11 மே, 2016

சரவணா ஸ்டோர்ஸ்

எண்பதுகளின் தொடக்கத்தில் தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்தான். ஒரு தீபாவளிக்கு ‘வேட்டைக்காரன்’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கவுபாய் டிரெஸ். மற்றொரு முறை வாத்தியாரின் ‘காவல்காரன்’ படத்துக்கு tribute ஆக போலிஸ் டிரெஸ். அதற்கு மேட்ச்சாக பர்மாபஜாரில் ஒரிஜினல் ரிவால்வர் மாதிரியே தோற்றமளிக்கும் பிரபாகரன் துப்பாக்கி. அப்பா, ஒரு எம்.ஜி.ஆர் பைத்தியம். தீபாவளிக்கு தீபாவளி என்னை கோமாளி ஆக்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை கலகக்குரல் எழுப்பி ப்ரூஸ்லீ படம் வரையப்பட்ட பச்சை கலர் பனியன் ஒன்றை அடம்பிடித்து வாங்கி அவரை எரிச்சலுக்கு உள்ளாக்கினேன்.

அப்போதெல்லாம் தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸ் மளிகைக்கடையாகவோ, பாத்திரக்கடையாகவோ இருந்திருக்கலாம். உண்மையில் ரங்கநாதன் தெரு ஷாப்பிங் ஸ்ட்ரீட் ஆகவெல்லாம் இல்லை. உஸ்மான் ரோடுதான் ஃபேமஸ். ஷாப்பிங்குக்கு எல்லாரும் பூக்கடைக்குதான் போவார்கள். பிராட்வே போகும் பஸ்களில் கூட்டம் கும்மும். பூக்கடையை ஒப்பிடும்போது உஸ்மான்ரோடில் விலைவாசி ஒரு பத்து சதவிகிதம் அளவுக்காவது கூடுதலாக இருக்கும். எனவே, தி.நகரில் நெரிசலே இல்லாமல் ஷாப்பிங் செய்யலாம். நம்புங்கள். எண்பதுகளில் அப்படிதான் இருந்தது.
ரங்கநாதன் தெருவையே சரவணா தெரு என்று பெயர் மாற்றிவைத்து விடலாம் என்கிற நிலையெல்லாம் தொண்ணூறுகளில்தான் உருவானது. சூரத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து மற்ற கடைகளை ஒப்பிடும்போது 30% முதல் 40% வரை மலிவாக துணிகளை விற்றதும், சென்னையில் புதிதாக உருவாகி வந்த நடுத்தர வர்க்கம் அப்படியே சரவணாவுக்கு ‘ஜே’ போட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருமணத்துக்கு ஒரு குடும்பம் துணிகளுக்காக செய்யவேண்டிய பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கில் பணம் மிச்சமானது. சரவணாவின் புகழ் செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கமாகவும் பரவ, மக்கள் கூட்டம் கூட்டமாக ரயிலேறி வந்து துணிமணி வாங்கினார்கள். ரங்கநாதன் தெரு முக்கில் அன்பழகன் பழக்கடையில் கரும்பு ஜூஸ் குடித்தார்கள். கோன் ஐஸ் சாப்பிட்டார்கள்.

சரவணாவுக்கு முன்பாக அங்கே முருகன் டெக்ஸ்டைல்ஸ்தான் பிரபலமாக இருந்தது. ‘வாங்க வாங்க முருகன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று ஒரு கியூட்டான குழந்தை அழைக்கும் விளம்பரம் நினைவிருக்கிறதா? எனினும் சரவணாவோடு விலை விஷயத்தில் போட்டியிட முடியாமல் பலரும் பிசினஸை ஏறக்கட்டினார்கள். பிரபலமாக இருந்த ‘குமரன் டிரெஸ்ஸஸ்’, பனகல் பார்க் ‘குமார் சர்ட்ஸ்’ எல்லாம் காலி. பாரம்பரியமாக ராசியான துணிக்கடையென பெயரெடுத்த ‘நல்லி’ மாதிரி ப்ளேயர்ஸ் மட்டுமே சரவணாவையும் தாண்டி தாக்குப்பிடிக்க முடிந்தது.

கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க துணிமணிகளோடு மற்றப் பொருட்களையும் சரவணா அதே மலிவுவிலை டெக்னிக்கில் விற்க ஆரம்பித்தது. சரவணா என்கிற பிராண்ட் துணிக்கடையின் மூலம் பிரபலமாக ஏற்கனவே இருந்த பாத்திரக்கடை பிரும்மாண்டமாக உருவெடுத்தது. நகைக்கடையும் திறந்தார்கள். தொண்ணூறுகளின் இறுதியில் அண்ணாச்சி செல்வரத்தினத்தை அந்த பாத்திரக்கடை வாசலில் எப்போதும் பார்க்கலாம். கொஞ்சம் அழுக்காக கதர் வேட்டி, முரட்டுத் துணியில் தைக்கப்பட்ட வெள்ளைச் சட்டை என்று வியர்வை கசகசக்க நின்றுக்கொண்டே ஊழியர்களை வேலை வாங்கிக் கொண்டிருப்பார். கஸ்டமர்களை கண்டதும் கஷ்டப்பட்டு சிரிப்பார். யாராவது கம்ப்ளையண்ட் சொன்னால் அவரால் தாங்க முடியாது. ஊழியர்களிடம் கன்னாபின்னாவென்று கத்துவார். கஸ்டமர்கள்தான் அவருக்கு கடவுள்.

ஸ்தாபனம் கொஞ்சம் வளர்ந்ததும் ரேடியோ மற்றும் டிவியில் விளம்பரங்கள் தர ஆரம்பித்தார்கள். டிவி விளம்பரத்தின் மாடல் அண்ணாச்சியேதான். ‘நம்பிக்கை, நாணயம், கைராசி... உங்கள் சரவணா ஸ்டோர்ஸ்’ என்று theme signature வரும்போது அண்ணாச்சி கைகூப்பியபடியே வருவார். எனவே, இப்போது அண்ணாச்சியின் சகோதரர் மகன் சரவணன் விளம்பரத்தில் தோன்றுவது என்பது சரவணாவின் வரலாற்றில் புதியதல்ல. அண்ணாச்சியின் திடீர் மரணத்துக்குப் பிறகு சரவணா ‘பிரும்மாண்டமாய்’ மாறிய பிறகுதான் நடிக, நடிகையர்களை வைத்து விளம்பரங்கள் எடுக்கப்பட்டன.
இம்மாதிரி ஓனரே தோன்றும் விளம்பரங்கள் தமிழ் விளம்பரச் சூழலுக்கு வினோதமுமில்லை. விஜிபி சகோதரர்கள் கோட்டு, சூட்டு போட்டுக்கொண்டு விளம்பரங்களில் தோன்றுவார்கள். தவணைமுறையில் பொருட்களை விற்கும்போது, விற்பவன் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதால் நவீன உடைகளை அணிய வேண்டியதாகியது என்று அண்ணாச்சி வி.ஜி.சந்தோஷம், ‘தவணை முறை பிறந்த கதை’ நூலில் குறிப்பிடுகிறார். கோட்டு, சூட்டு போட்டவன் ஏமாற்ற மாட்டான் என்று மக்களுக்கு பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு.

விஜிபியில் இருந்து பிரிந்து தனிக்கடை போட்ட வசந்த் & கோ, வசந்த் அண்ணாச்சியும் கூட டிவி விளம்பரங்களில் அவரேதான் நடித்தார். தொண்ணூறுகளில் டிவி பார்த்தவர்கள், இன்னமும் அந்த அதிர்ச்சியில் இன்று மீண்டிருக்க மாட்டார்கள். அண்ணாச்சி வசந்த், நீட்டான கோட் & சூட்டில் ஒரு பெரிய காரில் இருந்து இறங்குவார். கல்லூரி இளம்பெண்கள் சூழ்ந்து அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பது மாதிரி கிரியேட்டிவ்வான விளம்பரம் அது. முரண் என்னவென்றால் வசந்த் அண்ணாச்சியின் சொந்த அண்ணாச்சியான குமரி ஆனந்தன் தீவிர காந்தியவாதி. கதர் தவிர வேறெதையும் அணிய மாட்டார்.

இந்த முதலாளிகளின் சுயவிளம்பரப் பெருமையாக மட்டும் இதை பார்க்காமல், சமூக உளவியல் காரணிகளோடு இந்தப் போக்கை பொருத்திப் பார்க்க வேண்டும். நாடார் சமூகத்தினர், நல்ல உடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இடுப்புக்கு மேலே ஆடை என்பது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு கனவாக இருந்திருக்கிறது. அவர்கள் சமூகப் பெண்களே மார்பை மறைக்க வேண்டுமானால், அதற்கு தனி வரி செலுத்த வேண்டும் என்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டார்கள் என்று வரலாற்றிலேயே ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் இருந்துப் பார்த்தால்தான் அச்சமூகத்தில் இருந்து பொருளாதார ரீதியாக வளர்ந்தவர்கள் வெள்ளைக்காரன் மாதிரி உடை அணிவதையும், அதை விளம்பரப் படுத்திக் கொள்ள விரும்புவதின் உளவியல் காரணங்களையும் உணர முடியும். நாடார்கள் விரும்பி துணிக்கடை நடத்துவது லாபம் கருதி மட்டுமல்ல. அவர்களது ஜீன்களில் பதிந்திருக்கும் ஆடை குறித்த அவர்களது முன்னோர்களின் கனவுகளின் காரணமாகவும்தான் என்றும் தோன்றுகிறது. கலர் கலராக ராமராஜனும், சரத்குமாரும் உடையணிந்து சினிமாவில் ஆடுவதை நகரங்களில் வசிப்பவர்கள் கிண்டலடிக்கிறோம். கோளாறு அவர்களது உடைத்தேர்வில் அல்ல. நம்முடைய பார்வையில்தான்.

7 மே, 2016

24

‘டைம் மெஷின்’ என்பதே காதில் பூ சுற்றும் ஐடியாதான். அறிவியல்ரீதியாக காலத்தின் முன்னும் பின்னும் நகரவேண்டுமென்றால் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடிய ஏதோ ஒரு சமாச்சாரத்தை நாம் கண்டறிய வேண்டும். அடுத்த நூறாண்டுக்குள் இது சாத்தியமாகும் வாய்ப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.

எனவே, இப்போதைக்கு டைம்மெஷின் கான்செப்ட் என்பது ஏழு கடல் ஏழு மலை தாண்டி வசிக்கும் கிளியின் கண்களில் மந்திரவாதியின் உயிர் இருக்கிறது என்பது மாதிரி லாஜிக்கில்லாத ஃபேன்ஸி கதைதான். அப்படிப்பட்ட மகா காதுகுத்தல் கதையை எடுத்துக் கொண்டு, திரையில் தெரியும் காட்சிகளை சாத்தியம் என்று மக்கள் நம்பும்படியான திரைக்கதையை எழுதுவது என்பது டைம்மெஷினை கண்டுபிடிப்பதைவிட சவாலான விஷயம். இயக்குநர் விக்ரம்குமார் இந்த சவாலை மிக சுலபமாக கடந்திருக்கிறார்.

“அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே”

என்று நடிகர் திலகம் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடும்போது அப்படியே உலக இயக்கம் freeze ஆகி நிற்கும் காட்சியை ஏ.பி.நாகராஜன் புனைந்திருப்பாரே நினைவிருக்கிறதா?

மீண்டும்-

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று அவர் தொடரும்போது உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கும். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு இந்த காட்சியை திரையில் பார்த்து நம் தாத்தாக்களும், அப்பாக்களும் எப்படி அசந்திருப்பார்களோ, அதே அசத்தலை மீண்டும் சாத்தியமாக்கி இருக்கிறது ‘24’. இந்தப் படத்தில் freeze ஒரு கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தோடு இயங்குகிறது.

ஷங்கரின் ‘ஐ’ ஒப்புக் கொள்வதற்கு முன்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘24’ படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் முடிவெடுத்திருந்தார். ‘யாவரும் நலம்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் குமார் இதை இயக்க திட்டமிட்டிருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையென்று ஆடம்பரமாக ஆரம்பித்தார்கள். “சிக்கலான கதை. ஆனால், 6 வயது முதல் 60 வயது வரை இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றெல்லாம் விக்ரம் பேட்டி கொடுத்தார். பிற்பாடு திரைக்கதை விவாதத்தில் நடிகர் விக்ரமுக்கும், இயக்குநர் விக்ரமுக்கும் முரண்பாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டது என்று சொன்னார்கள்.

இதே கதையை தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு சொன்னார் இயக்குநர் விக்ரம். தமிழில் பெரும் வெற்றி பெற்ற sci-fi கதையான ‘நியூ’வில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்த வேடத்தில் தெலுங்கில் மகேஷ்பாபுதான் நடித்திருந்தார். படம் அட்டர் ப்ளாஃப். எனவே, ‘தூக்குடு’வாக மசாலாவில் எகிறி அடித்துக் கொண்டிருந்த மகேஷ்பாபுவுக்கு அப்போதைக்கு அறிவியல் புனைகதையில் ஆர்வமில்லை. அது சரிதான். இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் ‘நேனொக்கடினே’ என்கிற sci-fi த்ரில்லரில் நடித்தபோது அந்த படமும் அட்டர்ப்ளாப்தான் ஆனது.

வெறுத்துப்போன இயக்குநர் விக்ரம்குமார், ‘இதயத்தை திருடாதே’ பாணியில் செம ரொமான்ஸாக ‘இஷ்க்’ படத்தை தெலுங்கில் இயக்கி, பிரும்மாண்ட வெற்றி பெற்றார். ஆனாலும் காலத்தில் முன்னும் பின்னும் நகரும் ஆர்வம் அவரை தூங்கவிடவில்லை. அப்போது நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என்று மூன்று தலைமுறையும் சேர்ந்து நடிக்கக்கூடிய கதை ஒன்றினை இயக்குநர்களிடம் நாகார்ஜூனா கேட்டுக் கொண்டிருந்தார்.

விக்ரம்குமார் தான மனசில் நினைத்திருந்த ‘24’ பாணியில் ‘காலத்தை ஏமாற்றும்’ கதை ஒன்றின் ஒன்லைனரை பிடித்து நாகார்ஜூனாவிடம் சொன்னார். நாகேஸ்வரராவின் ஆலோசனையின் பேரில் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்து ‘மனம்’ எழுதப்பட்டது. விக்ரம் மீது நம்பிக்கை வைத்து வேறெதையும் விசாரிக்காமல் கோடிகளை கொட்ட தயாரானார் நாகார்ஜூனா. ‘மனம்’, ஆந்திர மனங்களை மயக்கியது. போட்ட காசை பன்மடங்காக திருப்பி எடுத்தனர் நாகார்ஜூனா குடும்பத்தினர். படம் வெளியாகும்போது நாகேஸ்வரராவ் உயிரோடு இல்லை. தெலுங்கு சினிமாவின் legendக்கு மகத்தான tribute செய்துக் கொடுத்தார் விக்ரம்குமார்.

ஒருவகையில் விக்ரமுக்கே மீண்டும் தன் ‘24’ மீது பூரண நம்பிக்கை ஏற்பட ‘மனம்’ அடைந்த சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றிதான் காரணம். நடிகர் விக்ரமுக்கு முன்பு தயார் செய்திருந்த கதையை தூசு தட்டினார். திரைக்கதையில் நிறைய மாற்றங்களை செய்து சூர்யாவுக்கு சொன்னார். தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இது மிகப்பெரிய ரிஸ்க். பெரிய பட்ஜெட் கோரும் கதை. தன்னை நம்பி பணம் போடும் தயாரிப்பாளரை காம்ப்ரமைஸ் செய்ய முடியாது. எனவே, தானே தயாரிக்க முன்வந்தார். அவருக்கு இந்தப் படத்தில் நடிப்புரீதியாக எதிர்கொண்ட சவால்கள்தான் ஆர்வத்தைத் தூண்டியது. கொஞ்சமென்ன நிறையவே காஸ்ட்லியான ஆர்வம்தான். எனினும் ‘நந்தா’வில் தொடங்கி, அடுத்தடுத்து சூர்யா நிகழ்த்திப் பார்த்த பரீட்சார்த்த முயற்சிகள் புதிதல்லவே. ‘ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி’ என்று எம்.ஜி.ஆர் கணக்காக தானே தயாரித்து, மூன்று வேடங்களில் நடித்தார்.

‘24’ படத்தின் பின்னணிக்கதை இதுதான்.
முன்பு தான் ஒளிப்பதிவு செய்யவிருந்த இந்தப் படத்தினை இப்போது திரு எப்படி செய்திருக்கிறார் என்று பார்த்துவிட்டு அசந்துப்போன கேமிரா பேரரசன் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் நெகிழ்ந்துப் போய் பாராட்டுகிறார். இன்று ‘24’ பார்த்துவிட்டு, இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் பொழியும் பாராட்டுமழையில் நனைய இயக்குநர் விக்ரம்குமாருக்கு எவ்வளவு அருகதை இருக்கிறதோ, அதே அருகதை இந்த கதையை நம்பி வாழ்க்கையை பணயம் வைத்த சூர்யாவுக்கும் இருக்கிறது.

‘ஆத்ரேயாடா’ என்று சர்ச்சில் சாத்தானாக மாறி விஸ்வரூபம் எடுக்கும் வில்லன் சூர்யா, ‘டேய் பெரியப்பா’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டும் இளைய சூர்யா, ‘சாதிச்சிட்டேன் ப்ரியா’ என்று யுரேகா கூச்சலிடும் விஞ்ஞானி சூர்யாவென்று தன் நடிப்பு வாழ்வின் அடுத்த பரிமாணத்துக்கு அசத்தலாக நகர்ந்திருக்கிறார். பரபரவென்ற த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தில் சண்டைக் காட்சிகளே திரைக்கதையில் இல்லை என்கிற பலவீனத்தை புத்திசாலித்தனமான காட்சிகளால் அசால்டாக கடந்திருக்கிறார் இயக்குநர் விக்ரம்குமார்.

24 மணி நேரம் முன்னும் பின்னும் நகரலாம் என்கிற அதிசயப் பொருள் கிடைத்தவுடன் சாமானியனான வாட்ச் மெக்கானிக், அதை எதற்கு எப்படி பயன்படுத்துவான் என்று தரைலோக்கலுக்கு சிந்தித்து, ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மைண்ட்வாரில் ரசிகர்களின் இதயத்தை ‘திக்’கிடவைத்து, இந்தியத் திரையுலகத்துக்கே கதை சொல்லும் பாணியில் புதிய வாசல்களை திறந்து கொடுத்திருக்கிறது விக்ரம்குமார் - சூர்யா கூட்டணி. சூர்யாவைப் பொறுத்தவரை இது ‘கஜினி’க்கும் மேலே.
இந்தப் படத்தைப் பார்ப்பதே கூட ஒரு வகையில் டைம் டிராவல்தான். நாம் மூன்று மாதம் காலத்தில் முன்னோக்கிப் போய் பார்க்கிறோம். ஏனெனில் கதை நடப்பது ஆகஸ்ட்டு 2016ல்.

‘24’ கொடுப்பது அனுபவம். அதை 626 வார்த்தைகளில் இதுபோல விமர்சனமாக எழுதியோ, வாயால் ஹெலிகாஃப்டர் ஓட்டியோ யாருக்கும் புரியவைத்துவிட முடியாது. தவறவிடாமல் நீங்கள் முதலில் போய் படத்தைப் பாருங்கள். பிடித்திருந்தால் குடும்பத்தோடு இன்னொரு முறை போய் பாருங்கள். வேறென்ன சொல்லமுடியும்?

22 ஏப்ரல், 2016

நிறைந்த ஒளியில்

 சினிமாவுக்கு மட்டுமல்ல. நூல்களுக்கும் நெகட்டிவ்வாக ‘டைட்டில்’ வைக்கக்கூடாது. நிறைவான சமாச்சாரங்கள் அடங்கிய இந்த நூலுக்கு போய் ஏன் ‘குறைந்த’ டைட்டில் என்று தெரியவில்லை. இலக்கியம் என்பது மாதிரியெல்லாம் பம்மாத்து செய்யாமல், வெகுசுவாரஸ்யமாக - அதேநேரம் சிந்தனையைத் தூண்டும் வகையிலான நேர்மையான பத்தி எழுத்து பிரபுகாளிதாஸ் எழுதியிருக்கும் ‘குறைந்த ஒளியில்’.

சாருவின் சிஷ்யன். ஆனால், குருவே சந்தோஷப்படக்கூடிய அளவுக்கு எழுத்து நுட்பத்தில் அவரையும் தாண்டிச் செல்கிறார். 2000ங்களின் தொடக்கத்தில் விகடன் டாட் காமில் சாரு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ பகுதியின் லேட்டஸ்ட் வெர்ஷன் மாதிரியிருக்கிறது. நூல் முழுக்கவே எந்த வகைப்பாட்டிலும் அடங்காத deconstructionதான்.

தூங்குவதற்கு முன்பு ஒரு நாற்பது, ஐம்பது பக்கங்கள் வாசிக்க வேண்டும் என்று விரதம். நேற்று இரவு இந்த நூலை வாசிக்கத் தொடங்கியவுடன் தூக்கத்தையே மறந்துவிட்டு, முழுக்க வாசித்த பின்புதான் வைத்தேன். ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்பது மாதிரி ‘குறைந்த ஒளியில்’ தரக்கூடிய வாசிப்பின்பத்துக்கு நான் கேரண்டி.

நூலில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியல் போட்டு, நீங்கள் படம் பார்க்கும் முன்பாகவே, நாம் பார்த்துவிட்ட படத்தின் கதையை காட்சிவாரியாக சொல்ல வரவில்லை.  ஒரே ஒரு சாம்பிள் மட்டும்.

பிரபு, ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருக்கிறார். பக்கத்தில் ஒரு வீடு. மாடியில் ஆள் அரவமே இல்லை. ஆனால், இரவுகளில் தொடர்ந்து இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் நிஜமாகவே பாட்டுதான் கேட்கிறதா அல்லது அது தன்னுடைய மனப்பிராந்தியா என்று குழம்புகிறார்.

ஒருநாள் பிரபுவின் மகன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். என்னடா என்று இவர் கேட்கிறார். பக்கத்துலேருந்து பாட்டு கேட்குதுப்பா என்கிறான் அவன். எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது என்கிறார் இவர்.

உலகத்தரமான சிறுகதையாக வந்திருக்க வேண்டிய விஷயத்தை, ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸாக முடித்துக் கொண்டிருக்கிறாரே என்று பிரபு மீது கோபம்தான் வருகிறது.

இப்படிதான் நூல் முழுக்கவே பிரபுவின் ரகளையான அனுபவங்களும், அபிப்ராயங்களும். Pulp என்பதை ஓரிடத்தில் குப்பை என்கிறார் பிரபு. ஆனால், இந்த நூலையும் pulp வகையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது. Pulpதான் எழுத்தில் மிகச்சிறந்தது, எழுதுவதற்கும் கடினமானது, ஆனால் வாசிப்பதற்கு இலகுவானது என்பது நம் அபிப்ராயம்.

பொதுவாக இதுபோல இணையத் தளங்களில் எழுதியவற்றை தொகுக்கும்போது பக்கத்துக்கு பக்கம் ஒருமாதிரியான தொடர்ச்சியில்லாத தன்மை வெளிப்படும். ஆனால், இந்நூல் முழுக்க திட்டமிட்டு ஒரே அமர்வில் எழுதியதைப் போன்ற கச்சிதமான எடிட்டிங்.

நூல் விமர்சனம் எனும்போது ஏதேனும் குறையை சொல்லியே ஆகவேண்டும். ‘குறைந்த ஒளியின்’ புத்தகத்துடைய பெரிய குறையே ‘நான்’தான். நூல் முழுக்க எத்தனை ‘நான்’கள் என்று கேட்டு வாசகர்களுக்கு போட்டிவைத்து, பரிசு கொடுக்கலாம். முன்பு ஒரு சினிமாவில் எத்தனை முறை ரகுவரன் ‘ஐ நோ’ சொல்லுகிறார் என்று இப்படிதான் போட்டி வைத்தார்கள்.

வெகுஜன எழுத்தில் இந்த தன்னிலைப் பிரச்சினையை சுலபமாக கடப்பார்கள். “வண்ணத்திரை சார்பாக ‘நாம்’ நமீதாவை சந்தித்தபோது, ‘வா மச்சான், இப்போதான் வழி தெரிஞ்சுதா?’ என்று பிரும்மாண்டமான தன் நெஞ்சை நிமிர்த்தி அமர்க்களமான வரவேற்பைக் கொடுத்தார்” என்று தன்னிலையை பன்மையாக்கி, ‘நான்’ என்கிற அகங்காரத்தின் காரத்தை குறைப்பார்கள். சில வாரங்கள் கட்டுரைகளை ‘நான்’ அடிப்படையில் வடிவமைத்து, ரொம்ப மொக்கையாக இருக்கிறது என்று ஆனந்தவிகடனே யூ டர்ன் அடித்த சம்பவம்கூட நடந்தது. ஒன்றுமில்லை. ‘நான்’ என்பதை வாசிக்கும்போது எழுதியவனுக்கு கொம்பு முளைத்திருக்கிறதோ என்கிற எண்ணத்தை வாசகனுக்கு ஏற்படுத்தும். அதுதான் பிரச்சினை. இவர் Made in Charu Vasagar Vattam என்பதால் ‘நான்’ ‘நான்’ என்று ஏலம் போட்டிருக்கிறார். அடுத்தடுத்த நூல்களில் கொஞ்சம் தவிர்க்கலாம்.

முதல் நூல் என்பது ஓர் ஆசிட் டெஸ்ட். தன்னுடைய இலகுவான மொழிவன்மையாலும், அனுபவங்கள் தந்த content பலத்தாலும் அதை அசால்டாக கடந்திருக்கிறார் பிரபு காளிதாஸ்.
நூல் : குறைந்த ஒளியில்
எழுதியவர் : பிரபு காளிதாஸ்
விலை : ரூ.120
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

7 ஏப்ரல், 2016

கலைஞரின் சாதி!

சிறுவயதிலிருந்தே அந்த சலூனில்தான் சிகையலங்காரம். அங்கே காந்தி கண்ணாடியும், குல்லாவும் போட்ட ஒரு மனிதரின் கருப்புவெள்ளை புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அந்த மனிதர் சலூன் உரிமையாளரான மோகன் அண்ணாவின் தாத்தா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபிறகுதான் அவரை அறிந்துக் கொண்டேன்.

ஒருமுறை முடிவெட்டிக் கொண்டிருந்தபோது அண்ணனிடம் கேட்டேன். “அண்ணே, அந்த போட்டோலே இருக்குறது யாரு?”

“தியாகி விஸ்வநாததாஸ். எங்க ஜாதித்தலைவரு”

“ஓஹோ. அவர் என்ன பண்ணாரு?”

“அதெல்லாம் தெரியாது. சுதந்திரப் போராட்ட தியாகின்னு மட்டும்தான் தெரியும். எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவர் போட்டோ வேணுமில்லே? அதனாலே இவரை செலக்ட் பண்ணிக்கிட்டோம்”

விஸ்வநாததாஸ், சங்கரதாஸ் சாமிகளிடம் சீடர். காந்தியடிகளின் தொண்டர். முப்பது முறை சிறை சென்றவர். நாடகமேடையில் முருகனாக தோன்றினாலும் கதர்தான் உடுத்துவார். புராண நாடகங்களிலும் சுதந்திரப் போராட்ட கீதங்களை பாடி வெள்ளையர் அரசால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர். நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே காலமானவர் என்று எனக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.

“எங்க ஜாதித்தலைவரை பத்தி, எனக்குத் தெரிஞ்சதைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு” என்றார்.

“இப்பவே ரொம்ப ஃபேமஸான தலைவர் இருக்காரே அண்ணே? திமுககாரரான நீங்க எதுக்கு காங்கிரஸ் தலைவரை முன்னிறுத்தறீங்க?”

“கலைஞரைதானே சொல்லுறே? அவர்தான் என் படத்தை ஜாதி போஸ்டர்லே போடக்கூடாதுன்னு சொல்லிட்டாரே? ஜாதின்னு சொல்லி அவரை யாரும் போய் பார்க்கவும் முடியாது. கட்சி மட்டும்தான் அவருக்கு கணக்கு” என்றார்.

இதுதான் கலைஞர். கலைஞரை சாதிவெறியர் என்று இன்று இணையங்களில் அர்ச்சிப்பவர்கள் அவரை என்றாவது அவருடைய சொந்த சாதி சங்க கூட்டங்களில் கண்டதுண்டா? கலைஞரின் சாதிக்காரன் என்று சொல்லி யாரேனும் யாரையேனும் அதிகாரம் செய்ததுண்டா? அரசியல் / அரசு பதவிகளில் தன்னுடைய சாதிக்காரர்களுக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்தார் என்று நாக்கு மேல் பல்லை போட்டு பேசமுடியுமா?

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜூனியர் விகடன்’ ஏடு, ஒரு கட்டுரை எழுதியது. “ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து கொண்டாடினார் கருணாநிதி” என்று காரசாரமாக விமர்சித்தது. வாசித்த சூத்திரமகாஜனங்களும் பதறிப்போய், “ஒரு சூத்திரனுக்கு இப்படியொரு வாழ்வா?” என்று மனம் வெதும்பினார்கள்.

ஜூ.வி. இதழ் அக்கட்டுரையில் ‘வேண்டுமென்றே’ மறைத்த செய்தி ஒன்றுண்டு. கலைஞர், பட்டுவேட்டி பட்டுசட்டை அலங்காரத்தில் கலந்துக்கொண்ட நிகழ்வு தஞ்சையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி. பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் கலைஞர்கள் ஆடிய நிகழ்ச்சி. கரைவேட்டியை தவிர வேறு உடையை நாடாத கலைஞர், அன்று ஏன் பட்டினை தேர்ந்தெடுத்தார் என்கிற ரகசியம் அவரது சமூகத்தாருக்குதான் தெரியும். ஆயிரம் ஆண்டு சாதிய இழிவை துடைத்தெறிந்துவிட்டோம் என்பதன் அடையாளமாகதான் அன்று கலைஞர் பட்டு வேட்டி, சட்டையில் ஜொலித்தார்.

எதற்கு பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டும்? கிராமங்களில் இன்றும் சாதாரணமாக ‘அம்பட்டன் கருணாநிதி’ என்றுதான் கலைஞர் வெறுப்பாளர்கள் அருவருப்போடு விளிக்கிறார்கள். கழகத்தை ‘அம்பட்டன் கட்சி’ என்றுதான் ஐம்பது ஆண்டுகளாக விமர்சிக்கிறார்கள். இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக கழகத்துக்காக / கலைஞருக்காக பாடுபட்ட அண்ணன் வைகோவுக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டதே என்பதுதான் ஆதங்கம். “வைகோவின் பேச்சை கண்டிக்கிறோம்” என்று கூறிவிட்டு, கூடவே ‘ஆனால்’, ‘அதே நேரம்’ போடும் அறிவுஜீவிகளும் இதே ரகம்தான். இடதுசாரிகளை சொல்லவே தேவையில்லை. அவர்கள் சாதி சங்கம் நடத்தப் போகலாம்.

‘திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிப்பதில் எவரையும்விட அதிக கடமை கொண்டவர்களான தலித்துகளே இதற்கு துணைபோகக்கூடிய விசித்திரமான சமூகமுரணைதான் எப்படி புரிந்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

1 ஏப்ரல், 2016

டிஜிட்டல் ராஜா!

 சினிமா படங்களின் டைட்டிலை உற்றுக் கவனிப்பவர் என்றால் உங்களுக்கு ஜி.பாலாஜி என்கிற பெயர் பரிச்சயமானதுதான். ‘டிஜிட்டல் சினிமா டிசைனர்’ என்கிற டைட்டிலுக்கு கீழே இவரது பெயர் இருக்கும்.

‘லிங்கா’, ‘ரஜினி முருகன்’, ‘கதகளி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நண்பேண்டா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழ்ப்படம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘வல்லினம்’, ‘ஹரிதாஸ்’, ‘தங்க மீன்கள்’, ‘பத்து எண்றதுக்குள்ளே’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என்று ஏராளமான படங்களுக்கு இவர்தான் டிஜிட்டல் சினிமா டிசைனர். இப்போது ‘இது நம்ம ஆளு’, ‘வெற்றிவேல்’, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ’பிரம்மோத்சவம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலகத்திற்கு நேர் பின்னால் இருக்கும் அவரது ஸ்டுடியோவில் சந்தித்தோம். தமிழ் சினிமாவின் டிஜிட்டல் வரலாற்றை விவரித்தார்.
“நான் ரொம்ப செண்டிமெண்டாதான் இந்த ரூமை வாடகைக்கு எடுத்து இங்கே உட்கார்ந்து வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த அறைக்கு இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான இடம் உண்டு. எண்பதுகளோட இறுதியிலே ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் நவோதயா ஸ்டுடியோஸ் இதே அறையில்தான் ஆசியாவின் முதல் டிஜிட்டல் ஏவிட் எடிட்டிங் ஸ்டுடியோவை அமைச்சாங்க.

டிவியில் ‘பைபிள் கதைகள்’னு தொடர் எடுக்குறதுக்காக இந்த டெக்னாலஜியை பல லட்ச ரூபாய் செலவில் கொண்டுவந்தாங்க. அப்போ அது சக்சஸ் ஆகலை. அந்த தொடரும் ஏதோ சில காரணங்களால் சில வாரங்களிலேயே நின்னுடிச்சி.

அப்போ கமல் சார் நவோதயாவில் ‘சாணக்யன்’ மலையாளப் பட்த்தில் நடிச்சிருந்தார். எப்பவுமே டெக்னாலஜியில் அப்டேட்டா இருக்கணும்னு நெனைக்கிற அவர், ஏவிட் எடிட்டிங் பற்றி ரொம்ப ஆர்வமா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டாரு. இந்திய சினிமாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ரியல் மீடியா நிறுவனத்தினரும் கமல் சாருக்கு நண்பர்கள்தான். அவங்களும் அடிக்கடி டிஜிட்டலில் என்னென்ன அப்டேட்ஸ்னு சார் கிட்டே சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்படிதான் முதன்முதலா ‘மகாநதி’ படத்தை கம்ப்ளீட்டா டிஜிட்டல் எடிட்டிங்கில் செஞ்சாங்க. ஃபிலிமில் ஷூட் பண்ணி அதை அப்படியே ஸ்கேன் பண்ணி கம்ப்யூட்டருக்கு கொண்டுவந்து - டெலிசினின்னு சொல்லுவாங்களே, அது இதுதான் - எடிட் பண்ணி மறுபடியும் பிலிமுக்கு டிரான்ஸ்பர் பண்ணனும்னு காதை சுத்தி மூக்கைத் தொடுற கடினமான வேலைதான். ஃபிலிம் புரொஜெக்‌ஷனில் டப்பிங் பேசியிருப்பாங்க. அது டிஜிட்டலில் sync ஆகாது. லிப் மூவ்மெண்ட் ஏடாகூடமா போகும். அதனாலேயே திரும்பத் திரும்ப நாலைஞ்சி முறையெல்லாம் அந்தப் படத்துக்கு டப்பிங் பேசிக்கிட்டே இருக்க வேண்டியிருந்தது.

‘என்னப்பா இது’ன்னு நிறைய பேர் சலிச்சிக்கிட்டாங்க. ‘நாம ஒரு புது டெக்னாலஜியை அறிமுகப்படுத்தறோம். அதோட நிறைகுறைகளை முதன்முதலா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுறது நாமதான். அதனாலே சில சிரமங்கள் இருக்கதான் செய்யணும். அதுக்காக நம்ம கடமையிலிருந்து பின்வாங்கிட கூடாது’ன்னு கமல்சார்தான் சமாதானப்படுத்தினாராம். இந்தியாவில் கம்ப்யூட்டர் என்பதையே ரொம்ப பேர் கண்ணால கூட பார்த்திருந்திருக்க முடியாத சூழலில், இருபத்து மூணு வருஷம் முன்னாடி ஒரு தமிழ்ப் படம் முழுக்க டிஜிட்டல் எடிட்டிங்கில் உருவான கதை இதுதான்.

முதல்லே டிஜிட்டல் எடிட்டிங் - அதைத் தொடர்ந்து டிஜிட்டல் சவுண்டு (டால்பி, டிடிஎஸ் முதலியன) - விஷூவல் எஃபெக்ட்ஸ் & ஆப்டிகல்ஸ் - டிஜிட்டல் கலர் கரெக்‌ஷன் - இப்போ டிஜிட்டல் புரொடக்‌ஷன். சினிமா டிஜிட்டலில் கடந்து வந்திருக்கும் பாதையின் வரிசை இதுதான்...’’ என்கிறார் பாலாஜி.
இதுலே டிஜிட்டல் சினிமா டிசைனரோட வேலை என்ன?

பிலிம் இருக்குறப்போ லேப் என்ன வேலை செஞ்சதோ அதுமாதிரி வேலைன்னு குத்துமதிப்பா புரிஞ்சுக்கங்க. முன்னாடியெல்லாம் ஷூட் பண்ணி, அதை லேபுக்கு கொண்டு போய் கழுவி, டப்பிங் சேர்த்து, ரீரெக்கார்டிங் பண்ணி, எடிட்டிங்குக்கு அனுப்பி, பிரிண்டு போட்டு... இதெல்லாம் ஃபிலிமில் நிறைய பேரு பண்ணிக்கிட்டு இருந்தாங்க இல்லையா?

இந்த வேலையை எல்லாம் கம்ப்யூட்டர் துணையோட நான் ஒருத்தன் மட்டுமே செய்யுறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்றன்றைக்கு ஷூட் பண்ணுற விஷூவல்களை டிஜிட்டலா எல்டிஓங்கிற டேப்பில் ரெக்கார்ட் பண்ணி பேக்கப் எடுத்து வெச்சுப்பேன்.

எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங், வீ.எஃப்.எக்ஸ்-னு எதுக்கு தேவைப்பட்டாலும் தேவைப்படுற நேரத்துலே இந்த டேட்டாவை கொடுக்குறது. அப்பப்போ அதுலே அப்டேட் ஆகுற வேல்யூஸையும் சேர்த்து வெச்சுக்குறது. கடைசியா ஒரு படம் தியேட்டருக்கு போகிற நிலை வரைக்கும் என்னோட வேலை இருந்துக்கிட்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமா சொல்லணும்னா ஒரு பெரிய நிறுவனத்துக்கு பேக் (BACK) ஆபிஸில் இருந்து என்னவெல்லாம் செஞ்சுக் கொடுப்பாங்களோ, அதுமாதிரி சினிமாவுக்கு நான் பேக் ஆபிஸுன்னு சொல்லலாம். நான் ஒர்க் பண்ணுற படங்களுக்கு கலர் கரெக்‌ஷனும் நானே செஞ்சிக் கொடுத்துடறேன். சிம்பிளா சொல்லணும்னா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நாங்க ரொம்ப முக்கியம்.
இந்த மாதிரி டிஜிட்டல் பேக்கப் (Back Up) ஒரு சினிமாவுக்கு ரொம்ப முக்கியமா?

ஆமாம். ஒரு தயாரிப்பாளர், தான் எடுத்த மொத்தப் படத்தையும் அவரோட கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் எல்லா வேலையையும் முடிச்சி காப்பி பண்ணி வெச்சிருந்தாரு. போன டிசம்பருலே வெள்ளம் வந்தது இல்லையா? அந்த வெள்ளத்துலே அவருடைய வீடு மூழ்கி, கம்ப்யூட்டர் முழுக்க நனைஞ்சிடிச்சி. அந்த ஹார்ட் டிஸ்கை இப்போ எங்கிட்டே கொண்டுவந்து ஏதாவது பண்ணி படத்தை எடுக்க முடியுமான்னு கேட்குறார். இதுக்குதான் நாங்க வேணுங்கிறது. ஒவ்வொரு படத்தையும் நாலைஞ்சு காப்பி பேக்கப் எடுத்து வேற வேற லொக்கேஷனில் பாதுகாப்போம். எந்த சூழலிலும் படக்குழுவினரோட உழைப்பு வீணா விழலுக்கு இறைச்சா நீரா ஆகவே ஆகாது.

சர்வதேச அளவிலேயே ஒரு படம் எடுக்கப்படறப்போ அப்பப்போ முறையான பேக்கப் செஞ்சு வச்சுக்கணும்னு ஒரு ரூல் இருக்கு. அப்போதான் இன்சூரன்ஸே பண்ண முடியும்.

இந்த ஃபீல்டுக்கு எப்படி வந்தீங்க?

அம்மா, சிவாஜி ரசிகை. எப்பவும் சிவாஜி படங்களை பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அவங்களோட சேர்ந்து பார்த்து, பார்த்து எனக்கு சினிமா மேலே ஆர்வம் வந்தது. ஆனா, சினிமாவில் என்னவா ஆகணும்னு ஐடியாவே இல்லை. தொண்ணூறுகளில் ‘ஜூராசிக் பார்க்’, ‘டைட்டானிக்’ மாதிரி படங்களை பார்த்துட்டு, அனிமேஷன் துறையில் வேலை பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன். அனிமேஷன் கத்துக்கிட்டு வேலை தேடினேன்.

நண்பர் ஒருவர் மூலமா ‘சேது’ படத்தோட எடிட்டர் ரகுபாபு சாரோட அறிமுகம் கிடைச்சுது. அவர் கிட்டே அசிஸ்டெண்ட் எடிட்டரா சேர்ந்தேன். நான் வேலை பார்த்த முதல் படம் ‘கும்மாளம்’. நாலஞ்சி வருஷம் அவர்கிட்டே வேலை பார்த்துட்டு, ஏவிட் எடிட்டிங்குக்காக ஏவிஎம்மில் ஒரு ஸ்டுடியோ போட்டோம்.

ஏவிட் சாஃப்ட்வேர் விலையே 30 லட்சரூபாய் இருந்தது. அவங்க ஒரு லட்ச ரூபாய் விலையிலே ஒரு சாஃப்ட்வேர் கொண்டுவந்தாங்க. அதை இன்ஸ்டால் பண்ணிட்டு லேப்டாப் மூலமா ஷூட்டிங் ஸ்பாட்டுலேயே எடிட்டிங் பண்ணலாம்னு சான்ஸ் கேட்டு அலைஞ்சோம். அப்போலாம் ஃபிலிம் எடிட்டிங்குக்குதான் மவுசு இருந்தது. ஏவிட்டுன்னாலே இங்கே நிறைய பேருக்கு அலர்ஜி.

ஆனா, மலையாளப்பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஏவிட் அல்வா மாதிரி. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சி படம் அவங்களுக்கு பண்ணிக் கொடுத்தோம். கொஞ்சம் கொஞ்சமா சினிமாவோட தேவைகள் கம்ப்யூட்டரை சார்ந்து அமைய ஆரம்பிச்சது. இத்துறையிலே கம்ப்யூட்டர் கத்துக்காதவங்க பல நூறு பேர் வேலை இழக்க ஆரம்பிச்சாங்க.

2004-05 காலக்கட்டத்தில் டிஜிட்டல் கேமிராவால் ஷூட் பண்ணுற கல்ச்சர் வந்தது. ரெட் கேமிராவோட வரவு, திடீர்னு நம்ம சினிமாவோட குவாலிட்டியை பல படிகள் முன்னாடி கொண்டுப் போச்சி. எடிட்டிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட்புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாம் ஜெட் வேகத்தில், கூடுதல் தரத்தில் உருவாக ஆரம்பிச்சிது.

2006ல் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ‘பேரழகன்’ படத்தை க்யூப் மூலமா டிஜிட்டல் புரொஜெக்டரில் காமிச்சாங்க. அதை பார்த்ததுமே இனிமே சினிமாவோட எதிர்காலம் டிஜிட்டலில்தான் இருக்குன்னு புரிஞ்சது.

சினிமாவுக்கு டிஜிட்டலா என்னென்ன வேலைகளை பார்க்க முடியுமோ, அதையெல்லாம் நாமதான் பார்க்கணும்னு முடிவெடுத்தேன். இப்போ நான் தனியா செய்யுற வேலைகளை பெரிய நிறுவனங்கள் (பெரும்பாலும் முன்னாள் லேப்கள்) செஞ்சுக் கொடுக்குது. ஆனா, தனிப்பட்ட முறையில் முழுப் பொறுப்பும் எடுத்துக்கிட்டு வேலை பார்க்கிறதுன்னா இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்தான் இருக்காங்க. அதில் நானும் ஒருவன்.
இந்த டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் பத்தி கொஞ்சம் சொல்லுங்க..?

ஒரு டிஜிட்டல் புரொஜெக்டரோடு, ஒரு கம்ப்யூட்டர் சர்வர் இணைந்திருக்கும். முன்னாடி மாதிரி ஃபிலிம் ஓட்டுற பிசினஸே கிடையாது. ஹார்ட் டிஸ்கில் காப்பி பண்ண படத்தை சர்வரில் அப்லோட் பண்ணிட்டா, அப்படியே ஓட்டலாம்.

க்யூப், யூஎஃப்ஓ, பிஎக்ஸ்டி, ஸ்கிராபிள், சோனின்னு நிறைய நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் தொழிலில் இருக்காங்க. ஹாலிவுட்டின் தரம் என்பது 2கே டிஜிட்டல். ஆனா, நாம ரொம்ப நாளாவே 1கே சினிமாவில்தான் இருந்திருக்கோம். இதை டிஜிட்டல் சினிமான்னு சொல்லாம, ஈ-சினிமான்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்போ நாமளும் 2கே-வுக்கு வேகமா மாறிக்கிட்டிருக்கோம்.

க்யூப்பில் ஒரு படம் 200 ஜிபி அளவுக்கு இருக்கும். ஆனா, யூஎஃப்ஓ டெக்னாலஜியில் 20ஜிபி லெவலுக்குதான் இருக்கும். நிறைய பேர் சேட்டிலைட்டில் இருந்து நேரடி ஒளிபரப்புன்னு நெனைச்சுக்கிட்டிருக்காங்க.

அப்படியில்லை. சர்வரில்தான் இருந்துதான் புரொஜெக்டர் மூலமா ஸ்க்ரீனுக்கு சினிமா வருது. ரியல்மீடியா ஆளுங்களாம் நேரடியாவே தியேட்டருக்கு போய்தான் படத்தை சர்வரில் சேர்த்துட்டு வர்றாங்க. யூஎஃஓ பைல் கொஞ்சம் சிறுசுங்கிறதாலே, நெட்டிலேயே அனுப்ப முடியும்.

அப்போவெல்லாம் ‘பொட்டி வந்துடிச்சி’ன்னு ஃபிலிம் ரோல் தியேட்டருக்கு வர்றதையே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகறப்ப ஊர்வலமா கொண்டு வந்து கொண்டாடுவாங்க. இப்போ KDMனு சொல்லுவாங்க.. Key delivering message.. அதுதான் பொட்டியை ரீப்ளேஸ் பண்ணியிருக்கு.

சில KB அளவு மட்டுமே இருக்குற இந்த XML ஃபைல்தான் இன்று சினிமாவின் தலையெழுத்தையே நிர்ணயிக்குது. அந்த ஃபைலை ஓபன் பண்ணாதான் சர்வரில் encrypt செய்யப்பட்டு save ஆகியிருக்கிற படம், decrypt ஆகி புரொஜெக்டருக்கு வரும்.

ஆக்சுவலா, இது ரொம்ப ரொம்ப டெக்னிக்கலா எக்ஸ்ப்ளெயின் பண்ண வேண்டிய விஷயம். எல்லாருக்கும் புரியணுமேன்னு கொஞ்சம் மேலோட்டமா சொல்லுறேன்.
டிஜிட்டலுக்கு அடுத்து சினிமாவின் வடிவம் என்னவாக மாறும்?

டெக்னாலஜியை ஜோஸியம் மாதிரியெல்லாம் கணிக்க முடியாது. உண்மையை சொல்லணும்னா சினிமா இப்போ தியேட்டரை விட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருக்கு. செல்போனில் கூட சினிமாவை டவுன்லோடு பண்ணி பார்த்துக்கிட்டிருக்காங்க. இதுக்கும் டிஜிட்டல்தான் காரணம்.

இன்னமும் சினிமா ஒரு கலை, கதை சொல்லும் ஊடகம்னுலாம் கதை விட்டுக்கிட்டு இருந்தோம்னா வேலைக்கு ஆகாது. நம்ம டிவி சீரியல்களிலேயே பக்கம் பக்கமா கதை சொல்லிக்கிட்டிருக்காங்க.

அதனால தியேட்டரில் பார்த்தாதான் வேலைக்கு ஆகும் என்கிற மாதிரி படம் எடுக்கணும். சொல்லுற கதைக்கு நல்ல டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கணும். படம் பார்க்குறவன் ‘அட’ போடணும். சினிமாங்கிறது தியேட்டருக்கான ஊடகம் என்கிற மதிப்பை நாம ஏற்படுத்தாமல் போனால், இந்த தொழிலுக்கான மவுசு குறைய ஆரம்பிச்சிடும். அப்புறம் வீக்கெண்டில் மட்டும்தான் தியேட்டரில் படம் ஓடும்.

நம்ம படைப்பாளிகளுக்கு நெருக்கடி கொடுக்குற சவாலான சூழல்தான். ஆனா, ஹாலிவுட்டில் இந்த சவாலை வெற்றிகரமா கடந்திருக்கிற மாதிரி நாமளும் கடப்போம் என்கிற நம்பிக்கை இருக்கு.

(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)