5 ஏப்ரல், 2009

இதற்குப் பெயர் தான் காதலா?


நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.

பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.

அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?

பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.

முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?


உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

2 கருத்துகள்: