடை செய்ய முடியாது என்றும் பேசுகிறார்.

எனவே பெரியாரின் வழித்தோன்றல்களான திராவிட இயக்கத்தார் திடீரென்று காந்தி குல்லா போட்டு மதுவிலக்குக்கான புரட்சியை முன்னெடுப்பது என்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. அவ்வாறு மது ஒழிக்கப்பட வேண்டியது என்று நினைப்பவர்கள், முன்னெப்போதாவது இது குறித்து பேசியிருக்கிறார்களா, போராடியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 1993 வரை திமுகவில் இருந்த வைகோ மதுவிலக்குக்காக கட்சியிலோ, பொதுமேடைகளிலோ அல்லது ராஜ்யசபாவிலோ ஏதேனும் கருத்தை முன்வைத்திருக்கிறாரா?

ராஜாஜி காலத்தில் அமலுக்கு வந்த மதுவிலக்கை கலைஞர்தான் திரும்பப் பெற்று ஒரு தலைமுறையையே மதுவுக்கு அடிமையாக்கி விட்டார் என்கிற பிரச்சாரத்தை இப்போது வைகோ முன்வைக்கிறார். அவரது மதுவிலக்கு வேடத்துக்கு இதுவே போதுமான காரணமுமாக இருக்கிறது. மிகக்கவனமாக ஆட்சியிலிருக்கும் அம்மாவை சங்கடப்படுத்தாமல் தன்னுடைய வழக்கமான பாதயாத்திரை போராட்டமுறையை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

மதுவைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே, அதன் தலையெழுத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இந்திய அரசியல் சட்டம். இதன்படி அப்போது குஜராத்தும், தமிழகமும் மட்டுமே மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி வந்தன. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்கொள்கை அமலில் இருப்பதால் தங்களுக்கும் அந்நிதியை வழங்குமாறு முதல்வராக இருந்த கலைஞர் அப்போது மத்திய அரசை கோருகிறார். ‘புதியதாக மதுவிலக்கு அமலுக்கு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி’ என்று மத்திய அரசு மறுக்க, அதற்காகவே மதுவிலக்கை கலைஞர் 1971ல் வாபஸ் வாங்குகிறார். யார் மறுத்தாலும், ஊடக மாய்மாலங்களால் மறைக்க நினைத்தாலும் இதுதான் வரலாறு.

சட்டமன்றத்தில் அப்போது கலைஞர் பேசும்போது, “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுகவோடு நட்புறவில் இருந்த ராஜாஜியும், காயிதேமில்லத்தும் மதுவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டாம் என்று கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதாலேயே இப்போது இந்த முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும், சரியானதும் மீண்டும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் கலைஞர் சமாதானம் சொன்னார்.

அதன்படியே படிப்படியாக 1973ல் கள்ளுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன. 1974ல் சாராயக்கடைகளும் மூடப்பட்டன. ராஜாஜிக்கும், காயிதேமில்லத்துக்கும் கொடுத்த வாக்கை கலைஞர் காப்பாற்றினார். இன்றுவரை மிகக்கவனமாக இது மறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக கலைஞரை வில்லனாக குறிவைத்து இவ்விவகாரத்தில் பேசுகிறார்கள். எனவே, மதுவிலக்கினை திடீரென கையில் எடுப்பவர்களின் நோக்கம் எதுவென்பது தெளிவாகிறது.

எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தபிறகு 1981ல் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் வருகிறது. தமிழ்நாடு வாணிபக் கழகம் எனப்படும் ‘டாஸ்மாக்’ 1983ஆம் ஆண்டுதான் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனமே ஒட்டுமொத்த மதுவிற்பனைக்கும் பொறுப்பேற்கிறது. மிகக்கவனமாக மதுவிலக்கு பிரச்சினையில் எம்.ஜி.ஆரின் பாத்திரமும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 2003ஆம் ஆண்டு ‘தமிழகத்தில் மது சில்லறை விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டாஸ்மாக் இருக்கும்’ என அத்திருத்தத்தில் இடம்பெறுகிறது. வைகோவுக்கு தைரியமிருந்தால், நேர்மையிருந்தால் இன்றைய டாஸ்மாக் சூழலில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்குமான தொடர்புகளையும் பேசட்டும்.

மதுவிலக்கு போராளி வைகோ நடுரோட்டில் நடந்து வருகிறாராம். டாஸ்மாக்கில் புரட்சி கண்ட புரட்சித்தலைவி வெயில் என்றும் பாராமல் அவரை சாலையில் சந்தித்து, எதற்காக இந்த போராட்டம் என்று கேட்கிறாராம். வைகோ விளக்குகிறாராம். தமிழ்நாட்டில் மேடைநாடகங்கள் அருகி வருகிறது என்று யார் சொன்னார்கள்?

இன்று திடீரென மதுவிலக்கு கொண்டுவரவேண்டுமானால் நமக்குத் தெரிந்து பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.

ஒன்று. அரசின் நிதிநிலைமை ‘தள்ளாடும்’. குறிப்பாக தமிழக அரசு எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக அறிவித்து வரும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் மது வருவாயிலிருந்தே வருகிறது. மதுவிலக்கு கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டங்களை நிறுத்த முடியாது. இதற்கு தேவையான நிதி வருவாய்க்கு வேறேதேனும் ஆதாரத்தை தேடவேண்டும்.

இரண்டு. மதுவுக்கு அடிமையாகி விட்ட மக்களை திருத்துவது. மது கிடைக்கவில்லையெனில் கள்ளச் சாராயத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்திலேயே கூட மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே சம்பவத்திலேயே மரணமடைந்தனர்.

அரசு, ‘டாஸ்மாக்’ நடத்துவதாலேயே மட்டும் மது குடிப்பதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆணுறை அணிந்தால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக ஆணுறைகளை அரசு வழங்குவதை கள்ள உறவுகளை ஊக்குவிப்பதாக புரிந்துகொள்ள முடியுமா என்ன?

மது ஓர் அரக்கன் என்பதிலேயோ, அது சமூகப் பிரச்சினை, மக்கள் அதிலிருந்து வெளிவரவேண்டும் என்பதிலேயோ மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்பிரச்சினையின் பின்னணிகளை அலசி ஆராயமல் வெறுமனே பிளாக் & ஒயிட்டாக மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று போராடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு என்றில்லாமல் நாடு முழுக்க ஒரே மாதிரியான நிலையை ஏற்படுத்துவதற்கான விவாதத்தை முதலில் தொடங்கவேண்டும். மதுவிலக்கு கொள்கையை மனதளவில் ஏற்றவர்கள் இதற்காக இயக்கங்கள் தொடங்கி மக்களிடம் பேசவேண்டும். மக்களின் மனமாற்றமின்றி, பங்களிப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.

சங்கக் காலத்தில் இருந்து குடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரே நாளில் மாறிவிடுவார்களா என்ன? முள்ளில் பட்ட சேலை. பொறுமையாகதான் எடுத்தாக வேண்டும்.

1 மார்ச், 2013

பாவமன்னிப்பு?

பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. அமைதிப் போராட்டங்களுக்கான உரிமையை பிரிட்டன் எப்போதும் காக்கக்கூடிய நிலைக்கு நாமெல்லாம் உறுதி ஏற்க வேண்டும்.

- ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகையாளர் பதிவேட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரான், பிப். 20, 2013 அன்று எழுதியது... 

“அமிர்தசரஸ் நகரம் அன்று இருந்த நிலையை உணர்ந்த பலர் நான் செய்தது சரியென்று சொல்கிறார்கள். நிறைய பேர் நான் மாபெரும் தவறு இழைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள். நான் இப்போது சாக விரும்புகிறேன். மேலுலகம் சென்று என்னை படைத்தவனிடம் நான் செய்தது சரியா, தவறா என்று கேட்கப்போகிறேன்” மரணப்படுக்கையில் ஜெனரல் டயர் சொன்ன வாசகம் இது. பாரிசநோய் தாக்கியிருந்ததால் அப்போது பேசுவதற்கே மிகவும் சிரமப்பட்டார். உயிரைவிடும் கடைசி நொடியிலும் கூட அவருக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை மட்டும் மறக்கவேயில்லை. 

டயரால் மட்டுமல்ல. ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. இருந்தும் இன்னும் இந்தியர்களால் மறக்க முடியாத, ஜீரணிக்க முடியாத துயர சம்பவம் அது.

முதல் உலகப்போரின் போது சுமார் பண்ணிரெண்டு லட்சம் இந்தியர்களை இராணுவ வீரர்களாகவும், தொழிலாளர்களாகவும் போரில் ஈடுபடுத்தியது பிரிட்டிஷ் அரசு. மனிதவளம் மட்டுமின்றி உணவு, செல்வம் என்று போருக்காக இந்தியாவின் வளங்கள் சுரண்டப்பட்டன. வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த அநியாய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. போரின் முடிவில் 43,000 இந்தியர்கள் பிரிட்டனுக்காக போர்க்களத்தில் உயிரிழந்தார்கள் என்கிற தகவலை சிவில் மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இப்படிப்பட்ட கொந்தளிப்பான சூழலில் பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் கூட்டங்கள் போடவோ, போராட்டங்கள் நடத்தவோ தடை விதித்திருந்தார். 

1919, ஏப்ரல் 13. பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் வைசாகி பண்டிகைக்காக அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்று மும்மதத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சுமார் இருபதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். மாலை 4.30 மணிக்கு விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெனரல் டயர் சுமார் நூறு வீரர்களோடு மைதானத்துக்கு வந்தார். அவர்களில் ஐம்பது பேர் ஆயுதம் தரித்திருந்தார்கள். மெஷின்கன் ஏந்திய இரண்டு வாகனங்களும் வந்தன. ஆனால் மைதானத்துக்குள் நுழையும் பாதை குறுகியதாக இருந்ததால், அவ்வாகனங்கள் உள்ளே நுழைய முடியவில்லை.

மக்களை கலைந்துப்போகச் சொல்லி அவர் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. பிற்பாடு விசாரணையின் போது இதற்கு அவர் சொன்ன விளக்கம் வேடிக்கையானது. “கூட்டத்தை கலைக்க நான் அங்கே செல்லவில்லை. அவர்களது ஒழுங்கீனத்துக்காக தண்டிக்க மட்டுமே விரும்பினேன்”.

சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். துப்பாக்கிகள் வெறித்தனமாக பத்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக முழங்கிக்கொண்டே இருந்தது. தோட்டாக்கள் தீரும் வரை. மொத்தமாக 1,650 ரவுண்டுகள். முதற்கட்டமாக பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் உயிரிழந்தனர். எங்கும் மரண ஓலம். சுற்றி வளைக்கப்பட்டு விட்டதால் தப்பிக்க வழியே இல்லை. உயிர்பிழைக்க வழி தெரியாமல் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்த கிணற்றுக்குள் நிறைய பேர் குதித்தார்கள். துப்பாக்கி குண்டுக்கு தப்பி நெரிசலில் இறந்தவர்களும் கணிசமானவர்கள்.

“துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்துவிட்டதால் மட்டுமே என்னால் நடவடிக்கையை தொடரமுடியவில்லை. அவை இன்னும் கூடுதலாக இருந்திருந்தால் தீரும் வரை சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்” லண்டனில் நடந்த கமிஷன் விசாரணையில் ஜெனரல் டயர் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இச்சம்பவத்தை விவரிக்கும்போது சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்துப் போனார்கள்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல மாதங்களுக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அந்த மரணக் கிணற்றில் இருந்து மட்டுமே 120 உடல்கள் எடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்திருந்த கண்துடைப்பு விசாரணைக்குழு மொத்தமாக 379 பேர் மட்டுமே மரணித்தார்கள் என்று அநியாயமாக புளுகியது. பிற்பாடு அக்குழுவில் இருந்த ஒருவரே உண்மை எண்ணிக்கை பலமடங்கு அதிகம் என்று ஒப்புக்கொண்டார். 

கூடியிருந்த மக்களின் எண்ணிக்கையும், சுடப்பட்ட ரவுண்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் அரசு சொல்லும் எண்ணிக்கை நம்பவே முடியாதது. எனவே இந்திய தேசிய காங்கிரஸ் இப்படுகொலைகளை விசாரிக்க தனியாக ஒரு குழுவை நியமித்தது. 1,500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், தோராயமாக 1,000 பேர் உயிரிழந்ததாகவும் அக்குழு சொன்னது.

இந்திய வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியளவிலான இந்த படுகொலைகளை மூடிமறைக்க இங்கிருந்த இராணுவ அதிகாரிகள் எவ்வளவோ முயன்றனர். பிரிட்டனுக்கே கூட ஆறு மாதங்கள் கழித்து டிசம்பரில்தான் விஷயம் தெரிந்தது. நம்மூர் தலைவர்களுக்கே கூட உடனடியாக தெரியவில்லை. கல்கத்தாவில் இருந்த தேசியகவி இரபிந்திரநாத் தாகூருக்கு சம்பவம் நடந்து நாற்பது நாள் கழித்து 22 மே, 1919 அன்றுதான் தெரிந்ததாம். உடனடியாக கல்கத்தாவில் இதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினார்.

தனது மேலதிகாரியாக பஞ்சாப்பை ஆண்டுக்கொண்டிருந்த கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையருக்கு, ஜெனரல் டயர் இச்சம்பவம் குறித்த ஒரு அறிக்கையை அளித்திருக்கிறார். அதில் ‘இந்தியர்கள், புரட்சிகர ராணுவத்தை கட்டமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினேன்’ என்று தன் வீரபிரதாபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், ‘நீங்கள் செய்ததுதான் சரி’ என்று ஒப்புக்கொண்டு டயரை பாராட்டியும் இருக்கிறார். பிற்பாடு இருபத்தோரு ஆண்டுகள் கழித்து இச்செயலுக்காக லண்டனில், பஞ்சாபை சேர்ந்த உத்தம்சிங் எனும் வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார் ஓ’ட்வையர்.

வின்ஸ்டன் சர்ச்சில், ஹென்றி அஸ்க்வித் போன்ற பிரிட்டன் தலைவர்கள் அப்போதே இப்படுகொலைகளை கடுமையாக கண்டித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. படுகொலைகளை விசாரிக்க பிரிட்டிஷ் அரசு நியமித்த ஹண்டர் கமிஷனால் உருப்படியான நியாயம் இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. ஜெனரல் டயர் மட்டும் பணியிலிருந்து ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டார். படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு அரசியல் அழுத்தம் காரணமாக எந்த தண்டனையும் கிடைக்கவில்லை.

ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்து இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்தே அறுபத்து ஆறு ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஆனால் அதற்காக இங்கிலாந்து மன்னிப்பு கேட்குமென்று இந்தியர்கள் இன்றும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் சுதந்திரத்துக்குப் பிறகு 1961லும், 1983லும் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் குறித்து எதுவுமே பேசவில்லை. பிறகு 1997ல் வந்தபோது சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மவுன அஞ்சலி செலுத்தினார். “நம் கடந்தகாலத்தில் எவ்வளவோ கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஜாலியன் வாலாபாக் மாதிரி. வரலாற்றை திரும்பவும் மாற்றி எழுத முடியாது. வரலாறு ஏராளமான வருத்தங்களும், ஏராளமான மகிழ்ச்சிகளும் நிறைந்தது. வருத்தங்களை பாடமாக படித்து, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை கட்டமைக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று முன்னதாக இதைப்பற்றி பேசினார். இது நேரடி மன்னிப்பு இல்லையே என்று அப்போதே இந்தியர்கள் அங்கலாய்த்தார்கள்.

இப்போதும் அதேமாதிரிதான். பிரிட்டனின் பிரதமர் ஒருவர் ஜாலியன் வாலாபாக்குக்கு வருகை புரிந்தது இதுதான் முதல்முறை. வருகை பதிவேட்டில் வருத்தம் தெரிவித்திருக்கிறாரே தவிர, மன்னிப்பு கேட்கவில்லை என்று மீண்டும் குரல்கள் உயரத் தொடங்கியிருக்கின்றன.

எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்கவில்லை என்று வருத்தம் பரவியபோது, இந்தியப் பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் சொன்னதை நாம் நினைவுறுத்திப் பார்ப்போம். “தாம் பிறப்பதற்கு முன்பாகவே நடந்த சம்பவங்களுக்கு, இப்போது இருப்பவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டுமா என்ன?”

(நன்றி : புதிய தலைமுறை)