27 ஏப்ரல், 2009

கோஷங்கள்!


”பனைமரத்துலே வவ்வாலா? பாமகவுக்கே சவாலா?” மாதிரியான கோஷங்கள் ஆண்டு முழுவதும் ஒலிக்கக் கூடியவை. நாம் பேசவரும் கோஷம் தேர்தல் கோஷம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட அந்த தேர்தலுக்காக ஏற்படுத்தும் கோஷம். 67 தேர்தலில் தமிழகத்தில் அரிசிப்பற்றாக்குறை இருந்த நேரத்தில் ’ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்ற கோஷம் திமுகவுக்கு கைகொடுத்ததாக சொல்வார்கள்.

1989 தேர்தல் தான் எனக்கு நன்கு விவரம் தெரிந்து நடந்த முதல் தேர்தல். அதிமுக இரண்டாக பிளவுற்ற நிலையில் காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் ஏறும் நப்பாசையில் “காமராஜர் ஆட்சி” என்ற கோஷத்தை முன்வைத்தது. ராஜீவ் மிக அதிகமுறை தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்தார், காமராஜர் ஆட்சியை வலியுறுத்தினார். இன்றளவும் அந்த கோஷத்தை தவிர வேறு கோஷத்தை அறிமுகப்படுத்த தமிழக காங்கிரஸ் தயாரில்லை.

இரண்டாக பிளவுற்ற நிலையில் “யார் உண்மையான அதிமுக?” என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த இருபிரிவு அதிமுகவும் தங்கள் சின்னங்களை பரவலாக்கிட பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். கோஷம் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் அதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுக “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற கோஷத்தை முன்வைத்ததாக தெரிகிறது. இறைவன் என்று அந்த கோஷத்தில் வரும் வாசகம் எம்.ஜி.ஆரை குறிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதாவது ’அல்லாஹூ அக்பர்’ என்பது மாதிரி. அக்பர் தான் அல்லா என்றொரு பொருளும் இந்த கோஷத்துக்கு உண்டாம். அக்பர் காலத்து கோஷமிது.

“நாடு நலம்பெற, நல்லாட்சி மலர” என்று கோஷத்தை முன்வைத்து திமுக களமிறங்கியது. இதே வாசகம், உதயசூரியன் சின்னம், சிகப்புத்துண்டு போட்ட கலைஞரின் படம் (கருப்பில் இருந்து அப்போதுதான் மாறியிருந்தார்) கொண்ட ஸ்டிக்கர்கள் லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு சென்னை மாநகரமெங்கும் ஒவ்வொரு வீட்டின் கதவுகளிலும் ஒட்டப்பட்டது. சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இந்த கோஷம் போட்ட திமுக கூட்டணிக்கு கிடைத்தது.

1991ல் திமுக குறிப்பிடும்படியாக எந்த கோஷத்தையும் முன்வைக்கவில்லை. “எங்கள் ஆட்சியை அநியாயமாக கலைத்துவிட்டார்கள். நீதி தாருங்கள்!” என்றே திமுகவினர் பிரச்சாரங்களில் பேசினார்கள். ‘ஆட்சிக்கலைப்பு’ திமுவின் USP (Unique Selling Proposition) ஆக இருந்தது. USP என்பதை எப்படி தமிழில் விளக்குவதென்று தெரியவில்லை. பொதுவாக எல்லாப்பிரிவையும் ஈர்க்கும் ஒரு அம்சம் என்றளவுக்கு புரிந்துகொண்டால் போதும்.

பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் கொல்லப்பட்டு விட்டதால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி “ராஜீவைக் கொன்றவர்களுக்கா உங்கள் ஓட்டு?” என்ற வாசகத்தை தேர்தல் கோஷமாக பயன்படுத்தியது. ராஜீவ் படுகொலை நடந்த போட்டோ (ஜெயந்திநடராஜன், மூப்பனார் ஆகியோர் சிதறிக்கிடந்த ராஜீவை தேடுவது போல) ஒன்று போஸ்டர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. திமுக கூட்டணி படுதோல்வி. பாஜக என்ற கட்சி தமிழர்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமான தேர்தலாக இதை சொல்லலாம். அப்போதெல்லாம் அக்கட்சியினர் “அகண்ட பாரதம்” என்று சொல்லி வாக்கு கேட்பார்கள்.

96 தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான கோஷம் எதுவும் திமுக வசமில்லை. ‘ஜெ. எதிர்ப்பு’ என்ற USP திமுக கூட்டணிக்கு போதுமானதாக இருந்தது. சேப்பாக்கம் தொகுதியில் ஒரு சுவற்றில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசிபெற்ற வேட்பாளர் கலைஞர்” என்று எழுதியிருந்த அவலத்தை கண்டு நாம் நொந்துப்போனோம். பொதுவான ஒரு கோஷம் இல்லாவிட்டாலும் திமுக - தமாகா கூட்டணியின் விளம்பர யுக்தி பட்டையைக் கிளப்பியது. “சுடுகாட்டுக் கூரையிலும் சுரண்டிய பேய்களை விரட்டியடிப்போம்”. திமுக கூட்டணி 72 தேர்தலுக்குப் பிறகான மகத்தான வெற்றி கண்டது.

புதியதாக உருவான மதிமுக மட்டுமே “அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை” என்ற தரமான ஒரு கோஷத்தை முன்வைத்தது. இதுவரை நான் கேட்ட கோஷங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த கோஷமிது. துரதிருஷ்டவசமாக மக்களை கவரத் தவறி விட்டது. வைகோ மொழியிலேயே சொன்னால் ‘காட்டு மரங்களை அடித்துச் சென்ற காட்டாற்று வெள்ளம் ஒரு சில சந்தன மரங்களையும் அடித்துச் சென்றுவிட்டது’.

98ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக மூன்றாவது அணியிலேயே நீடித்துக் கொண்டிருந்தது. பாஜகவை தமிழகத்துக்கு வெளிப்படையாக அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. “நிலையான ஆட்சி, வலிமையான பிரதமர்” என்ற நாடுதழுவிய பாஜகவின் பிரச்சாரம் தமிழகத்திலும் வெகுவாக எடுபட்டது. பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் கடுப்பாக இருந்த மக்கள் திமுகவோடு சேர்த்து மூன்றாவது அணியையும் செம மிதி மிதித்தார்கள்.

அடுத்த ஆண்டே சு.சாமி, சோனியா ஏற்பாட்டின் பேரில் தேநீர் விருந்து நடந்தது. ஜெ.வின் கோபத்துக்கு ஆளான பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இம்முறை கூட்டணி தலைகீழ். இடையில் கார்கில் யுத்தமும் நடந்தது. “கார்கில் வீரருக்கே உங்கள் ஓட்டு!” என்று கலைஞர் சென்னை மெரீனாவில் கோஷமிட, நாடு முழுவதும் இதே கோஷம் பாஜகவால் பரவலாக்கப்பட்டது. கார்கில் வெற்றி தேர்தல் USP ஆக்கப்பட்டு, மக்களை வெகுவாக கவர்ந்தது.

2001ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல். அதிமுக வலுவான கூட்டணியை அமைத்திருந்தது. திமுகவோ பாஜக உள்ளிட்ட சில சப்பை சாதிக்கட்சிகளை கொண்டு தேர்தலை சந்தித்தது. “தொடரட்டும் இந்த பொற்காலம்!” என்ற கோஷத்தை திமுக முன்வைத்தது (இந்த விளம்பர கேம்பைனில் நானும் பணிபுரிந்தேன்). அதிமுக கூட்டணி வலிமை திமுகவை மண்கவ்வ வைத்தது.

2004ல் பாராளுமன்றத் தேர்தல். தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவெங்கும் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கோஷத்தோடு அரசு விளம்பரங்கள் பெருவாரியாக வெளியிடப்பட்டது. அரசுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து பாஜக அதே கோஷத்தை தனது கட்சிக்காக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. சொல்லிக் கொள்ளும்படியான கோஷம் எதுவும் காங்கிரஸ் வசமில்லை. தமிழகத்தில் 2001ல் ஜெ. வைத்திருந்த கூட்டணியை இம்முறை கலைஞர் வைத்திருந்தார். பெரியதாக கோஷமோ, அலையோ இல்லாத இத்தேர்தலில் 40க்கு 40ம் திமுக கூட்டணி வென்றது.

இதோ 2009 தேர்தல் வந்துவிட்டது. இத்தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும்படியான கோஷம் எதுவும் பிரபலமாகவில்லை. நாடு தழுவிய அளவில் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஜெய் ஹோ” கோஷத்தை காங்கிரஸ் காசு கொடுத்து வாங்கி முழங்குவதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் ‘ஜெய் ஹோ’ சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். இங்கே கோஷம் தமிழில் தான் இருக்க வேண்டும். ‘தமிழ் ஈழம்’ என்ற சொல்லை அதிமுக கூட்டணி USP ஆகப் பயன்படுத்துகிறது. தேசிய அளவில் பாஜக இன்னமும் அரதப்பழசான ‘வலிமையான பிரதமர்’ கோஷத்தையே முன்வைப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்த்தால் கலைஞரும் தமிழ் ஈழத்தை வைத்து கேம் ஆடிக்கொண்டிருப்பதாக மீடியாவில் தெரிகிறது. பின்னணியில் திமுகவினர் சத்தமில்லாமல் இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, உள்ளாட்சிப் பணிகள் போன்றவற்றை சொல்லி அடித்தட்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதிமுக கூட்டணியோ ஈழத்தையே நம்பியிருக்கிறது. ஈழத்தில் நிஜமாகவே போர்நிறுத்தம் வந்துவிடுமோ என்றுகூட இக்கூட்டணியினர் அஞ்சுவதாக தெரிகிறது. மே 16ல் தான் எந்தக் கூட்டணியின் யுக்தி மக்களைக் கவர்ந்தது என்பதை உணரமுடியும்.

23 ஏப்ரல், 2009

ஒருத்தனாவது பின்னூட்டம் போடுங்கடா டேய்!






16 ஏப்ரல், 2009

கி.பி. 2058


சேது திட்டம் நிறைவேறலையே? கருணாநிதி ஆதங்கம்!!

சென்னை, ஜூன் 3 : இந்த ஆண்டாவது சேதுசமுத்திர திட்டம் நிறைவேறினால் மகிழ்ச்சியடைவேன் என்று தனது 135வது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் கருணாநிதி உருக்கமாகப் பேசினார். தான் இருநூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படும் அன்றாவது இத்திட்டம் நிறைவேறுமா என்று உணர்ச்சிவசப்பட்டு முதல்வர் பேசியபோது திமுகவினர் துரைமுருகன் தலைமையில் ஒப்பாரி வைத்தார்கள்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியின் 135வது பிறந்தநாள் கோலாகலமாக தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்தது போல ஏழை மக்களுக்கு இலவச கம்ப்யூட்டர் தந்தோம். ஒவ்வொரு தமிழனுக்கும் நிலாவில் அரை ஏக்கர் நிலம் தரும் திட்டமும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் இன்னமும் தமிழர்களின் இருநூறு ஆண்டு கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப் படவில்லையே? என்று முதல்வர் சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த வாழும் வள்ளுவன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.

இந்த பிறந்தநாள் விழாவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

* - * - * - * - * - * - *

”கலைஞரின் பிறந்தநாளுக்கு முன்னதாக பொதுக்குழு நடந்ததே? அதில் என்ன பேசினார்கள் சாமி?”

“இன்னமும் ஸ்டாலினுக்கு தகுந்த வயது வராததால் அவரை முதல்வராக்கும் திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு தள்ளிப் போட்டிருப்பதாக கலைஞர் பேசினாராம். 104 வயசாயிடிச்சி, இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் உள்ளாட்சி அமைச்சராகவே இருப்பது என்று விரக்தியடைந்துப் போன ஸ்டாலின் மெசபடோமியாவுக்கு அரசுமுறை பயணமாக யாருக்கும் சொல்லாமல் கோபமாக கிளம்பிப் போய்விட்டாராம்”

(சுவாமி வம்பானந்தா, குமுதம் ரிப்போர்ட்டர் ஜூன் 18, 2058 இதழில்)

* - * - * - * - * - * - *

கலைஞருக்கு ஓய்வு கொடுங்கள்! - ஞாநியின் “ஓ” பக்கங்கள்!

”135 வயது ஓய்வு பெறும் வயதா இல்லையா என்று நாம் சிந்திக்க வேண்டும். 104 வயதான ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கலைஞர் காசி, இராமேஸ்வரம் என்று சென்று பெரியாரின் சிந்தனைகளை மக்களிடையே விதைக்க வேண்டும். கலைஞரால் மட்டும் தான் இது முடியும்”

இவ்வாறாக குமுதம் பத்திரிகையில் ஞாநி “ஓ” பக்கங்களில் எழுதியிருக்கிறார்.

* - * - * - * - * - * - *

எப்போதான் ஆட்சிக்கு வருவது? விஜயகாந்த் விரக்தி!!

வேலூர், ஜூன் 5 : கட்சி ஆரம்பித்து ஐம்பத்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் நூற்றி மூணு வயது ஆகிறது. பண்ரூட்டி ராமச்சந்திரனுக்கோ நூற்று இருபது வயது ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வர மக்கள் ஓட்டு போடவேண்டும் என்று விஜயகாந்த் பேசினார்.

வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கடந்த தொண்ணூறு ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை கண்ட மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். நான் செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் என்னை மக்கள் முதல்வராக்குவார்கள் என்று பேசினார்.

* - * - * - * - * - * - *

“திமுக பொதுச்செயலாளரான அன்பழகன் ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். 137 வயதுதானே ஆகிறது? இதெல்லாம் ஓய்வு பெறும் வயதா? இன்னமும் பதினைந்து ஆண்டுகள் கழித்து ஓய்வு பற்றி யோசிக்கலாம் என்று கலைஞர் சொன்னாராம். இதனால் தன் ஓய்வு குறித்த யோசனையை தள்ளிப்போட்டிருக்காராம் பேராசிரியர்”. நாம் வைத்த பீரை சிப் செய்தபடியே சொன்னார் கழுகார்.

கழுகார், ஜூனியர் விகடன் ஜூன் 15, 2058 இதழில்.

10 ஏப்ரல், 2009

விஜயகாந்த்!

கறுப்பு என்று ஒதுக்க நினைத்தது திரையுலகம். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து இன்னொரு சக்தி சாத்தியமில்லை என்று அவநம்பிக்கை அளித்தது அரசியல் வட்டம். ஆகட்டும் பார்க்கலாம் என்று அடியெடுத்து வைத்தார் இரண்டிலும். இரண்டிலும் ஒன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அங்கே கேப்டன். இங்கே கறுப்பு எம்.ஜி.ஆர். போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெற்றபோது அரசியல் உலகமே நிமிர்ந்து பார்த்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் யுவகிருஷ்ணா.


நூலின் பெயர் : விஜயகாந்த்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 144

விலை : ரூ. 70/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8493-118-1.html

* - * - * - * - * - * - *

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது. பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார். நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம். அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது. இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர். எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு. என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ'வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள். சாலை மறியல். கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது. போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?' கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்... யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது. பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது. ங்கொய்யென்று ரீங்காரம். நிமிர்ந்துப் பார்த்தார். பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” - சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்... நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.


தும்பை நிறத்தில் வெள்ளை ஜிப்பா, கதர்வேட்டி, மாயவரம் பெல்ட் - இதுதான் அந்நாளைய விஜயராஜின் காஸ்ட்யூம். முறுக்கேறிய வாலிப வயசு. வீரமும், காதலும் தமிழரின் இருகண்கள் அல்லவா? வீரத்தை பலமுறை நிரூபித்திருந்த விஜயராஜும் கூட ஓரிருமுறை வெட்கத்தோடு காதல் வயப்பட்டார்.

உழைப்புக் களைப்புக்கு சிரமபரிகாரமாக மில்லுக்கு அருகிலிருக்கும் டீக்கடையில் அவ்வப்போது டீயும், தம்மும் போடுவது நம்மாளுக்கு வழக்கமாக இருந்தது. ஸ்டைலான நம் கருப்புச்சூரியனை கண்ட எதிர்வீட்டு ஜன்னல் ஒன்று பரவசப்பட்டுப் போனது. சூரியனைக் கண்டதும் தாமரை மலராமல் போனால் தானே ஆச்சரியம்?

நம் கருப்புச் சூரியனோ அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் மாதிரியிருந்தார். பெண்கள் விஷயத்தில் தாலிபான் லெவல் ஒழுக்கம். எந்தப் பெண்ணையும் காதல் நோக்கத்தில் கண்டதே இல்லை. தங்கைகளின் தோழிகளும் கூட இவரை ‘எங்கள் அண்ணா' என்றே அழைத்துக் கொண்டிருந்தார்கள். காதலிப்பதற்கான சந்தர்ப்பம் அதுவரை அமைந்ததில்லை. காதலிக்கும் எண்ணமும் இவருக்கு இல்லை.

எதிர்வீட்டு ஜன்னலை ஆரம்பத்தில் கண்டும் காணாமலும் போய்க்கொண்டிருந்தார் விஜயராஜ். விழி அம்புகள் தொடர்ந்து இதயத்தை தைத்துக்கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் நம் விசுவாமித்ரனும் வேறு வழியின்றி அந்த மேனகையிடம் நிலைதடுமாறிப் போனார். தனது ‘ஆண்'மீக தவக்கோலத்தை களைந்தார். கால்கள் தரையில் வட்டமாக கோலமிட வெட்கத்தோடு இவரும் எதிர்வீட்டு ஜன்னலை அவ்வப்போது பார்க்க ஆரம்பித்தார்.

எதிர்வீட்டு ஜன்னலைப் பார்ப்பதற்கென்றே வேலைகளை ஒத்திவைத்து அடிக்கடி டீக்கடைக்கு வந்தார். சில நேரங்களில் ஸ்டைலாக பைக் மீது சாய்ந்துக் கொண்டு சிகரெட் பிடிப்பார். பார்வைகளின் பரிமாற்றங்கள் வழியாகவே காதல் தொடர்ந்தது. நேரில் கண்டு பேச இருவருக்கும் பயம். ஆனால் பேச செம விருப்பம்.

அக்காலத்து இளைஞர்கள் கட்டம் போட்ட பேண்டும், பூப்போட்ட கலர் சட்டையுமாக அலைய நம்மாளோ நம்பியார் மாதிரி வில்லன் பாணியில் உடையணிந்திருந்தார். இந்த உடையலங்காரம் எதிர்வீட்டு ஜன்னலுக்கு பிடிக்கவில்லையாம். ஒருநாள் காகித ராக்கெட் சர்ரென்று வந்து இவரது ஜிப்பா பாக்கெட்டில் குத்தியது.

எடுத்துப் படித்துப் பார்த்தார்.

‘இந்த ட்ரெஸ் ரொம்ப கேவலமா இருக்கு. ஒழுங்கு மருவாதையா பேண்டும், சர்ட்டும் போடுங்க, நல்லாருக்கும். இப்படிக்கு எதிர்வீட்டு ஜன்னல்' - கடிதத்தைக் கண்டவருக்கு ஒருநொடி கோபம் வந்தது. எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்து நாக்கைத் துருத்தி கண்களை உருட்டினார். புருவங்களை மேலும் கீழும் வில் போல நெரித்தார். ஜன்னல் சட்டென்று பயந்துவிட்டது. அப்போதைக்கு பறந்தும் விட்டது.

ஆனால் மறுநாள் கட்டம்போட்ட சட்டை, பெல்ஸ் பேண்டில் வந்த விஜயராஜை பார்த்து மில்லில் எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். நண்பர்களும் “தலைவா. இந்த ட்ரெஸ் உங்களுக்கு சூப்பரா இருக்கு. இப்படியே கண்டினியூ பண்ணுங்க” என்றார்கள். எதிர்வீட்டு ஜன்னலுக்கு மெத்த மகிழ்ச்சி. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க.. மாற்றி மாற்றி நோக்கிக் கொண்டேயிருக்க, இதற்குமேல் வளராமல் இவர்களது காதல் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா' லெவலில் மட்டுமே இருந்தது.

திடீரென்று ஒருநாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கப்படவேயில்லை. விஜயராஜ் மனசு நொந்துப் போனார். மறுநாளும், அதற்கடுத்த நாளும் கூட ஜன்னல் மூடியே இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் உறவினர் வீட்டுக்கு லீவுக்கு வந்த பறவையாம் அது. லீவு முடிந்ததும் சொந்த ஊருக்கு பறந்து விட்டிருக்கிறது.

எ.வீ.ஜன்னல் பற்றி வேறு எந்த உருப்படியானத் தகவலும் தெரியாததால் விஜயராஜின் தீவிரக்காதல் இவ்வாறாக சோகமாக முற்றுப் பெற்றது. இதே பாணியில் விஜயராஜ் வேறு இரு பெண்களையும் கூட காதலித்திருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் காதல்தானா என்பது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாலும், அவற்றில் இரண்டு விஜயராஜின் ஒரு தலை காதல் என்பதாலும் அவை பற்றிய வேறு குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் வரலாற்றில் இடம்பெறவில்லை.

8 ஏப்ரல், 2009

இரண்டு வேட்பாளர்கள்!


திமு கழக இளைஞரணி முதல் மாநாடு ஆவடியில் நடைபெற்று முடிந்த காலமாக அது இருக்கக்கூடும். ஆலந்தூர் நகர கழக செயல்வீரர்கள் பலரின் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் முதல்வர் எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சியாம். அப்பா அப்போது பரங்கிமலை ஒன்றியப் பிரதிநிதியாக, அவ்வட்டார ஸ்டார் பேச்சாளராக இருந்தார். அவர் மீதும் வழக்கு பாய்ந்திருந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி வழக்கு போடும்போதெல்லாம் திமு கழக தொண்டர்களுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் மகாபலிபுரம். “வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் போட்டுக்கிட்டு யாராவது வந்து சாக்லேட் கொடுத்து அப்பா எங்கேன்னு கேட்டா தெரியதுன்னு சொல்லணும்”. இது எனக்கு தரப்பட்டிருந்த ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன். மஃப்டி என்றாலே அப்போது போலிஸ்காரர்களுக்கு வெள்ளை சட்டையும், வெள்ளை பேண்ட்டும் தான்.

அக்காலத்தில் மடிப்பாக்கத்தில் கழகக்கொடி உயரப்பறந்த ஓரிரண்டு வீடுகளில் என் வீடும் ஒன்று. ஒருநாள் அதிகாலையில் ஏதோ பேச்சுச்சத்தம் கேட்க கண்விழித்துப் பார்த்தேன். “பையன் எழுந்துட்டான் போலிருக்கு. டாட்டா சொல்லிட்டு வாய்யா லச்சிம்பதி. திரும்ப எப்போ வருவியோன்னு தெரியலை!” மாவீரன் மிசா ம.ஆபிரகாம் குரல். எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்த நேரத்தில் அவரது தொகுதியான பரங்கிமலையில் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி திமு கழகத்தை கட்டிக்காத்த மாவீரன். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். அதிகபட்சம் கட்சிக்காரர்களிடம் சிகரெட் வாங்கித்தர சொல்லுவார். திமு கழகம் ஆலமரமாய் விழுதுகளோடு வளர்ந்து இன்று நிற்பதற்கு சோதனையான காலங்களில் ஆணிவேராய் விளங்கிய உண்மைத் தொண்டர்களில் ஒருவர்.

அவரோடு இருந்த இளைஞர் ஒருவர் அப்பாவின் ஆருயிர்த் தோழர். அப்பா தினமும் ஆயிரத்தெட்டு முறையாவது அவரது பெயரை உச்சரிப்பார். ஆர்.எஸ்.பாரதி. மிசா ம.ஆபிரகாமின் தயாரிப்புகள் எல்லாருமே ‘பொழைக்கத் தெரியாத மனுஷன்’ என்று அரசியல் களத்தில் பெயரெடுத்தவர்கள். ஆர்.எஸ்.பாரதியும் அப்படித்தான். திமு கழகத்தின் சட்டச் செயலராக இருந்தப் போதிலும் கால்நூற்றாண்டாக நகரசபைத் தலைவராகவே காலத்தை கழித்துவிட்டவர். தன் தியாகங்களை, பணிகளை கட்சித் தலைமையிடம் எடுத்துச் சொல்லி சீட்டு வாங்கி மந்திரியாகத் தெரியாதவர். “இந்த ஆளும் வாங்க மாட்டேங்கிறான். நம்பளையும் வாங்க விட மாட்டேங்கிறான்” என்று ஆலந்தூர் நகர கவுன்சிலர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

அப்பா மறைந்தபிறகு பெரியவனாகி நான் முதன்முதலாக கழக மேடையேறிப் பேசியபோது அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் ஆர்.எஸ்.பாரதி. “இவனைப் போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை கழகத்தை எவனும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்று அவரது பேச்சில் அப்போது குறிப்பிட்டார்.

சென்ற ஞாயிறு நண்பர் தமிழ்பாரியோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.பாரதி பற்றிய பேச்சு வந்தது. அவர் மீது நடக்கவிருந்த கொலைவெறித் தாக்குதலுக்கு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றுயிரும், குலையுயிருமாகியது, டான்சி வழக்கில் ஏன் பாரதிக்கு அவ்வளவு தீவிரம், இவ்வளவு தகுதிவாய்ந்தவருக்கு தகுதி வாய்ந்த பொறுப்பு இன்னமும் கழகத்தில் வழங்கப்படவில்லையே என்றெல்லாம் ஆதங்கத்தோடு பேசிக்கொண்டிருந்த நிமிடத்திலேயே திமு கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

தென்சென்னை தொகுதியின் வேட்பாளர் மக்கள் தொண்டர் ஆர்.எஸ்.பாரதி.

* - * - * - * - * - * - * - * - * - *

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல் அதுதான் என்று நினைக்கிறேன். உள்ளாட்சிமன்றத் தேர்தல். சென்ற மேட்டரில் சொல்லியிருந்த கொலைவழக்கின் முடிவு என்ன ஆனதென்றால் அப்பா இராமாவரம் தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து அதிமுகவில் ஐக்கியமாகியனதோடு முடிந்தது.

மடிப்பாக்கத்தில் அதிமுக பிளவுபட்டு இரண்டு வேட்பாளர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்கள். ஒருவர் ஈ.பொன்னுச்சாமி. மற்றொருவர் எஸ்.வேலாயுதம். திமுக சார்பில் போட்டியிட்டவர் கோ.தெய்வசிகாமணி. தெய்வசிகாமணியும் ஆர்.எஸ்.பாரதி மாதிரியே பொழைக்கத் தெரியாத மனுஷன்.

பொன்னுச்சாமி அப்பாவின் நண்பரும் கூட. மனைவியின் நகைகளை அடகுவைத்து தேர்தல் செலவை சமாளித்தார். பிரச்சாரத்தின் அட்ராக்‌ஷனாக குழந்தைப் பருவத்தில் இருந்த என்னை மேடையேறச் செய்து ‘அணில்’ சின்னத்துக்கு வாக்கு கேட்கவைத்தார் அப்பா. வேலாயுதம் அப்போதே மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களை வைத்து வீடு வீடாக ஆங்கிலத்தில் வாக்கு கேட்கும் நூதனமுறையை கையாண்டார். ஏனென்றால் படித்த பிராமணர்கள் நிறைய பேர் மடிப்பாக்கத்துக்கு கூட்டமாக குடிவந்துக் கொண்டிருந்த நேரம். தேர்தல் முடிவு பொன்னுச்சாமிக்கு சாதகமாக வந்தது. போட்டி வேட்பாளரான வேலாயுதம் படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

96ல் மீண்டும் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அதே வேலாயுதம் திரும்பவும் களமிறங்கினார். இம்முறை ஒன்றியக் கவுன்சிலருக்கு இரட்டை இலை சின்னத்திலேயே நின்றார். இதற்கிடையில் வேலாயுதம் பற்றி ஏராளமான செய்திகள். திமுக அரசு வேலாயுதத்தை உடைகளை களைத்து ஐஸ் பெட்டில் படுக்கை வைத்து சித்திரவதை செய்தது என்று பேசிக்கொள்வார்கள். 92ல் அதிமுக வெற்றிவிழா மாநாட்டின் போது மதுரையில் ஜெ.வுக்கு இருபத்தைந்து லட்ச வெள்ளி சிம்மாசனத்தை வழங்கி தமிழக அளவிலும் பிரபலமடைந்திருந்தார் வேலாயுதம். அப்போது இந்தியா டுடே பத்திரிகையிலேயே வேலாயுதத்தின் பெயர் வந்திருந்தது மடிப்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாக சொல்வார்கள். மடிப்பாக்கம் யூடிஐ பேங்குக்கு அருகே இருக்கும் வீட்டில் தான் இன்னமும் வசிக்கிறார். சாதாரண வீடாக இருந்த அது என் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இரட்டை பங்களாவாக கம்பீரமாக நிற்கிறது. 96 தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டு ரேஞ்சுக்கு வேலாயுதம் செலவு செய்ய உதயசூரியன் கண்டிப்பாக ஊத்திக்கொள்ளும் என்று தெரிந்தது. மடிப்பாக்கம் இன்றளவும் அதிமுகவின் கோட்டை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

உதயசூரியன் சின்னத்தில் நின்றவர் என் பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி. பால் வியாபாரம். 89 ஆட்சியின் போது மலிவுவிலை மது காண்ட்ராக்ட் எடுத்து மடிப்பாக்கம் கூட்ரோடில் சாராயக்கடை நடத்தியவர். வேலாயுதத்தை எதிர்த்து மோத யாரும் முன்வராத நிலையில் ஆள்பலமே இல்லாத சுப்பிரமணி தைரியமாக முன்வந்தார். வேட்புமனுத் தாக்கலோடு சரி. இவர் பிரச்சாரத்துக்கே போகவில்லை.

தேர்தல் முடிவு ஆச்சரியமளித்தது. இந்த முறையும் வேலாயுதம் தோற்றதை வேலாயுதம் மட்டுமல்ல, எதிர்த்து நின்றவராலேயே ஜீரணிக்க முடியவில்லை. அந்த தேர்தலின் வென்றிருந்தால் வேலாயுதம் ஒன்றியப் பெருந்தலைவர் ஆகிவிடுவார் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

இடையே என்ன ஆனதென்று தெரியவில்லை. அதிமுகவிலிருந்து விலகியிருந்தார் வேலாயுதம். 2001 தேர்தலின் போது சுயேச்சையாக மீண்டும் ஒன்றியக் கவுன்சிலுக்கு நின்றார் வேலாயுதம். எல்லாக் கட்சிகளையும், கட்சிக்காரர்களையும் வளைத்து தனக்கு ஆதரவாக்கிக் கொண்டார். திமுக சார்பில் ஒரே ஒருமுறை, அதுவும் பிசாத்து வார்டு மெம்பருக்கு அப்பா நின்ற தேர்தல் அது. எங்கள் வீட்டுக்கு திடீரென வந்த வேலாயுதம் அப்பாவுக்கு சால்வை போட்டு தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார். திருமங்கலம் பாணியில் நடந்த தேர்தல் அது. ஒருவழியாக வேலாயுதத்தின் பலவருடக் கனவு நிறைவேறியது. திமுக வேட்பாளர் ஒருவரை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வென்றதற்குப் பிறகு அவரை யாரும் கண்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்பாக திடீர் பரபரப்பு. சுமார் பல கோடி ரூபாய்க்கு மேல் அவர் எப்படியோ சொத்து சேர்த்துவிட்டார் என்று சொன்னார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸில் அவ்வளவு சம்பாதிக்க முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரே ஒருமுறை ஒன்றியக் கவுன்சிலராக இருந்தவர் அரசியலில் என்ன சம்பாதித்து கிழித்திருக்க முடியும்? ஜி டிவி, பி டிவி என்று இரண்டு புதிய டிவி சேனல்களை வேலாயுதம் தொடங்கப் போவதாக சொன்னார்கள். செய்தித்தாள்களிலும் ஆட்கள் தேவை விளம்பரம் பார்த்தேன். அவர் எந்தக் கட்சியிலும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக பிசினஸில் இறங்கிவிட்டார் என்று பேசப்பட்டது.

நேற்று விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. விழுப்புரம் வேட்பாளர் : மடிப்பாக்கம் எஸ்.வேலாயுதம்.

7 ஏப்ரல், 2009

இதையெல்லாம் கூடவா சொல்லித் தர்றது?


சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரோடு பேசிக்கொண்டிருந்தேன். ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஆர்வக்கோளாறில் சொன்னேன். “இப்புத்தகம் இத்துறையை சார்ந்தவர்களுக்காகவும், இத்துறையை படிக்கும் மாணவர்களுக்கானது” என்றேன். உடனே கோபப்பட்ட அவர், “ஒரு புத்தகம் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கானது என்று வரையறைப்படுத்த நீ யாருய்யா? எவனெவனுக்கு எது எது விருப்பமோ அவனவன் அது அதை தேர்வு செய்து படிச்சுக்கட்டும். அடுத்தவன் இதைதான் படிப்பான், இதைதான் படிக்கணும்னு சொல்றதுக்கு உனக்கு யாரு உரிமை கொடுத்தது?” என்று கேட்டார். எனது தவறு புரிந்தது.

கொஞ்சம் விட்டால் ’முதலிரவு நடத்துவது எப்படி?’ என்று கூட பதிவு போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது நம்ம பதிவர்கள். பொதுவாக சுரேஷ்கண்ணனின் பதிவுகளை வாசிக்கும்போது இவருக்குப் பின்னே ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். இந்த குறிப்பிட்ட பதிவை வாசித்தபோது சுரேஷ்கண்ணனே ஒட்டுமொத்த ஒளியாக மாறி, மகாபாரதம் கிராபிக்ஸில் வரும் வியாசமுனிவராய் மாறி ‘ஆயுஷ்மான் பவ’ சொல்வது மாதிரி இருந்தது. நம் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றார்போலவே அறிவுஜீவிகளும், அறிவுஜீவியாக ஆசைப்படுபவர்களும், தன்னைத்தானே அறிவுஜீவியாக அறிவித்துக் கொள்பவர்களும் தங்களுடைய பிம்பத்தை அவர் பதிவின் பின்னூட்டங்களில் பிரேம் செய்து மாட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.

இலக்கியங்களை தான் கற்றறிந்தவர்களுக்கான ஊடகம் என்று பொதுப்புத்தி உருவாக்கி அவரவர் வீட்டுப் பரணில் மூட்டைக்கட்டி வைத்தாயிற்று. தலித் இலக்கியம் பரவலாகி பதினைந்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெகுஜனங்களிடம் இலக்கியத்தை பரவலாக்க முடியாத நிலை இருக்கிறது. அடுத்தது வெகுஜன மக்களுக்கான ஒரே உச்சபட்ச பொழுதுபோக்காக இருக்கும் சினிமாவையும் கலையின் உச்சம் ஆக்கிவிடலாம். எவன் பார்த்தாலென்ன? பார்க்காவிட்டால் எனக்கென்ன. நான் மட்டும் என் வீட்டு டிவிடியில் பார்த்துவிட்டு பதிவு போட்டுவிடுகிறேன். அதற்கு இருபது, இருபத்தைந்து பேராவது பின்னூட்டம் இடுவார்கள்.

ஏற்கனவே மல்டிபிளக்ஸ், சினிபிளக்ஸ் கலாச்சாரத்தால் சாமானிய மனிதன் தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பதை விட்டு விட்டு திருட்டு டிவிடியில் பார்க்கிறான் அல்லது டிவியில் போடும்போது பார்க்கிறான். இந்த அழகில் கலைப்படங்களாக எடுத்துத் தள்ளி, வணிகப்படங்களை புறந்தள்ளி சினிமாவை தொழில் என்ற அந்தஸ்தில் இருந்து குப்புறக் கவிழ்த்து பால் ஊற்றும் ஐடியாக்கள் அறிவுஜீவிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. சினிமாவை கலையின் உன்னதவடிவமாக பார்க்கும் பாலாக்கள் வேண்டுமானால் சோதனை முயற்சிகளில் ஈடுபடலாம். சுரேஷ்கண்ணன் மாதிரி பத்துபேர் மட்டும் தியேட்டரில் படம் பார்த்து கைத்தட்டுவார்கள். அவருக்கு கோடிகளை சம்பளமாக கொட்டும் தயாரிப்பாளன் என்ன மசுருக்கு சோதனை செய்து பார்க்க வேண்டும்?

நம்ம ஆட்கள் கலைப்படம், வணிகப்படம் என்பதை எப்படி பிரிக்கிறார்கள் என்பதே எனக்குப் பெரிய புதிராக இருக்கிறது. இம்மாதிரி பிரிக்க முயற்சித்து படுதோல்வி அடைந்து, “படமென்றால் ஒரே படம். ஓடினால் வணிகப்படம். ஓடாவிட்டால் கலைப்படம்” என்று கமலஹாசனே திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இந்த அறிவுஜீவிகள் நமக்கு பரிந்துரைக்கும் படங்கள் எப்படிப்பட்டவை? உதாரணத்துக்கு உடல் ஆராதனை, உடல் அரசியல் குறித்து போதிக்கும் உலகப்புகழ்பெற்ற இத்தாலிய இயக்குனரான டிண்டோபிராஸை எடுத்துக் கொள்ளலாம். இவர் பட டிவிடியை யாராவது போய் வீடியோ லைப்ரரியில் கேட்டுப் பாருங்கள். கிடைக்காது. பர்மாபஜாருக்குப் போய் டபுள் எக்ஸ், த்ரிபிள் எக்ஸ் படங்களைத் தேடிப் பார்க்கும்போது உங்களுக்கு டிண்டோபிராஸ் கிடைப்பார். அதாவது நம்மூர் மலையாள பிட்டு படங்கள் நம் ஆட்கள் பரிந்துரைக்கும் எந்த உலகப் படத்துக்கும் தகுதி குறைந்ததல்ல.

‘மது, மங்கை, மயக்கம்’ என்ற பிட்டு படம் சொல்லாத எந்த செய்தியையும், ஏற்படுத்தாத எந்த உணர்வையும் இவர்கள் பரிந்துரைக்கும் படங்கள் ஏற்படுத்திவிடப் போவதில்லை. அம்மணக்குண்டி படங்களை எப்படி பார்ப்பது என்பதற்கு கூட சுஜாதா என்ன சொல்லியிருக்கிறார் என்று புரட்டிப் பார்த்து தான் பார்க்கிறார்களாம் இவர்கள். பார்ப்பது பிட் படம். அப்புறம் முதிர்ந்த மனநிலையென்ன, முதிரா மனநிலையென்ன. எல்லாத்துக்கும் இந்த ‘மேட்டரில்’ ஒரே மனநிலைதான்.

ஏதோ மேல்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமே கலாரசிகர்கள். சினிமாவை கலையாகப் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்றெல்லாம் அடிக்கடி இவர்கள் எழுதுவது எந்த அளவுக்கு உண்மை? உலகளவில் சூப்பர்ஹிட் ஆன படங்கள் எனக்குத் தெரிந்து டைட்டானிக், ஜூராசிக்பார்க், ஹாரிபாட்டர் மற்றும் சில ஜேம்ஸ்பாண்ட் படங்கள் தான். நம்மூரில் குணாவும், ஹேராமும் எப்படி ஓடியதோ அதுமாதிரி தான் அயல்நாடுகளிலும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து உணர்ச்சிகளை கொட்டி எழுதி, பரிந்துரைக்கும் உலகப்படங்களும் ஓடியிருக்கின்றன.

கலைப்பட உம்மணாம்மூஞ்சிகள் பார்த்து தொலைப்பதற்கு தானே பிலிம்சேம்பரிலும், பைலட்டிலும் படம் போடுகிறார்கள். ரஜினி படம் போடும் ஆல்பர்ட் தியேட்டருக்கு முதல் நாள் வந்துவிட்டு விசிலடிக்கிறான், கைத்தட்டுகிறான் என்று ஏன் இவர்கள் புலம்பித் தொலைக்க வேண்டும்? மொழி படம் நன்றாகத்தானே ஓடிற்று. எவனாவது விசிலடித்தானா? லாட்டரிச்சீட்டு கிழித்து ஸ்க்ரீன் முன்பாக எறிந்தானா?

நான் பார்க்குற படம் தான் ஒஸ்தி. நீ பார்க்குற படமெல்லாம் குப்பை என்ற ரேஞ்சுக்கு எழுதுவது ‘நான் டீசண்டு, நீ இண்டீசண்டு. உன்னை தொடமாட்டேன்’ என்று சொல்லுகிற தீண்டாமைக்கு ஒப்பானது. அவரவர் தேர்வு அவரவர் விருப்பம் என்பதுதான் ஜனநாயகம். கட்டற்ற சுதந்திரம், கட்டுடைப்பு என்று பேசுபவர்கள் சினிமா பார்ப்பதற்கெல்லாம் கூட நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் எழுதுகிறார்கள் என்பது முரணாகத் தெரிகிறது.

குறிப்பாக சுரேஷ்கண்ணனின் பதிவில் காணப்படும் முட்டாள்தனம், முதிர்ச்சியற்ற மனநிலை போன்ற வார்த்தைகள் கடுப்பாக இருக்கிறது. அவரைப் போன்றவர்கள் மட்டுமே அறிவுஜீவியென்றும், வெகுஜனங்கள் முட்டாள்கள் என்று கட்டமைக்கும் முயற்சி இது. நான் ரசிப்பதை எல்லோரும் ரசிக்கவேண்டும், அதுவும் என்னைமாதிரியே ரசிக்கவேண்டும் என்று நினைப்பது பாசிஸ்ட்டுத்தனம் இல்லாமல் வேறென்ன? மசாலப்பட ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று எழுதுகிறார்கள். எல்லாருக்கும் தான் இருக்கிறது, விசிலடிப்பவர்களுக்கு மட்டும் ஸ்பெஷலாகவா இருக்கிறது?

இனிமேலாவது இதுபோன்ற மேன்யுவல் கைடுகளை யாராவது எழுதும்போது, அதற்கு முன்பாக ஆதித்தனாரின் இதழாளர் கையேடு படித்துவிட்டு எழுதலாம். சிந்தனைகளில் எதுவும் பெரியதாக மாறிவிடாது என்றாலும் மேன்யுவல் கைடு எழுதுவதற்கான எழுத்துத் தொனியையாவது அது கொஞ்சம் நாகரிகமாக மாற்றும்.

கடைசியாக, மசாலா படத்தை கொண்டாடவும், கலைப்படங்களை ஆராதிக்கவுமான மனநிலை எனக்கு வாய்த்திருக்கிறது. இம்மாதிரியான மனநிலை வாய்க்கப்பெறாத சுரேஷ்கண்ணன்களை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

5 ஏப்ரல், 2009

இதற்குப் பெயர் தான் காதலா?


நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.

பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.

அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?

பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?


உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

1 ஏப்ரல், 2009

வனவாசம்!


அப்போது பள்ளியில் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொஞ்சம் தூரத்தில் பெரியார் படிப்பகம் இருந்தது. பள்ளி முடிந்ததுமே அங்கு சென்று நாளிதழ்களையும், புத்தகங்களையும் புரட்டுவது வழக்கம். பொழுதுபோகாத ரிடையர்டு கேஸுகள் சிலர் அங்கே எனக்குப் பழக்கமானார்கள்.

அவர்களில் சிலர் திராவிடம் பேசுவார்கள். சிலர் பொதுவுடைமை பேசுவார்கள். சிலர் தேசியம் பேசுவார்கள். வி.பி.சிங் அப்போது லைம்லைட்டில் இருந்தார். வி.பி.சிங் பற்றி ஒருமுறை அவர்கள் காரசாரமாக மோதிக்கொண்டிருந்தபோது தெரியாத்தனமாக நான் வேறு அந்த மோதலில் கலந்துகொண்டேன். கலைஞர் வி.பி.சிங்குக்கு அடிவருடியாக இருந்ததைப் பற்றி ஒரு தேசியவாதி மோசமான சில வார்த்தைகளை பயன்படுத்திப் பேசினார். உடனே நான் கலைஞருக்கு வக்காலத்து வாங்கி ‘நெஞ்சுக்கு நீதி’யை Quote செய்துப் பேச, அந்தப் பெரியவர் “இன்னும் நீ படிக்க வேண்டிய முக்கியமான புக்கு ஒண்ணு இருக்கு. கண்ணதாசன் எழுதிய வனவாசம்” என்றார்.

வனவாசம் எனக்கு அறிமுகமான கதை இது.

கவிதைக்கு பொய்யழகு. கவிஞருக்கு? வனவாசத்தை முதல் தடவை வாசிக்கும்போதே ஒன்றுமில்லாத விஷயங்களை கூட கவிஞர் ‘பூஸ்ட்’ செய்து சொல்லுகிறார் என்பதை உணரமுடியும். கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன் மூவரும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் தங்களது கேரியரை சினிமாவிலும், அரசியலிலும் தொடங்குகிறார்கள். இவர்களில் கலைஞர் அரசியலிலும், எம்.ஜி.ஆர் சினிமாவிலும் உச்சத்துக்குப் போக கவிஞர் அடைந்த வயிற்றெரிச்சலே வனவாசமாக மணம் வீசியிருக்கிறது.

சாதிவெறியும், மத அபிமானமும் நிரம்ப கொண்ட கவிஞர் இருந்திருக்க வேண்டிய கழகம் திமு கழகம் அல்ல. காங்கிரஸ். தன் இயல்புக்கு ஒத்துவராத இயக்கத்தை தேர்ந்தெடுத்தது கவிஞரின் தவறே தவிர, கழகத்தின் தவறு அல்ல. அர்த்தமுள்ள இந்துமதம் எழுதக்கூடிய மனநிலையில் இருந்தவர் ஒரு திராவிட இயக்கத்தில் இருந்திருக்கவே வேண்டியதில்லை. 1943லிருந்து 1961 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை சுயசரிதையாக எழுதியதாக கவிஞர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பார். ‘வனவாசம்’ அவரது சுயசரிதையா அல்லது மற்றவர்களை அவர் பார்வையில் வசைபாடும் நூலா என்பதை வாசித்தவர்கள் தான் சொல்லமுடியும். வசைவாசம் என்று நூலுக்கு தலைப்பிட்டிருக்கலாம்.

சென்ற பத்தியில் சாதிவெறி, மத அபிமானம் போன்ற சொற்களை கண்டு நீங்கள் அதிசயித்திருக்கலாம். கண்ணதாசனின் சாதிவெறி இந்நூலில் பல இடங்களில் வெளிப்படுவதை பார்க்க முடியும். ‘செட்டியார்’ சாதி குறித்த முரட்டுத்தனமான அபிமானம் அவருக்குண்டு. சாதி, மதப் பற்றுகளை வெளிக்காட்டிக் கொள்ள கழகம் தடையாக இருந்தது என்பதை நான்கைந்து இடங்களில் திரும்ப திரும்ப குறிப்பிட்டிருக்கிறார். அதிலும் தனது சாதி எத்தனை உயர்ந்த சாதி என்பதை ஒரு அத்தியாயத்தில் செட்டியார் சாதி திருமணம் பற்றி விவரிக்கும்போது வெளிப்படுத்தியிருப்பார்.

கல்லக்குடிப் போராட்டம் குறித்த கவிஞரின் பொச்சரிப்பு நகைச்சுவையானது. கலைஞரே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு தலைமையிடம் சபாஷ் பெறுகிறார் என்ற ஆதங்கம் கவிஞருக்கு நிரம்ப உண்டு. எனவே கல்லக்குடி போராட்டம் நடந்தபோது கவிஞரும் ஆட்டையில் இறங்குகிறார். போராட்டத்துக்கு முன்பாகவே கலைஞர் கேட்கிறார். “கண்டிப்பாக நீரும் வர்றீரா?”. மேடையில் அதற்குப் பதில் தருகிறார் கண்ணதாசன். “போகிறேன். சாகிறேன்!”

இவ்வளவு வீரவசனம் பேசிய கண்ணதாசன் மறுநாள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததுமே கலங்கிப் போனார். கலவரச் சூழலில் கட்சிக்காரர் ஒருத்தரே “அய்யா நீங்க தான் தலைமை. சீக்கிரமா ஓடிப்போய் ரயில் முன்னாடி படுங்க” என்றாராம். அதைத் தொடர்ந்து வழக்கு, சிறைத்தண்டனை. தன்னைப் பற்றிய உச்சபட்ச கழிவிரக்கத்தோடு இந்நிகழ்ச்சிகளை விவரிக்கிறார் கவிஞர். இதிலேயும் கருணாநிதி பெயரை தட்டிக்கிட்டு போயிட்டாரே என்ற ஆதங்கம் கவிஞருக்கு.

அடுத்ததாக 1957 சென்னை மாநகராட்சித் தேர்தல் வெற்றி. இதில் கருணாநிதிக்கு எந்தப் பங்கும் இல்லை. உழைத்தது முழுக்க நான் தான். ஆனால் கருணாநிதிக்கு கணையாழி அணிவித்தார் அண்ணா என்று எழுதியிருக்கிறார். சென்னையின் பழைய திமுக பெருசுகள் இன்றும் உயிரோடிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்த்தால் தான் தெரிகிறது கண்ணதாசன் எவ்வளவு பெரிய சோம்பேறியாக இருந்திருக்கிறார் என்பது. கண்ணதாசன் முழுக்க முழுக்க அரசியலில் இருந்திருந்தாலும் அவர் எக்காலத்திலும் எம்.எல்.ஏ.வாக கூட ஆகியிருக்க முடியாது. ஒரு அரசியல்வாதிக்கு தேவையான தியாகக்குணம், போராட்ட உணர்வு, தலைமைப்பண்பு எதுவுமே இல்லாத ஒரு மனிதர் இவர்.

கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொள்ள, கவிஞரோ வெத்து பல்பான ஈ.வி.கே.எஸ்.ஸை தன்னுடைய ஆதர்ச தலைவனாக குறிப்பிடுகிறார். முன் ஏர் எப்படிப் போகுமோ அப்படித்தானே பின் ஏரும் போகும்?

கவிஞர் எழுதிய வனவாசத்தில் உச்சக்கட்ட வன்முறை என்னவென்றால் தனக்குப் பிடிக்காதவர்கள் மீதெல்லாம் கிசுகிசு பாணியில் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கிறார். பொருள் அபகரிப்பு புகார்களை வாய்கூசாமல் கூறுகிறார். இவர் குறிப்பிடும் காலங்களில் திமுக எதிர்க்கட்சியாக, இப்போதைய மதிமுக லெவலில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டே போகும் கண்ணதாசன் பேரறிஞர் அண்ணாவை கூட விட்டு வைக்கவில்லை. அண்ணா குறித்த அச்சம்பவத்தை ஒரு சினிமா திரைக்கதை போல சுவையாக கண், மூக்கு, காது வைத்து வர்ணிக்கிறார்.

ஒரு பிரபல குடிகாரராக, காமுகராக அறியப்பட்ட கவிஞரா மற்றவர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது? என்ன கொடுமை சார்!

இதுவரை முப்பத்திநான்கு பதிப்புகள் கண்ட நூல் இது. இந்நூலின் வெற்றிக்கு கவிஞரின் சுவாரஸ்யமிக்க தமிழ் நடை முக்கியப் பங்கு வகிக்கிறது. பக்கத்துக் பக்கம் சுவாரஸ்யம். அதுமட்டுமல்லாமல் அத்தியாயத்துக்கு அத்தியாயம் ஏதாவது கிசுகிசு வைத்திருக்கிறார் என்பதும் நூல் பரபரப்பாக விற்பனையாக கூடுதல் காரணமாக இருந்திருக்கலாம். இதை ஒரு அரசியல் நூல் என்று சிலர் சொல்வது நல்ல நகைச்சுவை. கவிஞரே குறிப்பிட்டிருப்பது போல ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதற்கு கவிஞரின் வாழ்வு நல்ல முன்னுதாரணம். அதற்கு தகுந்த சாட்சி அவரே எழுதிய இந்நூல். திமுகவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை வனவாசம் முன்வைப்பதாக இருந்தாலும் நான் பழகிய திமுககாரர்கள் பெரும்பாலும் ரகசியமாகவாவது இந்நூலை வாசித்திருக்கிறார்கள் என்பதே கண்ணதாசனுக்கு கிடைத்த வெற்றி.

கடைசியாக கட்சியில் இருந்து அவர் வெளிவரும் தினத்தை ‘விடுதலை தந்த ஏப்ரல் ஒன்று’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார். ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என்பது கச்சிதமாகப் பொருந்துகிறது அல்லவா?

நூல் : வனவாசம்

எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்

விலை : ரூ.75

பக்கங்கள் : 392

வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17