அடிப்படையில் மெக்கானிக்கல் என்ஜினியர். அப்பா ஹோட்டல் நடத்தி வந்தார். கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பதுதான் சுதீப்பின் சிறுவயது லட்சியம். ராகுல் ட்ராவிட்டின் நண்பர். பிஸினஸ்மேனான அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் வேப்பங்காய். கிரிக்கெட்டுக்கு அடுத்து சுதீப்புக்கு ரொம்பவும் பிடித்தது சினிமா. எனவே சினிமாவில் நுழைகிறேன் என்று அடம்பிடித்தார். சுதீப் அம்மா செல்லம். அம்மாவும் அப்பாவை வற்புறுத்த ‘எக்கேடாவது கெட்டுத் தொலை’ என்று தண்ணீர் தெளித்து விட்டார்.
ஆரம்பத்தில் டிவி சீரியலில் நடிக்கத்தான் சான்ஸ் கிடைத்தது. உதயா டிவியில் ஒளிபரப்பான ‘பிரேமதா காதம்பரி’ சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடம் நல்ல பெயர். இந்த பெயரை பயன்படுத்தி பெரிய திரைக்குள் நுழைய எடுத்த முயற்சிகள் ஆரம்பத்தில் படுதோல்வி. அவருக்கு வாய்ப்பு கிடைத்த இரண்டு படங்களும் பாதியிலேயே பொட்டிக்குள் முடங்கின. சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் முட்டி மோதி முயற்சித்துக் கொண்டே இருந்தார். ’தயவ்வா’ படத்தில் ஒரு துண்டு வேடம். இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 1999ல் அடுத்த வேடம் கிடைத்தது. இதுவும் துண்டு கேரக்டர்தான். படத்தின் பெயர் ‘ப்ரத்யார்த்தா’. சின்ன கேரக்டராக இருந்தாலும் சுதீப்பின் ஆர்வமும், அலட்டல் இல்லாத குணமும், அசராத உழைப்பும் இயக்குனர் சுனில்குமார் தேசாயை கவர்ந்தது. அவர் அடுத்து இயக்கிய ‘ஸ்பர்ஷா’வில் சுதீப்தான் ஹீரோ.
ஸ்பர்ஷாவைத் தொடர்ந்து சுதீப் நடித்த ‘ஹூச்சா’ அவரை எங்கோ கொண்டு சென்றது. ’சீயான்’ விக்ரம் என்று இங்கே சொல்வதைப் போல, கர்னாடகாவில் ‘கிச்சா’ சுதீப் என்பார்கள். அதாவது சேதுதான் ‘ஹூச்சா’வாக ரீமேக் ஆனது. அவ்வாண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருதும் சுதீப்புக்கு கிடைத்தது.
அப்படியே பிடித்துவிட்டார் இந்த ரூட்டை. வாலி, சிப்பிக்குள் முத்து, தில் என்று சரமாரியாக தமிழ்பட ரீமேக்குகளில் நடித்து ஹிட்டு ஹிட்டென ஹிட்டடித்தார். முதன்முதலாக அவர் தயாரித்து இயக்கிய படமும் நம்மூர் ஆட்டோகிராப்தான். தெலுங்கு, மலையாளத்தில் ஹிட்டடித்த படங்களை ரீமேக் செய்வதாக இருந்தால், முதலில் சுதீப்பின் கால்ஷீட் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார்கள் அந்த ஊர் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். உச்சமாக தமிழில் செம கல்லா கட்டிய ‘சிங்கம்’ படத்தின் உரிமையை வாங்கி ‘கெம்பே கவுடா’வாக நடித்து இயக்கினார் சுதீப். கர்நாடகா சினிமாவின் வசூல் எல்லை பரப்பளவை ஒரே படத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விரிவாக்கினார்.
ராம்கோபால் வர்மாவுக்கு சுதீப்பின் உயரம் மற்றும் கூர்மையான கண்கள் மீது காதல். இந்திக்கு அழைத்துச் சென்றார். அங்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி இல்லையென்றாலும், ராம்கோபால் வர்மாவின் தீவிர ரசிகரான ராஜமலிவுக்கு சுதீப் மீது மரியாதை பிறந்தது. தெலுங்கில் ‘ஈகா’வாகவும், தமிழில் ‘நான் ஈ’யாகவும் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளிவந்த படம் தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்கள் வரிசையில் சுதீப்பை நிலைநிறுத்தியது. தற்காலிகமாக கன்னட சினிமாவை மறந்தார். 2011ல் வெளிவந்த விஷ்ணுவர்த்தனாவுக்கு பிறகு, சிலமாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘வரதநாயக்கா’வில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சுதீப் ஹீரோவாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் என்பதே ‘பச்சனின்’ தனிச்சிறப்பு.
உகாதி போனஸாக கன்னடர்களுக்கு கிடைத்த ‘பச்சன்’ கோடி, கோடியாக குவித்துக் கொண்டிருக்கிறது. முதன்முதலாக ஒரு கன்னடப்படம் இருநூறு தியேட்டர்களில் வெளியாகிறது. ஓவர்சீஸிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பச்சன். இயக்குனர் சஷாங்கின் முந்தைய படங்களான மொக்கின மனசு, கிருஷ்ணன் லவ் ஸ்டோரி ஆகியவை சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் தானென்றாலும், பச்சன் யாருமே எதிர்ப்பார்க்காத பம்பர் ஹிட். சுதீப்பின் மேஜிக் இது என்று சாண்டல்வுட்டே திருவிழாக்கால மகிழ்ச்சியில் கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவைதான் அணுகினார்கள். கன்னட சினிமா பட்ஜெட் நயனுக்கு ஒத்துவரவில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதை போல பாவனா. அதனால் ஒன்றும் நஷ்டமில்லை.
சுதீப் ஒரு தொழிலதிபர். மக்களுக்கு சேவை செய்யவேண்டுமென வாழ்கிற நாயகி பாவனாவின் மீது தீவிரக்காதல். சுரங்க சுரண்டல் மாஃபியா ஒருவனால் பாவனாவுக்கு பிரச்சினை. இப்படியாக சாதாரணமாக போகும் பழிவாங்கும் கதைதான். ஆனால் சுவாரஸ்யமான ட்விஸ்ட்டுகள், எதிர்ப்பார்க்க முடியாத திருப்பங்கள், பரபரவென நகரும் திரைக்கதை என்று சஷாங்கின் திறமையான இயக்கம் இப்படத்தை மாஸ் எண்டெர்டெயினராக மாற்றியிருக்கிறது.
ரீமேக் உரிமையை வாங்க இந்தி, தெலுங்கு, தமிழ் என்று போட்டாபோட்டி. கர்நாடக அரசியலையே கலைத்துப்போட்ட ‘பெல்லாரி’ சுரங்க சுரண்டல் தனிமனிதன் ஒருவனை எப்படி பாதிக்கிறது என்பதுதான் களம். சஸ்பென்ஸ் த்ரில்லராக அடுத்து என்னவோ என்று கைகளைப் பிசைந்துக்கொண்டே படம் பார்க்கும் ரசிகனுக்கு ‘வீக்’கான க்ளைமேக்ஸை அமைத்திருப்பதுதான் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்திப்படமான ‘அக்னிபத்’தின் லேசான பாதிப்பு திரைக்கதையில் இருப்பதாலோ என்னவோதான் அமிதாப் பச்சனுக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக ‘பச்சன்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்களோ என்னவோ.
முதல்வார வசூலே எட்டு கோடியை எட்டிவிட்டது. விமர்சகர்களும், ரசிகர்களும் ஒரே குரலில் பேசுவது குறிஞ்சி பூப்பதைப் போல அதிசயம்தான். ‘பச்சன்’ விஷயத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தேறி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை வந்த சுதீப்பின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று ஊரே குலவையிடுகிறது.
(நன்றி : cinemobita.com)