31 மார்ச், 2012
மனநோயோடு மல்யுத்தம்!
அகிலேஷ்வர் சகாய். வயது 50. டெல்லிக்கு அருகில் குர்கானில் செயல்படும் ஒரு பெரிய நிறுவனத்தின் போக்குவரத்து தொடர்பான பிரிவின் இயக்குனர். நிறுவனத்தின் மிக முக்கியமான கை. அவருடைய ஒவ்வொரு நிமிடமும் பல்லாயிரம் ரூபாய்கள் மதிப்பு வாய்ந்தது. எப்போது பார்த்தாலும் பிசினஸ் மீட்டிங். விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அகிலேஷ்வர் ஒரு செயின் ஸ்மோக்கர். ஆறாவது விரலாய் சிகரெட் புகைந்துக் கொண்டேயிருக்கும். சிகரெட்டின் தீமையை நன்கு அறிந்திருந்தும், “நான் ஓய்வே இல்லாதவன். நொடிக்கு நான்கு முறை கோபப்படும் மனிதன். இதனால்தான் சிகரெட் பழக்கம்” என்று புன்னகைக்கிறார். ஏழு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார். தீவிரமான மனநோயோடு ஒரு நிறுவனத்தின் உயர்பதவியில் பணிபுரிபவர், அனேகமாக இவர் ஒருவர் மட்டுமாகதான் இருப்பார்.
அடுத்த ஒரு பத்தியினை கொஞ்சம் லேசாக கற்பனை செய்துப் பாருங்கள்.
உங்களை நாளை காலை தன்னோடு வாக்கிங் அழைத்துச் செல்ல பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருக்கிறார். மறுநாள் மதிய உணவு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன். அதற்கு அடுத்த நாள் மாலையில் பிரான்ஸ் அதிபர் சர்கோஸியுடன் பாரிஸ் நகரை வலம் வரவேண்டும். இடையில் இங்கிலாந்து ராணி வேறு சந்திப்புக்கு நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறார். உலகநாடுகளின் அதிபர்களும், தலைவர்களும் உங்களை சந்திக்க, பேச, பழக ஒற்றைக்காலால் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
புன்னகையோடு படித்திருப்பீர்கள். கற்பனைக்கு நன்றாகத்தான் இருக்கிறது, இதெல்லாம் நடக்கிற காரியமா என்று யதார்த்தமாக யோசித்துவிட்டு, அடுத்தப் பத்திக்கு நகர்ந்து விட்டீர்கள் இல்லையா?
அகிலேஷ்வருக்கு இந்த இடத்தில் தான் பிரச்சினை. இதுமாதிரியான அதீத கற்பனை அவரது உள்ளத்தில் தோன்றும். அந்த கற்பனை உண்மையென்று நினைத்து, அது தொடர்பான முயற்சிகளில் மூழ்கிவிடுவார். அதாவது நிஜமாகவே நாளை காலை மன்மோகன் சிங்கோடு வாக்கிங் போகவேண்டுமென்று நினைத்துக் கொண்டு, டிராவல் ஏஜென்ஸியில் டெல்லிக்கு பிளைட் டிக்கெட் புக் செய்துவிடுவார். டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு... அங்கிருந்து பாரிஸுக்கு...
பின்னர் இதெல்லாம் நடக்காதபோது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வுக்கு எல்லையே இருக்காது.
நினைத்துப் பார்க்கவே விபரீதமாக இல்லை?
ஒருமுறை இப்படித்தான். திடீரென்று தன்னுடைய வங்கியின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கு தொலைபேசினார் அகிலேஷ்வர். தனக்கு உடனடியாக மூன்று லட்ச ரூபாய் லோன் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். அடுத்த நான்கு நாட்களிலேயே மூன்று லட்ச ரூபாயை எதற்காக செலவழிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் செலவழித்து விட்டார். என்னென்ன செலவழித்தோம் என்று அவருக்கு நினைவேயில்லை. அதன் பின்னர் அவர் தனது மணிபர்ஸில் ஐம்பது ரூபாய்க்கு மேல் வைத்துக் கொள்வதே இல்லை.
இது எந்தமாதிரியான பிரச்சினை? ஸ்க்ஸோப்ரீனியா மாதிரி வாயில் நுழையாத எண்ணற்ற மனநோய்களில் ஒன்று பிபோலர் டிஸார்டர் (Bipolar Disorder). இந்த நோய் இருப்பவர் பணித்திறன் குன்றியிருப்பார். குடிக்காமலேயே குடித்தவரைப் போல நடந்து கொள்வார். அல்லது ஏடாகூடாமாக சிந்திப்பார். ஆரம்பத்திலேயே தகுந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், மிக மோசமான விளைவுகளுக்கு இந்நோய் இட்டுச்செல்லும்.
இயல்பான மனநிலையை மாற்றியமைப்பது தான் இந்நோயின் மோசமான ஒரு தாக்குதலாக சொல்லலாம். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மிகவும் சோகமாக மனம் உணரும். தூங்க வேண்டும் என்ற மனநிலை வரவே வராது (Insomnia). தூக்கமின்மையால் தன்னம்பிக்கை குறையும். நாளுக்கு நாள் இனம் தெரியாத குற்றவுணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். இறுதியாக தற்கொலை எண்ணம் வலுப்பெறும்.
அகிலேஷ்வர் சகாய்க்கு ஏன் இந்நோய் வந்தது என்று குறிப்பாகச் சொல்லமுடியவில்லை. அவருடைய கடந்தகால பணிகளும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
தன்னுடைய இருபதாவது வயதில் சகாய், டெலிகிராப் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். இரவுகளில் பணி. பகலில் படிப்பு. படிப்பு முடிந்தவுடன் தேசிய வங்கி ஒன்றில் பணியாற்றினார். 1991லிருந்து 1997 வரை கொங்கன் ரயில்வேக்காக அவர் பணியாற்ற வேண்டியிருந்தது. பணப்பரிமாற்றத்துக்கு பொறுப்பாக இருந்ததால் ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரங்கள் வரை அவர் உறக்கமின்றி பணியாற்ற வேண்டியிருந்தது. பணியாற்றிய நிறுவனங்களில் எல்லாம் வேலை பார்ப்பதில் இவர் சூரப்புலி என்றே பெயர் வாங்கினார்.
மிகச்சரியாக இதே காலக்கட்டத்தில் தான் அவருக்கு மனநோய் உருவாகியிருக்கும் என்று தெரிகிறது. வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்திருந்தார். வேலை பார்ப்பது அவருக்கு கசந்த காலக்கட்டம் இது. இவரது வாழ்க்கையை மனநோய் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருந்தது. தூக்கம் என்பதே அரிதாகிவிட்டது. சோம்பல், சோர்வு. வாழ்வதே நரகம்.
நண்பர்கள் சிலரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவர்களை தொடர்பு கொண்டார். மருத்துவர்கள் உதவியால் தனக்கு பிபோலர் டிஸார்டர் இருப்பதை கண்டுகொண்டார். இந்நோய் மூளையின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கிறது. நம்மில் நூற்றில் ஒருவர் கடுமையாகவும், நான்கு பேர் மிதமாகவும் இதே மனநோயால் பாதிக்கப்படுகிறோம். இந்நோயின் தாக்கத்தை குறைக்க வீரியமான மருந்துகள் தேவைப்படும்.
இந்தியாவில் பெரிய நிறுவனங்களில் உயர்பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மட்டத்தில், அனேகமாக இந்நோய் கண்டறியப்பட்டிருப்பது சகாய் விஷயத்தில் தான். பலருக்கும் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் பெரிய பெயருடன் இருப்பவர்கள் மனநோய்க்கு மருத்துவம் பார்ப்பதை வெளிப்படையாக சொல்ல விரும்புவதில்லை. தமக்கு மனநோய் இருப்பதாக மருத்துவரால் சொல்லப்பட்டாலும், அதை ஒத்துக்கொள்ள பெரிய மனிதர்களின் ஈகோ இடம் தருவதில்லை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதாகவும், அவர்களில் 90 சதவிகிதம் பேர், இதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
தற்போது சகாய் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வினாயக் சாட்டர்ஜி, இவரது மனநோய் குறித்து தெரிந்தே பணிக்கு சேர்த்தார். சகாயை இந்நிறுவனம் குழந்தை மாதிரி பார்த்துக் கொள்கிறது என்று சொன்னால் மிகையாகவே தெரியும். ஆனால் அப்படித்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.
“அவர் அடிக்கடி கோபப்படுவார். திடீரென விடுப்பு எடுப்பார். அதெல்லாம் எங்களுக்கு பிரச்சினையில்லை. அலுவலகத்தைப் பொறுத்தவரை அவர் வைரம். வைரத்தை யாராவது வேண்டாமென்று சொல்லுவார்களா?” என்று சொல்லி சிரிக்கிறார்கள் சக அலுவலர்கள். சகாய் வேலை பார்க்கிறாரா என்பதைவிட ஒழுங்காக தூங்குகிறாரா என்பதை உறுதி செய்துக் கொள்கிறது அவரது நிறுவனம். ஏனெனில் உறக்கம்தான் பல பிரச்சினைகளுக்கும் தீர்வான ஒரே மருந்து.
“இப்போது எனக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக நிவாரணம். எவ்வளவு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரியாது. வாரத்தில் ஏதாவது ஒருநாள் மறந்துபோய், நான் மருந்து உட்கொள்ளாவிட்டாலும் கூட பழைய நிலைக்கு போய்விடக் கூடிய ஆபத்து எப்போதும் இருக்கிறது. மனநோயை தனிமனிதனாக வெல்வது என்பது சாத்தியமற்றது. சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் யாரும், எதையும் வென்று விடமுடியாது!” என்று பணிவாக சொல்கிறார் சகாய்.
நிறுவனங்களின் கடமை!
இன்றைய பரபரப்பான சூழலில் நம்மில் பலருக்கும், நாம் அறியாமலேயே மனம் தொடர்பான நோய்கள் இருக்கக்கூடும். உடல் தொடர்பான நோய்களைப் போன்று வெளிப்படையான அறிகுறிகள் தென்படாததால் நாம் இயல்பாக இருப்பதாகவே நம்பி தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை.
குறிப்பாக விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பத்திரிகையாளர்கள், பி.பி.ஓ பணியாளர்கள் போன்றவர்கள் காலக்கெடுவுக்குள் (Deadline) பணியை முடிக்க, தூக்கத்தைத் துறந்து பணியாற்றுபவர்களுக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் பணித்திறன் குறைந்து இவர்களுக்கு அலுவலகத்திலும் கெட்ட பெயர். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இல்லாது, அலுவலக டென்ஷனை வீட்டிலும் ‘வள்’ளென்று காட்டுவார்கள். சில நாட்களிலேயே சமூகத்தோடு ஒன்றமுடியாமல் தங்களை தாங்களே தனித்துக் கொள்வார்கள்.
தங்கள் ஊழியர்கள் ஒழுங்காக உணவு உட்கொள்கிறார்களா என்று கேண்டீனெல்லாம் அமைத்து அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், அவர்கள் உறங்கினார்களா, பணிச்சுமை ஊழியர்களுக்குள் சமமாக பகிர்ந்துக் கொள்ளப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
(நன்றி : புதிய தலைமுறை)
30 மார்ச், 2012
மாசி
“சார்! பர்ஸ்ட் சீனிலேயே நாலு பேரை போட்டுத் தள்ளுறீங்க. நீங்க ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். வேட்டையாடு விளையாடு பாட்டு மாதிரி உங்களுக்கு ஒரு தீம் சாங்கும் உண்டு. பாட்டு ஃபுல்லா போடு போடுன்னு எல்லா ரவுடிகளையும் போட்டுக்கினே இருக்கீங்க”
”இண்டரெஸ்டிங். மேலே சொல்லுங்க”
“மெட்ராஸ்லே ரெண்டு ரவுடி க்ரூப். ஒரு க்ரூப்புக்கு மினிஸ்டர் சப்போர்ட். இன்னொரு க்ரூப்புக்கு மும்பையிலேருந்து ரவுடியிஸம் ஆபரேட் பண்ணுற டான் சப்போர்ட். ரெண்டு க்ரூப்பு ஆளுங்க எல்லாத்தையும் என்கவுண்டர்லே போடறீங்க. கடைசியிலே வில்லன்களையும்”
“நல்லாருக்கு சார். இண்டியன் சினிமாவிலேயே இப்படியொரு கதையோட படம் வந்ததில்லை. ஆனா ஹீரோயினே இல்லையே?”
சுதாரித்தபடி, “இருக்காங்க சார். பர்ஸ்ட் சீன்லேயே நெத்தியிலே குண்டு பாய்ஞ்சு செத்துடறாங்க”
“அவங்களையும் நான் தான் போட்டுடறேனா?”
“நியாயமா நீங்கதான் போடணும். ஆனா வில்லன்கள் போடுறமாதிரி வித்தியாசமா எடுக்கிறோம் சார்”
“பர்ஸ்ட் சீன்லேயே ஹீரோயின் அவுட்டுன்னா.. டூயட்டு, ஃபாரின் சாங்குக்கு எல்லாம் ஸ்கோப்பே இல்லையே பாஸ்?”
“அதெல்லாம் ட்ரீம்லே வெச்சுக்கலாம் சார்”
இப்படியாகதான் அர்ஜூன் சாரிடம் இயக்குனர் கிச்சா சார் கதை சொல்லியிருப்பார். ‘வெற்றிவிழா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மூணையும் கலந்துக்கட்டி கலக்கறோம் சார்’ என்று விறுவிறுப்பாக்கி ஆக்ஷன் கிங்கை ஒப்புக்கொள்ள வைத்திருப்பார்.
படத்தில் அர்ஜூன் தன்னைத்தானே போட்டுக்கொள்ளவில்லை என்பதைத் தவிர்த்து, ஓரமாய் ஒண்ணுக்கு இருப்பவனை கூட போட்டுத் தள்ளும் ‘கொலவெறி’ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வருகிறார். என்கவுண்டர் என்கொயரிக்கு வரும் மேலதிகாரிகளின் வாயில் லாலிபாப் வைக்காததுதான் ஒரே குறை. படத்தில் அ.மார்க்ஸ் நடிக்கவில்லை என்பதால் ‘மனித உரிமை’ என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இப்படியாக போட்டுத்தள்ளும் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு சோதனை வருகிறது. கமிஷனர் வில்லனின் ஆள் என்று வித்தியாசமான பாத்திர படைப்பு. எனவே நேர்மையான போலிஸ் அதிகாரியான அர்ஜூன் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளே தள்ளுகிறார்கள். அங்கிருந்து இன்னொரு வில்லனுக்கு அடியாளாக செயல்பட்டு, வெளியே வந்து, தன் பழியை துடைத்து, தன் மீது பழி போட்டவர்களையும் போட்டு கடைசியில் தனக்கு பழிதீர்க்க உதவிய வில்லனையும் போட்டு… ஒட்டுமொத்தமாக இரண்டரை மணி நேரத்தில் இரண்டு லட்சம் பேரையாவது ராஜபக்ஷே பாணியில் போடுகிறார் அர்ஜூன்.
ஹீரோயின் நாலஞ்சு சீனுக்குதான் என்பதால் இருப்பதிலேயே மொக்கை ஃபிகராக பார்த்து புக் செய்திருக்கிறார்கள். சம்பந்தமேயில்லாமல் ‘பிட்’டாக உரித்துக் காட்டப்படும் ஆரம்பக் குளியலறைக் காட்சியால் கூட அவரால் ரசிகர்களுக்கு ‘மூட்’ இன்க்ரீஸ் செய்யமுடியவில்லை என்பதுதான் பரிதாபம்.
ஆக்ஷன் கிங் கன்னச் சதைகளெல்லாம் தொங்கிப்போய், குள்ளமாக, ஏடாகூடமான உடல்வாகோடு பரிதாபமாக இருக்கிறார். கூலிங் கிளாஸ் மட்டும் இல்லையென்றால், நடிப்பையே விட்டுவிட வேண்டிய சூழல் வந்துவிடும். வித்தியாசமான வில்லன் அல்லது குணச்சித்திர அப்பா கேரக்டர்களை இனிமேலாவது இவர் பரிசீலிக்கலாம்.
ரிட்டையர்ட் ஆகிப்போன வில்லன்களான பொன்னம்பலம், சலீம்கவுஸ் ஆகியோரை மீண்டும் கொண்டு வந்திருப்பதை வைத்தே யூகிக்கலாம் இது ரொம்ப ‘நறுக்’கான பட்ஜெட் படமென்று. விளங்காத பயல்களை பெற்ற அப்பாக்கள் சொல்வார்களே “இந்த தறுதலை பொறப்பான்னு தெரிஞ்சிருந்தா, அன்னிக்கு நைட் ஷோ போயிருக்கலாம்”. அப்படிக்கூட போகமுடியாத படமிது :-(

22 மார்ச், 2012
வெங்காயம்
பேய்மழை பொழிந்துக் கொண்டிருந்த அன்றைய மாலையில் முழுக்க நனைந்தும் முக்காடு போட்டுக் கொண்டு சென்னை அண்ணா திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருக்கலாம். அவர்களில் சிலர் மழைக்கு ஒதுங்கவே டிக்கெட் எடுத்துக்கொண்டு அரங்குக்குள் வந்தார்களோ என்றுகூட சந்தேகம்.
மாஸ் நடிகர்கள், திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எந்த எதிர்ப்பார்ப்பையும் கிளறாத படம். ஆனால் படம் முடிந்த நொடியில் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் நிஜமான கவுரவம்.
இப்படத்தின் குழுவினருக்கு தொழில்நேர்த்தி சுத்தமாக இல்லை. ஏனோ தானோவென்றுதான் படமெடுக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பல நடிகர்களின் நடிப்பு சுமாருக்கும் கீழே. இசை, கேமிரா, எடிட்டிங், கிராபிக்ஸ் என்று எல்லாத் துறையிலும் படுமோசமான வேலை. ஆனால் அத்தனையையும் அடித்து நொறுக்கி, படம் பார்ப்பவர்களை கவர்கிறது படத்தின் உள்ளடக்கம். இப்படியொரு படத்தை எடுத்தால், எந்த தயாரிப்பாளரும் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வீட்டுப்படி ஏறிவரமாட்டார் என்று தெரிந்தும், தைரியமாக எடுத்திருக்கும் இயக்குனர் சங்ககிரி ராச்குமாரே ஒட்டுமொத்த பாராட்டுகளுக்கும் தகுதியானவர்.
இம்மாதிரியான பகுத்தறிவு முயற்சிகளுக்கு எப்போதும் தாமாகவே முன்வந்து ஆதரவு வழங்கும் இனமான நடிகர் சத்யராஜையும் இந்நேரத்தில் பாராட்டுகிறோம்.
ஜோதிடம் என்கிற புரட்டு வியாபாரத்தை புரட்டிப் போட்டு எடுத்திருக்கிறார் இயக்குனர். ஜோதிடம் குறித்த அறிவியல்ரீதியான, சமூகரீதியான நியாயமான கேள்விகளுக்கு இதுவரை எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க பதிலும் ஆன்மீக அன்பர்கள் தம் தரப்பில் இருந்து தந்ததில்லை. ஜோதிடத்தை விஞ்ஞானம் என்று கதை கட்டி அப்பாவி மக்களை ஏமாற்றித் திரியும் ஆன்மீக பயங்கரவாதக் கூட்டத்தால் ஏற்படும் சமூக சீர்கேடுகளை, அவலங்களை, சுரண்டல்களை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம். “தேவடியாப் பசங்களா. இனிமேலாவது திருந்துங்கடா” என்று பத்து வயது பெண் இறுதிக்காட்சியில் தொண்டை வலிக்க கத்துவது ஏமாற்றி வயிறு வளர்க்கும் ஊளைச்சதைக் கும்பலை பார்த்து மட்டுமல்ல. மூளையை அடகுவைத்து.. வாழ்வை, குடும்பத்தை பணயம் வைக்கும் சாமானிய தமிழனையும் பார்த்துதான்.
ஜன்லோக்பால் மட்டுமே தேசமக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கும்பல்களுக்கு, ‘மூடநம்பிக்கை தானய்யா இந்த சமூகத்தின் நிஜமான பிரச்சினை’ என்று ஆணியடித்தது போல அழுத்தம் திருத்தமாக படமெடுத்திருக்கும் படக்குழுவினரை வணங்குகிறோம்.
நாத்திகக் கருத்துகளை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, கடவுளை உடனே தூக்கியெறிந்துவிட வேண்டும் எதிர்ப்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் மூடநம்பிக்கைகளில் உழன்று முட்டாளாக வாழ்க்கையைத் தொலைக்காமல் இருந்தால் கூட போதுமே என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் தற்போதைய ஆதங்கம்.
திராவிட இயக்கம் கலைத்துறையில் ஆரம்பத்தில் செய்து, பிற்பாடு செய்ய மறந்துவிட்ட கடமைகளை மிகச்சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது இந்த வெங்காயம்.
நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ.. யாராக இருந்தாலும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம் இது.

19 மார்ச், 2012
கர்ணன்
பரம்பரை எம்.ஜி.ஆர் ரசிகன் என்பதால், சிவாஜியை சிறுவயதிலிருந்தே பிடிக்காது. ஆனால் வயதான காலத்தில் என் அப்பாவே கூட சிவாஜியை கண்மூடித்தனமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பு எப்போது பார்த்தாலும் என் வீட்டில் திருவிளையாடலும், சரஸ்வதி சபதமும், பாவமன்னிப்பும் இடைவிடாது ஓடிக்கொண்டேயிருக்கும்.
“ராயல் வாக்” சிவாஜிக்கு மட்டும்தான் என்பார் அப்பா. தெய்வமகன், திருவிளையாடல் படங்களில் சிவாஜியின் ‘டபுக்கு டபான்’ மியூசிக்கோடு வரும் நடையினை சுட்டிக்காட்டி கிண்டல் செய்வேன்.
சிவாஜி மறைந்த அன்று எனக்கு வயதாகிவிட்டிருக்கும் போல. தமிழருக்கு கிடைக்காமல் கிடைத்த மாணிக்கம் அவர் என்பதை திடீரென உணர்ந்தேன். தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு சிவாஜியின் படங்களை திரும்பத் திரும்ப பார்த்தேன். பாசமலரின் இறுதிக்காட்சியில் அவரது நடிப்பு (பிணமாக) உலகத்தரம் வாய்ந்தது என்று உணர முடிந்தது. அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தார். “மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகன் நமது சிவாஜி”. நூற்றுக்கு லட்சம் சதம் உண்மை. இன்று கமலுக்கு, விக்ரமுக்கு, அமிதாப்புக்கு, ஷாருக்குக்கு, சல்மானுக்கு என்று சமகாலத்தின் சிறந்த நடிகர்களுக்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தை சிறப்பிக்க போதுமான முன்னுதாரணங்கள் இருக்கிறது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சிவாஜிக்கு அத்தகைய வசதியில்லை. அவர் சிறப்பாக நடித்த படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க அவரது தனித்துவ படைப்பாற்றலால் உருவானவை.
சிவாஜியின் நடிப்பு மிகைத்தன்மை வாய்ந்தது என்று முன்பொரு காலத்தில் மூச்சுப்பிடிக்க வாதிட்டிருக்கிறேன். மைக் இல்லாத அந்தக் காலத்து நாடகங்களிலிருந்து வந்தவர்களின் இயல்பு அது என்பதை இப்போது புரிந்துக்கொள்ள முடிகிறது. சத்தமாகதான் பேசுவார்கள். உடல்மொழி அசாதாரமாணதாக இருக்கும். அதே சிவாஜி பிற்பாடு தேவர் மகனில் கமலைவிட யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்.
முன்னுரையே கொஞ்சம் நீளமாகிவிட்டது. சிவாஜியைப் பற்றி எழுதுவதென்றால் கொஞ்சம் மிகையாக இப்படி நீட்டி முழக்குவது இயல்பாக வந்துவிடுகிறது.
கடந்த வார இறுதியில் மூன்று தீவிர ‘வாத்யார்’ ரசிகர்கள் கர்ணன் பார்க்கப் போனோம். வாசலில் பேனர், தோரணம், போஸ்டர் என்று இளைய-அல்டிமேட்-புரட்சி-சின்ன-லொட்டு-லொசுக்குகளுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் சிவாஜி ரசிகர்கள் களமிறங்கியிருந்தார்கள். 1964ல் வெளியாகி, கிட்டத்தட்ட தமிழகமே நான்கைந்து முறை பார்த்துவிட்ட ஒரு படத்துக்கு 2012ல் இப்படிப்பட்ட வரவேற்பு என்பது ஆச்சரியகரமானதுதான். முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸ். தொண்ணூறு சதவிகிதம் அரங்கு நிறைந்தது. டிக்கெட் கிழிக்கும் இடத்தில் படம் பார்க்க வந்தவரின் செல்போன் ஒலித்தது. ரிங்டோன் : உள்ளத்தில் நல்ல உள்ளம்.
இப்போது படம் பார்த்த சில நண்பர்கள் டெக்னிக்கலாக ஒரு மண்ணையும் கழட்டவில்லை என்று அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதா படத்தை சினிமாஸ்கோப்பாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே சாதனைதான். ஓடி ஓடி தேய்ந்துப்போன ஃபிலிமிலிருந்து இமேஜ் எடுத்து டிஜிட்டலில் கலர் பூஸ்ட் செய்திருக்கிறார்கள். சில காட்சிகள் அதே பழைய சொதப்பலோடு இருந்தாலும், பல காட்சிகளில் ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது. பாடல் காட்சிகளில் கூடுதல் இசை, சைட் ஸ்பீக்கர்களில் கேட்கும் வண்ணம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சிலமுறை பார்த்திருந்தாலும், ஒருமுறை கூட கர்ணனின் டைட்டிலை நான் பார்த்ததில்லை. டைட்டிலுக்கு முந்தைய ‘பிட்’ ஒன்றே போதும், கர்ணனின் தரத்தை பறைசாற்ற. உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபியான கர்ணனை, அவனது தாய் குந்திதேவி ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டு விடுகிறாள். தேரோட்டி ஒருவர் அக்குழந்தையை கண்டெடுத்து வாரிச்செல்ல, வழியில் ஒரு சாமியார் ஏது இக்குழந்தை என்று விசாரிக்கிறார். குழந்தையை அந்த சாமியாரிடம் தேரோட்டி கொடுக்க, குழந்தை சிரித்தபடியே தன் கையில் இருக்கும் ஒரு முத்துமாலையை சாமியாருக்கு ‘தானம்’ செய்கிறது. தியேட்டரில் விசில் சத்தம்.
மகாபாரதத்தின் ஒரு போர்ஷனை மட்டும் எடுத்துக்கொண்டு மிகத்திறமையாக திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார்கள். சக்தி கிருஷ்ணசாமியின் பஞ்ச் டயலாக்ஸ் மாஸ் சினிமாவின் உச்சம். ஹீரோவான கர்ணன் மட்டுமின்றி, வில்லன், ஹீரோயின், துண்டு துக்கடா பாத்திரங்கள், அட்மாஸ்பியருக்கு வந்து போகிறவர்கள் என்று ஆளாளுக்கு ‘பஞ்ச்’ ஆக பேசித்திரிய, படம் பார்க்கும் கிழவிகள் கூட விசிலடித்து, விசிலடித்தே வாய் வீங்கிப் போகிறார்கள். குறிப்பாக சாவித்ரியும், சிவாஜியும் விளையாடிக் கொண்டிருக்கும் (தாயக்கட்டைதான்) போது ஒரு எசகுபிசகான கட்டத்தில், சாவித்ரியின் கணவரான துரியாதன அசோகன் வந்துவிட.. இருவரும் திருட்டு முழி முழிக்க, நியாயமாக ஒரு கணவனுக்கு வரவேண்டிய கோபமோ, சந்தேகமோ இல்லாமல் இளிச்சவாய் கணவனாக “எடுக்கவா, கோர்க்கவா” என்று அசோகன் அடிக்கும் பஞ்ச் அதகளம்.
பொண்டாட்டியை சந்தேகப்படும் கேரக்டர்களிலேயே பெரும்பாலான தனது திரைவாழ்வை கழித்துவிட்ட முத்துராமன் வீரமான அர்ஜூனன் பாத்திரத்துக்கு எனும்போது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. As per மகாபாரதம், படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளில் இவர்களுக்கெல்லாம் வயது இருபது டூ இருபத்தி மூன்றாக இருக்க வேண்டும். தொப்பையும், கிப்பையுமாக இருக்கும் சிவாஜியை இருபதுகளின் ஆரம்ப வயதில் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அசோகனுக்கு புருவத்தை ஓவர் அழகாக திருத்தி விட்டிருக்கிறார்கள். மீசை மட்டும் இல்லையென்றால் ஐஸ்வர்யாராயை விட அழகாக இருந்திருப்பார்.
காட்சிகளின் தொடக்கமும், முடிவும் சக்தி நாடகக்குழுவின் ஓம்சக்தி நாடகம் மாதிரியே இருக்கிறது. ஸ்க்ரீனுக்குள் ஒவ்வொரு பாத்திரமாக வந்து நெஞ்சுருக பேசுகிறார்கள். பஞ்சப் பாண்டவப் பயல்கள் எருமைக்கடா சைஸுக்கு இருந்துக்கொண்டு ஆளாளுக்கு அம்மா, அம்மாவென்று கொஞ்சுவது சகிக்க இயலாதது. காட்சி முடிந்ததும் கடனேவென்று எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஒவ்வொருத்தராக கிளம்புகிறார்கள்.
எல்லாக் கொடூரங்களையும் ஒருவகையாக சகித்துக் கொள்ளலாம். கர்ணனின் ரொமான்ஸ்தான் உச்சக்கட்ட கோராமை. இளமையான அழகான தேவிகாவை தன்னுடைய வீரத்தையும், கம்பீரத்தையும் காட்டி மயக்குகிறார், மயங்குகிறார் நம் கர்ணன். திருமணம் ஆகும்வரை பிரிவுத்துயர் தாளாமல் இவர் ஏங்க.. எவ்வளவு அடித்தாலும் ரசிகர்கள் தாங்க.. ஒரே ரகளைதான்.
இடைவேளைக்குப் பிறகு அதிரடியாக ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்திலிருந்து நேரடியாக முகம் முழுக்க ப்ளூ கலர் பவுடர் பூசி கண்ணனாக என்.டி.ஆர். களமிறங்குகிறார். அவர் திருதராஷ்டிரனின் சபைக்கு வந்து எகனைமொகனையாய் விடாமல் பதினைந்து நிமிடங்களுக்கு டபுள் மீனிங்கில் பேசி தாலியறுக்கிறார். இதற்குப் பிறகுதான் சூடு பிடிக்கிறது படம். இரண்டாம் பாதியில் கர்ணன் அவ்வளவாக சீனில் தலை காட்டுவதில்லை. போர் யுக்திகள், கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான Cat & Mouse விளையாட்டு, திக்கைத்தனமாக துரியோதனன் செய்யும் நயவஞ்சக செயல்களை, தனது கூர்மையான அறிவுத்திறனால் கண்ணன் கட்டுடைப்பது என்று ‘கில்லி’ லெவல் ஸ்பீடு.
ஆரம்பத்திலிருந்தே இந்திரனில் தொடங்கி துரியோதனன், சகுனி, துரோணர், பீஷ்மர், குந்திதேவி, கண்ணன் என்று கிட்டத்தட்ட படத்தின் எல்லாப் பாத்திரங்களுமே தன்னை ‘சூ’ அடிப்பதை புரிந்துகொள்ளாமலேயே, கேணைத்தனமாக ‘எல்லாம் நல்லதுக்கே’ என்று நினைத்து இறுதியில் உயிரை விடுகிறார் கர்ணன். “அய்யோ என் மகனே” என்று குந்திதேவி மார்பில் அடித்துக்கொண்டு, கர்ணனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு கதற.. மண்டையைப் போட்டது கர்ணனா அல்லது அர்ஜூனனாக என்று ப.பாண்டவர்களில் அர்ஜூனன் தவிர்த்து மீதி நாலு பேரும் குழம்ப.. இருக்கும் குழப்பம் பத்தாது என்று “என் மகனை கொன்றுவிட்டீர்களே” என்று தலைவிரிக் கோலமாய் தர்மத்தேவதை வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க.. கர்ண்ணன் குந்தித் தேவியின் மகனா அல்லது தர்மத் தேவதையின் மகனா என்கிற சஸ்பென்ஸோடு படம் முடிகிறது.
ஓக்கே. சீரியஸாக இப்படத்தை அணுகுவதாக இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சில அரசியல் கண்ணிகள் காட்சியமைப்பிலும், வசனங்களிலும் புதைந்துள்ளதை கண்டுகொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்தில் பிறப்பினை அடிப்படையாக வைத்து அர்ஜூனனுக்கு, கர்ணன் சமமாக முடியாது என்று ஆச்சார்யார்கள் வாதிடும்போது, கர்ணனை சிற்றரசனாக்கி ‘இட ஒதுக்கீடு’க்கு அன்றே பிள்ளையார் சுழி போடுகிறான் துரியோதனன். ஒவ்வொரு முறை இதே காரணத்துக்காக கர்ணன் மட்டம் தட்டப்படும் போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது நம் கர்ணனின் குரல்.
கல்மனதையும் கரையவைக்கும் இறுதிக்காட்சியில் உலகில் தோன்றிய ஒவ்வொரு மாவீரனின் முடிவையும் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார் இயக்குனர் பந்துலு. அதிலும் வீரமாகப் போரிடும் குழந்தைப் போராளியான கர்ணனின் மகனை அயோக்கியத்தனமாக கண்ணன்–அர்ஜூனன் கூட்டணி இரக்கமின்றி சாகடிப்பதும், போர் யோக்கியதையை மீறி நேருக்கு நேராக மோத திராணியின்றி தேர்க்காலை தூக்கி நிறுத்த தலைப்பட்ட நேரத்தில் கர்ணனின் நெஞ்சிலே அம்புகளை இதே கோழைக்கூட்டணி எய்வதும் சமீபக்கால வரலாற்றினை நெஞ்சிலே நிழலாடச் செய்கிறது.
இராமாயணத்திலே ராமன், மகாபாரதத்திலே கண்ணன் என்று கோழைப்பயல்களின் பேடித்தனம் காலம் காலமாக ஹீரோயிஸமாக கட்டமைக்கப்படும் இத்தேசத்தில் இராவணன், கர்ணன் மாதிரி நேர்மையான புரட்சி வீரர்களின் தனித்துவப் புகழ் மெச்சி சொல்லப்படுவதை வரவேற்றாக வேண்டும் என்கிற அடிப்படையில், நாற்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டு வந்திருக்கும் கர்ணனை பெரிய தாம்பாளத் தட்டில் ஆரத்தியெடுத்து வரவேற்போம்.

16 மார்ச், 2012
சங்கரன்கோவில்: கட்சிகள் வரிந்து கட்டும் கடைசி நிமிடம்!
இன்னும் சில தினங்களில் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது சங்கரன் கோவில்.எப்படி இருக்கிறது நிலவரம்? களத்தில் அரங்கேறும் காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டுவருகிறது புதிய தலைமுறை.
சங்கரன் கோவிலில் ஜவஹரைத் திமுக வேட்பாளாராக அறிவித்திருக்கிறது. ஆனால் காந்தியும் களமிறங்கியிருக்கிறார் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் கரன்சியில் சிரிக்கும் காந்தியைச் சொல்லவில்லை.
‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலித்தபடி அந்த வேன் ஆரவாரமின்றி மெதுவாக கிராமங்களுக்குள் நுழைகிறது. தேர்தல் சமயத்தில் காதைக் கிழிக்கும் சத்தமின்றி ஒரு வாகனம் தங்கள் ஊருக்குள் நுழைவதை உலக அதிசயமாக பார்க்கிறார்கள் மக்கள். வேனுக்குள் இருந்து கதராடையில், வெள்ளைக் குல்லா அணிந்த சிலர் அமைதியாக பிட் நோட்டீஸ்களை வினியோகிக்கிறார்கள்.
“நாங்கள்லாம் மகாத்மா காந்தியோட தொண்டர்கள். மறக்காம மெழுகுவர்த்தி சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடணும்”
சொல்லிவிட்டு பிட்நோட்டீஸ் கொடுத்தவரை நிமிர்ந்துப் பார்க்கிறார் அந்த கடைக்காரர். நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரேதான் நோட்டீஸ் கொடுத்தவரும். கடைக்காரருக்கு ஆச்சரியம். இவ்வளவு எளிமையான வேட்பாளரை இதுவரை அவர் கண்டதில்லை.
அந்த வேட்பாளர் பெயர் ஆறுமுகம். டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு வயது எழுபத்து ஒன்பது. தன்னை காந்திய பண்பாளராக மக்களிடம் அறிமுகம் செய்துக் கொள்கிறார். “பூரண மதுவிலக்கே எங்கள் நோக்கம்” என்கிற இவர்களது பிரச்சாரத்துக்கு பெண்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால், இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம். சங்கரன்கோவிலின் பெரும்பாலான வாக்காளர்கள் ஏதோ ஒரு அடிப்படையில், ஏதோ ஒரு கட்சியுடன் உணர்வுபூர்வமாக பிணைந்திருக்கிறார்கள்.
சரி, கட்சிகள் களத்தில் காட்டும் காட்சிகள் என்ன?
கடந்த வாரம் வரை களைகட்டாமல் டல் அடித்துக் கொண்டிருந்த சங்கரன் கோவிலை இந்த வாரம், இன்னொரு திருமங்கலமாக மாற்ற நமது அரசியல் கட்சிகள் முனைந்திருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக பிரச்சார வாகனங்கள் ஆரவாரத்தோடு தொகுதி முழுக்க வலம் வந்தவாறு இருக்கின்றன. சரத்குமார், குஷ்பு, செந்தில் என்று சினிமா நட்சத்திரங்களைக் காண மக்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.
தொகுதியில் தேமுதிகவின் தேர்தல் அலுவலகமே இல்லாத கிராமமில்லை என்ற நிலையை ஒரே வாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் தேமுதிகவின் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.
“எங்களது பிரச்சாரத்தை காவல்துறையினரைக் கொண்டு ஆளுங்கட்சியினர் தடை செய்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இத்தேர்தலில் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள். இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெல்லுவார்” என்று உற்சாகமாக நம்மிடம் பேசினார் ஆஸ்டின்.
சங்கரநாராயண சாமி கோயிலுக்குச் சென்று வணங்கி, தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “சட்டசபையில் மக்களுக்காக பேசக்கூடாது என்கிறார்கள். இங்கே அதிமுக வென்றால் அவர்களின் ஆணவத்தை அழிக்க முடியாது. கவர்ச்சித் திட்டங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை இழக்காதீர்கள். எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
முப்பிடாதி அம்மன் கோயில் திடலிலே நாஞ்சில் இவ்வாறாக முழங்கிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு குஷ்புவின் பிரச்சார வேன் வந்தது. “இந்த ஆட்சி பொறுப்பேற்றதுமே அண்டை மாநிலங்களை சேர்ந்த கொலை, கொள்ளைக்கார கும்பல் இங்கே தஞ்சம் புகுந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குரலுயர்த்தினார். இவரது ஒலி குறுக்கிட்டதுமே மதிமுக பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் குஷ்புவைக் காண வேகமாக பேருந்து நிலையத்துக்கு விரைந்தார்கள். மதிமுகவினர் டென்ஷனாகி வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கிளம்ப, குஷ்புவின் பிரச்சார வாகனம் பாதியிலேயே கிளம்பியது. திமுகவினர் பதிலுக்கு எகிற, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் தேர்தல் பார்வையாளர்கள்.
மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரச்சாரம் உருக்கமானதாக இருக்கிறது. தெருத்தெருவாக நடந்துச்சென்றே வாக்கு கேட்கிறார். எதிர்ப்படும் வாக்காளர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். “அப்பா நல்லாயிருக்காரா?” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசும்போது, அவரது நினைவாற்றலை மெச்சி வாக்காளர்கள் சிலிர்க்கின்றனர். “ரொம்ப வருஷமா, சென்னையிலேயே தங்கியிருந்தாலும் எங்க ஊரையும், ஊர்க்காரர்களையும் வைகோ மறக்கலை” என்றார் பஜார் வீதியில் பேன்சி கடைக்காரர் ஒருவர். “என்னுடைய சொந்தத் தொகுதி இது. இந்தத் தொகுதியிலாவது மதிமுகவுக்கு இந்த ஒரே ஒரு வாய்ப்பினை தாருங்கள்” என்பதுதான் வைகோ பிரச்சாரத்தின் அடிநாதம். “மண்ணின் மைந்தர் வைகோ என்பதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. திருமங்கலம் பாணியை வைகோ உடைப்பார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மதிமுகவின் சங்கரன்கோவில் தேர்தல் பொறுப்பாளரும், நெல்லை மாவட்டச் செயலாளருமான சரவணன்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் ஊராட்சியை தொடர்ச்சியாக வைகோவின் குடும்பத்தினரே கைப்பற்றி வருகிறார்கள். எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஒரு மாதிரி கிராமமாக கலிங்கப்பட்டி திகழ்கிறது
ஆனாலும் கலிங்கப்பட்டியிலேயே வைகோவுக்கு எதிர்ப்பும் உண்டு. அவரது இல்லத்திற்கு எதிரேயே திமுகவின் தேர்தல் அலுவலகம் அமைந்திருக்கிறது. வைகோ சாடையிலேயே ஒரு இளைஞரை அங்கு கண்டேன். “அவரு என்னோட மாமாதாங்க. ஆனாலும் வேற வேற கட்சி. திமுகவை இங்கேயே ஜெயிக்க வைப்போம்” என்றார்.
“வைகோ நல்லவருதான். இல்லைன்னு சொல்லலை. ஆனாலும் எங்க சாதிக்காரங்களுக்கு அவங்க கிட்டே போதுமான நியாயம் கிடைக்கலை” என்று ஊர்க்காரர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இவர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சார்ந்தவர். “மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கு. சங்கரன்கோவிலில் பம்பரம்தான் சுத்தப் போவுது” என்றார் கலிங்கப்பட்டியின் சாமிதாஸ். இவர் கட்சி சார்பற்றவர். கலிங்கப்பட்டியில் பர்னிச்சர் ஏஜென்ஸி நடத்தும் ஆர்.சைலப்பன் கடுமையான போட்டி என்று ஒப்புக் கொள்கிறார்.
“மின்வெட்டு, பால்-பஸ் விலை உயர்வு, விவசாயிகள்-விசைத்தறித் தொழிலாளர் பிரச்சினை, அதிமுக இருபது ஆண்டுகாலமாக தொகுதிக்கு எதையுமே செய்யாதது ஆகியவற்றை முன்வைத்து எங்கள் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இத்தொகுதியில் தாமிரபணிர குடிநீர்த்திட்டம், கோர்ட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலத்தில் அமைந்தவைதான். பெண்கள் கல்லூரி அமைப்போம் என்றும் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் திமுக தேர்தல் அலுவலக பொறுப்பாளரும், கட்சியின் சங்கரன்கோவில் ஒன்றியப் பிரதிநிதியுமான கணேசன்.
தோழமைக் கட்சியான காங்கிரஸ் திமுகவுக்கு பிரச்சாரத்தில் நன்கு உதவுகிறது. காங்கிரஸ் சார்பில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலத்தின் முக்கியத் தலைகளை வைத்து பொதுக்கூட்டமும் நடத்தினார்கள். “இடுப்பு வேட்டி அவிழும்போது வேகம் காட்டும் ‘கை’ போல, திமுகவுக்கு ஆபத்து என்றால் ஓடிச்சென்று காப்பாற்றுவோம்” என்று இலக்கியத்தரமாக தங்கள் கூட்டணியின் வலிமையை கூட்டத்தில் வெளிப்படுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால், குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுக பிரச்சார ஆட்டோ, வேன், ஜீப்புகளிலாவது பார்க்கமுடிகிறது. தனித்து நிற்கும் மற்றொரு தேசியக்கட்சியான பாஜகவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. கொடிகட்டி, தொகுதி முழுக்க வாஜ்பாய், அத்வானி புகழ்பாடி வரும் ஜீப்பில் டிரைவரைத் தவிர வேறு யாருமில்லை.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலித் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். ஆனாலும் இக்கட்சிக்கு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை. அதே நேரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு ‘பூஸ்ட்’ அளிக்கிறது. அக்கட்சியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரின் பிரச்சாரம் சாதி ஓட்டுகளை மொத்தமாக அள்ளும் என்று திமுகவினர் நம்புகிறார்கள். அழகிரி-ஸ்டாலின் அதிரடி காம்பினேஷன் தோனி-சச்சின் ஜோடியைப் போல திமுகவை கரைசேர்க்கும் என்பது கட்சியினரின் எதிர்ப்பார்ப்பு.
தேர்தலுக்கு சற்று முன்பாக இஸ்லாமியர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கு ஒரு கோயில் திருவிழா சார்பாக ஏற்பட்ட பிரச்சினையொன்று, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை எதிர்முகாமுக்கு விழச்செய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக தொகுதியில் பேசிக்கொள்கிறார்கள். இதை சரிக்கட்டும் வகையில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் களமிறங்கியிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதியின் இஸ்லாமியர்களிடம் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அம்மா தங்கள் சமூகத்துக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு தெருத்தெருவாக தனது ஆதரவாளர்களோடு வாக்கு கேட்டுச் செல்கிறார். தமிழ்மாநில முஸ்லீம் லீக்கும், “அதிமுகவுக்கு எங்கள் தரப்பில் பண்ணிரெண்டாயிரம் ஓட்டுகள் பெற்றுத் தருவோம்” என்று களமிறங்கியிருக்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் ஆதரவே, அதிமுகவுக்கு பாதிப்பாக போய்விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. “பரமக்குடி கலவரம் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அதன் இரத்தக்கறை கூட காயாத சூழலில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவளித்ததின் மூலம் தனது மரியாதையை தேவேந்திரகுல வேளாள மக்களிடம் இழந்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக, தனது அடிப்படை பலத்தை அடகுவைத்துவிட்டார்” என்றார் சத்ரப்பட்டியில் நாம் சந்தித்த புதிய தமிழகம் தொண்டர் ஒருவர்.
“அப்படியெல்லாம் இல்லை. தேவேந்திரகுல வேளாள மக்கள் டாக்டருக்கு விசுவாசமானவர்கள். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவார்கள். அதிமுக அமோக வெற்றி பெறப்போவது உறுதி” என்றார் ஆவுடையாபுரம் வார்டு கவுன்சிலரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவருமான மாரிக்கனி. ஆனாலும் பரமக்குடி கலவரம் பற்றி பேசும்போது இவரும் தடுமாறுகிறார்.
மறைந்த அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருந்த கருப்பசாமியின் குடும்பத்தாரை ஒருவழியாக சமாதனப்படுத்தியிருக்கிறார்கள் அவர்களை முதல்வரை சந்திக்கவைத்து, அந்தப் போட்டோவை பத்திரிகைகளில் பிரசுரித்திருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியை அடுத்து தொகுதிமுழுக்க சுவர் விளம்பரங்களில் “அம்மாவின் இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இப்படிக்கு கருப்பசாமி குடும்பத்தார்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதுமட்டுமன்றி கருப்பசாமியின் மகன் மாரிச்சாமிக்கு கட்சிப் பொறுப்பு ஒன்றினையும் வழங்கி, அமைச்சரின் சொந்த ஊரான புளியம்பட்டி வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.
பொதுவாக ஆளுங்கட்சி என்பதால் ஜெயித்துவிடலாம் என்று அதிமுக தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதியாக தத்தெடுத்து வாக்குச்சேகரிப்பிலும், ‘மற்ற’ பணிகளிலும் மும்முரமாக இருப்பதால் அதிமுக தரப்பில் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள்.
நாம் தொகுதியில் இருந்த அன்று ஒரு வாகனத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் வந்ததாகவும், அதை செக்போஸ்டில் அமைச்சர் ஒருவர் தகராறு செய்து மீட்டதாகவும் தகவல் பரவிக் கொண்டிருந்தது. கடைசியாக ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மட்டுமே பிடிபட்டதாக ‘கேஸ்’ பதிவு செய்யப்பட்டதாம். எதிர்க்கட்சிகள் இதுமாதிரியான தொடர்ச்சியான புகார்களை பதிவு செய்துக் கொண்டேயிருக்க, அதிரடியாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி.யை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
“பதட்டமுள்ள பூத்களை கண்டறிந்துக் கொண்டிருக்கிறோம். துணை ராணுவம் பாதுகாப்புக்காக வரவிருக்கிறது. பொதுமக்களிடையே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றிருக்கிறது” என்கிறார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தாமோதரன். இரவு பகல் பாராமல் தேர்தல் அலுவலர்கள் தொகுதிமுழுக்க சலிக்காமல் சுற்றி வருகிறார்கள்.
“எங்கள் ஊரில் மட்டுமின்றி, நாடு முழுக்க மின்வெட்டுப் பிரச்சினை இப்படித்தான் இருக்கிறது. கூடங்குளம் அணுவுலை செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் தச்சுத்தொழிலாளி கோவிந்தன்.
“அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போலிஸாரின் அராஜகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. அம்மா இவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்” என்று நம்மிடம் பேசினார் குருவிக்குளத்தில் சந்தித்த பெண் ஒருவர்.
“உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்ததுமே பஸ்-பால் விலை உயர்த்தினார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் ஜெயித்தால் மின்கட்டணம் உயர்த்துவார்” என்று அச்சப்பட்டார் நக்கலமுத்தம்பட்டியில் வசிக்கும் இன்னொரு பெண்.
பொதுவாக கட்சி சார்பற்றவர்கள் என்னிடம் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள். ‘யாருக்கு ஓட்டு?’ என்பது மாதிரியான கேள்வியைத் தவிர்ப்பவர்கள், பிரச்சினைகளைப் பற்றிப்பேச ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தலன்று திடமான தீர்ப்பைத் தர இவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
உதாரணத்துக்கு குருசாமியை சொல்லலாம். திருவேங்கடம் மார்க்கெட்டுக்கு அருகில் செருப்பு தைக்கும் தொழிலாளி இவர். அவரிடம் நடந்த எனது உரையாடல் கீழே :
“எலெக்ஷனெல்லாம் எப்படிண்ணா இருக்கு?”
“எனக்கு அரசியல், கிரசியல் எல்லாம் தெரியாதுப்பா. செருப்பு தைக்க மட்டும்தான் தெரியும்”
“ஓட்டு போடுவீங்க இல்லையா?”
“கண்டிப்பா போடுவேன்”
“யார் ஜெயிப்பாங்க?”
“நான் ஓட்டு போடற ஆளுதான் ஜெயிப்பாங்க. ஜெயிச்சப்புறம் பாரு”
எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :
சங்கரன்கோவிலுக்கும் தன் வண்டியை அலங்கரித்து சூடாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். போலிஸார் இதை அனுமதிக்கவில்லை. “அதிமுகவினர் நம்பர் ப்ளேட் இல்லாம கூட வண்டி ஓட்டுறதை அனுமதிக்கிற காவல்துறை, எதிர்க்கட்சிங்கிறதாலே என்னை அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்று குறைபட்டுக் கொண்டார்.
நமக்காக ஸ்பெஷலாக வண்டியை அலங்கரித்து, ‘போஸ்’ கொடுத்தும் காண்பித்தார்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :
பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளுமே ‘கூடங்குளத்தை கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். “இந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வைத்து எப்படி கூடங்குளத்தை கொண்டுவருவார்கள்?” என்று கழுகுமலையில் பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் லாஜிக்காக, கேட்டதை ஆட்டோவில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் கண்டுகொள்ளவில்லை. கூடங்குளம் பற்றிப்பேச மதிமுக மட்டும் தயங்கிவருவதாக தெரிகிறது.
எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :
’ஓட்டுக்கு துட்டு’ என்பது பிறப்புரிமை என்பதுமாதிரி (குறிப்பாக இடைத்தேர்தல்) வாக்காளர்கள் வாளாவிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கம் இப்போக்குக்கு எதிராக தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்துவருகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த இருபது பேர் இதற்காக களமிறங்கியிருக்கிறார்கள். தேசியக்கொடி ஏந்தியவாறே “உங்கள் வாக்கை விற்காதீர்கள். விற்கப்படும் உங்கள் வாக்கினை இந்த காசுக்கு பத்துமடங்காக, இதனால் ஜெயிப்பவர் பிற்பாடு வசூலிப்பார்” என்று எச்சரிக்கிறார்கள்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :
’பிரஸ்’ என்று சொன்னதுமே பல செக்போஸ்ட்களில் நமது வாகனத்தை எந்த சோதனையுமின்றி, அனுப்பி வைத்தார்கள். நிச்சயமாக அமைச்சர்கள் வாகனத்தை இவர்கள் சோதிக்கப் போவதில்லை என்று தோன்றியது. மாறாக கீழத்திருவேங்கடம் செக்போஸ்டில் முத்துப்பிள்ளை என்கிற அனுபவம் வாய்ந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.யும், சாமிநாதன் என்கிற இளமையான பயிற்சி எஸ்.ஐ.யும் இணைந்து கறாராக கலக்குகிறார்கள். “போக்குவரத்துத்துறை அமைச்சரின் காரையே சோதனைப்போட்ட செக்போஸ்ட் இது” என்று அருகிலிருந்த டீக்கடைக்காரர் பெருமையாக சொன்னார்.
• வண்டி எண், எங்கே போகிறார்கள் போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.
• வண்டி முழுக்க சோதனை செய்கிறார்கள். சோதனையை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
• உற்சாக பானம், பணம் மாதிரி ஏதாவது இருந்தால் கைப்பற்றுகிறார்கள்.
• பணம் அருகிலிருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படுகிறது. தக்க ஆதாரங்களைக் காட்டி வாங்கிக் கொள்ளலாம். அல்லது பணத்துக்கு முறையான காரணம் சொல்ல முடியாதவர்கள் கோர்ட்டுக்குப் போய்தான் தேர்தல் கமிஷனிடம் வாதாடி, தங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும்.
(நன்றி : புதிய தலைமுறை - படங்கள் : க.அறிவழகன்)
சங்கரன் கோவிலில் ஜவஹரைத் திமுக வேட்பாளாராக அறிவித்திருக்கிறது. ஆனால் காந்தியும் களமிறங்கியிருக்கிறார் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் கரன்சியில் சிரிக்கும் காந்தியைச் சொல்லவில்லை.
‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலித்தபடி அந்த வேன் ஆரவாரமின்றி மெதுவாக கிராமங்களுக்குள் நுழைகிறது. தேர்தல் சமயத்தில் காதைக் கிழிக்கும் சத்தமின்றி ஒரு வாகனம் தங்கள் ஊருக்குள் நுழைவதை உலக அதிசயமாக பார்க்கிறார்கள் மக்கள். வேனுக்குள் இருந்து கதராடையில், வெள்ளைக் குல்லா அணிந்த சிலர் அமைதியாக பிட் நோட்டீஸ்களை வினியோகிக்கிறார்கள்.
“நாங்கள்லாம் மகாத்மா காந்தியோட தொண்டர்கள். மறக்காம மெழுகுவர்த்தி சின்னத்துக்கு நீங்க ஓட்டு போடணும்”
சொல்லிவிட்டு பிட்நோட்டீஸ் கொடுத்தவரை நிமிர்ந்துப் பார்க்கிறார் அந்த கடைக்காரர். நோட்டீஸில் அச்சடிக்கப்பட்டிருக்கும் வேட்பாளரேதான் நோட்டீஸ் கொடுத்தவரும். கடைக்காரருக்கு ஆச்சரியம். இவ்வளவு எளிமையான வேட்பாளரை இதுவரை அவர் கண்டதில்லை.
அந்த வேட்பாளர் பெயர் ஆறுமுகம். டி.ஆர்.ஓ.வாக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் அவருக்கு வயது எழுபத்து ஒன்பது. தன்னை காந்திய பண்பாளராக மக்களிடம் அறிமுகம் செய்துக் கொள்கிறார். “பூரண மதுவிலக்கே எங்கள் நோக்கம்” என்கிற இவர்களது பிரச்சாரத்துக்கு பெண்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால், இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம். சங்கரன்கோவிலின் பெரும்பாலான வாக்காளர்கள் ஏதோ ஒரு அடிப்படையில், ஏதோ ஒரு கட்சியுடன் உணர்வுபூர்வமாக பிணைந்திருக்கிறார்கள்.
சரி, கட்சிகள் களத்தில் காட்டும் காட்சிகள் என்ன?
கடந்த வாரம் வரை களைகட்டாமல் டல் அடித்துக் கொண்டிருந்த சங்கரன் கோவிலை இந்த வாரம், இன்னொரு திருமங்கலமாக மாற்ற நமது அரசியல் கட்சிகள் முனைந்திருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக பிரச்சார வாகனங்கள் ஆரவாரத்தோடு தொகுதி முழுக்க வலம் வந்தவாறு இருக்கின்றன. சரத்குமார், குஷ்பு, செந்தில் என்று சினிமா நட்சத்திரங்களைக் காண மக்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.
தேதிமுக
விஸ்வரூபம் எடுக்க முயற்சிக்கிறது தேதிமுக. மாநிலம் முழுவதிலிருந்தும் கட்சியின் நிர்வாகிகள் மொத்தமாக சங்கரன்கோவிலில் குவிந்திருக்கிறார்கள். திமுக, அதிமுக, மதிமுக கட்சிகளின் கரைவேட்டிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தேமுதிக கரைவேட்டிகளை தொகுதி முழுக்க காண முடிகிறது.தொகுதியில் தேமுதிகவின் தேர்தல் அலுவலகமே இல்லாத கிராமமில்லை என்ற நிலையை ஒரே வாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர் தேமுதிகவின் சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்.பி. ஆஸ்டின்.
“எங்களது பிரச்சாரத்தை காவல்துறையினரைக் கொண்டு ஆளுங்கட்சியினர் தடை செய்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இத்தேர்தலில் அமைதிப்புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்கள். இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர் வெல்லுவார்” என்று உற்சாகமாக நம்மிடம் பேசினார் ஆஸ்டின்.
சங்கரநாராயண சாமி கோயிலுக்குச் சென்று வணங்கி, தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “சட்டசபையில் மக்களுக்காக பேசக்கூடாது என்கிறார்கள். இங்கே அதிமுக வென்றால் அவர்களின் ஆணவத்தை அழிக்க முடியாது. கவர்ச்சித் திட்டங்களுக்காக வளர்ச்சித் திட்டங்களை இழக்காதீர்கள். எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
மதிமுக
சங்கரன்கோவில் தேர்தலில் ஈழப்பிரச்சினையை முன்வைத்துப் பேசும் ஒரே கட்சியாக மதிமுக மட்டுமே இருக்கிறது. “பம்பரம் வென்றால் மகிழப்போவது நீங்களோ, நானோ, வைகோவோ அல்ல. வேலூர் சிறையில் மரணத் தண்டனைக்காக காத்திருக்கும் முருகன், பேரறிவாளன் சாந்தனும். ஈழத்து முகாம்களிலே அடைபட்டிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளும்” என்று முழங்குகிறார் நாஞ்சில் சம்பத்.முப்பிடாதி அம்மன் கோயில் திடலிலே நாஞ்சில் இவ்வாறாக முழங்கிக் கொண்டிருக்கும்போது, அருகிலிருக்கும் பேருந்து நிலையத்துக்கு குஷ்புவின் பிரச்சார வேன் வந்தது. “இந்த ஆட்சி பொறுப்பேற்றதுமே அண்டை மாநிலங்களை சேர்ந்த கொலை, கொள்ளைக்கார கும்பல் இங்கே தஞ்சம் புகுந்துவிட்டது. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது” என்று குரலுயர்த்தினார். இவரது ஒலி குறுக்கிட்டதுமே மதிமுக பொதுக்கூட்டத்தில் இருந்த மக்கள் குஷ்புவைக் காண வேகமாக பேருந்து நிலையத்துக்கு விரைந்தார்கள். மதிமுகவினர் டென்ஷனாகி வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கிளம்ப, குஷ்புவின் பிரச்சார வாகனம் பாதியிலேயே கிளம்பியது. திமுகவினர் பதிலுக்கு எகிற, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் தேர்தல் பார்வையாளர்கள்.
மதிமுக பொதுச்செயலர் வைகோவின் பிரச்சாரம் உருக்கமானதாக இருக்கிறது. தெருத்தெருவாக நடந்துச்சென்றே வாக்கு கேட்கிறார். எதிர்ப்படும் வாக்காளர்களின் பெயர் சொல்லி அழைக்கிறார். “அப்பா நல்லாயிருக்காரா?” என்று பெயர் குறிப்பிட்டுப் பேசும்போது, அவரது நினைவாற்றலை மெச்சி வாக்காளர்கள் சிலிர்க்கின்றனர். “ரொம்ப வருஷமா, சென்னையிலேயே தங்கியிருந்தாலும் எங்க ஊரையும், ஊர்க்காரர்களையும் வைகோ மறக்கலை” என்றார் பஜார் வீதியில் பேன்சி கடைக்காரர் ஒருவர். “என்னுடைய சொந்தத் தொகுதி இது. இந்தத் தொகுதியிலாவது மதிமுகவுக்கு இந்த ஒரே ஒரு வாய்ப்பினை தாருங்கள்” என்பதுதான் வைகோ பிரச்சாரத்தின் அடிநாதம். “மண்ணின் மைந்தர் வைகோ என்பதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது. திருமங்கலம் பாணியை வைகோ உடைப்பார்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மதிமுகவின் சங்கரன்கோவில் தேர்தல் பொறுப்பாளரும், நெல்லை மாவட்டச் செயலாளருமான சரவணன்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியின் ஊராட்சியை தொடர்ச்சியாக வைகோவின் குடும்பத்தினரே கைப்பற்றி வருகிறார்கள். எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஒரு மாதிரி கிராமமாக கலிங்கப்பட்டி திகழ்கிறது
ஆனாலும் கலிங்கப்பட்டியிலேயே வைகோவுக்கு எதிர்ப்பும் உண்டு. அவரது இல்லத்திற்கு எதிரேயே திமுகவின் தேர்தல் அலுவலகம் அமைந்திருக்கிறது. வைகோ சாடையிலேயே ஒரு இளைஞரை அங்கு கண்டேன். “அவரு என்னோட மாமாதாங்க. ஆனாலும் வேற வேற கட்சி. திமுகவை இங்கேயே ஜெயிக்க வைப்போம்” என்றார்.
“வைகோ நல்லவருதான். இல்லைன்னு சொல்லலை. ஆனாலும் எங்க சாதிக்காரங்களுக்கு அவங்க கிட்டே போதுமான நியாயம் கிடைக்கலை” என்று ஊர்க்காரர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார். இவர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சார்ந்தவர். “மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கு. சங்கரன்கோவிலில் பம்பரம்தான் சுத்தப் போவுது” என்றார் கலிங்கப்பட்டியின் சாமிதாஸ். இவர் கட்சி சார்பற்றவர். கலிங்கப்பட்டியில் பர்னிச்சர் ஏஜென்ஸி நடத்தும் ஆர்.சைலப்பன் கடுமையான போட்டி என்று ஒப்புக் கொள்கிறார்.
திமுக
திமுக முகாம் தேர்தல் கமிஷன் மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடந்துக் கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். “நேர்மையாக தேர்தல் நடந்தால் திமுகதான் வெல்லும். இவர்கள் நேர்மையாக தேர்தல் நடத்த விரும்புவதாக தெரியவில்லை” என்கிறார் கராத்தே முத்து என்கிற திமுக தொண்டர். வெளிமாவட்டங்களில் இருந்து பிரச்சாரத்துக்கு வரும் தங்களைப் போன்றவர்களிடம் ஏகத்துக்கும் கெடுபிடி காட்டும் போலிஸ், அதிமுகவினரை கண்டுகொள்வதில்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்.“மின்வெட்டு, பால்-பஸ் விலை உயர்வு, விவசாயிகள்-விசைத்தறித் தொழிலாளர் பிரச்சினை, அதிமுக இருபது ஆண்டுகாலமாக தொகுதிக்கு எதையுமே செய்யாதது ஆகியவற்றை முன்வைத்து எங்கள் பிரச்சாரம் அமைந்திருக்கிறது. இத்தொகுதியில் தாமிரபணிர குடிநீர்த்திட்டம், கோர்ட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலத்தில் அமைந்தவைதான். பெண்கள் கல்லூரி அமைப்போம் என்றும் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் திமுக தேர்தல் அலுவலக பொறுப்பாளரும், கட்சியின் சங்கரன்கோவில் ஒன்றியப் பிரதிநிதியுமான கணேசன்.
தோழமைக் கட்சியான காங்கிரஸ் திமுகவுக்கு பிரச்சாரத்தில் நன்கு உதவுகிறது. காங்கிரஸ் சார்பில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநிலத்தின் முக்கியத் தலைகளை வைத்து பொதுக்கூட்டமும் நடத்தினார்கள். “இடுப்பு வேட்டி அவிழும்போது வேகம் காட்டும் ‘கை’ போல, திமுகவுக்கு ஆபத்து என்றால் ஓடிச்சென்று காப்பாற்றுவோம்” என்று இலக்கியத்தரமாக தங்கள் கூட்டணியின் வலிமையை கூட்டத்தில் வெளிப்படுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால், குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை திமுக பிரச்சார ஆட்டோ, வேன், ஜீப்புகளிலாவது பார்க்கமுடிகிறது. தனித்து நிற்கும் மற்றொரு தேசியக்கட்சியான பாஜகவின் நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. கொடிகட்டி, தொகுதி முழுக்க வாஜ்பாய், அத்வானி புகழ்பாடி வரும் ஜீப்பில் டிரைவரைத் தவிர வேறு யாருமில்லை.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலித் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். ஆனாலும் இக்கட்சிக்கு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியான செல்வாக்கு இல்லை. அதே நேரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு திமுகவுக்கு ‘பூஸ்ட்’ அளிக்கிறது. அக்கட்சியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரின் பிரச்சாரம் சாதி ஓட்டுகளை மொத்தமாக அள்ளும் என்று திமுகவினர் நம்புகிறார்கள். அழகிரி-ஸ்டாலின் அதிரடி காம்பினேஷன் தோனி-சச்சின் ஜோடியைப் போல திமுகவை கரைசேர்க்கும் என்பது கட்சியினரின் எதிர்ப்பார்ப்பு.
அதிமுக
கட்சியின் மொத்த படைபலத்தையும் களத்தில் இறக்கியிருக்கிறார் முதல்வர். தொடர்ச்சியாக அதிமுகவையே சங்கரன்கோவில் மக்கள் தேர்ந்தெடுத்தாலும், இம்முறை மின்வெட்டுப் பிரச்சினை தங்களுக்கு ‘ஷாக்’ கொடுத்துவிடுமோவென்று அவர்களுக்கு அச்சமிருக்கிறது.தேர்தலுக்கு சற்று முன்பாக இஸ்லாமியர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கு ஒரு கோயில் திருவிழா சார்பாக ஏற்பட்ட பிரச்சினையொன்று, இஸ்லாமியர்களின் ஓட்டுகளை எதிர்முகாமுக்கு விழச்செய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக தொகுதியில் பேசிக்கொள்கிறார்கள். இதை சரிக்கட்டும் வகையில் முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் களமிறங்கியிருக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதியின் இஸ்லாமியர்களிடம் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், அம்மா தங்கள் சமூகத்துக்கு செய்த நன்மைகளை பட்டியலிட்டு தெருத்தெருவாக தனது ஆதரவாளர்களோடு வாக்கு கேட்டுச் செல்கிறார். தமிழ்மாநில முஸ்லீம் லீக்கும், “அதிமுகவுக்கு எங்கள் தரப்பில் பண்ணிரெண்டாயிரம் ஓட்டுகள் பெற்றுத் தருவோம்” என்று களமிறங்கியிருக்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் ஆதரவே, அதிமுகவுக்கு பாதிப்பாக போய்விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. “பரமக்குடி கலவரம் இப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அதன் இரத்தக்கறை கூட காயாத சூழலில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவளித்ததின் மூலம் தனது மரியாதையை தேவேந்திரகுல வேளாள மக்களிடம் இழந்திருக்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக, தனது அடிப்படை பலத்தை அடகுவைத்துவிட்டார்” என்றார் சத்ரப்பட்டியில் நாம் சந்தித்த புதிய தமிழகம் தொண்டர் ஒருவர்.
“அப்படியெல்லாம் இல்லை. தேவேந்திரகுல வேளாள மக்கள் டாக்டருக்கு விசுவாசமானவர்கள். அவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவார்கள். அதிமுக அமோக வெற்றி பெறப்போவது உறுதி” என்றார் ஆவுடையாபுரம் வார்டு கவுன்சிலரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவருமான மாரிக்கனி. ஆனாலும் பரமக்குடி கலவரம் பற்றி பேசும்போது இவரும் தடுமாறுகிறார்.
மறைந்த அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமாக இருந்த கருப்பசாமியின் குடும்பத்தாரை ஒருவழியாக சமாதனப்படுத்தியிருக்கிறார்கள் அவர்களை முதல்வரை சந்திக்கவைத்து, அந்தப் போட்டோவை பத்திரிகைகளில் பிரசுரித்திருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். இந்நிகழ்ச்சியை அடுத்து தொகுதிமுழுக்க சுவர் விளம்பரங்களில் “அம்மாவின் இரட்டை இலைக்கு வாக்களிப்போம். இப்படிக்கு கருப்பசாமி குடும்பத்தார்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள். இதுமட்டுமன்றி கருப்பசாமியின் மகன் மாரிச்சாமிக்கு கட்சிப் பொறுப்பு ஒன்றினையும் வழங்கி, அமைச்சரின் சொந்த ஊரான புளியம்பட்டி வாசிகளை குஷிப்படுத்தியிருக்கிறார்கள்.
பொதுவாக ஆளுங்கட்சி என்பதால் ஜெயித்துவிடலாம் என்று அதிமுக தொண்டர்கள் கொஞ்சம் தெம்பாகவே இருக்கிறார்கள். முப்பத்தி இரண்டு அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதியாக தத்தெடுத்து வாக்குச்சேகரிப்பிலும், ‘மற்ற’ பணிகளிலும் மும்முரமாக இருப்பதால் அதிமுக தரப்பில் உற்சாகமாகவே செயல்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையம்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் சூழலில் ‘ரெட்டை எலைக்கு ஐநூறு, உதயசூரியனுக்கு இருநூறு’ என்கிற கட்டண விகிதம் தொகுதி முழுக்க பரவலாக மக்களிடம் பரபரப்பாக பரிமாறிக்கொள்ளப் படுகிறது. “ஓட்டு போட பணம் வாங்கினால் கைது” என்று போலிஸார் தெருத்தெருவாக சென்று எச்சரித்தாலும், மக்கள் சட்டை செய்வதாக தெரியவில்லை.நாம் தொகுதியில் இருந்த அன்று ஒரு வாகனத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் வந்ததாகவும், அதை செக்போஸ்டில் அமைச்சர் ஒருவர் தகராறு செய்து மீட்டதாகவும் தகவல் பரவிக் கொண்டிருந்தது. கடைசியாக ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மட்டுமே பிடிபட்டதாக ‘கேஸ்’ பதிவு செய்யப்பட்டதாம். எதிர்க்கட்சிகள் இதுமாதிரியான தொடர்ச்சியான புகார்களை பதிவு செய்துக் கொண்டேயிருக்க, அதிரடியாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி.யை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
“பதட்டமுள்ள பூத்களை கண்டறிந்துக் கொண்டிருக்கிறோம். துணை ராணுவம் பாதுகாப்புக்காக வரவிருக்கிறது. பொதுமக்களிடையே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் பாராட்டைப் பெற்றிருக்கிறது” என்கிறார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தாமோதரன். இரவு பகல் பாராமல் தேர்தல் அலுவலர்கள் தொகுதிமுழுக்க சலிக்காமல் சுற்றி வருகிறார்கள்.
மக்கள்
“இந்த வாரம் மட்டும் பெரியதாக மின்வெட்டு இல்லாதது மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ‘பழைய குருடி, கதவைத் திறடி’ கதையாகதான் இருக்கும்” என்று சலித்துக் கொள்கிறார் சக்திவேல் என்கிற விசைத்தொழிலாளி. முன்பெல்லாம் ஒரு நாளுக்கு ஐந்து சேலைகளாவது நெய்ந்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு இன்று ஒரு சேலை நெய்யவே தாவூ தீருகிறது.“எங்கள் ஊரில் மட்டுமின்றி, நாடு முழுக்க மின்வெட்டுப் பிரச்சினை இப்படித்தான் இருக்கிறது. கூடங்குளம் அணுவுலை செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் தச்சுத்தொழிலாளி கோவிந்தன்.
“அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் போலிஸாரின் அராஜகம் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. அம்மா இவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்” என்று நம்மிடம் பேசினார் குருவிக்குளத்தில் சந்தித்த பெண் ஒருவர்.
“உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்ததுமே பஸ்-பால் விலை உயர்த்தினார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் ஜெயித்தால் மின்கட்டணம் உயர்த்துவார்” என்று அச்சப்பட்டார் நக்கலமுத்தம்பட்டியில் வசிக்கும் இன்னொரு பெண்.
பொதுவாக கட்சி சார்பற்றவர்கள் என்னிடம் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள். ‘யாருக்கு ஓட்டு?’ என்பது மாதிரியான கேள்வியைத் தவிர்ப்பவர்கள், பிரச்சினைகளைப் பற்றிப்பேச ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தலன்று திடமான தீர்ப்பைத் தர இவர்கள் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
உதாரணத்துக்கு குருசாமியை சொல்லலாம். திருவேங்கடம் மார்க்கெட்டுக்கு அருகில் செருப்பு தைக்கும் தொழிலாளி இவர். அவரிடம் நடந்த எனது உரையாடல் கீழே :
“எலெக்ஷனெல்லாம் எப்படிண்ணா இருக்கு?”
“எனக்கு அரசியல், கிரசியல் எல்லாம் தெரியாதுப்பா. செருப்பு தைக்க மட்டும்தான் தெரியும்”
“ஓட்டு போடுவீங்க இல்லையா?”
“கண்டிப்பா போடுவேன்”
“யார் ஜெயிப்பாங்க?”
“நான் ஓட்டு போடற ஆளுதான் ஜெயிப்பாங்க. ஜெயிச்சப்புறம் பாரு”
எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :
அலங்கரிக்க முடியலையே?
‘பந்தா’ பாலு ஏக்கம்!
அறந்தாங்கியைச் சேர்ந்த திமுக தொண்டர் ‘பந்தா’ பாலச்சந்தர் எந்த தேர்தல் நடந்தாலும், தன்னுடைய டிவிஎஸ் வண்டியை கருப்பு சிவப்பு கொடிகளால் கோலாகலமாக அலங்கரித்து கம்பீரமாக வலம் வருவார். திமுக மாநாடுகளிலும் தன்னுடைய அலங்கார டூவீலரால் தலைவர்களையும் கவருபவர் இவர். இவரது அலங்காரங்களால் அசந்துப்போன கட்சியே இவருக்கு புது வண்டி வாங்கித் தந்தது.சங்கரன்கோவிலுக்கும் தன் வண்டியை அலங்கரித்து சூடாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். போலிஸார் இதை அனுமதிக்கவில்லை. “அதிமுகவினர் நம்பர் ப்ளேட் இல்லாம கூட வண்டி ஓட்டுறதை அனுமதிக்கிற காவல்துறை, எதிர்க்கட்சிங்கிறதாலே என்னை அனுமதிக்க மாட்டேங்கிறாங்க” என்று குறைபட்டுக் கொண்டார்.
நமக்காக ஸ்பெஷலாக வண்டியை அலங்கரித்து, ‘போஸ்’ கொடுத்தும் காண்பித்தார்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :
கூடங்குளம் கட்டாயம்
பிரச்சாரத்தில் எல்லாக் கட்சிகளுமே ‘கூடங்குளத்தை கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். “இந்த ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வைத்து எப்படி கூடங்குளத்தை கொண்டுவருவார்கள்?” என்று கழுகுமலையில் பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் லாஜிக்காக, கேட்டதை ஆட்டோவில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் கண்டுகொள்ளவில்லை. கூடங்குளம் பற்றிப்பேச மதிமுக மட்டும் தயங்கிவருவதாக தெரிகிறது.
எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :
வாக்கை விற்காதீர்கள்!
’ஓட்டுக்கு துட்டு’ என்பது பிறப்புரிமை என்பதுமாதிரி (குறிப்பாக இடைத்தேர்தல்) வாக்காளர்கள் வாளாவிருக்க, ஊழல் எதிர்ப்பு இயக்கம் இப்போக்குக்கு எதிராக தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்துவருகிறது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த இருபது பேர் இதற்காக களமிறங்கியிருக்கிறார்கள். தேசியக்கொடி ஏந்தியவாறே “உங்கள் வாக்கை விற்காதீர்கள். விற்கப்படும் உங்கள் வாக்கினை இந்த காசுக்கு பத்துமடங்காக, இதனால் ஜெயிப்பவர் பிற்பாடு வசூலிப்பார்” என்று எச்சரிக்கிறார்கள்.
எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :
எப்படி சோதிக்கிறார்கள்?
’பிரஸ்’ என்று சொன்னதுமே பல செக்போஸ்ட்களில் நமது வாகனத்தை எந்த சோதனையுமின்றி, அனுப்பி வைத்தார்கள். நிச்சயமாக அமைச்சர்கள் வாகனத்தை இவர்கள் சோதிக்கப் போவதில்லை என்று தோன்றியது. மாறாக கீழத்திருவேங்கடம் செக்போஸ்டில் முத்துப்பிள்ளை என்கிற அனுபவம் வாய்ந்த ஸ்பெஷல் எஸ்.ஐ.யும், சாமிநாதன் என்கிற இளமையான பயிற்சி எஸ்.ஐ.யும் இணைந்து கறாராக கலக்குகிறார்கள். “போக்குவரத்துத்துறை அமைச்சரின் காரையே சோதனைப்போட்ட செக்போஸ்ட் இது” என்று அருகிலிருந்த டீக்கடைக்காரர் பெருமையாக சொன்னார்.
• வண்டி எண், எங்கே போகிறார்கள் போன்ற விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறார்கள்.
• வண்டி முழுக்க சோதனை செய்கிறார்கள். சோதனையை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
• உற்சாக பானம், பணம் மாதிரி ஏதாவது இருந்தால் கைப்பற்றுகிறார்கள்.
• பணம் அருகிலிருக்கும் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படுகிறது. தக்க ஆதாரங்களைக் காட்டி வாங்கிக் கொள்ளலாம். அல்லது பணத்துக்கு முறையான காரணம் சொல்ல முடியாதவர்கள் கோர்ட்டுக்குப் போய்தான் தேர்தல் கமிஷனிடம் வாதாடி, தங்கள் பணத்தை திரும்பப் பெற முடியும்.
(நன்றி : புதிய தலைமுறை - படங்கள் : க.அறிவழகன்)
14 மார்ச், 2012
வீரவணக்கம்
அந்த கொடுநாள் நன்றாக நினைவிருக்கிறது.
தலை பிளக்கப்பட்ட உடல் என்.டி.டி.வி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட, இது உண்மையாக இருக்கக்கூடாதே என்கிற பதட்டம் விரல் நடுங்கவைத்து, மனசமநிலை குலைந்து, இறுதியில் அழுகைக்கு கொண்டு சென்றது. பயமறியாத அந்த கண்கள், அடர்த்தியான மீசை.. இது அவரேதான் என்று மூளை அறிவுறுத்தினாலும், மனசு நம்ப மறுத்தது.
ஆறுதலாக சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார் என்று அறிக்கை விட்டார்கள். ஒரு பத்திரிகை ஒருபடி மேலே போய் அந்த வீடியோவை அவரே எங்கோ அமர்ந்து டிவியில் பார்ப்பதைப்போல ‘கிராபிக்ஸ்’ செய்து வெளியிட்டது. அவருக்கெல்லாம் சாவு வராது என்று உடனடியாக பகுத்தறிவை மறுத்து, உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்த வீடியோவை மறந்தேன். அவரது மாவீரர் நாள் உரைக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
தொடர்ச்சியாக தமிழக மேடைகளில் சில தலைவர்கள் அவர் உயிரோடிருக்கிறார், தக்க சமயத்தில் வெளிவருவார் என்று ஆணித்தரமாக பேசியதைக் கேட்டு ஆறுதலடைந்தேன். ஒருவேளை அவரேகூட இவர்களை தொடர்புகொண்டு பேசியிருக்கலாம் என்றும் குருட்டுத்தனமாக நம்பினேன்.
தொடர்ச்சியாக மூன்று மாவீரர் தினங்களாக அவரது உரை வெளிவரவில்லை. அவர் உயிரோடு இருக்கிறார் என்று நெஞ்சத்தின் மூலையில் எங்கோ பதுங்கிக்கிடந்த நம்பிக்கை இன்று சற்றுமில்லை.
முப்பதாண்டுகளாக உலகையே எதிர்த்துப் போராடிய மாவீரம் அவரைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஈழப்போராட்டத்தின் ஒவ்வொரு தியாகிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி கவுரவித்த அந்த மாவீரனுக்கு தமிழர்கள் வீரவணக்கம் செலுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தியவர்கள் யார், யாரெல்லாம் என்று ஒவ்வொருவராக இன்று நினைவுகோர வேண்டியது அவசியமாக இருக்கிறது. அவ்வப்போது இதையெல்லாம் எழுதவோ, பேசவோ நினைத்தாலும் ஏதோ ஒரு தயக்கம் இருந்துக் கொண்டேயிருக்கிறது. இன்று காலை இணையத்தளம் ஒன்றில் அந்த வீடியோக் காட்சியை கண்டபிறகும் பேசாமல் இருக்கமுடியவில்லை.
அவரை கோடாலியால் வெட்டிக் கொன்றவர்கள் சிங்களச் சிப்பாய்களாக இருக்கலாம். அவர்கள் வெறும் ஆயுதம். ஏவியது ஒட்டுமொத்த உலகம். குறிப்பாக என் தேசம். நான் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இனத்துரோகிகள். புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை தந்த உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள்.
கடந்த ஆண்டு வெளியான நார்வே அறிக்கை மிகச்சரியாகவே அனைத்தையும், அனைவரையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
• 2004ல் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.
• புலிகளுக்கு ஆதரவான போக்கு நார்வேக்கு இருப்பதாக தனிப்பட்ட சந்திப்புகளில் இந்தியா கடிந்துக் கொண்டிருக்கிறது. மேலும் புலிகளை ஒடுக்குவதற்கான இந்திய தரப்பு ‘நியாயங்களை’ திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறது.
• ராடார் வழங்கியதோடு மட்டுமின்றி, உளவுத் தகவல்களையும் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு அளித்து உதவியது. ஆபத்தான ராணுவ ஆயுதங்களை இந்தியா, இலங்கைக்கு அளிக்காவிட்டாலும், இலங்கை அவற்றை வேறு நாடுகளிடம் வாங்கியதை எப்போதுமே ஆட்சேபிக்கவில்லை.
• 2008 இறுதியில் இராணுவத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கக்கோரி பல்வேறு தரப்புகள் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், இந்திய அரசு புலிகளைத் தோற்கடிக்கும் சிங்கள இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவினைத் தொடர்ந்தது.
• இந்திய கேபினட் அமைச்சர் பி.சிதம்பரம், புலிகளின் தலைவர் பிரபாகரனை போர் நிறுத்தத்துக்காக தொடர்புகொண்டு ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தார். இந்த ஒப்பந்தத்தின் முன்வரைவில் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க வேண்டும் என்கிற அம்சம் முக்கியமானதாக இருந்தது.
• ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி அதிகாரப்பூர்வமற்ற முறையில் சிலருக்கு வெளியானது. உடனடியாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததோடு, இது காங்கிரஸின் தந்திரம். பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்லப் போகிறது. புலிகள் காப்பாற்றப்படுவார்கள் என்கிற செய்தியினை புலிகளுக்கு முன்வைத்தார். இது நடைபெறவில்லை. கடைசியாக தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
ஈழப்போராட்டத்து மாவீரன் பிரபாகரன் கொல்லப்பட்டதில் இந்தியாவின் வஞ்சகம் வெளிப்படையானது. அதே நேரம் ஆதரவு சக்திகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கும் இந்த பச்சைப் படுகொலையில் கணிசமான பங்கிருக்கிறது. பிரபாகரனின் மறைவு உறுதிப்படுத்தப்பட்ட பிறகும், அவர் உயிரோடு இருக்கிறார் என்கிற தகவலை திரும்பத் திரும்பச் சொல்லுவதின் பின்னிருக்கும் ஆதாயம் என்ன என்பதை யூகிப்பதில் பெரிய சிரமமில்லை. புலிகளால் கடந்த காலத்தில் வசூலிக்கப்பட்டு, கடைசிக் காலத்தில் அவர்களுக்கு உதவாத பலநூறு கோடிக்கணக்கான பணம் யார், யாரிடம் இருக்கிறது. யார் யாருக்கு, எது எதற்கு இன்று செலவளிக்கப்படுகிறது என்கிற உண்மைகளும் எதிர்காலத்தில் வெளிவரத்தான் போகிறது.
போர் நடந்துக்கொண்டே இருந்தால் யாருக்கெல்லாம் என்ன லாபம் இருந்திருக்க முடியும் என்பதை நாம் திறந்தமனதோடு யோசித்துப் பார்க்க வேண்டும். 2001 செப்டம்பர் 11-ஐ அடுத்து உலகநாடுகளிடையே, ‘போராட்டம், புரட்சி’ குறித்து மாறிவந்த மனோபாவம் எவ்வகையிலும் புலிகளால் உணரப்பட்டதில்லை. அவர்களை உசுப்பேத்தி, ஆயுதமேந்த வைத்து அரசியல் செய்தவர்களும், ஆதாயம் பெற்றவர்களும் உணர்ந்திருந்தாலும், அதை புலிகளுக்கு நேர்மையாக உணர்த்தவும் அவர்களுக்கு வக்கில்லை.
இலங்கையின் போர்க்குற்றத்துக்கு சாட்சியாக சேனல்-4 அடுத்தடுத்து பிரபாகரனின் மகன் இறந்த வீடியோ காட்சிகளையும், பிரபாகரனின் இறப்பு குறித்த வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது. பிரபாகரன் உயிரோடிருக்கிறார் என்றுகூறி அரசியல் செய்துவருபவர்கள் இந்த சாட்சியங்களை மறுக்கப் போகிறார்களா? பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று ஐ.நா. படியேறி வாதாடப் போகிறார்களா?
துரோகிகள் என்று யாரையேனும் சுட்டிக் காட்டி தூற்றவும், விசுவாசிகள் என்று மார்தட்டிக் கொள்ளவும் யாருக்கும் இனி யோக்கியதையில்லை. எல்லோரைப் போல நானும் துரோகிதான் என்றபோதிலும் குற்றவுணர்ச்சியோடு இப்போதாவது என் வீரவணக்கத்தை அம்மாவீரனுக்கு செலுத்திக் கொள்கிறேன்.
‘இந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் துரோகிகளே, சுயநலமிகளே’ என்றுதான் வரலாறு எதிர்காலத்தில் தனது குறிப்பினில் இந்த காலக்கட்டத்தை பதிவு செய்துக்கொள்ளப் போகிறது.
7 மார்ச், 2012
ஹெல்மெட்
நான் ஹெல்மெட் அணிய விரும்பாததற்கு காரணங்கள் பின்வருமாறு :
1. பைக் ஓட்டப் பழகும்போது ரிவர்வ்யூ மிர்ரர் பார்த்து ஓட்டி பழகவில்லை. திருப்பங்களில் தலையை திருப்பிப் பார்த்தே பழகிவிட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையை திருப்புவது கடினமாக இருக்கிறது. வேட்டியே அணிந்துப் பழகியவன் திடீரென ஜீன்ஸ் அணியும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கு ஒப்பானது இது.
2. பயணத்தின்போது ’ஜில்’லென்று காற்று முகத்தில் அறைவதில்லை. தலைமுடி ஸ்டைலாக பறப்பதில்லை. ஃபேஸ்கட் பர்சனாலிட்டி வெளிப்படையாக தெரிவதில்லையென்பதால், நம்மை அடையாளங்கண்டு சகப்பயணிகளான டூவீலர் ஃபிகர்கள் சைட் அடிப்பதில் இடையூறு ஏற்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் ஹெல்மெட் கட்டாயமாக்கியபோது, கலைஞரை சபித்துக்கொண்டே வாங்கினேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஹெல்மெட் அணிந்து ஓட்டியபோது இரண்டு, மூன்று முறை ஏடாகூடமாக பிரேக் அடித்து, பின்னால் வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானது. கொடுமை என்னவென்றால், ஒருமுறை சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோதுகூட பின்னால் வந்த ஸ்கூட்டி சீமாட்டியொருவர் கண்ட்ரோல் இல்லாமல், பத்தடி முன்பிருந்தே வருமுன் மன்னிப்பாக ‘சாரீ... சாரீ...’ என்று கத்திக்கொண்டே வந்து இடித்தார். ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது. நமக்கு ராசியில்லை. ஹெல்மெட்டால் எனக்கு பாதுகாப்பு ஏதுமில்லை. ஆபத்துதான் அதிகமென்று தூக்கியெறிந்தேன்.
இப்போது மீண்டும் ஹெல்மெட் பிரச்சினை. ஐயாயிரம் ரூபாய் வரை அபராதமென்று அச்சுறுத்துகிறார்கள்.
இவ்வளவு நாட்களாக வெறும் தலையோடு வண்டியோட்டி சமாளிக்க ‘பிரஸ்’ அந்தஸ்தை பயன்படுத்திக் கொண்டிருந்தேன். வண்டியிலேயே ‘ஸ்டிக்கர்’ ஒட்டியிருப்பதால், காவலர்கள் பொதுவாக வண்டியை மடக்குவதில்லை. அப்படியே மடக்கிவிட்டால் கழுத்தில் தாலி மாதிரி தொங்கிக் கொண்டிருக்கும் அடையாள அட்டையை பார்த்துவிட்டு, “எல்லா நல்லது, கெட்டதையும் எழுதற நீங்களே இப்படி பண்ணலாமா சார்?” என்று கொஞ்சிவிட்டு, அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் ரெண்டு, மூன்று வாரங்களாகவே ‘பிரஸ்’ என்றால் தேடித்தேடி வேட்டையாடுகிறார்கள். காரணம் சக ‘பிரஸ்’ஸான தினகரன். அப்பத்திரிகையின் போட்டோகிராஃபர் காமிராவையும், கையையும் வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், போனமாதம் ஒரு போட்டோவை எடுத்திருந்தார். ஒரு சார்ஜெண்ட் தொப்பியோடு பைக்கில் போவதைப் போல. அதற்கு போட்டோ கேப்ஷன் எழுதியிருந்த உதவி ஆசிரியரோ ‘ஊரையே ஹெல்மெட் போடச்சொல்லி, போடாதவர்களிடம் கப்பம் வாங்கும் போலிஸ் இப்படி தொப்பியோடு போகலாமா?’ என்று அறச்சீற்றத்தோடு குமுறியிருந்தார். கமிஷனர் போட்டோவைப் பார்த்துவிட்டு ஏறு, ஏறுவென்று ஏறியிருப்பார் போல. இப்போது ஊரிலிருக்கும் எல்லா போலிஸ்காரர்களும் சைக்கிளில் போனாலும்கூட ஹெல்மெட்டோடு போகிறார்கள். இந்த அவலநிலைக்கு காரணம் ஒரு ‘பிரஸ்’ என்பதால், ஊரிலிருக்கும் எல்லா ‘பிரஸ்’காரர்களையும் மன்மதன் சிம்பு மாதிரி தேடித்தேடி காண்டு கொண்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.
நேற்று மாலை தி.நகரில் மாட்டினோம். ‘பிரஸ்’ ஸ்டிக்கர் இல்லாத வண்டிகளை கண்டுக்கொள்ளாத சார்ஜண்ட், எங்களைப் பார்த்ததுமே வடமாநில கொள்ளையர்களை என்கவுண்டரில் போடும் வேகத்தோடு பாய்ந்துவந்து நிறுத்தினார்.
“லைசென்ஸ் காமிங்க”
காமித்தோம்.
“இன்சூரன்ஸ்?”
காமித்தோம்.
“ஹெல்மெட்?”
“இனிமேதான் சார் வாங்கணும்” என் நாக்கில் சனி.
அவர் விறுவிறுவென்று ஆகி, கன்னாபின்னவென்று கத்த ஆரம்பிக்க.. ஆசுவாசத்துக்காக இடையில் “எங்கே வேலை பார்க்குறீங்க?” என்றார்.
பத்திரிகையின் பெயரை சொன்னோம். நல்லவேளையாக எங்கள் பத்திரிகை மீது அவருக்கு பெருமதிப்பு இருந்தது. “நல்ல பத்திரிகை சார். ஆனா நீங்கதான் இப்படியிருக்கீங்க. மீட்டிங்குலேயே கமிஷனர் நாலஞ்சிவாட்டி உங்களை பாராட்டியிருக்கார்” சொல்லிவிட்டு, கடைசியாக அதே டயலாக் “நீங்களே இப்படி பண்ணலாமா?”
என்னால் தாங்க முடியவில்லை. இரவு தூங்கும்போது கனவில் வந்த சார்ஜெண்ட் ஒருவர் “நீங்களே இப்படி பண்ணலாமா?” என்கிறார். காலையில் வண்டியில் வரும்போது போலிஸ்காரர்கள் யாராவது பிடித்துவிடுவார்களா என்று என்றுமில்லாத அச்சத்தோடே அலுவலகம் வந்தேன்.
மதியம் ஒரு சிறுவேலையாக வெளியே கிளம்ப, ஏர்போர்ட் அருகே மிகச்சரியாக குறிவைத்து என்னைப் பிடித்தார் அந்த போலிஸ்காரர். அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன். ஒரு கடையில் ஹெல்மெட் தொங்கிக் கொண்டிருந்தது. வண்டியை லாக் செய்தேன். ‘ஹலோ, ஹலோ’ என்று போலிஸ்காரர் அழைக்க, கண்டுகொள்ளாமல் கடைக்குள் நுழைந்து, கைக்கு கிடைத்த ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்தேன். நேராக சார்ஜண்டிடம் சென்றேன். சிரித்துக்கொண்டே, “போய்ட்டு வாங்க சார்” என்றார்.
இனி வண்டி ஓட்டும்போது காற்று முகத்தில் அறையாது. முடி ஸ்டைலாக பறக்காது.

6 மார்ச், 2012
சங்கரன்கோவில்
1967ல் செயிண்ட்ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தபோதே, காங்கிரஸின் கோட்டையான சங்கரன்கோவிலிலும் ஓட்டையை போட்டுவிட்டது திமுக. பிற்பாடு திமுகவிலிருந்து அது அதிமுக கோட்டையாக உருவெடுத்தது. 80ல் தொடங்கி இரண்டே இரண்டு வருடங்கள் தவிர்த்து எப்போதுமே சங்கரன்கோவில்வாசிகளுக்கு அதிமுகவில் இருந்துதான் எம்.எல்.ஏ. 89ல் மட்டும் வைகோவின் அன்றைய அன்புத்தம்பியான தங்கவேல் திமுக சார்பாக ஜெயித்தார். 90ல் தங்கவேல் ரயில்நிலையம் கொண்டுவந்ததுதான் அத்தொகுதியின் சொல்லிக் கொள்ளும்படியான கடைசி வளர்ச்சி. தொலைநோக்கில்லாத நபர்கள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தளவுக்கு ஓர் ஊர் மோசமடையும் என்பதற்கு சங்கரன்கோவில் நல்ல உதாரணம். உருப்படியாக சமீபத்தில் அங்கே தொழிற்சாலையோ, கட்டமைப்போ எதுவுமே நடந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை.
போனவாரம் பணிநிமித்தம் போய்வந்தேன்.
நகர்ப்புறங்களில் எட்டு மணி நேரம், கிராமப்புறங்களில் பத்து முதல் பண்ணிரெண்டு மணி நேரம் மின்வெட்டு. விவசாயிகளும், விசைத்தறியாளர்களும் நிறைந்த பகுதி. மின்சாரம்தான் முதன்மையான வாழ்வாதாரம். அதிமுக அபிமானத்தையும் தாண்டி, இப்பிரச்சினை ‘மாற்றி’ ஓட்டுபோட வைக்குமாவென இவ்வளவு சீக்கிரமாக கணிக்கமுடியவில்லை. ‘மின்வெட்டு தவிர்த்து வேறெதுவும் பெரிய பிரச்சினை இங்கே அம்மா ஆட்சியில் இல்லை’ என்று அங்கிருக்கும் அதிமுகவினர் சொன்னாலும், மின்வெட்டை தவிர்த்து வேறு பிரச்சினை இருந்தாலும் ‘அஜ்ஜஸ்ட்’ செய்துக்கொண்டு வழக்கம்போல ரெட்டை எலைக்கு குத்தியிருப்பார்கள். காலை 6 முதல் 9 மணி வரை வெட்டப்படுவதால் வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு குழந்தைகளையும் கிளப்பி அனுப்ப படாத பாடு படுகிறார்கள் பெண்கள். நாள் முழுக்க கொளுத்திய வெயில் அலுப்பு நீங்க, டாஸ்மாக்குக்குப் போய் “ஜில்லுன்னு பீரு கொடுப்பா” என்று கேட்கும்போது, “கரெண்ட் இல்லைண்ணே, ப்ரிட்ஜ் ஓடலை” என்று கூறி, கிட்டத்தட்ட 100 டிகிரி செண்டிக்ரேட்டில் பீரை கொடுக்கிறார்கள். ஆண்களுக்கும் வெறுப்புதான்.
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறது. எனவே மதிமுக அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் இங்கே இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. கலிங்கப்பட்டி சுத்து வட்டாரத்தில் ‘தெலுங்கு’ பேசும் நாயக்கர் இனமக்களின் ஒட்டுமொத்த ஓட்டும் பம்பரத்துக்குதான் விழும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் ஓட்டுகள் என்கிறார்கள்.
கடுமையான மும்முனைப்போட்டி என்பதால் இரண்டு லட்சம் வாக்காளர்களை கொண்ட தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் பெறும் வேட்பாளர் வென்றுவிடலாம்.
தொகுதியை சுற்றிப் பார்த்ததில் சங்கரன்கோவில் வாசிகள் ஆளுங்கட்சிக்கு ‘ஷாக்’ கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறையலாம். ஐயாயிரம் டூ பத்தாயிரம் வாக்கு வித்தியாசத்தில் ரெட்டை எலை ஜெயிக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
அதிமுக வென்றால், கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ., அவருக்கு அமைச்சரவையில் இடமும் வழங்கப்படலாம். திமுக வென்றாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தேமுதிகவுக்கு வெல்லுவதற்கு வாய்ப்பேயில்லை. இங்கே மதிமுக வெல்லவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஜனநாயக அமைப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதுதான் நியாயம். சதன் திருமலைக்குமார் நல்ல வேட்பாளரும் கூட. மதிமுக சார்பில் இவர் ஒருவரது குரலாவது ஈழம், கூடங்குளம், முல்லைப்பெரியாறு மாதிரியான அத்தியாவசியப் பிரச்சினைகளின்போது சட்டமன்றத்தில் எதிரொலித்தாக வேண்டும்.
பார்க்கலாம். இன்னொருமுறை சங்கரன்கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. கலைஞர், அம்மா, கேப்டனின் பிரச்சாரங்கள் மக்கள் மனதில் ஏதேனும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்துகிறதாவென்று கடைசிக்கட்டத்தில்தான் தெரியவரும்.
5 மார்ச், 2012
அமலாபால்
ஒன்று.
எனக்கு கண்ணில் ஏதோ பிரச்சினை.
இரண்டு.
இப்போது தமிழர்களுக்கு ரசனைக்குறைவு.
இந்த இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கிறது.
ஏன் தமிழர்கள் போயும், போயும் இந்த அமலாபாலை போய் ரசியோ, ரசியென்று இப்படி ரசித்துத் தொலைக்கிறார்கள் என்றே புரியவில்லை. தயாரிப்பாளர்களோ ஒருபடி மேலே போய் அவர் வீட்டு முன்பாக, நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் நீள்வது மாதிரியான க்யூவில் அட்வான்ஸ் பணத்தோடு நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.
லோ பட்ஜெட் படங்களில் ஹீரோயினுக்கு தங்கையாக வருவதற்கோ அல்லது க்ரூப் டேன்ஸர்களில் முன்வரிசையில் ஆடுமளவுக்கோதான் அவருக்கு அழகு இருப்பதாக கருத வேண்டியிருக்கிறது. ரிச் கேர்ள்ஸ் ஆக கூட அமலாபால் செலக்ட் ஆயிருந்தாலே அது அதிசயம். கத்தி மாதிரி கண்களைத் தவிர்த்து வேறெதுவும் அவருக்கு ப்ளஸ்ஸாக இருப்பதாக தோன்றவேயில்லை. பொதுவாக ஆண்கள் விரும்பும் ‘ப்ளஸ்’ அமலாவைப் பொறுத்தவரை பெரிய ‘ப்ளஸ்’ இல்லை என்பதை அவருடைய எல்லாப் படங்களையும், உறுத்து உறுத்துப் பார்த்ததில் உணர்ந்துக் கொண்டேன். அமலாபால் அளவுக்கு சுமாரான அழகிருக்கும் பெண்ணை காதலிப்பதிலோ, கல்யாணம் செய்துக் கொள்வதிலோ எனக்குப் பிரச்சினையில்லை. யதார்த்தத்தில் இவரை விட சுமாராகதான் டிபிக்கல் ஹவுஸ் ஒய்ஃப்கள் இருக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க, அமலாபால் ஏன் நதியாவைப் போல, கவுதமியைப் போல, சிம்ரனைப் போல இப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார்?
நிஜமாகவே விடை தெரியாத கேள்விதான் இது.
ஸ்ரீதேவி கோலோச்சியதற்குப் பிறகு சுமார் ஃபிகர்களான அம்பிகா-ராதா சகோதரிகள் தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பினார்கள். அதற்குப் பிறகு கவுதமி. தமிழர்களுக்கு ‘ஒல்லியான’ பெண்களைப் பிடிக்கும் என்றொரு கருத்துருவாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், புசுபுசுவென புயலாக உள்ளே நுழைந்தார் குஷ்பு. பின்னர் சுகன்யா மாதிரி ஆண்ட்டி லுக் ஃபிகர்களையும் ஆராதித்தார்கள் தமிழர்கள். ஒல்லி சிம்ரன், குண்டு ஜோதிகா என்று ஒரே சமயத்தில் டபுள் சைட் எக்ஸ்ட்ரீம் ரசனையையும் வெளிப்படுத்தி தாவூ தீர வைத்தார்கள். கிரணையும் ரசித்தார்கள். இலியானாவுக்கும் விசில் அடித்தார்கள். இப்போது அமலா பாலை ஆராதிக்கிறார்கள்.
கொஞ்சம் தீவிரமாக சிந்தித்து நம்முடைய கனவுக்கன்னிகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் சீரான ஒழுங்குவரிசையற்ற ஒருமாதிரியான நான்-லீனியர் தன்மை கொண்ட ரசனையை தமிழன் வெளிப்படுத்தி வருகிறான் என்பது புரியும். இவனுக்கு பிடிப்பது குண்டா, ஒல்லியா.. குள்ளமா, உயரமா.. கருப்பா, சிவப்பா என்று அறுதியிட்டு யாராலும் சுலபமாக வரையறுத்துவிட முடியாது. “சுலக்ஷணா கூட எங்க காலத்தில் கனவுக்கன்னி“ என்று சாட்டிங்கில் வந்து அதிரவைக்கிறார் ஒரு ஃபிப்டி ப்ளஸ் நண்பர். ஸ்ரீதேவியை கனவுக்கன்னி என்றால் புரிந்துகொள்ள முடிகிறது. சுலக்ஷணா எப்படி கனவுக்கன்னி என்று மண்டையை பிய்த்துக்கொள்ளத்தான் இயலுகிறது.
‘மைனா’ தவிர்த்து வேறெந்த உருப்படியான படத்தில் அமலா பால் நடித்திருக்கிறாரென்று தெரியவில்லை. சிந்து சமவெளி என்கிற விவகாரமான பிட்டே இல்லாத பிட்டு படத்தில் நடித்தது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாக இருக்கலாம். இப்படத்தில் நடித்து பரவலானதால்தான் மீண்டும் மீண்டும் விசில் அடிக்கும் ரசிகர்கள் அமலா பால் என்றாலே குஷியாகி தியேட்டர்களுக்கு வருகிறார்களோ என்று யூகிக்கிறேன். அமலாபால் நடித்த சுமார் படங்களை விட, ‘விகடகவி’ மாதிரி மொக்கைப்படங்களே அதிகமென்று அவருடைய கேரியர் கிராப் கூறுகிறது. அப்படியிருந்தும் இன்று தமிழின் நெ.1 மாதிரி அமலாதான் இருக்கிறார்.
கடந்த வருடத்தைவிட அமலா ஃபீவர் இவ்வருடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இரண்டே மாதத்தில் அவர் நடித்த மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. வேட்டையின் ’பப்பரப்பா’ பாட்டில் அவருடைய மேக்கப்பை கண்டதுமே பேஜாராகிவிட்டது. இந்த மேக்கப்மேன் முன்னதாக கிரணுக்கு மேக்கப் போட்டவராக இருக்கக்கூடும். ‘படமெடுத்து சொதப்புவது எப்படி?’ என்று பாடமெடுத்த ‘காதலில் சொதப்புவது எப்படி?’யில் அமலா பாலின் மேக்கப் அத்தனை மோசமில்லையென்றாலும், நடிப்பென்றால் கிலோ என்ன விலையென்று தெரியாத அப்பாவியாக சிறப்பாகவே அவர் நடித்திருந்தார். ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ கொடுமை. போதாக்குறைக்கு கிட்டத்தட்ட இரட்டை வேடம். குள்ளமான அமலாபாலுக்கு, படம் முழுக்க மாடர்ன் ட்ரெஸ் வேறு. வசனகர்த்தாவோ மனச்சாட்சியே இல்லாமல் “அவளைப் பார்த்தேன்னா, நீ பொண்ணுங்கிறதையே மறந்துட்டு யூ வில் ஃபால் இன் லவ்” என்றெல்லாம் கவுதமேனத்தனமாக டயலாக் எழுதியிருக்கிறார்.
எனக்கென்னவோ, நம்மூரில் சாணி தட்டும் குணசுந்தரி மாதிரி ஃபிகர்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் போட்டு, நன்றாக தலைவாரி, லேசாக ப்ரூஸ் பவுடர் போட்டு, லிப்ஸ்டிக் தடவிவிட்டால் அமலாபாலை விட அழகாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

2 மார்ச், 2012
கோழி மோசடி
புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.
“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.
“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.
“அது ஒண்ணுமில்லேங்கய்யா... நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா... அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”
“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”
“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”
“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”
“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”
“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”
“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”
மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.
“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”
“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”
“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி... இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”
“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”
“அருமையான தீர்ப்புங்கய்யா...” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.
ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)