29 ஜூலை, 2011

புரட்சியும், பூர்ஷ்வாவும்!

ரு டீ சாப்புடலாமா தோழர்?” தோழர் கேகே கேட்டால் மறுக்க முடியுமா?

வாங்க தோழர் போகலாம்வாசித்துக் கொண்டிருந்த ஏழு தலைமுறைகள்நூலை டேபிளில் வைத்துவிட்டு கிளம்பினேன்.

அக்கம் பக்கம் சில தோழர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளை பிரித்து வாசித்துக் கொண்டிருந்தார்கள். புரட்சி வருவது குறித்த செய்தி ஏதாவது தேறுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். தோழர்கள் பெரும்பாலும் இரண்டு வார தாடி வைத்திருப்பார்கள். ஜிப்பா அணிவார்கள். தோளில் ஜோல்னா பை. பையில் ஓரிரண்டு ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் நிரந்தரமாக இருக்கும். புதுத்தோழர் ஒருவர் பேராசானின் பொதுவுடைமை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது கண்கள் கலங்கியிருந்தது ஏனென்று தெரியவில்லை. இரவு முழுவதும் வாசித்திருக்கலாம். அவரையும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் பணி கேகே தோழர் தலையில் தான் விடியும்.

முப்பதுக்கு இருபது அளவில் ஒரே அறையாக இருந்த கட்சியின் கிளை அலுவலகம் கிட்டத்தட்ட ஒரு நூலகம். தோழர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் இங்கு வந்து தேவையான நூல்களையோ, செய்தித்தாள்களையோ இலவசமாகவே வாசிக்கலாம். ஆனால் தினத்தந்தி வைப்பதில்லை என்று இயக்கத்தை சார்ந்த தோழர்கள் தவிர்த்து வேறு யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. கட்சிப் பத்திரிகைகளையும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் வெகுஜனங்கள் வாசிக்கும் நிலையை ஏற்படுத்துவதே புரட்சிக்கு இடும் வித்து என்பதாக தோழர் கேகே சிந்தித்து சிலாகித்துச் சொன்னார். ஆனால் வித்து இடும் பணி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வெகுஜனங்கள் ஒத்துவர வேண்டுமே?

நீளவாக்கில் இருந்த பெஞ்சில் மத்திய அரசை கண்டித்து அச்சிடப்பட்ட சூடான சுவரொட்டிகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு தான் தோழர்களோடு போய் ஒட்டவேண்டும். எல்லா சுவரொட்டிகளுமே மத்திய அரசே! மத்திய அரசே!என்றுதான் ஆரம்பிக்கும். கண்டிக்கிறோம்என்றோ விடுதலை செய்!என்றோ முடியும். இடையில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் அவ்வப்போதான பிரச்சினைகளின் அடிப்படையில் இயக்கத்தின் பொலிட்பீரோ முடிவெடுத்துச் சொல்லும்.

சமீபத்தில் தான் இந்த இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். தீவிரப் புரட்சிச் செயல்பாடுகளின் மீதிருந்த அதீத ஆர்வத்தால் நான் இங்கு இணைந்ததாக நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. இங்கு வருவதற்கு முன்பாக இப்போதிருக்கும் ஆளுங்கட்சியில் தீவிர செயல்பாடுகளை கொண்டிருந்தேன். அந்தக் கட்சியின் 153வது வட்டச் செயலாளருக்கும் எனக்கும் தகராறு. கக்கூஸ் காண்ட்ராக்டில் அவர் பல லட்சம் ஊழல் செய்திருந்ததாக கண்டுபிடித்தேன்.

ஒண்ணுக்கு போறவனும் ரெண்டுக்கு போறவனும் கொடுக்குற ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் காசுலே என்னத்தய்யா லட்சக்கணக்குலே ஊழல் பண்ணமுடியும்?” செயல்வீரர் கூட்டத்தில் திருப்பிக் கேட்டார் வட்டம்.

அவர் கேட்ட கேள்வி நியாயம் தான். ஆனால் எந்த வேலை வெட்டியோ, பூர்வீக சொத்தோ இல்லாத அவர் எப்படி புதிய டாடா சஃபாரி வாங்கியிருக்க முடியும்? அவருக்கு கட்சி கொடுத்தது கக்கூஸ் காண்ட்ராக்ட் மட்டுமே. எனவே அதை வைத்து மட்டுமே விஞ்ஞானப்பூர்வமாக பெரிய ஊழல் செய்து சம்பாதித்திருப்பார் என்று நம்பினேன்.

கட்சியில் என் குற்றச்சாட்டை யாரும் ஆமோதிக்கவோ, ஒரு பிரச்சினையாகவோ பார்க்கும் மனநிலையிலோ இல்லை. இந்த கட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கட்சி என்பதை உணர்ந்தேன். கால் சென்டரில் (Call Centre என்று தெளிவாக வாசிக்கவும்) செக்யூரிட்டியாக காலத்தை தள்ளும் எனக்கு கக்கூஸ் காண்ட்ராக்ட் கூட வேண்டாம் அய்யா. குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஊராட்சி மன்றத்தில் குப்பை அள்ளும் காண்ட்ராக்ட்டையாவது கொடுத்திருக்க வேண்டாமா? எல்லாவற்றையும் வட்டச் செயலாளர், கொட்டச் செயலாளர் வகையறாக்களே தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தால் நாங்களெல்லாம் அரசியலில் இருந்து மக்களுக்கு என்ன பிரயோசனம்?

சிந்திக்க சிந்திக்க கட்சித்தலைமை உண்மைத் தொண்டர்களுக்கும், தமிழ் சமூகத்துக்கும் செய்துவரும் அளப்பரிய துரோகங்கள் புலப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் செல்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தேன். ஈழத்தமிழர் பிரச்சினையை கட்சி கையாளும் முறை சரியில்லை என்று கூறி கட்சியை விட்டு வெளியேறினேன்.

கடந்த தேர்தலில் தோழர் கேகே இருந்த இயக்கத்தோடு உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்திருந்தோம். எனவே தோழர் கேகே எனக்கு நன்கு அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரது இயக்கத்தின் பொலிட்பீரோ எதிர்க்கட்சியோடு உடன்பாடு கண்டிருந்ததால் ஆளுங்கட்சி மீது தார்மீகக் கோபம் கொண்டிருந்தார் தோழர். மாறி மாறி வைத்துக் கொள்ளும் இந்த தேர்தல் உடன்பாடுகளின் மீது தோழர் கேகேவுக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் புரட்சி வரும் வரை புரட்சிக்கான ஆயத்தங்களை தயார் செய்யவும், கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுக்கவும், மற்ற செலவினங்களுக்காகவும் இதுபோன்ற சமரசங்களுக்கு பொலிட்பீரோ உடன்படுகிறது என்று அவர் எனக்கு விளக்கினார்.


ட்டச்செயலாளரின் கக்கூஸ் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் தோழர்!கட்சியை விட்டு வெளியேறிய எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டப்போது சொன்னார் தோழர் கேகே. பாராட்டுக் கூட்டத்தில் ஆறு பேர் கலந்து கொண்டார்கள்.

எப்படி அம்பலப்படுத்துவது?” அம்பலப்படுத்துவது, அம்மணப்படுத்துவது மாதிரியான சொற்கள் எனக்கு அப்போது புதியதாக இருந்தது.

துண்டுப் பிரசுரம் கொடுப்போம் தோழர். அந்த வட்டச் செயலாளர் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் கக்கூசுக்கு வரும் ஒவ்வொரு பாட்டாளித் தோழருக்கும் தலா ஒரு துண்டுப் பிரசுரம் கொடுப்போம். அவர் வீட்டுக்கு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்வோம். அவரது ஊழலை வெகுஜனங்களுக்கு எடுத்துச் சொல்வோம். துண்டுப் பிரசுரம் மூலமாக கலகம் புரிவோம். கலகம் சிறுபொறி. சிறுபொறி நெருப்பாகும். புரட்சி நெருப்பு!ஆவேசமாக குரலை ஏற்றி, இறக்கி தோழர் சொன்னபோது எனக்கு புல்லரித்தது. மயிர்க்கால்கள் கூச்செறிந்தது.

என்னுடைய செலவில் பிட்நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு வட்டச்செயலாளர் அம்பலப்படுத்தப் பட்டார். ஆனால் அம்பலப் படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு ஆளுங்கட்சி பதவி உயர்வு கொடுத்து அழகு பார்த்தது ஏனென்றே தெரியவில்லை. நான் தோழர்களின் இயக்கத்துக்கு வந்த வரலாற்றுப் பின்னணி இதுதான்.

இந்த இயக்கத்துக்கு வருவதற்கு முன்பாக புரட்சி என்றாலே எனக்கு புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் தான் தெரியும். புரட்சி எப்படியிருக்கும் என்று எனக்கு சொல்லித் தந்தவர் தோழர் கேகே. புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கு கட்சியின் கொள்கை மற்றும் செயல்விளக்க செயல்பாடுகளைப் பற்றியும் பொதுவுடைமை சித்தாந்தங்கள் குறித்தும், புரட்சியின் அவசியம் குறித்தும் விருப்பத்தோடு பாடமெடுப்பார்.

ஆரம்பத்தில் தோழர் சொன்ன புரட்சி எந்த வடிவத்தில் எந்த நிறத்தில் அமைந்திருக்கும் என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை. தோழர் சொன்னதை வைத்துப் பார்த்தால் ஜூராசிக் பார்க் டைனோசர் வடிவில் புரட்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் அது எப்போது வரும்? எப்படி வரும்? என்பதைப் பற்றி தோழருக்கே தெளிவில்லாத நிலை இருந்ததால் என் மனதில் அமீபா வடிவில் புரட்சி பதிந்துப் போனது.

தோழர் கேகே மவுண்ட் ரோட்டில் ஒரு ஏசி கம்பெனியில் வேலை பார்க்கிறார். இயக்கத்தின் தொழிற்சங்கப் பொறுப்பில் அவர் இருப்பதால் அவர் வேலை செய்யாமலேயே அவருக்கு கம்பெனி சம்பளம் தந்து கொண்டிருந்தது. அவரை வேலை செய்யச் சொன்னால் எங்கே ஒட்டுமொத்த வேலைநிறுத்தம் அறிவித்து விடுவாரோ என்று கம்பெனி நிர்வாகத்துக்குப் பயம். அடிக்கடி தோழர் கேகே டெல்லிக்கெல்லாம் போய்விட்டு வருவார். ஒருமுறை மக்கள் சீனத்துக்கு கூட நேரில் சென்று தொழிற்சங்க புரட்சிகரச் செயல்பாடுகளை கற்றறிந்து வந்தவர் அவர். இயக்கத்தின் முழுநேர ஊழியராக அவர் இருந்ததால் அவருக்கு பிரயாணச் செலவுகளையெல்லாம் இயக்கமே பார்த்துக் கொள்ளும். ஆங்காங்கே பிரயாணித்து புரட்சிக்கான விதைகளை ஊன்றிவருவதை தவம் போல செய்துவந்தார் தோழர் கேகே.


தோழர் ஒரு சிங்கிள் டீயும், நுரை தட்டாம ஒரு முழு கப் டீயும் போடுங்க!சினேகபாவத்தோடு நாயரிடம் சொன்னார் தோழர் கேகே. தோழருக்கு டீ க்ளாஸ் தளும்ப தளும்ப கப் டீ சூடாக இருக்க வேண்டும். அப்படியே சாப்பிடுவார்.

யான் தோளர் இல்லா. நாயர்டீக்கடைக்காரர் தோழர் என்பதை ஒரு சாதியாக புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

பார்த்தீங்களா தோழர்? புரட்சி சீக்கிரமா வராததால வர்க்கம் சாதியாவும், குழுக்களாவும் பிரிஞ்சு பேயாட்டம் ஆடிக்கிட்டிருக்கு!தோழர் கேகே பேசும் ஒவ்வொரு சொல்லையுமே இடைவிடாது ஒரு டயரியில் குறித்துக் கொண்டே வந்தால் ஆண்டு முடிவில் பொதுவுடைமை சைஸுக்கு ஒரு புத்தகத் தொகுதி போட்டு விடலாம்.

தம்மு அடிக்கிறீங்களா தோழர்?” கேகே தம் அடித்து நான் பார்த்ததில்லை. எனக்கு அப்போதைக்கு ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது.

தோழர் கேகே கொஞ்சம் சிந்தித்தார். அவர் சிந்திக்கும் போது புருவங்கள் இரண்டையும் நெறிப்பார். நெற்றியின் மத்தியில் சின்னதாக முட்டை போல சதைக்கோளம் தோன்றும். இதுபோன்று அவர் சிந்திக்கும் நேரங்களில் ஏதோ பொதுவுடமை முத்து அவரது வாயிலிருந்து சிந்தப் போகிறது என்பதை உணரலாம்.

சட்டென்று சொன்னார். நீங்க இன்னமும் கூட பூர்ஷ்வாவா தானிருக்கீங்களா தோழர்?”

தலைமீது இடி விழுந்தாற்போல இருந்தது. சமூகத்தில் வேசிமகன் என்று ஒருவனைப் பார்த்து சொல்லப்படுவது எவ்வளவு இழிவானதாக கருதப்படுகிறதோ, அதற்கு இணையான இழிவு பொதுவுடைமை இயக்கத்தில் தீவிரமாக செயல்படும் ஒரு தோழரைப் பார்த்து பூர்ஷ்வாஎன்று சொல்லப்படுவதும்.

சினிமா பார்ப்பது பூஷ்வாத்தனம், உழைக்கும் தோழர்களை, ஒடுக்கப்பட்ட தோழர்களை சினிமா சுரண்டுகிறதுஎன்று ஒருமுறை தோழர் சொன்னதால் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே விட்டுவிட்டேன். ஆனால் 1917க்கும் 1990க்கும் இடையில் வந்த ரஷ்யத் திரைப்படங்களை பார்ப்பது பூர்ஷ்வாத்தனமில்லை என்று இயக்கம் விலக்கு அளித்திருந்தது. ரஷ்யமொழியை கற்றுக் கொண்டு அந்தப் படங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று வாளாயிருந்து விட்டேன்.

அப்படிப்பட்ட என்னைப் பார்த்து தோழர் பூர்ஷ்வாஎன்று சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. என்ன தோழர் சொல்றீங்க? சிகரெட்டு பிடிக்கிறது பூர்ஷ்வா மனப்பான்மையா?”

ஆமாங்க தோழர். சிகரெட்டு கம்பெனி முதலாளிகள் கோடி கோடியா மக்களை சுரண்டறதுக்கு நீங்க மறைமுகமா துணை போறீங்க! புகை புரட்சிக்கு நிச்சயமா பகை!!

என்ன தோழர் இப்படி சொல்றீங்க? தோழர் காஸ்ட்ரோ கூட புகைப்பழக்கம் கொண்டவர் தானே

என்ன தோழர். என்னிடம் விவாதமா? பொதுவுடைமையை நாலு முறை கரைச்சிக் குடிச்சவன் நான். இருந்தாலும் இதுபோன்ற விவாதங்கள் புரட்சி தொடர்பான விவாதங்களுக்கு தொடக்கப்புள்ளியா அமையுறதாலே கண்டிப்பா தொடரணும்னு பொலிட்பீரோ அறிவுறுத்தியிருக்கு. க்யூபாவில் புரட்சி வந்துடிச்சி. தோழர் காஸ்ட்ரோ புகை பிடிக்கிறார். இந்தியாவில் புரட்சி வருவதற்கான ஏற்பாடுகளை தானே நாம செஞ்சுக்கிட்டிருக்கோம். புரட்சி வரட்டும். நாடெங்கும் செங்கொடி பறக்கட்டும். நாமும் புகைப்பிடிப்போம் தோழர்!பரவசமாக சொன்னார் தோழர் கேகே. புரட்சி வரும் வரை திருமணம் செய்வதையே கூட தள்ளிப் போட்டிருந்த அவருக்கு புரட்சியின் மீதிருந்த நம்பகத்தன்மையை சந்தேகம் கொள்ள இயலாது. நான் சொன்ன காஸ்ட்ரோ லாஜிக்கை சந்தேகமேயில்லாமல் தவிடுபொடியாக்கி இருந்தார் தோழர்.

நீங்க இன்னும் மாவோவை உணரலை. அதால தான் இதுமாதிரி அரைகுறையா விவாதிக்கிறீங்க!தீவிரமாகவும், திடமாகவும் சொன்னார் தோழர்.

இல்லீங்க தோழர். மாவாவை நான் உணர்ந்திருக்கேன். முன்னாடியெல்லாம் அந்தப் பழக்கமிருந்தது. வாயி வெந்து உள்ளே ஓட்டை ஆயிட்டதாலே இப்போ தம்மு மட்டும் தான்என் நாக்கில் சனி. ஏடாகூடமாக உளற ஆரம்பித்தேன்.

நீங்க பூர்ஷ்வா என்பதற்கு இது தக்க உதாரணம் தோழர். புரட்சியாளன் மாவோவை மறந்து மாவா என்ற போதைப்பொருள் பின்னாடி விவாதத்தில் போறீங்க பாருங்க. இதுமாதிரியான தனிமனித ஆசாபாசங்கள் புரட்சியை தாமதப்படுத்தும்

தோழர் கேகேயிடம் தர்க்கம் செய்து வெல்ல முடியாது என்று புரிந்துப் போயிற்று. சட்டென்று ஒரு ஐடியா வந்தது. போனமாசம் அமெரிக்க முதலாளித்துவ அடக்குமுறை எதிர்ப்பு பேரணிக்கு கேரளாவுலேருந்து வந்திருந்த தோழர்கள் கூட புகை பிடிச்சாங்களே தோழர்!

நல்லா கவனிச்சுப் பார்க்கணும் தோழர். அவங்க பிடிச்சது பீடி. பீடி சுற்றும் இலட்சக்கணக்கான பாட்டாளிகளை அவங்க வாழ வைக்கிறாங்க!

இதற்குள்ளாக நாயர் டீ போட்டு டேபிளில் சூடாக வைத்தார். யோசித்துப் பார்த்ததில் தோழர் கேகே சொல்வதில் இருந்த புரட்சிவாதமும், அறமும் புரிந்தது. ஆனாலும் அப்படி பார்க்கப் போனால் டீ குடிப்பது கூட பூர்ஷ்வாத்தனம் என்பதாக ஆழமாக பொதுவுடைமை மனதோடு சிந்தித்தேன். ஒரு கப் டீக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவென்று என் பார்வை உலகளவில் விரியத் தொடங்கியது. இதையெல்லாம் தோழரிடம் விவாதித்தால் அதற்கும் தயாராக எதிர்விவாதத்தை ஏடாகூடமாக வைத்திருப்பார். எனவே புரட்சி வரும் வரை தோழர்களுக்கு தெரியாமல் தம்மடித்து ரகசிய பூர்ஷ்வாவாக வாழ்ந்து தொலைக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். அமைதியாக, எதிர்த்துப் பேசாமல் ஏதோ சிந்தனைபாவத்தில் இருந்த என் முகத்தைப் பார்த்த தோழருக்கு நான் புரட்சிக்கு லாயக்கானவன் தான், என்னை தேத்திவிடலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும்.

கவலைப்படாதீங்க தோழர். உங்களுக்குள்ளே ஒளிஞ்சுக்கிட்டிருக்கிற பூர்ஷ்வாவை விரட்டியடிச்சி உங்களை புரட்சியாளனா மாத்துறதுக்கு நானாச்சி. என்னை நம்புங்க!

புரட்சி நாளை வருமென்று தோழர் நம்புகிறார். தோழரை நான் நம்புகிறேன்.

(நன்றி : புதிய தலைமுறை)

28 ஜூலை, 2011

டால்ஃபின்களை காப்பாற்றிய சிட்டுக்குருவிகள்!

கேம்பல் ரிவர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு நகரம். இங்கிருக்கும் நதியில் அடிக்கடி கடல் உட்புகுந்து, கரைமட்டம் அதிகரிக்கும். அப்படியொரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் பாப் சோல்க் தன் வீட்டின் முகப்பில் இருந்த புற்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

யதேச்சையாக நதிக்கரையோரம் பார்த்தவருக்கு ஆச்சரிய அதிர்ச்சி. சுமார் பத்து அடி நீளமுள்ள நான்கு அபூர்வ வகை டால்பின் மீன்கள், கரையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கடல்நீர் உட்புகுந்தபோது இவற்றையும் அடித்துவந்து கரையோரத்தில் தள்ளிவிட்டு, மீண்டும் உள்வாங்கியிருக்கிறது.

நான்கு உயிர்களையும் காக்க வேண்டுமே? என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியவில்லை. யாரை தொடர்பு கொண்டு என்ன கேட்க வேண்டும்?

உடனடியாக உள்ளூர் மீன்வளத்துறைக்கும், கடல் தொடர்பான துறை அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முயற்சித்தார். அதிகாலையில் எந்த அலுவலகம்தான் இயங்கிக் கொண்டிருக்கும்?
டால்ஃபின்களை உயிரோடு காக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் இச்செய்தியை பகிர்ந்தார். “நதியோரத்தில், என் வீட்டு வாசலில் நான்கு டால்ஃபின்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றன”

பாப் செய்தது இவ்வளவுதான். இவருடைய செய்தியை இணையத்தில் அறிந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷன் அலற ஆரம்பித்தது. செய்தி கேட்ட தன்னார்வலர்கள் பலரும் பக்கெட்டோடு பாப் வீட்டுக்கருகே படையெடுக்க ஆரம்பித்தார்கள். சுமார் எண்பது பேர் காலை ஏழு மணிக்கே அவர் வீட்டு வாசலில் குழுமினார்கள். டால்ஃபின் மீட்புக்குழு தயார்.

பக்கெட்டில் நீரெடுத்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த டால்ஃபின்கள் மீது ஊற்றினார்கள், உடல் ஈரம் வற்றிவிடக் கூடாது என. அவை இருந்த இடத்தில் இருந்து நதிக்குள் செல்ல சிறு கால்வாய் வெட்டினார்கள். கால்வாயில் போதிய நீர் வருமாறு செய்தார்கள். டால்ஃபின்கள் அதுவாகவே மெதுவாக நகர்ந்து, ஆற்றுக்குள் நீந்தி, கடலுக்கு சென்றது.

சடுதியில் நடந்து முடிந்த விஷயங்கள் இவை. “இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. இணையத்தின் மூலமாக இப்படியெல்லாம் கூட நல்லது செய்யமுடியும் என்பதை இன்றுதான் அறிந்தேன்” என்று இம்முறை ஆனந்த அதிர்ச்சியோடு சொல்கிறார் பாப் சோல்க்.

இணையம் இருமுனை கத்தி. அரட்டையடிக்கப் பயன்படும் சமூக வலைத்தளங்களை, சமூகப் பணிகளுக்கும் கூட பாப் பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தலாம்.

(நன்றி : புதிய தலைமுறை)

27 ஜூலை, 2011

தெய்வத்திருமகள்!

மகள் அப்பாவுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை அள்ளித்தருவாள் என்பது கருவானபோதே தெரிந்திருந்தால், நானும் என் அப்பாவுக்கு மகளாக பிறந்திருப்பேன்!

23 ஜூலை, 2011

காஞ்சனா

பெரிய ஹீரோ. பெரிய டைரக்டர். பெரிய மியூசிக் டைரக்டர். என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்த்து முதல் நாள் முதல் காட்சியே தியேட்டருக்குப் போய் உட்கார்ந்து பல்பு வாங்கியதும் உண்டு.

என்னவோ ஒரு படம். மூன்று மணிநேரத்தை போக்கியாக வேண்டும் என்கிற கட்டாயத்தால் தியேட்டருக்குப் போய் இன்ப அதிர்ச்சியும் அடைந்தது உண்டு.

காஞ்சனா இரண்டாவது அனுபவத்தை தருகிறாள்.

சரண் தயாரிப்பில், லாரன்ஸின் இயக்கத்தில் முனி பார்த்திருக்கிறேன். முதல் தடவை பார்க்கும்போது மொக்கையாகவும், பின்னர் யதேச்சையாக டிவியில் அடிக்கடி காண நேரும்போது ‘அட சுவாரஸ்யமா இருக்கே’ என்று உட்கார்ந்தது உண்டு.

அதே கதை. அதே ஹீரோ. அதே இயக்குனர். கதாபாத்திரங்களை மட்டும் கொஞ்சம் ஷேப் அடித்து, டிங்கரிங் செய்து குலுக்கிப் போட்டால் முனி பார்ட் டூ ரெடி. முதல் பார்ட்டில் எங்கெல்லாம் ‘லாக்’ ஆகியது என்பதை கவனமாக பரிசீலித்து, காஞ்சனாவில் அதையெல்லாம் ‘ரிலீஸ்’ செய்திருப்பதில்தான் லாரன்ஸின் வெற்றியே இருக்கிறது. எந்திரன் ரிலீஸின் போதே ஜிலோவென்றிருந்த உட்லண்ட்ஸில் காஞ்சனாவுக்கு திருவிழாக் கூட்டமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தமிழில் நிச்சயமாக ஹிட். தெலுங்கில் அதிநிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்.

ஒரு பேய்ப்படத்தை பார்த்து தியேட்டரே வயிறு வலிக்க சிரித்துத் தீர்ப்பது அனேகமாக தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஒரு அட்டகாச காமெடி. அடுத்தக் காட்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் திகில். இப்படியே மாற்றி, மாற்றி அழகான சரமாக திரைக்கதையை தொடுத்திருக்கிறார் லாரன்ஸ்.

கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என்று எல்லாருமே இந்த உத்தி புரிந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கோவைசரளா. மனோரமாவின் உயரத்தை தாண்டுமளவுக்கு அபாரமான டைமிங் சென்ஸ் இவருக்கு.

லஷ்மிராய் மட்டும் தேவையில்லாமல் வருகிறார். ஃபேஸ் கொஞ்சம் சப்பை என்றாலும், பீஸ் நல்ல சாண்டல் வுட். அதிலும் இடுப்பு முட்டை பாலிஷ் போட்ட மொசைக் தரை மாதிரி பகட்டாக பளபளக்கிறது.

காஞ்சனாவும் இதர இரண்டு ஆவிகளும் லாரன்சுக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் அந்த டைனிங் டேபிள் காட்சி அநியாயத்துக்கு நீளம். ஆனாலும் நீளம் தெரியாதவகையில் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பதில், தான் ‘ரியல் மாஸ்’ என்பதை நிரூபிக்கிறார் லாரன்ஸ். நடனக் காட்சியில் மாற்றுத் திறனாளிகளை புகுத்தியிருப்பது துருத்திக் கொண்டு தெரிகிறது என்றாலும் நல்ல முயற்சி.

முதல் பாதியின் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும், இரண்டாம் பாதியில் தன் முதுகில் சுமக்கிறார் சரத்குமார், எம்.எல்.ஏ., இந்த பாத்திரத்தை தைரியமாக ஒத்துக்கொண்டு நடித்த எம்.எல்.ஏ.,வை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஓவர் ஆக்டிங் ஆகியிருக்கக் கூடிய அபாயம். நீண்டகால திரையுலக அனுபவம் வாய்ந்த சரத் ‘அண்டர்ப்ளே’ செய்து அசத்தியிருக்கிறார். நடிப்புச் சாதனையாளர் நடிகர் திலகம் நடிக்க விரும்பி, கடைசிவரை வாய்க்காமல் போன பாத்திரம், சரத்துக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய புண்ணியம்? சரத்தின் கேரியரில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் காஞ்சனா.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், கடைசி பகுதி ரத்த வெறியாட்டம் அச்சமூட்டுகிறது. படம் பார்த்த குழந்தைகளுக்கு நீண்டகால கொடுங்கனவுகளை வழங்கவல்லது. குறிப்பாக ரத்தச்சிவப்பான க்ளைமேக்ஸ் பாடல். இவ்வளவு வன்முறை வெறியாட்டத்தோடு ஒரு பாடலை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை.

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, பிரச்சார நெடியின்றி இயல்பாக ஒரு கமர்சியல் படத்தில் செருகியிருப்பதற்காகவே காஞ்சனாவை எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்கலாம்.

காஞ்சனா – கட்டாயமா பார்க்கணும்ணா...

21 ஜூலை, 2011

அசோகர் கல்வெட்டு


ங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர் வீட்டுத் தோட்டம் சரியாகப் பராமரிக்கப் படாமல் எப்போதும் புல்லும் பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும்போது, அந்தத் தோட்டத்தை நடுத்தர வயதுடைய ஒருவர் கடப்பாரை, மண்வெட்டிகொண்டு, ஒழுங்குசெய்துகொண்டு இருந்ததைப் பார்த்தேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த நடுத்தர வயது மனிதரை எங்கோ பார்த்த தாக நினைவு. பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்தேன்.

 யாரோ ஒருவர் சம்பந்தம் இல்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், 'இன்னா சார்... உங்க வூட்ல ஏதாச்சும் வேலை இருக்கா?'' என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலைக் கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜேதான்!

அமல்ராஜ் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரங்கிமலை ஒன்றியத் துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. ஐந்தாவதுக்குப் பிறகு, தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு 'ஏ’ செக்‌ஷன். பெண்களுக்கு 'பி’ செக்‌ஷன். 'ஏ’ செக்‌ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்து இருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்து இருந்தான். அவனை அது வரை பார்த்தது இல்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்துப் பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கு ஏற்ற போதுமான மூளை வளர்ச்சி கிடையாது என்பதை.

சீருடை என்கிற விஷயம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதே, மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால், அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை அரசுப் பள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டு இருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துப் பையன்கள் டெரிகாட்டன் அணிந்து இருப்பார்கள். வசதியான வீட்டுப் பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்து இருப்பார்கள்.

அமல்ராஜ், சைனா சில்க் சட்டை அணிந்து இருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும் பிரவுன் நிற டவுசரும் அணிந்து இருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேன்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும்தான். அவனுடைய அப்பா, அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் தாராளமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் நம்ம அமல்ராஜ்.

புதிய நோட்டையும் புத்தகங்களையும் முகர்ந்து பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாக இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ்தான் கிளாஸ் டீச்சர். முதல் நாள் என்பதால், பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக் குச்சிக்கும் வேலை இல்லை.

கதைக்கு இடையே சின்ன இடைச் செருகல்...


நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக் குச்சி வளைந்து கொடுக்கும் தன்மைகொண்ட, உறுதியான கொம்பு. எருமை மாடு ஓட்டு பவர்கள் நொச்சிக் கொம்பைப் பயன்படுத்து வதைக் கிராமங்களில் காணலாம். இந்தக் குச்சியைவைத்து நுங்கு சைக்கிள் தயாரித் தால், பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனைகொண்டது. காய்ந்த நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவதுபோல வெண்மையான புகை வரும். இந்தப் புகை, கொசுக்களையும் பூச்சிக்களையும் அழிக்கவல்லது.
அப்போது எல்லாம் வகுப்பறை டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக் குச்சிதயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார் களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பர். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்து வந்தேன். எட்டா வதுக்குப் பிறகு, பொறுக்கிப் பசங்க பட்டியலில் நான் சேர்ந்துவிட்டதால், பத்மநாபனோ வேறு யாரோ டீச்சருக்கு அல்லக்கையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். நொச்சிக் குச்சிக்கு டிமாண்ட் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக, நுணா மரத்தின் கிளையை உடைத்து, பிரம்பு தயார் செய்துவைக்க வேண்டும். கறு நிற நுணாம்பழம் சுவையாக இருக்கும். ஆனால், வாசனை அவ்வளவு சிலாக்கியமாக இருக்காது!

ஓ.கே. கமிங் பேக் டு தி பாயின்ட்...

சொர்ணாம்பிகை டீச்சரின் வகுப்பு  முடிந்ததுமே ஒல்லித் தமிழய்யா வந்தார். ஒல்லித் தமிழய்யா ரொம்ப ஜாலியான ஆள். டைமிங் கமென்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும், நொச்சிக் குச்சி பிய்ந்துபோகும் அளவுக்கு விளாசிவிடுவார். குச்சியே பிய்ந்துவிடும் என்றால், அது பிய்யக் காரணமான முதுகின் கதி என்னவென்று சொல்ல வேண்டியது இல்லை.

அன்று வகுப்புக்கு வந்த ஐயா எல்லோரையும் உயிரெழுத்து, மெய் எழுத்து எழுதச் சொன்னார். உயிர் எழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன். மெய்யெழுத்து எழுதும்போது, மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லார் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த ஐயா, அமல்ராஜின் நோட்டைப் பார்த்து உலகையே வெறுத்து விட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாகத் தமிழில் இல்லை. அது எந்த மொழி என்று ஐயாவால்கூடக் கண்டு பிடிக்க இயலவில்லை.

''என்னய்யா இது? அசோகர் கல் வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?'' என்றார்.

அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாகத் திக்குவாய். வேகமாகப் பேச முடியாது.

''ஏன்டா, கேட்டுக்கிட்டு இருக்கேன். உன்னால பதில்கூடச் சொல்ல முடியாதா... வாய்ல என்ன கொழுக்கட்டையா?'' என்றவாறே நொச்சிக் குச்சியை எடுத்தார். பக்கத்தில் இருந்த பையன், ''ஐயா, அவனுக்குச் சரியாப் பேச வராது'' என்றான்.

''சரி... உன்னோட பேரை நோட்டுல எழுது!'' என்றார், ஐயா கண்டிப்பான குரலில்.

அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரைக்கூட எழுத முடியவில்லை என்பதுதான் சோகம்.

''நீயெல்லாம் எப்படிடா ஆறாம் கிளாஸ் வந்தே?'' என்று கோபமாகக் கேட்டவாறே நொச்சிக் குச்சியால் அடித்து விளாசிவிட்டார் ஐயா. முதுகிலும் உள்ளங்கையிலும் ஏராளமான அடிகளைப் பொறுமையாக வாங்கிய அமல்ராஜ், ஒரு சின்ன எதிர்ப்புக்கூடத் தெரிவிக்கவில்லை. சிலை மாதிரி உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாக வந்து அமர்ந்தான். அவனது கையைப் பிடித்துப் பார்த்தேன். சிவந்து போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜைப் பார்க்க ரொம்பப் பாவமாக இருந்தது.

மறு நாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து, மகன் அடிபட்டதற்காக நீதி கேட்டுக்கொண்டு இருந்தார். அவனால் அ, ஆ என்றுகூட எழுத முடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் சுத்தமாக எடுபடவில்லை. ''அதைச் சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்!'' என்று அமல் ராஜின் அப்பா அழும்பு செய்தார். ''ஆறாம் கிளாஸ்ல எப்படிங்க அ, ஆ, இ, ஈ கத்துக் கொடுக்க முடியும்?'' என்று ஐயாவின் கேள்வியை அவர்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்தார் கள். கடைசியாக, தமிழய்யா நொந்துபோய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.

அன்று முதல் அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரீட்சைகூட அசோகர் கல்வெட்டு மொழியில்தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் 'ஜீரோ’தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததும் உண்டு.

மற்ற பையன்களைப்போல விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வம் இல்லை. அவனுடைய சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள்கூட நான் அழுக்கைக் கண்டது இல்லை. பாட்டா செருப்புதான் அணிவான். கையில் கோல்டு கலர் வாட்ச் கட்டி இருப்பான். கழுத்தில் தடிமனான செயின். விரல்களில் மோதிரம் என்று மிருதங்க வித்வான் கெட்-அப்பில் அசத்துவான்.

தமிழய்யா அவனது எழுத்தை 'அசோகர் கல்வெட்டு’ என்று விமர்சித்து இருந்ததால், அவனை மற்ற மாணவர்களும் 'அசோகர் கல்வெட்டு’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டென்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டன்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்ல வேண்டிய நேரத்தில்கூட 'அசோகர் கல்வெட்டு’ என்றுதான் குசும்பாகச் சொல்வார். அமல்ராஜால் உடனே 'உள்ளேன் ஐயா’ சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.

ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றி வாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம், சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

நான் ஏழாம் வகுப்புக்குப் போன பின்பு, அசோகர் கல்வெட்டைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சினேகமாகச் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடு இருந்தால், பதிலுக்குச் சிரிப்பான். இல்லை என்றால், உர்ர் என்று போய்விடுவான்.

பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டிய போது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகை ஒன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற, அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியைவிட்டு, அவன் நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.

ஃப்ளாஷ்பேக் ஓவர்

ன்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ்தான் இன்று காலை ஐயர் வீட்டில் தோட்ட வேலை செய்துகொண்டு இருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்து இருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்து இருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்ததுபோலத் தெரிந்தா லும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்குக் கம்பீரம் இல்லை.

''நான்தான்டா குமாரு... உங்கூட ஆறாவது படிச்சேனே?''

அவனால் நினைவுபடுத்திப் பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாகச் சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால், 45 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் இருக்கிறான்.

'ஞாபகமில்ல!''

'பரவாயில்லை அமல். நல்லா இருக்கியா?'

'ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்ட வேலையும் செய்வேன்.'

முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாகப் புரியும்படி பேசுகிறான்.
வேறு எதுவும் பேசாமல், ''வர்றேன்டா!'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன்.

அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டி யதே இல்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால், அந்தக் கதை யின் அவுட்லைன் கிடைத்துவிடும்.

 அமல்ராஜ் மாதிரி பசங்களைப் பார்க் கும்போதும், அதே கனம்!இடுப்பிலும் கையிலும் குழந்தையோடு... கூடப் படித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, மருத்துவமனையிலோ காண நேர்ந்தால்... எனக்கு லேசாக மனசு கனக்கும்.

(நன்றி : ஆனந்த விகடன் 20.07.2011 இதழ்)

20 ஜூலை, 2011

அதென்ன 4டி?

புகைப்படத்தில் இருக்கும் உருவங்கள் நகரும் என்பதை நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் சாத்தியமில்லாத விஷயமாக கருதிக் கொண்டிருந்தார்கள். அசையும் படங்களுக்கான ஃபிலிம் புரொஜெக்டரை கண்டுபிடித்த லூமியர் சகோதரர்கள் சிறு சிறு படங்களை உருவாக்கி மக்களுக்கு திரையிட்டுக் காட்டினார்கள். அப்போது இந்த சமாச்சாரத்துக்கு சினிமா என்று பெயர் வைக்கப்படவில்லை. Actualities (உண்மை நிகழ்வுகள்) என்று பெயர்.

The arrival of a train at Station என்கிற 46 நொடிகள் நீளமுள்ள திரைப்படத்தை (?), 1895ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ரிலீஸாக லூமியர் சகோக்கள் திரையிட்டபோது, பெரும் அமளி துமளி ஏற்பட்டது. திடீரென்று திரையில் தோன்றிய ரயில் பார்வையாளர்கள் மத்தியில் புகுந்து பெரும் விபத்து ஏற்பட்டு விடுமோவென்று அஞ்சி, ரசிகர்கள் சிதறி ஓடினார்கள்.இத்தனைக்கும் இவையெல்லாம் ஒலியற்ற மவுனப்படங்கள்.

இதுபோல மொத்தம் ஐந்து துண்டுப் படங்களை லூமியர்கள் உருவாக்கி திரும்பத் திரும்ப அவற்றைத் திரையிட்டு உலக ரசிகமகாஜனங்களை குஷிப்படுத்தினார்கள் என்று வரலாறு செப்புகிறது. சினிமாவை வெறும் செப்படி வித்தையாகதான் லூமியர்கள் பார்த்திருக்கிறார்கள். லூயிஸ் லூமியர் ஒருமுறை சொன்னார். “சினிமா என்பது ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மட்டுமே. இதற்கு பெரிய எதிர்காலம் எதுவும் கிடையாது. இதை வைத்து காசெல்லாம் சம்பாதிக்க முடியாது”. லூமியரின் அறியாமையை விட்டு விடுவோம். அவர் பாவி. தெரியாமல் சொல்லிவிட்டார். பரலோகத்தில் இருக்கும் பிதா அவரை இரட்சிக்கட்டும்.

கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தாலும் லூமியரின் படங்கள் அனைத்துமே 2டி டெக்னாலஜிதான். அதாவது சினிமா பிறந்தபோதே 2டியாகதான் பிறந்தது. 2டி என்றால் டபுள் டைமென்ஷன். அதாவது திரையில் காட்சிகளின் நீள, அகலத்தை நீங்கள் உணர்ந்துக் கொள்ள முடியும். 1டியில் படமெடுக்க முடியுமாவென்று யாராவது கேமிராமேன்கள்தான் சொல்ல வேண்டும் (1டி என்று ஒன்று இருக்கிறதா என்ன?). நீளத்தை X என்று எடுத்துக் கொண்டால், அகலத்தை Y என்று புரிந்துகொள்ளுங்கள். XY = 2D என்று நீங்கள் இப்போது அறிந்து கொண்டால் போதுமானது.

அதற்குப் பிறகு ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று சினிமா வளரத் தொடங்கியது. பேசத் தொடங்கியது. தனக்கு வண்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியது. திரையை அகலப்படுத்தி ஸ்கோப் ஆக்கிக் கொண்டது. அழவைத்தது. சிரிக்க வைத்தது. கிளுகிளுப்பூட்டியது. பாடியது. ஆடியது. அரசியல் பேசியது. புரட்சியை வெடிக்க வைத்தது. உண்மை சொன்னது. பொய் பேசியது. இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்தது.

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறைய பேர் வெட்டியாக இருந்தார்கள். உலகத்தையே மாற்றிக் காட்ட வேண்டும் என்று எல்லாத் துறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை ‘உல்டா’வாகவோ, அட்வான்ஸாகவோ செய்துக்கொண்டே இருந்தார்கள். பொழுதுபோகாத யாரோ ஒருவர் சினிமா ஏன் XY என்று இருபரிமாணத்திலேயே தெரியவேண்டும், மூன்றாவது பரிமாணத்தைக் கொண்டிருந்தாலும் இன்னும் reality கிடைக்குமேவென்று ஆசைப்பட்டார்.

ஆசை, தோசை, அப்பளம், வடை. சாதாரண காரியமா இது? அவர் ஆசைப்பட்ட மூன்றாவது பரிமாணம் Z. அதாவது perspective dimension. நீள அகலத்துக்கு இடையேயான depthஐ பார்வையாளனுக்கு காட்டுவது. நம்முடைய கண்கள் இயற்கையிலேயே 3டி என்பதால், நமக்கு ரோட்டில் நடந்து வரும் சிகப்புச்சேலை ஆண்டிக்கும், பஸ் ஸ்டேண்டில் பச்சை சுடிதார் போட்ட ஃபிகருக்கும் இடையிலான தூரம் பெர்ஸ்பெக்டிவ்வாக தெரிகிறது. ஒரு வெள்ளைத் திரையில் புரொஜெக்டர் மூலம் திரையிடப்படும் படத்தை 3டியாக காட்டுவதென்றால் நடக்கின்ற காரியமா? நடத்திக் காட்டினார்கள்.

என்ன ஒரு தொல்லை? முப்பரிமாணக் காட்சிகளை உணர ரசிகனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி தேவைப்பட்டது. படப்பிடிப்பின் போது கூடுதல் கேமிரா வைத்து அதே காட்சிகளை perspective depthல் படம் பிடிக்க வேண்டியிருந்தது. இது கொஞ்சம் காஸ்ட்லியான சமாச்சாரம். சீன் சரியில்லை ‘கட்’ என்று சொல்லிவிட்டால், ஃபிலிம் இருமடங்கு வேஸ்ட் ஆகும். திரையரங்கில் திரையிடும்போது பார்வையாளர்களுக்கு கண்ணாடி கொடுக்க வேண்டும். காட்சி முடியும்போது கண்ணாடியை பத்திரமாக திரும்பி வாங்கியாகவேண்டும். இரண்டு புரொஜெக்டர் ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். டைமிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் படம் ஏடாகூடமாக தெரியும். இதுமாதிரி சின்ன சின்ன தொல்லைகளை தாண்டிப் பார்த்தால், 3டி ஓக்கேதான். XYZ பரிமாணத்தில் நம்மால் இன்று அவதாரை அசால்ட்டாக ரசிக்க முடிகிறதென்றால் பல்லாயிரத்து சொச்சம் பேர் பகல், இரவு பார்க்காமல் உழைத்திருக்கிறார்கள்.

1952ல் வெளியான ப்வானா டெவில் என்கிற திரைப்படம்தான் 3டி டெக்னாலஜியில் வெளிவந்த முதல் முழுநீளத் திரைப்படம் என்கிறார்கள். திரையில் பாயும் சிங்கம், எங்கே நம்மையும் கடித்து, கிடித்து வைத்துவிடுமோவென்று முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் பலரும் தப்பியோட வசதியாக கதவுக்கு அருகிலிருந்த சீட்டில் உட்கார்ந்துக் கொள்வார்கள்.

ஆனாலும் 3டியை திரையிடுவதற்கு ஏகத்துக்கும் மெனக்கெட வேண்டியிருந்தது. இதற்கு செலவாகும் கூடுதல் தொகையை ரசிகர்கள் தலையில்தான் கட்ட வேண்டியிருந்தது. மொக்கைப் படங்கள் சிலவும் 3டியில் வந்து தொலைத்ததால், அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். இவ்வாறாக 3டியின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

80களில் ஐமேக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஏதாவது வித்தியாசமாக செய்து மக்களை கவரவேண்டுமே என்கிற ஆர்வத்தில் மீண்டும் 3டியை தூசுதட்டி எடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச்சாத்தான் மலையாளத்தில் எடுக்கப்பட்டு, இந்தியாவின் பலமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. தமிழிலும் மொக்கையாக 3டி படங்கள் எடுக்கப்பட்டன. தமிழின் முதல் 3டி படம் ஒரு விஜயகாந்த் படம் (படத்தின் டைட்டில் அன்னைபூமி என்று நினைவு. அப்பா ஜெயலட்சுமி தியேட்டருக்கு அழைத்துப்போய் காண்பித்தார்). 3டியில் விஜயகாந்த் காலை நம் முகத்துக்கு மேலே உயர்த்தி உதைக்க, படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனின் மூக்கிலும் ரத்தம் வந்த எஃபெக்ட். இந்த பீதியை எல்லாம் தாங்க முடியாததால் இந்தியாவில் 3டி அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை.

மீண்டும் 2003ல் கோஸ்ட்ஸ் ஆஃப் தி அபிஸ் மூலமாக 3டி ஐமேக்ஸில் ஜேம்ஸ் கேமரூன் கலக்கத் தொடங்க, அன்று பீடித்த 3டி ஃபீவர் இன்றுவரை உலகுக்கு ஓயவில்லை. இப்போதெல்லாம் ஹாலிவுட்டில் இயக்குனர்கள் கதை சொல்லும்போதே, “ஹீரோ வீசுற கத்தி, அப்படியே சொய்ங்குன்னு பயங்கர சவுண்டோட போயி ஆடியன்ஸு நெஞ்சுலே குத்துது சார்” என்றுதான் ஆரம்பிக்கிறார்களாம்.

இந்தப் போக்கினை ஜேம்ஸ் கேமரூனே கண்டிக்கிறார். “கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் டாய் ஸ்டோரி வந்து பெரும் வெற்றி கண்டவுடன், தொடர்ச்சியாக பத்து மொக்கைப் படங்கள் மோசமான கிராஃபிக்ஸோடு வெளியாகி மக்களை நோகடித்தது. இப்போது 3டி கதையும் அதேதான். தேவைப்படுகிறதோ இல்லையோ. ஆளாளுக்கு 3டியில் படமெடுத்து, 3டி மீது மக்களுக்கு இருக்கும் பிரமிப்பினை ஒழித்துத் தொலைக்கிறார்கள்” என்று காரமாக சொல்லியிருக்கிறார்.

இந்த கந்தாயத்தை எல்லாம் விட்டுவிடுவோம். அடுத்து 4டி டெக்னாலஜி வருகிறதாம். உலகின் முதல் 4டி டெக்னாலஜி திரைப்படமான ஸ்பை கிட்ஸ்-4 ஆகஸ்ட் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறதாம். XYZ ஓக்கே. அதற்கப்புறம் ஆங்கிலத்தில் வார்த்தையே இல்லையே? நீள, அகலம், perspective ஆகிய மூன்றினையும் தாண்டி இன்னொரு பரிமாணமும் இருக்கிறதா என்று நிறையப்பேர் குழம்பிப் போய் திரிகிறார்கள். நாலாவது பரிமாணம் கண்ணுக்கு அல்ல, மூக்குக்கு. ஆமாம், படம் பார்க்கும்போது காட்சிகளுக்கு ஏற்ப வாசனைகள் தோன்றுமாம். அதாவது நாயகன் நாயகியின் கழுத்தில் மூக்கை வைத்து மோப்பம் பிடித்து காதல் செய்தால், நாயகி உபயோகித்திருக்கும் குட்டிகுரா பவுடரின் வாசனை உங்கள் மூக்கைத் துளைக்கும். எப்பூடி? இந்த தொழில்நுட்பத்தை அரோமா ஸ்கோப் என்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்?

படம் பார்க்க உள்ளே செல்லும்போது 3டி கண்ணாடி தருகிறார்கள் இல்லையா? கூடவே ஒரு அட்டையையும் தந்து விடுவார்கள். அந்த அட்டையில் ஒன்று முதல் எட்டு எண்கள் வரை பொறித்திருக்கும். குறிப்பிட்ட காட்சியில் உங்கள் மூக்கை குறிவைத்து, இயக்குனர் ஒரு காட்சியை வைத்திருந்தால், திரையில் ஒரு எண் தோன்றும். உங்கள் அட்டையில் அதே எண்ணை நீங்கள் தேய்த்துவிட்டால், காட்சிக்கேற்ற வாசனை பரவும். உங்களோடு படம் பார்க்கும் அத்தனை பேரும் அட்டையை அதே நேரத்தில் தேய், தேயென்று தேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்பதால், அரங்கே வாசனையில் அல்லோல கல்லோலப்படும்.

குமுதம் இதழ் ஒரு தீபாவளி ஸ்பெஷலில், இதே டெக்னிக்கை பிரிண்டிங்கில் கொண்டு வந்தது. ஒரு ரோஜாப்பூ படம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதை விரலில் தேய்த்து முகந்துப் பார்த்தால், ரோஜா வாசனை வரும். அடுத்த வாரம் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். ரியல் ரோஜாவுக்கு பதிலாக, நடிகை ரோஜா படத்தை தேய்த்து முகர்ந்துப் பார்க்குமாறு செய்திருக்கலாமேவென்று.

தமிழகத்தில் எத்தனை தியேட்டர்களில் இந்த 4டி இருக்குமென்று சரியாகத் தெரியவில்லை. நம் மக்கள் எண்ணை மாற்றித் தேய்த்து குளறுபடி பண்ணாமல் இருப்பார்கள் என்பதற்கும் நிச்சயம் ஏதுமில்லை. இதற்காக தியேட்டர்காரர்கள் எவ்வளவு துட்டு எக்ஸ்ட்ரா வாங்கப் போகிறார்கள் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

கட்டுரையை முடிக்கும் முன்னர் இன்னொரு முக்கியமான தகவல். இந்த 4டி வாசனை டெக்னாலஜியை ஏதோ புதியதாக இன்றுதான் கண்டுபிடித்ததாக ஹாலிவுட்காரர்கள் ஆணவத்தில் ஆடுகிறார்கள். என்னவோ ராபர்ட் ரோட்ரிக்யூஸால் மட்டும்தான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியும் என்றெல்லாம் அலட்டிக் கொள்கிறார்கள்.

ஹாலிவுட் அல்பங்களே! இதே டெக்னாலஜியை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்கள் ஊர் புதுமை இயக்குனர், சகலகலா வல்லவர், பன்முக படைப்பாளி பாபுகணேஷ் முயற்சித்து, கின்னஸ் லெவலுக்கு போய்விட்டார் என்பதை இக்கட்டுரை வாயிலாக பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். தி.நகரின் பாடாவதி தியேட்டரான கிருஷ்ணவேணியிலே கூட இந்த அற்புதத்தை பாபுகணேஷ் நிகழ்த்திக் காட்டியதை வரலாறு மறந்துவிடாது. அவர் இயக்கிய சூப்பர் டூப்பர் மொக்கைப் படமான ‘நானே வருவேன்’ படத்தில் பேய் வரும் பாடல் காட்சியில் மல்லிகைப்பூ மணம் கும்மென்று தியேட்டரில் வீசும். ஹாலிவுட்காரர்களுக்கு 4டி தான் தெரியும். பாபுகணேஷுக்கு 5டியே தெரியும். பேய் வரும் காட்சிகளில் மல்லிகைப்பூ வாசனை மட்டுமில்லை. தியேட்டருக்குள்ளே வெண்புகையும் பரவும் வகையில் அப்படத்தின் தொழில்நுட்பம், சினிமாவை நாலு கால் பாய்ச்சலில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது. ஹீரோயின் வகிதாவும், பெரும் ரிஸ்க் எடுத்து, முழு நிர்வாணமாகவும் நடித்திருந்தார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த 4டி விஷயத்தில் ஹாலிவுட்டுக்கு முன்னோடி நம்ம கோலிவுட்டுதான் என்பதை உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ளலாம்.

18 ஜூலை, 2011

தம்பி வெட்டோத்தி சுந்தரம் - ட்ரைலர்

இயக்குனர் வி.சி.வடிவுடையானின் முந்தையப் படமான ‘சாமிடா’ பார்த்து, அதன் மேக்கிங் பர்ஃபெக்‌ஷனில் அசந்திருக்கிறேன். அது மொக்கைப்படம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனாலும் அப்படத்தின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் சரக்கிருக்கும் ஆட்கள் என்பதை உணர முடிந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரது அடுத்த படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ திரைக்கு தயாராகி இருக்கிறது. படத்துக்கு டைட்டிலை ‘நறுக்’கென்று ஏன் இவர் பிடிக்க மாட்டேன் என்கிறார் என்று வருத்தமாக இருக்கிறது. வடிவுடையான் அதிரடி மலையாள இயக்குனர் ஷாஜியிடம் (வாஞ்சிநாதன் ஓபனிங் சீன் நினைவிருக்கிறதா) உதவியாளராக பணியாற்றியவராம். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தான் ஜெயிக்க தன் ஊர் கதையையே படமாக்கி ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார்.

கன்னியாகுமரி – கேரள எல்லையில் நடைபெறும் குற்றச் செயல்கள் கதையின் பின்னணி என்று போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் மாவட்டமான குமரியில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது ஒரு நகைமுரண்.

வசனகர்த்தா நமக்கு வேண்டியவர் என்பதால், படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டுக்கு 3டி லேமினேஷன் செய்யப்பட்ட இன்விடேஷன் வந்தது. “உள்ளே விடுவாங்கள்லே?” என்று ஒன்றுக்கு, இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்டே. ஏனெனில் வசனகர்த்தாவின் முந்தையப் பட ரிலீஸின் போது, ஒரு பத்திரிகையாளனுக்கு கிடைக்கவே கூடாத அவமானம் ஒன்றினை, ஒரு மொக்கை பி.ஆர்.ஓ.விடம் அடைந்திருந்தோம். படத்தின் இயக்குனரும் “எல்லோரும் வாங்க” என்று அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆல்பட் திரையரங்கில் ஆடியோ வெளியீடு. அனேகமாக இதுதான் அங்கே நடைபெறும் முதல் ஆடியோ வெளியீடாக இருக்குமென்று நினைக்கிறேன். இந்தக் கூட்டத்தை இயக்குனரோ, தயாரிப்பாளரோ, யூனிட்டோ சத்தியமாக எதிர்ப்பார்த்திருக்காது. ஹவுஸ்ஃபுல்.

இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்கவியலாத இயக்குனர்கள் அத்தனை பேரும் ஆஜர். நடிகர்களும், சினிமா வி.ஐ.பி.களும் நெரிசலில் சிக்கிக் கொள்ள, உதவி இயக்குனர்கள் அவர்களை கஷ்டப்பட்டு மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியும் திரண்ட இதுபோன்ற நிகழ்ச்சி சமீபகாலங்களில் நடைபெற்றதாக நினைவில்லை.

நிகழ்வுக்கு முன்னதாக ட்ரைலரும், மூன்று பாடல்களும் திரையிடப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டது.

ட்ரைலர் கட்டிங் அட்டகாசம். ‘அந்த பத்து ரூவா கண்ணாடியை தூக்கிப் போட்டுடு என்னை நல்லா முழுசாப் பாருய்யா’ என்று உடலை வளைத்து, குலுக்கி கொஞ்சும் அஞ்சலியை, திரையில் கண்டாலே ஓடிப்போய் இழுத்து அணைத்து முத்தமிடத் தோன்றுகிறது. ம்ஹூம். கரண் அசமஞ்சமாக ரியாக்‌ஷன் கொடுக்கிறார். அவரது கேரக்டர் அப்படி போலிருக்கிறது.

“கேரளாவிலிருந்து ஸ்ப்ரிட்டு கடத்தல், அரிசி கடத்தல், இது கடத்தல் அது கடத்தல். கடத்தல் தான்யா இங்கே தொழிலே” – சரவணனின் வசனம் படத்தின் அவுட்லைனை தெளிவாக்குகிறது. “ஸ்ப்ரிட்டு உறையணும்னா மைனஸ் 120 டிகிரி குளிர் வேணும். பத்தாங்கிளாஸ் புக்குலே படிச்சிருப்பீயே? படிக்கலையா? – கரண். ஓக்கே. கதை இதுதான். கரண் ஒரு வாத்தியார். ஏதோ ஒரு காரணத்தால் (வில்லனால் வஞ்சிக்கப்பட்டு?) தாதாவாகிறார். அவர் தாதாவாக இருப்பது அவரை காதலிக்கும் அஞ்சலிக்கு தெரியாது. ஒரு பக்கம் போலிஸ், ஒரு பக்கம் வில்லன், இன்னொரு பக்கம் காதலி. கரண் வென்றாரா தோற்றாரா என்பதை வண்ணத்திரையில் காண்க.

ஒரு டூயட், ஒரு குத்துப் பாட்டு, ஒரு ‘பஞ்ச்’ பாட்டு என்று கலந்துகட்டி மூன்று பாடல்களை திரையிட்டார்கள். அந்த ‘பஞ்ச்’ பாட்டின் எடிட்டிங் அபாரம். ஒரு படத்துக்குதான் 75 சீன்கள். இவர்கள் இந்தப் பாட்டுக்கே 75 சீன் படம் பிடித்திருப்பார்கள் போல. படம் வெளிவருவதற்கு முன்பாக இப்பாடல் மியூசிக் சேனல்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் பட்டால், நல்ல ஓபனிங்கை படம் அள்ளுவதற்கு வாய்ப்பிருக்கிறது. படத்தை காணவேண்டும் என்கிற க்யூரியாசிட்டியை ஏற்படுத்துகிற பாடல் இது. டூயட் பாடலில் சில ஷாட்களில் அஞ்சலி பேரழகி. சில ஷாட்களில் ரொம்ப சுமார் ஃபிகர். ஆனால் கரண் ஆச்சரியப்படுத்துகிறார். அவ்வளவு குண்டான உடம்பை எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆக்கினார் என்று தெரியவில்லை. இளமைக்கால பிரபுவை அச்சு அசலாக திரும்பப் பார்ப்பது போலவே இருக்கிறது.

டிரைலர், பாடல்களை பார்த்தவரை கேமிரா ஒரு திருஷ்டிப் படிகாரம் என்று தோன்றுகிறது. டூயட் பாடலில் வரும் சூப்பர் ஸ்லோ காட்சிகள் செம மொக்கையாக எடுக்கப்பட்டிருக்கிறது. நிறைய அவுட் ஆஃப் போகஸும் கூட.

நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கும் புது தயாரிப்பாளர். வெற்றியடைந்தே தீரவேண்டும் என்று கடுமையாக உழைத்த இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிக நடிகையர். இப்படம் வெற்றியடையும் பட்சத்தில் தயாரிப்பாளர் அடுத்த படத்தை தயாரிக்கலாம். இயக்குனருக்கும், குழுவினருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நடிகரான கரண் இன்னொரு இன்னிங்ஸ் தெளிவாக விளையாடலாம். அஞ்சலிக்கு அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட் ஆகலாம். நாலு பேரு வாழ்ந்தால் எதுவுமே தப்பில்லை. எனவே இப்படம் வெள்ளிவிழாப் படமாக அமைய வாழ்த்துகிறேன்.

11 ஜூலை, 2011

இராணுவப் பதிவு – விளக்கம், சில சந்தேகங்கள்!

கடந்த வாரம் எழுதியிருந்த இராணுவப் பதிவுக்கு, இதுவரை நான் எழுதிய எப்பதிவுக்கும் கிடைக்காத கடுமையான எதிர்வினைகள் கிடைத்திருக்கிறது. ஏகப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள். இராணுவத்தையே கேள்விக்கு உள்ளாக்குவது ஒரு பத்திரிகையாளனின் தகுதிக்கு அழகல்ல என்கிற வகையிலான எதிர்வினைகள் நிறைய. நிச்சயமாக சொல்ல முடியும். இப்படிப்பட்ட ஒரு கட்டுரையை எந்தப் பத்திரிகையிலும் எழுதவே முடியாது. எனவேதான் இணையத்தில் எழுதினேன்.

வயிற்றுப்பாட்டுக்காக நான் செய்துவரும் பணியையும், நான் எழுதிவரும் வலைப்பூவையும் தொடர்புபடுத்தி பார்ப்பது சரியல்ல. என் வலைப்பூ முழுக்க முழுக்க என்னுடைய சுயேச்சையான சிந்தனைகளை வெளிப்படுத்துபவை. என்னுடைய தனிப்பட்ட கொள்கை, விருப்பு-வெறுப்பு ஆகியவை, தொழில் நிமித்தமான பணியில் நிச்சயம் வெளிப்படாது. அதுபோலவே நான் பணிபுரியும் நிறுவனங்களுக்கு வேறு கொள்கைகள், வழிமுறைகள் இருக்கலாம். அது என்னுடைய வலைப்பூவிலும் எதிரொலிக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

இதே பதிவை பத்திரிகைக்கு கட்டுரையாக எழுத வேண்டிய நிலை வந்திருந்தால், புள்ளி விவரங்களையும் துல்லியமாக தந்திருப்பேன். இன்னும் கூடுதல் ‘லாஜிக்’ சேர்த்திருப்பேன். பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவதில் இருக்கும் பெரிய சிக்கல், வாசகனை 100% கன்வின்ஸ் செய்தாக வேண்டும். வலைப்பூவில் அந்தப் பிரச்சினை இல்லை. இங்கே வாசகன் என்று யாருமில்லை. பதிவில் இருப்பது என்னுடைய சிந்தனை. வாசிப்பவர்கள் அவர்களுடைய சிந்தனைகளை பின்னூட்டங்களில் பதிவு செய்யலாம். இந்த உடனடி வசதி அச்சு, காட்சி ஊடகங்களில் இல்லை என்பதுதான் இணையத்தின் சிறப்பு.

அப்பதிவு எழுதப்படும் போது நான் கண்மூடித்தனமான கோபத்தில் இருந்தேன். எனவேதான் பதிவின் பின்குறிப்பாக அபத்தமான கருத்துமையத்தையும், மொழிநடையையும் வேண்டுமென்றே இப்பதிவுக்கு தேர்ந்தெடுத்தேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நானும், தோழர் அதிஷாவும் வாரம் ஒருமுறையாவது தீவுத்திடலுக்கு எதிரே இருக்கும் அந்த சேரிப்பகுதியில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறுவதுண்டு. அப்பகுதி மக்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர்களது தொடர்பு மொழி கொஞ்சம் கரடுமுரடானதாக இருந்தாலும் பொதுவில் பார்க்கப் போனால், ஒவ்வொருவரும் நெஞ்சில் டன் கணக்காக அன்பை சுமந்து வாழும் உயிர்கள்.

பதினைந்து நாட்களுக்கு முன்பாக கூட ஒரு காட்சியை காண நேர்ந்தது. வந்தவாசிக்கு அந்தப் பக்கமாக இருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி யாரோ ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பையன் வந்திருக்கிறான். எங்கெங்கோயோ அலைந்து, திரிந்து கடைசியாக இந்த சேரிப்பகுதியை தஞ்சமடைந்திருக்கிறான். பிழைப்புக்காக கிடைத்த வேலைகளை செய்து வாழ்ந்திருக்கிறான். திடீரென்று ஒருநாள் ஏதோ ஒரு விபத்தில் மரணமடைந்து விட்டான். அவனது உடல் ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்பகுதியில் இருந்த எல்லா மக்களும் குழந்தை, குட்டியை அழைத்துக் கொண்டு சாலைக்கு நூற்றுக் கணக்கில் திரண்டு விட்டார்கள், இறந்தவனின் உடலை காண. செத்தவன் யாரோ, எவனோ என்று விட்டேத்தியாக சுச்சூ கொட்டிவிட்டு செல்லும் சென்னைக் கலாச்சாரச் சூழலில், தமிழ் கிராமத்துப் பண்பாடுகளோடு இன்னமும் வாழும் மக்கள் அவர்கள்.

இப்படிப்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் கொல்லப்பட்டான் என்று கேள்விப்பட்டதுமே அழுகையும், கோபமும் கண்ணை மறைத்த நிலையிலேயே அப்பதிவை எழுதினேன். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூட, மிதமிஞ்சிய நிதானத்தோடே, ஓவர் வார்த்தைகளை விடாமல் எழுதியிருப்பதாக இப்போது வாசித்தாலும் புரிகிறது.

அடுத்து, இராணுவம் மீது இவ்வளவு காழ்ப்பு எனக்கு இருக்க, ஏதோ ‘பர்சனல்’ காரணம் இருக்கலாம் என்றும் சில நண்பர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆக்சுவலி, நான் ஒரு இராணுவ வீரரின் பரம்பரையில் வந்தவன். என்னுடைய தாத்தா முதலாம் உலகப்போரில் இந்திய ராணுவத்துக்காக சண்டை போட்ட ஜவான். ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்கு அக்காலக்கட்டத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசால் அனுப்பப்பட்டிருக்கிறார். பிற்பாடு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றபிறகு அவருடைய சேவையைப் பாராட்டி வந்தவாசியில் நிலபுலமும், கால்நடைகளும் கொடுத்து கவுரவித்தது அந்நாளைய அரசு. பின்னர் சென்னை காவல்துறையில் குதிரைப்படை வீரராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். சென்னை கொண்டித்தோப்பு போலிஸ் லேனில்தான் இருபதாண்டுகளுக்கும் மேலாக என் குடும்பம் வசித்திருக்கிறது. அவர் மட்டுமல்ல. எங்களுடைய நெருங்கிய உறவினர்கள் பலரும் இன்றும் இராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். என்னுடைய பெரியப்பாவுக்கு கூட இராணுவ வீரரின் வாரிசுதாரர் என்கிற முறையில்தான் மத்திய அரசுப் பணி கிடைத்து எங்கள் குடும்பமே சமூகத்தில் தலைநிமிர்ந்தது. அவரது ‘வாரிசு’ சான்றிதழை வைத்து பேரர்கள் வரை பலரும் பலன் பெற்றிருக்கிறோம். எனவே அவ்வகையில் பார்க்கப் போனால், நான் இராணுவத்துக்கு கடமைப்பட்டவன் தானே தவிர, காழ்ப்புணர்வு கொள்ள ‘பர்சனல்’ காரணம் ஏதுமில்லை.

அப்பதிவில் கோடிட்டுக் காட்டியிருக்கும் ‘முக்கியமான’ கருத்தை, ஒரு சிலரைத் தவிர்த்து வேறு யாரும் கவனித்ததாக தெரியவில்லை. போர், பேரிடர்க் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் எந்த செயல்பாடும் இல்லாமல் இருக்கும் ஒரு அமைப்புக்கு, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்திய அரசு ஒதுக்குவது குறித்த அபத்தமான அவலம்தான் அது. இந்திய இராணுவத்தில் மிகச்சிறந்த பொறியாளர்கள் இருக்கிறார்கள். மருத்துவர்கள் இருக்கிறார்கள். இன்னும் நிறைய ஏனைய தொழில்சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களது அறிவு வெறுமனே போருக்கும், பேரிடருக்கும் மட்டும்தான் பயன்பட வேண்டுமா? பொறியாளர்கள் மக்களுக்குப் பயன்படும் பாலங்கள் கட்டலாம், சாலைகள் போடலாம். ஏன் செல்போன் கூட தயாரிக்கலாம். மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவச்சேவை வழங்கலாம். இராணுவம் பாதுகாப்பு தவிர்த்து மற்றைய பணிகளிலும் ஈடுபடலாம், அரசுக்கு வருவாயும் ஈட்டலாம். பல முன்னேறிய நாடுகளில் இதற்கெல்லாம் முன்னுதாரணம் உண்டு. சுவிட்சர்லாந்தில் சாக்லெட் கூட தயாரித்து விற்கிறார்களாம்.

சரி, இதையெல்லாம் விட்டுவிடுவோம்.

இப்போது ‘குற்றவாளி’யை கண்டுபிடித்து விட்டார்களாம்.

சென்னை மாநகர காவல்துறை இவ்வழக்கினை விசாரணை செய்வது, இராணுவத்துக்கு கவுரவக்குறைவாக இருந்ததால், சி.பி.சி.ஐ.டி. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

தில்ஷன் கொல்லப்பட்ட இடத்தில் ‘தடயம்’ இராணுவ வீரர்களால் ஊற்றி, கழுவப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. ‘வினவு’ ஊடகம் வெளியிட்டிருக்கும் படத்தில் தடயத்தை, தமிழக போலிஸாரே கழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையில் அஜய்சிங் (சில ஊடகங்கள் அஜய் வர்மா என்றும் குறிப்பிடுகின்றன) என்கிற இராணுவ அதிகாரி மீது சந்தேகம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சம்பவ நாளன்றே, காரில் எங்கோ சென்றுவிட்டு இறங்கியவரிடம் போலிஸ் விசாரணை நடத்தியது. பதட்டத்தை மறைக்க ‘சிகரெட்’ பிடித்தவாறே பேசியவர், சம்பவம் நடந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் இருந்ததாக ‘அலிபி’யோடு சொல்லியிருக்கிறார். மாறாக அவரது செல்போன் சிக்னல்களை ஆராய்ந்தபோது, இரண்டு மூன்று மணி நேரமாக தீவுத்திடலையே அவர் சுற்றி வந்தது தெரியவந்தது.

அடுத்ததாக கொல்லப்பட்ட தில்ஷனோடு சென்றிருந்த மூன்று சிறுவர்கள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தி குற்றவாளியை அடையாளம் காணப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

நேற்று, திடீர் திருப்பம்.

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி ராம்ராஜ் கந்தசாமி கைது செய்யப்பட்டு, கொலை செய்ததாக வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். தில்ஷனோடு சென்ற சிறுவர்கள் மூன்று பேர் இல்லையாம். நான்காவதாக ஒரு சிறுவனும் இருந்தானாம். அவன் கொடுத்த தகவலின் படியே ராம்ராஜ் குற்றவாளி என்பது தெரிந்ததாம்.

நமக்கு சில நியாயமான ஐயங்கள் ஏற்படுகிறது.

1. அஜய்சிங் ஏன் பொய் சொன்னார்?

2. குற்றவாளியை அடையாளம் காண, மூன்று சிறுவர்களின் முன்பாக அணிவகுப்பு நடத்தப்படும் என்றார்கள். அது ஏன் நடத்தப்படவில்லை?

3. நான்காவது சிறுவன் கேரக்டர் உள்ளே நுழைக்கப்பட்டு, உடனடியாக குற்றவாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது ‘போங்கு’ ஐடியாவாக தோன்றுகிறது. எனக்கென்னவோ இந்த நான்காவது சிறுவனை அடையாளம் காணவே, தனி அணிவகுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

4. துப்பாக்கியை கூவத்தில் போட்டுவிட்டார் என்று முதலில் அஜய்சிங் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதே கதை ராம்ராஜூக்கும் சொல்லப்பட்டு, கூவத்தில் உடனடியாக (ஒசாமா பின்லேடன் கையில் வைத்திருந்ததைப் போன்ற) பெரிய துப்பாக்கி கைப்பற்றப்படுகிறது. கூவம் ஆற்றில் போட்ட இடத்திலேயே துப்பாக்கி அப்படியே இருந்திருக்கிறது. ஒருவாரமாகியும் துப்பாக்கி கொஞ்சம் கூட நகராமல் அப்படியே செருகிக் கொண்டிருந்ததாம். (சில ஆண்டுகளுக்கு முன் கதிர்வீச்சு கருவியை சிலர் கூவத்தில் போட்டுவிட்டு, ஒரு வாரகாலம் இரவு பகலாக எது எதோ கருவிகளையும், ஆயிரக்கணக்கான ஆட்களையும் வைத்து சல்லடை போட்டு தேடியது நினைவுக்கு வருகிறது).

5. கடந்த ஏப்ரலில் ஓய்வு பெற்றுவிட்ட ராம்ராஜ், மேலும் மூன்று மாத காலம் இராணுவக் குடியிருப்பில் தங்கியிருக்க அனுமதி கேட்டாராம். ஜூலை இறுதியில் மதுரைக்கு மூட்டை கட்ட இருந்தவர், பாதாங்கொட்டை பருப்பு மாதிரியான அற்ப காரணத்துக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பார் என்று சொல்லுவது சிறப்பான ‘காதுகுத்து’ மாதிரியிருக்கிறது.

6. காரில் வந்த ஒருவர் சுட்டார் என்று முன்பு மூன்று சிறுவர்கள் ஏன் பொய் வாக்குமூலம் கொடுத்தார்கள்? ராம்ராஜ் பால்கனியில் இருந்து சுட்டதாக சொல்கிறார்.

7. இரத்தம் இருந்த இடத்தை தானே கழுவி, தடயத்தை அழித்ததாக ராம்ராஜின் வாக்குமூலம். அப்படியெனில் போலிஸார் ரத்தத்தை கழுவுவதாக வினவுத்தளம் வெளியிட்டிருக்கும் படம் எங்கே எடுக்கப்பட்டது?

இப்படியாக இன்னும் நிறைய ஐயங்கள் ஏற்படுகிறது. இருப்பினும் விசாரணை அமைப்பு, விசாரணை நடத்தி ராம்ராஜ்தான் குற்றவாளி என்று சொல்லியிருக்கிறது. அவர் மீது இராணுவ கோர்ட்டும் விசாரணை நடத்துமென தெரிகிறது.

ராம்ராஜ் ஓய்வு பெற்றுவிட்டவர் என்பதால், இக்கொலைச் சம்பவக் கறை, இராணுவத்துக்கு இனி இல்லை. இராணுவத்தின் கை சுத்தம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அதுவுமின்றி தமிழ் சிறுவனை கொன்றவர் ஓய்வு பெற்ற தமிழ் இராணுவ வீரர் என்பதால், இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் இனி நமக்கு எந்த கேள்வியும் இல்லை.

7 ஜூலை, 2011

லதானந்த்

லதானந்த் என்கிற பெயர் வலைப்பூ எழுதுவதற்கு முன்பாகவே எனக்கு ஓரளவு பரிச்சயமான பெயர்தான். பல இதழ்களிலும் சிறுகதை, கட்டுரை, நையாண்டி என்று எழுதி வந்தவர். விகடனில் திருக்குறளை மாற்றி சென்னை பாஷையில் எழுதி, பிற்பாடு பெரும் எதிர்ப்பு கிளம்பி பாதியிலேயே நின்ற தொடரை எழுதியவர் இவர்தான்.

2008ல் அவர் வலைப்பூ தொடங்கி எழுதிக் கொண்டிருந்தபோது, எனது தளத்தில் அவரைக்குறித்து பின்வருமாறு எழுதியிருந்தேன்.

கடந்த சிலநாட்களாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ? லதானந்த் அங்கிளின் பக்கங்கங்களை தவறாது வாசித்து விடுகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னமும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னை அவரது பரமரசிகன் ஆக்கிவிட்டார், அங்கிள் எல்லா மேட்டரிலும் செம விளாசு விளாசுகிறார், சண்டை போடுகிறார், கொஞ்சுகிறார், கோபப்படுகிறார், நிறைய சாப்பிடுகிறார், ஜோக் அடிக்கிறார், அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். மிக சுலபமாக இளைஞர்களை கவர்ந்துவிடும் ஒரு ஆளுமை லதானந்த் அங்கிள். ம்... வலையுலகில் எல்லாப் பெருசுகளுமே இவரைப் போல இருந்துவிட்டிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வலைப்பதிவர்களில் எப்போதுமே நான் சந்திக்க விரும்பும் ஒரு பதிவர் போர்பறை அசுரன். இப்போது லதானந்த் அங்கிளையும் சந்தித்துப் பேச வேண்டுமென்ற கொலைவெறி வந்திருக்கிறது.

இதை வாசித்துவிட்டு, கைப்பேசியில் தொடர்பு கொண்டார். முதல் பேச்சிலேயே மிக நெருக்கமாக அவரை உணரமுடிந்தது. அவரோடு பேசியவர்களுக்கு தெரியும். உரையாடல் என்பது அவரைப் பொறுத்தவரை ஒன் வே டிராஃபிக். தொண்ணூறு சதவிகிதம் அவர்தான் பேசுவார். மீதி பத்து சதவிகிதம் கூட நாம் ‘ம்’ கொட்டியதாகதான் இருக்கும். அவரோடு ஒரே ஒருமுறை பேசியவர்கள் கூட சுலபமாக சொல்லிவிடலாம். லதானந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர்.

பொதுவாக இரவுகளில் நீண்டநேரம் பேசுவார். முன்னிரவில் தொடங்கி, பின்னிரவு வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். வீட்டில் இருப்பவர்கள் எரிச்சல் படுவார்கள். ஒரு பெரிய ஆபிஸரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சமாளிப்பேன். என்ன ஆபிஸர் என்று கேட்டால், சிட்டிக்கு கமிஷனர் மாதிரி, அவர் காட்டுக்கு கமிஷனர் என்று சொல்லி வைப்பேன்.

ஒருமுறை ஏதோ பணி தொடர்பாக சென்னைக்கு வந்திருந்தார். சந்திக்கலாமா என்று கேட்டு, தான் தங்கியிருந்த விடுதியின் பெயரை சொன்னார். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலையில் இருந்த விடுதியில் அவரை நானும், பாலா அண்ணாவும் சந்தித்தோம். பாலா அண்ணாவுக்கு ஒரு பழக்கம். வலையுலக நண்பர்கள் யாரிடம் பழகுவதாக இருந்தாலும், அவர்களது உண்மையான பெயரை கேட்டுத் தெரிந்துக் கொள்வார். பெரும்பாலும் அப்பெயரிட்டுதான் அழைப்பார். லதானந்த் அவரது உண்மைப்பெயரை சொல்ல மறுத்ததால் பாலாண்ணாவுக்கு அவர் மீது கோபம்.

அதன்பிறகு எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பார். ஒருமுறை அசோக்நகரில் ஏதோ ஒரு பாரில் ஜ்யோவ்ராம் உள்ளிட்ட நண்பர்களோடு பேசியதாக நினைவு. இன்னொரு முறை நானும், அதிஷாவும் அவரை ரயிலேற்றிவிட சென்ட்ரலுக்குப் போயிருந்தோம். அன்ரிசர்வ்ட் பெட்டியில் முட்டி, மோதி உட்காரும் சீட்டினை வென்று எடுத்தார். பெரும்பாலும் வண்டலூர் வனத்துறை மாளிகையில் தங்குவார் என்பதால், நகரம் தாண்டிப்போய் அவரை சந்திப்பது எங்களுக்கு கொஞ்சம் சிரமம். சந்திக்க முடியாத சந்தர்ப்பங்களில் உடனே கோபித்துக் கொள்வார். ஆனால் மறுநாளே இணைய அரட்டைப் பெட்டியில் வந்து வழக்கமான ‘குஜால்’ மூடில் உரையாடுவார்.

என்னையும், அதிஷாவையும் காட்டுலாவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தார். பணி நெருக்கடி காரணமாக இருவருமே ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் விடுப்பு எடுக்க முடியாததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சூழல். இதற்காகவும் ஒரு முறை கோபித்துக் கொண்டார். இன்னொரு முறை குடும்பத்தோடு ஊட்டிக்கு வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை மிக சிறியவளாக இருக்கிறாள், பெரிய பயணத்துக்கு அழைத்துவர அச்சமாக இருக்கிறது என்று மறுத்தேன். அதற்கும் கோபித்துக் கொண்டார்.

அடிக்கடி கோபித்துக் கொள்வது குழந்தை மனம். லதானந்த் குழந்தை மனதுக்காரர்.

செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது, வருகிறீர்களா என்று கேட்டார். ஆமாம், பணிநிமித்தம் வருகிறேன் என்றபோது, வீட்டுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். பத்திரிகையாளர்களின் பயணத்திட்டத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், அங்கே அப்படி, இப்படி நகரமுடியவில்லை. சென்னை வந்தபோது தொலைபேசி மன்னிப்பு கேட்டேன். அப்போதும் கோபித்துக் கொண்டார். பின்னர் விசாரித்துப் பார்த்ததில் கோவைக்கு வந்து செல்லும், எந்த நண்பருமே அவரை பார்க்காமல் திரும்பினால் இப்படித்தான் செல்லமாக கோபித்துக் கொள்வார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி கோபித்து, கோபித்து விளையாடுவதுதான் அவரது குணம். ஏதாவது குறும்பாக விளையாடிக் கொண்டே இருப்பார். ஐம்பதை கடந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவே தெரியாது.

சமீபத்தில் அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை நடந்ததாக கேள்விப்பட்டேன். வழக்கமான விருமாண்டி மீசையில்லாமல் சஞ்சய் திருமணத்துக்கு வந்திருந்தார். என்ன சார், சிங்கத்தைப் போய் இப்படி சிரைச்சி விட்டுட்டாங்களே என்று விளையாட்டாக கேட்டேன். உடலும் கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. ’மசுருதானே, வளர்த்துடலாம் லக்கி’ என்றார்.

சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்திருப்பதாகவும், எங்கேயாவது சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அப்போது தோழர் அதிஷாவுக்கு ‘காலில் ஆணி’ (இந்தச் சொல்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது)பிரச்சினை தொடர்பாக, அலைச்சலில் இருந்தோம். சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல லதானந்துக்கு கோபம்.

நேற்று இரவு திடீரென இறங்கியது அந்தச் செய்தி. சென்னை நண்பர்கள் கலந்துப் பேசி சனிக்கிழமை மாலை ஒரு அஞ்சலிக் கூட்டத்துக்கு கூட ஏற்பாடு செய்துவிட்டோம். நல்லவேளையாக இன்று காலை அந்த கூட்டம் ‘கேன்சல்’ என்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைத்திருக்கிறது. நேற்றிரவு முழுக்க இருந்த கடுமையான மன உளைச்சல் இன்று தீர்ந்ததில் நிம்மதி. லதானந்த் இம்மாதிரி விளையாடியது குறித்து எந்த கோபமுமில்லை. இப்படி விளையாடுமளவுக்கு அவருக்கு ‘தில்’ இருப்பது குறித்துதான் ஆச்சரியமும், வியப்பும். குழந்தையின் சுபாவம் விளையாடுவதுதான். லதானந்த் விளையாடியிருக்கிறார். இதில் கோபப்படவோ, கண்டிக்கவோ எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரை கொஞ்சத்தான் தோன்றுகிறது. கவியரசர் கண்ணதாசன் கூட இதுமாதிரி செத்து, செத்து விளையாடியதாக வனவாசத்தில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே?

நேற்று இரவு கிடைத்த அந்த ‘டுபாக்கூர்’ அதிர்ச்சிச் செய்தியை பாலாண்ணாவோடு பகிர்ந்துக் கொண்டபோது, அதிர்ந்துப் போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதியாக ‘குறுகுறுப்பு’ தாங்காமல் கேட்டார். “இப்பவாவது சொல்லுய்யா. அவரோட உண்மையான பேரு என்னா?”

எனக்கு இப்பவும் நிஜமாகவே அவரது பெயர் தெரியாது.

6 ஜூலை, 2011

YES, I AM LUCKY!

அதிகமான நண்பர்கள் இருப்பதின் அவஸ்தை நேற்றுதான் புரிந்தது.

மதியம் ஒரு மணிக்கு, பத்து பத்து பேராக க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தேன். நாலரை மணி வரைக்கும் இடைவிடாமல் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

எஸ்.எம்.எஸ். கிடைத்ததுமே செளபா அண்ணன் போன் செய்தார்.

“டேய் இங்கிலீஷ்லே என்னமோ அனுப்பியிருக்கே. எனக்கும் ஒண்ணும் புரியல. என்ன மேட்டருன்னு வாயாலேயே சொல்லுடா” – சீவலப்பேரி பாண்டிகள் இங்கிலீஷ் எஸ்.எம்.எஸ்.-சுக்கு பழகவில்லை என்பதும், தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி இன்னமும் கார்பன் மொபைலுக்கு வராத அவலமும் ஒருசேர சுட்டது.

“பொண்ணு பொறந்துருக்குன்னு எஸ்.எம்.எஸ். அனுப்புனேண்ணே”

“அடப்பாவி. நீ விடலைப் பையனாவே என் மனசுலே பதிஞ்சிட்டியேய்யா.. உனக்கு அதுக்குள்ளே கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணும் பொறந்துடிச்சா?”

“அண்ணே! இது ரெண்டாவது பொண்ணுண்ணே!”

YES, I AM LUCKY.

தமிழ்மொழிக்கு தங்கச்சி பிறந்துவிட்டாள்.

அகிலம் ஆளும் அம்மா, தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவியின் சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் ‘தமிழ் நிலா’ பிறந்திருக்கிறாள். எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ‘முதல்வர்’ சில பல பத்தாண்டுகளுக்கு பிறகு உருவெடுக்க, ஜோசியப்படி வாய்ப்பிருக்கிறது.

’பொண்ணு’ பிறந்ததால், என்னுடைய அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். அவருக்கு கொள்ளி வைக்கவாவது, நான் ஒரே புள்ளையாக பிறந்திருக்கிறேனாம். எனக்கு கொள்ளி வைக்க ஒரு புள்ளை இல்லையே என்பது அவரது அங்கலாய்ப்பு. நெருப்புக்கு பையனோ, பொண்ணோ கணக்கு கிடையாது. கட்டையில் ஊற்றப்படும் கிருஷ்ணாயிலின் (மண்ணெண்ணெய்) அளவுதான் நெருப்பின் வீரியத்துக்குக் காரணம் என்று அவருக்கு பகுத்தறிவுப் பாடமெடுத்து சமாளித்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தண்டபாணி சாரிடம் நடந்த ஒரு ஈழ விவாதத்தில் எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு ‘திலீபன்’ என்று பெயர் வைப்பதாக சபதம் செய்திருந்தேன். அந்த சபதம் நிறைவேறாது என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே வருத்தம். இனி தமிழ் திலீபனுக்கு வாய்ப்பில்லை. இந்திய அரசின் ‘நாமிருவர், நமக்கிருவர்’ கோஷத்தை, ஓர் இந்தியனாக மதிக்கிறேன்.

முதல் குழந்தை பிறந்தபோது பாரா சொன்னார். “இன்னும் இருவது வருஷத்துலே நீ ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சியாவணும். அப்போ தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சரூபாயா கூட இருக்கலாம்”.

ம்.. இன்னும் இருபது வருடத்தில் இரண்டு கோடி ரூபாயாவது சம்பாதித்தே ஆக வேண்டும்.

எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ், கூகிள் ப்ளஸ், இத்யாதி, இத்யாதியிலெல்லாம் வாழ்த்து சொல்லிய நட்புள்ளங்களுக்கு தனித்தனியாக நன்றி சொன்னால், முழுவதுமாக 48 மணி நேரம் (அதாவது அடுத்த இருபது வருடத்தில் முழுசாக ரெண்டுநாள்) வீணாகி விடும் என்பதால், இப்பதிவின் வாயிலாகவே எல்லோருக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

4 ஜூலை, 2011

GET OUT!

ஈக்காடுதாங்கலுக்குப் பின்னால் என்று சொன்னால் அந்த ஏரியாவை சரியாக தெரியாது. தனுஷ் வீட்டுக்கு அருகில் என்று சொன்னால் சென்னை வாசிகளுக்கு புரியும். டிஃபன்ஸ் காலனி என்று பெயர். இராணுவ மருத்துவமனை, இராணுவ குடியிருப்பு என்று மிச்சம் போக பல்லாயிரக் கணக்கான ஏக்கர் இடம் பாக்கியிருக்கும்.

பலநூறு ஏக்கர் காலியிடங்களை முள்கம்பி வைத்து ஃபென்ஸிங் அமைத்து பாதுகாத்திருப்பார்கள் இராணுவத்தினர். அந்த இடங்கள் எதற்கும் உபயோகமில்லாமல் தேமேவென்றிருக்கும். சென்னையில் கிரிக்கெட் ஆட மைதானம் கிடைக்காத இளைஞர்கள் மீதியிருக்கும் பகுதிகளில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

டிஃபன்ஸ் காலனியின் வடக்கு முனை அடையாறு ஆற்றங் கரையோரமாக முடியும். ஆற்றங்கரை நந்தம்பாக்கம் பேரூராட்சியை சார்ந்தது. அங்கிருக்கும் குடியிருப்பு பகுதி பர்மா காலனி. கீழ்நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதி. சினிமாக்களில் அடிக்கடி காட்டப்படும் ஆற்றங்கரை அய்யனார் கோயில் இந்த காலனியின் இறுதியிலும், நந்தம்பாக்கம் கிராமத்தின் தொடக்கத்திலும் அமைந்திருக்கிறது.

நகரில் இருந்து அய்யனார் கோயிலுக்கு செல்பவர்கள் டிஃபன்ஸ் காலனிக்கும், பர்மா காலனிக்கும் இடையே ஊடாகச் செல்லும் சிறுசாலையைதான் பயன்படுத்த வேண்டும். நந்தம்பாக்கம் கிராம மக்களும் கூட நகருக்குள் வர இச்சாலையையே உபயோகித்து வந்தார்கள். வாரயிறுதி கிரிக்கெட் வீரர்களுக்கும் மைதானத்துக்குச் செல்ல இப்பாதை மட்டுமே ஒரே கதி.
கடந்த மாதம் திடீரென இப்பாதை கான்க்ரீட் கழிவுகள் கொண்டு அடைக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் பட்ரோடு வழியாக ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு நகரத்துக்குள் நுழைய வேண்டிய நிலை. பர்மா காலனி வழியாக வருவதாக இருந்தாலும் கார் போன்ற வாகனங்கள் இலகுவாக செல்ல முடியாத குறுகிய பாதை.

பொங்கியெழுந்த மக்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் பாதையை அடைக்கக்கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்தார்கள். அனைத்துக் கட்சியினர் ஆதரவோடு மறியலும் செய்தார்கள். அப்பகுதியில் இருந்த இராணுவத்தார் அம்மக்களோடு மோதலில் ஈடுபட்டார்கள். மக்கள் பிரதிநிதியான நந்தம்பாக்கம் பேரூராட்சித் தலைவரிடம் கூட எவ்விதமான மரியாதையான பேச்சுவார்த்தைக்கு இராணுவம் தயாராக இல்லை. போலிஸ் தலையிட்டு மக்களை கலைத்து அனுப்பினார்கள். மாவட்ட ஆட்சியர் வரை இப்பாதை பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டும், இன்றுவரை பாதை மூடப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி புதியதாக முள்கம்பி கொண்டு அடைக்கப்பட்டும் இருக்கிறது.

இப்போது நகரிலிருந்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பட்ரோடு வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அல்லது அடையார் ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை பயன்படுத்த வேண்டியிருக்கிறது (அந்த பாலமும் கடந்த வாரம் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது).

நானும் படுக்க மாட்டேன், அடுத்தவனையும் படுக்க விட மாட்டேன் என்கிற இந்திய ராணுவத்தின் உயரிய பண்புக்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் பாதையிலும் கூட, விமான நிலையம் தாண்டிய அடுத்த இடதுபுறப்பாதை இதேபோல பள்ளம் தோண்டியும், கான்க்ரீட் கொட்டப்பட்டும் ராணுவத்தால் மூடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

நந்தம்பாக்கம் மட்டுமல்ல. மீனம்பாக்கம், பரங்கிமலை, தாம்பரம், தீவுத்திடல் என்று எங்கெல்லாம் ராணுவத்தினர் நிலை கொண்டிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மக்களுக்கு ரோதனைதான். ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண பொதுமக்களிடம் உரையாடும் மொழியே நாராசமானது. ஒருமுறை Officer Training Academy-க்கு ஒரு சில விளக்கங்களை நாடி சென்றிருந்தோம். வாயிலில் இருந்த வீரரிடம் அடையாள அட்டையை காட்டி, கட்டுரை தொடர்பான விளக்கங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி யாரையாவது சந்திக்க வேண்டும் என்று கோரினோம். பத்திரிகை என்று சொல்லியும் உள்ளேவிட மறுத்தது பிரச்சினையில்லை. “ஒழுங்காக ஓடிவிடுங்கள். TRESPASSING என்று போட்டுத் தள்ள எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா?” என்று அச்சுறுத்தியதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். மறுபடியும் அடையாள அட்டையை நீட்டி, நாங்கள் PRESS என்று சொன்னோம். “யாராயிருந்தாலும், இராணுவ இடத்துக்குள் நுழைந்தால் எங்களுக்கு சுடுவதற்கு உரிமையிருக்கிறது” என்று திரும்பவும் பயமுறுத்த, பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடிவந்தோம். நகரின் பரப்பளவில் குறைந்தது பத்து, பதினைந்து சதவிகிதமாவது இராணுவத்தினரின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த அம்சம். அவசரத்துக்கு எங்காவது ‘வெளிக்கி’ போகிறவனை கூட (தீவுத்திடலில் இது சகஜம்) இராணுவம் சுட்டுத் தள்ளலாம். TRESPASSING என்று காரணமும் காட்டலாம்.

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே கூட இராணுவத்தின் சொத்து என்பதே, சில வருடங்களுக்கு முன்பாக ‘அம்மா’ கொடுத்த அறிக்கையின் மூலமாகதான் மக்களுக்கு தெரிந்தது. ஜோதி தியேட்டர் எதிரே ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு பெரிய பச்சை மைதானம் ஒன்றினை நீங்கள் கண்டிருக்கலாம். இராணுவ அதிகாரிகள் முன்பெல்லாம் அங்கே குதிரை ஓட்டுவார்கள். போலோ விளையாடுவார்கள். இப்போது அவர்களுக்கு குதிரை ஓட்டத் தெரியாதோ என்னமோ, சில ஆண்டுகளாக போலோ விளையாடுவதில்லை. வெட்டியாகதான் அந்த (சென்னையின் மிகப்பெரிய) மைதானம் இருக்கிறது. பல லட்ச ரூபாய் பராமரிப்புக்கும் செலவளிக்கப் படுகிறது.

எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அமைந்திருப்பது கூட ஏதோவொரு இராணுவ அலுவலகத்தின் வாயிலில்தான். முன்பெல்லாம் ‘சைட்’ அடிக்கச் செல்லும் மாணவர்கள் அங்கிருந்த குட்டிச்சுவரில் உட்கார்ந்து ‘தம்’ அடித்துக் கொண்டிருப்பார்கள். யாரோ ஒரு ஜவான் வந்து இந்தியில் காச்மூச்சென்று எச்சரித்துவிட்டுப் போவார்.

சென்னையில் இவ்வளவு இராணுவத்தினர் என்னதான் செய்துக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவர்களுக்கு இவ்வளவு இடம் தேவை? தமிழக அரசாங்கமே தனது தலைமைச் செயலகத்தை கூட இவர்களது வாடகைக் கட்டிடத்தில்தான் நடத்த வேண்டியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கே இராணுவத்தின் பயன் என்ன? அதிகபட்சமாக டிசம்பர் 6க்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் துப்பாக்கியோடு நிற்பார்கள். தேர்தல்களின் போது சாலையில் அணிவகுப்பார்கள். கொடியேற்றத்தின் போது தென்படுவார்கள். எப்போதாவது விமானப் படையினர் மெரீனாவில் விமான சாகசம் காட்டுவார்கள். இவற்றைத் தவிர்த்து இவர்களால் மக்களுக்கு எந்த நேரடிப் பிரயோசனமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்புகளைவிட இவர்களது ஆக்கிரமிப்பு அக்கப்போர் தாங்கமுடியவில்லை.

இவர்களுக்கு போலிஸ்காரர்கள் லட்சம் மடங்கு பரவாயில்லை. வாங்குகிற சம்பளத்துக்கு (கிம்பளத்துக்கும் சேர்த்து) ஏதோ வேலை பார்க்கிறார்கள். புருஷன் பட்டுப்புடவை வாங்கித் தராவிட்டாலும் கூட, வரதட்சணை கேஸு கொடுக்க பொண்டாட்டி காவல்நிலையத்தைதான் நாட முடிகிறது. ஏதோ ஒருவகையில் (சிக்னலுக்கு சிக்னல் மாமூல் வாங்கினாலும் கூட) மக்களோடு தொடர்பிலேயே இருக்கிறார்கள் போலிஸ்காரர்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு வாய்க்கும் கட்டிடங்கள் ‘டொங்காகவே’ இருக்கிறது. தமிழக போலிஸுக்கு இராணுவம் மாதிரி சொத்து, கித்து, நிலம், நீச்சு என்று பார்க்கப்போனால் ஒன்றும் பெரிசாக தேறாது என்றுதான் தோன்றுகிறது. உதவி கமிஷனர் எல்லாம் பணி செய்ய வேண்டியிருக்கும் மடிப்பாக்கம் காவல் நிலையம் கூட, கீழ்க்கட்டளையில் வாடகை கட்டிடத்தில்தான் இயங்குகிறதாக தெரிகிறது. மடிப்பாக்கத்திலிருந்த போது ஒருமுறை இடத்துக்கு சொந்தக்காரர் பிரச்சினை செய்து இவர்களை துரத்தி அடித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

24 x 7 x 365 நாட்களும் மக்கள் பிரச்சினைகளோடு மல்லுக்கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கும் காவல்துறைக்கே இதுதான் கதி. ஆனால் என்றோ ஒருநாள் வரப்போகும் போருக்கு (உலகம் அழியும்வரை சென்னைக்கு போர் வராமலேயே கூட போகலாம்) துப்பாக்கியை எண்ணெய் போட்டு துடைத்துக் கொண்டிருக்கும் இராணுவத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அதிகாரம்?

எங்கள் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் இராணுவத்தினரை தனிப்பட்ட முறையில் அறிவேன். பதினைந்து, இருபது ஆண்டுகாலம் இராணுவத்தில் சேவை புரிந்தவர்கள். ஒரு போருக்கு கூட இவர்கள் போனதில்லை. அவ்வளவு ஏன்? ஒரு வாய்க்கா, வரப்பு தகராறினை கூட இவர்களது பணிக்காலத்தில் இவர்கள் சந்திக்க நேர்ந்ததில்லை. வெறும் பயிற்சி, பயிற்சி, பயிற்சிதான். வீரர்களே இப்படித்தான் என்றால், அதிகாரிகள் நிலையை சொல்லியாக வேண்டியதில்லை. இவர்களுடைய சம்பளம், பணிக்காலத்துக்குப் பிறகான சலுகைகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஐடி ஊழியர்களே பொறாமைப் படுவார்கள் (என்னைப் போன்றவர்கள் அங்கே சீப்பாக கிடைக்கும் ரம்முக்குதான் வாயிலும், வயிற்றிலுமாக அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது).

இப்படிப்பட்ட இராணுவத்துக்கு ஏன் சென்னையில் கால் வாசி இடத்தை தாரைவார்த்து தரவேண்டும்? போர் வரும்பட்சத்தில் வந்து எல்லா இடத்தையுமே கூட எடுத்துக் கொள்ளட்டுமே? எல்லா இடமும் இவர்களுடையது என்கிற அதிகார மமதையால்தானே பாதாங்கொட்டை எடுக்கவந்த பதிமூன்று வயது சிறுவனை படுகொலை செய்திருக்கிறார்கள்? பட்டவர்த்தனமாக படுகொலை என்று தெரிந்தும் கூட, தமிழக முதலமைச்சரே நடவடிக்கை எடுக்க இயலாமல் இராணுவத்துக்கு வேண்டுகோள்தான் விடுக்க வேண்டியிருக்கிறது. இங்கே கடவுளுக்கு அடுத்து அதிக அதிகாரம் படைத்தவர்கள் இராணுவத்தினரா?

நாளை டிஃபன்ஸ் காலனியில் கிரிக்கெட் ஆடச்செல்லும் இளைஞர்கள் கூட இவர்களால் வேட்டையாடப்படலாம். இராணுவம் இங்கே மக்களுக்கு உதவிகரமாக இருப்பதற்குப் பதிலாக உபத்திரவமாகவே இருக்கிறது. இவர்களால் நகர மக்களுக்கு என்ன பாதுகாப்பு?

தமிழக அரசின் நிர்வாகப் பணிகளுக்கு கூட போதிய அலுவலகங்கள் இல்லாத நிலையிலிருக்கும் போது இராணுவம் சும்மாவே எல்லா இடங்களையும் வளைத்துப் போட்டிருப்பது அநீதியாகப் படுகிறது. புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு, பயன்படுத்த வழியில்லாமல் இராணுவத்திடம் அடைபட்டிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். பதிலுக்கு வேண்டுமானால் எங்கேயாவது வண்டலூர் காடு தாண்டி இருக்கும் தரிசு இடங்களை அளித்துக் கொள்ளட்டும். இனியும் நகரத்துக்கு நடுவில் வசதியாக அமர்ந்துக் கொண்டு இவர்கள் அட்டூழியம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது.

வேண்டுமென்றே இக்கட்டுரையை எழுத ஒரு அபத்தமான கருத்து மையத்தையும் , மொழிநடையையும் கையாண்டிருக்கிறேன். சீரியஸாக பேசினால், தில்ஷனை போட்டது மாதிரி போட்டுவிடுவார்களோ என்கிற அச்சமும் ஒரு காரணம். ஆயினும் இங்கிருந்து இந்திய இராணுவம் வெளியேற நிஜமான நியாயமான காரணங்கள் ஏராளமாக இருக்கிறது. அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம். இக்கட்டுரையை வாசிக்கும் ஒரேயொரு சென்னைவாசியாவது, “ஆமாம். இவங்களுக்கு இங்கே என்ன வேலை?” என்று சீரியஸாக சிந்தித்தால் போதுமானது

பார்வை!


ஆட்டோவிலிருந்து இறங்கும்போது உச்சிவெயில் உண்மையாகவே மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. பிளந்துவிட்ட மண்டையை ஈரக்கர்ச்சீப்பால் மூடினேன். சிகப்பான சென்ட்ரல் அடுப்பில் காணக்கிடைக்கும் தீக்கங்குகள் மாதிரி கனகனவென்றிருந்தது. கொடுத்ததை வாங்கிச் செல்லும் ஆட்டோ டிரைவர் வாய்ப்பது முன்னோர் எக்காலத்திலேயோ செய்த புண்ணியம். பயணச்சுமையை முதுகில் தாங்கிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினேன். இரண்டு மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ். மணி ஒன்று நாற்பத்தி ஐந்து.

சரியான நடைமேடை கண்டறிந்து, என் பெட்டியை அடைவதற்குள் சட்டை வியர்வையால் தொப்பலாகிவிட்டிருந்தது. சன்னலோரத்தில் அமர்ந்தேன். லேசான காற்று வியர்வையால் நனைந்த உடல்மீது பட்டது இதமாக இருந்தது. திறந்திருந்த சன்னல் வழியாக பார்வையை ஓட்டினேன். இருப்புப் பாதையில் தேங்கியிருந்த அழுக்கு நீரை இரு காக்கைகள் அருந்திக் கொண்டிருந்தன. அலகால் நீரை உறிஞ்சி வானத்தைப் பார்த்து காக்கைகள் நீரருந்தும் பாணியே அழகுதான்.

என் பக்கத்தில் நாற்பது கூட்டல் வயதுடையவர் அமர்ந்தார். வெள்ளைச்சட்டை. கருப்பு கால்சட்டை. கையில் தினகரன். செய்தித்தாளைப் பிரித்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ராஜபக்‌ஷேவை போட்டுத் தள்ளணும் சார்”

“ஆமாங்க. டிவி பார்க்குறப்போவெல்லாம் மனசு பிசையுது” பதிலுக்கு பேசியாக வேண்டும். அதுதான் மரியாதை.

“நான் சந்திரசூடன்ங்க. கோயமுத்தூரு. மெட்ராஸ் ஹைகோர்ட்டுலே லாயரா இருக்கேன்” உடனடியாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கைகொடுத்து என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

ரயில் கிளம்பப் போவதாக இந்தி, ஆங்கிலம், தமிழில் கொஞ்சம் சுமாரான பெண்குரலில் அறிவிப்பு கொடுத்தார்கள். இஞ்சின் பெட்டியிலிருந்து ஹாரன் சத்தம் கேட்டது. பெட்டி இருக்கைகள் கிட்டத்தட்ட முழுமை அடைந்து இருக்க, எதிர் இருக்கை மட்டும் காலியாக இருந்தது கண்ணை உறுத்தியது.

அவசர அவசரமாக ஒரு பெரியவரும், இருபத்தெட்டு முதல் முப்பது வயது மதிக்கத்தவனும் வந்து அமர்ந்தார்கள். அந்த மதிக்கத்தக்கவன் பெரியவரின் மகனாக இருக்கக் கூடும். எனக்கென்னவோ அவனைப் பார்த்ததுமே பிடிக்கவில்லை. சிலபேரை பார்த்ததுமே பிடித்துவிடும். பழகியவுடன் கசந்துவிடும்.

அவன் முகம் வெறிகொண்ட வேங்கையைப் போல இருந்தது. அவனது கண்கள் என்னை மிகவும் துன்புறுத்தியது. அவன் ஒரு சைக்கோ என்று உள்ளுணர்வு உறுத்தியது. இவனோடு பழகினாலும் இவனைப் பிடிக்காது என்று தோன்றியது. பெரியவர் வெள்ளைச் சட்டையும், வேட்டியும் கொஞ்சம் அழுக்காக அணிந்திருந்தார். அவனோ கசங்கிப்போன சட்டையும், சாயம்போன கால்சட்டையுமாக நாகரிகத்துக்கு தொடர்பில்லாதவனாக இருந்தான்.

பக்கத்திலிருந்த லாயரைப் பார்த்தேன். சகப்பயணியாக என்னை திருப்தியோடு பார்த்தவருக்கு எதிர் இருக்கை பயணிகள் அதிருப்தியை தந்திருக்கிறார்கள் என்பது பார்வையிலேயே தெரிந்தது.

பெரியவர் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்தார். ரயில் கிளம்பியது. காணாததை கண்டவன் மாதிரி அந்த பிஸ்கட்டை பிடுங்கி கடித்தான் அவன். பிஸ்கட் துணுக்கு சிதறியது. வாயெல்லாம் துகள்கள். நிமிர்ந்துப் பார்த்த எனக்கோ அருவருப்பாக இருந்தது. லாயருக்கும் அதேபோல இருந்திருக்க வேண்டும். ஒரு டவல் துண்டினை எடுத்து முகத்தில் போர்த்திக்கொண்டு இருக்கையில் வசதியாக சாய்ந்தார். அனேகமாக தூங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

ரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்க ஜன்னல் வழியாக காற்று ஜம்மென்று உள்நுழைந்தது. திடீரென்று அவன் உட்கார்ந்த நிலையில் குதித்தவாறே, “அப்பா.. அப்பா.. மரமெல்லாம் பச்சையா அழகாருக்குப்பா” என்று கொஞ்சம் சத்தமாக சொன்னான். பெரியவர் பதிலுக்கு “ம்” என்றார். ஒருவேளை மனநிலைப் பிறழ்ந்தவனோ?

“அப்பா அங்கே பாருங்க. எவ்ளோ அழகாயிருக்கு!” குதூகலமான குரலில் கத்தினான். எரிச்சல் மண்டியது.

பக்கத்திலிருந்தவர் துயில் களைந்து காதுக்கு பக்கத்தில் வந்து சொன்னார். “க்ராக்கு பய சார்!”

திடீரென்று இருண்டதைப் போல தோன்றியது. சடசடவென்று மழைத்துளி விழுந்தது. வானம்தான் எவ்வளவு வேகமாக மாற்றத்துக்கு தயாராகிறது. ஜன்னலை மூட எழுந்தேன். அவன் முரட்டுத்தனமாக என் கையைப் பற்றி முறைத்தான். இச்சூழலில் அவனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பி, உட்கார்ந்தேன். பெரியவரைப் பார்த்தேன். கெஞ்சும் தொனியில் ஒரு பார்வை பார்த்தார்.

“அப்பா. மழை ஜோன்னு பெய்யுது. ஹைய்யா. ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா இருக்கு” என்னவோ மழையைப் பார்த்ததே இல்லை என்பது மாதிரி கத்தினான். பெட்டியில் இருந்த மற்றவர்கள் வித்தியாசமாக திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் பாவமான தொனியிலேயே அமர்ந்திருந்தார்.

ரயில்வேகத்தில் மழைத்துளி ஜன்னலுக்குள் புகுந்து என் சட்டையை நனைக்க, இதற்குமேல் பொறுக்க முடியாது என்ற நிலையில் ஜன்னலை மூட மீண்டும் எழுந்தேன்.

”ஜன்னலை மூடாதீங்க!” முரட்டுக்குரலில் சொன்னான். எரிச்சல் எல்லை மீறிப் போனது.

“ஏன் சார்? பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே இவனை சேர்த்து சரி செய்யுறதை விட்டுட்டு, வயசான காலத்துலே இப்படி கஷ்டப்படறீங்க?” பெரியவரிடம் கொஞ்சம் காட்டமாகவே கேட்டேன். அவனது முகம் இருளடைந்தது. இதெல்லாம் மட்டும் புரியும்.

அவர் அமைதியாக சொன்னார்.

“தயவுசெஞ்சு தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க தம்பி. ஆஸ்பத்திரியிலிருந்து தான் வர்றோம். அவனுக்கு ஜூரம் வந்து பத்து வயசுலே பார்வை போயிடிச்சி. போனவாரம் தான் கண் தானம் மூலமா அவனுக்கு மறுபடியும் பார்வை கிடைச்சிருக்கு. மழையும், மரமும் அவனுக்கு புதுசாதான் தெரியும்”

ஜன்னலை மூடாமலேயே லேசாக அதிர்ச்சியடைந்து இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்து சீட்டுக்காரர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். அவன் எதுவும் நடக்காதது போல மீண்டும் மழையை ரசிக்க ஆரம்பித்தான். கடந்துச்சென்ற டீனேஜ் பெண் ஒருத்தியின் டீஷர்ட்டில் ”Don't Judge Too Soon” என்று எழுதியிருந்தது.



நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த ஆங்கில மின்னஞ்சல் சமாச்சாரத்தை தழுவி புனையப்பட்ட கதை.

(நன்றி : தினகரன் வசந்தம் - இக்கதையின் சுருக்கப்பட்ட ஒரு பக்க வடிவம் 03-07-2011 வசந்தம் இதழில் வெளிவந்திருக்கிறது)

2 ஜூலை, 2011

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

பெண் ஏன் அழகாக இருக்கிறாள்?

இந்த கேள்வியை நான் கேட்டுக் கொள்ளாத நாளே கடந்த கால் நூற்றாண்டுகாலமாக இல்லை.

சங்கர வித்யாலயாவில் எல்.கே.ஜி. சேர்ந்தேன். எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவள் பூர்ணிமா. மாநிறம். பெரிய குண்டு பல்பு கண்கள். மை அப்பியிருப்பாள். புருவம் முடியும் இடத்திலிருந்து காதுக்கு மிக நெருக்கமாக ஒரு மைத்தீற்றல் ஓவியமாய் வரையப்பட்டிருக்கும். ஆனால் சரியான அராத்து. ஒருமுறை சண்டை போடும்போது கூராக தீட்டப்பட்டிருந்த பென்சிலை எடுத்து முகத்தில் கண்ணுக்கு அருகாக கீறிவிட்டாள். கேவிக்கேவி அழுதுக் கொண்டிருந்தவனை டீச்சர் கேட்டார். ”ஏண்டா அழுவுறே?”. ஏனோ அவளைப் போட்டுக் கொடுக்க வேண்டுமென்று அந்த வயதிலேயே தோன்றவில்லை. ஏதோ பொய் சொல்லி சமாளித்ததாக நினைவு. அழகான பெண், பிரம்படி படலாமா?

இப்போது அவளுக்கு பத்தாங்கிளாஸ் படிக்கும் பையனோ, பெண்ணோ இருக்கலாம். எங்கேயாவது காண நேர்ந்தால் அடையாளம் காணமுடியுமா தெரியவில்லை. ஆனால் அவளது கண்களை மட்டும் மறக்கவே முடியாது. எத்தனை லட்சம் பேருக்கு நடுவிலும், அவளது கண்களை பார்த்தால் உடனே கண்டறிந்துவிடுவேன். துரதிருஷ்டவசமாக பெண்களின் கண்களை பார்த்து பேச இன்றும் பயமாகவே இருக்கிறது (பூர்ணிமா பென்சிலால் கீறியதால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பால் இருக்கலாம்).

ஒண்ணாங்கிளாஸ் சபிதா, மூணாங்கிளாஸ் கவிதா, ஆறாங்கிளாஸ் குணசுந்தரி, எட்டாங்கிளாஸ் குமுதா, பத்தாங்கிளாஸ் அனுராதா, பண்ணிரெண்டாங் கிளாஸ் தமிழரசி என்று பள்ளிப் பருவம் முழுக்க பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்கள் ஏராளமான அழகிகள்.

விரைவில் குழந்தை பெறப்போகும் நண்பர் ஒருவர் சொன்னார். “இதுவும் பொண்ணா பொறக்கணும்னு விரும்பறேன்”. அவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. “எதுக்கு? ஒரு பையனாவது இருக்கட்டுமே?” என்று கேட்டதற்கு சொன்னார்.

“பொண்ணுன்னா நாம சாகறவரைக்கும் நமக்கு குழந்தையாவே தெரியும். பையன்னா சீக்கிரமாவே குழந்தை பொஸிஸனில் இருந்து பிரமோஷன் வாங்கிடுவான். சாவுறவரைக்கும் அவனோடு மல்லுக்கட்டி தினம்தினம் சாவணும். பொண்ணை வளர்த்து கட்டிக் கொடுக்குறதுதான் சார் இண்டரெஸ்டிங் டாஸ்க்கு. அதுவுமில்லாமே பொண்ணுன்னா கடைசிக்காலத்தில் பொறுப்பா பார்த்துக்கும். பசங்க அப்படியா? நானே என் அப்பன் ஆத்தாவுக்கு சோறு போடறதில்லை. ஆனா என் பொண்டாட்டி, அவளோட சம்பளத்துலே பாதியை அவங்க அப்பா அம்மாவுக்கு பொறுப்பா மாசாமாசம் கொடுத்திடறா”

இந்த தலைமுறையில் நிறைய பேர் இந்த நண்பரைப்போல யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்க்காலத்தில் ஆண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால், அபார்ஷன் மாதிரியான ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. சரி இந்த மேட்டரை லூசில் விடுங்கள். நம் டாபிக்கே வேற.

பையன்கள் எல்லாம் பச்சாக்களாக இருக்க, பெண்கள் மட்டும் ஏன் பேரழகிகளாக இருக்கிறார்கள்?

குட்டியில் குரங்கு கூட அழகுதான் என்பார்கள். பயல்களும் பிறக்கும்போது கொஞ்சம் சுமாராகதானிருக்கிறார்கள். பெற்றோர்களும் கொஞ்சக்கூடிய அளவுக்கு, அதிகபட்சம் மூணு, நாலு வயசு வரைக்கும் வளர்கிறார்கள். என்றைக்கு டவுசர் போட ஆரம்பிக்கிறான்களோ, அன்றிலிருந்து ‘பையன்’ ஆகிறார்கள். அதுவும் பதிமூன்று வயசு வாக்கில், பால்யப்பருவம் முற்றிலுமாக முடிந்து லேசாக மூக்குக்கு கீழே முடிவளரும் பருவத்தில் காண சகிக்க முடியாத தோற்றம். சிறுபையன்களாக இருந்தபோது பார்ப்பதற்கு புஷ்டியாக இருந்த பயல்கள் கூட பஞ்சத்தில் அடிபட்ட தோற்றத்தில் இருப்பார்கள் பதினெட்டு வயதில்.

மாறாக பெண்களோ பத்து வயதிலிருந்து இருபது வயதுக்குள்ளாக அவர்களது வாழ்நாளின் உச்சபட்ச பேரெழிலை எட்டுகிறார்கள். இந்த கூற்றிலிருந்து சில ஒல்லிக்குச்சிப் பெண்களை மட்டும் விலக்கிவிடலாம். முப்பது வயதுக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக சதை போட்டு நாற்பது வயதில் கிளியோபாட்ராக்களாக வலம் வரும் அழகான ஆண்டிக்கள் அவர்கள்.

முதன்முதலாக காதலிக்கும்போது என்னுடைய வயது பதினாறு. அவளுக்கு வயது பதிமூன்றோ, பதினாலோ. ஒரு நெருக்கமான சந்தர்ப்பத்தில், சில இன்ச் கேப்பில் ஈரமான அவளது உதடுகளை காண நேர்ந்து, கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விட்டேன். பெண்களின் உதடை ஆரஞ்சுச் சுளையோடு ஒப்பிடும் கவிஞர்கள் பைத்தியக்காரர்கள். உண்மையில் இவர்களது உதட்டை ஒப்பிட்டுக் காட்டக்கூடிய அளவுக்கு எழில்வாய்ந்த பொருள் உலகிலேயே இல்லை. நாசி. நாசிக்கு கீழே கால் இஞ்ச் கேப். மேலுதடு. கீழுதடோடு இணையும் ஓரவாய். கீழுதடுக்கு கீழான முகவாய். ச்சே.. வாய்ப்பேயில்லை. உலகின் தலைசிறந்த ஓவியங்களான பெண்களை வரைந்த இயற்கைக்குதான் எவ்வளவு கற்பனைத்திறன், கவித்திறன்?

பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். கலைஞரின் படமோ, புரட்சித்தலைவி அல்லது புரட்சிப்புயல் அல்லது இளையதளபதி அல்லது செந்தமிழன் அல்லது தமிழகத்து பிரபாகரன் யாருடைய படமோ பிரதானமாக இருக்கும். சிறியதாக பாஸ்போர்ட் அளவில் மணமக்கள் படம் இடம்பெற்றிருக்கும். அடுத்தமுறை இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது உற்றுப் பாருங்கள். மணமகள் உலக அழகியாகவும், மணமகன் உலகமகா குரூபியாகவும் இருக்கும் யதார்த்த உண்மையை கண்டறிவீர்கள். உடனே உங்கள் திருமண ஆல்பத்தை கூட புரட்டிப் பார்த்து இந்த பேருண்மையை நீங்கள் உறுதி செய்துக் கொள்ளலாம். மணமகள் அழகு. மணமகன் சுமார் அல்லது சப்பை. ஏனிந்த நிலை?

சரி. திருமணத்தின் போதுதான் ‘பசங்க’ சுமார் ஆக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு? குழந்தை பிறந்தவுடன் ஏற்கனவே அழகாக இருந்த பெண் மேலும் அழகு பெறுகிறாள். மாறாக பசங்களோ, கிழங்களாக மாறி முன் தலையிலோ, பின் தலையிலோ முடிகொட்டி, தொப்பை போட்டு ‘அவன் இவன்’ ஹைனஸ் மாதிரி ஆகிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் பசங்களுக்கு இருபதுகளின் இறுதியிலேயே வேறு நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

நீங்கள் உலகை உற்றுப் பார்க்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பின், வெள்ளிக்கிழமை காலைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். சாலையெங்கும் சோலைதான். சித்தாளு ஃபிகரில் தொடங்கி, சீமாட்டி ஃபிகர் வரை சீயக்காயோ, சிக் ஷாம்போ போட்டு சுத்தபத்தமாக தலைகுளித்து, ஃப்ரீ ஹேர்ஸ்டைலில் பட்டாம்பூச்சி மாதிரி படபடக்கிறார்கள். மாறாக, பசங்களோ வீக்கெண்டு டாஸ்மாக் பார்ட்டியை நினைத்து, நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு விலங்கினம் மாதிரி திரிகிறார்கள்.

உலகில் தோன்றிய எந்த உயிரினத்தை எடுத்துக் கொண்டாலும் ஆணினம்தான் அழகு. ஆண் சிங்கத்துக்கு கம்பீரமான பிடரி இருக்கும். பெண் சிங்கம் ஷேவிங் செய்த டி.ராஜேந்தர் மாதிரி இருக்கும். ஆண் மயிலுக்குதான் தோகை. பெண் மயிலுக்கு அருக்காணி வால் ஸ்டைல். இப்படி நீங்கள் எந்த உயிரினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், ஆணினம் அழகில் கொள்ளை கொள்ளும். மாறாக பாழாய்ப்போன இந்த மனிதக் குலத்தில் மட்டும்தான் இந்த ஓரவஞ்சனையை இயற்கை நிகழ்த்திப் பார்த்திருக்கிறது.

என் அருமைக்குரிய ஆணினமே.. அழகை நினைத்து உரலை இடித்துக் கொள்வதுதான் ஆணினத்துக்கு விதிக்கப்பட்ட விதி. சரக்கெடு. மட்டையாகு.