8 ஏப்ரல், 2009

இரண்டு வேட்பாளர்கள்!


திமு கழக இளைஞரணி முதல் மாநாடு ஆவடியில் நடைபெற்று முடிந்த காலமாக அது இருக்கக்கூடும். ஆலந்தூர் நகர கழக செயல்வீரர்கள் பலரின் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவும் முதல்வர் எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சியாம். அப்பா அப்போது பரங்கிமலை ஒன்றியப் பிரதிநிதியாக, அவ்வட்டார ஸ்டார் பேச்சாளராக இருந்தார். அவர் மீதும் வழக்கு பாய்ந்திருந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி வழக்கு போடும்போதெல்லாம் திமு கழக தொண்டர்களுக்கு அடைக்கலம் தரும் வேடந்தாங்கல் மகாபலிபுரம். “வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் போட்டுக்கிட்டு யாராவது வந்து சாக்லேட் கொடுத்து அப்பா எங்கேன்னு கேட்டா தெரியதுன்னு சொல்லணும்”. இது எனக்கு தரப்பட்டிருந்த ஸ்டேண்டிங் இன்ஸ்ட்ரக்‌ஷன். மஃப்டி என்றாலே அப்போது போலிஸ்காரர்களுக்கு வெள்ளை சட்டையும், வெள்ளை பேண்ட்டும் தான்.

அக்காலத்தில் மடிப்பாக்கத்தில் கழகக்கொடி உயரப்பறந்த ஓரிரண்டு வீடுகளில் என் வீடும் ஒன்று. ஒருநாள் அதிகாலையில் ஏதோ பேச்சுச்சத்தம் கேட்க கண்விழித்துப் பார்த்தேன். “பையன் எழுந்துட்டான் போலிருக்கு. டாட்டா சொல்லிட்டு வாய்யா லச்சிம்பதி. திரும்ப எப்போ வருவியோன்னு தெரியலை!” மாவீரன் மிசா ம.ஆபிரகாம் குரல். எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்த நேரத்தில் அவரது தொகுதியான பரங்கிமலையில் அவருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி திமு கழகத்தை கட்டிக்காத்த மாவீரன். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். அதிகபட்சம் கட்சிக்காரர்களிடம் சிகரெட் வாங்கித்தர சொல்லுவார். திமு கழகம் ஆலமரமாய் விழுதுகளோடு வளர்ந்து இன்று நிற்பதற்கு சோதனையான காலங்களில் ஆணிவேராய் விளங்கிய உண்மைத் தொண்டர்களில் ஒருவர்.

அவரோடு இருந்த இளைஞர் ஒருவர் அப்பாவின் ஆருயிர்த் தோழர். அப்பா தினமும் ஆயிரத்தெட்டு முறையாவது அவரது பெயரை உச்சரிப்பார். ஆர்.எஸ்.பாரதி. மிசா ம.ஆபிரகாமின் தயாரிப்புகள் எல்லாருமே ‘பொழைக்கத் தெரியாத மனுஷன்’ என்று அரசியல் களத்தில் பெயரெடுத்தவர்கள். ஆர்.எஸ்.பாரதியும் அப்படித்தான். திமு கழகத்தின் சட்டச் செயலராக இருந்தப் போதிலும் கால்நூற்றாண்டாக நகரசபைத் தலைவராகவே காலத்தை கழித்துவிட்டவர். தன் தியாகங்களை, பணிகளை கட்சித் தலைமையிடம் எடுத்துச் சொல்லி சீட்டு வாங்கி மந்திரியாகத் தெரியாதவர். “இந்த ஆளும் வாங்க மாட்டேங்கிறான். நம்பளையும் வாங்க விட மாட்டேங்கிறான்” என்று ஆலந்தூர் நகர கவுன்சிலர்கள் அலுத்துக் கொள்வார்கள்.

அப்பா மறைந்தபிறகு பெரியவனாகி நான் முதன்முதலாக கழக மேடையேறிப் பேசியபோது அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் ஆர்.எஸ்.பாரதி. “இவனைப் போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை கழகத்தை எவனும் ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது” என்று அவரது பேச்சில் அப்போது குறிப்பிட்டார்.

சென்ற ஞாயிறு நண்பர் தமிழ்பாரியோடு பேசிக்கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.பாரதி பற்றிய பேச்சு வந்தது. அவர் மீது நடக்கவிருந்த கொலைவெறித் தாக்குதலுக்கு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றுயிரும், குலையுயிருமாகியது, டான்சி வழக்கில் ஏன் பாரதிக்கு அவ்வளவு தீவிரம், இவ்வளவு தகுதிவாய்ந்தவருக்கு தகுதி வாய்ந்த பொறுப்பு இன்னமும் கழகத்தில் வழங்கப்படவில்லையே என்றெல்லாம் ஆதங்கத்தோடு பேசிக்கொண்டிருந்த நிமிடத்திலேயே திமு கழக வேட்பாளர் பட்டியல் வெளியானது.

தென்சென்னை தொகுதியின் வேட்பாளர் மக்கள் தொண்டர் ஆர்.எஸ்.பாரதி.

* - * - * - * - * - * - * - * - * - *

எனக்கு நினைவு தெரிந்த முதல் தேர்தல் அதுதான் என்று நினைக்கிறேன். உள்ளாட்சிமன்றத் தேர்தல். சென்ற மேட்டரில் சொல்லியிருந்த கொலைவழக்கின் முடிவு என்ன ஆனதென்றால் அப்பா இராமாவரம் தோட்டத்துக்குப் போய் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து அதிமுகவில் ஐக்கியமாகியனதோடு முடிந்தது.

மடிப்பாக்கத்தில் அதிமுக பிளவுபட்டு இரண்டு வேட்பாளர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்கள். ஒருவர் ஈ.பொன்னுச்சாமி. மற்றொருவர் எஸ்.வேலாயுதம். திமுக சார்பில் போட்டியிட்டவர் கோ.தெய்வசிகாமணி. தெய்வசிகாமணியும் ஆர்.எஸ்.பாரதி மாதிரியே பொழைக்கத் தெரியாத மனுஷன்.

பொன்னுச்சாமி அப்பாவின் நண்பரும் கூட. மனைவியின் நகைகளை அடகுவைத்து தேர்தல் செலவை சமாளித்தார். பிரச்சாரத்தின் அட்ராக்‌ஷனாக குழந்தைப் பருவத்தில் இருந்த என்னை மேடையேறச் செய்து ‘அணில்’ சின்னத்துக்கு வாக்கு கேட்கவைத்தார் அப்பா. வேலாயுதம் அப்போதே மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களை வைத்து வீடு வீடாக ஆங்கிலத்தில் வாக்கு கேட்கும் நூதனமுறையை கையாண்டார். ஏனென்றால் படித்த பிராமணர்கள் நிறைய பேர் மடிப்பாக்கத்துக்கு கூட்டமாக குடிவந்துக் கொண்டிருந்த நேரம். தேர்தல் முடிவு பொன்னுச்சாமிக்கு சாதகமாக வந்தது. போட்டி வேட்பாளரான வேலாயுதம் படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

96ல் மீண்டும் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது அதே வேலாயுதம் திரும்பவும் களமிறங்கினார். இம்முறை ஒன்றியக் கவுன்சிலருக்கு இரட்டை இலை சின்னத்திலேயே நின்றார். இதற்கிடையில் வேலாயுதம் பற்றி ஏராளமான செய்திகள். திமுக அரசு வேலாயுதத்தை உடைகளை களைத்து ஐஸ் பெட்டில் படுக்கை வைத்து சித்திரவதை செய்தது என்று பேசிக்கொள்வார்கள். 92ல் அதிமுக வெற்றிவிழா மாநாட்டின் போது மதுரையில் ஜெ.வுக்கு இருபத்தைந்து லட்ச வெள்ளி சிம்மாசனத்தை வழங்கி தமிழக அளவிலும் பிரபலமடைந்திருந்தார் வேலாயுதம். அப்போது இந்தியா டுடே பத்திரிகையிலேயே வேலாயுதத்தின் பெயர் வந்திருந்தது மடிப்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதாக சொல்வார்கள். மடிப்பாக்கம் யூடிஐ பேங்குக்கு அருகே இருக்கும் வீட்டில் தான் இன்னமும் வசிக்கிறார். சாதாரண வீடாக இருந்த அது என் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இரட்டை பங்களாவாக கம்பீரமாக நிற்கிறது. 96 தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டு ரேஞ்சுக்கு வேலாயுதம் செலவு செய்ய உதயசூரியன் கண்டிப்பாக ஊத்திக்கொள்ளும் என்று தெரிந்தது. மடிப்பாக்கம் இன்றளவும் அதிமுகவின் கோட்டை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

உதயசூரியன் சின்னத்தில் நின்றவர் என் பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணி. பால் வியாபாரம். 89 ஆட்சியின் போது மலிவுவிலை மது காண்ட்ராக்ட் எடுத்து மடிப்பாக்கம் கூட்ரோடில் சாராயக்கடை நடத்தியவர். வேலாயுதத்தை எதிர்த்து மோத யாரும் முன்வராத நிலையில் ஆள்பலமே இல்லாத சுப்பிரமணி தைரியமாக முன்வந்தார். வேட்புமனுத் தாக்கலோடு சரி. இவர் பிரச்சாரத்துக்கே போகவில்லை.

தேர்தல் முடிவு ஆச்சரியமளித்தது. இந்த முறையும் வேலாயுதம் தோற்றதை வேலாயுதம் மட்டுமல்ல, எதிர்த்து நின்றவராலேயே ஜீரணிக்க முடியவில்லை. அந்த தேர்தலின் வென்றிருந்தால் வேலாயுதம் ஒன்றியப் பெருந்தலைவர் ஆகிவிடுவார் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

இடையே என்ன ஆனதென்று தெரியவில்லை. அதிமுகவிலிருந்து விலகியிருந்தார் வேலாயுதம். 2001 தேர்தலின் போது சுயேச்சையாக மீண்டும் ஒன்றியக் கவுன்சிலுக்கு நின்றார் வேலாயுதம். எல்லாக் கட்சிகளையும், கட்சிக்காரர்களையும் வளைத்து தனக்கு ஆதரவாக்கிக் கொண்டார். திமுக சார்பில் ஒரே ஒருமுறை, அதுவும் பிசாத்து வார்டு மெம்பருக்கு அப்பா நின்ற தேர்தல் அது. எங்கள் வீட்டுக்கு திடீரென வந்த வேலாயுதம் அப்பாவுக்கு சால்வை போட்டு தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார். திருமங்கலம் பாணியில் நடந்த தேர்தல் அது. ஒருவழியாக வேலாயுதத்தின் பலவருடக் கனவு நிறைவேறியது. திமுக வேட்பாளர் ஒருவரை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வென்றதற்குப் பிறகு அவரை யாரும் கண்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்பாக திடீர் பரபரப்பு. சுமார் பல கோடி ரூபாய்க்கு மேல் அவர் எப்படியோ சொத்து சேர்த்துவிட்டார் என்று சொன்னார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸில் அவ்வளவு சம்பாதிக்க முடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரே ஒருமுறை ஒன்றியக் கவுன்சிலராக இருந்தவர் அரசியலில் என்ன சம்பாதித்து கிழித்திருக்க முடியும்? ஜி டிவி, பி டிவி என்று இரண்டு புதிய டிவி சேனல்களை வேலாயுதம் தொடங்கப் போவதாக சொன்னார்கள். செய்தித்தாள்களிலும் ஆட்கள் தேவை விளம்பரம் பார்த்தேன். அவர் எந்தக் கட்சியிலும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக பிசினஸில் இறங்கிவிட்டார் என்று பேசப்பட்டது.

நேற்று விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. விழுப்புரம் வேட்பாளர் : மடிப்பாக்கம் எஸ்.வேலாயுதம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக