7 டிசம்பர், 2012

கமல் விஸ்வரூபம்!

கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது.
சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான்.
திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி.
லேட்டஸ்ட்டாக விஸ்வரூபம் பிரச்சினை. கிட்டத்தட்ட கோவணத்தை கூட அடகுவைத்து படம் எடுத்திருக்கிறார். இப்போதிருக்கும் வியாபார முறையை வைத்துக்கொண்டு இப்படத்தை காட்சிப்படுத்தினால், தலையில் துண்டை போட்டுக்கொண்டு காசி, இராமேஸ்வரம் என்று தயாரிப்பாளர் கமல் போயாகவேண்டும். ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ மூலமாக வெளியிடுவதின் மூலம் பெரிய லாபத்தை காணமுடியுமென்று சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி பழகிய தமிழ் திரையுலகினர் வழக்கம்போல குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இன்று குதித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இதே முறையில் பல கோடிகளை குவிக்கப் போகிறார்கள். ஏனெனில் கமலின் ராசி அப்படி. அவர் அறிமுகப்படுத்தும் விஷயங்களின் அறுவடையை மற்றவர்கள்தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உழக்குதான் மிச்சம்.
சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் திரும்பத் திரும்ப சினிமாவிலேயே முதலீடு செய்யும் கமல்ஹாசன், சினிமாவை அழிக்கும் முயற்சிகளில் இறங்கமாட்டார் என்று நம்பலாம். படமெடுக்கும் முதலாளி என்கிற அடிப்படையில் அவர் ‘லாபம்’ எதிர்ப்பார்ப்பது நியாயம்தான். கமல் வெறும் கலைஞன் மட்டுமல்ல.
சினிமா என்பது சர்வநிச்சயமாக வணிகம்தான். இதை சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்வதில் ‘ஈகோ’ இருக்கலாம். கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை தாண்டி, சினிமாவின் குறிக்கோள் பணம் ஈட்டுவதே. ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக தொழில்நுட்பரீதியாக நாம் வளரும் அதே நேரத்தில், அவர்களது வியாபார யுக்திகளையும் கைக்கொண்டாக வேண்டும். இன்றைய தினகரன் வெள்ளிமலரில் (டிச.7, 2012) ‘தயாரிப்பாளரே இல்லாமல் சினிமா’ என்றொரு கட்டுரை வெளியாகியிருக்கிறது (சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டிய கட்டுரை). தயாரிப்பாளரே இல்லாமல் பலரும் சேர்ந்து முதலீடு செய்து படம் தயாரிப்பது என்கிற முறையை குறித்து அக்கட்டுரை ஆழமாக அலசுகிறது. சினிமாத்தொழில் இப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் கலையை அழிக்கிறார், இண்டஸ்ட்ரியை பாழாக்குகிறார் என்றெல்லாம் பேசுவது பிற்போக்குத்தனம்.
முதல் போடுபவர்கள் லாபத்தை எடுத்தாக வேண்டும். பணம் எடுக்க என்னென்ன யுக்திகள் இருக்கிறதோ, அத்தனையையும் பிரயோகித்துப் பார்த்தாக வேண்டும். சூதாட்டம் மாதிரியில்லாமல் மற்ற தொழில்களைப் போலவே பணம் போடுபவர்களுக்கு, குறைந்தபட்ச உத்தரவாதத்தை சினிமா வழங்கியாக வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இன்று சினிமா என்பது திரையிடுதலில் மட்டும் காசு எடுக்கும் தொழில் அல்ல. ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்பதை டி.சி.ஆர் எனப்படும் டிக்கெட் கலெக்‌ஷன் ரெக்கார்டை மட்டுமே வைத்து கணக்கிடுகிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கும் கட்டணம், எஃப் & பி எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்பதன் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தே ஒரு படத்தின் வசூலாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுக்க மல்ட்டிஃப்ளக்ஸ் கலாச்சாரம் பெருகி வருவதற்கு வெறுமனே திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே காரணமல்ல. சினிமாவோடு மறைமுகமாக வருமானம் கொழிக்கும் மற்ற விஷயங்களும்தான் காரணம். இதெல்லாம் சாத்தியம் ஆனதால்தான் இன்று தென்னிந்திய திரைப்படங்கள் கூட நூறு கோடியை தாண்டி வசூலிக்க முடிகிறது.
கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக வளர சினிமாக்காரர்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் கனிகளை எதிர்ப்பார்க்க முடியும்.

11 கருத்துகள்:

  1. Good foresighted review... As Kamal fan I agree with you... But Ilakiyathil ukagatharam pesum Charum avaradhu easigargalum kamalai vaithu vettru vilambaram theduvathu yenno puriavillai...

    பதிலளிநீக்கு
  2. வருடத்திற்கு முன்பு படம் பார்ப்பது என்பது பக்கத்துக்கு பெட்டி கடையில் பழம் சாப்பிடுவது போல ஈ.சியாக இருக்க வேண்டும்னு சொல்லி ஆளவந்தானை தியட்டரில்'ரீலிஸ் செஞ்சப்பவும் இந்த அரை வேக்காடுகள் இப்படி தான் குதித்தன. இப்ப நண்டு சுண்டு படம் எல்லாம் தியட்டரில்'ரீலிஸ் ஆகுது.

    பதிலளிநீக்கு
  3. யாரு கமல் கோவணத்த அடகு வச்சு... சார் காமெடி பண்ணாதீங்க எத்தன பேர் கோவணத்த உருவுனவருன்னு உங்களுக்கு தெரியும்...

    பதிலளிநீக்கு
  4. கமலஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்திய புதிய தொழில்நுட்பங்களை முதலில் திட்டிவிட்டு பின்பு அதே தொழில்நுட்பங்கள் சினிமாவின் தவிர்க்கமுடியாத தாக ஆனதும் அதை பயன்படுத்தி பயன் பெறுவதுடன் பெயரும் பெற்றுவிடுவார்கள்... நான் சொல்வது என்னவெனில் கமல் இது எதையும் கண்டு கொள்ளாமல் அவர் நினைத்ததை முடித்து காட்ட வேண்டும்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல கட்டுரை லக்கி..ஆனால் கடைசி பாரா அதுவரைக்கும் சொன்னதுக்கு முரண்.
    தியேட்டர் குண்டுசட்டிலயே குதிரை ஓட்டினா, லாபம் வராதுன்னு சொல்லிட்டு, கடைசில தியேட்டர்லயே தென்னிந்திய சினிமா 100 கோடி தாண்டிடுச்சுங்கிறீங்களே..

    பதிலளிநீக்கு
  6. என்ன லக்கி,

    தி.மு.க கொள்கை போர்வாளான நீங்கள் இந்த கோணத்தில் யோசிக்காமல் விட்டு விட்டீர்களே!

    நாடு இருக்கும் நிலையில், டி.வியில் நேரடி ஒளிபரப்பு சாத்தியமா? படம் ஒரு 3 மணிநேரம், விளம்பரம் ஒரு 2 மணிநேரம், ஆக மொத்தம் 5 மணிநேரம்.

    5 மணிநேரம் தொடர்ந்து மின்சாரம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும் வழங்குவது "மம்மி" ஆட்சியில் சாத்தியமா? துட்டை கொடுத்துவிட்டு யார் ஏமாந்து போவது?

    சில வாரங்களுக்கு முன்பு மம்மியை கமல் சந்தித்தாரே ஏன்? யோசித்தீர்களா? பிராமணாள் இருவரும் இணைந்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்ற முடிவெடுத்து விட்டார்கள்.

    ஏமாற்றாதே ஏமாறாதே என்று கலைஞரிடம் சொல்லி அறிக்கை விடச்சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல நண்பரிடம் இருந்து , தவறான கட்டுரை வந்து இருக்கிறது :) ஒவ்வொரு வரியுடனும் முரண்படுகிறேன் . பின்னூட்டத்தில் முழு மறுப்பையும் சொல்ல முடியாது என்பதால் , தனி பதிவு :)

    லக்கி யுவாவின் தவறான புரிதலும் , கதறும் திரையுலமும்- கமலிடம் இருந்து சினிமாவை காப்பாற்ற முதல்வரிடம் மனு

    பதிலளிநீக்கு
  8. எல்லா தயாரிப்பாளர்களும் சேர்ந்து நடிகர்களுக்கு சம்பளத்தை குறைத்தாலே போதும் . சினிமா தயாரிப்பாளர்கள் உருப்பட்டு விடுவார்கள்...

    நடிகர்கள் அப்படியென்ன கழட்டுகிறார்கள் ?? இவ்வளவு சம்பளம் வாங்க...

    பதிலளிநீக்கு
  9. //அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.//
    ஏற்றுக் கொள்ள முடியாதது. ரேஸ் என்று நீங்கள் நினைப்பது என்ன? வசூல் என்றால் அவருடைய பல கமர்ஷியல் படங்கள் வசூலை வாரித் தந்ததை வசதியாக மறந்து விட்டீர்கள். தற்போது கமர்ஷியல் சலித்துப் பொய் புதிய சினிமாவுக்கான தேடலில் இருக்கும் அவரையும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களையும் ஒப்பிட்டுப் பேசுவது அபத்தத்திலும் அபத்தம்.

    பதிலளிநீக்கு
  10. ஹி...ஹி திருட்டு டிவிடி தயாரிப்பவர்களும், இணையத்தில் பகிர்பவர்களும் ரொம்ப கஷ்டப்படக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் டிடிஎச் இல் வெளியிடும் லோகநாயகரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் :-))

    டிடிஎச் இல் ஓளிப்பரப்பானல் அதனை நேராக கணினியில் பதிவு செய்ய முடியும், மேலும் 1000 ரூபாய் என்பதால் பெரும்பாலோர் பார்க்க வாய்ப்பில்லை,அவர்கள் எல்லாம் திருட்டு டிவிடி ஐ தரமாக கிடைத்தால் வாங்க தயாராக இருப்பார்கள்.

    ஒரு டிடிஎச் வச்சு ஊருக்கே படம் காட்டிவிடுவார்கள் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள்.

    படத்தை நிறைய பேரு பார்ப்பாங்க, ஆனால் பணம் தான் கிடைக்காது :-))

    மேலும் விரிவாக எனது பதிவிலும் சொல்லி இருக்கிறேன் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  11. Brilliant. Definitely one of the challenges which people starting a new on-line firm face is that of obtaining guests to their net site..

    பதிலளிநீக்கு